திங்கள், ஏப்ரல் 09, 2012

றகுமான்-ஏ-ஜமீல்: நவீன கவிதை வெளியில் தனித்தலையும் பறவை


நூல் அறிமுகம்
றியாஸ் குரானா

எழுத்து வகைகளில் கவிதை என்ற ஒரு மொழிதல் செயற்பாட்டிற்கு,
முதன்மை ஒன்றை வழங்கும் இடத்தில் தமிழ்ச் சூழல் இன்னுமிருக்கிறது.
அது இலகுவாக எழுதக்கூடியது என்ற ஒரு புலமும்;,மிகக் கடினமான உழைப்பைக் கோருவன என்ற ஒரு புலமும் கொண்ட புரிதல்கள் பரந்து விரிந்து விரவிக்கிடக்கின்றன.
மொழிதல் குறித்த தனித்தன்மையை முன்வைத்து வாசித்தல்,
கவிஞனின் தனி உலகம் குறித்து வாசித்தல் என பல்வகை வாசிப்புக்களுக்கு உட்பட்டு,பல வித்தியாசமான வாசிப்புக்களால் கவிதை என்ற அம்சம்
தமிழ் நினைவுப் பரப்பில் புதிப்பிக்கப்பட்டும், பெருகியும் வசித்துக் கொண்டிருக்கிறது.
கவிதை என்று நம்பப்படுகிற ஒரு தன்மையை அடையாளங் கண்டிருப்பதாகவும்,அதுதொடர்பான பொதுவான ஒரு புரிதல்
எல்லோரிடமும் இருப்பதாகவும்,ஊகிக்கப்படுகிறது.அந்த ஊகம்
கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த எடுகோளின் அடிப்படையில் கவிதை பற்றிய வாசிப்புக்களையும்,எழுதுகைகளையும் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறது தமிழ்ச் சூழல்.

கவிதைத் தன்மை என்ற ஒன்று இதுதான் என நம்பப்பட்ட இடத்திலிருந்து,குறிப்புக்களை உருவாக்கி கவிதைப் பிரதிகள் எனச் சொல்லப்படுபவைகள் கடுமையான வாசிப்புக்குட்பட்டிருக்கின்றன.அந்தப் புரிதல் கவிதையற்றவை என்ற பெரும் பகுதி எழுத்துக்களையும் இலக்கிய வரலாற்றிலிருந்து இரக்கமின்றி அழித்தொழித்திருக்கின்றன.
கவிதையென நம்பப்படும் பிரதிகளுக்கு அரத்தங்களை கண்டடையும் முயற்ச்சியில் பலர் தமது வாழ்நாட்களை செலவளித்திருப்பதும் நாமறிந்ததே. அத்தோடு சிந்தனைகளின் ரகசியக் காரணங்களின் வழியே பயணித்து கவிதைகளைத் தரப்படுத்ததியிருப்பதாக அறிவிக்கும் நகைச்சுவைகளும்
தமிழில் இன்னும் நடந்தேறும் சுவாரஸ்யங்களே.
கவிதையின் தன்மை என்று நம்பப்படும் ஒன்றை அடைந்து விடுவதற்கு
ஒரு பிரதி எந்தவகையான உழைப்புக்களையும்,செயற்பாடுகளையும் செய்துகாட்ட வேண்டுமென்ற கட்டளைகளும் உருவாக்கப்பட்டிருப்பது
ஒரு கொடுமைதான்.
ஒரு பிரதியின் எந்தவகையான செயற்பாடும்,
அதற்கு பயன்படும் மொழியலகும் கவிதையாக தன்னை மாற்றிக்கொள்ள என்ன செய்கிறது போன்ற வாசிப்புக்கள் குறைவாகவே நடந்திருக்கின்றன.
கவிதை என நம்பப்படும் தன்மைகளுக்கும் அல்லாதவை என நம்பப்படும் தன்மைகளுக்குமிடையில் வரையறுக்கத்தக்க தெளிவான எல்லைகள் இருக்கிறதா என்ற வாசிப்புக்களும் தமிழில் இல்லை.
இலக்கியம் அல்இலக்கியம் போன்ற புரிதல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டியவை என்ற நிலை கடந்து பேசுபொருளாக்கப்படவில்லை.
அவை இரண்டுகளுக்கிடையேயும் பிளவுகளை ஏற்படுத்தியிருக்கும் காரணங்களை மீள் வாசிப்புக்குட்படுத்தவில்லை.
இந்தவகை பிளவுகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியங்களில் இருக்கும் அரசியலும்,அது எழுத்துச் சூழலில் ஏற்படுத்தியிருக்கும் வன்முறையின் வெளிப்பாடுகளையும் பேசமுற்படவில்லை.
இது நீடிக்குமானால் பிரதிகளால் கொல்லப்பட்ட பிரதிகளின் வரலாற்றை எழுதவேண்டியிருக்கும்.இலக்கியத்தால் ஈவிரக்கமின்றி கூட்டாகவும் தனித்தனியாகவும் கொல்லப்பட்ட பிரதிகளுக்காக தமிழ் மொழியே தலை குனியவேண்டியிருக்கும்.

இலக்கியம் எனும் கடவுளை வழிபடும் மன அமைப்பை கலைத்துப்போடும் வாசிப்புக்களே.எழுத்தின் வன்முறையிலிருந்து விடுபட்ட ஒரு சிந்தனை வெளியை நோக்கி பிரதிகளை நகரச்செய்யும்.இலக்கியம் என்ற மூடப்பட்ட அமைப்பிலிருந்து வெளியில் கடந்துவரக்கூடிய பிரதிகளின் பக்கம் கவனத்தை செலுத்தவேண்டியிருக்கிறது.

இலக்கியம் எனும் தனிப் பெரும் கடவுளைக் கொல்லுவதினூடாகவோ அல்லது எதிர்ப்பதினூடாகவோதான் அடுத்தகட்ட எழுத்துக்களுக்குச் செல்லமுடியும். உடைக்கப்பட முடியாத வலிய சுவர்களுக்குள் பூட்டி காப்பாற்றிவைத்திருக்கும் இலக்கியத்தின் தலையில் ஓங்கிக்குத்தி வெறுப்பேற்றும் எழுத்துக்களை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் அவசரமாக இறங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

பெரும் விவாதத்திற்கான ஒரு விசயத்தை மேலோட்டமாக எழுத நேர்ந்தது ஒரு கவிதை நூலை வாசித்துக்கொண்டிருந்ததுதான்.ஈழத்தைச் சேர்ந்த றகுமான்-ஏ-ஜமீல் தனித்தலையும் பறவைகளின் துயர் கவியும் பாடல்கள் என்ற ஒரு கவிதைத் தொகுப்பை 2007ம் ஆண்டு வெளியிட்டிருந்தார்.
மூன்று வருடங்களாகியும் அது பற்றிய பேச்சுக்கள் இல்லாமலே போய்விட்டது.90 களுக்குப்பிறகு எழுதத் தொடங்கியவர் என்பதும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பவர் என்பதும் சொல்ல வேண்டிய ஒன்று.அவர் எனது நண்பரும்கூட.(எழுதுபவர்கள் எல்லோரையும் தோழமைகளாகவே நினைக்கிறேன்.என்னை அவர்கள் கருதாதபோதும்.)
பலவகை கவிதைமொழியையும்,மொழிதல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழ்ச் சூழலில், தனித்த ஒரு அடையாளத்தை உருவாக்கும் தேவை கவிஞர்களைத் தொற்றிக்கொண்டிருக்கிறது.
அதுவே தன்னை மற்றவைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதாக உணர்வதும்,தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவுமான ஒரு வழிமுறை என உணரப்பட்டுள்ளது.

எனினும்,ஈழத்தில் கவிதைகளைப்பற்றி வாசிப்புக்களைச் செய்பவர்களின், கவிதை பற்றிய உடன்பாடுகளுக்குள் ஜமீல் வராமல்போனது இவரைப் பொறுத்த மட்டில் ஒரு வலியாகக்கூட இருக்கலாம். கவிதைக்கான அம்சங்கள்,அவரின் பிரதியில் ஆரம்ப நிலையில் இருப்பதாக சிலர் பேச்சுவாக்கில் என்னிடம் கூறியிருக்கின்றனர்.
கவிதைக்கான கட்டுமானங்கள் ஒத்த தன்மையுடன் இயங்குவதைத் தவிர்த்திருக்கலாம் எனவும் சிலர் கூறிக்கொண்டிருக்கும் சூழலில்,
இவருடைய பிரதிகளை அனுக முற்படுகிறேன்.
அதேநேரம்,ஜமீலின் கவிதைப் பிரதிகள் கவனங்கொள்ளும் அரசியலை அடையாளங்காண்பதில் மிகச் சரியான ஒரு வாசிப்பு நிகழ்ந்திருக்கிறது.
விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்,பிற்படுத்தப்பட்டவர்கள்,போரினால் அநாதரவாக்கப்பட்டவர்கள் என சமூக உற்பத்தியில் ஓரத்தில் வைக்கப்பட்டு நோக்கப்படுபவர்களின் பக்கம் நின்று பேசும் குரலை இவரின் பிரதிகள் கொண்டிருக்கின்றன.இவ்வகை சமூக உற்பத்திகளை கேள்விக்குட்படுத்தாமலும்,அவர்கள் சார்பான எதிர் செயற்பாடாக முன்வைக்காமலும் வேறொரு தளத்தில் இயங்குகின்றன.விளிம்புக்கு தள்ளப்பட்டவர்களின் மீது இரக்கப்படும் படியான குரலும் இல்லை.
ஆனால் அவர்கள் குறித்து அக்கரையைக் கொண்டிருப்பதாக பெருகும் கதைகளை சொல்லுபவை ஜமீலின் பிரதிகள்.அக்கரைகள்,துயரங்கள் போன்றவற்றை பதிவுசெய்து அதன் பக்கம் கவனயீர்பை கோரும் பிரதிகள் தமிழில் அதிகம் இருப்பினும்,அதிலிருந்து வேறுபட்ட ஒரு அனுகலையும் அழகியலையும் பகிர்ந்து கொள்ள ஜமீலின் பிரதிகள் முற்படுகின்றன.
இந்தச் செயற்பாட்டின் இயங்கியலே ஜமீலின் கவிதைப்பிரதிகளுக்கான தனித்த ஒரு இடத்தை நம்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.

ஜமீலின் பிரதிகள் தன்னை வெளிப்படையாக கவிதை என்று அறிவிக்கும் மொழிதலைச் செய்யவில்லை.பிரதிகள் இயங்கும் முறைமைகளிலிருந்து தனித்த ஒரு மொழிதலை உருவாக்கிக் கொள்கின்றன.அதுவே கவிதையாக நிறைவடைவதற்கான வேலைகளைச் செய்கிறது.
அனுபவங்களை கவிதை மொழியில் பின்னி பிரதிகளாக மாற்றித்தருதல்,குறித்த அரசியல் செயற்பாடுகளின் பக்கம் நின்று வாதிடல் அல்லது அவைகளின் எதிப்புணர்வை கவிதை மொழியில் உட்செரித்து பிரதியெங்கும் ஊடாடவிடுதல் போன்ற கவிதையின் மொழிதல் முறைமைகள் அதிகமா பயன்பாட்டிலுள்ளது.இதிலிருந்து விடுபட்டு வேறொரு பாதையினூடாக சென்று கவிதைக்கான அம்சங்களை நிறைவேற்ற ஜமீலின் கவிதைப்பிரதிகள் முயற்ச்சிக்கின்றன.
"ஒத்தவகைக் கவிதைக் கட்டுமானங்களைத் தவிர்த்திருக்கலாம்"
என்ற இவரது பிரதிகள் தொடர்பான விமர்சனங்களையும் இங்கிருந்துதான் வாசிப்புச் செய்யவேண்டும்.

இரண்டு முக்கியமான வேலைகளைச் செய்கிறது ஜமீலின் பிரதிகள்.
ஒன்று ஒரு அறிவிப்பாளரின் பணியைப்போன்றது.இரண்டாவது ஒரு நாடகத்தன்மையை உருவாக்குவது.இந்த இரண்டு செயற்பாடுகளும் பிரதிக்குள் இயங்கி கவிதைக்கான இடத்தை நிரப்பிவிடுகின்றன..
தெளிவான அறிவிப்புக்கள்,நேரடியான சுட்டுதல்கள்,மீளமீளச் சொல்லி அழுத்தம் கொடுத்தல்,ஒத்தவகை மொழிதல்களை திரும்பத்திரும்ப பயன்படுத்துதல் போன்றவை.
இந்த வகையான மொழிச் செயற்பாடுகள் நவீன கவிதை என நம்பப்படும்
ஒரு மாயப்பரப்புக்குள்ளிருந்து விலக்கப்பட்டவைகளாக ஏலவே கருதப்பட்டு வருகிறது என்பது நாமறிந்ததே.விலக்கப்பட்ட அம்சங்களை கவிதை மொழிதலுக்குள் பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் உருவாக்கிய வாசிப்பு முறைகள்,எடுத்த எடுப்பிலே ஜமீலின் பிரதிகளை ஒதுக்கிவிடக்கூடியது.எனினும்,இவைகளை அலட்சியம் செய்துவிட்டு விலக்கப்பட்ட இந்த அம்சங்களைக்கொண்டு, கவிதை செய்வதாக சொல்லப்படும் வேலைகளை மிகக் கவனமாக செய்துகொன்டிருக்கின்றன ஜமீலின் பிரதிகள்.

ஜமீலின் பிரதிகள் செய்யும் இரண்டாவது முக்கிய விசயம்,பிரதிக்குள் ஒரு நாடகச்சூழலை உருவாக்குவதுதான்.நாடகத்தில் வரும் பாத்திரங்களைப்போல நடித்துக்காட்டுகின்றன.
யாரைப்பற்றிப் பேசுகிறதோ,அவரின் பாத்திரத்தை ஏற்று நடிக்கத்தொடங்குகின்றன.துயரங்களையும் தயர் மிகு அவசங்களையும் பாவனை செய்யும் பாத்திரமாகி ஒரு நாடகத்தை உருவாக்குகின்றன.
உடல் மொழி மாத்திரம் பேசும் நாடகம்போன்று ஒரு அரங்கை விரியச்செய்கின்றன.ஓரங்க நாடகங்கள் இதற்கு உபயோகப்பட்டிருக்கலாம்.
ஜமீலின் பிரதிகள் தனது மொழிதல் அலகுகளாக,நாடகவியலில் இயங்கும் உடல்மொழியையும், அறிவிப்பாளரின் பணியையும் இணைத்து கவிதையை உருவாக்கிவிடுகிறது.
ஒரு சிறுமியின் துயரமென்றால்,சிறுமியாக மாறி அறிவிப்பதும்,நடிப்பதுமாக செயற்பட்டு அமைதியடைவதைக்காணலாம்.
கச்சான் விற்கும் ஒரு சிறுவனென்றால்,பிரதி சிறுவனின் அறிவிப்பாக மாறிவிடும். பின் அதை நடித்துக்காட்டத் தொடங்கிவிடும்.
கடும் கோபமற்ற அறிவிப்புக்களும்,அதீத நடிப்புக்களற்ற நாடக பாவனையும் ஒன்றோடொன்று இணைந்தும் பிரிந்தும் கவிதைகளாக மாற்றமடைந்திருக்கும் பிரதிகள் ஜமீலினுடையது.

அக்கறைகளையும்,கழிவிரக்கங்களையும் கோரி தனது செயற்பாட்டைச் செய்யாமல்,அறிவிப்பாளரின் தெளிவான பகிர்தல்களையும்,
அதனோடு கூடிய நாடக பாவனைகளையும் எழுத்து வெளிக்கு
முன்தள்ளுகிறது ஜமீலின் பிரதிகள்.
இந்த இரண்டுவகைச் செயற்பாடுகளையும் ஒரு பிரதிக்குள் இயங்கவைப்பதினூடாக கவிதைத் தன்மையை உற்பத்தி செய்துவிடுகிறது.அதுவே அவரின் கவிதைக்கான இடத்தை
நவீன தமிழ்க் கவிதைப்பரப்பில் கோரிநிற்கின்றன.
பலவகை கவிதை மொழிகளாலும்,மொழிதல்களாலும் நிரம்பியிருக்கும் கவிதைகளிடையே இவருடைய பிரதிகளும் கவனிக்கப்படவேண்டியவை.

அது சரி,கவிதைத் தன்மைக்கும் அந்த மண்ணாங்கட்டித் தன்மையற்றவைகளுக்குமிடையில்
நாட்டாமைகளாக நின்று இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த தமிழுலகு தீர்ப்புச் சொல்லப்போகிறது. இன்னும் எத்தனை ஆயிரம் பிரதிகளை கொன்று குவிக்கப்போகிறது?

தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள்
றகுமான்-ஏ-ஜமீல்
வெளியீடு புதுப்புனைவு இலக்கிய வட்டம்.