செவ்வாய், அக்டோபர் 26, 2010

ஜமீலின் கவிதைகள்


90 களின் நடுப்பகுதியிலிருந்து எழுதிவருபவர் இவர். அதிகம் அறியப்படாதபோதும், பேசப்படவேண்டிய கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பவர். ஈழத்தில் கவனிக்கப்பட வேண்டிய கவிதைப்புனைவை தனது கவிதைப்பொருள் தேர்வில் உருவாக்கியிருப்பவர். ''உடையக் காத்திருத்தல்'' கவிதைத் தொகுதி வெளிவரயிருக்கிறது.


புரிதல்

இனவாதம் உட்பட
எல்லா வாதங்களுமே
நமது இருப்பை
ரத்தம் சொட்டச் சொட்ட கூறுபோட்டன


கூறு போட்ட வாதங்களை
கூட்டி எரித்து
குழிதோண்டிப் புதைத்தபோது
நிலத்தைக் கிழித்துப் பறந்தன வெண்புறாக்கள்.


இரை

இரைக்காக அலைந்து திரியும்
மிக இறுக்கமான தருணங்களில்
துப்பாக்கி ரவைகளுக்கு
இரையாகலாமெனப் பயந்து
ஒரு நிசப்தமான சூழலை 
தேடித் தேடி அலுத்த மட்டில்
சனமற்ற நதிக்கரையில்
சடைத்து நிற்கும் மரமொன்றின்
உச்சியில் அமர்ந்த சிட்டுக் குருவியை
ஒரே பாய்ச்சலில் தின்று முடித்தது
இரைக்காக பதுங்கிக்கிடந்த பருந்து.



குளம்

எனது நீர்க் குஞ்சுகளை
தினமும் வட்டமிட்டு
தூக்கிச் செல்கிறது ஏறு வெயில்


அடுத்த மாரி மட்டில்
எனது காலடிக்குத்தான் 
இளைப்பாறிக் கிடக்க வருமென
சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்
வாய் திறந்து கிடக்கிறது குளம்


இருந்தாலும் எனது மீன்களும்
நீர்க் காகங்களும்
ஆம்பலும்தான் பாவம்
அதுவரைக்கும்
தாக்குப் பிடிக்குமோ என்னவோ.


சாச்சாவின் ஆடுகள்

கிளிசரியாக் காடுகளிலும்
குளம் குட்டைகளிலுமாக
சீரழிகிறது என் முன்பள்ளிக்காலம்
ஆடுகளோடு ஆடாக 


அதோ அந்தச் சிறுவர்;களாட்டம்
எனக்கும் படிக்க ஆசைதான் 
ஆனால் ஆடுகள் போடும் புளுக்கைகள்போல்
என் கனவுகளும் சோட்டைகளும்
மேய்ச்சல் நிலங்களில் உதிர்கிறது


படிப்புபற்றிய அவசியத்தை 
உம்மா விபரிக்கும் போதெல்லாம் 
சாச்சா வந்து வந்து போவார்
பெரிய பெரிய கொம்புகளோடு


பள்ளிக்கூடம்பற்றிய ஆசைகள்
ஆடுகளின் கழுத்தில் தொங்கும் மணியாக
என் படுக்கையறை முழுவதும் ஒலிக்கிறது
தூக்கத்தை கலைத்தபடியாக.

குறிப்பு : சாச்சா - சிறிய தந்தை

ஆக்கிரமிப்பு 

உறங்கி விழித்தபோது 
என் வீட்டின் 
நடு விறாந்தையில்
சாவகாசமாக உட்கார்ந்திருந்தார் புத்தர்


வெளியே வந்து பார்த்த போது 
நான் வாழ்ந்ததற்கான 
அடையாளங்கள் எதுவுமே இருக்கவில்லை
புதிதாக ஒரு அரசமரம் மட்டும் நின்றது.

காலம் 

இலை நுனியிலிருந்து 
குளத்தில் சறுக்கி விழுகிறது 
ஒரு கட்டெறும்பு


உயிருக்குப் போராடிய கட்டெறும்பை 
தன் சின்னி விரலால் 
கரை சேர்த்து விடுகிறான் 
குளத்தோரமாக தூண்டில் போட்ட சிறுவன் 


தப்பிப் பிழைத்த கட்டெறும்பையும் 
சிறுவனையுமாக 
துவைத்;துச் செல்கிறது
மேய்ச்சல் மாடுகள்.