செவ்வாய், அக்டோபர் 18, 2011

மேசையின் மீது தேனீர் ஆறிக்கொண்டிருக்கிறது


றியாஸ் குரானா

பழங்காலமும் எதிர்காலமும்
சந்தித்துக் கொண்டபோது;;;;>
அந்த இடத்தில் புதிதாய்
ஒரு தேனீர்க் கடையை உருவாக்கினேன்.
அழகிய மேசையொன்றும்
எதிரெதிரே இருக்கும்படி
இரண்டு கதிரைகளையும் போட்டுவிட்டு
நீண்ட நேரமாக காத்திருந்தேன்

அவர்கள் வரவில்லை
சும்மா ஒரு பேச்சுக்குத்தான் 
இதைச் சொல்கிறேன்
வருவதாக யாரும் சொல்லியிருக்கவில்லை

இந்த இடத்தில்தான்
சிக்கல் வருகிறது
மேலும் எப்படி கவிதையைத் தொடர்வது

நீங்கள் நினைக்காத புறத்திலிருந்து
கவிதையை விபரித்துச் செல்ல
எந்த முகாந்திரமும் தென்படவில்லை
வேறு வழியின்றி
வீதியால் பயணித்துக் கொண்டிருந்த
இரண்டு நபர்களைப் பிடித்து
கதிரைகளில் உட்கார வைக்கிறேன்
ஒருவர் பெண்
மற்றவர் ஆண்
இந்த எளிய சரடு
என்னிடம் ஒரு பொறியை உருவாக்கியது
நான் அவசரமாக
ஒரேயொரு தேனீர்க் கோப்பையை
மேசையின் மீது வைக்கிறேன்

இப்போது பாருங்கள்
காதலர்கள் என நினைக்கும்படி
ஒரு சூழல் உருவாகியிருக்கிறதல்லவா

அதன் பிறகு
நான் எதுவுமே செய்யவில்லை
ஆனால்> அவர்கள் காதலர்கள் அல்ல
என்று நிரூபிக்கப்பட்டாலும்
நம்ப முடியாதபடி எல்லாமே நடந்தன

தேனீரை யார் அருந்துவதென
ஒருவருக்கொருவர் பரிந்துரைப்பதும்
இருவரும் குடிக்காமல் மேசையின் மீது
தேனீர் ஆறிக்கொண்டிருப்பதும்
முன்பின் அறியாதவர்களுக்கு இடையிலான
ஒரு சங்கடமான நிலை என்பதை
நாம் நன்கறிவோம்
ஆனால், அதுவே காதலின்
ஒருவித மாய விளையாட்டென
யூகிக்க பலருக்கு உதவுகிறதல்லவா

இருவரும் எழுந்து
அவரவர் வழியில்
அவரவர் வேலைக்குச் செல்கின்றனர்.
உண்மையில் இப்படித்தான்
கவிதை முடிவடைய இருந்தது
எனினும்,நமது தமிழ் பார்வையாளர்களை
கவனத்தில் கொண்டு
தீர்ப்பை மாற்றி எழுதினேன்

கீழுள்ளவாறு;;;:

மேசையிலிருந்த தேனீர்க் கோப்பையிலிருந்து
கிளம்பிக் கொண்டிருக்கும் ஆவி
அவர்களுக்கிடையில்
ஒரு எல்லைக்கோட்டை கட்டியெழுப்பியது
மிக நெடிய மௌனத்திற்குப் பிறகு
அவள் எதிர்காலத்தை நோக்கியும்
அவன் இறந்த காலத்தை நோக்கியும்
பிரிந்து சென்றனர்
இந்த இடத்தில் சோகமான ஒரு இசையையும்
எழுதியிருக்கிறேன்
சிலருக்குத்தான் அது கேட்கும்

இரண்டு முறை எழுத நேரும் என்பதால்
கிளைமாக்ஸை தலைப்பாக வைத்திருக்கிறேன்