ஞாயிறு, மார்ச் 11, 2012

சிபிச்செல்வன் கவிதைகள்


ஒரு கவளம் உணவிற்காக வாலைக் குழைக்கிறோம்.

அடுத்தவேளை உணவிற்காகப் பொய்களைச்
சரளமாகப் பேசுகிறோம்.
அடுத்த வேளை உணவிற்காகப் பல்லக்குத்
தூக்குகிறோம்.
ஒரு கவளம் உணவிற்காக வாலைக் குழைக்கிறோம்.
ஒரு கவளம் உணவிற்காக ஏமாற்றுகிறோம்.
ஒரு கவளம் உணவிற்காகக் கொலை செய்வதற்காக ஏவப்படுகிறோம்.
ஒரு கவளம் உணவிற்காகப் புறம் பேசுகிறோம்.
ஒரு கவளம் உணவிற்காக எதையும் செய்யத் துணிகிறோம்.
அடுத்தவேளை உணவிற்காக எத்தனை வேடங்கள்
எத்தனை குரல்களில்
எத்தனை பாவனைகள்
எத்தனை
எத்தனை
அடுத்தவேளை சாப்பாட்டை உறுதி செய்துகொள்வதற்குதான்
இடைவிடாது
குற்ற உணர்வுடன் அவஸ்தைப்படுகிறோம்
நாற்றம் மிகுந்த தெரு சாக்கடையை உற்சாகமாகக்
கைகளால் அள்ளி அள்ளி சுத்தம் செய்கிறார்கள்
அடுத்தவேளை உணவைக் குறித்து
அவர்கள் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை.
……………………………………

2
கழிவறையில் பதுங்கியிருக்கிறேன்  அல்லது  98.6 FM

கழிவறையில் பதுங்கியிருக்கிறேன்
கடந்த சில மாதங்களாக அங்கேதான் வசிக்கிறேன்.
வேளை தவறாமல் உணவு தலைவாழை இலை விரித்து விருந்து
நடைபெறுவதும் இங்கேதான்.
கழிவறையில் பதுங்கியிருக்கிறேன்
நவீன கழிவறையென்பதால் குளியலறையும் இணைக்கப்பட்டுள்ளது
குளிப்பதற்குத் தேவையான பொருட்கள்
சேகரித்துள்ளீர்கள்.
தொலைபேசியின் தொல்லைகளிலிருந்து
தப்பிவிட்டதாகக் கனவு
உங்கள் செல்பேசி ஒலிக்கிறது
அதைக் கழிவறைக்குள் வீசி
தண்ணீர் திறந்து விடுகிறீர்கள். விதவிதமான ரிங்டோன்கள் ஒலித்து
உங்களைத் தொந்தரவு செய்கிறது.
கழிவறைக்குள் செய்தித்தாள் வீசியெறிந்து போகிறான் பேப்பர் பையன்
சிகரெட்டைப் புகைத்தபடி காலைக் கடன்களைக் கழிக்கிறீர்
உங்களின் பரபரப்பின்மை
உங்களின் நிம்மதி
உங்களின் ஆசுவாசமான இடம்.
கழிவறைக்குள் நுழைந்து உங்களைத் தேடுபவன் யாவருமில்லை
அழைப்பு மணி கேட்டதும் பதறியோட வேண்டியதில்லை
உங்களை உளவு பார்க்கும் நிறுவனங்கள்கூட உள்ளே நுழையாது.
கழிவறைக்குள் ஆனந்தமாக 98.6 FM கேட்டுப்
பரவசமாக உணர்கிறீர்கள்
கழிவறைகள் சுகமானது
கழிவறைகள் சுகாதாரமானது
கழிவறைகள் பாதுகாப்பானது
கழிவறைகள் ஆரோக்கியமானது
………………………….