சனி, ஜூன் 02, 2012

பைசால் கவிதை


ஒவ்வொரு முறையும் காற்றை அணிந்துகொண்டால்தான்
நமக்கு நடக்க முடியும்

பைசால்

எனக்குப் பின்னால் நடந்துகொண்டிருப்பவனின்
பெயரை வாசித்து பாடமாக்கிக்கொண்டேன்.
அவனது பெயரில் வரும் எழுத்துக்களில் சிலவற்றை எடுத்து
எழுதி என்னைப் பார்த்து வாசித்தேன்.
அதுதான் என் பெயர்.

நீண்ட தூரம் வந்துகொண்டிருந்தவன்
குறுக்கே கிடந்த மற்றுமொரு பாதையால் சென்றிருக்க வேண்டும்.
ஊசாட்டமில்லை.
எனது பெயரில் இருக்கும் எழுத்துக்கள்
கொஞ்சம் கொஞ்சமாக மறைகின்றன
எல்லா எழுத்துக்களும் மறைந்துவிடுமென்றால்
எனக்கு சூட்டப்பட்ட பெயர்
அவனது பெயரின் எழுத்துக்களில் போய் பிறக்கும்.
நான் பெயரில்லாதவனாய் மண்ணில் சரிந்து விழுவேன்.

அவன் யார் என்று உங்களுக்கு சொல்லட்டுமா?
அப்படியென்றால் நீங்களும் என்னுடன் நடந்து வாருங்கள்.
வழியில் நீங்கள் காற்றை அணிந்துகொண்டு வருவீர்கள்
ஒவ்வொரு நடைக்கும் ஒவ்வொரு காற்றை திருப்பித் திருப்பி அணிவீர்கள்;.
முதலில் அணிந்த காற்றை கழற்றிவிட்டு மீண்டும் ஒன்றை அணிவீர்கள்
உங்கள் உடலில் இருந்து கழன்று விழும் காற்றுதான் அவன்

அவனைக் கண்டுபிடித்த சந்தோசத்தில் சிரிக்காதீர்கள்
அவனுக்குள்  இருக்கும் அவளைக் கண்டுபிடிக்கவேண்டும்
பின்னர் நன்றாக சிரியுங்கள்
உலகில் அவனும் அவளும்தானே வாழ்கிறார்கள்