செவ்வாய், ஜூன் 05, 2012

மூன்றாம் பாடம் விவசாயம்


  பைசால்

அவன்: புளியம் பழம் ஆயப்போவோமா?
நான்: சரி வா போவோம்.

மரத்தைக் கண்டதுதான் தாமதம்
இவன் ஓடிவருகிற வேகத்தைப் பார்த்த மரம்
பயந்து நின்ற இடத்திற்கும் பதில் சொல்லாமல்
தலை திருப்பி பிடித்தது ஓட்டம்
மற்றொரு காட்டுக்கு.
அங்கு கன்னிவெடி அகற்றும் படையினரைக் கண்டு
திரும்பவும் எடுத்தது ஓட்டம்
தன் சொந்த இடத்திற்கு.
அவன் கொப்பிலேறி அமர்ந்தது,
மரம் ஓடிப்போய் ஓடி வந்தது இரண்டும்
சூனியம் போலிருக்கும் சிலருக்காக
இன்னும் கொஞ்சம் எழுதுகிறேன்.

கரும்பலகையில்
புளியமரத்தை வரைந்து என் நண்பனை
கொப்பில் அமர்த்திவிட்டார் ஆசிரியர.;
நாக்கில் எச்சி ஊறுகிறது
வகுப்பறையை விட்டுப் பிரிந்து
என் உடல் வெளியே போய் எச்சிலை துப்பிற்று.
இப்போது நீங்கள் வகுப்பு முற்றத்தில்; நீர்த் தொட்டியைப் பார்க்கலாம்
அதிலிருந்து நீரைப் பெற்று இந்த மரம் வளர்வதற்கு உதவலாம்
என்று ஆசிரியர் படிப்பித்துக் கொண்டிருக்கிறார்.

புளியமரம், வகுப்பறை, நீர்த்தொட்டி
இந்த அடையாளங்களை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால்தான்
பாடத்தை முடித்துவிட்டு ஆசிரியர் வெளியேறியதும்
மரத்திலிருக்கும் என் நண்பனை கீழே இறக்கிவிடலாம்
எப்படியென்றால்
திங்களும், செவ்வாயும் கரும்பலகை சுத்தம் செய்பவன் நான்தான்