ஞாயிறு, ஜூலை 08, 2012

என்னவோ தெரியவில்லை… - பேயோன்

என்னவோ தெரியவில்லை…
பேயோன் 
(மே 31, 2011 டைரிக் குறிப்புகள்)

என்னவோ தெரியவில்லை… ஒன்றுமே சரியில்லை. நாம் யாரைக் குற்றம் சொல்ல? எப்போதுமே நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று என்கிற நிலைமைதான் இங்கு இருக்கிறது. பிறத்தியாருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நாமாக வலிந்து போய் எதுவும் செய்கிறோமோ இல்லையோ, மனசார நாம் யாருக்கும் கெடுதல் நினைத்ததில்லை. ஆண்டவன் உனக்கு இவ்வளவுதான் என்று கொடுத்திருக்கிறான். அதை வைத்துக்கொண்டு ஒரு குறையும் இல்லாமல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தகுதிக்கு மீறி ஆசைப்படுகிறோம் என்று வையுங்கள், அது ஆண்டவனுக்கே அடுக்காது. நமக்குச் சேர வேண்டியதை மட்டும் வைத்துக்கொண்டு திருப்திப்பட வேண்டும். நமக்கு சேராததை நாம் எடுத்துக்கொண்டோம் என்றால் அப்புறம் அது ரொம்ப நாளைக்கு ஒட்டாது. நம்மால் பிறத்தியாருக்கு நல்லது செய்ய முடிகிறதோ இல்லையோ, கெட்டது செய்யாமல் இருந்தால் நமக்கு எல்லாமே நல்லதாக நடக்கும், வாழ்க்கையில் ஒரு குறையும் இருக்காது. மற்றவரை ஏமாற்றி சம்பாரிக்கிற சொத்து ஆரம்பத்தில் சுகமாக இருக்கும்; ஆனால் போகப்போக அதுவே நமக்கு எமனாகிவிடும். மனசாட்சி என்று ஒன்று ஆண்டவன் எதற்காக நமக்குக் கொடுத்திருக்கிறான்? மனசாட்சி இல்லாமல் நடந்துகொண்டால் அப்புறம் மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்யாசம் சொல்லுங்கள். மனிதனுக்கு மனசாட்சிதான் ஆறாவது அறிவு. அது இல்லை என்றால் மனிதன் மனிதனே இல்லை. அவன் எவ்வளவு படித்திருந்தாலும் சரி, எவ்வளவுதான் சம்பாரித்தாலும் சரி, சமூகத்துக்கு நல்லது பண்ணாவிட்டால் அவன் உயிரோடு இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.
* * *
வயதாக ஆக மரணம் குறித்த சந்தேக புத்தி மனதைப் பீடித்துக்கொள்கிறது. முப்பது வயது இளைஞர்கள் எல்லாம் நெஞ்சு வலி வந்து பொசுக்கென்று போய்விடுகிறார்கள். கோமா, பக்கவாதம் என்று இழுத்தடித்து நம்பிக்கையைக் கண்ணில் காட்டாமல் மரணம் ஒரேடியாக வாய்க்குள் கடாசிக்கொள்கிறது. எப்போதாவது நெஞ்சு வலி எட்டிப் பார்த்தால் உடனே பதற்றமாகிறேன். தண்ணீர் கேட்டுக் குடிக்கத் தோன்றினாலும் என் திரைக்கதைகளில் வருவது போல் மனைவி தண்ணீர் கொண்டுவருவதற்குள் உயிரை விட்டுவிடுவேனோ என்ற பீதியில் எச்சிலையே தண்ணீராக்க முயல்கிறேன். ஆனால் பீதி உள்வாயின் ஈரத்தை வற்றச் செய்துவிடுகிறது. நெஞ்சு வலியின் அறிகுறி ஏற்பட்டால் என் மேஜைக்கு ஓடுகிறேன். டிராயரைத் திறந்து அதில் தயாராக வைக்கப்பட்டிருக்கும் ரைட்டிங் பேடை எடுத்து வைத்துக்கொண்டு அமர்கிறேன். சாவதும் சாகாததும் நம் கையில் இல்லை. ஆனால் நாம் சாகிறபோது நம் கையில் என்ன இருக்கிறது என்பது சில சமயம் நம் கையில்தான் இருக்கிறது. நான் சாகும்போது கோணலாகப் படுத்த நிலையில் “ஐயோ போகிறேனே” என்ற முகபாவனையுடன் கிடப்பதை விட, என் இருப்பின் அடையாளத்தை வெளிப்படுத்தியபடி சாவதையே விரும்புகிறேன். ரைட்டிங் பேடில் எப்போதோ இதற்காகவே எழுதிய கடைசி வரிகள் காத்திருக்கின்றன. நான் பேனாவைத் தாளின் மேல் வைத்துக்கொண்டு உயிர் பிரியக் காத்திருந்தால் போதும். என் கடைசி வார்த்தைகள் இந்த அழியும் வாயிலிருந்து ஓலமாக வெளிப்படுவதைக் காட்டிலும் அச்சிடப்பட்ட வார்த்தைகளாக விநியோகமாவதையே விரும்புவேன். அந்த சொகுசு வாய்க்காத சூழ்நிலையில் எனது விசுவாச ரைட்டிங் பேடில் மரணத்தைப் பற்றி ஆழமாக ஏதாவது எழுதிவிட்டுச் செல்வதே நான் மரணத்தை சூட்சுமமாக வெல்வதாகும்.
* * *
உலகம் ஒரு அட்சய பாத்திரம் என்று வைத்துக்கொண்டால் ஒவ்வொரு ஜீவனும் ஒரு பிடி சோறு. மரணம் என்கிற ராட்சத ஆக்டோபஸ் ஒரே சமயத்தில் பல கோடிக் கைகளால் பல கோடிக் கவளங்களை கபளீகரம் செய்கிறது. சோறு தோன்றிய வேகத்திலேயே மறைகிறது. மறைந்த வேகத்திலேயே மீண்டும் தோன்றுகிறது. இது வருடம் முழுக்க நடக்கிறது.
* * *
இப்படியே கழிந்தது இன்னொரு நாளும். விடியலை நோக்கி நகர்வதற்கான இயக்கங்கள் எதையும் இரவு கைகொள்ளவில்லை. கனமான பீங்கான் கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கிறது இரவு. இருந்தாலும் நாளை வரும். பிறகு இப்படியே கழியும் இன்னொரு நாளும்.