செவ்வாய், டிசம்பர் 18, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 10

91

காற்று பலமாக வீசுகிறது
விழாமல் இருப்பதற்காக
கிடந்த பக்கமெல்லாம் அசைகிறது
தாளில் வரையப்பட்டிருந்த கட்டிடம்


92
அறிமுகமற்ற நட்சத்திரக் கூட்டத்தினுள்
நுழைந்து சென்ற நிலா
பத்தாவது வீட்டிற்கு மேலாக
அசையாமல் நிற்கிறது
நேற்றுப் பகலும் கண்டேன்

93
இரவில் உறங்குவதற்கு
கடல் விரும்புகிறது
அலைகளை உற்றுக் கேட்டபோது
அறிந்து கொண்டேன்.

94
போதியளவு இருட்டுடன் இன்றைய இரவு இல்லை. துடைத்துத் துடைத்து இருட்டைக் குறைத்தேன்.

95
விரும்பிய நேரம் அணியவும் கழற்றி வைக்கவும் தோதான ஒரு புன்னகை வேண்டும்.

96
சப்தத்தை மறைத்து வைக்க இரவிடம் எந்த வசதியும் இல்லை.சிறிய ஒலியையும் வெளிப்படுத்திவிடுகிறது.

97
வீதிக்கு வருகிறேன்
என்முன்னால் வேகமாக ஓடிச் சென்று
பலதிசைகளைில் கிளைத்துச் 
செல்கிறது வீதி.
நான் போக வேண்டியிருந்த
இடத்தைக் குழப்பிவிட்டது
வழிகாட்ட எந்த உதவியும் செய்யவில்லை
வீதி கிளைக்கும் சந்தியில்
நிற்கும் மரத்தடியில் அமர்ந்துவிட்டேன்.
நான் போகவேண்டியிருந்த இடம்
இதுதான் என கேட்பவர்களுக்குச் சொல்லி
துயருடனிருந்தேன்.

98
உண்மையை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்.
எங்கெல்லாமோ சுற்றிவிட்டு
வேகமாக வருகிறாள்
மிக வேகமாக
இதயத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறாள்
அதைத்தாண்டி
நான்கூட இதுவரைப் போனதில்லை.
அவசரமாக எங்கே போகிறாள்?

99
என்னிடமிருந்த வினைச்சொற்களை துரத்திவிட்டேன்.
அதற்குப் பதிலாக செய்வினைச் சொற்களே இருக்கின்றன.
100

கற்பனை செய்வதுதான் மனிதர்களுக்கான உச்சபட்ச தண்டனை.