செவ்வாய், டிசம்பர் 18, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 5

41
வழக்கமான பாணியில் கற்பனை செய்தார். அதற்குள் துள்ளித் திரியும் எனது முயலைத் துரத்திவிட்டு.

42
போதியளவு துாங்காத இரவுகளை பாதுகாத்து வைத்திருக்கிறேன். பின்னொரு நாள் மீதியையும் துாங்க வேண்டும்.

43
மாலை நேரத்துச் சுவரை படம் பிடித்தால் ஒரு திரைச் சீலைதான் தெரிகிறது. அதை விலக்கிப் பார்ப்பவர்களுக்கு உன் முகம் தெரியும்.

44
உனது கண்களை அணைத்துவிடாமல் துாங்கப் போதுமான நேரம் இல்லை.

45
உறங்குவதைப்போல அமைதியாக எழும்ப முடியவில்லை.

46
தாமதமாக நினைத்து அவர் வராததை கீறிக்கொண்டிருந்தாள். வந்துவிட்டதைப்போல இருந்தது சித்திரத்தில்...

47
திடீரென விழுந்த பெரும் மழைத்துளிகள் இரவை உடைத்தன. நாளையும் இரவு வரும் என்றாள் மனைவி.

48
இரவு வீடு முழுக்க பெரும் சத்தம்
அது நான் துாங்கப் போதுமானதாக இருந்தது.

49
என் கனவுகளிலொன்றைக் காணவில்லை
தொலைந்துவிட்ட தென்றும் சொல்லலாம்
கண்டுபிடித்து தருபவர்களுக்கு 
தகுந்த சன்மானம் வழங்கப்படும்
தொலைவதற்கு சற்று முன்
நானும் அவளும் அதற்குள்
முத்தமிட்டுக் கொண்டிருந்தோம்.
மேலதிகத் தகவலொன்று
அந்தக் கனவு சதுரவடிவிலானது.

50
ஒரு ஜன்னலும்
ஒரு கதவும் கொண்ட சுவர்தான்
ஆதிகாலம் தொட்டு இருக்கிறது
சுவருக்கு அந்தப் பக்கம் பார்க்கும் ஆசையில்
ஜன்னலைத் திறந்தேன்
கடலும் அலைகளும் தெரிந்தன
கதவைத் திறந்தேன்
காடும் மலைகளும் தெரிந்தன.
ஒரே திசையில்
அருகருகே இருக்கின்றன
என்பது அனைவருக்கும் தெரியும்.
திறக்கும் எல்லாத் தருணங்களிலும்
அப்படியல்ல.