புதன், டிசம்பர் 19, 2012

வாசித்தல்

றியாஸ் குரானா

பூரானைப்போல அந்த வாக்கியம் ஊர்ந்து கொண்டிருக்கிறது.

நேற்று வாசித்த ஒருவர்
தண்ணீரைப்போல அதைக் குடித்தார்.
நீ அதைக் கண்டு அச்சப்படுகிறாய்
என் காதலை ரகசியமாக 
உன்னிடம் துாக்கி வருகிறது எனத் தெரிந்தும்
நீ தடியோடு நிற்கிறாய்.
அடிப்பதற்கு அருகில் நெருங்கும்போது,
மளமளவென்று அர்த்தங்களைக் குடித்து விடுகிறது.
தடியால் தொட்டுப் பார்த்து
செத்துவிட்டதாக உறுதி செய்கிறாய்.
நீ தொலைவுக்கு சென்றதும்,
அசைவதையும், ஊர்ந்து செல்வதையும்
தனது பிரமை என நினைத்து ஆறுதலடைகிறாய்.
மீண்டும் உயிர்த்தெழ,
காத்துக் குடிப்பதாக கருதும் பட்சத்தில்
திரும்பி வந்து கொல்லுவதாக நினைக்கிறாய்.
நீ நினைக்கும் இடைவெளிக்குள்,
பல நாவல்களின் துாரத்தைக் கடந்து
அந்த வாக்கியம் சென்றுவிட்டது.
அந்த வாக்கியத்தோடு போராடுவதாக சொல்லுகிறாய்.
அந்தச் சந்தோசத்தை உன்னிடமிருந்து பறிக்க
எந்த வாசகருக்கும் விருப்பமில்லை.