திங்கள், ஜனவரி 21, 2013

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 17


161
பெட்டி ஒன்றுக்குள் இருபது நிழல்களை அடைத்து வைத்திருக்கிறேன்.
தெருக்களில் அலைந்து திரிந்து
கஷ்டப்பட்டு பிடித்தவைகள்.
அதற்குள் எனக்குப் பிடித்த நிழலொன்றும்
இருந்தது.
பின் அது தப்பிச் சென்றுவிட்டது.
கவிதையில் தற்செயலாக நடந்த
விபத்தின் போது அதை இழந்தேன்.
நிழல்களுக்கான உணவை
கொடுக்க மறந்தபோது அந்த விபத்து நடந்தது.
நிழல்கள் என்ன சாப்பிடும்..?

162
நாள் மிக மெதுவாக ஆரம்பித்துவிடும்.நான் வேகமாகச் சென்று அடுத்த நாளின் வாசலில் நின்று வரவேற்பேன்.என,இந்த இரவை பகலில் நின்று வரவேற்கிறேன்.

163
தனித்தனியாக அறிமுகம் செய்யவே
இலைகள் விரும்பின.
அப்போது காற்று நிறுத்தப்பட்டது
கைவிடப்பட்ட பறவை ஒன்று
நேர்முக வர்ணணையில் ஈடுபட்டது.
எங்களுக்கு பாதுகாப்பில்லை
இரவைக் கழிக்க இது நல்ல மரமாகும்
அங்கிருந்து,பறவை பறப்பதையே
கற்பனை எதிர்பார்க்கிறது.
பறந்ததும்,தடங்கலின்றி
இலைகளின் அறிமுகத்தை கேட்கலாம்.

164
உன்னிடம் என்ன பேசுவது
எவைகளைப் பேசுவது
கடந்த ஒரு மாதத்தில்
நிறைய சேகரித்து வைத்திருக்கிறேன்
பல வழிகளில்
ஏதாவதொன்றை முன்னிறுத்தி
என்னைப் பிடிக்கச் செய்ய
பல பயிற்சிகளை செய்தபின்
காத்திருக்கிறேன்.
எப்போது உறங்குவாய்
கனவின் மூலம் உள்ளே நுழைய வேண்டும்.

165
கடல் மீது நிறுத்தப்பட்ட
மலை அசைந்து கொண்டிருக்கிறது
நீங்கள் பார்க்கும்போது,
மூச்சைக்கொண்டு மறைக்கிறேன்.
என,எழுதிவிட்டு
சில பறவைகளை மலை நோக்கி
அனுப்புகிறேன்
விளையாடிவிட்டு திரும்புகின்றன
திரும்பும் பறவைகளுக்கென
ஒரு மரம் வேண்டும்
சிறிது நேரத்தில் மரத்தை வளர்த்துவிடுவேன்
அதுவரை அமர இடமின்றி
வானில் சிறகடிக்கும் பறவைகளுக்கு
சிறகு வலிக்குமென நினைக்கையில்
வருத்தப்பட வேண்டியிருக்கிறது.

166
தனியாகப் படுக்கையில்,
எண்ணற்ற மனிதர்களைக் கொண்டு
இரவைக் துண்டுகளாகப் பிரித்துக்கொண்டிருக்கிறாய்
நான் மாட்டிக்கொண்ட பகுதியை
உன்னருகிலிருந்து தூரப்படுத்த

167
போருக்குப் பின் என்ன செய்கிறீர்கள்...?

பலரின் பொழுதுபோக்கு புகைப்படங்களில்
உட்கார்ந்திருப்பதாகும்.
எஞ்சியிருப்பவர்கள்
புகைப்படத்திலிருப்பதைப்போல்
பாவனை செய்வதாகும்.

168
நாங்களும் வாழ வேண்டும்

இடம் கண்டறிப் படவில்லை.

முதலில் மூச்சி விடுவதற்கு
நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒரு நாளைக்கு
எத்தனை முறை சிரிப்பது
எத்தனை முறை அழுவது
அனுமதி பெறவேண்டும்

குசு உடுவதற்கும்
முன் அனுமதிபெற வேண்டும்.

நாங்கள் தயாரிக்கப்படுகிறோம்

இலக்கு எங்களுக்கு எதிராகவே உள்ளது

எங்கள் எல்லைகள் மூடப்படுகின்றன.

இவை படித்து ரசித்தவை.
யாவையும் கற்பனை.
உண்மைக் கதை.

சந்தர்ப்பத்திற்கேற்ப
மாறக்கூடிய விசித்திர முடிவுகளைக்கொண்டது இது.


169
வாக்கியமொன்றை படிக்க தயங்கினேன்.
அதைப் பற்றி கேள்விப்பட்டேன்.
நல்ல தலைப்பின் கீழ் வசிப்பதாக அறிந்தேன்.
அச்சுறுத்தும் உள்ளடக்கங்களோ
வெறுக்கத் தக்க வழிகளோ இல்லை என்றானது
நான் எழுதி மீண்டும் வடிவமைத்தேன்.
பின் நிறுத்த முடியவில்லை.
அந்த வாக்கியத்திற்கு
இப்போது வெட்கமே இல்லை.
யார் உச்சரித்தாலும் அவர்களின் உதடுகளில்
தொங்கிக்கொண்டிருக்கிறது.
இறங்குவதே இல்லை.
அந்த வாக்கியதிலுள்ள ஒரு சொல் முத்தம்
ஏனைய சொற்களை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும்.

170
எனக்கு உயரப் பறக்க விருப்பம் இல்லை.சாதாரணமாக இப்படியே நடந்து செல்லவே விரும்புகிறேன்.சொந்தமாக இரண்டு சிறகுகள் கிடைத்த பிறகும் இப்படிச் சொல்லுவதற்காக பயிற்சி செய்கிறேன்.