சனி, செப்டம்பர் 28, 2013

சும்மா பக்கங்கள் - காகத்துக்கு தோதான இடம்

குப்பை வண்டியின் ஒரு மூலையில் தொங்கியபடி அவர்கள் பயணித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

பிளாஷ் பெக் தொடங்கியது,

வலதுகாலும் இடதுகாலும்போல நண்பர்களாயிருந்தனர். ஒரு கால் முன்னே எட்டி வைக்கும்போது, மறுகால் பின்னே சென்றுவிடுகிறது. காலப்போக்கில் இது அவர்களுக்கு பிரச்சினையாக இருந்தது. முந்திப் பிந்தாமல் செல்ல வேண்டும் என இருவரும், ரகசியமாக தனித்தனித் தலைமறைவுத் தி்ட்டங்களைத் தீட்டினர். அதற்கான செயல்களில் தீவிரமாக இறங்கினர். ஒரு நாள் அவசர வேலையாக நடந்து செல்லும்போது கால்கள் இடறின. கணேஷ் அன்றுதான் கோபத்தோடு குனிந்து இரண்டு செருப்புக்களையும் பார்த்துக்கொண்டான். அவன் கழற்றி வைத்துவிடும் சமயங்களில், தாங்கள் சமமாகவும், ஒரே இடத்தில் நெருக்கமாகவும் இருப்பதாக அவர்கள் உணருவதை புரிந்துகொண்டான். பிய்ந்து விடுமளவு தேய்ந்திருந்த அவர்களை வழமைக்கு மாறாக வாசலில் கழற்றி வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். தங்களை கணேஷ் கைவிட்டுவிடுவான் என செருப்புக்கள் ஒரு போதும் நினைத்திருக்கவில்லை. பின்னர், சில வழிப்போக்கர்கள் தலையில் துாக்கிச் சுமப்பதைக் கண்டிருக்கிறான்.

பிளாஷ் பெக் முடிந்துவிட்டது.

புகை கக்கியபடி நாற்றமெடுத்துச் செல்லும் அந்தக் குப்பை வண்டி மடுவத்துப் பக்கம் திரும்பியது. அந்த நேரம்பார்த்து பறந்து வந்த காகம் அவர்களின் மேல் எச்சமிட்டது. தொட்டு மூக்கில் முகர்ந்து பார்த்து நல்ல வாசமென உடலெங்கும் பூசிக்கொண்டனர். கெக்காளமிட்டு சிரித்துச் சென்ற காகம், அந்தப் பக்கம் சுத்துவதையே வழக்கமாக்கிக்கொண்டது.