சனி, செப்டம்பர் 28, 2013

சும்மா பக்கங்கள் - பின்நவீன பணியாரம்

 சிறுகதை - பாம்பாட்டி எழுதியது.


காட்சி - 01

டேக் - ரெடி - ஸ்டார்ட் - டப்
கும்மிருட்டு.
இருட்டு மௌனமாக இருந்தது.திருடரைப்போல மெதுவாக அங்கே நுழைந்த காற்று, எரியும் விறகின் சுவாலையை அசைத்து சுழிக்கச் செய்துவிட்டு திரும்புகிறது.
கட் - கட்
உதவி இயக்குநர் சத்தமிட்டுக் கத்துகிறார். எத்தனையாவது டேக் எனத் தெரியவில்லை. இயக்குநருக்கு இன்னும் திருப்தி வரவே இல்லை. இருட்டு ஒருபக்கம் சலித்துப்போய் குந்தியிருக்க, மரத்தில் ஏறி காற்று இளைப்பாறிக்கொண்டிருந்தது. யாரும் ஊதி அணைக்காமலே நெருப்பு நுார்ந்து போயிருந்தது. இந்த சீனைப் பிறகு எடுக்கலாம் என கடைசியில் கைவிட்டுவிட்டனர். இதுவரை எடுத்த சீன்களை போட்டுப்பார்க்க இயக்கநர் நினைத்தார். எடிட் செய்யப்படாததினால் குழம்பியிருந்தது.

நாமளும் படத்தப் பாக்கலாமா? இல்ல படத்தின் கதையச் சொல்லுறன் கேட்டுப்பாருங்கோ. கேட்டலும் பார்த்தலும் இந்தச் சொல்லுல இருக்கிறத பாத்தியளோ? நீங்கள் கேட்பதினுாடாக படத்தைப் பார்த்தல் என்பதையும் நிறைவேற்றலாம்.

நிலா வெள்ளை பளீரென்று வெளிச்சமாகிக் கிடந்தது. அங்கிருந்த அனைத்துப் பொருட்களுமே மினுமினுங்கின.

”வெவ்வேறு இடங்களில்
கண்டெடுத்த மண்ணைப் பிசைந்து
ஒரேயொரு சட்டியில்
சுட்ட பணியாரம்தான்”  என்ற நீளமான கவிதையொன்றின் கடைசி வரிகளை உச்சரித்தபடி X  தோண்றினான். சலசலப்புச் சத்தம் கேட்கிறது. X திரும்புகிறான். X யைக் காட்டவில்லை. அந்த இடத்தில் தேனாறு ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மேலே ஒரு பாலம். பாலத்தின் மீது X நிற்கிறான். ஊஞ்சல்போல பாலம் ஆடிக்கொண்டிருக்கிறது. ஒரு உன்னு உன்னிக் குதிக்கிறான். தேனாற்றில் விழுந்து தத்தளிக்கிறான். தேனாறு விலகி இடம்தர நடுவால் பாலாறு பாய்ந்து செல்கிறது. நீந்திக் கரை சேர்ந்ததும், மரத்திலிருந்த ஒரு மலர் இறங்கி வந்து X இன் கைகளில் சிக்கிவிடுகிறது. சிக்குவதற்கென்றே விழுந்தது என்பதை பின்னர் அறிந்துகொள்ளலாம். மலர் ஓயாது மதுவைச் சுரக்கிறது. அருந்துகிறான். கண்ணுக்கெட்டிய துாரத்திலிருந்து பாய்ந்து வந்துகொண்டிருக்கிறது மது ஆறு. பெருமூச்சொன்றை விட்டபடி X சற்றுத் துயரமாக இருக்கிறான். அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் இயக்கநர் நம்முட ஹீரோ என்னடா ஏஞ்சல்களைக் காணவில்லை என்று பெருமூச்விடுகிறான் என்றார். எல்லோரும் மெலிதாகச் சிரித்தனர். X யை எல்லாருக்கும் தெரியும்தானே...  எப்படி நினைக்கிறோமோ அப்படி உருமாறக்கூடிய ஒருவர் X இன் அருகே வருகிறார். X பெண்ணை நினைத்திருக்கக்கூடும், அந்த வடிவில்தான் உருமாறுபவர் இருந்தார். கண்முன்னே அவரின் அழகு கூடிக்கொண்டே இருந்தது. நிற்கவே இல்லை. Xக்கு பொறாமையும் வெறுப்பும் வந்தது. வெப்புசாரத்தில் கதறி அழுதார். அங்கே அழுகை சரிப்பட்டுவராது. அழுதால் சிரிப்பாகவே அது மாறும்.

உருமாறுபவரை உற்றுப்பார்க்கிறார். அவரின் அழகுகூடுவதாலும், அவர் பெண்போல தோற்றமளிப்பதாலும் சஞ்சலப்படுகிறர் X. முகத்தில் சிரிப்பின் ஓரிரு வரிகளையாவது எழுத முயற்ச்சிக்கிறார். முடியுமா என்ன? என்ன சொத்தடா இது என மனதுக்குள் நினைக்கிறார். மனதுக்குள் நினைப்பதைக்கூட படமாக்கியிருப்பதை இயக்குநர் இந்த இடத்தில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அடுத்த சிகரெட்டை இயக்குநர் புகைக்கத்தொடங்குகிறார். அந்தக் காட்சியை மீண்டும் ஒருதரம் பார்க்கிறோம். X சஞ்சலப்படுகிறார். இரண்டு கால்களுக்குமிடையே X முதலில் வலது கையை அனுப்பினார். மறுத்துவிட்டது. இடது கையை அனுப்பிப்பார்த்தார் ம்ஹூம்... அதுவும் பிடிவாதமாக மறுத்துவிட்டது. கைகளை எதற்காக அனுப்பினார் என்பது அவைகளுக்கு நன்கு தெரியும். உறங்கிக் கொண்டிருக்கும் போர்வீரனே எழும்பு என சத்தமிட்டுக் கதறினார். அதுவும் பலிக்கவில்லை. ஹீரோ தொடர்பில்லாத வசனத்தைப் பேசுகிறார் என பைனான்ஷியர் இந்த இடத்தில் சுட்டிக்காட்டினார். சுதாகரித்துக்கொண்டு எழுந்த இயக்குநர் அது பொருத்தமான வசனம்தான் என்று விளக்கினார்.

விளக்கும் பகுதி.

X பழம் தின்று இரண்டு கொட்டைகளையும் போட்டவர். அதனால், காத்துப்போன பொலித்தீன் பைபோல பரிதாபமாகக்கிடந்தது. முட்டுக்கொடுத்து நெஞ்சை நிமிர்த்தி சாமானை வைத்திருந்தார். என்னத்திற்கு இங்கு வந்தோம் என X இன் உள்மனம் சோர்வடைந்தது. உள் மனசுக்குள்ளால ஏதாவது குறுக்கு வழிகள் இருக்கிறதா பயணித்துப் பார்க்கலாம் என யோசிக்கத் தொடங்கினார்.

படம் தொடர்கிறது.

அங்கு வந்த உருமாறுபவர் யோசிக்கவிடவில்லை.
 ”ஏன் இங்கு வந்தாய்” வினவினார்.

”சும்மா நெலவ ரசிக்கலாமெண்டு வந்தேன்”

” நிலவு உன்னைக் காப்பாத்தாது”

X ”ஆமா, நான் நிக்கிறது எந்த எடம்?” என வடிவேலு ஸ்டைலில் வினவினார்.
ஆனால், அந்த ஸ்டைலை X ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.

”நீங்கள் இன்னும் மரணிக்கவில்லை. ஆகவே, சொர்க்கத்திலிருந்து வெளியேறும்படி கட்டளை வந்திருக்கிறது” என்றார் அந்த உருமாறும் நபர். ஆமா, நான் இவ்வளவு நேரமும் சொர்க்கத்திலயா இருந்தன் என X கேட்பதற்கிடையில் கழுத்தைப் பிடித்து வெளியேற்றப்பட்டார். வெளியேற மாட்டேனென்று X அடம்பிடிக்க, தறதற என இழுத்துக்கொண்டுவந்து வெளியே தள்ளிவிடுவதுமாதிரியும் ஒரு காட்சி படமாக்கப்பட்டிருந்தது. அது கொஞ்சம் வன்முறையாக இருந்தது.

அடுத்த காட்சி

 மரமொன்று காட்டப்படுகிறது. அதற்கருகே ஒரு பாட்டி அமர்ந்திருப்பதுபோல ஒரு தோற்றம் தெளிவற்றுத் துாரத்தே தெரிகிறது. நம்முட X எளச்சிளச்சி ஓடிவருகிறான். சாறன் ஒரு பக்கம் இழுபட்டு வருகிறது. சின்னச் சிலுவை ஒன்று கையில அதச் சுமந்துகிட்டு வாரான். கடும்பாடுபட்டு பாட்டியின் அருகில் வந்துவிட்டார். பாட்டி வடை சுட்டுக்கிட்டிருக்கிறாள்.

”ஏண்டா செல்லம் வட சுடுகிறாய்”? என்கிறார் X. இரண்டு பேருக்கும் ஒரே வயது என்பதால், X பாட்டி என்று அழைக்கவில்லை. X பாட்டிகளையும் அப்படித்தான் பார்ப்பார் என பார்வையாளர்கள் யோசித்தால் அதற்கு இயக்குநர் பொறுப்பல்ல. என்ற வசனம் திரையில் தெரிகிறது. அந்த வசனத்தை யாராவது ஒரு கதாபாத்திரத்தை வைத்து விஷூவலா சொன்னா நல்லா இருக்குமென்று ஒரு உதவி இயக்குநர் தனது ஆலோசனையை முன்வைக்கிறார்.

பாட்டி - ” வட சுட்டாத்தான் அதக் கொத்திப் பறிச்சிப்போக காகம் வரும். அந்தக் காகமும் எடுத்துக்கு பறந்துவிடாமலும், சாப்பிடாமலும் மரத்தில வெச்சிக்கு காத்திருக்கும். வடயக் காப்பாத்தித்தர நரியும் வரும். இம்பட்டும் நடக்கொணுமெண்டா வடதானே சுடனும்”

X சிரிக்கிறார். அவர் சிரித்தால் எப்படியிருக்கும் என்பதை திரையில் காட்டவில்லை. சத்தம் மட்டுமே கேட்கிறது. சிரிப்பு முடிந்ததும் X யைக் காட்டுகிறார்கள்.

”ஒங்குட பணியாரம் நல்லா இருக்காதா”? என அடுத்த கேள்வியை கொஞ்சம் ரொமான்சாக X கேட்டுவிட்டார். X டபுள் மீனிங்ல எல்லாம் பேசுவார். அனேகமான அவருடைய கதைகள் டபுள் மீனிங்மாதிரி மறைந்திருந்து கேட்பவைதான். நேரடியாக கதைக்கிறதுக்கு Xக்கு ஒன்றும் தெரியாது என்பதை படம் முடிவடையும்போது கண்டுகொள்ளலாம்.

”அதெல்லாம் நான் சுடுறதில்ல” என்றாள் பாட்டி.

காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த பைனான்சியர், கோபத்தோடு உணர்சிவசப்பட்டு எழுந்து- வழிசல்,வளப்புணி,கழிசடை என்ன கதடா இந்த X கதைக்கிற என்றதும், அதெல்லாம் சினிமாவுல சகஜம் சார் என்றார் இதுவரை வாயைத் திறக்காதிருந்த ஒரு உதவி இயக்குநர். இந்த சீன் தேவல என பிடிவாதமா இருந்தாரு பைனான்சியர். பார்க்கலாம் என பதில் வந்ததும் .. தொடரந்தது.

பாட்டி வடை வடையா சுட்டுக்கிட்டே இருந்தா... கொத்திப் பறக்க காகம் வரவே இல்லை. அதனால், வடையைக் காப்பாற்றிக்கொடுக்க நரியும் வரவில்லை. அங்கிருந்து பாட்டி புறப்பட்டுச் செல்கிறாள்.  அப்போது, மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து மேலே கிளம்பி நெழிந்து வளைந்து சுற்றிக்கொண்டிருந்தது புல்லாங்குழலிசை. பியானோ தாறுமாறாக கூச்சலிட்டது. அவைகளைக் கேட்கும்போது பார்த்திருந்த எங்களுக்கே பசிக்கத்தொடங்கியது. X க்கு எப்படி இருக்கும். இசையால் பசியை உண்டுபண்ணிய முதலாவது திரைப்படம் இது வென்று பலவிருதுகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. கடும்பசி வந்திருக்க வேண்டும். எஞ்சியிருந்த மாவைக் குழைத்து உருட்டி கையால் பிசைந்து X வடைகள் சிலவற்றைச் சுட்டான். வடைகள் உருமாறி பணியாரம் பணியாரமாகவே வந்தது. அப்போதுதான் கிளைமாக்ஸ் ஆரம்பிக்கிறது.

அந்தப்பக்கம் கண்வெட்டி மறையிரதுக்கள் ஒருவர் தோண்றினார். ”வணக்கம் X, எப்படியிருக்கிறீங்க” என்று Xயைப் பார்த்துக்கேட்டதும் நெஞ்சுக்குள் திக் என்றது. இடிவிழுந்ததைப்போல, பேயறைந்ததைப்போல இன்னும் பல உவமைகளைச் சொல்லலாம் அவசரத்துக்க நினைவில் ஒன்றும் வரவேயில்லை.
”உங்களை எங்கோ பார்த்திருக்கிறேனே” என X தனது நினைவுகளைத் துளாவினார். அவர் துளாவுவதில் நல்ல சமத்தன் என்று யாரோ சொல்லுவது காதில் ஒலிக்கிறது. பக்கத்துல நினைவைக் கொட்டி, சீச்சிப்பார்த்துவிட்டு ம்ஹூம் எதுவும் அகப்படல என்றார்.

இருந்தாலும் Xக்கு ஒரு சந்தேகம். சொர்க்கத்துல இருந்து கழுத்தப்புடிச்சி தள்ளின ஆளா இருக்குமோ? சீச்சீ.. இது சொர்க்கமில்லதானே அந்தாள் வர மாட்டான் என உள்மனதுக்குள் சொல்லிக்கொண்டார். அப்படி மனதுக்குள் X சொல்லுபவை எவையும் அருகில் இருப்பவருக்கு கேட்பதில்லை. பார்வையாளர்களுக்கு கேட்கும்.

மிச்சப்படத்தை விளக்குவதற்கு இலகுவாக, புதிதாக வந்தவருக்கு ஒரு பெயரை வைப்போமா..? என்ன செரிதானே..? அனைவரும் தலையை ஆட்டினர். அதை ஆமாம் என எடுத்துக்கொண்டு, படம் முடியும் வரை அவர் ”ஜோமூர்த்தா”  என அழைக்கப்படுவார் என அறிவிக்கிறேன் என்றார் இயக்குநர்.

X சுட்ட வடைகள் பணியாரமானதாலும், அதை ஜோமூர்த்தாவிடம் காட்டினால் வடை சுடத்தெரியாத சங்கதிகள் வெளிவந்துவிடும் என்பதாலும், ஜோமூர்த்தாவின் மீது பயமும் சந்தேகமும் இருப்பதனாலும், X தனது பணியாரமான தனது வடைகளை எறிந்துவிட்டார். அவைகளை வழிப்போக்கர்கள் சிலர் பசிக்கு வழியின்றி உணவாக்கியது என்பதை படத்தில் எந்த இடத்திலும் காட்டவில்லை. எனினும், X கடும் பசியிலிருப்பதை அறிந்தான். தனது தோள் பையிலிருந்து சில உணவுப் பண்டங்களை X க்கு கொடுத்தான். பேயன் பிலாப்பழத்தைப் பார்ப்பதைப்போல X புரட்டிப் புரட்டிப் பார்த்தான். எப்படிச் சாப்பிடுவதென்று தெரியவில்லை. இந்தப் பண்டங்களை X இதற்கு முன் கண்டிருக்கவுமில்லை.

X -  ” இவைகளைச் சாப்பிட்டால் எப்படியிருக்கும்?”

ஜோமூர்த்தா - ” ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை”

”இதையெல்லாம் நான் காணவே இல்லையே, என்ர கண்ணுல காட்டாம மறச்சிட்டாங்களே” என்று பெருமூச்சுவிட்டார் X.

ஜோமூர்த்தா -” அந்தப் பண்டங்களெல்லாம் விற்பனைக்கு வந்த காலங்கள்ல நீங்கதானே, றீல் பாஞ்சி திரிஞ்சயளே.. அப்பம் தானே உங்களுக்கு அப்ப புடிச்ச உணவு”

X இன் வாயால் வடிந்தது. வடை, அப்பம், பணியாரம், பாலும்பழமும் என்ற குச்சிமிட்டாய் போன்ற பண்டங்களையே தனது வாழ்நாளில் கண்டும், சாப்பிட்டுமிருந்த X தனது வாயைத்துடைக்க கைக்குட்டை கேட்டார். ஜோமூர்த்தா ஒரு நப்கினை நீட்டினார்.. அதையும் கொஞ்ச நேரம் புதினம் பார்த்துவிட்டு வாயைத் துடைத்தார். எல்லாத்திலயும் கொஞ்சம் கொஞ்சம் நக்கிப் பார்த்துவிட்டு சாறனுக்குள் கைட்டிவைத்துக்கொண்டார். சாப்பிடத் தெரியாததால் ஜோமூர்த்தா முன்னிலையில் சாப்பிடாமல் வீட்ட கொண்டுபோய் உண்ணும் எண்ணமாக இருக்கலாம்.

”பாக்குறதுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறதே இதுகள்ர பேரென்ன ”என்டு கொஞ்சம் தயங்கித் தயங்கி கேட்டார் .

வடை, பணியாரம், அப்பம் என உணவுப் பண்டங்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டிருந்தார் ஜோமூர்த்தா. இடை மறித்த X , எல்லாம் கேள்விப்பட்ட பெயர்தான் ஆனால், உருவங்கள்தான் வித்தியாசமாக இருக்கிறதென்றார். Xக்கு விளங்கும்படி சொல்ல யோசித்த ஜோமூர்த்தா, அனைத்துப் பண்டங்களின் முன்னும் ”பின்நவீன” அல்லது ”பின்னைய” எனப் போட்டுவிட்டால் சரி என்றார். உதாரணமாக, ”பின்நவீன பணியாரம்” என்று தெளிவுபடித்தினார். X உடனே. இவைகளை நக்கித் தின்னலாமா என வரலாற்று முக்கியத்துவம் மிக்க தனது சந்தேகத்தைக் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலாக ஜோமூர்த்தா சிரிப்பொன்றை வீசிவிட்டார். அது பறந்து கொண்டிருந்தது.இவர்களுடன் அந்தச் சிரிப்பும் படம் முடியும்வரை வருகிறது. சகபயணியாக. X இன் பயம் அதிகரித்திருந்தது. இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. தன்னை தனது சகாக்களோடும், தனது இருப்பிடத்திற்கும் கூட்டிச்சென்றுவிடுமாறு X கேட்டுக்கொண்டார். நானும் அங்குதான் வசிக்கிறேன் வாருங்கள் என்றார் ஜோமூர்த்தா. கூடவந்த சிரிப்பு கொஞ்சம் பலமாக சிரித்துக்காட்டியது.

Xஇன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. பயம் உடலெங்கும் வெளிப்பட்டது. அதற்கிடையில் இரவு வந்திருந்தது. வயிற்றைக் கலக்குவதாக Xசொன்னான். அதற்காக ரெண்டுக்கிருக்க தனியாகச் செல்லுவதைவிட இருவரும் இணைந்து சென்றால் அழகியலாக இருக்குமென்றான்.X பயத்தில் கூப்பிடுகிறான் என்பதை அறிந்த ஜோமூர்த்தா கம்பனி கொடுத்தான். காலைக் கடனை இரவில் முடித்துவிட்டு குளத்தை நோக்கி Xஉம் ஜோமூர்த்தாவும் போய்க்கொண்டிருந்தனர். X வலதுகாலை வைத்து குளத்தில் இறங்கினான். அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த குளம் இலேசாக சலசலத்தது. எதிரெதிரே முகத்தைப் பார்த்தபடி குளத்திற்குள் குந்தியிருக்கும்போது, ஜோமூர்த்தா Xயிடம் கேட்டான்

”என்னைக் கண்டு பயப்படுகிறீர்களா?”
”சீச்சீ, பயமா ? எனக்கா ? சாண்ஷே இல்ல” என்றார் X.
தனது பயத்தை அறிந்துவிட்டானோ என்ற சந்தேகத்தில்  ”ஏன் அப்பிடிக் கேட்கிறாய் ” என ஜோமூர்த்தாவிடம் X வினவினான்.
”அதுவா, எனது புட்டாணத்தை நீண்ட நேரமாக கழுவிக்கொண்டிருக்கிறீர்களே அதுதான் சும்மா கேட்டேன்” என்றான் ஜோமூர்த்தா. கழுவி முடிந்தால் கரையேறிய ஜோமூர்த்தா பாம்பு,பாம்பு எனச் சத்தமிட்டான். அரைகுறையாக குளத்தைவிட்டுப் பாய்ந்து வெளியேறிய X அதன்பிறகு சரிசெய்யவேயில்லை. Xயிடமிருந்து கிளம்பும் அந்த நாற்றத்தை பார்வையாளர்களு திரையில் எப்படி நுகரவைப்பது என டிஷ்கசன் தொடர்ந்தது. இருட்டு மௌனமாக இருந்தது. கடைசியில் X எப்படி சமாளித்தான் என்பதுதான் கதை.

இந்தப் படம் வருடங்களைக் கடந்தும் ஓடும் என்பதால், பகுதி ரெண்டு , மூன்று என நீளும் என இயக்குநர் பீரை அடித்துக்கொண்டு அங்கே அறிவித்தார். நகைச்சுவைக் காட்சிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். படத்தின் இடையிடையே காமடியனை காகத்தில் வந்து இறங்கி காமடி பண்ணிவிட்டு போய்விடுவதாக காட்சிகளை எடுத்து இணைக்கலாம் என்றான். அதற்கு யாரை நடிக்கவைப்பது என்ற சர்ச்சை கிளம்பியது. பறந்து சென்று சந்தை,வயல்வெளி என பல இடங்களுக்குப்போய் அதை இங்கு வந்து சொல்லக்கூடிய ஒருவர் தேவைப்பட்டது. அதற்கு அவரை தெரிவு செய்தனர். காகத்திற்கும் அவருக்கும் ஒத்துவராதே எப்படி காகத்தில் ஏற்றி நடிக்க வைப்பது என்ற கேள்வியை ஒருவர் எழுப்பினார். குரங்கையும் பூமாலையையும் சுமுகமாக நடிக்க வைக்கும்போது இது பெரிய விசயமெ இல்லை என்றார் இயக்குநர். சூட்டிங் ஆரம்பமானது.

டேக் -ரெடி -ஸ்டார்ட் - டப்
கட் கட் என உதவி இயக்குநர் சத்தமிட்டார். இதுவே தொடர்ந்தது.
இதுவரையும் படத்தை ”கேட்டுப் பார்த்தவர்கள்” உங்கள் விமர்சனங்களை எழுதலாம்.