வெள்ளி, நவம்பர் 22, 2013

கவிதை எழுதப் பயில்தல் - 1

றியாஸ் குரானா

இப்படி ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால், அதை நிறைவேற்றுவது மிகக் கடினமான ஒன்றுதான். இதற்கு முன் எந்த வழிமுறைகளுமற்ற ஒன்றை சிந்திப்பது சிக்கல் தரக்கூடியதே. எனினும், இதை முயற்சி செய்து பார்க்கலாம் என்றே இதைத் தேர்வு செய்தேன். உண்மையில் இது மிக அதிகமான விமர்சனங்களை எதிர்கொள்ளலாம் என்றும் கருதுகிறேன். சிலவேளை அப்படி நிகழாமலும் போய்விடலாம். எது எப்படிப்போயினும், புதிதாக எழுத வருபவர்களுக்கு (இலக்கியச் செயலில் பங்குகொள்ள, தம்மை ஈடுபடுத்த முயல்பவர்களுக்கு) உதவுமாயின் சந்தோசமே.

கவிதை என்றால் என்ன? இப்படிக் கேட்பது பலருக்கு தேவையற்றது எனவும் தோன்றக்கூடும். மிகச் சாதாரணமானதும், அனைவருக்கும் தெரிந்த எளியவிசயத்தை பதிலாக இந்தக் கேள்வி வைத்திருக்கிறது என்றும் கருத இடமுண்டு. உண்மை அப்படியானது அல்ல. இதற்கு முற்றிலும் எதிரானது. எப்படிப் பதில் சொன்னாலும், இன்னும் அதற்கான பதில் மிச்சம் இருப்பதாகவே தென்படக்கூடியது.அதற்கான பிரதான காரணம் குறித்த வரையறைகளுடன், வரையறுக்கப்பட்ட தன்மைகளுடன் அதாவது இப்படி இருந்தால்தான் கவிதை என்ற ஒரு பொதுத்திட்டம் எப்போதும் இருந்ததில்லை என்பதுதான்.

கலாச்சாரங்கள், இனக்கூட்டங்கள், தனிமனிதர்கள், அரசியல் மற்றும் தத்துவார்த்த கருத்து நிலைகள், காலகட்டங்கள் ஒவ்வொன்றும் முற்றிலும் வெவ்வேறான பிரதிகளை கவிதையாகப் பாவித்திருக்கின்றன. பாவித்துக்கொண்டுமிருக்கின்றன. ஆயினும், இங்கே புரிந்துகொள்வதற்கு எளிதாக ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மாற்றமற்ற முறையில் அர்த்தம் நிறைவடைந்ததாக கருதத்தக்க வகையில் ஒரு பிரதி இருக்குமெனில் அது நிச்சயமாக இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்காது. அல்லது பிரதி தன்னுள் கொண்டிருக்கும் அர்த்தம் என்றும் மாற்றமடையாது என அறிவித்துக்கொண்டாலும் அது இலக்கியக் குடும்பத்திற்குள் வரவும், அதனோடு தொடர்புபடுத்தி வசிக்கவும் முடியாததாக மாறிவிடுகிறது. பார்வையாளர்கள் அதனோடு வினைபுரியவும், விளையாட்டை நிகழ்த்தவும் அந்த விளையாட்டில் தம்மை பங்குபற்றச் செய்ய அனுமதிக்கவும் வாய்ப்புகள் இருப்பதுதான் இலக்கியப் பிரதியாக இருக்கமுடியும். தன்னோடு நிறைவு செய்யப்பட்ட அர்த்தத்தை கொண்டிருக்கும் பிரதி, நம்மிடமிருந்து (வாசகர்களிடமிருந்து) எதையும் எதிர்பார்ப்பதில்லை. அது சொல்லும் விசயத்தை நாம் ஏற்க்க வேண்டும் என்ற ஒருவகைக் கட்டளையை பிறப்பிப்பதாகும்.

கவிதை எப்படி எழுதுவது, என்பதை விபரிப்பதைவிட கவிதைப் பிரதி எவைகளைத் தன்னிடம் கொண்டிருக்கின்றது. எப்படியான அம்சங்களைக் கொண்டு தன்னை கவிதையாக நிகழ்த்திக்காட்ட முற்படுகிறது என்பதை சொல்லுவதினூடாக, கவிதை எழுதுவது இப்படித்தான் என புரியவைக்க முடியும் என நான் கருதுவதால் அந்த வழிமுறைகள் குறித்து இங்கு அக்கறைகொள்ள விரும்புகிறேன். அதற்கு முதலாவது விசயம், கடைசி அர்தத்தை கொண்டிருக்கும் ஒன்றாக ஒரு பிரதி அமைந்துவிடக்கூடாது என்பதுதான். உதாரணமாக, இந்த நூற்றாண்டில் 1 என ஒருவன் வாழ்ந்தான் என்பது உண்மை. அல்லது பொய்யாக இருக்கமுடியும். இரண்டாக இருந்தாலும், அது அதற்குமேல் அர்த்தத்தை கொண்டிருப்பதில்லை. ஹிட்லர் ஜேர்மனியின் ஜனாதிபதியாக இருந்தான். இது வேறு அர்தங்களை உருவாக்க எந்த பங்களிப்புக்களையும் வழங்காத கூற்று. ஆனால், அவன் சர்வாதிகாரியாக இருந்தான் என ஒரு கூற்று இருக்குமானால், அதை மறுக்கவும், அவன் எப்படி சர்வாதிகாரியாக இருந்தான் என்றோ அல்லது சர்வாதிகாரியாக அவனிருக்கவில்லை என்றோ அர்த்தங்களை உருவாக்க ஏதுவாக இருக்கும். ஆக, இரண்டாவது கூற்று அதிகமும் இலக்கியப் பிரதியைப்போல் செயற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. இங்கே ஒன்றைச் சொல்லலாம், முதல் வகையான கூற்றுக்கள் நிச்சயமாக இலக்கியக் குடும்பத்தை சார்ந்ததில்லை. (பிரதிக்கான அர்தத்தம் எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது என்று இங்கு நான் விபரிக்கவில்லை. அதற்கு உலகளவில் நான்கு முறைகளை பயன்படுத்துகிறார்கள். அதற்குள் உட்பிரிவுகளும் இன்னும் இருக்கிறது. அவை குறித்து எனது வலைத்தளமான மாற்றுப்பிரதியில் இலக்கியத்தை கொல்லுபவன் சாட்சியம். என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். நீங்கள் வாசிக்கலாம்)

கவிதைக் கட்டமைப்பு.

இந்தக் கட்டமைப்பு பல அம்சங்களால் ஆனது. ஒன்றோடொன்று தொடர்புள்ள நுண் பிரிவுகளால் ஆனது.

 1. ஆசிரியன்.
2. ஆசிரியனால் உருவாக்கப்படும் கவிதை சொல்லி (குரல்)
3. கவிதை சொல்லியினால் எடுத்துரைக்கப்படும் கூற்று, கவிதைச் செயலாக மாறுவதற்று நிகழ்தப்படும் பிரதிக்குட்பட்ட செயல்களினால் உருவாகும் சூழலாகும். இதுதாhன் படிமம். ( ஆசிரியனுக்கும், ஆசிரியனால் உருவாக்கப்பட்ட(கட்டமைக்கப்பட்ட) கவிதைக்குரலுக்கும் இடையிலான இடையீட்டாளர்.)
4. சொற்களுக்கிருக்கின்ற அர்த்தம், அவைகளை இணைத்து வாக்கியத்திற்கு உருவாகும் அர்த்தம்.
5. கூற்றிக்கு இருக்கின்ற அர்த்தம்.
6. பிரதிக்கு இருக்கும் அர்த்தம் மற்றும் பிரதியில் உருப்பெறும் அர்த்தம்.
7. சம்பவங்கள். அதன் தூண்டல்கள், எதிர்வுகள்.
8. கவிதைச் சம்பவங்கள், சம்பவங்களின் அமைப்பு.
9.சொல்லாடல். அதாவது சம்பவங்களைக்கொண்டு முன்வைக்க முயலும் எடுத்துரைப்பு.

இந்த ஒன்பதும், கவிதையின் அமைப்பாக்கம், பண்பு, செயல், அர்த்த உருவாக்கம் போன்றவைகளால் கவிதைப் பிரதிகொண்டிருப்பவைகளே. இவைகள் இல்லாது கவிதைக் கட்டமைப்பு என்ற ஒன்றில்லை. ஆகவே, இவை குறித்து கொஞ்சம் எளிமையாக விளக்கவேண்டியது கவிதை பயில்தலின் அடிப்படை எனக்கருதுகிறேன்.

நமது சூழலில் அதிகபட்சம் கவிதை குறித்து இருக்கும் புரிதல் என்பது, 'ஆசிரியனால் எழுதப்பட்டதை வாசகன் படிக்கிறான்' என்பதாகும். இதையும் தாண்டி, வாசகன் பிரதிக்குரிய அர்த்தத்தை உருவாக்குகிறான் என்ற மங்கலான விளக்கம்தான்.

ஒரு பிரதி ஆசிரியனால் எழுதப்படுகிறது. எழுதப்பட்ட பிரதி கவிதையைச் சொல்லும் அல்லது வியாக்கியானம் செய்யும் ஒரு குரலைக் கொண்டிருக்கிறது. அந்தக் குரலின் கூற்றினால் உருப்பெறும் ஒரு கதையாடல், பிரதிக்குள்ளாக இருக்கும் சம்பவங்களால்,(கவிதைச் சம்பவங்காளால்) வெளிப்படுகிறது. வெளிப்படும் அம்சமே படிமமாகும். ஆகவே, படிமம் என்பது அனைத்து கவிதைப் பிரதிகளில் இருக்கும் ஒன்றுதான்.

இன்னும் சற்று விளக்கமாக விபரிப்பதென்றால், ஆசிரியன் ஒரு கவிதைசொல்லியை (கவிதைக் குரலை) உருவாக்குகிறான் அவன்மூலமாக எடுத்துரைக்கப்படும் கூற்று, ஒரு சொல்லாடலைக்கொண்டிருக்கிறது. அந்தச் சொல்லாடலை உருப்பெறச் செய்பவைகள் படிமமாகவும்,அதற்கு உதவும் நடவடிக்கைகளைக் கொண்டிருப்பது பிரதியாகவும் ஆகிறது. உதாரணமாக,

' எமது பிஞ்சுக் கைகளில்
ஆயுதங்கள் முளைத்திருக்கின்றன'

என்பதை எடுத்துக்கொண்டால், இதில் வரும் 'எமது' என்பது ஆசிரியன் (கவிஞன்) அல்ல. கவிஞனால் உருவாக்கப்பட்ட கவிதை சொல்லி. அதாவது கவிதைக் குரல். கவிஞன் வரலாற்றுரீதியான ஒரு தனிநபர். இந்தக் கூற்றில் இருக்கும் குரல் அதுவல்ல. 'எமது' என்பது யாரென்று தெரியாது. நீ – நீங்கள் இதுபோன்ற பலவற்றுக்கு எதிராக இருக்கிறது என்பதைப் புரியமுடிகிறது. நாம் இக்கவிதையை பேசும் நபர் யாரென ஊகித்துக்கொண்டாலும்,அவரோடு சேர்த்து யாரென்று யாரென்று தெரியாத ஒரு பன்மையான குழு என்றுமாத்திரமே கண்டுபிடிக்க முடியும். (கவிஞனோ இக்குரலை அடக்குமுறைக்கெதிராக செயற்படும் ஒரு குழுவின் குரலாக கருதியிருக்கலாம். அது இங்கு பிரச்சினையில்லை.) ஆனால், இக்கூற்றின் குரல் ஆசிரியனுடைய பிரசன்னத்தைக் கொண்டதல்ல. அவரால் குறித்த பிரதிக்கென உருவாக்கப்பட்ட கவிதைக்குரல் அவ்வளவுதான். கவிதை பேசும் குறிப்பிட்ட குரலுக்கும், கவிதையைச் செய்த கவிஞனுக்குமிடையிலுள்ள வேறுபாட்டிலிருந்து தொடங்குவது மிக முக்கியம். அப்போதுதான், குறித்த பிரதியிலுள்ள கவிதைக் குரலை உய்த்துணர முடியும்.

ஒரு கூற்றை நாம் சநதிக்கும்போது, அந்தக் கூற்றுக்குரிய ஒரு நபரையும், ஒரு சூழலையும் உய்த்துணருகிறோம். அல்லது கற்பனைசெய்கிறோம். அக்கூற்றின் தொனியை அடையாளம் கண்டுகொள்வதினூடாக, அக்கூற்றைச் சொல்பவரின்( கவிதைக் குரலின்) தோற்ற அமைவு, சூழல்கள்,பிரச்சினைகள், அக்கறைகள், மனப்பான்மை போன்றவற்றை உருப்பெறச் செய்கிறோம். குறித்த கவிஞரைப் பற்றி தெரிந்த விசயங்களை இதனோடு இணைப்பதில்லை. இணைக்கவும் முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. அது பொருந்திப்போகவும் கூடியதல்ல.

ஒரு கவிதைப் பிரதியில் சொற்களுக்கென்று ஒரு அர்த்தமும், அச் சொற்களின் இணைவால்( அருகருகே வைக்கப்படுவதாலும் தொடர்புபடுத்துவதாலும்) உருவாகும் வாக்கியங்களுக்கென்று ஒரு அர்த்தமும், அந்த வாக்கியங்களையும், அங்கே சொல்லாமல்விடப்பட்டவை என ஊகிக்கும் விசயங்களும் இணைந்ததாக இருக்கும் பிரதிக்கென்று ஒரு அர்த்தமும், பிரதியின் கூற்றுக்கு என்று ஒரு அர்த்தமும் என குறைந்த பட்சம் நான்கு அர்த்தங்கள் இருக்கின்றன.( இதுதவிர பிரதிக்கு அர்த்தத்தை கண்டுபிடிக்கும் முக்கியமான நான்கு வழிமுறைகளை எனது மாற்றுப்பிரதியில் படிக்கலாம்) நமது பார்வைக்கு வரும் கவிதைப் பிரதி என்பது அதனளவில் முழுமை. ஆனால், அதிலிருக்கும் ஒன்றோ, இரண்டோ வாக்கியங்களை உருவி எடுத்து அதற்கு அர்த்தம் உருவாக்குவதில் நமது விமர்சகர்கள் காலங்களைக் கழித்துவிட்டனர். அது தேவையற்றது என்ற தொனியில் கூறவில்லை. அது மட்டுமே பிரதிகொண்டிருக்கும் அர்த்தப்பரப்பு அல்ல என்பதை சுட்டிக்காட்டவே இதைக் குறிப்பிடுகிறேன்.

சொல்லுக்கான அர்த்தம் கவிதைப் பிரதியில் பிரதானமான ஒன்றல்ல. சொற்களாலும், சொல்லாமல் விட்டுவிடுவதாலும் கட்டமைக்கப்படும் ஒரு முழுமையில், ஒரு சிறு பகுதிதான் வாக்கியத்தோடு போராடி அர்த்தம் கண்டுபிடிக்கும் செயலாகும். வாக்கியத்தின் அர்த்தத்திற்கும், பிரதி என்ற முழுமையின் அர்ததத்திற்கும், குறித்த பிரதியின் கூற்று உணர்த்த முற்படும் அர்த்தத்திற்கும் முற்றிலும் வேறுபாடு இருக்கிறது.

' எமது பிஞ்சுக் கைகளில்
ஆயுதங்கள் முளைத்திருக்கின்றன'

'ஆயுதம்' என்றால் என்ன? ஏதோ ஒரு செயலைச் செய்வதற்கு பயன்படும் பொருள். இந்தப் பிரதியின் அர்த்தம் என்ன? பெரும் ஒரு எதிரக்குரல். அடக்குமுறைக்கெதிரான மனிதச் செயலின் எதிர்நடவடிக்கையை உணரத்துவதைக் குறிப்பதாகும். அடக்குமுறையின் கோரம்தாங்காது, அதாவது அதன் கோரத்தைக்காட்டுவதற்காக குந்தைகளும் ஆயுதம் தூக்க வந்துவிட்டார்கள். என்பதாக தனது சொல்லாடலை முன்வைக்கிறது.
இதற்கு மேலாக இந்தப் பிரதி, தான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என தனக்குத் தெரியும் என்பதினூடாக பார்வையாளர்களின் ஊகத்தை குழப்பவும் செய்கிறது. அதன் செயல் போக்கில் வாசகனை ஈர்க்கவும் முற்படுகிறது. அதாவது, 'குழந்தைகளே ஆயுதம் தூக்க வெளிக்கிட்டுவிட்டார்கள் நீ அல்லது நீங்கள் ஏன் இன்னும் இதில் பங்குகொள்ளவில்லை' என்பதுபோன்ற ஊகத்தை ஏற்ப்படுத்தத் தவறவில்லை. இந்தப் பிரதியால் தூண்டப்பட முடிகிற இந்தச் செயல்போக்குதான் விளைவாகும். அந்தச் செயற்போக்கு அதன் அர்த்தத்தில் ஒரு பகுதியாகும். எனவே, ஒரு சொல்லின் அர்த்தமும், ஒரு பிரதியின் அர்த்தமும் அல்லது தூண்டுதல்களும் இங்குள்ளன. அடுத்து, இவற்றினிடையே ஒரு கூற்றின் அர்த்தம் என நாம் சொல்லக்கூடியதும் இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்த வார்த்தையைக் கூறும் செயலின் அர்த்தமும் இருக்கிறது. எடுத்தக்காட்டாக, எச்சரிக்கையா? அல்லது ஒப்புக்கொள்ளுதலா? அல்லது புலம்பலா? அல்லது தற்புகழ்ச்சியா? இதில் 'எமது' என்பது யார்? அவசியமான எதிர்புருவாக்கம்தானா?
முன்பின் தெரியாத ஒரு நபர்(கவிதைக்குரல்) சொல்லும் ஒரு புதிர்த்தன்மையான கூற்றை விபரிக்கும் இந்தப் பிரதி, ஆசிரியன்( கவிஞன்) கட்டமைத்த எதுவோ ஒன்றாகும். அதன் அர்த்தம் ஒரு அறுதியான, முடிவான பகர்வு அல்ல. அது என்ன செய்ய முற்படுகிறது என்பதுதான் பார்வையாளர்களுடன்(வாசகர்) வினையாற்றும். அப்பிரதியின் கவிதைக்குரலால் அதாவது, கவிஞனால் குறித்த பிரதிக்கென்று உருவாக்கப்பட்ட கவிதைசொல்லியால் முன்வைக்கப்படும் கூற்றின் அடியாக உருப்பெறும் படிமங்களின் (இந்தவகைப் படிமங்கள் மிதக்கும் தன்மைகொண்டது) செயற்பாடுகள் கொண்டிருக்கும் ஆற்றல்களினால்தான் அர்த்தம் தீர்மானிக்கப்படுகின்றன. அல்லது தீர்மானிக்கப்பட காத்திருக்கின்றன.

கவிதைக் கட்டமைப்பில் அடுத்த முக்கிறமான பகுதி, சம்பவங்கள் மற்றும் கவிதைச் சம்பவங்களாகும். இந்த சம்பவங்கள் என்பது, கவிதைப்பிரதிக்கான(இலக்கியப்பிரதி) மூலப்பொருட்கள் என்று சொல்லலாம். சம்பவங்கள் என்பதை ஒரு கலைச்சொல்லைப்போல பாவிக்க வேண்டியிருக்கிறது. நடைமுறையிலுள்ள நிகழ்ச்சிகள், கருத்துக்கள், அனுமானங்கள், அதற்கான ஏற்புகள், எதிர்வுகள் அவற்றோடு ஒரு ஆசிரியன் (கவிஞன்) அறிந்து வைத்திருப்பகைவள், மற்றும் அனுபவரீதியாக கண்டடைந்திருப்பவைகள் (உண்மையாகவும் இருக்கலாம் இல்லாதும் போகலாம்) எனப் பரந்துபட்டவைகள். ஆனால் கவிதைச் சம்பவங்கள் என்பவை, அதிலிருந்து ஒரு கவிதைப் பிரதியினுள் எவைகளை வைக்கிறாரோ அவைகள்தான். அவையன்றி வேறில்லை. ஒவ்வொரு கவிதைப் பிரதியிலும் வெவ்வேறு சம்பவங்களை, வெவ்வேறு அளவுகளிலும் பண்புகளிலும் வைத்துவிடமுடியும். ஆனால், ஒரு முக்கியமான வேறுபாடும் கவனிக்கப்பட வேண்டிய விசயமும் ஒன்றுள்ளது. நடைமுறையிலுள்ள அல்லது சூழலில் புளக்கத்திலுள்ள தன்மைகளோடு கவிதையினுள் சம்பவங்கள் இருப்பதில்லை. உதாரணமாக, 'அவன் சிறகடித்துப் பறந்தான்' நடைமுறையில் இந்த வாக்கியம் பிதற்றலானது. ஆனால், கவிதையில் வரும்போது இது முக்கியமான சம்பவம். ஆக, நடைமுறையில் பயன்பாட்டிலுள்ள பண்புகளோடும், செயற்பாடுகளோடும், கருத்துநிலைகளோடும்தான் கவிதைப்பிரதி தனது சம்பவங்களை உருவாக்குமென்றில்லை. ஆனால், அது நடைமுறையிலுள்ள விசயங்களோடு போட்டியிடத்தக்க கருத்துநிலைகளுக்கான அர்த்தங்களை உருவாக்குவதையே தனது செயலாகக்கொண்டிருக்கும். நடைமுறையிலும், கவிதைப் பிரதியினுள்ளும் நடைபெறும் செயற்பாட்டின் விளைவு அர்த்தம் உருவாக்குவதுதான். அதற்கு பயன்படுத்தும் வழிமுறைகளும், நேர்வுகளும், செயல்முறையும்தான் முற்றிலும் வேறுவேறானவை.

 இதை இன்னும் சற்று விபரிப்பதென்றால், ' அவள் மலர்போல அழகானவள்' என்றோ அல்லது 'அழகானவள்' என்றோ ஒரு கவிதைப்பிரதி தனது சொல்லாடலை முன்வைக்கிறதெனில், அவள் உண்மையில் அழகானவளா என யோசிப்பதில்லை. அதற்கு எந்த ஆதாரங்களையும் சந்தேகிப்பதில்லை. அழகானவள் என்ற முடிவை ஏற்றுக்கொண்டு பிரதியின் மற்றய சம்பவங்களை நோக்கி எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம். அவள் என்பது யாரென்று ஊகிக்க முடியாததும், அதைக் கண்டடைவதில் பெரும் அச்சுறுத்தல்களை தரக்கூடிய மொழியின் சிக்கல்களிலும் மாட்டிக்கொள்ள நேர்ந்துவிடும். பிரதிக்கு வெளியே நடைமுறையில் இந்தக்கூற்றை நாம் சந்தித்தால், அவளா? நீ சொன்னதுபோல அவள் அழகில்லை என்றோ அழகுதான் என்றோ ஒரு ஒரு வினையாற்றமுடியுமாக இருக்கும்.

இன்னும் இதை விரிவுபடுத்துவதெனில்,'நாளை எனது வீட்டுக்கு வா தோட்டத்தில் அமர்ந்து தேநீர் அருந்தலாம்' இதில் ஒரு காலம் இருக்கிறது. அதாவது, நடைமுறையில் இந்தக் கூற்றை சந்திப்பவர் நமது வீட்டுக்கு நாளை வரலாம். அவரோடு தோட்டத்தில் தேநீர் அருந்தலாம். நடக்காமலும் போகலாம். ஆனால், இதற்கிருக்கிற செயற்பாடு ஒரு உறுதிப்பாடுடையது. பிரதானமாக இன்னுமொரு செயலை நிகழ்த்த சாத்தியமுடையது. கவிதைச் சம்பவமாக பிரதியினுள் இந்தக் கூற்று இருக்குமானால், கவிஞனுடைய வீட்டுக்குப்போய் தேநீர்தா எனக் கேட்க முடியாது. காலத்தையும் நடைமுறைக்கு மாற்றமாக தனக்குள் கவிதைப் பிரதி பாவிக்கிறது. (அது கவிஞன் உண்டுபண்ணிய குறித்த கவிதைக்கான கவிதைக்குரலின் (கவிதைசொல்லியின்) கூற்று. இதை மேலே பேசியுள்ளேன். ஆக, கவிதைப் பிரதி என நம்பப்படும் ஒன்றில் சம்பவங்கள் இருக்கும், காலம் இருக்கும், சொல்லாடல் இருக்கும் ஆனால். அவை நடைமுறையின் இயல்புகளுக்கு ஒத்துவரவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒத்துவரவும் முடியாது.
அடுத்து கவிதைக்கான அமைப்பு. அமைப்பு என்பதை பலநேரங்களில் வடிவம் என பேசவதையே இங்கு அதிகம் சந்தித்திருக்கிறேன்.

காவியம்,நாவல்,சிறுகதை,கட்டுரை என கண்ணுக்குத் தெரிகிற வெளித்தோற்றங்களை கருத்திற்கொண்டு ஒன்றிலிருந்து மற்றயதை பிறித்தறியும் ஒரு சௌகரிகமான முறை மாத்திரம்தான். உண்மையில் அப்படி பிரத்து கறாறான வகையில் ஒரு வடிவத்தை உருவாக்க முடியாது. கவிதை அமைப்பு என்பது, தனக்குள் கொண்டிருக்கும் சம்பவங்களினாலும், அதற்கு பயன்படும் சொற்களினாலும் பிரதியை ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டுவந்து பார்வைக்கு வெளிப்படுத்துவதற்கு எடுத்தக்கொள்ளும் முயற்ச்சியாகும். இங்குதான் ஆசிரியனின்(கவிஞனின்) அதிகூடிய பங்களிப்பு செயற்படுத்தப்படுகிறது. இதற்கான உதாரங்களை எனது ரீமேக் கவிதை என்ற செயலில் கண்டுகொள்ளலாம். இதில் வடிவம் என்பது, ஆசிரியன் ஒரு பிரதி எப்படியாக இருக்க வேண்டுமென்று செய்த வித்தைகளும், அதுபோல, பார்வையாளன் தான் எப்படி இந்தப் பிரதியை வாசிக்க ஒழுங்கமைக்கிறான் என்பதும் தொடர்புபடுகிறது. பிரதியில் இன்ன இன்ன வேலைகளைச் செய்தாலோ, அல்லது இப்படியாக வாசிக்க முற்பட்டாலோ பிரதிக்கு என்ன நிகழும் என்பதையும் பரிசோதிக்கும் ஒருவகை வாசகச் செயலுக்கும் ஏதுவாக இருக்கிறது. அதனூடாக, வாசகன் பிரதியை மறுஆக்கம் செய்ய வெளிப்படுவதும் அப்பிரதிக்கு சாத்தியமான ஒரு வடிவம்தான். அது ஆசிரியனால், நிகழ்த்தாத அல்லது மறைக்கப்பட்ட அல்லது அளவுக்குமீறி வியாக்கியானம் செய்த(அலங்கரித்த) அம்சங்களை கண்டடைவதுதான்.
அடுத்தது, சொல்லாடல். இது குறித்து அதிகம் இங்கு பேசத்தேவையில்லை. ஏனெனில், ஒரு இலக்கு நோக்கியது குறித்த பிரதி என்கின்ற விளக்கம் புளக்கத்தில் இருக்கிறது. எனினும் இரண்டு முக்கிய விசயங்களை தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.

கவிதை மொழியாலான ஒரு நிகழ்வு என்பதுபோல. அது ஒரு சம்பவமும் ஆகும். ஆகவே, சகபிரதிகளின் தொடர்ச்சியாகவும் தனது சொல்லாடலை முன்வைக்கக்கூடியது. உதாரணமாக, 'உனது புன்னகை மோனலிசாவினுடையதைவிட அழகானது' என்பதை எடுத்துக்கொண்டால். மோனலிசாவின் புன்னகை குறித்து தெரியும் ஒருவரினால்தான் பிரதிசொல்லும் புன்னகையைக் குறித்து புரிந்துகொள்ள முடியுமானதாக இருக்கும். சகபிரதிகளின் தொடர்ச்சியாக ஒரு நிலவரத்தை சொல்லாடலை உண்டுபண்ண பயன்படுத்தும். அதுபோல, பிரதியின் கூற்றை அது எடுத்துரைக்கும் கோணம். உதாரணமாக ஒரு காதலைப்பற்றி சொல்லாடலை உருவாக்குகிறது என்றால், காதலியின் புறத்திலிருந்தோ, காதலனின் புறத்திலிருந்தோ, அல்லது அவைகளுக்கு வெளியே இருக்கும் காதலை விரும்பாத ஒருவரின் புறத்திலிருந்தோ எப்படியாகவும் சொல்லாடலை பிரதி முன்வைக்க முடியும். 'அவள் என்னை ஏமாற்றிவிட்டாள்' என ஒரு கூற்று இருக்கிறதென்றால், அது அந்தக் காதலில் தொடர்புடைய காதலனுடைய புறத்திலிருந்து வரும் சொல்லாடலாகும். இது உண்மையா அல்லது பொய்யா என அறியமுடியாதது. என்பதனால், ஏமாற்றியவர் என்ற ஒருவரை வலிந்து பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டே அந்தப் பிரதியுடன் செயலாற்ற வேண்டியிருக்கும். ஆக, ஒரு பிரதியின் சொல்லாடலை எவரும் பயன்படுத்தலாம். அதனூடாக அதற்கு எதிரான திட்டவட்டமான ஒன்றை அல்லது ஒருவரை அல்லது ஒரு சம்பவத்தை கட்டமைக்க முடியும். இதுவே இலக்கியப் பிரதியை நான் அதிகமும் ஆபத்தானதாகக் கருதுவதற்கு ஏதுவாக இருப்பதாகும். உதாரணமாக,

' எமது பிஞ்சுக் கைகளில்
ஆயுதங்கள் முளைத்திருக்கின்றன'

இந்தக் கூற்றை ஒரு பயங்கரவாத நடவடிக்கைகளை செய்வதற்கு விரும்பும் ஒரு அமைப்போ அல்லது அரசோ தனக்கு ஆதரவாகப் பயன்படுத்த முடியும். சொல்லாடல் என்பது, முற்றிலும் கவிஞானால் பிரதியினுள் உருவாக்கப்பட்ட அல்லது பணிக்கப்பட்ட கவிதைக் குரலின் கூற்று. அதன் கோணத்தை தீர்மானிப்பதில் கவிஞனின் பங்கு முக்கியமானது. ஆயினும், அந்த முக்கியத்துவத்தை குறிப்பான ஒரு சூழலில் பொருத்தி வாசிப்பதினூடாக கலைந்துபோகச் செய்துவிட பிரதி இடந்தருகிறது.

இப்போது வருவோம், கவிதைச் செயலை அது கொண்டிருக்க்கூட உள்ளடக்கங்கள், அமைப்புக்கள் மற்றும் நுணுக்கங்களினூடாக மேலோட்டமாகவும், சிறியளவு விளக்கங்களினூடாகவும் விபரித்திருக்கிறேன். இது கவிதை எழுதப் பயில்வதற்கு வளமான புரிதல் நிலையை உருவாக்கி உங்களைத் தயார்படுத்தும் என்றும் கருதுகிறேன். சாதாரணமாக இன்று கவிதை எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு அதை செழுமைப்படுத்தவும் பிரக்ஞையோடு உண்டுபண்ணவும் ஏதுவாக இருக்குமென்றும் கருதுகிறேன். கவிதை எழுதப் பயில்வதற்கு இது நேர்எதிரான வகையில் வழிகாட்டும் ஒரு வகைச் செய்முறைதான். இதைப் புரிந்து கவிதைச் செயலில் பங்குபெற முடியாதவர்களுக்கு... நேரடியாக கவிதை எழுதுவது எப்படி என விளங்கப்படுத்தவுள்ளேன்....

இந்தச் செயற்பாட்டிற்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்தே இதைத் தொடர இருக்கிறேன். தேவையற்றது எனக் கருதினால் ஆதரவு இல்லாதுபோகும். ஆகவே, தேவையற்ற ஒன்றுக்காக எனது நேரத்தை செலவிட நான் தயாரில்லை. அந்த நேரத்தை புனைவில் பயன்படுத்தலாம். கவிதை எழுதப் பயில்தல் குறித்த ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கும் எந்தச் சபதங்களையும் நான் கொண்டிருக்கவில்லை. எனவே, உங்கள் ஆதரவே தொருவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். இதில் சந்தேகங்கள், தெளிவுகள், மேலதிக விளக்கங்கள் என எதுவாக இருந்தாலும் எனது இமெயிலில் தொடர்புகொள்ளுங்கள்.


(தொடரும்...)