திங்கள், நவம்பர் 11, 2013

பிரதி வாசிப்பும் தடைகளும்.

 றியாஸ் குரானா


முற்றிலும் வேறுபட்ட பார்வையாளர்களை நோக்கி....

”பார்வையாளர்களாக (வாசகர்களாக) இருப்பதற்கு பதிலாக பக்தர்களாக இருப்பவர்களின் கடைசிக்காலகட்டம் இது”
.....................................................................................................

வாசிப்பு என்பது மிகச் சுதந்திரமான செயல். ஆசிரியன் - யை இறந்துவிட்டான்-ள். வாசககரின் பங்களிப்பே பிரதி இயங்குவதற்கு முக்கியமானது. இப்படித்தான் அனைவரும் பேசிக்கொள்கிறார்கள். எனினும், அவைகளை யாரும் ஆதரிப்பதில்லை. ஆதரிப்பதற்கான சூழல் இங்கு நிலவவில்லை.

பிரதியோடு ஆசிரியனுக்கு - யைக்கு உள்ள உறவு முக்கியமானதுதான், அதுபோல வாசிப்பு என்பது ஆசிரியருக்கும் பிரதிக்கும் இருக்கும் உறவைப்போன்றதல்ல என்பது மிக முக்கியமானது.

வாசிப்பின்மீது தடைகளையோ, கட்டுப்பாடுகளையோ, நிர்ணயிப்புக்களையோ திணிக்க முடியாது. திணிக்கவும் கூடாது. அப்படி திணிக்கப்பட்டால், வாசிப்பு என்பது தனது சுயத்தன்மையை இழந்துவிடும்.

பிரதியோடு வினைபுரியும் வாசகர், அதுதொடர்பான தனது கருத்தை உருவாக்குவதுதான் வாசிப்பு. குறித்த பிரதி தொடர்பாக ஏலவே நிலவுகிற கருத்தை மீண்டும் உறுதிசெய்வது சுதந்திரமான வாசிப்பாக இருக்க முடியாது. அது நிலவுகிற கருத்தை பாதுகாப்பதாகும்.

அதுபோல, ஒரு பிரதியை முன்வைத்து உச்சப்படைப்பென்றோ, மாஸ்டர் பீஸ் என்றோ, அல்லது மோசமான பிரதி என்றோ வெறும் அபிப்பிராயங்களை சொல்வதும் வாசிப்புச் செயலாக இருக்கமுடியாது. அவைகளைக் கண்டுபிடித்த வழிமுறைகளை வியாக்கியானம் செய்வதுதான் வாசிப்புச் செயலாகும்.

வாசிப்புச் செயலில் பிரதியோடு வாசகர் வினையாற்றுவதற்கு தடையாக பல விசயங்கள் இருந்தாலும், மிக முக்கியமான ஒன்று இருக்கிறது. அது குறித்துதான் சிலவிசயங்களை இங்கு பேசப்போகிறேன்.

எல்லாத்துறைகளையும்போல, இலக்கிய வெளியிலும் முக்கியமானவர்கள். மகான்கள். பெரும் கவிகள். மூத்ததலைமுறையினர் எனப் பலர் இருக்கத்தான் செய்வார்கள். அப்படி அவர்களை இலக்கிய சமூகம் உருவாக்கி வைத்திருக்கும். அவர்களின் இலக்கியப் பங்களிப்பு குறித்து பல விசித்திரமான கதைகள் நிலவும். அவர்களுடைய இலக்கியப்பிரதிகள் (கவிதைகள்) குறித்து பெருமிதங்களும் இருக்கும். அவர்களை ஒட்டியதாக வாசகர் கூட்டங்களும் இருக்கும். சில வெளிப்படையான வட்டங்களாக அமைந்திருக்கும்.

இவை எல்லாவற்றையும் புதிதாக அந்தத்துறைக்குள் நுழைபவர்கள் ஏற்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத மனஒப்புதல் பொதுவானதாக அமைந்திருக்கும். இலக்கியச் சூழலில் இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இடங்களும், சிம்மாசனங்களும் மகத்தான வர்களாக வடிவமைத்து வைத்திருக்கும். இப்படி கட்டாயம் ஒன்றுமில்லையே என எதிர்ப்பேச்சை வைத்திருப்பார்கள். எனினும், சிம்மாசனங்களை கட்டிக்காப்பதற்குரிய வழிமுறைகளுக்கே அதிக ஆதரவை வழங்குவார்கள். அதனுாடாக ஒரு விதி உருவாக்கப்படும்.

1. இத்தனை காலம் இலக்கியத்தில் இருக்கிறார்கள்.
2. பெரும் பெரும் விமர்சகர்கள் எல்லாம் அவர்களைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
3. பல முக்கிய விருதுகளை பெற்றிருக்கிறார்கள்.
4. பல புத்தகங்களுக்கு உரை எழுதித்தள்ளியிருக்கிறார்கள்.
5. இன்னும் இப்படி பல இருக்கிறது.
இவைகளின் காரணமாக இங்கு (இலக்கிய வெளியில்) அவர்கள்தான் ஹீரோக்கள். முக்கியஸதர்கள். அடுத்த அடுத்த தலைமுறையின் முக்கியமான இலக்கியவாதிகளை கண்டுபிடித்து இலக்கிய சமூகத்திற்கு வழங்குபவர்களாக மாறிவிடுகிறார்கள்.

இதை அறிந்திராத எவரும் இருக்கமுடியாது. ஆக, புதிய தலைமுறையினரும் இவ்வாசான்களின் றெக்கமண்டேசனுக்காக காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. அதற்கு தேவையான அனைத்து குத்திக்கறணங்களையும் அடித்தபடியே பலர் இருக்கிறார்கள்.

இந்த இடத்தில், சுதந்திரமான வாசிப்பு என்பது சாத்தியமற்றுப்போய்விடுகிறது. முன்னோடிகளின் இலக்கியப் பிரதிகளை எப்படி கொண்டாடினார்களோ, அதில் சிறு மாற்றமும் இன்றி பின்பற்ற வேண்டும். முடிந்தால் போனஸாக, அதை உறுதிப்படுத்துவதற்கு மேலதிகமாக உழைக்கவும் வேண்டும்.அத்தோடு, இந்த முன்னொடிகள் சொல்வதையே இலக்கியமாகவும், நிராகரிப்பதை இலக்கியமற்றது எனவும் கிளிப்பிள்ளைபோல எந்த இடத்திலும் ஒப்பிக்க வேண்டும்.

அவைகளுக்கு மாற்றமாக ஏதாவது செய்தால், அவர் புறக்கணிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். அவ்வளவுதான்.
வாசிப்பு என்பது இப்படியான விசயங்களை அனுசரித்துப்போவது என்றாகிவிட்டது.

யாராவது பிரதியொடு வினையாற்றி, சொந்தக்கருத்தை உருவாக்கி வெளியே கொண்டுவந்தால், நாங்க 40 வருசமா புடுங்கிறோம் எங்களுக்கு ஞான உபதேசமா என்கின்றனர்.

கம்பன, பாரதிய, இன்னும் மண்ணாங்கட்டிகள போய் திருத்து பார்க்கலாம் என பொருந்தாத வகையில் தாக்கிவிடுகின்றனர்.

வாசிப்புக்கு தடையாக இருப்பது இலக்கியவாதியின் பெயர்தான். முதலில் அதை நீக்கிவிடுங்கள். பிரதியிலிருந்து நீக்கிவிடுவதைச் சொல்லவில்லை. எல்லோரும் அவரை ”பெரும்கவி” என கொண்டாடுகிறார்கள். அவருடைய கவிதையை பயபக்கியொடுதான் வாசிக்க வேண்டும் என்ற மனநிலையை நீக்கிவிடுங்கள். சும்மா சாதாரணமா, எந்தப் பிம்பங்களாலும் சூழப்படாத, பரிவாரங்கள் இல்லாத ஒருவரின் பிரதியை அனுவதைப்போல அனைவரின் பிரதிகளையும் அனுகுங்கள். இலக்கியப் பிரதி ஒன்றோடு வாசிப்பிற்கான செயலை நிகழ்த்தப்போகிறோம் என்பதைத்தவிர, வேறு எதையும் உங்களோடு வைத்திருக்காதீர்கள். அவைகளை துாக்கிவீசிவிடுங்கள்.

இப்போது சுதந்திரமான வாசிப்பு சாத்தியப்பட்டுவிடும். எந்த இடைஞ்சலுமின்றி பிரதி உங்களோடு பேசத்தொடங்கிவிடும். ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் நிகழத்தொடங்கிவிடும். பிரதி குறித்து சொந்தமாக ஒரு கருத்து உங்களிடம் உருவாகிவிடும். ஆம், சுதந்திரமான வாசிப்பிற்கு தடையாக இருப்பது, ஏலவே சூழலில் (இலக்கிய) உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள்தான். அதுதவிர வேறொன்றுமில்லை.

இப்படி செயற்படுவது தற்கொலைக்கச் சமமானது. இலக்கியச் சூழலில் அமர்ந்திருக்கும் திரு உருக்களால் நாம் துாக்கிவீசப்படலாம். புறமொதுக்கப்படலாம். கவனிக்கப்படாமல் போய்விடலாம். என்பது உண்மைதான்.

அதைவிட ஒரு உண்மையிருக்கிறது. நமக்கான புதிய பார்வையாளர்கள் (வாசகர்கள்) உருவாகாமல் போய்விடாது. வாசகர்களுக்கு இவர்களைத்தான் கட்டிக்காப்பாற்ற வேண்டுமென்ற நிர்பந்தங்கள் எதுவுமில்லை. புதிய திசையில், புதிய கோணத்தில் இலக்கியத்தை, கவிதையை புரிந்துகொள்ளக்கூடிய முற்றிலும் வேறுபட்ட பார்வையாளர்கள் உருவாகித்தான் ஆகுவார்கள்.

இலக்கியப் பிரதியை சுதந்திரமாக வாசித்து, சொந்தமாக கருத்துக்களை உருவாக்குவதற்கு தடையாக இருக்கும் திரு உருக்களையும், பிம்பங்களையும் நான் மயிரென்றும் கணக்கிலெடுப்பதில்லை.