திங்கள், பிப்ரவரி 10, 2014

மலேசிய தமிழ் இலக்கியம்.

எதிர்ப்பிலக்கியம் - கே.பாலமுருகனின் கவிதைகள்.
.....................................................................

கவிதைகளுக்கு பொதுவான ஒரு அணுகுமுறை எப்போதும் சாத்தியமில்லை. சூழல், நாடு, கலாச்சாரம், காலகட்டம்,வரலாறு,பால்நிலை என இதுபோன்ற பல அம்சங்கள் கவிதையைப் பாதிக்கின்றன. ஆதுபோல், கவிதை தனது எல்லைக்குள் எவைகளை அனுமதிக்கிறதோ அவைகளையும் தனித்தனியே அணுக வேண்டியுமிருக்கிறது. அதனால்தான், கவிதை என்பது, எல்லாக்காலத்திலும், எல்லா நிலப்பரப்பிலும், எல்லாக் கலாச்சாரத்திலும் ஒரேமாதிரியாகப் பயிலப்படுவதில்லை. அதுபோல், தன்னை ஒரேமாதிரியாக வெளிப்படுத்திக்கொள்வதுமில்லை. ஆக, கவிதைக்கென்று தனியான ஒரு அணுகுமுறை அதாவது பொதுவான ஒரு அணுகுமுறை சாத்தியமே இல்லை.

தமிழின் விரிந்த பரப்பிற்குள் பலவகைப்பட்ட கவிதை வாசிப்பிற்கான அணுகுமுறைகள் மேலெழுந்து வந்தாலும், அம்முறைமைகள் வளர்த்ததெடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, மிக இலகுவானதும், பழக்கத்தில் தோய்ந்து போயிருப்பதுமான மனோரதியப் பார்வையொன்றை கவிதைகளுக்கான பொதுவான வாசிப்பு அனுகுமுறையாக( விமர்சன முறைமை) பயன்ப:த்திக்கொண்டிருக்கிறார்கள். இது ஒருவகை உள்ளொளி சார்ந்த அணுகுமுறை. தான் அணுகும் குறித்த கவிதைப் பிரதிகள் ஏன் இப்படியாக வாசிக்கப்படுகின்றன என்பதை வெளியே கதைப்பதில்லை. விபரிப்பதும் இல்லை. மனதால், ஏதோ ஒரு மாயநினைவில் கண்டுபிடித்த விசயங்களை கவிதை குறிது;து பேசுவதைப்போல கதைக்க முற்படுவதுதான் இந்த முறைமையின் விசேசம். இது குறித்த கவிதைக்கு ஒரு மந்திரவாதி ஏதோ சாத்திரம் கூறுவதைப் போன்றதாகும். அதாவது, கவிதைக்கு உயிர் கூடிவருகிறது. இந்தக் கவிதைகள் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கின்றன. இவை உணர்வுகளின் ஆற்றல் மிக்க சொற்களால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. என்பதுபோல், தலைமறைவு இயக்கங்களின் ரகசியக் குறியீடுகளால் கவிதை குறித்து பேசுவதுபோல் ஒரு தோற்றத்தை தரக்கூடியது. அல்லது, எங்கோ வானத்திலிருக்கும் கடவுளிடமிருந்து வந்ததைப்போல பேசுவது. தான் கதையாடும் கவிதைப் பிரதி குறித்த முடிவுகளை கண்டுபிடித்த வழிமுறைகளைப் பற்றி எப்போதும் பேசுவதே இல்லை. தமிழின் மரபானமுறைமையாக நம்பப்படும் இந்த அணுகுமுறையே ஒ முற்றிலும் வௌ;வேறான வித்தியாசமான கவிதைப் பிரதிகளையும் அணுகுவதற்குப் பயன் படுத்துகின்றனர்.

தமிழின் விரிந்த பரப்பு என்பது இன்று மிக முக்கியமானது. தமிழ் இலக்கியம் என்ற சொல் 'தமிழின் விரிந்த பரப்பு' என்ற அர்த்தத்தை வெளிப்படுத்தும் விதமாக பயன்படுத்தப்பட வேண்டும். தமிழ் நாட்டு இலக்கியம் என்ற அர்த்தத்தோடு சுருங்கிவிடக்கூடாது.தமிழின் விரிந்த பரப்பு என்பது, ஈழம், மலேசியா, புலம் பெயர்வு, சிங்கப்பூர்,மற்றும் தமிழ்நாடு(இந்தியா) என அர்த்தப்படுத்தும்படியாக வாசிக்கப்பட வேண்டும். இந்த நிலவியல் பிரிவுகளில் தமிழ்க் கவிதை என்பது ஒரேமாதிரியான பண்புகளோடு இருக்கமுடியாது. அதே நேரம் ஒரே வகையான பிரதிகளை அனைத்து நிலவியல் வெளிகளிலும் கவிதையாகப் பாவிக்கவும் முடியாது. ஆனால், ஒரே வகையான பிரதிகளையே அனைத்து தமிழ் நிலவியல் பிரிவுகளிலும் பாவிக்க முற்படுவதும் பாவிப்பதும் அந்தந்த நிலப்பரப்புகளில் திரண்டிருக்கும் தமிழ் தனித்தன்மைகளை அழித்து ஒரேயொரு உலகளாவிய தமிழை உருவாக்க முயற்சிப்பதாகவே இருக்கும். இது மிக மோசமான வன்முறையுமாகும். நிலவியல் பிரிவுகளில் நிலவுகின்ற கலாச்சார, அரசியல் நெருக்கடிகள், கவிதைக்கான பன்முக வெளி போன்றவற்றை இல்லாது ஆக்கிவிடும் முயற்சியாகவே நிறைவேறிடும். ஒவ்வொரு தமிழ் நிலவியல் பிரிவுகளிலும், அதன் இலக்கியம் 'தான்' என்னவாக இருக்க விரும்புகிறதோ அப்படி இருப்பதற்கான வழிமுறைகளே, அந்தந்த நிலவியல் பிரிவுகளுக்கான இலக்கிய அணுகுமுறையாகவும் இலக்கியமாகவும் இருக்கமுடியும். அனைத்து நிலவியல் பிரிவுகளிலும் தமிழ் இலக்கியம் என்பது ஒரேமாதிரியாகவும், ஒரேவகையான பண்புகளுடனுமே இருக்க வேண்டும் என வலியுறுத்தும் இலக்கிய அணுகு முறைகள் சர்வாதிகாரத்தன்மை கொண்டது. இப்படியான அணுகுமுறைகளை இனம் கண்டு முதலில் மிக மோசமாக எதிரக்க வேண்டும்.

இந்த வகையில், ஈழத்து இலக்கியம் தனக்கான ஒரு இலக்கிய வெளியை உருவாக்கியிருக்கிறது. அந்த இலக்கியப் பிரதிகளை அணுகுவதற்கு தனித்த ஒரு விமர்சன முறைமையை வளர்த்தெடுக்காவிட்டாலும், ஒருவகைக் கூட்டு மன அரசியலையும், அதன் சிதைவையும் புரிந்துகொள்ளவும், பதிவுசெய்யவுமான நிலவரத்தை உண்டுபண்ணியுள்ளது. அரசியல் அர்த்தத்தில் முக்கியமான வகிபாகம் ஒன்றை வழங்கும் படியான இலக்கியம் என்று பேசப்படும் நிலையை அடைந்திருக்கிறது. அதைக் கூட இன்று என்னைப் போன்றவர்கள் விமர்சித்துக் கொண்டுதானிருக்கிறோம். அரசியலின் துணை இன்றி இலக்கியமாக தன்னை அடையாளப்படுத்தத்தக்க பிரதிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படிப் பேசுவது ஏனெனில், ஈழத்து இலக்கியம் தனக்கான அரசியலை உருவாக்குவதற்குப் பதிலாக, அங்கு நிலவும் சமூக அரசியலுக்கு உதவும்படியான, சாய்வுகொண்ட சேவையை மேற்கொள்வதனாலாகும். கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதானால், ஈழத்து அரசியல் வெளி மிகமோசமாக இலக்கியத்தை பாவித்திருக்கிறது என்பதாகும். அரசியலை முதன்மைப்படுத்தி அதற்கு ஊழியம் செய்யும் நிலையை இலக்கியம் கையேற்றிருப்பதினாலேயே நாங்கள் இங்கு, இலக்கியப் பிரதிகளை அரசியலில் இருந்து காப்பாற்றி வெளியே கொண்டுவர வேண்டுமென்று சொல்கிறோம். எப்படி இருந்தாலும், ஈழத்து இலக்கியத்திற்கான திசையும், இயங்கு தளமும் உருவாகிவிட்டது.

ஆனால், மலேசிய இலக்கியம் தனது இயங்குவெளியை மிகச் சரியாக இனம் கண்டு, அந்தப் பிரதிகளை அணுகுவதற்கேற்ற விமர்சன முறைமையை உருவாக்க வேண்டுமென்று சொல்ல விரும்புகிறேன். தமிழ் நாட்டிலோ, ஈழத்திலோ நிலவுகிற விமர்சன முறைமைகள் ( அப்படி ஏதாவது இருக்கிறதா என்ன?) மலேசிய இலக்கியத்தை அதன் அனைத்து தன்மைகளையும் கண்டுபிடிக்க உதவாது. மலேசிய இலக்கியப் பிரதிகளை அணுகிப் பார்ப்பதற்கென்று எந்தெந்த விமர்சன முறைகளிலிருந்து எவைகளை எடுக்க முடியுமென்று கண்டுபிடித்து தனக்கான ஒரு விமர்சன முறைமையை உருவாக்கவே வேண்டும். அது இல்லாதுபோனால், மலேசிய இலக்கியங்கள் வெறுமனே பொழுதுபோக்கு எழுத்துக்கள் என்றும், இன்னும் முற்றிலும் வளர்ச்சியடையாத பயில்நிலை இலக்கியப் பிரதிகள் என்றும் கருதவேண்டிய நிலையே தொடரும். கடந்த ஐந்தாண்டுகளாக மலேசிய இலக்கியத்தை கவனித்துவருகிறேன். இந்த ஆண்டுகளில் வெளிவந்த முழுத்தொகுப்புக்களையும் ஒரு சேரப் படித்திருக்கவில்லை. இணைத்தினூடாக கிடைப்பவற்றை எல்லாம் வாசித்திருக்கிறேன். முழுமையான நவீன இலக்கியமாக மலேசிய இலக்கியம் திரட்சியுற்று தன்னை மாற்றியமைத்திருக்கிறதென்றே எனது துணிபு. அத்தோடு, தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பிற்கு புதியதொரு இலக்கியத் தன்மையையும் கொண்டுவந்திருக்கிறது. 

தனிமனித சுயம், (அகமி) வெறுமை, ஏக்கம், தனிமை, பெருநகரங்களின் அலைக்கழிப்பு, மனத்தொந்தரவு, அகமியின் லயிப்புகள் என்றிருந்த மலேசியத் தமிழ் இலக்கியம், ஒரு புதிய திசையை நோக்கி நகரத்தொடங்கியிருக்கிறது. இது மிக முக்கியமான ஒரு நிலவரமாகும். (அங்கு சென்றுவந்த பல இலக்கிய வாதிகள் கூட தங்கள் நிலப்பரப்பின் இலக்கியக் கதைகளையே கூறிவிட்டு வந்தனர். மலேசிய தமிழ் இலக்கியத்தை அடையாளம் கண்டு அதுகுறித்து எந்த விவாதங்களையும் ஏற்படுத்தவில்லை.) இவர்களுடைய சாமான் அங்குவிற்கப்பட்டது. இந்த இதை மிகச் சரியாக இனம் காண்பதுதான் மலேசிய தமிழ் இலக்கியத்தை தமிழின் விரிந்த பரப்பிற்குள் முக்கியத்துவம் மிக்க இலக்கியச் செயலாக மாற்ற இருக்கிறது.
தனிமனித அகமி, மற்றும் அகமியின் லயிப்பு,பழமைச் சுகம் என்பதற்கு அப்பால் புறவெளியை நோக்கி அரசியல் அர்த்தத்தில் இலக்கிய அக்கறைகள் நகரத்தொடங்கியிருக்கின்றன. ஜனநாயகம், கலாச்சார எதிர்க்குரல், அதிகாரத்தை சகிக்கவிரும்பான அகமி, போன்ற இந்தப் புறவெளிகளை தொடர்ச்சியாக அசைப்பதினூடாகவும், சங்கடத்திற்குள் ஆழ்த்துவதற்கூடாகவும் தனிதனித அகமி என்பதை ஒரு கூட்டு மன இயக்கமாக மலேசிய தமிழ் இலக்கியம் பாவிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்தக் கூட்டுமன இயக்கத்தை நோக்கி இலக்கியக் கதையாடல்களும்,இலக்கியச் செயற்பாடுகளும் நகர்ந்து கொண்டிருப்பதானது, கலாச்சார ரீதியான சிதைவையும், அதிகாரத்திற்கெதிரான ஒரு எதிர்ப்பியக்கத்தையும் பெயரளவிலாவது தோற்றுவித்துவிடச் சாத்தியமுண்டு. அந்தச் சாத்தியம் நிறைவேறியிருக்கிறதென்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்- ஒரு இலக்கியப் பிரதி கலாச்சாரக் காவலர்களால் மிக மோசமாக எதிர்கொள்ளப்பட்டதுதான். அது பொழுதுபோக்குத்தானே, இலக்கியம்தானே சும்மா எழுதிவிட்டுப்போகட்டும், ஒரு பத்துப்பேர் வேண்டுமானால் படிப்பார்கள் என்ற இலக்கியம் குறித்த புரிதல் மனநிலை முற்றிலுமாக மாறியிருக்கிறது. ஒருவர் படித்தாலும் அந்தப் பிரதியால் கலாச்சாரத்திற்கு ஆபத்து வந்துவிடும் என்ற அச்சத்தை எப்போது ஒரு இலக்கியப் பிரதி உருவாக்குகின்றதோ அப்போதே இலக்கியப் பிரதிக்கான அரசியல் செயற்பாடு முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.

எனவே, மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு ஒரு அரசியல் உள்ளடக்கம் உருப்பெற்றுவிட்டிருக்கிறது என்பதுதான் இன்றைய உண்மையாகும். ஆகையினால், இனி மலேசிய தமிழ் இலக்கியத்தைப் புரிந்துகொள்வதென்பது வெறுமனே இன்பந்தருகின்ற ஒரு எழுத்துக்களை அறிந்துகொள்ளுதல் அல்ல. அந்த நிலைமையைத் தாண்டி ம.த.இலக்கியம் நகர்ந்துவிட்டது. மலேசியத் தமிழ் அங்கு பாரம்பரியமாக நிலவுகிற கலாச்சாரத்தோடு  எப்படி உறவு கொள்கிறது? எதிர்கொள்கிறது? இஸ்லாமிய அரசு ஒன்றின் கீழ் சிறுபான்மையாக வாழும் சனக்கூட்டம் அந்த அரசை எப்படிப் பார்க்கிறது?  இப்படி இன்னும் எத்தனையோ கேள்விகளைப் புரிந்துகொள்வதினூடாகவே மலேசிய தமிழ் இலக்கியத்தினை இனி நெருங்க முடியும். அப்படி இல்லாமல் அந்த இலக்கியங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதென்பது அந்த இலக்கியங்களுக்குச் செய்யும் துரோகமாகவே முடிந்துவிடும்.

மலேசியத் தமிழ் நிலப்பரப்பில் இன்று திரண்டிருக்கின்ற இலக்கியச் செயலை  எனது வாசிப்பிற்குட்பட்ட வகையில் மிகச் சரியாக அடையாளப்படுத்துவதென்றால் ' எதிர்ப்பிலக்கியம்' என்றே அழைப்பேன். உலகளவில் எதிர்ப்பிலக்கியம் பல மொழிகளில் இருந்திருக்கின்றன. இன்னும் இருக்கின்றன. போர்ச்சூழலில் உருவாகும் இலக்கியங்களை எதிர்ப்பிலக்கியம் என அழைக்க நான் விரும்புவதில்லை. அந்த வகை இலக்கியங்களைவிட மிக வலிமையானதுதான் இந்த எதிர்ப்பிலக்கியம் என்பதாகும். மலேசியத் தமிழ் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் ஆபிரிக்க எதிர்பிலக்கியத்தை பயில்வதினூடாக அதன் இயங்கியலை மலேசிய தமிழ்ச்சூழலுக்கேற்ப பணன்படுத்த முடியும் என்றே கருதுகிறேன். அதனூடாக ம.த.இலக்கியத்தை (எதிப்பிலக்கியத்தை) இன்னும் செழுமைப்படுத்த முடியுமென்றே கருதுகிறேன். எதிர்பிலக்கியத்திற்கு தமிழ் இலக்கியங்கள் எதுவும் இனி உதவப்போவதில்லை.
முதன் முதலாக மலேசியத் தமிழ் இலக்கியத்தை (இன்றைய) ' எதிர்ப்பிலக்கியம்' என அழைத்ததினூடாக அந்த இலக்கியத்திற்கு எனது பங்களிப்பை வழங்கியதாகவே கருதுகிறேன். 

இப்படி என்னை சிந்திக்கத் தூண்டியது கே. பாலமுருகன் அவர்களின் 'தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்' என்ற கவிதைத் தொகுதிதான். எதிர்பிலக்கியம் என்பதை அடையாளப்படுத்தும்படியாக ஒரு தொகுப்பாக வாரும் கவிதைகள் இதிலுண்டு. இந்தக் கவிதைகளைப் படிக்கும் எவரும் மீண்டும் எனது உரையை வாசிக்க வேண்டி ஏற்படலாம். ஏனென்றால், இந்தக் கவிதைகளின் உட்சரடு எதுவோ அதை சற்று விரிவாக நான் எழுதியிருக்கிறேன். கவிதைகள் உங்களோடு அதிகம் பேசவிருக்கிறது என்பதால், அந்தக் கவிதைகள் என்னை எதைப் பேசத்தூண்டியதோ அதை மட்டுமே பேசியிருக்கிறேன். எதிர்ப்பிலக்கியத்தின் முதலாவது அடையாளமாக இந்தத் தொகுப்பு என்றும் இருக்கும்.