புதன், பிப்ரவரி 05, 2014

புத்தக விமர்சனம் - ரகசியமற்ற நாக்கு


ரகசியத்தின் நாக்குகள் – நெற்கொழு தாசன்

”இது கவிதை” என்ற ஒரு எடுகோளை எடுத்துக்கொண்டு ஒரு பிரதியை வாசிக்கத்தொடங்கினால், அது பல வசதியானதும், நம்பகத்தன்மைகொண்டதுமான விபரிப்புகளுக்கு துணைநிற்கக்கூடியது. அதைத் தவிர்த்து, ஒரு பிரதி தன்னை 
கவிதையாக நிறைவடையச் செய்வதற்கு எவைகளை துணைக்கழைக்கிறது என்றோ அல்லது, ஒரு பிரதி தன்னை கவிதையாக மாற்றிக்காட்ட எந்த வகையான விசயங்களை நம்பிச் செயற்படுகிறது என வாசிக்க முற்பட்டால், கவிதை என நாம் நம்பும் விசயங்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை உணரவும், வேறுபட்ட கவிதைச் சூழலை அக்கறைகொள்ளவும் வாய்ப்பாகவும் இருக்கும் எனக் கருதுகிறென். இன்று ஒரே வகையான அதிக பிரதிகள் உற்பத்தியாகின்றன. இந்த கவிதைப் பெருக்கத்திலிருந்து தப்பித்து புதுவகையான கவிதைநிலைகளை அடைய இப்படியான வாசிப்புக்களே அதிகம் கைகொடுக்கக்கூடியது என நான் நம்புகிறேன்.

அதன் காரணமாகவே, நெற்கொழு தாசன் அவர்களின் கவிதைத் தொகுப்பான ”ரகசியத்தின் நாக்குகள்” என்பதிலுள்ள கவிதைகளை வாசிக்க முற்படுகிறேன். அவரின் தனித்தனிக் கவிதைகளை வாசிக்க நான் இங்கு ஆர்வப்படவில்லை. மொத்தமாக வாசித்தபின் உருவாகும் கதைகளை பகிர்ந்துகொள்வே விரும்புகிறேன்.

இவர் கவிதை என நம்பும் பிரதிகளை உருவாக்க பயன்படுத்தும் மொழி குறித்த சிறு கவனத்தை இங்கு முன்வைக்க விரும்பகிறேன். சொற்களுக்கென்று தனியான ஓசை இருக்கிறது. அந்தச் சொற்களை வாங்கியங்களாக ஆக்கும்போதும், வாக்கியங்களலான கூற்றுக்களாக மாற்றும்போதும், அந்தச் சொற்களிடமே ஓசைகள் இருக்கின்றன. அவை பிரிந்து வேறெங்கும் சென்றுவிடுவதில்லை. இதை அனைவரும் அறிவோம். வாக்கியங்களிலும், கூற்றுக்களிலும் ஒரே சாயல்கொண்ட, அல்லது ஒத்த தன்மைகளையுடைய சொற்களை நிறைத்துவைப்பதற்கே அதிகம் விரும்புகிறார். அதில் எந்தப் பிரச்சினையுமில்லை எனினும், இப்படி ஒத்த தன்மைகள் கொண்ட இசையை பிறப்பிக்கும் சொற்களை அதிகம் கொண்டிருக்கும் கவிதைகளை நாம் ”மரபு“ கவிதை என ஏலவே பழகியிருக்கிறோம். அந்த நினைவு வந்து, இன்று இவரின் கவிதைகளினுாடாக நம்மைத் தொந்தரவு செய்யும்போது, அவை பின்தங்கிய ஒரு கவிதைச் செயல் என்பதுபோன்ற எண்ணத்தை முதலில் அறிமுகப்படுத்துகிறது என்பதை சொல்லவேண்டியுள்ளது.

அடையாளமும் பூர்வீகமும் காலங்காலமாக இலக்கியத்திற்கு புதிய உள்ளடக்கங்களை வழங்கிவந்திருக்கிறது. அதனைப் பின்தொடர்ந்து நமது இலக்கியக் கதைகள் நகர்ந்துகொண்டுமிருக்கின்றன. இது ஒருவகை அரசியல் அர்த்தத்தை இலக்கியப் பிரதிகளுக்கு வழங்கிவிடுகின்றன. தனது அடையாளம் நெருக்கடிக்குள்ளாகுதல், அவை காப்பாற்றுதல் போன்ற கதைகளுக்காகவும், செயல்களுக்காவும் இலக்கியம் அதிகம் கடமைப்பட்டிருக்கிறது. இன்றைய கோட்பாடுகள் கூட இதை அதிகம் வலியுறுத்தும் வழிகளை நமக்கு வழங்க மறந்துவிடவில்லை. சிறுகதையாடல், பெண்ணிய வாசிப்புகள், விளிம்புநிலைப் பேச்சுக்கள் என இது பலவகையான நிலைகளில் இயங்கிக்கொண்டிருப்பதாகும்.
அடையாளம் நெருக்கடிக்குள்ளாகுதல் மிக முக்கியமான விசயமாகும். காலாச்சாரம், அடையாளம், அவைகளின் தனித்தன்மை போன்றவை அதற்கு வெளியிலிருந்து வரும் காரணிகளால் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, விலகிச் செல்லுதல், அதை எதிர்த்தல் என பல செயற்பாடுகள் களத்திற்கு அறிமுகமாகின்றன. அத்தோடு, அவைகளே அக்காலகட்டத்தின் குறித்து சமூகத்தின் முக்கியவிசயமாகவும் பொதுப்பரப்பிற்கு உள்ளடக்கத்தை வழங்குகின்றன.
தனது நிலத்திலிருந்து வேரோடு பிடிங்கி வீசப்படுதல். அல்லது அரசியல் நெருக்கடிகளினால் அதன் தீவிரத்தினாலும் புலம்பெயர்ந்து செல்லுதல் இது தவிரந்த வேறு காரணங்களினாலும் புலம் பெயர்ந்து செல்லுதல் என கடந்த நுாற்றாண்டு முழுதும் புலம்பெயர்வுகளே அதிகம். இந்தப் புலப்பெயர்வு என்பது, மிக நீடித்த வரலாற்றைக்கொண்டது. பூமி தோன்றிய காலந்தொட்டு பல சமூகங்கள், தனிநபர்கள் என வெவ்வேறு காரணங்களினால் புலம் பெயர்ந்தும், பெயர்க்கப்பட்டும் வந்திருக்கிறார்கள். இந்தப் புலப்பெயர்வை எப்போதும் துயரமானதாகவே, கட்டமைக்க இலக்கியப் பிரதிகள் தொடங்கி அரசியல் பிரதிகள் வரை முயற்ச்சி செய்திருக்கின்றன. புலப்பெயர்வு என்பது, வரலாற்றுரீதியான புரிதலில் உருவாக்கியிருக்கும் பொது உளவியல் அர்த்தம் யாதெனில், துயரம் என்பதேயாகும்.

இந்தத் துயரத்தோடு இன்னுமொன்று இணைகிறது. அதாவது, பழையவற்றில் மனம் தங்கிவிடும் மனோபாவமாகும். ஏதோ ஒரு காலகட்டத்தில் மனம் தங்கிநிற்பதாகும். அதுவே, என்றும் சிறந்த காலமாக உணரும் புரிதலாகும். அனைத்து மனிதர்களுக்கும் இந்தப் ”பழைய காலம்” ஒன்று இருக்கிறது. அந்தக் காலமே அவர்களின் சிறந்த காலம் என்பது ஆராயாமல் உணரும் மனதின் நிலைப்பாடாகும். உதாரணமாக, இன்று இருக்கின்ற காலம் சிலருக்கு சில காலங்களுக்குப் பிறகு பிடித்த மறக்கமுடியாத பழைய காலமாக மாறுவதை நாம் உணரலாம். சிலருக்கு இது முற்றிலும் மோசமான புதிய காலமாகும். இதை ஒரு வகை மன அடிப்படைவாதம் என்று சொல்லலாம். நமது தமிழ் வெளியில் இதற்கு” பழசில் சுகம் காணுபவர்கள்” என்ற ஒருவகை குறிப்பீடும் உண்டு.
இங்கு கோட்பாட்டுரீதியிலான ஒரு விவாதத்தையும் நினைவுபடுத்துவது நல்லது என நினைக்கிறென். அது நிறைவூட்டல் என்பதாகும். பேச்சின் நிறைவூட்டலாக எழுத்து இருக்கிறது என்ற வாத்தையும், அதை முறியடித்த டெரிடாவின் வாதங்களை நினைத்துப் பார்க்கலாம். எதிரே பிரசன்னமில்லாத ஒன்றை நிறைவூட்ட வேறொன்றை பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி விவாதிக்கப்பட்டடை, எதிரே பிரசன்னமாக இருக்கும்போதே அதுவும் நிறைவூட்டலுக்கான தேவையைக் கொண்டிருக்கிறது என்பதை டெரிடா வாதிட்டிருப்பார்.

ஆக, இந்த பழசில் சுகம் காணுதல் என்ற புரிதல் நிலையும், தனது அடையாளத்தை, தனது கலாச்சாரத்தை, தனது மண்ணை விட்டு பிரித்தெடுக்கப்படுதல் என்பதையும் இணைத்து, அவை துயரமானதுதான், அந்தத் துயரத்தை நிறைவடையச் செய்ய (இட்டுநிரப்ப) இலக்கியப் பிரதிகளின் உதவி தேவைப்படுகிறது என்பதே இன்றைய புரிதலாகும். இதை இப்படியும் யோசிக்கலாம். அதாவது, இந்தத் துயரங்களின் (துயரங்களாக பிரதிகாளல் கட்டமைக்கப்பட்டு, பிரதிகளின் வழியாகவே தொடருகிற) உதவியின்றி ஒரு பிரதி கவிதையாக தன்னை மாற்றிக்கொள் முடியாமல் நெருக்கடியில் இருக்கிறது.

அல்லது, புலம் பெயருதல், இழந்த சொர்க்கமான பழைமை போன்றவைகளின் உணர்வெழுச்சியை நம்பியே பல பிரதிகள் இருக்கின்றன. அவைகளின் உதவியே, தங்களை கவிதையாக நிறைவடையச் செய்ய பெரிதும் உதவக்கூடியது.
உலகம் மனிதர்களுக்குரியதல்ல. நாடுகள், கலாச்சாரங்கள், நிலங்கள், பழக்கவழக்கங்கள் என்பவற்றால் குழுக்களாகச் சிக்குண்டிருக்கும் மனிதர்கள், அந்த அந்த அடையாளங்களில் மாத்திரமே தனது செயலைக் குறுக்கி வைக்க வேண்டும் என்பதையே இவை முன்மொழிகின்றன. உலகில் எந்த நிலத்திலும் வசிக்கமுடியும், எந்தக் கலாச்சாரத்தையும் நெருக்கமுற முடியும், எந்தவகையான அடையாளங்களையையும் தான் தேர்வு செய்ய முடியும் என்ற புரிதலுக்கு முற்றிலும் எதிரானவைதான் இந்த புலம் பெயர்தல் என்பது துயரமானது என கட்டமைக்கப்பட்டிருக்கும் கதைகளாகும்.

மிகச் சில இலக்கிய வாதிகளினாலேயே, ”யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனச் சொல்ல முடிந்திருக்கிறது. மற்றயவர்கள் சொல்வதெல்லாம், ”இதுதான் எனதுார் யாவரும் கேளீர்” என்பது மாத்திரம்தான். புலம் பெயர்ந்து சென்றதினால், தனது நிலத்தை இழந்துவிட்டதாகவும், அது மாபெரும் துயர் என்பதாகவும், நமது வரலாறும், இலக்கியமும், அரசியல் பிரதிகளும் நம்மைக் கட்டாயப்படுத்திவந்திருக்கின்றன. அதனால்தான், குறித்த நிலப்பிரதேசத்திலிருந்து வெளியேற்றப் பட்டதினால் வேறொரு நிலத்தில் வசிக்க நேர்வதாலும் ஏற்படும் துயரங்களினால் உருவான மன நிலையை இவருடைய கவிதைகள் கவனத்தில் கொள்கின்றன. இந்தப் புலப் பெயர்வு தமிழ் மனதில் பெரிதும் மகாதுயரமாக மாறியது என்பது, ஈழத்தில் உருவான அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து உருவான ஒன்றாகும். இன்றைய நிலையில், தமிழ்மொழியின் விரிந்த பரப்பில் இந்தப் புலம் பெயர்வு என்ற கருத்தாக்கம் பெரிதும் இரக்கத்திற்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது. இங்கு நடந்த ஆயுதரீதியான போராட்டம் கடுமையான முறைகளைால் தோற்கடிக்கப்பட்ட பின், இன்னும் ஒருவகை உணர்வெழுச்சியுடன் கூடிய இரக்கம் பெருக்கெடுத்திருக்கிறது. ஆக, இந்தக் கருத்தாக்கத்திற்கிருக்கும் பரவலான பார்வையாளர்களை கண்ணீர் சிந்தச் செய்வதற்கும், கொஞ்சம் இரங்கச் செய்வதற்கும் மாத்திரமே இவருடைய பிரதிகள் முயற்சிக்கின்றன.

ஒரு கலாச்சாரத்தை, அதன் அடையாளத்தை, அதன் நிலவெளியை வலிமையான அல்லது பிற சமூகங்கள் கலாச்சாரங்கள் அழித்துவிட மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள் வேண்டும் என சொல்லவில்லை. அதை நான்கூட மிக மோசமாக எதிர்க்கவே விரும்புகிறேன். அத்தோடு, தனது கலாச்சாரங்களின் பெருமையைப் பேசுவதும், அதுவே உண்மை என நம்பி அந்தச் திசைகளில் வலியுறுத்துவதையும் எதிர்க்கவே விரும்புகிறேன்.
நெற்கொழு தாசனின் கவிதைப் பிரதிகள் இன்னும் புலப்பெயர்வை துயரமாகவும், தனது இழந்த காலத்தை அபரிமிதமாக அக்கறைகொள்வதையுமே செயலாகக் கொண்டிருக்கிறது. அவைகளின் உதவியை தனது பிரதிகள் கவிதையாக நிறைவடைய நம்பியிருக்கின்றன. இலக்கியமாக கருதத்தக்கவை அல்ல என நம்பும் இந்த சமூகத் துயரங்களை, பழைய சொர்கத்தை நினைந்துருகுவதை எடுத்துரைத்து ஒரு கூட்டான நினைந்துருகலைக் கோருபவையாக இருக்கின்றன.

இந்தவகையான கவிதைச் செயலை நான் அதிகமும் ஏற்பதில்லை. இவருடைய கவிதைகள் எனச் சொல்லப்படும் பிரதிகளுடன் வினையாற்றும்போது, மிக வெளிப்படையாக ஒரு விசயம் மேற்கிழம்புகின்றன. அவை செய்திகள் என்பதாகும். புலப்பெயர்வும், பழைய சொர்க்கமும் செய்தியாக மாறி நம்முன் இரக்கப்படுதலை வேண்டி நிற்கின்றன. இவரது பிரதிகள் கவிதைத் தன்மையையுடன் நெருங்குவதைவிடவும் அதிகம் ஒரு இரங்கல் செய்தியையே ஒத்திருக்கின்றன. இறுதியில் ஒன்று சொல்ல வேண்டும், எனது வாசிப்புத்தான் இவருடைய கவிதைகளுக்கான சிறந்ததும், உண்மையானதுமான வாசிப்பல்ல. ஆனால், இன்றை இந்தப் புலம் பெயர் இலக்கியக் காய்ச்சலை புரிந்துகொள்ள சிறு பொறிகளையெனும் தரக்கூடியது அவ்வளவே.