திங்கள், மே 30, 2016

துரோகிகளின் இலக்கியம் - கற்சுறா

ஈழத்துக் கவிஞர் ” கற்சுறாவை” எப்படியும் அறிமுகம் செய்ய நான் விரும்பவில்லை. இந்த நேர்காணலே அவருக்கான சரியான அறிமுகமாக அமையும் என கருதுகிறேன். அப்படியான வழிகளில் எனது கேள்விகளை அமைத்திருக்கிறேன். 

கற்சுறாவின் ”  அல்லது ஜேசுவில் அறையப்பட்ட சிலுவை” என்ற கவிதைத் தொகுப்பை வைத்து, ஈழத்து இலக்கியம் தொடர்பான விரிவான உரையாடலை நிகழ்த்தியிருந்தேன். அதை அனேகமாக நீங்கள் படித்திருக்கக்கூடும். படிக்காதவர்களுக்கு அதில் ஒரு உரையாடலின் இணைப்பை இங்கு தருகிறேன். படித்துவிடலாம். 
https://web.facebook.com/permalink.php?story_fbid=563478680472356&id=182863578533870&substory_index=0  பிற உரையாடல்களும் எனது முகநுால் பக்கத்திலே இருக்கிறது. தேடிப்படித்துவிடலாம்.

றியாஸ் குரானா




01. வழமைபோல சம்பிரதாயமான கேள்விதான், எனினும் சற்று வேறுவிதமாக கேட்டுப்பார்க்கிறேன். இலக்கியச் சூழலில் உங்களை எப்படி அறிமுகப்படுத்த விரும்புகிறீர்கள்?

நானும்  வழமைபோல் சம்பிரதாயமாகச் சொல்வதானால் ஒரு சொல்லில் நான் கற்றுக்குட்டி என்றுவிடமுடியும்..  அப்படியாயின் எல்லோரும் அடைந்துவிட்ட இடம் ஒன்றை நோக்கி நகர நான் பழகிக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தப்படுத்தப்படும். அப்படியெதுவும் என்னிடம் இல்லை.  இலக்கியச் சூழலில் நான்  என்னை அறிமுகம் செய்ய குறிப்பிட்டுச் சொல்லும்படிக்கு என்னிடம் ஒன்றுமே இல்லை.  இலக்கியத்தின் மீது தீரா ஆசை என்றும் இருக்கிறது. எனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் உட்பட்டு எழுதிக் கொண்டும் தேடிக்  கொண்டும் இருக்கிறேன்.

நீங்கள் இலக்கியச் சூழல் எனும் பொழுது   தமிழ் இலக்கியச் சூழலை வைத்தே கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.  தமிழில் மட்டுமே எழுதவும் வாசிக்கவும் தெரிந்த எனக்கு, இருக்கின்ற அதற்குள்  அடையாளம் இல்லை என்றே நினைக்கிறேன்.

அடையாளமற்ற ஒன்றை அறிமுகப்படுத்தும் மொழி எங்களுக்கு இன்னும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. இன்றுவரை எத்தனை அறிமுகங்களையும் அடையாளங்களையும் கடந்து வந்திருக்கிறோம். தொலைத்து வந்திருக்கிறோம். அப்படியிருக்க இலக்கியச்சூழலில் புதிதாக ஒரு அறிமுகம் அல்லது அடையாளம்  எதுவென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.



02. வாசிப்பு என்பது எப்படி உங்களுக்கு அறிமுகமானது? பல விசயங்களை வாசிக்க கிடைத்திருக்கும் எனினும், இலக்கியம் சார்ந்து இயங்கும் ஒரு தேர்வை எப்படி அடைந்தீர்கள்?

இது அதிகமாக நேர்காணல்களில் மிகப்பெரிய எழுத்தாளர்கள் என சொல்லப்படக் கூடியவர்களை நோக்கிக் கேட்கப்படவேண்டிய கேள்வி.  என்னை நோக்கியதல்ல. இந்தக் கேள்வி கொஞ்சம் அதிகமாகவே எனக்குப் பயத்தை ஊட்டுகிறது. இது உண்மையில் என்னை நோக்கி எழுப்பக்கூடாத கேள்வி.

சின்னவயதிலிருந்தே அவரை வாசித்தேன் இவரை வாசித்தேன் என்று சொல்ல  எனக்கு  யாரும்  இல்லை.  எங்களது ஊரில் இருந்த ஒரு நூல் நிலையம், ஏன் இருந்தது எனத் தெரியாமல் இருந்தது.அங்கு மிகச் சிறியளவு புத்தகங்களே இருந்தன. அப்போது அதனை நாங்கள் எடுத்துப் போக விடமாட்டார்கள். அதற்கு அங்கு வாழ்ந்த  மிகப்பெரிய மனிதர்களது ரெக்கமண்டேசன் கேட்பார்கள். அப்படிக் கிடைத்த ஒரு ரெக்கமண்டேசனில்  போனபோது அவர்கள் என்னைப்பார்த்துவிட்டு தந்தவைகள் கொஞ்ச கண்ணதாசனின் புத்தகங்கள் மட்டுமே. அந்த வயசுக்கு அது இதமாகத்தான் இருந்தது. வனவாசம், மனவாசம், போய் வருகிறேன், மற்றும் கண்ணதாசன் கவிதைகள் என்பதையெல்லாம் அந்த வயதில் வாசித்தேன். கிட்டத்தட்ட கண்ணதாசனைப் பற்றி நான் பி.எச். டி செய்த தகுதிக்கு இப்போது இருக்கிறேன்.

இருக்கும்  மற்றய புத்தகங்களை நல்ல ரெக்கமண்டேசனில் எடுத்து நாம் வாசிக்கத் தொடங்கும்  ஒரு நிலையும் வயதும் வந்து சேர, சேர்ந்து போராட்டமும் வந்து சேர்ந்தது. அதன் பிறகு எங்கே புத்தகம் படித்தது தனியே "புதிய பூமி" மாதிரியான  விஜயகாந்த் படங்களும் இயக்கங்களது பத்திரிகைகள் சஞ்சிகைகள்தான் தஞ்சம். இலக்கியம் என்று ஊரில் இருக்கும்  வரை எதுவும் கைகளில் கிடைத்ததேயில்லை.
அதைவிட அப்போதைய காலங்கள், இராணுவத்தின் சோதனைச் சாவடிகளால் ஈழத்தின் தெருக்கள் மறிக்கப்பட்டிருந்த காலங்களாக இருந்தன.. பதின்ம வயதுகளிலிருந்த நாங்கள்  பக்கத்து ஊருக்கு வருடத்திற்கு ஒருமுறை கூட  பயணிப்பது அபூர்வம். எமது வயதையொத்த நண்பர்களுக்கிடையே கூட தொடர்பாடல்கள் அற்ற காலங்களாக இருந்தன அக்காலங்கள். பகிஸ்கரிப்புக்களாலும் ஹர்த்தால்களாலும் பாடசாலைக் கல்விகளைக் கூட நாங்கள் ஒழுங்காகக் கற்றதில்லை.

போராட்டம் தொடங்கப்பட்ட காலங்களில் ஏன் நாங்கள் மட்டும் பதின்ம வயதுகளில் இருந்தோம் என்று இப்போது நினைக்க நினைக்க சரியான பொறாமையாக இருக்கிறது. இயக்கக் கூட்டங்களில் பங்குபற்றியதைத் தவிர இலக்கியக் கூட்டங்கள் என்று ஒன்றில் கூட இலங்கையில் இருந்த காலத்தில் பங்கு பற்றியதில்லை. அது எமது கிராமங்களில் அறியப்படாத ஒன்று.

பின்னர் பாரீசில் நாங்கள் எக்ஸில் எனும் சஞ்சிகை ஒன்றை வெளிக் கொண்டு வந்ததை அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே புகலிடத்தில் ஏராளமான சஞ்சிகைகள் வந்திருந்த காலங்களாக அவை இருந்தன. ஆனால் பாரீசில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சபாலிங்கம் அவர்களது படுகொலையின் பின்னர் இலக்கியச் சூழலில் மிகப்பெரிய அமைதி நிலவியது. அந்தப் பயம் கலந்த அமைதியை மெல்லக் குலைத்து எக்ஸில் சஞ்சிகையைக் கொண்டுவந்தோம்.

எக்ஸில் சஞ்சிகையின் எழுத்துச் செயற்பாட்டுமுறை எனது எழுத்தை தீர்மானித்தது என்றே சொல்லுவேன். பலர் இன்றும் உச்சரிக்க மறுக்கும் ஒரு பெயராக எக்ஸில் சஞ்சிகை இருப்பதையிட்டு கொஞ்சம் சந்தோசமாகவே இருக்கிறது.

ஐரோப்பாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்த இலக்கியச் சந்திப்பும்  எனக்கு ஒரு முக்கிய புள்ளியே.  இலக்கியம் சார்ந்து இயங்கிய பல்வேறு ஜம்பவான்களை அங்கே சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாம் தர்க்கங்களை உள்ளேயும் வெளியேயும் நிகழ்த்தினோம்.

யுத்தத்திற்குள் அகப்பட்டுக் கிடந்த சிந்தனை முறையை இந்தத் தளம் தளர்த்தியது. இதற்குள் உள்ளே வராதவர்கள் மிக அதிகமானவர்கள் அவர்கள் புலம் பெயர்ந்திருந்த போதும் யுத்தத்தால் அல்லது யுத்தம் கட்டிய தேசியத்தால் சுற்றி வளைக்கப்பட்டே இருந்தார்கள். பல நண்பர்களுடன் நான் வெளியே இருந்தேன். சிலர் அந்தக்காலங்களில் மவுனமாகவும்  இருந்தார்கள்.

இல்லை மவுனம் என்ற சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்கள் அப்போது இருந்தன.

ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்தம் பற்றிய கதையாடல்களை யுத்தத்திற்கு எதிரான கதைகளை அல்லது அதன் மறுப்பைத் தெரியப்படுத்த, பதிவு செய்ய வேண்டிய தேவை எங்களுக்கு இருந்ததாகவே கருதினோம். அவற்றை கதைகளாகவும் கவிதைகளாகவும்  அல்லது வேறு ஒன்றாகவேனும் எழுதினோம்.

நான் எக்ஸில் இதழிலிருந்தே தீவிரமாக எழுத ஆரம்பித்தேன். எக்ஸில் இதழின் செயற்பாடுகள் பலரை எம்மிலிருந்து தனியே பிரித்தது. அவர்களிலிருந்து எம்மைத் தனித்தே ஒதுக்கியது. எக்ஸிலின் வரலாறு எங்கேனும் பதியப்படும் போது அவை குறித்து விரிவாகப் பேசமுடியும்.  உண்மையில் அதிலிருந்தே நான்  எனது எழுத்து முறையை கண்டடைந்தேன் என்றே நினைக்கிறேன். இலக்கியம் சார்ந்து இயங்கவேண்டிய தேவை என்று கருதி எழுதத் தொடங்கவில்லை. சமூகத்தின் ஓடுதிசையில் பயணிக்கமுடியாது அவதிப்பட்ட பல இடங்கள் அதன் சாத்தியத்தை எனக்குத் தந்தது. எனது எழுத்து எனக்குத் தனித்திருக்க, அல்லது தனித்து யோசிக்கத் தைரியம் தந்திருக்கிறது. அந்தத் தைரியம் தான் பல நண்பர்களை இன்றும் எனக்கு எதிரியாக்கி விட்டிருக்கிறது.


03. இலக்கியச் செயற்பாட்டை பலரும் பலவகைகளில் விபரிக்கிறார்கள். அது அவர்களுக்குரிய உரிமைதான். நீங்கள் எப்படி விபரிக்க விரும்புகிறீர்கள்.? பொழுதுபோக்கு சாதனமாக கருகிறார்கள்.. அரசியல் சாதனமாக கருதுகிறார்கள்.. புனைவு சார்ந்த அசாத்தியங்களை நிகழ்த்தும் செயற்பாடாக பாவிக்கிறார்கள்... இவைகளில் எது உங்களுடையது? அல்லது இவைகளிலிருந்து வேறுபட்ட வகையில் விபரிக்க விரும்புகிறீர்களா?

நான் கடந்து போகிற காலங்களையே மிக அதிகமாக எழுதுகிறேன். அதன் மீதான தாக்கங்களில் குலைபடுகிறேன். மிகஅதிகமான தருணங்கள் பழிதீர்ககும் சாதனமாக வந்துவிடுகிறது எனக்கு. அது ஒருவகைச் சந்தோசமாகவே இருக்கிறது. ஒட்டுமொத்த இலக்கியப் பரப்பிற்கும் இடைஞ்சலாக இருக்கும் ஒன்றை என் மனதளவில் இலகுவாகக் கடந்து போகிறேன். அவர்கள் இலகுவாகக் கடந்து போகும் ஒன்று எனக்கு இடைஞ்சலாக இருக்கிறது. இதில் நான் என்னைக் கண்டு தேடவேண்டியிருக்கிறது.

புனைவு சார்ந்து அசாத்தியங்களை நிகழ்த்த முற்படும் வேளைகளில் பலர் தடுக்குப்படுவதை நம் கண்முன்னால் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அசாத்தியங்கள் நாம் கண்டடையும் கதைகளில் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். தான் கடந்து போகாத கதைகளை வெறும் கட்டுக்கதைகளாகக் கேட்டு அசாத்தியத்தை மட்டுமே நிகழ்த்தும் கதைகள் வெறுமனே கதைகளாக இருந்துவிடுகின்றன. அதன் உயிர் வேறெங்கோ இருந்து விடுகிறது. அவற்றுக்குள் பல வேளைகளில் என்னால் நுழையமுடிவதில்லை.  அத்துமீறி நுழைய நான் கஸ்டப்படுவதும் இல்லை.

இலக்கியம் என்பது பொழுது போக்கு சாதனம் என்பவர்கள் பற்றி நான் அக்கறை கொள்வதில்லை. ஆனால் மறுபக்கம் அது ஒரு அரசியல் சாதனம் என்ற கருத்தும்  உதவாத ஒரு கருத்து. வெறுமனே  பாராளுமன்ற கட்சி இயக்க அரசியல் அல்லது தேசிய அரசியல் மட்டுமே அரசியல் என்று வரையறுப்பது மடமை. நீங்கள் கூட என்னை அண்மையில் அரசியல் கவிஞன் என்று அடையாளமிட்டிருந்தீர்கள். அதனை வாசித்துச் சிரிக்கத்தான் முடிந்தது. அரசியல் கவிதையில் கவிதைக்கு என்ன வேலை? என்றுதான் உங்களிடம் கேட்கமுடியும். 

தெருநீளம் நடந்து கொண்டிருந்த யுத்தம் பற்றி எழுதாமல் நடந்து முடித்த தெருவைப்பற்றி எழுத முடியாது. யுத்தம் நடந்து கொண்டிருந்த தெருவில் எந்தக்கரையால் நீ நடந்தாய் என்பதை உனது எழுத்தே தீர்மானிக்கும். அழித்துவிடமுடியாதவை எழுத்துக்கள். அதனால் தான் அந்த நம்பிக்கையில்தான் இலக்கியம் இன்னும் எமக்குத் தேவையாய் இருக்கிறது. அதன் காலடிகளைக் கட்டிப்பிடித்து நடக்க வேண்டியிருக்கிறது  எங்களுக்கும்.

நமது தெருக்களில் நடைபெற்ற  யுத்தம்  அழுகிய யுத்தம். ஆனாலும் அது மிக அழகானது என்று சிலவேளைகளில் நினைப்பேன். நம்மிடையே எழுதிக்கொண்டு இருந்த பலரை இப்போது எழுதவிடாமலே பண்ணிவிட்டது அது. இந்த யுத்தத்திற்குள் எழுதிய அதிகமானோரை யாரென்றும் அவர்களது உண்மையான முகம் எதுவென்றும் அவர்களது எழுத்து காட்டிக் கொடுத்து விட்டது. 

பலருடைய இலக்கிய ரயில் தடம்புரண்ட தண்டவாளத்தடி இந்த இறுதி யுத்தம். அந்த வகையில் இந்த யுத்தம் அழகிய யுத்தம் தான்.
ஒரு மனிதனின் நிர்வாணத்தை அந்த எழுத்து தாங்கி நிற்கும். அந்த வகையில் இலக்கியம் சமூகத்தின் நிர்வாணத்தைத் தரிசிக்க உதவும் கருவி. 

எனது நிர்வாணத்தை நீங்கள் எனது எழுத்துக்கள் எங்கும் காணலாம்.  ஒரு இலக்கியம்  காலாகாலத்திற்கும் கொண்டாடப்பட வேண்டுமெனில் அது தனது ஆடைகளை அவிழ்த்தெறிந்திருக்க வேண்டும். அடையாளங்களைத் துறந்திருக்க வேண்டும். அற்புதங்கள் தானாக நிகழ்ந்திருக்க வேண்டும். நிகழ்த்தப்பட்ட அற்புதங்களிலோ நிகழ வைக்கப்பட்ட அசாத்தியங்களிலோ இலக்கியம் தன்னைத் தரித்துக் கொள்வதில்லை.

05. உண்மையில் புலப்பெயர்வு துயரமானதாகவேதான் இருக்கிறதா? ஆரம்பகாலத்திற்கும், இன்று அந்த நாடுகளின் பிரஜையாகவே ஆகிட்ட நிலையிலும் புலப்பெயர்வு குறித்து உங்கள் அவதானங்கள் என்னவகையானது,?

இல்லை.

அப்படிச் சொல்பவர்கள் மிகப்பெரிய பொய்யர்கள். அதனை இன்னும் புலம் பெயர்வதற்காக ஈழத்தில் தயாராக இருப்பவர்களைக் கேளுங்கள். இதற்கான பதிலை அவர்கள் என்னை விட மிக அழகாகச் சொல்வார்கள். அத்தனை துயரமாக இருந்தால் இன்று யுத்தமற்ற காலத்திலும் எப்படியாவது புலம்பெயர்ந்துவிடவேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இங்கிருப்பவர்கள் துயரமென்று சொல்வது எதனை என்றுமுதலில் பார்க்க வேண்டும்?
உண்மையில் ஆரம்ப காலங்களில் வந்து சேரும் வழிகள் மிக மிகத் துயரமானவையாக இருந்தன. அத்தனை கொடிய துயரங்களையும் வந்து சேர்வதற்காகத் தாங்க வேண்டித்தான் இருந்தது. 

அந்தத் தாங்கமுடியாத துயரங்களைத் தாண்டி இங்கு வந்து சேர்ந்து விட்டு, பின்பு இங்கும் துயரம் என்றால்.? 

இத்தனை  நாடுகளில் வந்து சேர்ந்திருப்பவர்கள் பல்வேறுவிதமான காரணங்களுக்காக வந்தவர்களாக இருக்கலாம். பல்வேறு வழிகளில் வந்தவர்களாக இருக்கலாம்.  துயரம் என்பது புலம்பெயர்தலில் எல்லோருக்கும் பொதுவான ஒரு கருத்துத்தான்.  ஆனால் புலம்பெயர்ந்த தேசங்களில் இருப்பவை கொடுமையானது என்று சொல்லி  இந்தத் துயரத்தை கொடிதூக்கிக் காட்டியவர்கள் புலம் பெயர் இலக்கியக் கனவான்கள். 

ஆம் அவர்கள் கனவான்களே. கனவான்களின் பொய்களை உலகம் கண்டுபிடிக்கக் கனகாலம் செல்லும்.

நமது சூழலில் "புலம் பெயர்தல்" என்ற சொல் ஈழத்திலிருந்து இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவரையே தற்போது அதிகமாகக் குறித்து நிற்கிறது. உண்மை அதுவல்ல. "ஈழத்திலிருந்து முதன்முதலில் புலம் பெயர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து உயர்சாதி என்று சொல்லப்படுபவர்களால் சாதியில் தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவமே" என்று தங்கவடிவேல் மாஸ்டர் ஒரு இடத்தில் சொல்லியிருப்பார். 

ஈழத்தவர்களது புலப்பெயர்வு என்பது பலகாலங்களில் பல்வேறு தளங்களில் நடைபெற்றிருக்கிறது. அவைபற்றி அதிகம் யாரும் பேசவில்லை.

முக்கியமாக வடபகுதியிலிருந்து நான்கு மணி நேரத்திற்குள் விரட்டியடிக்கப்பட்ட வடக்குவாழ் முஸ்லீம்களது புலம்பெயர்வு குறித்தும் அவர்களது நெடுந்துயரம் குறித்தும்  எங்காவது ஈழத்தமிழிலக்கியம் கொடிதூக்கிக் காட்டியிருக்கிறதா?

ஆனால் இவற்றையெல்லாம்  ஒரு பொருட்டாகவே மதிக்காத ஒரு பகுதியினர் ஈழத்திலிருந்து வெளிநாடுகளுக்குத் தாம் மட்டும் புலம் பெயர்ந்ததையே  முதன்மையானதாகக் காட்டி  "புலம் பெயர்வு" என்ற அடையாளத்தை தனக்கான  துயரமாகப் பொதுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்தத் துயரத்தை மட்டுமே புலம்பெயர் இலக்கியம் என்றும் அதுதான் புலம்பெயர் அவலம் என்றும்  இலக்கிம் எங்கிலும் அடையாளப்படுத்தும் கனவான்கள் பொய்யர்கள் இல்லையா?

அடுத்து, புலம்பெயர்ந்து வந்த எல்லோரையும் போலவே எனக்கும் புலம்பெயர்வுப் பயணம் மிகமிகத்துயரமானதாகத்தான் இருந்தது. அந்த நாடுகாண் பயணத்தில் கண்ட அனுபவங்கள் பார்த்த நாடுகள் என்பவற்றை நினைக்க இப்போது சுவாரிஸ்யமாக இருக்கிறது. அப்பொழுது அது வலிகள் நிறைந்தது. கள்ளப் பாஸ்போட்டிலும் பாஸ்போட் இல்லாமலும் தரைஇறங்கிய தலைநகர்கள் உலகப்பிரபல்யமானவை என்பது கூட அப்போது தெரியவில்லை. 

இப்போது நினைக்க பிரமிப்பாக இருக்கிறது. அறிந்து வந்த இடங்களல்ல இவை என்றாலும் மிகச்சந்தோசமாகவே இருக்கிறது. கனடா எனது இரண்டாவது இடப்பெயர்வு.

06. புலம் பெயர் தமிழ் இலக்கியம் என்பதை உங்கள் பார்வையில் வியாக்கியானம் செய்வதாக இருந்தால் எப்படி முன்வைப்பீர்கள்?

இந்தப் புலம்பெயர் இலக்கியம் என்று அடையாளம் இடப்படுகின்ற இலக்கியங்கள் வெறும் கவலைகொள் இலக்கியங்களாக மட்டுமே குறுகி நின்றவை. இவை மேற்சொன்ன கனவான்கள் துயரம் என்று கொண்டாடிய இலக்கியங்கள்.

இங்கிருந்து எழுதும் எழுத்துக்களை எல்லாம் ஒன்று அல்ல என்று சொல்லி ஆரம்பத்தில் சிலர் புலம் பெயர் இலக்கியம் என்பது வேறு புகலிட இலக்கியம் வேறு என்று இதனை இரண்டுபிரிவாக பிரித்தார்கள். இது  எனது வேலையல்ல. அது  அந்த ஆய்வாளர்களது வேலை.

ஆனால்  இவர்கள் குறிப்பிடும்  இந்த இரண்டு வகை இலக்கியங்களில் துயரம் என்று எதனை அறிவிக்கிறார்கள் என்பதனை நாங்கள் கண்டு கொள்ள வேண்டும். உண்மையில் யுத்தம் கோரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு பிரதேசத்திலிருந்து தப்பிவந்தவர்கள் தாங்கள் உயிரோடு இருப்பது என்பதே முதலில் சந்தோசமானது தானே. அதில் எங்கிருந்து துயரம் வரும்?

ஆனால் இன்று வரையான பெரும்பான்மைப் புலம்பெயர் இலக்கியங்கள் என்ற வகைப்படுத்தலில் இங்குள்ள குளிர்காலநிலைகளை. இங்குள்ள வேலைப் பழுக்களை, புதிய பிரதேசத்தின்  புரியாத மொழியின் அறிதலை.  உறவுகளின் பிரிவை துயரம் என்று தொடர்ந்து எழுதினார்கள் இன்னும் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள்..

இவற்றை வாசிக்கும் போது உங்களுக்கு இதனை விடத் துயரங்களை நமது தேசத்தில் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களை இவர்கள் கதைகளாகக் கூடக் கேட்டதில்லையோ என்று சந்தேகம் வரும். இங்கு ஒரு ரெஸ்ரோறண்டில் வேலை செய்யும் ஒருவர் தனது வேலையின் சுமையைக்  கவிதையாக அழுது அழுது தொடர்ந்து எழுதும் போது யாழ்ப்பாணத்திலோ அல்லது முறிகண்டியிலோ அல்லது கொழும்புச் செட்டித் தெருவிலோ கொத்தடிமையாக சோத்துக்கடையில் வேலை செய்யும் சிறுவர்கள் பற்றிக் கேள்விப்பட்டே இருக்கமாட்டாரா என்று எண்ணத்தோன்றும்.

அதனால் தான், வெளிநாட்டிற்கு வந்து சேர்ந்த இலக்கியவாதி ஒருவர் அலுவலகம் கூட்டும் வேலை ஒன்று செய்யவேண்டி வந்தபொழுது மிகவும் மனமுடைந்து போய் தனக்கு துடைப்பான் என்று பெயரிட்டு சோகக் கவிதை எழுதவேண்டி வந்தது. இயல்பான வாழ்வில் தம்மை இணைத்துப் பார்க்க முடியாத இலக்கியக் கொம்பன்களால் வந்த துன்பம் இது.

இதேபோல்தான் கனடாவின் பனியைப் பற்றியே அழுதழுது எழுதும் ஒருவர் ஒருபொழுதும் மற்றய தேசங்களது காலநிலைகளைப்பற்றி அறியாதவராக ஒருபொழுதும் அதனை உணர்ந்து கொள்ள முடியாதவராகத்தானே இருக்கவேண்டும்.

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக இங்கு வாழும் ஒருவர்  மற்றய எல்லா வழிகளிலும் முடியுமானவரை இங்கு காலூன்றிக் கொண்டு மூன்றாவது தலைமுறையும்  கண்டுவிட்டபின்னும் இலக்கியத்தில் மட்டும் புலம்பிப் புலம்பித் துயரக் கவிதையாய் எழுதிக் கொண்டிருப்பதை எப்படி விளங்கிக் கொள்வது?   அதுதானே  பொய்யின் உச்சம்.  

இந்தப் பொய்யைக் கொண்டாடுவதற்கு இருக்கின்ற ஒரு கூட்டத்தையே நம்பி இவர்கள் கடைசிவரை எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் தொடர்ந்து இப்படியானவர்களை புகழ்ந்தபடியே இருந்தார்கள்.

இப்பொழுது இந்தப் புலம்பெயர் இலக்கியத்திற்கு வந்த இன்னொரு கேடு ஒன்றையும் உங்களுக்குச் சொல்லவேண்டும்.

கனடாவில் அரச பாடசாலைகளில் தமிழ்க் கல்வி கற்பிக்கும் பாடப்புத்தகத்தில் புலம்பெயர் இலக்கியம் என்று வருகின்ற ஒரு பகுதியில், புலம்பெயர் இலக்கியத்தை அதன் துயரத்தை உன்னதமாகப் பதிவுசெய்த எழுத்தாளர்களில் மிகமுக்கியமானவர்  அ.முத்துலிங்கம் என்று இங்குள்ள தமிழ்க் குழந்தைகளுக்கு எழுதிக் கொடுத்துப் படிப்பிக்கப்படுகிறது. 

இதுவும் புலம்பெயர் இலக்கியம் என்ற அடையாளத்தின் மிகப்பெரிய அவலம்.   உண்மையில் இவர்கள் சொல்லுகின்ற அந்தத் துயரத்தைக் கூட அ.முத்துலிங்கம் அவர்கள்  அவ்வளவு ஆழமாகப் பதிவு செய்தது கிடையாது. அது அவருக்குத் தெரியாது. அதற்கும் பல விண்ணர்கள் ஏற்கனவே இங்கு இருக்கிறார்கள்.

ஆனாலும் இதைத்தாண்டி இங்கிருந்து பல இலக்கிய வெளிப்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக மிகுந்த தாக்கத்தைச் செலுத்துவதாக வெளிவந்திருக்கின்றன. என்னைப் பொறுத்தளவில்  ஈழத்தேசிய விடுதலைப் போராட்டம் என்ற மிகப்பெரிய அடையாளத்தை அது வெளிக்காட்டிய அராஜகத்தை மறுதலித்து ஆய்வுகளாகவும் புனைவிலக்கியங்களாகவும் ஒரு பெரிய வெளிப்பாடும் பதிவும் கிடைத்தது இந்தப் புலப்பெயர்வினாலே என்பதில் பெரிய சந்தோசம். 

இதனை புலம்பெயர்ந்த பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு தரப்பினர் செய்தனர். ஈழத்திலிருந்து செய்யமுடியாத செயல் அது.

மாறிவருகின்ற உலக நடைமுறைகளாலும் மறுமலர்ச்சிகளாலும் இவர்கள் குறிப்பிடுகின்ற புலம்பெயர் துயரம் காணாமற் போய் நீண்ட நாட்களாகிவிட்டது. அதனை இவர்கள் இன்னும் கண்டடையவில்லை. அதனை அழுதழுது இன்னும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.



07. அனைத்துவகையான அதிகாரங்களுக்கும் எதிரே ஒலிக்கும் குரலை ஒரு கலைஞன் சாய்வுகொள்ள வேண்டும். அல்லது அதிகாரச் சக்திகளுக்கு ஆதராவான குரலையாவது எழுப்பாமல் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான், ஆனால், நீங்கள் தமிழ் அரசியல் மய்யங்களின் அதிகாரங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக சிறியளவிலேனும் இயங்கியவர் என்ற வகையில் உங்கள் அனுபவங்களை உதாரணங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?

இந்தக் கேள்விக்கான பதிலை எங்கு வைத்துத் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. அரசுகளும் மதங்களும் நமக்குக் கண்முன்னே மிகப்பெரிய அதிகார மையங்களாக விரிந்து போய்க் கிடக்கும் போது அதற்குள்ளாகப் பரவிக்கிடக்கும் சிறிய சிறிய மையங்களின் சிக்கலான அதிகாரங்களையும்  உருவிவிட அல்லது ஆட்டங்காணவைக்க கலைஞன் தன்னைக் காவுகொடுக்க வேண்டும். 

தன்னைக் காவு கொடுப்பதினூடாக சமூகத்தின் பரிதாபத்துக்குரிய பக்கங்களில் கலைஞன் இருக்கவேண்டும் என நான் நினைப்பவன். அதனால்தான்  இந்த அதிகார மய்யங்களைக் காவிநின்ற நமது கலைஞர்கள் குறித்த கோபம் எனக்குப் பெரிதாகவே இருக்கிறது.

நமக்குக் கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று இந்த யுத்தம். ஈழயுத்தம் நம்முடைய பல கலைஞர்களை கலைஞர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. இறுதிக்காலத்தில் ஈழயுத்தத்தை அதிகமாகக் கலைஞர்களே வழிநடாத்தினார்கள்.

கடைசியில் இவர்கள் போராட்டம் என்ற பெயரில் நடைபெற்ற ஒரு கொடிய யுத்தத்தை நமது குழந்தைகளைக் "கொன்று" நடாத்த வழிதேடிக் கொடுத்தார்கள். நமது குழந்தைகளைக் கொன்று எப்படியாவது ஒரு தேசம் பெற்றுவிடவேண்டும் என்பது அவர்களது கனவுகளில் ஒன்றாக இருந்தது. அந்தக் கனவை உடைத்துவிட

"பிடிமண்ணில் நிறைகிறது
மீசை முளைக்காத புதைகுழிகள்.
அள்ளி எடுக்கும் பிடி மண்ணில்
அவர்கள் தேசம் குறைகிறது."

என்று எழுதி எனக்கு ஆற வேண்டியிருந்தது. எனக்குக் கிடைத்த இடங்களில் எல்லாம் முடியுமானவரை இதனைப் பதிவு செய்தேன் என்றே நினைக்கிறேன். "எக்ஸில்" இதழ் அதற்கான பல பதிவுகளை செய்தே இருக்கிறது. 

எக்ஸில் சஞ்சிகையில்  ஞானம், விஜி, அதீதா என பல நண்பர்களுடன் நானும் சேர்ந்து இயங்கினேன் ஈழ அரசியலிலும் ஈழ இலக்கியத்திலும் தேசியம் சாதீயம் என்ற நஞ்சுகள் எப்படி ஊறியிருந்தது என்று உடைத்துக் காட்ட வேண்டிய தேவை எமக்கிருந்தது.  இலக்கியச் செயற்பாடுகள் எல்லாம் தேசிய ஆசையூட்டப்பட்ட காலங்களில் எமக்கு அவை நஞ்சூறியவை என்று எழுதிக்காட்ட வேண்டியிருந்தது. அதனால் தான் ஈழ இலக்கியத்தில் நாம் கொண்டாடிய எத்தனையோ  நபர்களை இம்மை மறுமையற்றுக் கேள்வி கேட்கவேண்டியிருந்தது.

அந்தக்  கேள்விகளில் உவப்பற்றுப் போனவர்கள் எங்களிடம் இருந்து அகன்றார்கள். அதன் தொடர்ச்சிதான் எக்ஸில் - உயிர்நிழல் என இரண்டாக உடைந்தது. எக்ஸிலின் நான்காவது இதழ் இரண்டு பிரிவுகளாக வெளியானதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.  நாம் வெளியிட்ட எக்ஸில்  இதழ் 4இன் முன் அட்டையில் அதனைத் தெளிவாக எழுதியிருப்போம். அந்த எழுத்து இன்றுவரை பலருடன் இருந்த உறவை அறுத்தும் விட்டிருக்கிறது. எக்ஸில் வெளிவந்த காலங்களின் பதிவினை எழுதமுடியுமெனில் அது இதற்கொரு சிறந்த பதிலாக அமையும்.

அடுத்து கனடாவில் நானும் அதீதாவும் இணைந்து வெளியிட்ட "மற்றது" என்ற சஞ்சிகையில்  யாழ்மையவாதத்தின் செருக்குகளை முடிந்தளவுக்குப் பதிவு செய்தோம். இலக்கியத்திலும் சரி அரசியலிலும் சரி எப்படி "யாழ்" என்ற பிரதேசவாதம் தலை தூக்கி நின்றது. அது எப்படி நுண்ணியதளங்களையும் காவு கொண்டது என்று பதிவு செய்தோம். என்னமோ தெரியவில்லை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் "யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது" என்ற யாழ் நகரின் தலைவாசல் வாசகம் எனக்கு ஒருபக்கம் அச்சத்தையே ஊட்டிக்கொண்டிருந்தது.

நாம் நம்மைச் சுற்றியிருந்த அதிகாரமய்யங்களுக்கு எதிராக  எழுதிக் கொண்டிருந்த அதே நேரம் அந்த மய்யங்களை நஞ்சூட்டப்பட்ட தேசியத்தை மொத்த ஈழத்தமிழினத்தின் தேசியமாகக் கட்டமுனைந்த கதையை அதனை மவுனமாக ஏற்றுக் கொண்டு அல்லது கேள்வியேயற்று கள்ளமவுனம் சாதித்துக் கொண்டிருந்த நமது இலக்கியப் பெருந்தகைகளுக்கு எதிராகவும் எழுதவேண்டியிருந்தது. அப்படி எழுதும் போது அந்த இலக்கியச் சூழல் உள்ளார இரண்டு கன்னைகளாயிருந்ததை நான் உணர்ந்தேன்.

இதில் ஒரு முக்கியமான விடையத்தைச் சொல்லவேண்டும். உலகத்தமிழ் இலக்கியங்களின் அடையாளமாக  2000ம் ஆண்டில் காலச்சுவடு குழுவினர் தமிழினி2000 என்று சொல்லி ஒன்றை நடாத்தியதை அறிந்திருப்பீர்கள். புலம்பெயர்ந்திருந்த நாடுகளில் உள்ள அனைவரும்  கவிஞர் சேரனுக்கூடாக அந்த “மெகா லிட்றேட்சர் பனர்” க்குள் அள்ளுப்பட்டபோது  இங்கு அதனை நிராகரித்து எதிர்த்து எழுதியவர்கள் எக்ஸில் சஞ்சிகையினரே.  

தமிழினி2000 இன் மீதான எதிர் விமர்சனங்களை  தமிழகத்திலிருந்து தெரிவித்தவர்கள்  நிறப்பிரிகையினர். 

அந்த தமிழினி2000இற்கு  ஈழத்திலிருந்து போய்க் கலந்து கொண்டு அவமானப்பட்ட பலரை நான் பிற்காலத்தில் சந்தித்திருக்கிறேன்.

அனைத்துவகையான அதிகாரங்களுக்கும் எதிரே ஒலிக்கும் குரலை ஒரு கலைஞன் சாய்வுகொள்ள வேண்டும். அல்லது அதிகாரச் சக்திகளுக்கு ஆதராவான குரலையாவது எழுப்பாமல் இருக்க வேண்டும் என்பது உண்மைதான். நமது ஈழத்தமிழ் இலக்கியச் சூழலில் இப்படியானவர்களை நீங்கள் விரல் லிட்டு எண்ணிவிடும் நிலைதானே இருக்கிறது. எல்லாச் சாக்கடையும் தாண்டி கடைசியில் தேசிய சாக்கடையில் விழுந்து கொண்ட பலர் இருக்கிறார்கள்.

ஒருகாலத்தில் ஈழச்சாதீயம் பற்றியும் ஈழத்தில் வாழும் முஸ்லீம் மக்களது வாழ்வு குறித்தும் மிகத் தீவிரமாக ஆய்வுகளை எழுதிய நமது கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் புலிகளின் அழுகிய தேசியத்திற்காக இறுதிக்காலத்தில் தடம்புரண்டார். அவருடைய எழுத்துக்களின் கருத்துக்களின் குருட்டுத்தன்மை குறித்து நாம் எக்ஸிலில் எழுதினோம். அந்தக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த நந்தன் இதழுக்கு அவர் ஒரு செவ்வியை வழங்கியிருந்தார். அதில் அதுவரை அவர்கொண்டிருந்த கருத்துக்களுக்கு எதிராக அவரே பேசியிருந்தார்.

உண்மையில் இந்தக் கருத்து கவிஞர் ஜெயபாலன் அவர்களது கருத்தாக மட்டும் அப்போது இருக்கவில்லை. பல இலக்கியவாதிகளது கருத்தாகவும் தான் இருந்தது அது. அதனை நாங்கள் மறுத்து எழுதியது பலருக்கு அப்போது ரசிக்கும்படியாக  இருக்கவில்லைத்தான்.

தேசிய மய்ய அரசியலும் அதன் சாய்வு நிலையும் ஈழத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சரிவு நிலையைக் கொடுத்தது. விட்ட தவறுகளைத் தெரிந்த பின்னும் கூட  இதற்குள் வாழ்ந்த பல கலைஞர்களுக்கு இன்னும்தானே அதற்கு ஞாயம் தெண்டவேண்டியிருக்கிறது. ஒட்டாத ஞாயம் ஒருபோதும் விறைக்காது.

08. இலக்கிய விமர்சகர்களும், இலக்கிய அதிகார மய்யங்களும் கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் முற்றிலும் வேறானவர்களையே தேர்வு செய்து கொண்டாடிக்கொண்டிருக்கையில் - உங்களைப்போன்ற ஒரு சிறு குழுவினர் தமிழ் அரசியல் அதிகாரங்களுக்கெதிராக செயற்பட்டதனால்தான் கவனிக்கப்படாமல் போனீர்கள் என ஒரு கருத்தை முன்வைத்தால் - உங்கள் பதில் எப்படியானதாக இருக்கும்?


யாரையும் கவனப்படுத்தும் சூழலுக்காக  மட்டும் நினைத்து நம்மில் பலர் ஒருபொழுதும் எழுதியதில்லை.  இலக்கிய அதிகார மய்யங்கள் என்று நீங்கள் குறிப்பிடுபவர்கள் அடையாளப்படுத்தும் பெயர்களுக்குள் நம்மவர்களது பெயர்கள் வந்திவிடாதது மிக முக்கியமான செயல் எனக் கருதுகிறேன். என்றாலும் அவர்கள் நம்மை உற்று நோக்கிக் கொண்டேயிருந்தார்கள். 

நாங்கள் அவர்களில் பலருக்கு இடைஞ்சலாக இருந்தோம். 
அவர்களின் உரையாடல்களில் எங்கள் பெயர்கள் தவறியும் உச்சரிக்கப்படக் கூடாத துரோகிகளது பெயர்களாக இருந்தன.  

அந்தத் துரோகத்தை நாங்கள் எங்களுக்குள்  வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தோம். அவர்கள் எங்களைப் போன்றவர்களைத் தேர்வு செய்து கொண்டாடாததையிட்டு நாங்கள்  பெருமிதம் கொள்ள வேண்டுமல்லவா?

ஆக, உங்கள் கேள்விக்கு என்னைக் குறித்துச் சொல்ல வேண்டுமெனில், ஒரு பதில்தான் இலகுவாகச் சொல்லமுடியும்.

யாரின் கவனப்படுத்தலும் தேவையில்லை எனக்கு. எந்த அங்கீகாரங்களையும்  கோரி நிற்காத எழுத்துக்களாகவே அது எப்போதும் இருக்கும். 

ஏனெனில் எனது எழுத்துக்கள் அதிகமானவை பழிதீர்க்கப்படும் எழுத்துக்கள். அதனைத் தொடக்கத்திலிருந்தே எல்லோராலும் உணர்ந்து கொள்ளமுடியும். 

யாரும் பழியை விரும்புபவர்களில்லையே. காலத்தில் இருக்கும் அந்தக்கணக்கு.

கழுத்தில் மட்டை  கட்டிவிட்ட ஆடுகளையோ அல்லது அந்த மட்டையை ஆடுகளுக்குக் கட்டிவிடுபவர்களையோ என்னால் இரசிக்கமுடிவதில்லை.

09. தமிழ் ஆயுதப்போராட்ட அரசியலையும், மிதவாத அரசியல் போராட்டத்தையும் முன்வைத்து - அவைகளின் பங்களிப்புக்களையும், இழப்புக்களையும் எப்படி கணிப்பிடுவீர்கள்? அதற்கு இலக்கியத்தின் பங்கு எந்தவகையானது?

இழப்புக்களைக் கணக்கிடக்கூடியவகையிலா இரண்டு போராட்டமும் விட்டுச் சென்றிருக்கிறது. உளவியல் ரீதியாக மூன்று நான்கு பரம்பரைகளை அது நேரடியாகவே அழித்துவிட்டுச் சென்றிருக்கிறது.

மிதவாத அரசியற் போராட்டத்தின் அடுத்த குழந்தைதானே ஆயுதப் போராட்டம். யார் வளர்த்தெடுத்தார்களோ அவர்களையே குறிபார்த்துச் சுட்டகதையை நமது அரசியற் போர் நமக்குச் சொன்னது. ஏமாற்றுவித்தையில் பகடை உருட்டும் விதத்தில் இரண்டும் ஒன்றையொன்று விஞ்சியது இல்லை. 

இரண்டும் ஈழத்தமிழ் இனத்தைக் கூறுபோட்டுக் கொலைசெய்யப் பின் நின்றதில்லை. ஒன்றிலிருந்து ஒன்று வேகத்தில் தான் வித்தியாசப்பட்டது. செயற்பாடு ஒன்றுதான்.

இன்னொன்று மிதவாதக்கட்சிகள் என்று நாம் அடையாளப்படுத்தும் அரசியற்கட்சிகள் உண்மையில் மிதவாதப் போக்குள்ள கட்சிகளாக இருந்தனவா? அவற்றை அப்படி அழைக்கலாமா?

இல்லையே.

வெறும் இனவாதத்தைப் பேசிய கட்சிகளாகவும் குறுக்கு வழியில் அரசியல் இலாபங்களைக் கண்டடைய எந்த அராஜகத்தையும் செய்யத்துணிந்த கட்சிகளாகத்தானே அவையிருந்தன. அந்த அறிவீனம்தானே இன்றுவரையுமான தொடரோட்டம்.

இந்த இரண்டு காலத்திலும் வாழ்ந்தவர்களாக  இப்போதுள்ள பலர் இருக்கிறார்கள். எண்ணற்ற கதைகள் எம்மிடம் இருக்கின்றன. எங்களில் பலர் தமிழர்விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகாலங்களிலும் அது நடாத்திய சத்தியாக்கிரக போராட்டங்கிளிலும் பின்னர் இயக்கங்களின் காலங்களிலும் இலங்கை இராணுவத்தின் காலங்களிலும் இந்திய இராணுவத்தின் காலங்களிலும் போர்க்காலத்திலும் சமாதான காலத்திலும் இறுதியுத்த காலத்திலும் வாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள். 

அவர்களிடம் இருக்கும் பல அரிய கதைகள் இலக்கியத்தில் இன்னும் நிறைவாக எழுதப்படவேயில்லை. எழுத வேண்டியவர்கள் வேறு ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதற்குள் இருந்து தம்மை மறைத்துவிடத் துடிக்கிறார்கள்.

ஆனால்  கதைகள் ஒவ்வொருவர் மரணத்திலும் அழிந்து கொண்டிருக்கிறது என்பதனை  அவர்கள் உணரவேயில்லை. 

இயக்கங்களின் கதைகள் இலக்கியத்தில் பதிவு செய்த அளவுக்கு நீங்கள் சொல்லுகின்ற  மிதவாதக்கட்சிகளது போராட்டக்கதைகள் அதற்குள்  சிக்கிய மக்களது வாழ்வு என்று இலக்கியத்தில் பதிவுசெய்ப்பட்டது குறைவு என்றே நான் நினைக்கிறேன். இன்று அதிகம் எழுதிக் கொண்டிருக்கிற இளைய தலைமுறையினருக்கு அவை அனுபவங்களாக இருந்ததில்லை. வெறுமனே கேள்விப்பட்ட கதைகளாகத்தான் இருந்திருக்கின்றன.

கணக்குப் பிழைக்கிறது என்று தெரிந்த பின்னரும் எண்ணையை ஊற்றி ஊற்றி நெருப்பைப் பற்றவைத்துக் கொண்டிருந்த பல எழுத்தாளர்கள் கணக்கு முடிந்த கையோடு இரவோடு இரவாக புனைவிலக்கியத்திற்குள் புகுந்து கொண்டு விட்டார்கள். 

இப்போது தாம் எழுதும் கதைகளை வெறுமனே புலி எதிர்ப்பு புலி ஆதரவு என்று படிக்காதீர்கள் அதில் கதை மாந்தர்களது மற்றய வாழ்வை அது பிரதிபலிக்கும் அதீதமான மற்றய விடையங்களைக் கூர்ந்து கவனியுங்கள் என்று எங்களிடம் கோரி நிற்கிறார்கள். 

வியப்பாக இருக்கிறது.  பேரழிவின் பின்பான நமது துயரங்களுக்கு மட்டுமில்லை, மீளெழுதலிற்கும் வேறுவகையான புதிய வடிவங்களையே நாம் தேடவேண்டியிருக்கிறதெனச் சொல்லிக் கொள்கிறார்கள். 

அந்தப் பேரழிவைத் தாமே முன்நின்று ஒருபக்கத்தில் வழிநடாத்தினார்கள் என்பதையே மறந்து விட்டார்கள். 

அவர்கள் மறந்து விடுவது போன்று ஒருநாளில் என்னால் பல விடையங்களை மறக்கமுடியவில்லை.

உண்மையில் 2009 இல் புலிகளின் அழிவுக்குப் பின்னர் இரவோடிரவாக மதம் மாறியவர்களைப்போல் அவரஅவசரமாக ஈழத்தமிழர்களது கதைகளை எழுதுபவர்கள் மீது எனக்கு  ஈர்ப்பு இன்னமும் வரவில்லை.

ஆனாலும்  பாதுகாக்க முடியாத பல கதைகள் அவர்களிடம் இருக்கின்றன. இந்த அவசரங்கள் தாண்டி காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு இலக்கியப்பிரதி உருவாகும். அதற்கு ஒரு பெரிய விசாலமான மனப்பக்குவம் தேவை. அப்படியான ஒரு பிரதியின் தேவை இப்போது தேவையற்றே கிடக்கிறது. புனைவுகளின் அசாத்தியத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நிகழ்த்தப்படும் சாகசங்களினால் அது சாத்தியப்படாது போய்க் கொண்டேயிருக்கிறது.



10. இன்று ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்திருக்கிறது. சுமார் 40 வருட உழைப்பும், எண்ணற்ற உயிர்கள், சொத்துக்கள் போன்றவற்றின் இழப்பும் ஒரு சமூகத்திற்கு பாரிய நெருக்கடியைத் தரக்கூடியது. தமிழ் மொழி வெளியின் இந்த பின்னடைவு எப்படியானது? தவறு எங்கே நிகழ்ந்தது? அல்லது வெல்ல முடியாது என்று தெரிந்த ஒரு போரை நிகழ்தியதாக கருத முடியுமாக இருக்குமா?

றியாஸ்... நடைபெற்றது போராட்டம் என்ற வகைக்குள் ஒரு போதும் வரையறுக்கமுடியாதது. கடைசிக்காலங்களில் நமது தேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது போராட்டமல்ல யுத்தம் என்று திரும்பவும் சொல்லிக் கொள்கிறேன். இதற்குள் எங்கே தமிழ் மொழி வெளி இருக்கிறது? அதற்குள் பின்னடைவு என்பது இப்போது மட்டும் வந்ததா? அது நீண்டகாலமாகப் பின்னடைந்தே இருந்து வந்திருக்கிறது.

இதுவரை காலமும் நடைபெற்ற ஈழ யுத்தத்தில் சில தடவைகள் புலிகள் வென்றிருக்கிறார்கள். சில தடவைகள் அரச இராணுவம் வென்றிருக்கிறது. ஆனால் வெல்லமுடியாது எனத் தெரிந்தும் நடாத்திய இந்தப் போர் புலிகளுக்கு கடைசிப்  போராக இருந்தது. அது அசிங்கமான போராக இருந்தது. அது தமிழர்களதும் சிங்களவர்களதும் மூன்று பரம்பரையை  நேரடியாக அழித்துவிட்டுப் போயிருக்கிறது. இந்த யுத்தத்தில் இரண்டுபகுதியிலும் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் ஏழைகளும் குழந்தைகளும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தமிழ் என்ற துவேச அடையாளத்திலும்  அதில் துரோகி என்ற வகைப்படுத்தலிலும் மற்றவனின் குழந்தையைவைத்து தமிழீழம் பெற்றுவிட  நினைக்கும் மனநிலையிலுமே முதல்த் தவறு நடந்தது. ஆனால் அந்தத் தவறு கடைசிவரை நடந்தது.

வன்னியில்  புலிகள் தமது போராட்டம் மக்களின் போராட்டமாக எழுச்சி பெற்றிருக்கிறது என அடையாளப்படுத்தப்பட்ட காலத்தில் அங்கு மிக இறுக்கமான  பாஸ் நடைமுறையை அவர்கள் வைத்திருந்தார்கள்.  புலிகளின்  பிரதேசத்திலிருந்து  வெளியே செல்லவேண்டிய ஒருவர் தான் திரும்பி வருவதற்காக குடும்ப உறுப்பினர் ஒருவரை பிணை வைத்துவிட்டே செல்ல வேண்டிய சட்டத்தை புலிகள் வைத்திருந்தார்கள்.  

அந்தப் பிணையின் வலி எத்தனை குடும்பங்களை உருக்குலைத்தன என்று இன்றுவரை இலக்கியத்தில் ஆழமாக யாரும் பேசியது கிடையாது.  புலிகள் துணுக்காயில்  வைத்திருந்த கொடிய வதைமுகாம் குறித்து அதிலிருந்து தப்பிய சிலரைத் தவிர யாரும் பேசியது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும். தமது வதைமுகாமை முள்ளிவாய்க்காலின் இறுதிவரை  அவர்கள் வைத்துத்தானே இருந்தார்கள்.

உண்மையில் அதனை அப்போது வன்னியில் வாழ்ந்தவர்கள் பேசமுடியாது இருந்ததுதான். ஆனால் மிகப்பாதுகாப்பாக வெளிநாடுகளில் வாழ்ந்து எழுதிக் கொண்டிருந்த  எழுத்தாளா்கள் எனப்படும் பலர் அதுபற்றித் தெரிந்திருந்தும் பேசாதிருந்தனர். 

அதையும் விட புத்திசீவிகள் எனத் தங்களைக் கூறிக் கொள்ளும் அயோக்கியர்கள் சிலர் இங்குள்ள பத்திரிகைகளிலும்  வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் புலிகளின்  அத்தனை கொடூரங்களுக்கும் அரசியல் விளக்கம் கொடுத்து ஆய்வு செய்தார்கள். 

அவர்களுக்கு இன்னமும் தான் தமது செயல்களை நினைத்து வெட்கம் வந்துவிடவில்லை.

தமிழர்களது துவேச சிந்தனை முறையும் அதைத் தூண்டிவிட்டுக் கொண்டேயிருந்த இந்த வகை அயோக்கியர்களின் கேடுகெட்ட அரசியல் வியாக்கியானங்களும்  ஆய்வுகளும் தவறுக்கு இன்னொரு  காரணம் என்று சொல்வேன்.

றியாஸ்… இந்த யுத்தத்தின் தோல்வியால் தமிழ் மொழி வெளியின் பின்னடைவுஎன்பது ஒன்றுமேயில்லை. கதைகளால் படிந்து கிடக்கும் ஈழத்தின் தெருக்கள். வாழ்வின் அறியமுடியாத முனைகளைத் தொட்டவர்கள் பலர் நமக்குள்ளே இருக்கிறார்கள். இலக்கியத்தளத்தில் அவை நிட்சயம் ஒருகாலத்தில்  தாக்கத்தைச் செலுத்தும்.

அண்மையில் கனடா வந்திருந்த நிலாந்தன் அவர்களிடம் உரையாடியபோது நீங்கள் அறிந்த கதைகளை அனுபவங்களை எப்போது எழுதப் போகிறீர்கள் எனக் கேட்டபோது. அவற்றை நான் அடைகாக்கிறேன். அந்த உண்மைகளையும் பொய்களையும் நான் பொத்தி அடைகாக்கிறேன் இப்போது எழுதமுடியாது வெளியில் சொல்ல முடியாது. நான் அவற்றைச் சொல்லும் போது அவை வேறு தவறுகளுக்காகப் பயன்பட்டுவிடும் என்று கூறினார். 

அப்போது அவர் இன்னொரு தவறு ஒன்றைத் தனக்குள்  செய்து கொண்டிருக்கிறார் என எண்ணத் தோன்றியது.

உண்மையில் நிலாந்தன் கருணாகரன் போன்ற பல எழுத்தாளர்கள் இறுதிவரை புலிகளோடு இருந்தவர்கள். அந்த கொடிய இறுதி யுத்தத்திற்குள்ளும் இருந்தவர்கள். அத்தனை பொய்களுக்கும் கட்டுக்தைகளுக்குமான இன்னொருபக்கக் கதைகள் அவர்களிடம் இருக்கின்றன. அவர்கள் சொல்லவேண்டிய காலம் விரைவாக வந்துவிடவேண்டும் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறேன். 

பல்லாயிரம் தமிழர்களது உயிர்களும் அவர்களது வாழ்வாதாரங்களும் இந்த இறுதியுத்தத்தில் அழிக்கப்பட்டேயிருக்கின்றன. ஆனாலும் ஈழத்தில் யுத்தம் தோன்றிய காலந்தொட்டு மாறிமாறி அழிக்கப்பட்ட உயிர்களின் கணக்கோ அவர்களின் வாழ்வாதாரங்களின் கணக்கோ இன்றுவரை யாரிடமும் இல்லை. அவற்றை மதிப்பிட நமது சமூகம் தயாரில்லை.  

80களின் பிற்பகுதியில் நீங்கள் செட்டிகுளம் பாவற்குளம் கிராமங்களைப் பார்த்திருக்க வேண்டும்.  அந்தக் கிராமங்கள் அழிந்த கதைகள், அழிந்த விதங்கள் கதைகளில் இல்லாதவை.

எனக்கு என்ன கோபம் என்றால்

இறுதி யுத்தத்தில் - எல்லோருக்கும் கிளிநொச்சியை இராணுவம் பிடித்தபோதுதான் மக்களின் மரணம் என்பதே என்னவென்று தெரிந்தது. அதுவரையும் அவர்கள் சம்பூரிலும் மன்னாரிலும் பண்டிவிரிச்சானிலும் மல்லாவியிலும் மரணித்துக் கொண்ட மக்களை நேர்ந்துவிட்ட பலிக்கடாக்களாக காவு கொடுக்கப்பட வேண்டியவர்களாக எண்ணிக் கொண்டிருந்தார்கள்.  கணக்குப் பிழைத்த கதை கிளிநொச்சியைப் புலிகள் கைவிட்டபோதுதான் பலருக்குத் தெரிந்தது.

ஆனால் நீங்கள் கூட்டிக் கழித்துப் பார்த்தீர்களானால் தமிழ்மொழிவெளியின் பின்னடைவு ஒன்றும் தோல்வியில் முடிந்த இறுதியுத்தத்தால் மாத்திரம் நிகழ்ந்து விடவில்லை.

அது யாரைக் கொல்லக்கொடுத்தாவது தமது நலனைப் பெறமுனைந்த குறுகிய நோக்கங் கொண்டோரின் மிகுந்த பிற்போக்குத்தனங்களால், துவேசமனநிலையால், மொழியின் மீதான அறிவற்ற வெறித்தனத்தால் என்று அதற்குப் பலகாரணங்களைச் சொல்லமுடியும்.

12. இயக்கங்களின் கருத்து நிலைகளும் செயற்பாடுகளும் இலக்கியத்தில் எவ்வகையான தாக்கத்தை நிகழ்தின? அதாவது, அந்தவகை அரசியல் கருத்து நிலைகளும், செயற்பாடுகளும் ஒரு கட்டத்திற்குமேல், மக்கள் மீதும் அவர்களின் செயற்பாடுகளின் மீதும் நேரடியானதும், மறைமுகமானதுமான அதிகாரங்களை செலுத்தின. ஒரு கட்டத்தில் மக்களின் அனைத்து வகை சுதந்திரமான நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த முனைந்தன என்றுகூட சொல்லலாம். அவை இலக்கியச் செயற்பாட்டை எப்படிப் பாதித்தன? அதன் அனுகூலங்கள் மற்றும் மோசமான விளைவுகள் குறித்து பேச முடியுமா?

1980களின் ஆரம்ப காலப்பகுதிகளில் இருந்த இயக்கங்கள் தமக்குரிய கருத்துக்களை  மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு ஒவ்வொரு பெயரில் பத்திரிகைகளைத் தொடங்கியிருந்தார்கள். 

அந்தக்காலத்திலேயே மக்களும் இயக்கங்களாகப் பிரிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் தமது ஆதரவுக்குரிய பத்திரிகைகளையே வாசித்துக் கொண்டிருந்தார்கள். 

இந்தப்பத்திரிகைகளில் பொதுமக்களது எந்தக் கருத்துக்களுமோ அல்லது எந்த ஆக்கங்களுமோ இடம்பெற்றன  என்று நான் நினைக்கவில்லை. 

அவை அந்தந்த இயக்கத்திலிருந்த மத்தியகுழுக்களால் நிரப்பப்பட்டது என்றே நினைக்கிறேன். பொதுவாகவே மற்றய இயக்கங்களது பிரச்சனைகள் அல்லது அவர்களைப்பற்றிய அபிப்பிராயங்கள். 

அவற்றில் அதிகமாக வெளிவந்துகொண்டிருந்தன.
பிற்காலத்தில் அத்தனை இயக்கங்களையும் புலிகள் காவுகொண்டு தனித்து நின்ற காலத்தில்  தமது கட்டாய கருத்து சொல்லல் முறையை அபிப்பிராயங்களை மறுதலித்து ஒற்றைக்குரலாய் அவர்கள் ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். பாடசாலைகளில் அன்னை பூபதிப் பரீட்சை முறை ஒன்றைக்கூட அவர்கள் உருவாக்கியிருந்தார்கள்.

இலக்கியம் என்றாலும் சரி சினிமா என்றாலும் சரி அவர்களது இலக்கியமாகவும் அவர்களது சினிமாவாகவுமே இருந்தன. கோயில்களில் திருவிழாக்களில் புலிகளது பாடல்களையே போடவேண்டும் என்ற கட்டாயம் வந்ததை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். 

இரகசியமாக இந்திய சினிமாக்களைப் பார்த்த இளைஞர்கள் பலர் எப்படியெல்லாம் தண்டிக்கப்பட்டார்கள் என்ற கதைகள்  நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அந்தக்காலத்தில் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பல இலக்கியச் செயற்பாட்டாளர்களின் தனித்துவம் இல்லாமல் தான்  போனது. ஒரு மாற்றத்தை அல்லது ஒரு விலகிய தன்மையை வெளிப்படுத்தமுடியாத காலமாக அது இருந்தது. இதற்குள் மவுனமாகிப் போன இலக்கியச் செயற்பாட்டாளர்கள் பலர் இருந்திருப்பார்கள்.
.
ஆனாலும் இதற்குள் இருந்துதான் கருணாகரன் அமரதாஸ் போன்ற கவிஞர்கள் வந்தார்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் அமரதாசின் கவிதைத் தொகுப்பான இயல்பினை அவாவுதல் என்பது ஸ்கந்தபுரத்தில் இருந்து வெளிவந்தது எமக்கு ஆச்சரியத்தைத் தந்தது. 
மற்றும் விடுதலைப்புலிகளின் காலத்தில் ஈழத்திலிருந்து வெளிவந்த சினிமாக்களும் எமக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. 

மிகவும் தரமான குறும்படங்களை அவர்கள் மிகக் குறைந்த வசதிகளுடன் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.  வெளிநாடுகளில் வாழ்பவர்களால் சாத்தியமாக்க முடியாத செயலாக அது அப்போது இருந்தது.

அவர்களால் வெளியிடப்படுகின்ற சினிமாக்களாகட்டும் சிற்திதழ்களாகட்டும் அவர்களின் பிரச்சார ஊடகங்களாக மட்டுமே அவை இருக்கும்.  ஆனால் இன்றுள்ள பல கலைஞர்கள் அதற்குள் இருந்து தான் தோன்றினார்கள். அதனால்தான் விடுதலைப்புலிகள் அற்ற காலத்திலும் அவர்களில் அதிகமானோருக்கு அந்தச் சிந்தனை முறையை அந்தக் கற்றல் முறையைத் தாண்டிச் சிந்திக்க முடியாமல் இருக்கிறது என்பதனைக் காணக் கூடியதாக இருக்கிறது.

அந்த வகையிற் தான்  வன்னிக்குள் இருந்து ஒரு கவிஞனாகவும் ஒருசிறந்த  புகைப்படக் கலைஞனாகவும் உருவாகிய அமரதாஸ் கடைசி யுத்தத்தில் பாதிப் புகைப்படங்களை மட்டுமே தனது கமராவுக்குள் பதிவு செய்து கவிஞனுக்குரிய மனதையும் இழந்து ஒரு புகைப்படக் கலைஞனுக்குரிய தனித் தன்மையையும்  இழந்து நின்றதைப் பார்த்தேன். இதற்கான காரணமாக நாம் எதைச் சொல்லப் போகிறோம்.

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கெனத் தோன்றிய அத்தனை இயக்கங்களது மக்கள் மீதான அராஜகம் என்பது ஒன்றுக்கொன்று குறைந்தது இல்லை என்றாலும் புலிகளது அத்தனை அராஜகங்களிற்கும்  மக்களிடம் இருந்த ஆதரவு என்பது  தேசியம் என்ற ஆசையின் ஒருபக்கத்தின் விளைவே. 

தேசத்தின் மீதான அபத்தமான ஆசையே அனைவரது கண்களையும் மூடியது. அவர்களது ஒவ்வொரு தவறுகளையும் ஒவ்வொருகாரணங்களால் மக்கள் ஆதரித்துக் கொண்டேயிருந்தார்கள். அதற்குள் இருந்த எழுத்தாளர்கள் மட்டுமல்ல பல புலம்பெயர்ந்த எழுத்தாளர்களையும் இந்தத் தேசிய ஆசை அவர்களின் முதுகெலும்பினையே  இல்லாது பண்ணியது. ஈழத்தில் வாழ்ந்த இலக்கியவாதிகளுக்கு இருந்த நிர்ப்பந்தம் இங்கிருந்தவர்களுக்கு இருக்கவில்லை.

இந்தத் தேசத்தின் மீதான பற்று தமக்கு மற்ற எல்லோரையும் விட மிக அதிகமாகவே இருக்கிறது என்பதனை நிரூபிப்பதற்கு பல இடங்களில் இலக்கியத்தில் தீக்குளிப்பை நிகழ்த்த வேண்டியிருந்தது இவர்களுக்கு. அதற்கூடாகவே தமது அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமென நம்பினார்கள்.  

முடிவில் அப்படித் தக்கவைக்க எழுதப்பட்ட இலக்கிய வகைகளை இன்று அவர்களே தொடரமுடியாது இருப்பது என்பதுதான் உண்மை.

அந்தக்காலத்தில் புலம் பெயர்ந்த நாடுகளிலும்  புலிகளது தேசியத்தை அறைகூவியபடி பல இலக்கியத் தொகுப்புக்கள் வெளிவந்தன. இதில் லண்டனில் இருந்து வெளிவந்த இன்னுமொருகாலடி யுகம்மாறும் என்று பத்மநாப ஐயர் கொண்டுவந்த பல தொகுப்புக்களைக் குறிப்பிடமுடியும். இதில் எழுதிய பல கவிஞர்களை இன்று உங்களால் யாரென்றே  அடையாளம் காட்டமுடியாது.

இந்தவகைப் போக்கை மறுதலித்து அப்போது இலக்கியச் சந்திப்புக்குழு வெளியிட்ட "இனியும் சூல்கொள்", சுகனால் தொகுக்கப்பட்ட " இருள்வெளி", சுகனும் சோபாவும் சேர்ந்து தொகுத்த  கறுப்பு, சனதருமபோதினி, தோழர் புஸ்பராசாவால் தொகுக்கப்பட்ட  "தோற்றுத்தான் போவோமா" பானுபாரதியும் தமயந்தியும் தொகுத்த "உயிர்மெய் "போன்ற பல இலக்கியத் தொகுப்புக்கள்  தொகுக்கப்பட்டன. 

என்னைப் பொறுத்தளவில் இந்தவகை மறுத்தோடிக் குரல்கள்  இலக்கியத்தில் மிக முக்கியமானவையாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 

மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் அவை வெளியிடப்பட்டன. அந்தத் தொகுப்புக்கள் ஒவ்வொன்றும் தொகுக்கப்பட்ட காலங்களில் புலம்பெயர்ந்த தேசங்களில் நாம் ஒவ்வொருவருக்கும் ஆழ்மனதில் உறைந்த பயங்களை இன்று வார்த்தைகளால் விளங்கப்படுத்திச் சொல்லிவிடமுடியாது.

ஆனால் இன்று இதற்குள் இருந்த சிலரையும் இந்தக் கடைசி யுத்தம் காட்டிக்கொடுத்தது. அவர்களையும் இறுதியுத்தம் உருக்குலைத்து அள்ளுண்டு போக வைத்தது. அவர்கள்தான் எதிர்த் திசையில் இருந்து இப்போது ஒத்தோடிகள் என்று  எங்களை நோக்கிக் கையை நீட்டுகிறார்கள்.

ஈழத்து இலக்கியம் என்னவோ தியாகி துரோகிகளுக்கிடையில்தான் கடந்த கால் நூற்றாண்டாகக் கட்டப்பட்டிருக்கிறது.

14. அரச வன்முறைகளை எதிர்த்தும், அவர்களின் நடவடிக்கைகளை ஆயுதரீதியில் எதிர்கொண்டும் இயங்கிய சமூகவெளியில் இருந்து - தற்காத்துக்கொள்ளவும் - தமது இயக்கத்தை தொடர்ச்சியாக நிகழ்த்த புலம்பெயர்ந்து செல்வது அவசியமானதுதான். ஆனால், புலம்பெயர்ந்திருப்பவர்கள் அனைவரும் இப்படியான காரணங்களால்தான் புலம்பெயர்ந்தனரா?

அப்படிச் சொல்லமுடியாதுதானே றியாஸ். 
இங்கு புலம்பெயர்ந்திருப்பவர்கள் பல்வேறு வகையினர். பல்வேறு காலப்பகுதிகளில் புலம் பெயர்ந்தவர்கள். பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். 

அதில் பெரும்பான்மையானோர்  1980களின் முற்காலத்தில் புலம் பெயர்ந்தவர்கள் அவர்களது மூன்றாவது பரம்பரையும் தோன்றிவிட்டது. முதலில் புலம் பெயர்ந்தவர்கள் அதிகமானோர் முதியோர் இல்லங்களுக்குச் சென்று வாழும் காலம் வந்துவிட்டிருக்கிறது. அதனை இன்னும் பலர் தம்மளவில் உணரவில்லை. 

அவர்களோ இன்னும் யாருக்காவது கொம்புசீவி தமிழீழம் பெற்றுவிடும் கனவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் நமது சமூகத்தின் மிகவும் துர்ப்பாக்கியமான நிலை.

அரசவன்முறைகளை எதிர்த்தவர்கள் மட்டுமல்ல ஆரம்பகாலத்தில் வேறு வேறு  இயக்கங்களுக்குச் சென்றவர்கள்  அந்த அந்த இயக்க வன்முறைகளையும்  எதிர்த்து இயங்கியவர்கள் பலரும் தப்பிவந்து வாழ்கிறார்கள். அவர்களில்  பலர் வாழ்வின் இயல்பான பக்கங்களின் ஈர்ப்பு அற்றுப்போய்  விட்டேத்தி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கறார்கள்.

நம்பிச் சென்ற போராட்டங்களின் ஏமாற்றம்  கூட இருந்தவர்களது படுகொலைகள் அவர்களை பல்வேறு வடிவங்களில் உருக்குலைத்து விட்டிருக்கிறது. 

வெறும் நடைப் பிணங்களாக புலம் பெயர் தேசங்களில் அலைந்து திரியும் அப்படியான பல நண்பர்களைப் பார்க்கிறேன். வெறுப்பு விரக்தி முதுமை அவர்களை எந்தப்பிரியோசனமுமில்லாது பண்ணிவிட்டது. அவர்களைப் பார்க்கும் போது இந்த அறுந்த யுத்தம் இன்னும் கொஞ்சம் வேளைக்கு முடிந்திருக்கக் கூடாதா? என்று எண்ணத் தோன்றும். பல அற்புதமான மனிதர்களைப்  பயன்படுத்தத் தவறிவிட்டது இந்த சமூகம். 

மறுபக்கம் இந்த சமூகத்தில் தான் புலம்பெயதர்ந்தவர்கள் பலர் புலிகளின் உத்தியோகத்தர்களாக இருந்து யுத்தத்தை நடாத்திக் கொண்டிருந்தார்கள். யுத்தத்தின் பேரில் பெருமளவு பணங்களை மக்களிடம் இருந்து பெற்று தமது குடும்ப நலன்களுக்காக பாவித்துக் கொண்டார்கள். 

கொலைகாரர்களையும் கொலையை ஆதரித்தவர்களையும் கொலையை எதிர்த்தவர்களையும் ஒருபோதும் பொதுமைப்படுத்தமுடியாது. இந்த மூன்றும் வேறு வேறு பக்கங்கள்.



15. தமிழ் பேசும் மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தருவதாக அறிவித்துக்கொண்டு மக்களை பயன்படுத்திய அனைத்து இயக்கங்களும் அம்மக்களுக்கெதிரான வன்முறைகளில் ஒரு கட்டத்தில் ஈடுபட்டன என்பதை மறுக்கிறீர்களா? அந்த போராட்ட அமைப்புக்களிலிடமிருந்து தப்பிக்கவே பெரும்பகுதி மக்கள்  பிற்காலங்களில் புலம்பெயர்ந்தனர். ஆக, தமிழர்களின் புலப்பெயர்வு என்பதை பொதுவான ஒரு காரணியை வைத்து  புரிந்துகொள்ள முயல்வது சரி என்கிறீர்களா?

எப்படி மறுக்கமுடியும்?
இயக்கங்கள் மக்களுக்கெதிராக ஒருகட்டத்தில் அல்ல அவர்கள் ஆரம்பத்திலிருந்தே மக்களுக்கு எதிராக இயங்கினார்கள். அது மக்களுக்கு எதிரானது என்று எமக்கு ஒருகட்டத்தில்தான் தெரிந்தது என்பதே உண்மை. அந்த உண்மை தெரியும் வரை நாங்கள் ஒவ்வொருவரும் அதற்குத் துணையிருந்திருக்கிறோம்.

மக்களுக்கெதிரான வன்முறையில் அல்ல. விடுதலைபெற்றுத்தர இயக்கத்தில் சேர்ந்த பல இயக்க உறுப்பினர்களை முதலில் கொலைசெய்த இயக்கம் தமிழீழமக்கள் விடுதலைக் கழகம். அந்த இயக்கத்திற்கென்று இந்தியா சென்ற எத்தனையோ இளைஞர்கள் திரும்பிவரவேயில்லை. அதன் கணக்கே இன்றுவரை யாருக்கும் தெரியாது.

அதற்கும் மேல் அத்தனை இயக்கங்களாலும் விடுதலையின் பெயரில் மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைகளை கேள்வியேயற்ற ஓப்புதல் அளித்து இறுதிவரை கடந்திருக்கிறார்கள் நமது மக்கள்.

விடுதலையின் பெயரில்  சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்திற்கு செய்த சித்திரவதைகளை இன்புற ரசித்தவர்கள் நமது மக்கள். விடுதலையின் பெயரில் அவர்களால் துரோகி என அடையாளப்படுத்தப்பட்டவர்களை  உயிரோடு கொழுத்தவும் வதைமுகாங்களில் வைத்து கொன்று முடிக்கவும் மவுனமாகக்  கை அசைத்தவர்கள் நமது மக்கள்.

மற்றவர்களது துன்பத்தை விடுதலையின் பெயரில் ஆதரித்த இவர்கள் தமக்கோ தமது குடும்பங்களுக்கோ  அவை நேர்ந்து விடக் கூடாது என்று நினைத்து புலம்பெயர்ந்தார்கள். அவர்களே புலம்பெயர்ந்த பின்னரும் எப்படியாவது தமிழீழம் பெற்றுவிட வேண்டும் என்ற ஆசையில் புலிகளாகிப் போனவர்கள்.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இங்கிருக்கிறார்கள். இவர்களோடு தேசவிடுதலையின் பெயரில் அத்தனை இயக்கங்களது அச்சுறுத்தலுக்கும் பயந்து தப்பிவந்து வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து பலர் இருக்கிறார்கள். இந்த இயக்கங்களது உத்தியோகத்தர்களாக வந்தவர்கள்  இன்னமும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த இயக்கங்களது வதை முகாம்களிலும்  சிறைச்சாலைகளிலும் இருந்து தப்பிய பலர் இங்கிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் நீங்கள் எப்படிப் பொதுமைப்படுத்துவீர்கள்? இவர்கள் எல்லோரும் ஒருபோதும் ஒன்றாகக் கருதமுடியாதவர்கள்.

16. தமிழர்கள் தவிர, பிறசமூகங்களில் இருந்து தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவாக ஏற்பட்டிருந்த குரல்களை எப்படிப்பார்த்தார்கள்? இன்று அதன் நிலைமை என்ன?

ஈழவிடுதலைப் போராட்டம்  ஆரம்பித்த காலங்களில்  இருந்த தமிழ் இயக்கங்களில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஈழப் புரட்சி அமைப்பு தமிழீழ மாணவர்  பேரவை. என்.எல்.எவ்.ரி. போன்ற முக்கிய அமைப்புக்கள் தமிழ் மக்களின் ஆதரைவை எதிர்பார்த்த அளவு பிற சமூகங்களான  தமிழ் பேசும் முஸ்லீம்கள் மற்றும் சிங்கள மக்கள் ஆகியவற்றின் ஆதரவையும் அதேயளவு எதிர்பார்த்து வேலைகள் செய்தன என்பது தெரியும். 

கவனித்துப் பார்ப்பீர்களானால் ஆரம்பத்தில் ஒவ்வொரு இயக்கங்கள் காட்டிய தமிழீழ வரைபடத்திலும் அதன் அளவில் வித்தியாசம் இருக்கும். 

மலையகத்தை  உள்ளடக்கிய வரையபடமும் மலையகத்தை விட்டிருந்த வரைபடமும்  கிழக்கிலங்கையில் பாதியற்ற வரைபடமும் என்று வித்தியாசங்களுடனேயே அவை இருந்தன. இது ஆரம்ப காலங்கள் எனினும் அவை அவர்களது எதிர்காலத்தைப் பேசியவை. அவர்களது பத்திரிகைகள் எங்கிலும் பேசப்படும் விடையங்கள் மிக அதிகமாக மக்கள் நலன் சார்ந்ததாகவே இருந்தன. அப்படி இருந்தும் நடைமுறையில் அவர்கள் மிகுந்த தவறிழைத்தார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளது நோக்கம் அப்படியானது அல்ல என்பதனை அவர்களது அப்போதைய பத்திரிகைச் செய்திகளே கோடிட்டுக் காட்டின. புலிகள் எப்படியான மனநிலையில் தமது செயற்பாடுகளைக் கொண்டிருந்தனர் என்பதனை அவர்கள் வெளியிட்டுக் கொண்டிருந்த பிரச்சாரப் பத்திரிகைகள்  வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. 

பின்நாளில் எல்லா இயக்கங்களின் செயற்பாடுகளையும் தமது ஆயுத பலத்தால் கொன்றொழித்து தடை செய்த செயலின்  உச்சக்கட்டமாக  பிறசமூகங்கள் மீதும் அத்துமீறிய கேவலமான செயற்பாடுகளை செய்யத் துணிந்தனர்.

இந்த வகைச் செயற்பாடுகளுக்கு மிகக் கவனமாக ஆதரவு தெரிவித்தவர்கள் நமது மக்கள் தான் என்பதனை மறந்து விடக் கூடாது. 

வடக்கிலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டதற்கும் சிங்களக் கிராமங்களில் அப்பவிக் குழந்தைகள் வெட்டிக் கொல்லப்பட்டதற்கும் கணக்குவழக்குப் பார்த்துக் கூட்டிக் கழித்துக் கொண்டிருந்தவர்கள் நமது மக்கள். 

ஆனால் இறுதியில் தமிழ் மக்களது தலைவிதியையும் எல்லோரும் கூட்டிக்கழித்து முடித்து வைத்தார்கள்.

ஆனால் இன்றும் நிலைமை மாற்றமில்லை. தமிழ் துவேசம் கொண்டலைபவர்களும் அதனை தமது இருப்புக்களுக்காக கையில் வைத்திருப்போரும் தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்தைத் திரும்பத் திரும்பத் தூக்கிப் பிடிக்கிறார்கள். இதனால் அடையப் போவது ஒன்றுமில்லை. 

தனது இனத்தை தானே அழித்த இனம் என்ற பெருமை தமிழினத்துக்குத்தான் உண்டு.

ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் தன்னுடைய சமூகம் குறித்தே மிகக் கீழ்தரமான பார்வையுடைய எண்ணங்களை வைத்திருக்கின்ற நமது சமூகத்திடம் பிறசமூகம் குறித்த எதிர்பார்ப்பைக் கோரமுடியாது என்பது எனது கருத்து.

இந்த இடத்தில் தான் வடகிழக்கில் இருந்து  கிழக்கு மாகாணம் தனியே பிரிந்து  போனதை  முழுமனதுடன் ஆதரித்தேன். அது ஒருபோதும் ஒன்றிணையக் கூடாது என்பது எனது விருப்பம்.

தமிழ்  என்று அடையாளமிடப்படுகின்ற ஒற்றைத் துவேச அடையாளங்கள் உதிர்ந்து  போகவேண்டும் என்பது எனது ஆசை. அதற்குரிய ஒரே வழி அது கையகப்படுத்தி வைத்திருக்கின்ற அத்தனை சிந்தனை முறைகளிலும் மாற்றம் நிகழ  வேண்டும். தமிழ் என்பது ஒரு மொழி என்ற அடையாளத்திலிருந்து தமிழ் என்பது வெறியாகி அதன் செயற்பாட்டுத்தளம் பாசிசம் என்ற அடையாளமாக  நமது சமூகத்தில் அது மாறிவிட்டிருக்கிறது. அதனை அகற்றுவதற்குரிய அத்தனை வழிகளையும் நாம் கண்டடைய வேண்டும். 

பல்வேறு அடையாளங்களாகப் பிளவுபட்டுப் போய்க்கிடக்கும் ஒரு சமூகத்தைத் தமிழ் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் பொதுமைப்படுத்த முடியவே முடியாது. அப்படிப் பொதுமைப்படுத்துவது சுயநலம் சார்ந்தது. கடந்த காலம் முழுவதும் அந்த சுயநலம் வெளிப்பட்ட  இடங்கள் எல்லோருக்கும் வெளிப்படையானது.

இப்படி ஒவ்வொரு காலத்திலும் தமிழ் என்ற அடையாளத்தின்  பெயரில் பிறசமூகங்கள் மீது நிகழ்தப்பட்ட எண்ணற்ற கொடூரங்களுக்கு நாங்கள் ஒவ்வொருவரும் துணையிருந்திருக்கிறோம் என்பதனை நாம் உணரவேண்டும். ஆனால் இன்றுவரை அது உணரப்பட்டதாகத் தெரியவே இல்லை.


17. தமிழர்களின் புலப்பெயர்வு உதிரியாக நிகழ்ந்த ஒன்று. ஆனால், தமிழைப் பேசுகின்ற சக இனமான முஸ்லிம்களின் வடக்கிலிருந்து வலுக்கட்டாயமான வெளியேற்றம் ஏன்? எதற்காக நிகழ்த்தப்பட்டதென்று நினைக்கிறீர்கள்? அது குறித்த மீள்வாசிப்புக்கள் தமிழ் அரசியல் பரப்பில் இன்று என்ன நிலையில் உள்ளது எனக் கருதுகிறீர்கள்?

யாருடைய புலப் பெயர்வும் உதிரியாக நிகழ்வதில்லை. ஒவ்வொரு புலப் பெயர்வுக்கும் வெவ்வேறு அளவுகளிலான அழுத்தங்கள் இருக்கின்றன. யுத்ததின் அழுத்தம் கூட பலருக்கு பல அளவுகளில் வேறுபட்டிருக்கின்றன.

ஆனால் வடக்கிலிருந்து புலிகளால் கட்டாய வெளியேற்றம் செய்யப்பட்ட முஸ்லீம் மக்களின் இடப்பெயர்வு என்பதுவே வடக்குத் தமிழர்களது சுய துவேசத்தின்  மிகமுக்கியமான அடையாளம். வெட்கிக் குனிந்த தலையை ஒருபோதும் நிமிர்த்தமுடியாத தருணம் அது.

அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட அற்பத்தனமான காரணம் முஸ்லீம்கள் சிலர் காட்டிக் கொடுத்தார்கள் என்பதே. வடக்குவாழ் தமிழர்களுக்கு  விருப்பாமாயிருந்த அந்த விரட்டியடிப்பிற்கு,  சொல்லப்பட்ட அந்தக்காரணம் போதுமானதாகவே  இருந்தது என்பது புலிகளுக்குத் தெரிந்திருந்தது. 

விரட்டியடிப்பின் பின்னர் அவர்களுடைய  சொத்துக்களை  ஸ்ரான்லி வீதியில் கயிறுகட்டி விற்பனை செய்த கதைகளை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

ஆண்டாண்டுகாலமாக வாழ்ந்த ஒரு இனத்தை நான்கு மணிநேர இடைவெளியில் விரட்டியடித்துக் கலைத்த பழியை  வடக்கு வாழ் தமிழர்களால்  தீர்ப்பதற்கு முடியாது.

அது காலாகாலமாய் தொடரும் பழி.

தான் கையில் வைத்திருந்த ஆயுதத்தையும் அதிகாரத்தையும் கொண்டு என்ன ஆட்டம் போடமுடியுமோ அவ்வளவையும் அப்போதே போட்ட இனம் நம்முடையது. இப்போது தனது விரல்களை வேறுபக்கம் நீட்டுகிறது.

ஆனால் காலந்தான் போய்விட்டது.
இது குறித்த மீளாய்வுகள் அரசியற்பரப்பில் வந்து விடும் என்று நான் நினைக்கவில்லை.  இன்று 26 வருடங்கள் கடந்து விட்டிருக்கிறது. எங்கிருந்து எதனைப் பிடுங்கி நடுவது?

வடக்கு முஸ்லீம்களது விரட்டியடிப்பின் பத்தாவது வருட நினைவாக எக்ஸில் சிறப்பிதழ் ஒன்றைக் கொண்டு வந்திருந்தோம். முடிந்தவரை அதனைப் பதிவு செய்தோம்.  வெட்கப்படுகிறோம் அல்லது மன்னித்துக் கொள்கிறோம் என்ற சொற்கள் அர்த்தமிழந்து போன செயல் அந்த விரட்டியடிப்பு. மீளாய்வுகளாலும் புனரமைப்புக்களாலும் மீள்குடியேற்றங்களாலும் நிவர்த்தி செய்யப்படமுடியாத காலத்தை அது தாண்டிவிட்டிருக்கிறது. தமிழர்கள் தாங்கி நிற்கின்ற பழிகளில் துருத்திக் கொண்டு நிற்கும் பெரும்பழி அது.

18. அதிகமும் அரசியல் சார்ந்து கேள்விகளை எழுப்பிவிட்டேன். இனி இலக்கியத்தின் பக்கம் வருவோம். ஈழத்து நவீன கவிதை என ஒரு பிரிவு 80பதுகளிலே மேல் நிலைக்கு வந்தது. அதில் செயல்படும் குறித்த சிலரே நவீன கவிஞர்களாக விமர்சகர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் முன்வைப்பது பற்றி?

றியாஸ்...
இந்தக் கேள்விக்கு நீங்கள் தான் பதிலையும் சொல்ல வேண்டும். இதுகுறித்து நீங்கள் தான் தொடர்ந்து எழுதுகிறீர்கள். நவீன கவிதை நவீனம் கடந்த கவிதை அல்லது நீங்கள் அடையாளப்படுத்துவது போலான பின்நவீனத்துவக் கவிதைகள் என்ற வகையறாக்களில் எனக்கு ஈர்ப்பு இல்லை. ஈர்ப்பு இல்லை என்பதனை விட எனக்குத் தெரியாது. அதனால் அதுகுறித்த விமர்சகர்கள் மீதும் எனக்கு ஈர்ப்பு இல்லை.

ஈழத்துக் கவிதை என்பது அழகான தனது சிறகுகளை விரித்திருக்கிறது என்று ஒரு பக்கம் நினைத்து சந்தோசமடையமுடியும். ஆனாலும்  ஒரு இராணுவ வண்டியின் இரைச்சலில் அது தொடர்ந்து ஒரேமாதிரி ஒலித்துக் கொண்டிருப்பதும். தேவாலயங்களில் சுவாமிமார் செய்யும் பிரசங்கம் போல ஒரேமாதியான ஓசையுடன் அது திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருப்பதும்  அயர்ச்சியடைய வைக்கிறது.

ஒரு கவிஞரின் கவிதைகளைப் பார்த்து அப்படியே வரிகளை மாற்றி வார்த்தைகளை மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் பலர், கவிஞர்கள் என்று கவிதைப் புத்தகங்களாகப் பதிப்பித்துக் கொண்டிருக்கும் அவலத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி இருக்க வேண்டும் என்பது விருப்பம். 

நீண்ட காலமாக இதே நிலை நீடித்துக்கொண்டு இருக்கிறது. இதில் அவர்கள் கண்டடையும் தர்க்கங்களிலும் ஒருவித மாற்றமும் இருக்காது. இதில் பலர் ஒரு புத்தகத்தைப் பதிப்பித்து விட்டு பின் காணாமற் போய்விடுவார்கள். அதுவே ஒருபக்கம் மிகச் சந்தோசமாக இருக்கும்.

ஆனாலும் ஒவ்வொரு காலங்களில் கவிதைகளின் தர்க்கங்களில் ஒவ்வொருவர் திகிலடைய வைப்பவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  அவர்கள் தான் கவிதையின் பரிமாணங்களைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சிந்தனைகளையும் அது தோற்றுவிக்கும் வார்த்தைகளையும் அதன் அணுகுமுறைகளையும் கிளர்ச்சி கொள்ளவைக்க முடியாதவர்களே கவிஞர்களாக கொண்டாடப்படும் காலத்தில் நாம் அவர்களைக் கொண்டாட வேண்டியிருக்கிறது.

நிகழ்த்தக் கூடிய கவிதைகள் எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்திலிருந்து நவீனம் நிகழ்த்த முடியாத கவிதைகளைக் கண்டடைந்திருக்கிறது. அதனை விளங்கிக் கொள்ள ஒரு நவீன விமர்சகர் வரவேண்டும். வராதவரைக்கும் பிரச்சனைதான். தெரியாமல் தான் கேட்கிறேன். முன்பு கவிதை குறித்து விமர்சித்த  விமசகர்கள் யார் றியாஸ்?

பல சஞ்சிகைகளில் சிறுகதைகள் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டு மிஞ்சியிருக்கும் இடங்களில் கவிதைகளைப் போட்டுக் கொண்டு வந்த காலம் மாறி இன்றுள்ள வாசகர்களுக்கும் விமர்சகர்களுக்கும்  புரியவைக்க சஞ்சிகைகளில் கவிதைகளைத் தனிப்பக்கத்தில் போட்டு மிஞ்சிய இடத்தில் அதற்குரிய விளக்கப்படங்கள் மட்டும் போட்டுக் காட்டுகிறார்கள்.  அந்தளவில் சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள். கவிதை குறித்து அதிகம் ஆசைப்படாதீர்கள்.

யுத்தகாலத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பாலஸ்தீனக் கவிதைகளையும் ரஸ்சியக் கவிதைகளையும் பார்த்து நமது சூழலில் பலர் கவிதை எழுதினார்கள். அப்படி எழுதுவதுதான் கவிதை என்றும் பலரால் நம்பப்பட்டது. அதுவே பலகாலம் கொண்டாட்டத்தில் இருந்தது. இப்பொழுது பெயர்கப்படமுடியாத மொழிகளுடன் எழுதப்படும் கவிதைகள் பலருக்கு அச்சத்தை ஊட்டுகின்றன.  நவீன கவிஞர்கள்  எனச் சொல்லப்பட்டவர்களை நீண்டகாலமாக நான் எங்கும் காணவில்லை. நவீனம் இன்னொரு நவீனத்தைக் கண்டுபிடித்திருக்கிறது.



19. ஈழத்தில் இலக்கிய விமர்சகர்கள் 80 களுக்குப் பின் என்ன வானார்கள்?

இணக்கசபை மாதிரி ஒன்றை நடாத்திக் கொண்டிருந்தார்கள். யாரெல்லாம் தேசிய விடுதலைக்கு எதிராக எழுதினார்களோ அவர்களைத் துரோகியாக அடையாளமிட்டு வேறுபக்கம் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

ஒருகாலத்தில் நாம் வழிகாட்டிகளாக நினைத்திருந்த முற்போக்கு நற்போக்கு ஜம்பவான்கள் எல்லாம் புறம்போக்கு மாதிரி செயற்பட்ட காலங்கள் அவை. சயனைற் குப்பிகளை மட்டும் அவர்கள் கழுத்தில் மாட்டியிருக்கவில்லை.

20.  போராளிகளாக இருந்தவர்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலங்களிலும் எழுதினார்கள். அந்த எழுத்துக்களுக்கும் போர் தோற்கடிக்கப்பட்டதின் பின் அவர்களின் எழுத்துக்களுக்குமிடையிலான வேறுபாடுகளை  எப்படி பார்க்கிறீர்கள்?

போராளிகளாக இருந்தவர்கள் பலர் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலங்களில் பலவகையான எழுத்துக்களை எழுதினார்கள். அப்படிஎழுதிய காலங்களில் தமது உயிரைக் கொடுத்தவர்கள் பலர். 

இதில் நொபேட் என்ற கோவிந்தன், செல்வி, சபாலிங்கம்  போன்றவர்கள் முக்கியமானவர்கள். இதில் நொபேட் என்ற கோவிந்தன் .தான் சார்ந்திருந்த புளொட் இயக்கத்தின் உட்படுகொலைகளைப்பற்றி எழுதியதால் அந்த இயக்கத்தால் அச்சுறுத்தலுக்குள்ளாகினார். பின்னர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். மற்றயவர்களும் தமது எழுத்துக்களுக்காகப் புலிகளால் கொல்லப்பட்டவர்களே. 

கோவிந்தன் எழுதிய புதியதோர் உலகம் என்ற நாவல் ஈழவரலாற்றில் முக்கிய இடத்தை என்றும் தக்கவைத்திருக்கும் ஒரு பிரதி.

பின்னர் புலிகளுடைய காலத்தில் அவர்களில் மிக அதிகமானோர் எழுதினார்கள். மாலதி கவிதைகள் என்று ஒரு கவிதைத் தொகுப்பு 90களின் முற்பகுதியில் வந்திருந்தது.  அதிகமான யுத்த பிரதேச அனுபவங்களும் இடம்பெயர்வுகள் குறித்த வடுக்களும் கொண்ட எழுத்துக்கள் அவர்களிடமிருந்து அதிகமாக வந்தன. புதுவை இரத்தினதுரை, நிலாந்தன் கருணாகரன் போன்ற சிலருடைய எழுத்துக்கள் கிடைத்தாலும் பலருடைய எழுத்துக்கள் அப்போது எங்களை வந்து சேர்வதில்லை.

இதில் கருணாகரன் நிலாந்தன் புதுவை இரத்தினதுரை போன்றவர்களை என்னால் புலிகளின் போராளிகளாகப் பார்க்க முடியாது. அவர்கள் புலிகளுடைய உத்தியோகத்தார்களாக இருந்தவர்கள். அவர்களுடைய எழுத்து முறை புலிகளுடைய போராளிகளின் எழுத்து முறையிலிருந்தும் முற்றிலும் வேறானவை. முலாம் பூசப்பட்ட மினுக்கங்கள்  கொண்டவை.


தமிழினி என்ற போராளி எழுதக் கூடியவர் என்பதனை அவர் இறந்து கொண்டிருந்த இறுதிக் காலங்களில் தான் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் போர் முடிந்த கையோடு அதுவரை நடைபெற்ற தவறுகளுக்கும் செயற்படுத்தப்பட்ட குற்றங்களுக்கும் தனது கைகளை மற்றவர்கள் மீது மட்டும் தமிழினி உயர்த்திக் காட்டிவிடமுடியாது. ஏனெனில் அவர்  புலிகளின் சாதாரணமான ஒரு போராளியல்ல. 

புலிகளின் மகளிர் படைப்பிரிவின் தலைவி.

புலிகளின் போராளிகளாக இருந்தவர்களை விடவும் தளபதிகளாகவும் உத்தியோகத்தர்களாகவும் இருந்தவர்கள்  தற்போது தமது எழுத்துக்களுக் கூடாக  தவறுகள் தம்முடையவை அல்ல என்று இலகுவாகச் சொல்லிவிடமுடியுமா? இப்படிக் கேட்பது  எனது பலவீனமா என்று கூட நான் சில வேளைகளில் யோசிப்பதுண்டு.  ஆனாலும்  என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடந்து போன காலம் தந்த அனுபவம் அதனை ஏற்றுக் கொள்ளச் செய்யவில்லை.

இவர்கள் போராளிகளாகவும் உத்தியோகத்தர்களாகவும் இருந்த காலத்தில் எழுதிய பல எழுத்துக்கள் எமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் நிலாந்தன் போன்றவர்கள் செய்த அரசியல் ஆய்வுகள் சமர்க்கள ஆய்வுகள் புலம்பெயர் புலிகளின் பத்திரிகைகளில் வெளிவந்தன. அவை இங்குள்ள மக்களை இப்போது போலவே அப்போதும் மிகவும் உணர்ச்சியூட்டிக் கொண்டிருந்தன. 

அந்தவகை உணர்ச்சியூட்டல்களால் நடந்த தவறுகள் எவை என்பது நிலாந்தனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் அந்தக் குற்ற உணர்ச்சியால்தான்  அந்த வெளிப்பாட்டு முறையிலிருந்து அவரால் இலகுவாக மாறிவிடமுடியாதிருக்கிறது.

மற்றப்படி போராளிகளாக இருந்தவர்கள், ஈழத்தில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் எழுத முடியாத பலவற்றை அவர்கள் இப்போது எழுத நினைக்கிறார்கள். அவர்கள் தமது வாழ்வை எழுதிக் கடக்க வேண்டியிருக்கிறது. எழுதிக்கடக்கும் கதைகளில் தானே வாழ்வு படிந்து கிடக்கிறது. 

அவர்கள் எழுதும் கதைகளில் இருந்து எனக்கு அவர்கள் மீது எந்த நம்பிக்கையும் வந்து விடாது என்பது தெரியும். இருந்தாலும் அவர்கள் அவை எல்லாவற்றையும் எழுதவேண்டும் என்பது மிகுந்த விருப்பம். போலிகளைப் பிரித்தறியும் பக்குவம் எனக்கு நிறையவே வந்து விட்டிருக்கிறது.


21. ஈழத்தில் பல தமிழ்கள் இருப்பதாகவே நினைக்கிறேன். தமிழ்கள் என்பது, பிராந்திய ரீதியிலான பயன்பாட்டை வைத்து நோக்கவில்லை. நுண்ணரசியல் புலத்தை வைத்து பார்க்கிறேன். மலைத்தமிழர்கள், தமிழைப் பயன்படுத்தும் முஸ்லிம்கள், தலித்துக்கள், பெண்கள், அத்தோடு வட கிழக்கிற்கு வெளியிலுள்ள தமிழ் மொழி பேசுபவர்கள் என பலவகையான நுண் அரசியல் எழுத்துப்போக்குகள் இருக்கின்றன. அத்தோடு, புலம் பெயர்ந்தவர்களின் எழுத்து அரசியலிலும் நுண்ணளவில் வேறுபாடுகள் இருக்கின்றன. இவைகளை ஒட்டுமொத்த ஈழத்து தமிழ் இலக்கியம் என விளிப்பதில் அதிக சிக்கல்கள் இருக்கின்றன. இவைகளை தனித்தனியாக புரிந்துகொள்ள முயல்வதுதான் ஈழத்து தமிழ் இலக்கியங்கள் என பேசுபொருளாக ஆகும். எனவே, இந்தச் இலக்கியச் செயற்பாடுகளுக்கென்று பலவகையான விமர்சன முறைமைகளின் தேவைகள் இருக்கின்றன. இதை எப்படி மேலும் விபரிக்கலாம்?

நீங்கள் சொல்வது சரியே...
இவ்வகை வேறுபாடுகளை கண்டடையவும் அவ்வேறுபாடுகளின் தனித்தன்மையைப் புரிந்து கொள்ளவும் அவற்றின் வாழ்தல் முறைக்குள்ளால்  அவ்வகை இலக்கியங்களை அணுகவும் இருக்கின்ற சாத்தியப்பாடுகள் மிகக்குறைவாகவே இருக்கின்றன. 

எமக்குப்பழக்கப்பட்ட ஒருவகையிற்குள்ளாகவே எல்லாவற்றையும் வாசிக்கப் பழக்கப்பட்டுள்ளோம். அதனால்தான்  பழக்கப்பட்ட,  வாசிப்பு முறையற்ற ஒரு கதை சொல்லல் முறையில் இருக்கும் ஒரு பிரதியை வாசிப்பிற்கு இடையூறானது என்று எடுத்த எடுப்பில் பலருக்குச் சொல்லமுடிகிறது. அல்லது கவனங்கொள்ளலுக்கு உட்படாது கைவிடப்படுகிறது.

எழுத்துமுறையிலேயே பழக்கப்பட்ட மாதிரியைக் கோரி நிற்கும் மனம் சொல்லப்படும் கதைகளிலும் பழக்கப்படுத்தப்பட்டதையோ அல்லது தான் அறிந்ததையோ தான் கதையாக வேண்டி நிற்கும். தன் விருப்பாக  வேண்டி நிற்கும். இதனால் தான் மிக நுண்ணிய தளங்களில் தனது சமூகங்களது கவனங்களைக் குறிக்கும் இலக்கியக் கதையாடல்கள் பிற சமூகங்களால் கவனமற்று நிராகரிக்கப்படும். அல்லது மறைக்கப்படும். 

இதனால் கடந்த காலங்களில் தேசியம் குறித்த அக்கறையில் தோன்றிய இலக்கியப்பிரதிகள் பெரும்பான்மை இலக்கியவாதிகளால் கவனத்திற்குட்பட்டபோது மற்றயவை இலகுவாக மறக்கடிக்கப்பட்டது. 

இந்தக்காலத்தில் பெரும்பாலானவர்களால் இப்படி மறக்கடிக்கப்பட்டு கவனமற்றுப் போன பிரதி தான் சாருமதியின் அறியப்படாத மூங்கில் சோலை எனும் கவிதைத் தொகுப்பு.

கடந்த இருபது வருடங்களில் ஈழத்து இலக்கியவாதிகளால் பாலஸ்தீனக் கவிதைகள் மற்றும் ரஸ்யக் கவிதைகள் கொண்டாடப்பட்ட அளவுக்கு மலையகக் கவிதைகள் அது பேசிய விடையங்கள் கொண்டாடப்படவில்லை.  

தன்னுடைய தேவைக்காகவும் தன்னுடைய விருப்புக்களுக்காகவும் மட்டும் பிரதிகளை அணுகும் கொண்டாடும் ஒரு இலக்கிய சமூகம் மற்றமைகளது நுண்ணிய தளங்களை அவற்றின் தனித்துவத்தை பரிபூரணமாக விளங்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கமுடியாது.

ஆனாலும் ஈழத்திலும் புலம்பெயர்ந்த சூழலிலும் இந்தப் போக்கு மாறிக்கொண்டு வருகிறது. கட்டப்பட்டு இருக்கின்ற, அறியப்பட்டு இருக்கின்ற சிந்தனை முறையையும் கோப்புக்களையும் உடைத்துப்பார்க்கின்ற குலைத்துப்பார்க்கின்ற கேள்வி கேட்கின்ற ஒரு தலைமுறை தோன்றியிருக்கிறது. 

இந்த விமர்சன முறைமைகளை சாத்தியப்படுத்தக் கூடியது சிற்றிதழ்கள் தான். கடந்த காலத்தில் இந்தவகைப் புரிதல்களுடன் ஈழத்தில் வெளிவந்த சிற்திதழ்கள் மிகக் குறைவு அதற்கான காலமாக அது இருக்கவில்லை. இப்போது வருகின்ற ஆக்காட்டி, புதிய சொல் போன்றவை ஈழத்து இலக்கியச் சூழலில் ஒரு புதிய வகையான விவாதங்களைத் தொடங்கும் இலக்கியச் சண்டைகளைத் தோற்றுவிக்கும்  என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் இன்னமும் இவற்றைவிடவும் அதிகமான சிற்றிதழ்கள் ஈழத்தில் வரவேண்டிய தேவை இருந்து கொண்டே இருக்கிறது.

அது மறுபக்கம் கல்விசார் விமர்சனமுறையிலிருந்து விலகிச் சென்ற அதனை மறுத்தடிக்கின்ற ஒரு புதியதான விமர்சனமுறையாக ஒரு புதிய கற்றுக்கொள்ளல் முறையை அவை உருவாக்கும்.

நீங்கள் வேண்டி நிற்பது போன்ற நுண்ணியஅரசியல் போக்குகள் கொண்ட தனிப்பிரிவுகளை அடையாளம் காணவும் அவற்றோடு உறவுகொள்ளவும் முரண்படவும் சாத்தியமான காலத்தை வந்தடைந்திருக்கிறோம் என்றே நினைக்கிறேன்.

22. போர் தோற்கடிக்கப்பட்டதின் பின் அவசரம் அவசரமாக  அந்தச் சூழலை முன்னிறுத்துவதாகவும், அச்சூழலின் அனுபவங்களாகவும் பெருகிவரும் கதைகள், நாவல்களை இலக்கிய அர்த்தத்தில் எப்படியாக புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள்?

இந்தக் கேள்வியினைக் கேட்பதற்குள் நீங்கள் ஒரு கவிஞராக ஒழிந்திருக்கிறீர்கள். கதைகள் நாவல்கள் என்று மட்டும் குறிப்பிடும்  நீங்கள் ஏன் அதற்குள் கவிதையைச் சேர்க்கவில்லை? 

கதைகளையும் நாவல்களையும் விட மிக அதிக குவியலாக இருப்பது கவிதைகளே என்பதனை நீங்கள் அறியவில்லையா?

என்னைப் பொறுத்தளவில் யுத்தகாலத்திலும் யுத்தம் தோற்கடிக்கப்பட்ட பிற்காலத்திலும் எழுதப்பட்ட கதைகளும் நாவல்களும் போதாது என்றே எண்ணுகிறேன். 

யுத்தம் தந்து கொண்டிருந்த வலி அதற்குரிய சாத்தியங்களை பலருக்கு வழங்கவில்லை. யுத்தம் நேரடியாக ஒவ்வொரு ஈழத்தமிழரையும் பாதித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ஒரு இலக்கியக்காரன் தனக்குள் அதனை எழுதிக் கொண்டேயிருந்தான்.

யுத்தம் ஒருபோதும் ஒரேமாதியான அனுபவங்களை எல்லோருக்கும் வழங்கிவிடவில்லை. எல்லோரிடமும் ஒவ்வொரு கதையை அது சொல்லி விட்டிருக்கிறது. அதனால் தான் அது அவசரஅவசரமாக எழுதிமுடிக்க வேண்டியிருக்கிறது.

யுத்தகாலத்தில் யுத்தம் பற்றிய கதையைச் சொல்வதிலும் விட யுத்த மற்றகாலத்தில் யுத்தம்பற்றிய கதையைச் சொல்வது மிகவும் கஸ்டமானது. ஆபத்தானது. காலை வாரிவிடக்கூடியது. யுத்தம் தெரியாத ஒருத்தன் அந்தக் கதையை எழுதும் பொழுது நேர்ந்துவிடக்கூடிய சறுக்கல்கள் இங்கும் நேர்ந்துவிடக்கூடும்.

ஆனால் றியாஸ் ஏன் இவை எதுவும் நமது கவிதைகளுக்குள் நிகழவில்லை? ஒவ்வொரு ஈழுத்தமிழனும் ஆளுக்கொரு கவிதைத் தொகுப்புடன்தானே தூங்கிக்கொண்டிருக்கிறான்.

தமிழர்கள் என்ற அடையாளத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்தம் தோற்கடிக்கப்பட்ட பின் தோன்றிய நாவல்களைக் கவனியுங்கள் அதில் பலர் அந்த யுத்தத்தின் பங்காளர்களாக ஏதோ ஒரு பக்கத்தில் இருந்தவர்கள். அவர்கள் இந்த யுத்தம் தோற்றுவிடும் என்று நினைத்திருப்பார்கள் என நான் கருதவில்லை. 

அந்த ஆதங்கம் அந்த நம்பிக்கை இழப்பு அவர்களை உருக்குலைய வைக்கும். உள்மனதிற்குள் அவர்களை அது தொந்தரவு செய்யும். அவர்கள் எங்காவது ஒரு இடத்தில் அதனைக் கரையவிடவேண்டும். அவர்களுக்கு இலக்கியம் ஒரு சிறந்த வழியென்றே கருதுகிறேன்.

அவர்கள் தொடர்ந்து எழுதுவதற்கூடாகவே பல விடையங்களை அவர்கள் கடக்க வேண்டியிருக்கிறது. இதில்  வேடிக்கை என்னவென்றால் தாம் எழுதுகின்ற கதைகளில் புலிஆதரவு புலி எதிர்ப்பு என இரண்டு வகைமாதிரிகளை மட்டுமே நீங்கள் தேடுகிறீர்கள் பார்க்கிறீர்கள் என்று அவர்கள்  மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதுதான்.

கடந்தகாலம் இந்த இரண்டு வகைமாதிரிக்குள் மட்டுந்தான் கட்டுண்டுபோய்க் கிடந்தது. இரண்டும் மிக அருகருகாக இருந்து மரணத்தை எதிர்பார்த்தது. மரணத்திற்குள் இருந்தது. ஒரு ஈழத்தமிழனது வாழ்வனுபவம் இந்த இரண்டுவகை மாதிரிக்குள் இருந்தும் இலகுவில் கழன்றுவிடமுடியாது. 

அப்படிச் சொல்வதே இன்னொருவகைப் போலி. இப்படிச் சொல்பவர்களால் இந்தக்காலத்தின் இலக்கியத்தை உண்மையாகப் பதிவுசெய்யமுடியாது.


23. எல்லோரிடமும் ஒவ்வொரு கதையிருக்கிறது. அதைச் சொல்லும் எழுத்து முயற்சியே இலக்கியப் பிரதியாக ஆகிவிட போதுமானது என கருதுகிறீர்களா?

அது ஒருவகையில் உண்மைதான் என்றாலும் அது எல்லோருக்கும் சாத்தியமாகிவிடுவதில்லை. வாழ்வை எப்படி ஒரு உயிரியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அதே போல் கதைகளில் வாழ்தலும் முக்கியம். அதனை நாங்கள் பலர் செய்வதில்லை.

அதனாலேயே கதை கட்டறுந்து தலை எங்கோ வால் எங்கோ என்று தொங்கும் நிலையில் இருக்கிறது. அல்லது மற்றவரது கதைகளில் இருந்து திருடவேண்டியிருக்கிறது. மற்றவர் எழுதும் ஒரு கதை போல் எழுதிச் சந்தேசமடைய வேண்டியிருக்கிறது.

மற்றவரின் எதிர்பார்ப்புக்களை விடுத்து எல்லோரும் தங்களிடம் இருக்கும் கதைகளைத் தங்களுக்காக எழுதும் போது அது ஒரு நல்ல இலக்கியப்பிரதியாக வரும். தமிழில் அப்படி வந்த ஒரு நாவல்தானே ப.சிங்காரத்தின் "புயலில் ஒரு தோணி" அது இன்று வரை மற்றய எல்லா நாவல்களையும் விட தனித்து நிலைத்து நிற்கும் கதையல்லவா? .

அது புனைவில் அசாத்தியங்களை நிகழ்த்த எழுதப்பட்ட நாவலாக வாசிப்பவருக்குத் தோன்றாது. ஆனால் வாசிப்பில் நிச்சயம் அசாத்தியத்தைத் தோற்றுவிக்கும். அது எழுதப்பட்ட காலத்தில் யாராலும் கண்டு கொள்ளப்படவில்லை. நாங்கள் இப்போது செய்யவேண்டியது கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்படும் பிரதிகளைக் கண்டு அதற்குள் இருக்கும் கதைகளைத் கண்டு தேடுவதே.

உண்மையில் நம்மில் பலருக்குள் பலிவதமான கதைகள் இருக்கின்றன. யுத்தம் அவற்றை அவர்களிடம் விட்டுச் சென்றிருக்கிறது. கற்பனைகளாலே  கட்டப்பட்டவை அல்ல அந்தக் கதைகள். அவை எழுதப்படவேண்டும். அது தரமான ஒரு இலக்கியப் பிரதியாக இல்லாவிடினும் அவை எழுதப்படவேண்டும்.

நீங்கள் கவிதையில் பரீட்சாத்தக்கவிதை எழுதும் பொழுது ஏன் மற்றவர்கள் தமது கதைகளை எழுதி இலக்கியப் பிரதியாக்கிவிட முடியாது. அதுவும் சாத்தியம் தானே றியாஸ். கிட்டத்தட்ட நாங்கள் எல்லோருமே நாசாவில் வேலை செய்யும் ஆராட்சியாளர்களாகத்தானே இலக்கியப்பரப்பில் இருக்கிறோம்.  

பரீட்சாத்தங்களை யாரும்  எதிலும் செய்து பார்க்கலாம்தானே.

24. போரில் தோற்ற ஒரு இனத்தின் மீதான,  சக இனத்தின் அனுதாபங்களே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பதுதான். ஈழத்தமிழர்கள் மீதான தமிழகத்து தமிழர்களின் இன்றைய நிலை. அந்த மனநிலை மட்டுமே இலக்கியப் பிரதிகளுக்கான அங்கிகாரமாக ஆகிவிட போதுமானது எனக் கருதுகிறீர்களா? இது பொது மன அனுதாபங்களால் ஏற்பட்டிருக்கும் தற்காலிகமான ஒரு நிலைப்பாடு மட்டுமே. ஆனால், மீள் வாசிப்புக்களும் அதன் செயற்பாடு குறித்த இரக்கமற்ற விமர்சனங்களினுாடாக உருப்பெறும் இலக்கிய அறிவுசார் புரிதல்களுமே - இலக்கியப் பிரதியை அணுகுவதற்கு அவசியமானவை. அது நிகழ்ந்திருப்பதாக கருதுகிறீர்களா?

அங்கீகாரங்களால் இலக்கியங்களைத் தக்கவைத்துக் கொள்ளமுடியாது. தமிழகத்து அங்கீகாரங்களை நோக்கி ஈழத்து இலக்கியங்கள் போனது இப்போது மட்டுமல்ல. 

ஈழத்தில் நடைபெற்றுமுடிந்த ஈழ யுத்தத்தின் பின்னர் தமிழகத்தில்  சிற்றிலக்கிய சூழலிலும் உருக்கமான கழிவிரக்க நிலை ஒன்று ஈழம் குறித்துத் தோன்றியிருக்கிறது. 

அதுவும் பொது மன அனுதாபத்தைப்  போலவே  மிகவும் பொய்யானது. அவர்கள் நமது யுத்தகாலத்தின் கணக்கு வழக்கையே மறந்து விட்டார்கள். மறந்து விட்டார்கள் என்று சொல்லமுடியாது. நினைத்துப்பார்க்க முடியாதிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மற்றப்படி தமிழகத்துப் பதிப்பகத் துறையில் ஈழம் குறித்த பதிப்புக்கள்  இன்று எமோசன் வியாபாரக் கொழுந்தில் திளைத்திருக்கிறது. அதனை எவ்வித விமர்சனங்களாலும் நீங்கள் மாற்றிவிட முடியாது. அவர்கள் மாறவும் மாட்டார்கள். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

அண்மையில் தமிழினியின் கூர்வாளின் நிழல் தொகுப்பிற்கு காலச்சுவடு செய்த அநியாயத்தை நீங்கள் பார்த்தீர்கள் தானே. உண்மையில் அவர்களுக்கு ஒருவரின் ஆன்மா கொல்லப்படுவது குறித்து எவ்வித கரிசனையும் கிடையாது. 

அவர்களுக்கு எவ்வித கரிசனையும் கிடையாது எனத் தெரிந்த பிறகும் கூட ஈழத்திலிருந்து புத்தகங்களை வெளியிடுவதற்கு இங்குள்ளவர்கள் இன்னமும் அவர்கள் கதவைத் தட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். இதற்கு தனியே ஒரு காரணத்தை சொல்லமுடியும் என்று நான் நினைக்கவில்லை.

ஏனெனில் பாருங்கள் ஈழத்தில் மகிழ் என்ற பதிப்பகம் ஒன்றை கருணாகரன் அவர்கள் வைத்து நாடாத்துகிறார்.  எங்களுடைய சில புத்தகங்களை அவர் பதிப்பித்திருக்கிறார். ஆனால் அவர் தனது கவிதைத் தொகுப்பினை தமிழ்நாட்டிலுள்ள காலச்சுவட்டிடம் கொடுத்து வெளியிடுகிறார். இதற்கு என்ன பிரத்தியேக காரணத்தை நீங்கள் சொல்லுவீர்கள்? இதற்கெல்லாம் பின்னால் ஒரு காரணம் மட்டும் இருந்து விடும் என நான் நினைக்கவில்லை.

இப்படியான தமிழகத்து தற்குறி அங்கீகாரங்களால் வியாபார ரீதியில் இலக்கியப் பிரதி நிலை கொள்ளும் . இலக்கிய ரீதியாக பிரதியே செயற்படவேண்டும்.

மற்றப்படி மீள் வாசிப்புக்களும் ,இரக்கமற்ற விமர்சனங்களும்  இலக்கிய அறிவுசார் புரிதல்களும் ஏற்பட  ஒரு மாற்றுத் தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்தவர்களில் முக்கியமானவர்களாக  தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

ஆனாலும் ஈழம் குறித்த புரிதல் அவர்களுக்கும் இப்போது ஒரு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்திவிட்டிருக்கிறது. அவர்களில் பலருக்கு ஈழத்தில் யுத்தம் என்பதும் யுத்தத்தில் தோற்றது என்பதும் மக்களது கொலைகள் என்பதும் 2009க்கு பின்னர்தான் அறியக்கிடைத்திருக்கிறது என்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. 

அவர்களிடமிருந்து மீள்வாசிப்புக்களை அல்லது இரக்கமற்ற விமர்சனங்களை ஈழத்து இலக்கியப்பிரதிகள் மீது இப்போதைக்கு நாம் எதிர்பார்க்கமுடியாது.

அவர்களில்  பலருக்கு "ஐயோ ஒருமுறையாவது துப்பாக்கி எடுத்து சிங்கள இராணுவத்தை சுடும் சந்தர்ப்பம் தமக்குக் கிடைத்துவிடவில்லையே"  என்ற கவலைகள் இன்னும் இருக்கின்றது.

ஆனபடியால்,

ஈழத்தின் இலக்கியப்பிரதிகள் குறித்த இரக்கமற்ற விமர்சனமும் கட்டுடைப்புக்களும் ஈழத்திலிருந்தே செய்யப்படவேண்டும். மன்னிக்கவேண்டும் றியாஸ், தமிழகத்து உறவு இன்று தொப்பூழ்கொடி உறவு. தொப்பூழ் கொடி உறவினை நீங்கள் வேறு வகையில் தான் உணர்ந்து கொள்ளவேண்டும்.


25.  புலம் பெயர்ந்து பலகாலமாகிவிட்டது. வேறு ஒரு நிலப்பரப்பிலும், புதிய சமூக வெளியிலும் இணங்கிப்போய்விட்டிருக்கிறார்கள். அந்தச் சூழலை விட்டு மீண்டு தாய்மண்ணில் குடியேறுவது தொடர்பில் பெரும் நெருக்கடி இருப்பதாகவும் கருதுகிறார்கள். ஆனால், இலக்கியம் மற்றும் அரசியல் சார்ந்த விசயங்களில் தாய் மண்ணை பற்றியே அக்கறைகொள்ள முற்படுகிறார்கள். இது விசித்திரமாக இருக்கிறது. வேறொரு நிலவெளியில் வாழ்வை அமைத்துக்கொண்ட போதும், அங்கிருக்கின்ற மனநிலை வாழ்வு, நினைவுகள் போன்ற நெருக்கடிகளை அதிகம் இலக்கியப் பிரதிகளில் காணவில்லை. சிலர் விதிவிலக்கு.. இதை எப்படிப் புரிந்துகொள்வது? அங்கு பிரச்சினையெ இல்லையா? சௌகரிகமாக இருக்கிறார்களா?

இது ஒரு குழப்பமான பிரச்சனைதான்.  நமது வாழ்விற்குள் நடந்து கொண்டிருந்த யுத்தம் அதனையே நெறிப்படுத்திக் கொண்டிருந்தது. நான் முதலில் சொன்னது போல் ஈழத்திற்குள்ளும் வெளியிலும் அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது அதுதான். 

அதனால் இந்த நிலை தோன்றிவிடுகிறது.  இது ஒருவகைப் போலி இலக்கியத்தை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறது. புலம்பெயர் இலக்கியம் எனக் கொண்டாடப்பட்ட இலக்கியங்கள் பெரும்பான்மையானவை இவ்வகைப் போலிகளே.

ஈழத்திற்குத் திரும்பவேண்டும் என்ற ஆசையையே கனவாக யுத்தகாலத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்கள் அநேகர் அருவருக்கத்தக்க செயலைச் செய்துகொண்டிருந்தார்கள். இதில் மிகமுக்கயமானவர் கி.பி. அரவிந்தன்.

யுத்த எதிப்பிலக்கியங்களை வெளியிலிருந்தே அதிகமாகச் செய்யக் கூடியதாக இருந்த காலங்கள் தானே நாம் கடந்து போனவை.

ஆனால் இவர்களைப் போன்றவர்களே வெளியிலிருந்தும் வெட்கமற்ற வகையில் யுத்தத்தை ஆதரித்து வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். அவையே சிறந்த இலக்கியங்களாக அவர்கள் சார்ந்தவர்களால் இன்றும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

தேசத்திற்குத் திரும்புதல் என்ற ஒரு மறைந்த,  இருள்படிந்த கோசத்தை முன்வைத்து தொடர்ந்து எழுதவேண்டிய தேவையே அவர்களுடைய அரசியலுக்குத் தேவையாக இருந்தது. 

அந்தப் போக்கு, பொதுத்தளத்தில் கொண்டாடப்பட்டபோது மறைமுகமாகவேனும் பலருக்கு அதற்குள் போகவேண்டிய தேவை வந்தது. தமது சுயத்தை இழந்த எழுத்துக்களாக அவற்றை எழுதித் தள்ளினார்கள்.  ஒரு பிழையான எழுத்து முறைக்கு பலர் தம்மைக்  கடைசிவரையும் காவுகொடுத்தார்கள்.

இதில் நீங்கள் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒரு விடையம் இருக்கிறது. வன்முறையால் சூழப்பட்ட ஒரு சமூகத்தின் சிந்தனைத் தளம் தனது சிந்திக்கும் ஆற்றலை மறந்து போகும் . 

வன்முறையை மட்டும் சிந்திக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் மக்கள் தமது ஆபத்தை உணர்ந்து கொள்ளும் பொருட்டு புதிதாக அல்லது வேறுமாதிரியாகச் சிந்திக்கும் நிலை ஒன்றையேனும் அணுகிப்பார்க்கமாட்டார்கள். 

அதிகமான அந்த மனங்கள்  அப்படியொரு நிலையில் இறுகி மவுனமாகிப் போய்விடும்.  ஆனால் இதற்குள் இருக்கின்ற சந்தர்ப்பவாதப் புத்திஜீவிகள் இந்தத் தருணத்தை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டுவிடுவார்கள். 

அறிவுஜீவித்தனத்தால் இந்தமாதிரிச் சூழலுக்குள் இருந்து தமது நலன்களைப் பெற்றுக் கொள்ள எந்தவகையான குழறுபடிகளையும் செய்வதற்குத் தயாராக இருப்பார்கள். 

இவ்வாறான செயலில் கண்மூடித்தனமாகச் செயற்பட்டவர்களே நான் மேலே குறிப்பிட்டவர்கள்.  இவர்கள் எழுதிய இலக்கியப்பிரதிகள் பொதுத்தளத்தில் இன்னும் கொண்டாடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

ஆனால் என்னைப் பொறுத்தளவில் இந்த வகைப் போக்கை மறுதலித்து பல இலக்கியப் பிரதிகள் வந்திருக்கின்றன. அவை காலம் கடந்தேனும் பேசப்படும். இவ்வாறு இந்த ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பில் மேற்சொன்ன பலருடைய எழுத்துக்கள் பேசப்பட்டதுபோல் க.கலாமோகனின் எழுத்துக்கள் பேசப்படவில்லை. அவற்றை உள்வாங்கும் பக்குவமும் இன்னும் பலருக்கு வந்து விடவில்லை.

கலாமோகனின் மொத்தப்படைப்புக்களும் உரியமுறையில் தொகுப்பாக்கப்படும் போது புலம் பெயர் இலக்கியம் என்ற கருத்துருவாக்கத்தினது தளம் பலரால் வேறு ஒரு கோணத்தில் உள்வாங்கப்படும். அவை எந்த ஆர்ப்பாட்டங்களுமற்ற மிக நூதனமான கதையாடல்களுக்குள்ளால் இந்த சமூகத்தை ஊடறுத்து பேசுபவை. பலரால் கொண்டாடப்படமுடியாத எழுத்துக்களாக அவை இருக்கும்.



26. வாழ்வையும் வாழ்வினுாடான அனுபவங்களையும், அதன் நெருக்கடிகளையும் புனைவோடு இணைத்து இலக்கியப் பிரதிகள் தரவேண்டும் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் இருக்கிறது. அந்தவகையில் பார்த்தால்கூட, புலம் பெயர்ந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் எண்ணிக்கையளவில் புலம்பெயர் நிலவெளியில் எதிர்கொள்ளும் வாழ்வியல் சார்ந்த சிக்கல்கள் அதிகம் இலக்கியப் பிரதிகளாக வராதததேன்.? அதற்கு கவன ஈர்ப்பு சூழலில் இல்லை என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியுமா?

அதுதான் உண்மை.
எல்லோருமே தமக்குத் தெரிந்த கதைகளை எழுதுவதை விட தெரியாத கதைகளை எழுதுவதில்தான் முன்நிற்கிறார்கள். 

அதனால்தான் மணிரத்தினம் தனது திரைப்படத்தில் மாங்குளத்தில் மலையைக் காட்டியதுபோல் பல கதைகளை இவர்கள் எழுத நேர்ந்து விடுகிறது. அதனால்தான் இவர்கள் எழுதும் பல விடையங்களில் உயிர் இருப்பதில்லை. அவர்களே அந்த உயிரை அறுத்துவிடுவார்கள்.

வெறுமனே இங்குள்ள தெருக்களின் பெயர்களோடு ஊர்களின் பெயர்களோடு ஒரு தட்டையான சிறுகதை ஒன்றை எழுதி காலச்சுவட்டிலோ அல்லது தமிழகத்திலிருந்து வரும் எதாவது பத்திரிகையிலோ பிரசுரித்து விடமுடியும், என்ற ஒரு நிலைதானே இன்னும் இருக்கிறது.அதற்கு எவ்வித புனைவு வித்தைகளும் தேவையில்லை. 

அவர்கள் கேட்கும் விடயங்களுக்கேற்றாற்போல் அவர்களது விருப்பங்களுக்கு ஏற்றாற்போல் அல்லது அவர்களது வியாபாரங்களுக்கு ஏற்றாற்போல் இவர்கள் தமது கதைகளையே திருத்தி மாற்றிக் கொடுத்துவிடத்தயாராய் இருக்கிறார்கள். 

ஈழத்தின்  இலக்கிய வெளியை தீர்மானிப்பவர்களாக இன்று தமிழகத்துப் பதிப்பகத்துறையினர் இருப்பது( நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை) தான் இந்த நிலைக்குக் காரணம்.

இதனால் காலத்தைத் தாண்டி பேசப்படக்கூடிய எழுத்துக்களாக அவை உயிர்த்து நிற்கமுடியாது போய்விடும் அவலம் நேர்ந்துவிடுகிறது.

இப்படியான கதைகளை நம்மில் பலருக்கு எழுத வேண்டிய தேவை ஒருபோதும் இருக்கவில்லை. நாம் வாழ்ந்த பிரதேசத்தின் மக்களை யுத்தம் சிறிது சிறிதாய்த் தின்று கொண்டிருந்த போது அதற்கெதிராய் கதைகளையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிய பலர் வெளிநாடுகளில் தான் இருந்தார்கள். 

ஆனால் அந்த யுத்த எதிர்ப்பினைத் தான் புலியெதிர்ப்பு எனக் குறுக்கி அடையாளப்படுத்துகிறார்கள். அது தமிழ்த் தீவிர தமிழ்த் தேசியவாதிகளது அடையாளப்படுத்தல். புலிகள் யுத்தத்தை மாத்திரம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது நமக்கு வேறு எந்தத் தெரிவும் இருக்கவில்லை.

சோபாசக்தி எழுதிய காய்தல் என்ற சிறுகதையை நீங்கள் வாசிக்க வேண்டும். அது மிக நுட்பமான பாசத்தை நூல்  இழையில் தொங்க விட்டுத் தேடும் ஒரு கதை. சோபாசக்தி எழுதிய முதலாவதோ இரண்டாவதே கதை அது. "அம்மா"வில் வெளியானது. அதில் வருகின்ற அங்கிள் ஒருவரை நான் உட்பட வெளிநாட்டுக்கு வந்த ஒவ்வொரு பொடியளும் தேடிக் கொண்டிருந்தார்கள். அந்தக்காலத்தில் அப்படியொரு அங்கிள் கிடைத்தவர்கள்  பெரும் அதிஸ்டசாலிகளாக இருந்தார்கள். 

சோபாவின் மற்றக்கதைகள் பேசப்பட்ட அளவிற்கு காய்தல் சிறுகதை பேசப்படவில்லை. அதற்குக் காரணம் விசேடமாக வேறெதுவும் இல்லை.

27. போராடும்போதும் இயக்கங்களின் கதையே முக்கியமானதாக கருதப்பட்டது எனில், போர் அற்ற சூழலிலும் அப்போராளிகளின் கதைகளே இலக்கியம் என்றவகையில் முக்கியமாகப்போனது என கருத எது காரணமாக அமைந்திருக்கிறது?
எக்காலத்திலும் இயக்கங்களினதும், போராளிகளினதும் கதைகளுக்கு அப்பால் “ அதற்குள் வாழ்ந்த அனுபவித்த மக்களின் கதைகள் ஏன் கேட்கப்படாமலே இருந்து வருகிறது. நிச்சயமாக, அந்த மக்களிடம் முற்றிலும் வேறான கதைகளும், வாதைகளும், அனுபவங்களும் இருக்கின்றனதானே...?

முதலாவது கேள்விக்கு ஒற்றைப் பதில்தான். தேசியத்தின் போர்.

இரண்டாவது கேள்விக்கும் ஒற்றைப்ப பதில்தான். ஆம்

இப்படிச் சொல்வதால் நீங்கள் கோபிக்கக் கூடாது. ஏனெனில் இதற்கான பதில்கள் பொதுவாக மேலேயுள்ள கேள்விகளிற்கான பதில்களில் இருப்பதாகவே உணருகிறேன். 

அதுவுமல்லாமல் பலர் இந்த யுத்தத்தின் அதிகமான பக்கங்களில் பங்காளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தமக்கு மனதளவில் இருக்கும் பாதிப்புக்களை எழுதியே கடக்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எழுதுவதை நாம்வாசிக்கவேண்டியதே எமது பெரும் பணி என நினைக்கிறேன். 

அவர்கள் வாழ்ந்த சூழல் அவர்களை இப்படி எழுத ஒருபொழுதும் அனுமதித்ததில்லை. அவர்கள் இப்படி ஒருகாலம் தாமெல்லாம் எழுத வேண்டி வரும் என்று அவர்கள் கூட நினைத்திருக்கமாட்டார்கள். உண்மையில் இது அவர்களுடைய காலம். அவர்கள் தமது கதைகளெல்லாவற்றையும் எழுதவேண்டும்.

28. மக்களுக்காக போராடுவதாகச் சொன்ன அனைத்து அமைப்புக்களும், கட்சிகளும் எப்போதும் சௌகரிகமாகவே இருக்கின்றன. அந்த அமைப்புக்களும், கட்சிகளும் தாங்கள் உருவாக்கும் கருத்துக்களே மக்களின் விடுதலைக்கு அவசியமானது என முன்வைக்கின்றன. இதற்கு அப்பால், மக்களின் தேவைகள் வேறுவிதமாக இருக்கின்றன. களச்செயற்பாட்டினுாடாக மக்களிடம் சென்று - அவர்களின் தேவைகள் பற்றி அறிந்து கருத்துக்களை வடிவமைக்காமல் தொடர்ச்சியாக தங்களின் கருத்துக்களையே மக்கள்மீது திணிப்பது ஏன் என்று கருதுகிறீர்கள்? இது ஜனநாயகரீதியான செயற்பாடாக கருத இடம்தருமா?

பெரும்பான்மையான அமைப்புக்களினதும்  கட்சிகளதும் இயக்கங்களதும் நிலை இதுவாகவே இருக்கிறது. பின்நோக்கி நீண்டகாலத்திற்கு நீங்கள் விளக்கம் தேடிப் போகத் தேவையில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்திற்கென ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இயக்கங்கள் குறித்த இன்றைய நிலையே இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம். 

மக்களே எம்மை ஆயுதம் தாங்க வைத்தவர்கள். மக்களே எம்மைப் போராட நிர்ப்பந்தித்தார்கள் எனப் பொய் சொன்னபோதெல்லாம் நாம் நம்பிவிடவில்லையா?

ஆண்டபரம்பரை இன்னொமுறை ஆள நினைப்பதில் என்ன தவறு என்று நினைத்து நாம் போராட வரவில்லை  மக்களின் விடுதலைக்காக போராட வந்திருக்கிறோம் என்று சொன்ன   வார்த்தைகளில் நாம் சொக்கிப்போய் மயங்கி விடவில்லையா?  மயங்கினோம் தானே.

பின்னர் அத்தனை இயக்கங்களும் போராட வந்தவர்களையும் ஆதரவாய் நின்றவர்களையும் கொன்று போட்டபின்னும் தேசியம் குறித்தும் தேசத்தின் விடுதலை குறித்தும் இன்னமும் நமது உணர்ச்சிக் கவிஞர்கள் பாட்டெழுதிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

கிஞ்சித்தும் வெட்கம் வந்துவிடாத மனதில் எல்லோருமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  நமக்கு நன்றாகத் தெரியும் புளொட் என்ற அமைப்பும் ஈபிஆர் எல் எவ் என்ற அமைப்பும் ரெலோ என்ற அமைப்பும் புலிகள் என்ற அமைப்பும் எத்தனை வகையான கொலைகளை நமது மக்கள் மீதும் அவர்களது பிள்ளைகள் மீதும் நிகழ்த்தின என்று? 

அப்படியிருந்தும் அதே பெயர்களோடு இன்னமும் ஈழத்தில் தேர்தல் கட்சிகளாக மாறி நின்று வெற்றியையும் தோல்வியையும் பெற்றுக் கொண்டுதானே இருக்கின்றன.

நமது கைகளும் ரத்தக்கறை படிந்தன தான் என்று சொல்லக்கூடிய சித்தார்த்தன்கூட தனது கொலைகார அமைப்பின்  பெயரை இன்றுவரை விட்டுக் கொடுக்க மனமற்றே இருக்கிறார். 

தமது அடையாளங்களாக அவர்கள் அதனையே கருதுகிறார்கள். அந்த அடையாளங்களை அவர்கள் ஒருபோதும் இழந்து விட விருப்பமில்லை. 

இந்தச் சர்வாதிகார மனநிலை கொண்ட அமைப்புக்கள் திருந்திவிட்டதாகவோ ஜனநாயக ரீதியில் எப்போதாவது மக்களை அணுகுவார்கள் என்றோ நாம் நினைத்தால் நாம்தான் ஏமாளிகள்.  உண்மையில் மக்களுக்கும் இன்று அவர்கள் யாருமே தேவையில்லை.

29. இலக்கியம் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? ஏன் எழுதுகிறீர்கள்?

நீங்கள் எப்போதாவது குதிரை ரேஸில் காசுகட்டிவிட்டு நின்று குதிரை ஓடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது அப்படிக் காசைக் கட்டிவிட்டு பார்த்துக் கொண்டு நிற்பவரின்  அருகில் ஒரு பத்து நிமிடமாவது நின்றிருக்கிறீர்களா? அப்படி நின்றிருப்பீர்களானால் இலக்கியம் என தனித்த ஒரு சாமான் குறித்து இப்டியொரு கேள்வியை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். அது தனியே எழுதுப்படுவது மட்டுமல்ல.

30. கடைசியாக ஒரு கேள்வி, ஈழத்திற்கு வந்து அதாவது தாய் மண்ணிற்கு வந்து வாழ்வதில் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் இருக்கும் சிக்கல்கள் என்ன?

றியாஸ்.. இங்கே தாய் மண் தந்தை மண் என்ற எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. அப்படி வருவதற்கு தற்பொழுது எனக்கொரு சிக்கலும் கிடையாது. வியாபித்த உலகம் யார் எந்த மூலையில் இருந்தாலும் ஒன்றென்ற காலத்திற்கு வந்து விட்டிருக்கிறது.

நான் பிறந்து வாழ்ந்த இடம் இன்று யுத்தமற்று இருப்பதையிட்டு மிகவும் சந்தோசம் கொள்கிறேன். ஆனால் நினைவிலிருந்த அந்த வரைபடத்தை இன்று  யுத்தம் அழித்து தலைகீழாக மாற்றிவிட்டிருக்கிறது. இதில் தாய் மண்ணை எங்கே  தேடுவது? உண்மையில் அதுவும் ஒரு பொய்க்கதைதானே.