புதன், ஆகஸ்ட் 17, 2016

ஆயுதங்கள் படைக்கப்படுவதில்லை. செய்யப்படுகின்றன.

நேர்காணல் - மேமன்கவி




ஈழத்து நவீன இலக்கியம் என பேசப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம், இலங்கையின் தெற்கைச் சேர்ந்த இலக்கியச் செயற்பாட்டாளர்கள் எவரையும் பொருட்படுத்தாத ஒரு போக்கே நிலவி வந்திருக்கிறது. அதனுாடாக மறைக்கப்பட்ட மலைத்தமிழ் இலக்கியம் மற்றும் தென்னிலங்கை இலக்கியச் செயற்பாடுகளை வெளியே கொண்டுவந்து பேசுபொருளாக ஆக்கவும் விவாதிக்கவுமான ஒரு சூழலை சிந்தித்தபோது, மேமன்கவி நினைவுக்கு வந்தார். அவரை நேர்காணல் செய்வதற்கு 2011 ஆண்டு நினைத்தேன். இப்போதுதான் அது சாத்தியப்பட்டது. இடையில் பல காரணங்கள் வந்து தடுத்துவிட்டன.

மேமன் என்ற இனம் உலகளவில் கூட 15 இலட்சத்திற்கு உட்பட்டவர்களே. இலங்கையில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் இருக்கலாம். மேமன் மொழிக்கு ”லிபி” இல்லை. இந்தியாவிலிருந்து துரத்தப்பட்டு பாகிஸ்தான், ஆபிரிக்கா, இலங்கை என குடியேறினார்கள். இந்தச் சிறியளவான இனத்தை பற்றி அறியவும் அவரின் தமிழ் இலக்கியச் செயற்பாடு குறித்தும் , ஈழத்து இலக்கிய வாதிகளால் அவர் எப்படி எதிர்கொள்ளப்பட்டார் என்பது குறித்தும் பேசவைத்திருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். 


1.நீங்கள், மேமன் இனத்தை சேர்ந்தவர். வட இந்தியாவின் குஜராத் மானிலதில் அதன் தொடர்ச்சி இருக்கிறது. உங்கள் மொழி கூட மேமன். ஆனால், தமிழில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். எனவே, முதல் சில கேள்விகள் உங்களைப்பற்றியும், உங்கள் இனத்தைப்பற்றியும் அமைக்க விரும்புகிறேன். மேமன் இனத்தைப்பற்றி சொல்ல முடியுமா?

   மேமன் இனம் என்பது வட இந்தியாவின் குஜ்ராத் மாநிலத்திலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்தில் வாழும் இனம். சுன்னி முஸ்லிம்கள்.  அதில் பெரும்பாலானவர்கள்  ஹனபி மதஹப்பை பின்பற்றுபவர்கள். அச்சமூகம் பேசுகின்ற மொழி மேமன் மொழி என அழைக்கப்படுகிறது. வரி வடிவம் அதற்கு இல்லை. அது சிந்தி மொழியும் குஜ்ராத்தி கலந்து பிறந்த மொழி. இந்தியாவில் இருந்த பொழுது முற்றும் முழுதுமாக வர்த்தகச் சமூகமாக இருந்தது. அங்கு இருந்த பொழுது  க்ஜ்ராத்தியூ அவர்கள் பாடசாலை மொழியாக கற்றார்கள். பின் வந்த நாட்களில் இந்தியா–பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது ஏற்பட்ட இந்து முஸ்லிம் கலவரத்தின் காரணமாக மேமன் வாழ்ந்து வந்த குஜ்ராத் பிரதேசத்தில் இருந்த குத்தியானா, ஜூகட் பாட்வா போன்ற கிராமங்;களிலிருந்து அவர்கள் விரட்டப்படுகிறார்கள். பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் இந்தியாவின் சில பகுதிக்கும் என அவர்கள் இடம் பெயர்கிறார்கள். இதில் இலங்கையை அவர்கள் தேர்வுச் செய்வதற்கு ஏலவே   மேமன்கள் பெரும் வர்த்தகர்களாக தம்மை ஸ்தாபித்து வைத்திருந்தார்கள். இப்படிதான் ஈழத்தில்; மேமன் சமூகம் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. இன்று 10000 பேர்கள் அளவில் இருப்பார்கள். இன்றைய இந்தியாவில் அவர்கள் உருது மொழி பேசும் முஸ்லிம்களுடன் அடையாளப்படுத்தப்படுகிறார்கள் உலகம் பூராவும் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இலங்கை என்று சுமார் 10-15 லட்சம் இருப்பார்கள். மேமன் சமூகத்தைப் பொறுத்த வரை அவர்கள் இங்கு குடியேறிய பொழுது முழுக்க முழுக்க வர்த்தகச் சமூகமாகவே குடியேறியது. ஆனால் கால அளவில் இங்கு குடியேறிய மேமன்கள் தம் இன மொழிக்கு எழுத்து வடிவம் கொண்டிருராத நிலையில், இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் அவர்கள் கல்வி பயின்ற குஜ்ராத்தி மொழியினைதான்  இங்கு குடியேறிய அச்சமூகத்தினரின் முதல் தலைமுறையினர் தம் எழுத்து மொழியாக கையாண்டார்கள். அச்சமூகத்தின் இரண்டாம் தலைமுறையினருக்கு குஜ்ராத்தியினை பயிற்றுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது சாத்தியமாக வில்லை. இன்று மேமன் சமூகத்தினரால்  1930களில் புறக்கோட்டையில் அமைக்கப் பெற்ற மேமன் பள்ளியில்; (மேமன் வர்த்தகர்களால்; அது  அமைக்கப்பட்டதன் காரணமாக அது மேமன் பள்ளி என அழைக்ப்பட்டதே தவிர மற்றபடி அது சுன்னிக்கான பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறதே தவிர அது சுன்னி முஸ்லிகளுக்கான ஹனபி மதஹபு முறைகள் பின்பற்றப்படும்; ஒரு பள்ளிவாசல்)  உருது மொழியில் பயான்கள் இடம்பெறுகின்றன. 
அச்சமூகத்தின் அடுத்த தலைமுறையினர் பாடசாலையில் இணைந்து இங்கிருந்த ஏதோ ஒரு மொழிமூலம் தம் கல்வியைத் தொடர வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு அவர்தம் வசதி வாய்ப்புக்களுக்கு ஏற்ப சிங்களம் ஆங்கிலம் தமிழ் ஏதோ ஒரு மொழியில் தம் கல்வியைத் தொடர வேண்டி இருந்தது.  ஆனாலும் ஆரம்ப காலத்தில் பாடசாலைக் கல்வி கற்கச் சென்ற முதல் தலைமுறையினர் ஆரம்ப கல்வியோடு தம் பாடசாலை கல்வியை நிறுத்தி வர்த்தகத்துறையில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் உயர் கல்வி கற்று பட்டாதாரிகளும் பல்வேறு துறைச் சார்ந்த நிபுணர்களும் அச்சமூகத்தில் தோன்றினார்கள். ஆனால் தமிழ் இலக்கியவாதிகள் தோன்றவில்லை.

02. மதரீதியாக நீங்கள் முஸ்லிம், ஆனால், இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம்கள் சோனக இனத்தவர்கள், அவர்களுக்கும் மேமன் இனத்திற்குமிடையிலான வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமைகளை எப்படி அடையாளப்படுத்த முடியும்?

மேமன் சமூகத்திற்;கும் சோனகர்களுக்கும் பெரிதான வித்தியாசம் ஒன்றுமில்லை. மத ரீதியாக இரு சமூகமுமே சுன்னி முஸ்லிம்கள். மொழியும்; கலாசாரமும்  வேறுபடுகிறது. முத்ஹபில் மேமன்கள் ஹனபிகள். சோனகர்கள் ஸாபிகள் அவ்வளவுதான்.

03. லிபிகள் அற்றது உங்கள் மேமன் மொழி, பேச்சு மொழியாக மட்டுமே இருக்கிறது. இன்னும் இலங்கையில் அந்த மொழி பேசப்படுகிறதா? லிபிகள் இல்லாது போயினும், பேச்சு மொழியாக இருக்கும் மொழியில்கூட பாரம்பரிய வாய்மொழிக் கவிதைகள், கதைகள் என்ப இருக்கும், அப்படி மேமன் மொழியில் இருக்கும் வாய்மொழிக் கவிதைப்பாடல்கள், மற்றும் கதைகளில் ஒன்றை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யமுடியுமா?

மேமன் மொழி இன்றும் மேமன்களிடையே பேசப்படுகிறது. அவர்களின் வீட்டு மொழி மேமன் மொழியாக இருக்கிறது. வாய்மொழிக் கவிதைகள், கதைகள் கவிதைப்பாடல்கள் என பெரிதாக இங்கு குடியேறிய பொழுது  அச்சமூகம் கொண்டு வந்ததாக தெரியவில்லை. 
இங்கு வந்த புதிதில் அவர்களது திருமண வைபவங்களில் சிற்சில வைபவங்களில்  கலிகம்பு கும்மியடி போன்ற வடிவங்குக்கு ஒத்த ராஸ்ரா என்ற வடிவத்தில் ஒரு பெண்மணி டொல் என்ற வாத்தியத்தை இசைக்க, அவரை சுற்றி கைகளையும் கலி கம்புகளையும் கையேற்று குஜ்ராத்தி உருது மேமன் மொழி கலந்த  பாடல்களை பாடுவார்கள். இன்று அந்த முறை அருகி விட, அவ்விடத்தில் இந்திப் படப் பாடல்களை பாடுகிறார்கள்.
இந்தியாவிலிருந்து வெளியேறிய பொழுது அச்சமூகத்தின் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானில் குடியேறினார்கள். ஆதில் இங்கு குடியேறியவர்களின்  உற்றார் உறவினர்களும் இருந்தார்கள். அவர்களுடனான தொடர்பு இன்றும் இருக்கிறது.  அதன் காரணமாக உருது மொழிப் பரிச்சயம் ஏற்பட்டது. இன்று ஈழத்தில் வாழும் மேமன் சமூகத்தினரின் ஆன்மீக ரிதியான செயற்பாடுகளில் உருது மொழி  கணிசமான பங்கினை செலுத்தி வருகிறது. (உதாரணத்திற்கு  மேமன் பள்ளியில்   பயான்கள் உருது மொழியிலே நிகழ்த்தப்படுகின்றன. அங்கு பாடப்படும் கஸிதாக்கள் நாத்கள் உருது மொழியிலேயே அமைகின்றன.

04. முஸ்லிம்கள் தங்களை சிறுகதையாடல் சமூகமாக உணர்ந்து, அவர்களுக்கான ஒரு அரசியலை முன்னெடுக்கும்போது, அந்த சமூகத்திற்குள்ளாகவே இருக்கும் மேமன் இனத்தையும் கவனத்திற்கொண்டு தங்கள் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக கருதுகிறீர்களா? இதில் விமர்சனங்கள் ஏதும் உங்களுக்கு இருக்கிறதா?

அரசியலை பொறுத்த வரை   இங்கு குடியேறிய  மேமன்கள் ரொம்பவும் அபூர்வமாக அரசியிலில் ஈடுபட்டார்கள். இன்று அரசியலைப்  பொறுத்தவரையும்  அதே நிலைதான். ஈழத்தைப் பொறுத்த வரை ஈழத்து முஸ்லிம்களின் அரசியல் வேலைத்திட்டங்களுடன் தம்மை ஒன்று கலந்த நிலையில்தான் மேமன் சமூகத்தினர் செயற்பட்டு வருகிறார்கள்.




05. சரி, நீங்கள் இலக்கியத்தை எப்படித் தேர்வு செய்தீர்கள்.? அதுவும், தமிழ் இலக்கியத்தை தேர்வுசெய்ததற்கான காரணம் என்ன? ஏன் இப்படிக் கேட்கிறேன் என்றால், நீங்கள் வாழும் பகுதி முற்றிலும் சிங்களமொழியை பயன்படுத்தும் பகுதி. அதிலும் உங்கள் இனத்தை சேர்ந்த அனைவருக்கும் சிங்களத்தில் அதிக பரீட்சயம் இருக்கிறது. எனவே சிங்களத்தைகூட பயன்படுத்தியிருக்க முடியும், ஏன் தமிழ் இலக்கியத்தை தேர்வு செய்தீர்கள்?

மேமன் சமூகத்தினரை பொறுத்தவரை அவர்களது மேமன் மொழி வரிவடிவம் இல்லாத மொழி என்பதனால் அந்த சமூகத்தில் பிறந்தவர்கள் ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் தம் பாடசாலை கல்வியைத் தொடர வேண்டியவர்களாக இருந்தார்கள். எனது தந்தையார் எங்களை தமிழ் மொழி மூலமான பாடசாலையில் சேர்த்தார். அதுவே நான் தமிழ் கற்றுக் கொள்ளும் சூழலை உருவாக்கியது. பாடசாலையில் கற்கும் பொழுதே வாசிப்புப் பழக்கம் தொற்றிக் கொண்டது. அந்த நாட்களில் நான் வாசித்தது துப்பறியும் நாவல்கள். அவ்வாறான வாசிப்பின் பொழுதுதான் என் தந்தையார் நிர்வகித்த ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த எஸ்.ஜி.சேகர் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஓவியரும் கூட. நல்ல கலை இலக்கிய ரசிகர். ஒருநாள் என் கையில் இருந்த துப்பறியும் நாவல் கண்டு இந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்க வேண்டாம் எனக் கூறி ஒரு தமிழ் நாவலை கையில் கொடுத்து இந்த மாதிரியான புத்தகங்களைப் படியுங்கள் என்று கூறினார். அவர் எனக்குக் கொடுத்த தமிழ் நாவல் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர். அந்த நாவலின் வாசிப்புத்தான் என் வாசிப்புப் பயணத்தை திசை திருப்பியது. அன்று தொடக்கம் ஈழத்து மற்றும் தமிழகத்து சஞ்சிகைகள், நாவல்கள், சிறுகதைகள் என்றெல்லாம் வாசிக்கத் தொடங்கினேன். அந்தச் சஞ்சிகைகளுக்கு கேள்வி பதில் பகுதிக்கு கேள்விகள், வாசகர் கடிதப் பகுதிகளுக்குக் கடிதங்கள் எழுதினேன். இந்த வாசிப்பின் பொழுதுதான் எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை தோன்றியது.  நஜிமுதீன் (இன்று எம்முடன் இல்லை) என்ற நண்பருடன் இணைந்து தலா ஒரு சிறுகதை எழுதினோம். அதனை முஸ்டாக்; முஹம்மது என்பவர் தமிழ் அமுதம் சஞ்சிகை முதல் இதழை கொண்டு வந்திருந்தார். கொழும்பு டாம் வீதியில் உள்ள அவரது கடையில் இருந்தார். அவரை அணுகி நாங்கள் இருவரும் அந்தச் சிறுகதைகளைக் கையளித்தோம். துரதிர்ஷ;டமாக அவரது அக்கடை தீப்பற்றிக் கொண்டது.  ஆனாலும் கதை எழுதும் எனது ஆர்வம் குறையவில்லை. இந்தக் கலை இலக்கிய உணர்வு பரவலாகிக் கொண்டிருக்க, எனது வாசிப்பு செம்மைப்படுத்திக் கொண்டிருந்தது. இதேவேளை எனது இன – குடும்பச் சூழலில்; தமிழில் கலை இலக்கியங்கள் வாசித்தல், கலை இலக்கியங்களைப் பற்றிய உணர்வு, புனைவு, சிருஷ;டித்தனம் என்ற மாதிரியான விடயங்கள் சாத்தியமில்லாத நிலையில் இவை எனக்குள் எழ சிறுவயதிலேயே இருந்த  சில அம்சங்கள் காரணமாக இருந்தன.

புத்து வயதாக இருக்கும் பொழுதே உறங்க செல்லும் வேளை என் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு கதைகள் சொல்வேன். எங்க வீட்டின்; கதை சொல்லியாக இருந்தேன். அக்கதைகள் ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்ற மாதிரியான பாட்டிக் கதைகள் அல்ல. விநோதமான கதைகள். திடீர் திருப்பங்கள் கொண்ட கதைகள். அவை நானே புனைந்த கதைகள். அப்படிச் சொல்லும் கதைகளை விறுவிறுப்பான கட்டத்தில் நிறுத்தி நாளை சொல்கிறேன் என்பேன். உம்மா தூங்க அனுப்புவதற்கு முன்பே என் கதை கேட்க அவர்கள் நேர காலத்துடன் தூங்க வந்து விடுவார்கள். புனைவு, சிருஷ;டித்தனம், தொடர்கதைகளின் அத்தியாயங்கள் விறுவிறுப்பான இடத்தில் நிறுத்துதல், மர்ம நாவல்களின் விறுவிறுப்பும் மர்மமும், மேஜிக்கல் ரியலிசம் என்பவற்றை பற்றிய பரிச்சயம் எனக்கு ஏற்படுவதற்கு முன்பே எனது பத்து வயதில் அத்தன்மைகள் நான் புனைந்து என் சகோர சகோதரிகளுக்கு  சொன்ன கதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன.

ஆனாலும் தமிழ் அமுதம் சஞ்சிகைக்குக் கொடுத்த கதை வெளிவராத நிலையில் எனது வாசிப்பு மேலும் விரிவடைந்தது. அக்காலகட்டத்தில் எழுத வேண்டும் என்ற உணர்வை விட பரந்த நிலையில் வாசிப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வே மேலோங்கி நின்றது. சிறிது காலத்திற்கு பின் தமிழ் அமுதத்திற்கு கொடுத்திருந்த கதையின் பிரதியை எடுத்துப் பார்த்தேன். அது சிறுகதையாகவே இருக்கவில்லை என்று எனக்குப் பட்டது. இதற்குக் காரணம் அக்கால கட்டத்தில் தமிழகத்து, ஈழத்து முக்கிய சிறுகதையாளர்கள், நாவலாசிரியர்கள், கவிஞர்களின் பிரதிகளைப் பற்றிய பரிச்சயம் உண்டாகி இருந்தது. அத்தகைய வாசிப்பின் பொழுது எனக்குள் ஒரு எண்ணம். கவிதை எழுதி பார்ப்போம் என்று. முறையாக பழந்தமிழ் இலக்கியங்களை, யாப்பிலக்கணத்தை ஒரு பண்டிதரிடம் பயிலும் சூழல் கிடையாது. பாடசாலை வாழ்க்கை 8ஆம் வகுப்பு வரை. வாசிப்பு வழியாக கவிதை நூல்கள் படித்த அநுபவம். சுயமாக கவிதை இலக்கணத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்தேன். அப்பியாச கொப்பி கொப்பியாக கவிதைகள் எழுதிக் குவித்தேன். எனது முதலாவது கவிதை 1974ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் தமிழே என் மூச்சு என்ற தலைப்பில் சந்தத்துடன் அமைந்திருந்தது. அந்த நாட்களில் தமிழ்நாட்டு, திண்டிவணத்தில் பாரதிதாசனால் நடாத்தப்பட்ட 'குயில்' சஞ்சிகையில் ( டாக்டர் வகாப் என்பவரின் உதவியில்.)  எதுகை மோனையுடன் கூடிய என் பல கவிதைகள் வெளிவந்தன. நம் நாட்டுப் பத்திரிகைகளில் சிறுவர் பகுதியில் சிறுவர் கவிதைகள் வெளிவந்தன.அக்காலகட்டத்தில் புதுக்கவிதை பரிச்சயம் ஏற்படுகிறது. மு.மேத்தாவின் கண்ணீர்பூக்கள்  முதற் கொண்டு ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமை எனப் பல புதுக்கவிதைகள் வாசிக்கக் கிடைத்தது.

இப்படித்தான் என் தமிழ் இலக்கியப் பயணம் தொடக்கம் பெறுகிறது. என் இலக்கிய வாழ்வுப் பயணம் பல காரணிகளால் வார்க்கப்பட்ட ஒன்று. எனது இலக்கியப் பயணத்தின் ஆரம்பத்திலிருந்தே எனக்கு இந்த நாட்டின் முக்கிய படைப்பாளிகளின் தொடர்பு தொடங்கி  விடுகிறது.  அதற்கு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன்  என் இலக்கியப் பயணத்தின்  ஆரம்பத்திலே ஏற்பட்ட தொடர்புதான் காரணமாக இருக்கிறது.

1974ஆம் ஆண்டு எனது முதல் படைப்பு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் இன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுவது போல், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தேயிலை பிரசாரச் சபையின் கேட்போர் கூடத்தில் அடிக்கடி இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீடுகள் நடைபெறும். பத்திரிகையில் அவை பற்றி வரும் செய்திகளைப் பார்த்து அங்கு போய்விடுவேன். அங்குதான் ஈழத்தின் முக்கியமான பல எழுத்தாளர்கள் வருவார்கள். (டொமினிக் ஜீவா முதல் சில்லையூர் செல்வராசன், ஈழவாணன்) அதேபோல், இன்றைய கொழும்பில் அமைந்துள்ள பூபாலசிங்கம் புத்தகசாலை போல் அன்று வெள்ளவத்தையில் இந்த நாட்டின் முக்கிய படைப்பாளியான செ.கணேசலிங்கன் நடத்திக் கொண்டிருந்த விஜயலட்சுமி புத்தகசாலை இருந்தது. அதிலிருந்துதான்  இப்படியான தமிழக ஈழத்து முக்கிய சஞ்சிகைகள், நூல்களைப் பெற்றுக்கொண்டேன். அங்கும் ஈழத்தின் பல படைப்பாளிகளைக் கண்டேன். மல்லிகையை பாடசாலையில் கற்கும் காலத்திலேயே ஆமர் வீதியில் அமைந்துள்ள புத்தகக் கடையில் முதன் முதலாக வாங்கினேன்.
 1974ஆம் ஆண்டு நடுப்பகுதி புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் நடந்துகொண்டிருந்தேன். கையில் மு.தளையசிங்கத்தின் போர்ப் பறை நூல். (அன்றைய காலகட்டத்தில் அந்த நூல் பேசிய விடயங்கள் முழுமையாக விளங்கியது என்று சொல்ல மாட்டேன். அதனை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருந்தேன்.) முன்னால் ஒருவர் நடந்து கொண்டிருந்தார். அவர்தான் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள். அவருடன் பேச வேண்டும் என்ற ஆசை. ஆனால், தேயிலை பிரசார சபையில் நடந்த கூட்டங்களில் அவரது ஆவேச பேச்சுக்களைக் கேட்டதால் ஒரு பயம் இருந்தது. ஆனாலும் அன்று தைரியத்தை வரவழைத்து பின்னால் ஓடி அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஆச்சரியத்துடன் பார்த்தார். கையில் உள்ள மு.தளையசிங்கத்தின் போர் பறை நூல்..... 19 வயது மேமன் பாய் பொடியன் தமிழ் இலக்கியமும், தமிழ்க் கவிதை பற்றியும், கவிதை என்றும் பேசுகிறான் என்பதுதான் அவரது ஆச்சரியத்திற்குக் காரணம். அன்றைய நாட்களில் ஒவ்வொரு மாதமும் மல்லிகையை முடித்து, கொழும்பு வந்து புறக்கோட்டை மலிபன் வீதியில் அமைந்துள்ள அவரது அபிமானியும் இலக்கிய ரசனையாளருமான .குருசாமி அவர்களது கடையில்தான் தங்குவார். அங்கு என்னை அழைத்துச் சென்றார். அந்த சந்திப்பின் பயன் இரண்டு மாதம் கழித்து,  மல்லிகை இதழ் ஒன்றில் இளந்தளிர் என்ற தலைப்பில், எனது சிறிய புகைப்படம் போட்டு, அறிமுகக் குறிப்பு எழுதி இருந்தார். எனது முதல் கவிதை அச்சில் கண்ட பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட பன்மடங்கான சந்தோஷம் எனக்கு. இந்த நாட்டு முக்கியமான ஒரு இலக்கிய சிறுசஞ்சிகையான மல்லிகையில் என்னைப் பற்றிய அறிமுகம். அதுவே என் இலக்கியப் பயணத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவருடனான தொடர்பு மூலம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க தொடர்பு ஏற்படுகிறது. அந்தத் தொடர்பு காரணமாக  மார்க்ஸியம் பற்றிய பரிச்சயம் ஏற்படுகிறது. கருத்தியல், அரசியல், வர்க்கம், கோட்பாடு என்ற அறிவு பற்றி விளக்கம் கிடைக்கிறது. அதன் பயனால் மு.தளையசிங்கத்தின் போர் பறை போன்ற புத்தகங்கள் புரியத்தொடங்குகின்றன.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, பிரேம்ஜி ஞானசுந்தரம், ராஜஸ்ரீகாந்தன், சோமசுந்தரன், லெ.முருகபூபதி, மு.கனகராஜன் இப்படியாக முற்போக்கு இலக்கிய இயக்க உறுப்பினர்களுடன் நெருக்கம் ஏற்படுகிறது. மார்க்ஸிய நூல்களைத் தேடித் தேடி படிக்கிறேன். இன்றைய எனது இந்த இலக்கிய வளர்ச்சிக்கு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பே அடிப்படை காரணியாக அமைந்தது.

 இன்றைய வரையிலான எந்தவொரு இலக்கிய அரசியல் சமூக கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பும் அதன் மூலம் கற்றுக்கொண்ட மார்கஸிமும் தான் எனக்கு வழி வகுத்தது.

தாய்மொழி தமிழ் அல்லாத ஒருவர் என்ற வகையில் எனது 19வது வயதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பின் வெளியீடாக எனது முதலாவது தொகுதி யுகராகங்கள் வெளிவருகிறது. எழுத வந்த இரண்டு வருடத்திற்குள் ஒருவர் புத்தகம் போடக்கூடாது என்ற இன்றைய  என் கருத்துக்கு மாறாக அந்நூல், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினர்களின் ஊக்கத்தின் பேரில் வந்தது.

இவ்வாறாக, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பு மார்க்ஸியத்தினை கற்றுக் கொண்டதன் மூலம் இற்றை வரையிலான எந்தவொரு பிரச்சினையும் ஆழமாகவும் அவதானமாகவும் நோக்குவதற்கு வழிவகுத்தது. அந்த இயக்கத்தைப் பற்றி எந்தவொரு விமர்சனமும் எனக்கு இருக்கவில்லை. இன்றும் இல்லை. ஏனெனில் அந்த இயக்கம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. இன்று அந்த இயக்கம் இயங்காவிடினும் அக்கூற்று மறப்பதற்கில்லை. இதனை நான் மார்க்ஸியத்தையும் முற்போக்கு இலக்கிய இயக்கத்தை இன்றும், அன்றும் எதிர்த்தவர்களும், எதிர்ப்பவர்களும் ஏற்றுக்கொண்ட உண்மை.

6. இலங்கையில் உங்களைத்தவிர உங்கள் இனத்திலிருந்து வேறு யாரும் இலக்கியச் செயற்பாட்டில் இருக்கிறார்களா?

மேமன் சமூகத்தினர் ஈழத்தில் குடியேறியப் பொழுது அதன் பல்வேறு பிரதேசங்களில் குடியேறினார். அதில் யாழ்ப்பாணமும் ஒன்று. அவ்வாறாக குடியேறிய மேமன் சமூகத்தில் பிறந்த அப்;துல் சத்தார் என்பவர் அங்கு இருந்த காலத்தில் தமிழில் சில கவிதைகள் எழுதி இருந்தார். ஆனால் தொடர்ச்சியாக தீவிரமாக தமிழ் இலக்கியப் பணியில் அவரால் ஈடுபட முடியவில்லை. எனது இலக்கியப் பிரவேசத்திற்கு பிறகு அப்துல் சத்தாரின் மகன் நவாஸ் கவிதைகள் செய்தி கட்டுரைகள் எழுதும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மற்றபடி வேறு யாருமில்லை. 

7. உங்கள் சமகாலத்தில் இந்தியாவில் பல வகை கவிதைப்போக்குகள் நிலவின, எனினும், வானம்பாடி இயக்கத்தின் எடுத்துரைப்பு முறையை நெருங்கிய ஒரு போக்கை நீங்கள் தேர்வு செய்திருக்கிறீர்கள் அதற்கென்று பிரதியேக காரணங்கள் ஏதும் இருக்கிறதா?. வானம்பாடிகளுடன் போட்டியிடத்தக்க துல்லியமான கவிதை பிரதியாக்கத்தை எண்பதுகளில் நீங்கள் மட்டுமெ ஈழத்தில் செயற்படுத்தினீர்கள் என்பது எனது அணுமானம். இதை பாராட்டாககூட எடுத்துக்கொள்ளலாம். உங்களைப்போல, அன்று வேறு யாரையும் ஈழத்தில் சுட்டிக்காட்ட முடியுமா?

எனக்கு புதுக்கவிதையை எழுத தூண்டியது என்னவோ வானம்பாடி இயக்கத்தின் தாக்கம் தான். ஆனால் மிக குறுகிய காலத்தில் அவ்வியக்கத்திற்கு எதிரான அல்லது அவ்வியக்கத்தின் கவிதைப் போக்கினை ஏற்றுக்கொள்ளாத கவிதை இயக்கங்களைச் சார்ந்தவர்களின் கவிதைகளை வாசிக்க தொடங்குகிறேன்;. அவர்களின் உள்ளடக்கங்களும் மனம் கவர்ந்தவையாக இருந்தது என்பதும் உண்மை. புதுக்கவிதையின் நவீனத்துவ உருவ அமைப்பை அவர்களிடமிருந்தும் உள்ளடக்கத்தின் தேர்வை வானம்பாடி இயக்கக்காரர்களின் உள்ளடக்கங்களிலிருந்தும் கற்றுக் கொண்டேன். ஈழத்து சூழலில் ஊடாகத்தான் அந்த உள்ளடக்கங்களை தேர்ந்தெடுத்தேன். இதன் காரணமாகத்தான் என்னவோ ஒருமுறை புதுவை இரத்தினதுரை எனது இரண்டாவது தொகுதியான ஹிரோசிமா ஹீரோக்கள் தொகுப்புக்கான  மல்லிகையில் எழுதிய விமர்சனத்தில், ஞானக்கூத்தன் வைதீஸ்வரன் ஆகியோருக்கும்; வானம்பாடி இயக்கத்திற்கும் இடையிலான ஒரு மூன்றாம் போக்குக்கு மேமன்கவி தயாராகுகிறார் என்று எழுதினார்.



8. முற்போக்கு இலக்கிய இயக்கத்தோடு உங்களுக்கு உறவு இருந்தது என அறிகிறேன். அது எந்தவகையில் பிரயோசனமாக இருந்தது? அந்தக் கருத்துக்களோடு உங்களுக்கு முற்றுமுழுதான உடன்பாடு இருந்ததா? விமர்சனங்களும் இருந்ததா? அந்த இயக்கம் உங்களை எப்படி பார்த்தது? முற்போக்கு இலக்கியம் இங்கு முதன்மைப்படுத்தப்பட்ட காலத்தில் மு.தளையசிங்கம் போன்றவர்களும், எஸ்.பொ மற்றும் அ.ஸ.அப்துசமது போன்றவர்களும் வௌ;வேறு இலக்கிய முகாம்களை அமைத்து செயற்பட்டார்களே அது பற்றி ஏதாவது.....

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்திருந்தே அதற்குப் புறம்பான கருத்தியல் 10 இயக்க செயற்பாடுகள் பற்றி அறிந்து கொண்டேன். அது நீங்கள் குறிப்பிடும் எஸ்.பொ, மு.தளையசிங்கம், அ.ஸ.ஸமது போன்றவர்களின் எழுத்துக்கள் மூலம் அறிந்து கொண்டேன். இவர்களில் மு.தளையசிங்கம் அவர்களைத் தவிர, மற்ற இருவர்களுடன் பழகியும் இருக்கிறேன். இவர்கள் எல்லோரும் ஆரம்பத்தில் முற்போக்கு இயக்கத்துடன் சேர்ந்து இயங்கியவர்கள். இவர்கள் ஒவ்வொருவரதும் எழுத்துக்கள் , பிரதிகள் பற்றியும், அவர்கள் சார்ந்த இயக்கங்கள் பற்றியும் அன்று தொடக்கம் ஒரு கருத்து இருக்கிறது.

9.. உங்கள் கவிதைகளுக்கான பிரசுரக்களம் எப்படி இருந்தது.?

எனது முதல் கவிதை 1974ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. தொடர்ந்து  ஈழத்தில் சிந்தாமணி தினகரன், வீரகேசரி ஈழநாடு தாமரை, சிகரம், கணையாழி இப்படியான சில சிறுசஞ்சிகைளிலும்;, ஈழத்து எல்லா தேசிய பத்திரிகைகளில், பிரதேச ரீதியாக வந்த , மல்லிகை போன்ற பத்திரிகை தொடக்கம் பெரும்பாலான சிறுசஞ்சிகைகளில் முகநூல், எனது கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. இன்றைய நாளில்;, ஒரு முதிர்ச்சிக்குப் பின் நான் கொண்டிருக்கும் கருத்தியலை புரிந்து கொள்ளாத, ஏற்றுக்கொள்ளாத சிறுசஞ்சிகைகளில் பத்திரிகைகளுக்கு நான் கவிதைகளை அனுப்புவதில்லை. அன்றைய நாட்களில் முற்போக்கு இயக்கத்தை ஏற்றக்கொள்ளாத சிறுசஞ்சிகைகள், பத்திரிகைகள் நான் முற்போக்கு இயக்கத்தைச் சார்ந்தவன் என்ற வகையில் என் கவிதைகளைப் பிரசுரிக்கவில்லை. அதற்கு எனக்கு எந்த விதமான மனக்குறையும் இன்றுவரை இல்லை என்பதுதான் உண்மை.

10. நீங்கள் எழுத வந்தது எழுபதுகளின் நடுப்பகுதியில், அன்று இலங்கையில் மரபுக்கவிதைக்கான பெரிய இடமும் இருந்தது. ஏன் புதுக்கவிதையை தேர்வு செய்தீர்கள்? இந்தக் கேள்வியோடு இணைந்ததாக வேறுவகையிலும் ஒரு கேள்வியைக் கேட்காலம். அதாவது, நீங்கள் எழுதவந்தபோது, ஈழத்தில் புதுக்கவிதையின் நிலவரம் எப்படி இருந்தது?

நான் எழுத வந்த காலகட்டத்தில் ஈழத்த்தில் மரபுக் கவிதைக்கென தனி இடம் இருந்தது என்பது மறுப்பதற்கில்லை.. மஹாகவி, முருகையன், வி.;கந்தவனம், சில்லையூர் செல்வராசன் இப்படியாக பல ஈழத்து நவீன கவிதையின் முன்னோடிகள் மரபில்தான் எழுதினார்கள். அவர்களைத் தொடர்ந்து விரும்பி வாசித்தவன் நான். ஈழத்தில் அன்றைய காலகட்டத்தில் புதுக்கவிதை வானம்பாடி இயக்கத்தின் தாக்கத்திற்கு உட்பட்டதாக இருந்தது. அதற்கு முன்னதாக 50களில் மணிக்கொடியின் பரிச்சயத்தால், இங்கு தோன்றிய மறுமலர்ச்சி இயக்கக்காரர்களால், வசனக் கவிதை முயற்சி மேற்கொள்ளப்படுகின்றன. 60களின் இறுதிகளில்; ஈழத்து சிறுசஞ்சிகையின் பரிச்சயத்தால் ஈழத்தில் புதுக்கவிதை முயற்சி தொடக்கம் பெறுகின்றது. அம்முயற்சியின் முன்னோடியாக தருமு சிவராமு விளங்குகிறார்.  இதற்கு இடையில் தா. இராமலிங்கம் புதுமைக் கவிதைகள் முயற்சி முன்வைக்கப்படுகின்றன. இந்தத் தகவல்கள் எல்லாம் பிற்காலத்தில்தான் அறிகிறேன். நான் புதுக்கவிதை எழுத வந்த காலகட்டத்தில், வானம்பாடி இயக்கத்தின் பரிச்சயத்தில் இலங்கை தென் பகுதி குறிப்பாக, திக்குவல்லை, அனுராதபுரம், புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு போன்ற பகுதியில் புதுக்கவிதை எழுதப்படுகிறது. திக்குவல்லை கமாலின் ஷஎலிக்கூடு' புதுக்கவிதை ஈழத்து முதலாவது புதுக்கவிதை வெளிவருகிறது. அத்தகையவர்களின் தொடர்பும், அவர்களது கவிதைகளின் பரிச்சயமும் என்னைத் தீவிரமாக புதுக்கவிதை எழுத வைக்கிறது.

11. உங்கள் கவிதைப் பிரதிகளுக்கான பேச்சுப்பொருட்களை எங்கிருந்து உருவாக்குகிறீர்கள்? அவை என்னவகையான வேலைகளை முதன்மைப்படுத்த வேண்டுமென்று கருதுகிறீர்கள்?

நான் நகரச் சூழலில் பிறந்து வளர்ந்தவன். பெரும்பாலாக, என் கவிதைகளின் பேசும் பொருளாக நகரச் சூழலின் அனுபவங்கள் கவிதைக்கான பொருளாயின. அதேவேளை கேட்டு அறிந்த உலகளாவிய, தேசிய செய்திகள். நிகழ்வுகள் ஏற்படுத்திய உள்மனத் தாக்கங்களை கவிதைகளாக மாற்றி இருக்கிறேன். அதேவேளை தனிப்பட்ட அனுபங்களை கவிதைகளில் பேசியும் இருக்கிறேன். 

12. உங்களுடைய எழுத்தின் அரசியல்தான் என்ன?

எழுத வந்த காலத்தில் என் எழுத்துக்களில் அரசியல் ஒன்றும் இருக்கவில்லை. எழுத்தாளன் ஆக வேண்டும், புகழ் பெற வேண்டும் என்பதாகவே மட்டும் எண்ணம் இருந்தது. அதனால் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனான தொடர்பு எனக்கு கருத்தியல் அரசியல், சமூகப் பிரக்ஞை, வர்க்க நிலை என்பவற்றை மார்க்ஸிஸம் வழியாக கற்றுத் தந்தது. அதற்குப் பின்னரான எனது எழுத்தின் அரசியல் என்பது மனித குலத்தின் நலன், அதிகாரத்தையும், அடக்குமுறையையும் இனங்கண்டு அதற்கு எதிரான குரல் எழுப்புவதுதான் என் எழுத்தின் அரசியலாக இன்றுவரை இருக்கிறது.

13.. ஈழத்தில் இலக்கியத்தை தீர்மானிக்கும் சக்திகள் என தம்மைக்கருதிய விமர்சகர்கள், ஈழத்து கவிஞர்கள் என பட்டியலிடும்போது உங்களை .இணைத்தக்கொள்வதில்லையே அது ஏன்? அந்தப் புறக்கணிப்பிற்குப் பின் இருக்கும் அரசியல் என்னவென்று நினைக்கிறீர்கள்? பல புறக்கணிப்புகள் ஈழத்து விமர்சகர்களால் நிகழ்ந்த போதும் எப்படி இன்றுவரை இடைவிடாது தொடர்ந்து இலக்கிய வெளியில் இயங்க முடிந்தது?

ஈழத்தில் இலக்கியத்தைத் தீர்மானிக்கும் சக்திகள் என்று தம்மைக் கருதிய விமர்சகர்கள் என்று நீங்கள் சொல்வது அவர்கள் - ஒன்று வடக்கிலிருந்து இயங்கிக் கொண்டிருந்தவர்கள். அல்லது பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு இயங்குபவர்களாக இருந்துள்ளார்கள். இருக்கிறார்கள். என்னை மட்டுமல்ல வடக்கின் வெளியே அல்லது பல்கலைக்கழகத்தைச் சாராத அல்லது மார்க்ஸிஸம் பேசுகிறார்கள் அல்லது அன்றைய நிலை இனப் போராட்டச் சூழலில் இல்லாதவர்கள் எல்லோரையும் பற்றி பேசுவதை தவிர்த்தே வந்துள்ளார்கள். இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். ஈழத்தில் புதுக்கவிதை முயற்சி பரவியது 70களுக்கு பின்தான் என்பது வரலாறு. 50களின் இறுதியில் எழுத்துக் கலை காலத்தில், தமிழில் புதுக்கவிதை முயற்சியின் முன்னோடியின் ஒருவரான தருமு சிவராமு தம் முயற்சிகளில் ஈடுபட ஆரம்பத்தில்; உடனடியாக ஈழத்திலிருந்து தன்னைப் பெயர்த்து தமிழ்நாட்டில் தன்னை பொறித்துக் கொண்டதோடு, ஈழத்தைத் தளமாகக் கொண்ட புதுக்கவிதை முயற்சிக்கு ஓர் இடைவெளி ஏற்பட்டது. வானம்பாடித் தொடர்புடன், 70களுக்குப் பின் புதுக்கவிதை முயற்சி பரவலாகியது. அது தென் பகுதியில் தலைமை கொண்டு அமைந்தது. இந்தப் புதுக்கவிதை முயற்சியில் புதுக்கவிதை உருவத்தினைப் பற்றி பல கருத்துக்கள் இருப்பினும், 70களில் ஈழுத்து சமூக அரசியல் நிலவரத்தை உள்ளடக்க ரீதியாக சித்திரித்துதான் இருக்கின்றன. ஆனால், ஈழத்து நவீன அல்லது புதுக்கவிதை வரலாற்றை எழுத வருபவர்கள், 70கள் காலகட்டத்தை மிக மிக அவசரமாக கடந்து சென்று விடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை என்னை மட்டுமல்ல, பலரை குறிப்பாக, 70களில் தென்பகுதியின் மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புதுக்கவிதைகள் முயற்சிகள் சரி, மலையக கவிதை முயற்சிகளும் சரி கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை. உதாரணத்திற்கு இன்னொன்றைச் சொல்லி என் விடயத்திற்கு வருகிறேன். ஈழத்தைப் பொறுத்தவரை பிறந்து வளர்ந்த மண்ணை இழந்துள்ளவர்களின் குரல் என்பது 80களுக்கு ஈழத்திலிருந்து வடக்குப் பகுதியைச் சார்ந்தவர்களின்  படைப்புகளில்தான் முதன் முதலாக ஒலித்தது என்பதுதான் முதன்iமைப்படுத்தப்படுகிறது. ஆனால், ஆழ்ந்து நோக்கினால், ஈழத்து இலக்கியத்தில் மண்ணை  இழந்தவர்களின் குரல் என்பது 70களுக்குப் பிறகு தோன்றிய மலையக இலக்கியத்தில்தான் ஒலித்தது என்பது தெரியவரும். ஆனால், வடக்கைச் சேர்ந்தவர்களின் முயற்சியின் தொகுப்பாக, மரணத்துள்; வாழ்வோம் எனும் தொகுதியில், 70களில் சொந்த மண்ணிலிருந்து நாட்;;;;;;டார்களாக மட்டும், நாடு கடத்தப்பட்டவர்களின் குரலை பதிவு செய்யும் வண்ணச்சிறகின்; சென்று வருகிறேன் ஜென்ம பூமியே! எனும் கவிதை ஏதோ பின்னிணைப்பாக இணைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, இங்கிருந்து  விரடப்பட்டு தமிழகத்தில் அகதிகளாக குடியேற்றப்பட்டவர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள், நாவல்கள் வந்தும் கூட, அவை கவனிக்கப்படவில்லை. 

இங்குள்ளவர்கள்  ஈழத்து இலக்கியத்திற்கு தாங்;;கள்தான் முன்னோடிகள் முக்கியமானவர்கள் என்று தங்களை பற்றி தாங்களே சொல்லிக் கொண்டவர்கள் ஈழத்து கலை இலக்கியங்கள் பற்றி தமிழகத்தில் ஏற்படுத்தும் படிமத்தில் இவர்களது தனிமனித அல்லது தங்;களுக்கு உடன்பாடு இல்லாத இயக்கங்;கள் மீதான காழ்ப்புணர்ச்சி; பெரும் பங்காற்றி இருக்கிறது. இதில் என்னை பற்றி அவர்கள் கொண்டிருந்த கருத்து இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி சார்ந்தாகவே அமைந்தது.

அத்தோடு தமிழ் நாட்டு இலக்கியவாதிகள் ஈழத்தில் இனப் போராட்டம் எழுச்சி பெறும் வரை ஈழத்து கலை இலக்கியத்தை கணக்கில் எடுக்காத தன்மை இருந்து வந்தது. நாங்;கள் அங்குள்ள தமிழ் இலக்கியப்; போக்கினை பற்றி அணு அணுவாக  தெரிந்து வைத்திருத்தோம். ஆனால் அவர்கள்  நமது இலக்கியப்போக்கினை பற்றி பொறுப்பற்ற முறையில்; கருத்துக்கள் சொல்வதும், பிழையான முன் வைப்புக்களை செய்பவர்களாகவும் இருந்தார்கள். உதாரணத்திற்கு 70களில் தமிழ்நாட்டில் ஒரு சிறுசஞ்சிகை ஈழத்து புதுக்கவிதை சிறப்பிதழ் வெளியிட்ட பொழுது, அதில் வெளியிட்ட ஈழத்தில் புதுக்கவிதை எழுதியவர்கள் பட்டியலில்;  பேராசிரியர் கைலாசபதி அவர்களையும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களையும்  சேர்த்து இருந்தார்கள். அடுத்;து, ''ஈழத்திலும் வானம்பாடி இயக்கக் கவிஞர்கள் போல் ஆர்பாட்டக் கவிஞர்கள் இல்லாமல் இல்லை. உதாரணம் மேமன்கவி '' என்று நான் மதிக்கும், அன்றைய காலத்திலும் புதிய சிந்தனையுடன் விமர்சன உலகில் இயங்கிக் கொண்டிருந்த ஓர் விமர்சகர் கூட மேற்குறிப்பிட்ட கருத்தினை ஒரு கருத்தரங்கில் முன்வைத்திருந்தார். இவ்வளவுக்கும் வானம்பாடி கவிதைப் போக்கிலிருந்து மாறுப்பட்ட நிலையில் நான் எழுதிய கவிதைகள் அடங்;கிய எனது மூன்று தொகுப்புகள் தமிழ் நாடு நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருந்த சூழலிலும் கூட.

     அதற்கு இங்குள்ளவர்கள் கொடுத்த தகவல்கள்தான் காரணமாக அமைந்தது. அதேவேளை வானம்பாடி இயக்கத்தின் காலப் போக்கிலிருந்து மாறுபட்;ட பாணியில் நான் எழுதிய காலத்தில் அவர்கள் அப்படியான தகவலையும் தமிழகத்தில் அனுப்ப காரணமாக அமைந்தது. நான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்தவனாக இருந்தமை முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால் அத்தகைவர்களின் நடத்தைகளையிட்டு எனக்கு கவலை ஒன்றும் இல்லை. இன்றும் இல்லை. நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அவர்களது பங்கினை நான் என்றும் மறைந்ததுமில்லை. நிராகரிதத்துமில்லை. அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள் என்பதன் காரணமாக என் இலக்கிய வழிப் பயணத்தில்  நான் சோர்வடையவில்லை. இன்று வரை நான் சோர்வில்லாமல் இயங்கிக் கொண்டிருப்பதற்கு டொமினிக் ஜீவா போன்றவர்களும் அவர் சார்ந்த முற்போக்கு இயக்கமும் எனக்கு கற்றுக் கொடுத்த பக்குவம் காரணமாக அமைகிறது. மேலும் எனக்கு முன்னால் போனவர்களை மதிப்பதிலும், எனக்கு பின்னால் வந்து கொண்டிருப்பவர்களுடன் கைகோர்த்து வருவதிலும்  நான் மகிழ்ச்சி கொள்கிறேன். என்னை செம்மை படுத்துவதிலே நான் ஆர்வமாக இருக்கிறேன்.



14.. அரசியல் சார்ந்த கவிதைகள் இனமுரண்பாடு காரணமாக வடகிழக்கில் எண்பதுகளின் நடுப்பகுதி தொடங்கி தொண்ணூறுகளின் நடுப்பகுதிவரை மேலெழுந்து வந்திருந்தது. அந்தக் காலகட்டங்களில் உங்கள் எழுத்துக்கள் எதை முன்வைக்க விரும்பின?  அத்தோடு ஈழத்து இலக்கியம் என்றால் அதிகமும் ஏன் வடகிழக்கிலும் வடகிழக்கிலிருந்து புலம்பெயர்ந்து செய்றவர்களதும் எழுத்துக்களே அடையாளப்படுத்தப்படுகின்றது. மலைத்தமிழ் இலக்கியங்களோ, முஸ்லிம் அரசியல் இலக்கியங்களோ அல்லது வடகிழக்கிற்கு வெளியே உருவாகும் எழுத்துக்களோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை? இது ஏன்?


80களுக்கு பிறகு வட-கிழக்கில் எழுந்த கவிதைகளின் தேவையும் ஒட்டுமொத்த தமிழ்க் கவிதைப் போக்கில் ஏற்படுத்திய தாக்கமுப் மறுதலிக்க முடியாதவை. அதற்கு காரணம் அவை அனுபவத்தை வெளிப்படுத்திய பாங்கு, அக்கவிதைகளில்; கையாளப்பட்ட மொழி என்பன காரணமாக அமைந்தன. ஆனால் அதே வேளை வட-கிழக்குக்கு  வெளியே இனத்துவ முரண்பாட்டின் வெளிப்பாடாக ஏற்பட்ட 56 முதற்கொண்டு 83 வரையிலான காலகட்டத்தில் இனத்துவ முரண்பாடுகளின்  காரணமாக தமிழர்களின் மீது கட்டவிழ்க்கப்பட்ட கலவரங்களால் வட-கிழக்கு வெளியே குறிப்பாக மலையக மற்றும் தென்பகுதி வாழ் தமிழர்கள்  அதிக அளவில் பாதிக்கப்பட்டதும் அதையிட்ட கவிதைகள் ( மற்ற இலக்கியங்கள் உட்பட)  வந்திருக்கின்றன.  நானும் அத்தகைய அனுபவத்தை கொண்டு பல கவிதைகளை எழுதி இருக்கிறேன். ஆனால் என் கவிதைகளும் சரி  மலையகம் மற்றும் தென் பகுதி கவிதைகளும் ஏனோ இந்த கவிதை ஆய்வாளர்களால் கண்டு கொள்ளப்படவில்லை. அதற்கு காரணம் வட-கிழக்கு அக்கால கவிதைகளில் நான் முன்பு சொன்னது போல் அனுபவத்தை வெளிப்படுத்திய பாங்கு, அக்கவிதைகளில்; கையாளப்பட்ட மொழி என்பன தென்பகுதி மற்றும் மலையக கவிதைகளில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அக்கவிதைகளில் வெளிப்பட்ட அனுபவம் பதியப்பட வேண்டியவை. கவனத்திற்குரியவை. என் எழுத்துக்களிலும்; அதே அனுபவங்களை எனக்கான மொழியில் தொனியில் சொல்லி இருக்கிறேன்.

15..இன்று ஈழத்து இலக்கியம் மற்றும் விமர்சன முறைகள் எப்படி இருக்கின்றன?

ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் 50கள் தொடக்கம் பல்வேறு விமர்சன கோட்பாடுகளைக் கடந்து வந்துள்ளது. இவற்றில், கனகசெந்திநாதன் (என் மதிப்பிற்குரியவர் என்பது வேறு விடயம்) போன்றவர்கள் இரசனை விமர்சனப் போக்கினைப் பற்றிக் கொண்டு இருக்கையில், மார்க்ஸிய விமர்சனம் முக்கியத்துவம் பெற்றது. அவ்விமர்சனப் போக்கே 70களின் இறுதிவரை கோலோச்சிய விமர்சன முறைமையாக இருந்தது. ஆனால், பிற்காலத்தில் ஈழத்து தமிழ் இலக்கியம் ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கியத்தில் பேசப்படாத ஒரு சில முக்கிய விடயங்கள். அவற்றில் ஒன்று 'நாடற்றவர் குரல்' இது மலையக தமிழ் இலக்கியத்தில் அதன் எடுத்துரைப்பு முறைமை – வழமையான எடுத்துரை முறைமையாக இருந்த காரணத்தால் என்னவோ அக்குரல் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் அல்லது சுரண்டப்பட்டவர்களின் குரலாக மாற்றி நோக்கப்பட்டதன் காரணமாக அக்குரல் தனியாகவோ மற்றும் அதற்கான விமர்சனக் கோட்பாட்டின் அடிப்படையில் நோக்கப்படவில்லை.

அடுத்து 80களுக்கு ஈழத்து தமிழ் இலக்கியப் பிரதிகளில் அது புலம்பெயர் இலக்கியங்களின் பிரதிகளிலும், இங்கிருந்து படைக்கப்பட்ட பிரதிகளிலும் சரி, அக்குரல் ஓர் இனத்தின் குரல்களாக அடையாளப்படுத்தப்பட்டதே தவிர, பிற்காலத்தில் தமிழுக்கு அறிமுகமான விமர்சன கோட்பாடுகள் ஊடாக இவற்றை அப்படைப்புகள் மறுவாசிப்புக்கு உட்படாத நிலையே இருக்கிறது.

ஆழ்ந்து கவனித்தால் தமிழக தமிழ் இலக்கியத்தில் தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிப்;பட்ட படைப்புக்கள் வருவதற்கு முன்னதாகவே  ஈழத்தில்தான் முன்வைக்கப்பட்டு விட்டன.

டானியலின் நாவல்களும் சரி, செ.கணேசலிங்கனின் நாவல்களிலும் சரி,  டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், பவானி ஆழ்வாப்பிள்ளை போன்ற பலரின் சிறுகதைகள் சரி தலித்தியம் , பெண்ணியம் போன்றவற்றை  தமிழகம் பேசுவதற்கு முன் பேசி இருக்கின்றன. இந்த தகவல்கள் எல்லாம் தமிழகத்திற்கு  போய் சேருவதற்கு மேற்குறிப்பிட்ட காழ்ப்புணர்ச்சிகாரார்கள் காரணமாக அமைந்தார்கள் என்றும் தடையாக அமைந்தார்கள் என்றும் சொல்வதே பொருந்தும்.

அதனால்தான்;, அன்று, தமிழ் நாவல், சிறுகதை, வரலாற்று நூல்கள் எழுதப்பட்ட பொழுது (தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமல்ல நம்மவர்களாலும்; சரி) பின் இணைப்பாக அல்லது கடைசி அத்தியாயத்தில் ஈழத்து சிறுகதை முயற்சிகள்;, ஈழத்து நாவல் முயற்சியில் என்று சிறிய அத்தியாயங்களில் முடித்து விடுகின்ற நிலைமை இருந்தது. 

16. இணையவெளியும், முகநூல்; போன்ற சமூகவலைத்தளங்களும் வந்த பிறகு இலக்கியச் செயற்பாட்டில் என்னவகையான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதென்று நினைக்கிறீர்கள்?

சமூக பொருளாதார, அரசியல் மாற்றங்கள் காலம் காலமாக,  இலக்கியப் பிரதிகளில் பிரதிபலிக்கும் - இந்த மாற்றம் வெறுமனே உள்ளடக்க ரீதியான மாற்றம் மட்டுமல்ல அவை தம் உருவங்கள் மீது மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இனிவரும் சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்கள் -இலக்கியப் பிரதிகளின் மாற்றங்களின் உள்ளடக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். சமூக விஞ்ஞானம் சார்ந்த இத்தகைய மாற்றங்கள் பற்றித்தான் நாம் அதிக கவனம் செலுத்தி இருக்கிறோம். ஆனால், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிகள், மாற்றங்கள் ;இலக்கியப் பிரதிகளில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன என்பதையிட்டு நாம் அதிகம் பேசவில்லை. சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள் எப்படி இலக்கிய உருவங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போன்று அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியானது இலக்கியப் பிரதிகளின் உள்ளடக்கத்திலும், உருவத்திலும் அப்பிரதிகளை வெளியிடுவதிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக வாசக நடத்தையில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றத்தைப் பற்றி வாசிப்புப் பழக்கம் சம்பந்தமான கருத்தில் உள்ள மாற்றத்தையும் பேச வேண்டும். இணையத்தின் வருகைக்கு முன்பு ஒரு பிரதியினை (அச்சு, டீழழம) வாசிக்கப்பட்டு, அதற்கான எதிர்வினை ஒத்தி வைக்கப்பட்ட ஓர் எதிர்வினையாக நாம் எதிர்கொண்டோம். ஆனால், இணையத்தின் வழியான வாசிப்பு என்பதில் ஒரு பிரதியை வாசித்தவுடன் எதிர்வினை பதியப்படுகிறது. இது கடந்த கால கலாசாரச் சூழலில் ஆற அமர ஒரு பிரதியினை வாசித்து, முன்வைக்கப்படும் எதிர்வினையிலிருந்து வேறுபடுகிறது. இது அதாவது உடனடியாக எதிர் வினையாற்றலை அதற்குரியவர்களுக்கு உடனடியாக சேர்ப்பித்தல் என்பது அறவியல் (நவாiஉள)  ரீதியாக பிழையானது எனக் கொள்ளப்படுகிறது. உணர்ச்சிவசப்பட்டு இரவில் எழுதப்படும் கடிதம் மறுநாள் காலை Pழளவ செய்யப்பட வேண்டும் என்றும், அப்படி Pழளவ பண்ணப்போகும் அந்தத் தருணத்திற்கு முன், அக்கடிதம் Pழளவ பண்ணப்படாமலே போகலாம் என்று எல்லாம் சொல்லப்பட்டது. இந்த உடனடியான எதிர்வினை ஆனது, அப்பிரதியின் அர்த்தப்படுத்திக் கொள்வதில் ஆற்றும் பங்கு, அப்பிரதிக்கான படைப்பாளியின் மீது செலுத்தும் செல்வாக்கு என்ற புதிய பிரச்சினைகளை எல்லாம் இணைய வாசிப்பின் வழியாக நம் முன்னே எழுந்து இருக்கிறது. அப்பிரதியினை னுழறடெழயன செய்து, ஆற அமர உட்கார்ந்து வாசித்தல் என்பது இரண்டாம் பட்சமானது. அடுத்து, வாசிப்புப் பழக்கத்தைப் பற்றிய பிரச்சினை. அதில் கூட, இன்றையச் சூழலில் வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது. ஆனால், நான் அடிக்கடி கூறுவது போல் வாசிப்புப் பழக்கம் குறையவில்லை. வாசிக்கும் முறைமை மாறிவிட்டது. அதன் காரணமாக படைப்புப் பிரதிகளை படைக்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்களின் பின்னணியில் படைப்பாளிக்கும் வாசகர்களுக்கும் உறவு இன்று கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம். அவற்றை முற்றும் முழுதுமாக நிராகரிக்க முடியாது.



17. இன்றைய இளந்தலை முறை எழுத்தாளர்களில் நீங்கள் முக்கியமென யாரை எல்லாம் கருதுகிறீர்கள்?

இன்று எழுதும் தலைமுறையினர் எம்மைவிஞ்சி நிற்கிறார்கள். வெறுமனே வானம்பாடி இயக்கத்தின் வழி வந்தவர்களான மேத்தா வைரமுத்து போன்றவர்களினதும் அவர்களின்; நீட்சியாக தோன்றி பா.விஜய் போன்றவ்ரகளினதும் தாக்கத்தில் இன்றும் ஈழத்தில் எழுதி கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் எழுத்துப் பிரதிகள் எமக்குள் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.   ஆனால் அத்தாக்கத்திலிருந்து விடுபட்டு தம் பிரதேசம் அவர்தாம் சார்ந்த சமூகம் என்ற மாதிரியான நிலை நின்று தமக்கான ஒரு தனித்துவத்துடன் எழுதிக் கொண்டிருக்கும் கணிசமான தொகை இளைய தலைமுறையினர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்களின் பட்டியல் நீண்டது. ஆய்வுப்பரப்பு ஆய்வுப் பார்வையின் அடிப்படையிலும் வாசக விமர்சகப் பார்வையிலும் பேசக் கூடிய கதைகளை  அவர்களது பிரிதிகள் கொண்டிருக்கின்றன. அவர்களில் ஒரு சிலரின் பெயர்களை பட்டியல் இடுவது என்பது சரி ஆகாது என்பது எனது. எண்ணம்.

18. நீங்கள் எழுதிய கவிதைகளில் ஒன்றை தேர்வு செய்து வாசகர்களுக்கா தாருங்கள் எனக் கேட்டால் எந்தக் கவிதையை தருவீர்கள்?

இப்பொழுதே சொல்!

இப்பொழுதே சொல்!
உன்னில் இன்னும் நிலவும்
ஆதிக்கத்தை நான் அறிவேன் !
என்னில் புதைந்து கிடக்கிறாய் நீ !
போதை வஸ்துவில் மூழ்கிப் போன
ஒரு மூளையின் சடலமாய்,என் சகல உறுப்புக்களலான
உன் மீதான எனது அராஜகம்தான் 
எனது கம்பீரம் எனும் உணர்வை 
என் வேருக்குக் கர்வம் தருகின்றது.

நீ சிதையத்தான் வேண்டும் !
நீ சிதையத்தான் வேண்டும் !

என் ஆத்மாவின் நாவில் சுரக்கும்
தாக வெறிக்கான சகல நிவாரணி 
உன் சிதைவுகள், 

நீ என்னை வக்கிரத்தின் பிரதிநிதி எனச் சொல்லலாம்
நீ என்னை சதை வெறியின் சங்கீதமெனச் சொல்லலாம் 
எனக்கு என் தணிப்பின் மீது மட்டுமே ஆர்வம். 

என் சரீரத்தின் உன் சுவாசம் கூட உயிர்ப்புடன் இல்லை. 
என்பது புரியும் எனக்கு. 

எந்தவொரு தடுப்புச்சுவராலும் 
தடுக்கமுடியா இந்த உணர்ச்சிப் போரில்
இறுதி வெற்றி
என் பக்கம் என்பது உனக்கு மறக்க முடியாத
ஒரு கால பாடமாய் இருக்கிறது இல்லையா ? 

நீ வீரத்தால் பிதுங்கி நிற்பதுபோலான 
ஒரு மாய வலையை என்மீது வீசிய 
வரலாற்றின் ஆதிக்கக் கரங்கள்
என்னை பிளந்து விட்டன.
அந்தப் பிளவில் நிகழப் போகும்
உன் வீரிய வீழ்ச்சியின் 
வருகையை அறியாமல்

இப்பொழுது சொல்,
யாரை யார் ஆள்கிறார்கள் ? 
யாரை யார் சுரண்டுகிறார்கள் ? 
யாரில் யார் வீழ்கிறார்கள் ? இப்பொழுதே சொல்!

இக்கவிதையில் நான் பெண் நிலை நின்று பேசி இருக்கிறேன். ஆனால் எந்த அளவுக்கு வெள்ளி அடைந்திருக்கிறேன் என்பதுதான் தெரியவில்லை.

19.நல்லது இவ்வளவு தூரம் வந்து விட்டீர்கள். பல போக்குகளையும்  நிராகரிப்புகளையும் எதிர் கொண்டு உங்களை ஸ்தாபித்து இருக்கிறீர்கள். இன்றைய நாளில் உங்கள் இலக்கியப் போக்கு எப்படி இருக்கிறது?. 

40 வருடகளாக என் அளவில் சமூகம் சார்ந்த  உலகம் சார்ந்த அனுபவங்களை எனக்கு கை வரப் பெற்ற மொழியினைக் கொண்டு படைப்புகளை நவீன கவிதை உருவத்தின் வழியாக இன்றைய யுகத்தின் ,இன்றைய சூழலின் தன்மைகள் வெளிப்பபடும் வண்ணம் தந்து வந்துள்ளேன்.;. அவற்றை வாசகர்கள் விமர்சகர்கள் தமது பார்வைக்கு ஏற்ப விமர்சனத்திற்கு ஆளாகி இருப்பார்கள். அதையிட்டு எனக்கு எந்த விதமான கருத்தும் இல்லை. ஆழாமாக ஒரு விடயத்தை நம்புகின்றவன்  நான். அது ஒரு படைப்பாளி தனது பிரிதியை உருவாக்கி அதனை வெளியே அனுப்பிய பின் அது படைப்பாளியின் பிரதி இல்லை. அது வாசக கர்களின் விமர்சகர்களின் பிரதி. எனக்கு சிந்தனை அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் போன்றவற்றில் பரிச்சயம் ஏற்படுவதற்கு முன்னே எனக்குள் தீர்க்கமான சிந்தனை இருந்தது.
சமகால எனது கவிதை ஆக்கப் பணியின்  பொழுது நான் இரண்டு விடயங்களையிட்டு, கவனம் செலுத்துகிறேன். 
ஓன்று ஆநுளுளுயுபுநு ஏதாவது  இருந்தால் மட்டுமே எழுதுவது. 
இரண்டாவது கையாளும் மொழியின் அரசியலை புரிந்து கொண்டு கையாண்டு எழுதுவது.
மொழியின் அரசியல் புரிந்ததற்கு பின் இக்காலகட்டத்திற்கு சற்று முந்திய காலத்தில் எழுதிய படைப்புகளை இன்று மீள்; வாசிப்பு செய்கின்ற பொழுது. அப்படைப்புப் பிரதிகளில் நாம் பேச எடுத்து விடயங்களுக்கு அப்படைப்புகளில் கையாளப்பட்ட மொழி எவ்வளவு தூரம் துரோகம் இளைத்திருக்கிறது என தெரிய வருகிறது.
இன்றைய நிலையில் கையயாளப்படும் மொழியின் அரசியல் புரிந்துக் கொண்டு எழுதப்படும் பிரதிகளில் (குறிப்பாக கவிதைகளை பற்றி பேசுவதனால் கவிதை மனம் குறித்து சொல்லுகிறேன்.) எதிர்பாக்கப்படும் கவித்துவம், சிருஸ்டிகரம், உன்னதம் என்பன இல்லாமல் இருக்கலாம். இந்த கவித்துவம் சிருஸ்டிகரம், உன்னதம் என்பதெல்லாம் கூட  ஒரு வகையில் பெருங்கதையாடல்கள்தான். அவற்றை மறுதலித்தும், மறுத்தும் ஒரு பிரதியை உருவாக்குவது என்பது கூட ஒரு வகையில்; கட்டுடைப்புதான். உதாரணத்திற்கு  இக்காலகட்டத்தில் எழுதிய ஒரு கவிதை  பற்றி பேச விரும்புகிறேன்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் அல்ல

''இது கட்டணம் செலுத்தப்பட்ட
விளம்பரம்''

செவிகளை அரித்து.. அரித்து
வழியும் குருதியை
அருந்தும்
ஜனநாயக கோர உதடுகள்.

''இது கட்டணம் செலுத்தப்பட்ட
விளம்பரம்''

எல்லோருக்கும் 
ஒரே குல்லா!
இங்கு தோற்றது
ஆயிரம் தலைகள் வாங்கிய
அபூர்வ சிந்தாமணி கதை.

''இது கட்டணம் செலுத்தப்பட்ட
விளம்பரம்''

எண்ணிலடங்கா
பூமாலைகள்....பொன்னாடைகள்....
புகழாரங்கள்....வாக்குறுதிகள்....
அதிரும் மூளையின் நிலம்.
அலை வரிசையில்
இன்னுமொரு சுனாமி.

''இது கட்டணம் செலுத்தப்பட்ட
விளம்பரம்''

உடன் பிறப்புகளின்
தேசியச் சேவையை
வர்த்தகச் சேவையாக்கும்
விநாடி கையொப்பங்கள்.

''இது கட்டணம் செலுத்தப்பட்ட
விளம்பரம்''

புனித தெரு
அங்காடித் தெருவாக...
வீசும் துர்நாற்றம்!
சாக்கடைப் பாடலுக்கான
பக்க வாத்தியம்.

''இது கட்டணம் செலுத்தப்பட்ட
விளம்பரம்''

2
''செய்திகள் வாசிப்பவர்....''

இடைக்கிடையே
கட்டணம் செலுத்தப்படாத
விளம்பரம்.

அதே துர்நாற்றம்!

மீண்டும்  தொடரும்.....


''இது கட்டணம் செலுத்தப்பட்ட
விளம்பரம்''
              
                  -2011-

இக்கவிதை எழுதியப் பின்  இதே தலைப்பில் நீங்களும்; ஒரு கவிதை எழுதியிருப்பதாக பிறகு அறிகிறேன். அக்கவிதை எனக்கு படிக்க கிடைக்கவில்லை.
இக்கவிதையை வாசித்த சிலர் இக்கவிதையில்  அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கும்

''இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்''
 என்ற வரிகள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன என்றார்கள். உங்களுக்கு தெரியும் இக்கவிதை இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் தேர்தல் காலத்தில் நீண்ட நேரமாக வேட்பாளர்களின் விளம்பரங்களை ஒலிபரப்பி ஒவ்வொரு விளம்பரத்தின் இறுதியில் ''இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்'' என்று சொல்லி முடிக்கும் பொழுது ஏற்படும் எரிச்சல் சொல்லி மாளாது. அந்த எரிச்சலை என்  இக்கவிதைப் பிரதியின் வாசகனோ வாசகியோ படவேண்டும். இப்படி நினைப்பது  வன்முறை போல் தோன்றலாம். ஆனால் எனது அந்த விடயத்திற்கு எதிராக ஒரு குரல் மக்கள் மத்தியிலிருந்து வரவேண்டும் என்றால் அந்த எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் அதையிட்டு எழுதப்பட வேண்டும் அதாவது கட்டமைக்கப்படவேண்டும். அதுதான் என் நோக்கம்.  அந்த நோக்கம் ஒரளவுக்கு நிறைவேறியது. சிலர் சொன்னார்களே அவ்வரிகளை மீண்டும் மீண்டும் வாசிக்கும் பொழுது எரிச்சல் ஏற்படுகிறது. அதுதான் என் அப்பிரதிக்கான ஒரளவுக்கான வெற்றி. 
இத்தகைய சிந்தனைகளுடன் தான் இன்றைய நாட்களில் நான் கவிதைகளை செய்து கொண்டிருக்கிறேன். கவனிக்க எழுதவோ படைக்கவில்லை. செய்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் ஆயுதங்கள்  என்பது எழுதப்படுவதில்லை. படைக்கப்படுவதில்லை. செய்யப்படுகின்றன.

அடுத்து நான் ஒரு படைப்பாளி என்பதை விட தீவிர படிப்பாளி. அப்படி வாசிக்க கிடைக்கும் பிரிதிகளை மொழியின் அரசியல் புரிந்துணர்வுடன் வாசிக்கும் அப்பிரதிகள் எழதப்பட்ட நிலையில் தலைக்கீழான அனுபவத்தை தருவது போல்; என்னால் உணர முடிந்தது. அதன் காரணாமாக அவ்வவ்பொழுது அத்தகைய அனுபவத்தை தருகின்ற பிரதிகளை என் வாசகப் பார்வை உட்படுத்தி கட்டுரைகளாக எழுதி வருகிறேன். இதனை இவர்கள் விமர்சனம் என்றுகிறார்கள். இருக்கட்டுமே அதையிட்டு எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.

                           மேமன்கவி

மேமன்கவி (அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து இலங்கைத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம்
       வட இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து இலங்கையில் குடியேறிய மேமன் சமூகத்தின் மத்தியதரக் குடும்பம் ஒன்றில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அடுத்து மூத்த ஆண் மகனாகப் பிறந்தவர் அப்துல் ரசாக். மேமன்மொழி எழுத்து வடிவம் இல்லாது பேச்சு மொழியாக மட்டுமே இருந்தமையால், இவரது தந்தை இவரை தமிழ் மொழி மூலத்திலான பாடசாலையில் சேர்ந்தார். அதுவே எட்டாம் வகுப்புடன் இவர் தனது பாடசாலை கல்வியை முடித்துக் கொண்டார். மேமன் சமூகத்தினர் பொதுவாக வணிகத் துறையிலேயே ஆர்வம் காட்டுவர். ஆனாலும் இவரோ அன்றைய காலத் தொடக்கம் எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் பல்வகையான நூல்களை படித்துக் கொண்டிருந்த காரணத்தால் முறையான கல்வி மீது ஏற்பட்ட சலிப்பில் பாடசாலை கல்வியை இடை நடுவில் கை விட்டார். பாடசாலை வாழ்வின் இறுதிப்பகுதியில் இவரது தமிழாசிரியர் இலங்கை வானொலி நாடக புகழ் எம். அஸ்ரப்கான் இவரது வாசிப்பு பழக்கத்திற்கு ஊக்கப்படுத்தினார். பிற்காலத்தில் திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை பாடநெறியை முடித்தார்.
எழுத்துலகில்......
இவரது முதலாவது கவிதை 1974 ஆம் ஆண்டு சுதந்திரன் இதழில் தமிழே என் மூச்சு எனும் தலைப்பில் வெளிவந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஆரம்பத்திலிருந்து தொடர்புகளைப் பேணி வருகிறார். 1990 ஆம் ஆண்டுக்கான இலங்கை சாகித்திய மண்டல பரிசை இவரது நாளைய நோக்கிய இன்றில் கவிதைத் தொகுதிக்காகப் பெற்றார்.
பல இதழ்களுக்கு ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது கவிதைகள் சில ஆங்கிலம், சிங்களம், உருசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கவிதை ஓன்று தேசிய கல்வி நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் பயிற்சி பாட நூலில் இடம் பெற்று இருக்கிறது. சப்பரகமுவ பல்கலைக்கழகத்தில் கலைமாணி பாட நெறி மேற்கொண்ட மாணவர் ஒருவர் இவரது கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.
சிறுகதைகள் சிலவற்றை எழுதியிருக்கும் மேமன்கவி, சமீப காலமாக விமர்சனத்துறை  மற்றும் ஆய்வுத்துறையில் தீவிரமாக தன் கவனத்தை செலுத்தி வருவதோடு சிங்கள-தமிழ் இலக்கிய உறவுகளை பேணவதற்கும் அறிவதற்குமான பணிகளில் தீவிர செயற்பாட்டாளராக இயங்கி வருகிறார். 
இவரது நூல்கள்
    யுகராகங்கள் (1976, எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம்)
    ஹிரோசிமாவின் ஹீரோக்கள் (1982, நர்மதா பதிப்பகம், தமிழ் நாடு)
    இயந்திர சூரியன் (1984, நர்மதா பதிப்பகம், தமிழ் நாடு)
    நாளையை நோக்கிய இன்றில் (1990, நர்மதா பதிப்பகம், தமிழ் நாடு)
    மீண்டும் வசிப்பதற்காக (1999, மல்லிகைப் பந்தல்)
    உனக்கு எதிரான வன்முறை (2005, துரைவி வெளியீடு)
    ஒரு வாசகனின் பிரதிகள் -கட்டுரைத் தொகுப்பு(2010, கொடகே வெளியீடு)
    மொழி வேலி கடந்து.. -கட்டுரைத் தொகுப்பு(2013, கொடகே வெளியீடு)
விரைவில் ''பின்காலனியம்-கோட்பாடும் கலை இலக்கியமும்'' ''உலகத் தமிழ் இலக்கியத்தை நோக்கி...'' ஆகிய இரு கட்டுரை நூல்களும், ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' எனும் இவரது எழாவது கவிதைத் தொகுப்பும் விரைவில் வெளிவர இருப்பவை. 
விருதுகள்
    1990 - நாளைய நோக்கிய இன்றில், இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு.
    2005 - உனக்கு எதிரான வன்முறை, யாழ். இலக்கிய வட்டத்தின் இணைப்புச் சங்கமான இலங்கை இலக்கியப் பேரவையின் சிறப்பு விருது.