புதன், டிசம்பர் 22, 2010

எம்.ஏ.நுஃமான் தமிழ்ப் புலமைத்துவத்திலிருந்து துரத்தப்பட்டார்?

இரண்டாம் பகுதியை இங்கு வாசிக்கலாம்

முதலாம் பகுதி
ஆகவே இதழில் றஊப் எழுதிய கட்டுரையை
 முன்வைத்து சில அவதானங்கள்.
றியாஸ் குரானா

ஆகவே, இதழ் 06 இல், எம்.ஐ.எம். றஊப் அவர்கள் தமிழ்ப் புலமைத்துவத்திலிருந்து பிரிந்து செல்லும் முஸ்லிம் புலமைத்துவம் என்ற கட்டுரைப் பிரதியை: எம்.ஏ. நுஃமான் அவர்களின் இலக்கியச் செயற்பாடுகள் குறித்த போக்குகளை தொட்டு காட்டுவதினூடாக முயற்சித்திருக்கிறார். அவை தொடர்பில் சில அவதானங்கள்:

அதற்கு முதல் ஒரு விசயத்தைச் சொல்லியாக வேண்டும். நமது எழுத்துச் சூழலில் எவை குறித்தும் ஒரு விவாதத் தொடர்ச்சி இருப்பதில்லை: முடிவுற்ற அறிவிப்புக்களாகவும், முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட கருத்துகளாகவுமே விவாத்துக்கான பல அம்சங்கள் அறுந்துபோய் விடுகின்றன. ஒரு மௌனமான நிலையே பெரும்பாலும் கடைப்பிடிக்கப்டுகின்றன. இந்த மௌனங்கள் கலைக்கப்பட வேண்டும். நமது எழுத்துச் சூழலில் நிலவுகின்ற வாய்க்குள் அவல் மெல்லும் மரபு உடைத்து வீசப்பட வேண்டும்.

இந்த மௌனங்கள் எழுதியவருக்கும், எழுதப்பட்வருக்கும் சில சௌகரியங்களை, தற்காலிக மகிழ்ச்சியை தருவது என்னவோ உண்மைதான், எனவே தொடரப்படாத விவாதம் என்பது ஆரோக்கியமற்ற சூழலையும், ஒரு தேகத்தையும்  உருவாக்கிவிடும் என்பது கவனிக்கப்படவேண்டியது அவசியம்.

ஒரு  அபிப்பிராயத்தை முன்னிறுத்தி எழுதுபவர், தனது பக்க நியாயங்களில் குறை ஏதுமில்லை. ஆகையினால்தான் எதிர்வாதம் முன்வைக்கப்படவில்லை என்ற ஒரு மனக்கிளர்ச்சிக்கு உள்ளாகிறார். இதேபோல் எழுதப்பட்டவர், தான் குறித்த முன்வைப்புக்களில் வாதத்தைத் தொடர பெரிதாய் ஒன்றும் தென்படவில்லை எனவே நான் பொருட்படுத்தவில்லை. என்ற கருத்து நிலையினால் மனக்கிளர்ச்சி அடைகிறார். இவைகளால் வாதங்கள் பெருமளவு தொடரப்படாமலே வறண்டுவிடுகிறது. மௌனம் இவர்களைப் பாதுகாக்கும் முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையினை சற்று அசைத்துப்பார்க்கும் நோக்கிலே எனது அவதானங்களை வளர்த்துச் செல்ல விரும்புகிறேன்.

'புலமைத்துவம்' என்ற சொல்: புலமைத்துமற்ற என்கின்ற ஒரு கருத்து நிலை வகையினத்தை உற்பத்தி செய்ய உதவுவதோடு: புலமைத்துவமற்ற வகையினத்தின் மேல் அதிகாரம் செலுத்தி பயன்படுத்தக்கூடியது என்பதையும் குறித்துக் காட்ட வேண்டியுள்ளது. புலமைத்துவம் என்பதே ஒரு தேசத்தின் வரலாறாகவும், கருத்தியல் சார்ந்த சமூக இயக்கமாகவும் நிலை நிறுத்த உதவுவதுடன்: புலமைத்துவமற்ற மற்றமைகள் வரலாற்றின் எல்லைகட்கு அப்பாற்பட்டதாகவும், சமூக இயக்கத்திற்று பொருத்தமற்றதாகவும் கருதும் நவீன கலை இலக்கிய அரசியல் நிலையின் பாற்பட்டது. அவைகளோடு எனக்கு உடன்பாடு இல்லை. எனினும் அவை ஒரு புறமிருக்க.

எம்.ஐ.எம் றஊப் அவர்கள் தமிழ் புலமைத்துவச் செயற்பாட்டில் எம்.ஏ. நுஃமான் இல்லாமல் நிகழ்ந்தே இருக்க முடியாது என்று கருதத்தக்க சில செயற்பாட்டுக் கவனிக்புக்களையும், அவரால் விரிவாக்கம் செய்யப்பட்ட சில செயற்பாட்டு அம்சங்களையும், பின்னர் எம்.ஏ.நுஃமான் முஸ்லிம் புலமைத்துவத்தின் பால் சாய்வு கொள்வதாக கருதும் சில புள்ளிகளையும் பிரித்துகாட்ட முற்படும் குறித்த வாசிப்பு பிரதியில், எம்.ஐ.எம். றஊப் அவர்களினால் பிரிந்து  செல்லுதல் என முன்வைக்கும் காரணிகள் எனக்கு புலதைத்துவ விலகுதலாக தென்படவில்லை.


மாறாக தமிழ்ப் புலமைத்துவத்திற்கு தன்னால் அளிக்கப்பட்ட பங்களிப்புக்கள் கவனிக்கப்படவில்லை தனக்குரிய இடம் வழங்கப்படவில்லை என்ற அங்கலாய்ப்பாக ஒரு புறமும், தான் மடித்துக் கட்டிக் கொண்டு பாடிய வன்முறை அறத்தின் பிற்கால வளர்ச்சியால்  ஏற்பட்ட அளெகரியங்களாக மறுபுறமும் நகர்வதையே கண்டுகொள்ள முடிகிறது.

இவைகளை விரிவாக பார்ப்பது பொருத்தம் எனில், எம்.ஐ.எம் றஊப் அவர்கள் முன்னிலைப்படுத்தும் எம்.ஏ.நுஃமான் குறித்த தமிழ்ப் புலமைத்துவச் செயற்பாடுகளையும், முஸ்லிம் புலமைத்துவச் செயற்பாடுகளையும் மேலோட்டமாகப் பார்ப்பது அவசியமாகும்.

ரஷ்யா வழி மார்க்சிய நிலைப்பாடு கொண்ட க.கைலாசபதி குழுவினரோடு இணைந்து முற்போக்கு இலக்கியம் பற்றி அதிகமாக கதையாடுதல் அதன் நிமித்தம் க.கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலுக்கு வெங்கட் சாமிநாதன் எழுதிய எதிர்வினை கண்டு பொங்கியெழுதல், ஆயிரம் பூக்கள் மலரட்டும் , நீங்களும் காவியம் பாடலாம் என மு.பொன்னம்பலமும் இவரும் மல்யுத்தம் புரிதல், தாத்தாமாரும் பேரர்களும், நிலமெனும் நல்லாள் போன்றவற்றைப் படைத்தல், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கெதிராக போர்க்கொடி தூக்குதல் என்பன மார்க்சிய கால கருத்து நிலைப்பாட்டை முற்போக்காக முன்னிறுத்துவதற்கு செயலாற்றியவைகள் எனில், 70பதுகளின் நடுப்பகுதியில் முன்னிலைக்கு வந்த தேசியம் குறித்த மாற்றங்கள் வன்முறை அரசியலின் பக்கம் சாய்வு கொள்ளும் போது, பிந்தி அதற்குள் நுழைந்தபோதும் 'புத்தரின் படுகொலை' என்ற தமிழ்த் தேசியத்தின் முக்கியபிரதியும் அது சார்ந்த தொகைப்பிரதிகளும் எழுதி வன்முறை அரசியலின் பக்கம் இளைஞர்களைச் சூடேற்றியது, பலஸ்தீன மண்ணின் புழுதியும், மன அவஸ்தைகளும், எதிர்க்குரல்களும் கொண்ட  கவிதைகளை நமது சூழலுக்கு அறிமுகப்படுத்தி தமிழ் புலமைத்துவத்தை வன்முறை அரசியலின் பால் தீவிரப்படுத்தியது. கவிதைகளால் நிரம்பிய ஒரு ஈழத்துச் சூழலை உருவாக்க பலரைத் தட்டிக் கொடுத்தல் என்பவற்றோடு முன்னுரைகள், மேடைப்பேச்சுக்கள், கலந்துரையாடல்கள்  போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது-  தமிழ்ப் புலமைத்துவத்தில் பாதிக்கும் மேற்பட்ட உழைப்பையும் அக்கறையையும் கவனிக்க முடியும்.

இவைகளை வைத்துக் கொண்டு எதுவித சந்தேகங்களும் இன்றி எம்.ஏ. நுஃமான் அவர்களை தமிழ்ப் புலமைத்துவவாதி எனச் சொல்லிவிடலாம். இவ்வளவு பங்களிப்பும் வேறு ஒருவரால்(குறித்த காலத்தில் ஈழத்து இலக்கியத்திற்கு) தமிழ்ப் புலமைத்துவத்திற்கு ஆற்றப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. குறித்த வினையாற்றுகை என்பது மேலெழுந்தவாரியான போக்கிலமைந்தவைகளுமல்ல. தமிழ்ப் புலமைத்துவம் பல இடர்களை எதிர் நோக்கி தடுமாறிய தருணங்களில் தேவைப்பாடு கருதி ஆற்றப்பட்ட மிக முக்கிய அளிக்கைகளாகும். எம்.ஐ.எம்.றஊப் அவர்கள் முஸ்லிம் புலமைத்துவமாக எம்.ஏ.நுஃமான் அவர்கள் பிரிவதாக எடுத்துக்கொள்ளும் தொண்ணூறுகள் தொடங்கி இன்றைவரை(இதை எழுதும்போது) 16 வருடங்கள் தாண்டுகிறது. ஆயினும், எம்.ஏ நுஃமான் அவர்கள் முஸ்லிம் புலமைத்துவத்திற்கென்று எதுவும் செய்வில்லை என்பது என் அவதானமாகும். என் அவதானங்களை முன்கொண்டு செல்ல: முஸ்லிம் புலமைத்துவத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளை தொகுத்துக் காட்டுவது அவசியமாகும்.  அத்துடன் தமிழ்ப் புலமைத்துவத்தின் கருத்தியல் நிலைப்பாடுகளுக்குள் பிந்தி வந்து நுழைந்தாரெனினும், தமது அறிவின் தேர்வு அடிப்படையிலே அது நிகழ்ந்தது. மாறாக முஸ்லிம் புலமைத்துவத்தின் பக்கம் துரத்தப்பட்டார் போன்ற எனது அவதானங்களின் மீது கவனயீர்ப்புச் செய்யக்கூடிய ஒன்றாவும் மாறும் எனக் கருதுகிறேன். மேலும், எம்.ஏ.நுஃமான் அவர்கள் இன்னும் முஸ்லிம் புலமைத்துவம்  என்ற ஒன்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை புரிய முடியும் எனவும் கருதுகிறேன்.

முஸ்லிம் புலமைத்துவத்தின் பால் எம்.ஏ நுஃமான் சாய்வுகொண்டுவிட்டார். என்பதற்கு  எம்.ஐ.எம் றஊப் அவர்கள் முன்வைக்கும் காரணங்களை மேலோட்டமாக தொகுத்தால் வன்முறை அரசியலை அறம் என மொழிந்தவர் அதைக் கேள்விக்குற்படுத்துகிறார். எப்படியெனில், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுத்திகரிப்பு என திடமாகச் சொல்லுதல், வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் அவலத்தைப் பேசுதல். இக்காலகட்ட  அவரின் கருத்தியலானது பின் நாட்களில் ஈழப்போராட்டத்தின் நிர்ணய சக்திகளையே சுட்டி விளிக்கும் தன்மை கொண்டதாக மாறுதல், போன்ற ஒரேயொரு அம்சத்தை மாத்திரமே முஸ்லிம் புலமைத்துவத்திற்கு ஆற்றிய பங்களிப்பாக எம்.ஐ.எம்.றஊப் அவர்களால் சுட்டிக்காட்ட முடிகிறது. இது தவிர, பிரதிகளையோ, விவாதங்களையோ மேற்க்கொண்ட தருணங்களையோ முன்வைக்கவில்லை. தமிழ்ப் புலமைத்துவத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளோடு இதை இணைத்துப்பார்க்கையில் பொருட்படுத்தத் தக்கதாக  தோண்றவில்லை. இச் சிறு செயற்பாடு அவர் முஸ்லிம் புலமைத்துவமாக பிரிந்து செல்வதற்குறிய சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ்ப் புலமைத்துவத்தின் செயற்பாட்டாளர்களான  வ.ஐ.ச ஜெயபாலன், கலாமோகன், சக்கரவத்தி, ஸ்டாலின், விக்டர் (யாரோ தெரியவில்லை)ஷோபா சக்தி இன்னும் பலரும் இதைவிட அதிகமாக செயலாற்றியிருக்கிறார்கள்..

எனவே, எம்.ஏ.நுஃமான் அவர்கள் முஸ்லிம் புலமைத்துவமாக பிரிந்து செல்லவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு புலமைத்துவவாதியாக இல்லாமல் ஒரு சராசரியனாக  அந்நிகழ்வுகள் கண்டு எதிர்த்திருக்கிறார். அல்லது கண்ணீர் விட்டிருக்கிறார். அவ்வளவே. கண்ணீர் விடுவதே புலமைத்துவத்திலிருந்து பிரிந்து செல்லும் புள்ளியெனில், பல இலட்சம் மக்கள் ஒரு சில நிமிடமாவது புலமைத்துவத்திலிருந்து விலகியதாக கருதமுடியும்.

எம்.ஏ.நுஃமான் அவர்கள் புலமைத்துவத்திலிருந்து விலகவில்லை எனில் என்ன நடந்திருக்க முடியும் என்ற கேள்வி இங்கு முக்கியமாகிறது. அதற்கான பதில்களைத் தேடுவோமாயின் என்ன செய்திகள் நமக்கு கிடைக்கக்கூடும். அவையாவன: தமிழ்ப் புலமைத்துவமட்டத்தில் தருணம் பார்த்து வந்து இணைந்து கொண்டு தம்பட்டம் அடிப்பவர் என்ற இவரைப்பற்றி  அபிப்பிராயம் சலிப்புத் தந்திருக்கவேண்டும். பிந்தி இணைந்த போதும் நமது அளப்பரிய பங்களிப்புக்கள் கவனிக்கப்படவில்லை என்று வருத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும். காலிமுகத்திடலில் ஈழப்புரட்சியாளர்களை சந்திக்க தாமதமான ஒரு நிகழ்வை, இவர்மீது சந்தேகங்கொள்ளும் தோரணையில், ஒரு பிம்பமாக மாற்றி சண்முகம் சிவலிங்கம் புனைகதையொன்றில் ஆவணமாக்கியதுடன் இன்றுவரை சந்தேகிக்கப்படுவது மனத்தாக்கத்தை தந்திருக்கலாம். சாகா வரம் பெற்றதாக கருதுவதும், தேசிய அக்கறையின் பால் தமிழ்ப் புலமைத்துவத்தின் கவனத்தை திருப்பிய பிரதியுமான 'புத்தரின் படு கொலையை' ஒரு தமிழர் எழுதியிருந்தால் இன்னும் உயிர் கூடியிருக்கும் என கொச்சைப்படுத்திய நிகழ்வுகளும், மற்றும் 90 களுக்குப் பிறகு தனது பங்களிப்புக்களெல்லாம் பின்தள்ளப்பட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நுழைய முடியாமல் போனது என நமக்குத் தெரிந்த காரணங்களை தொட்டுக் காட்ட முடிகிறது.
எனவே, எம்.ஏ.நுஃமான் தமிழ்ப் புலமைத்துவத்திலிருந்து பிரிந்து செல்லும் புலமைத்துவமல்ல. துரத்தப்பட்ட புலமைத்துவம் என்பதுதான் சரியாகும்?. தான் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்படுவதை உணரந்திருக்கக்கூடும்.
அவைகளினால் ஏற்பட்ட மன அவதிகளும், அங்கங்கே எழுதிய சின்னச் சின்ன அனுதாப அறிக்கைகளும் ஒரு புலமைத்துவ விலகுதலுக்கான போதுமைகளைக் கொண்டிருக்குமென்று கருதமுடியாது என்பது எனது அவதானமாகும்.

தொடரும்......