வெள்ளி, டிசம்பர் 24, 2010

எம்.ஏ.நுஃமான் துரத்தப்பட்டார்? இரண்டாம் பகுதி


றியாஸ் குரானா                                                 


இரண்டாம் பகுதி

 முதலாம் பகுதியை இங்கு வாசிக்கலாம்

மேலும்,வன்முறை தொடர்பில் இவருடைய இன்றைய வாசிப்பு அடிப்படை எதுவென்று தெரியவில்லை.றஊப் அவர்களும் இது குறித்து கவனம் செலுத்தவில்லை. ஒரு சாதாரண நபரைப்போல(மனிதாபிமானம் என்ற நிலையில்?) வன்முறையை ஏற்க்க முடியாது என்ற பூஜ்யத்தனமான கருத்து நிலையாகவே அதன்மீது எதிர்ப்பு தோண்றுகிறது. வன்முறையின் இருப்பிடங்கள், வன்முறையை உருவாக்க உதவும் கூறுகள் போன்றவற்றை நோக்கி அவர் பயணப்படவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இதற்கு உதாரணமாக - காலச்சுவடு 14ம் இதழில், இவர் பிரதிக்குள் ஒரு உண்மைதான் இருக்கமுடியும் என வாதாடியதையும், வன்முறையை அக்குவேறு ஆணிவேறாக கொட்டிப்பிரிக்கும் பின் நவீன நிலவரத்திற்கு இன்றுவரை எதிராக செயற்பட முற்படுவதையும் சொல்லலாம்.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதையும்,கொன்று குவிக்கப்பட்டதையும் ஒரு பிரதியாக வாசிக்க முற்படுவோமானால் பிரதிக்குள் ஒரு உண்மைதான் இருக்கமுடியும் என்பது வன்முறையை ஆதரிக்கும் சங்கதி புலப்படும்.மற்றவைகளின் இருப்பும், செயற்பாடுகளும் குறித்த சமூகத்தின் தேச விடுதலைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது. இடைஞ்சல் தரக்கூடியது. என்ற உண்மையின் காரணமாக நிகழ்ந்தேறிய சம்பவமாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது அமையுமெனில், பிரதிக்கு ஒரு உண்மை என்பது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை ஆதரிப்பதாக இல்லையா? ஆதரிக்கிறது. ஆகவே இவர் வன்முறைக்கெதிராக செயற்படுவது புலமைத்துவ அடிப்படைகொண்டதா? இல்லையே!
ஒரு பிரதிக்குள் பல உண்மைகள் இருக்கமுடியும்.எனினும் நுஃமான் அவர்களுக்கு மேலுள்ள பிரதி கொண்டிருக்கின்ற இரண்டாவது அர்த்தத்தையேனும் கட்டுடைத்துக்காட்டவேண்டும்.அது வன்முறைக்கெதிராக செயற்பட அவருக்குதவக்கூடும்.
தங்களிலிருந்தும் முஸ்லிம்கள் வேறானவர்கள்.அவர்கள் தங்களுக்குரிய தேவைப்பாடுகளையும், விடுதலை பற்றிய விருப்புகளையும் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். என்ற உண்மையும் அந்தப் பிரதிக்குள்தான் இருக்கிறது. எனவே ஒரு பிரதிக்குள் ஒற்றை உண்மை என்பது வன்முறையின்பால் சாய்வுள்ள கருத்து நிலையாகும். இவைகளினடியாக நோக்கும்போது, நுஃமான் வன்முறைக்கெதிரான புலமைத்துவவாதியாகவோ,முஸ்லிம் புலமைத்துவவாதியாகவோ பிரிந்து செல்லவில்லை என்பது தெளிவாகும் எனக் கருதுகிறேன். றஊப் அவர்கள் சொல்வதுபோல இவர் பிரிந்து செல்லவேண்டுமெனில், பிரதிக்குள் பல உண்மைகள் இருக்கமுடியும் என்று அறைகூவல்விடுக்கும் பின்நவீன நிலவரத்தை அதன் இன்றியமையாத் தேவையை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். ஒரு வேளை எல்லாவற்றிலும் பிந்தி வந்து இணைந்து கொள்ளும் இவர், பின்நவீன நிலவரத்துடனும், முஸ்லிம் புலமைத்துவத்துடனும் வந்து இணைந்துகொள்ளலாம் என நம்பத்தொடங்கினாலும்,16 வருடங்கள் கடந்துவிட்டது என்பதை நினைக்கும்போது இவ்வளவு பிந்தியிருக்கக்கூடாது என்றே சொல்லத்தோண்றுகிறது.
இங்கே நுஃமானுடைய இலக்கியப்போக்கு குறித்து றஊப் அவர்கள் குழப்பமடையும் சில தருணங்களை சுட்டிக்காட்டுவது அவசியம் எனக் கருதுகிறேன். 'பன்முகத் தன்மையை கதையாடல்களில் ஏற்றுக்கொள்பவர்' எனச் சொல்லும் றஊப் அவர்களே - விளிம்புநிலைக் கதையாடல்கள்,பின்நவீன நிலவரம், மு.தளையசிங்கம் அவர்களின் மெய்யுள் அடிப்படையிலான இலக்கியநிலை, மற்றும் இஸ்லாமியத்தமிழ் இலக்கியம் (மலைத்தமிழ் இலக்கியம்,தலித் இலக்கியம்,பெண்நிலை எழுத்துக்களின் அரசியல்,போராளிகளாக தங்களை அறிவித்தவர்களின் இலக்கியச் செயற்பாடு போன்றவற்றை நுஃமான் எப்படி வாசிக்கிறார் என்பது குறிப்பிடப்படவில்லை.இவை நுஃமானின் நவீன இலக்கியத்திற்குள் வராதோ?) போன்றவற்றை நுஃமான் அவர்கள் நிராகரிப்பதாக சுட்டிக்காட்டுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பன்முகத்தன்மை என்று விளிக்கப்பட்ட எல்லைக்குள் நுஃமான் அவர்கள் நிராகரித்த எதுவும் வராமல்போனதேன்? வரும் எனில் எப்படி அது பன்முகத் தன்மையாகும் போன்ற கேள்விகள் மிகச்சாதாரணமாக பதிலின்றி நகர்த்தப்படுகிறது.

ஆனாலும், நுஃமான் அவர்கள் மார்க்சிய அடிப்படையிலான ஆண்டான் ஒ அடிமை எனும் வர்க்கப் பிரச்சினையாகவே தேசியம் குறித்தும் சிந்திக்கிறார் என்ற சிறிய செய்தி, மிக முக்கியமான கவனிப்பாகும். இந்தக் கவனிப்பை கட்டுரையின் போக்கில் கொஞ்சம் வளர்த்துச் சென்றிருக்கலாம்.
இவை தவிர, 90களில் ஈழத்து இலக்கியத்தில் முன்னிலைக்கு வந்த எதிர்ப்பு இலக்கியம், என்னவகையான பங்களிப்புக்களைச் செய்தது. அதன்போக்குகள் கிளைபிரிந்து செயற்பட்ட முறைமைகளை பேசுவதற்;கு இந்தக் கட்டுரை ஒரு தொடக்கப்புள்ளி எனக் கருதுகிறேன். சிங்கள தேசியத்தின் திரட்சிகளுக்கும், இறுக்கங்களுக்கும் எதிரில் முன்னெடுக்கப்பட்ட இலக்கியச் செயற்பாடுகள்,மற்றும் தமிழ்த் தேசியத்தின் புறக்கணிப்பிற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட மற்றமைகளின் இலக்கியச் செயற்பாடுகள் என விரிந்து செல்லும் போக்குகளில், புலம் பெயர்ந்தவர்களுக்கென்று ஒரு பங்களிப்பிருந்தது. அதுபோல புலிகளின் கட்டுப்பாட்டிலோ அல்லது அவர்களின் கண்காணிப்பிலிருந்த நிலப்பரப்பிலிருந்து வெளிப்பட்ட இலக்கியச் செயற்பாடுகளுக்கு ஒரு பங்களிப்பிருந்தது.(சிங்கள மற்றும் தமிழ்த் தேசிய கதையாடல்களுக்குப்பின்னே ராணுவக் கட்டமைப்புடன் கூடிய பாதுகாப்பிருந்தது.)இதுபோல் இரு பெரும் ராணுவக் கட்டமைப்பிற்கு எதிரில் எதிர்த்தும் சில சந்தர்ப்பங்களில் சாய்வுகொண்டும் ஈழத்திலே வசித்தபடி வெளிப்பட்ட இலக்கியச் செயற்பாடுகளுக்கும் முக்கியமான பங்களிப்புக்கள் இருக்கிறது. இவ்வகை செயற்பாடுகளுக்கு முழுக்க முழுக்க ஆயுதமாக எழுத்தே இருந்தது. எதிர்பிலக்கியச் செயற்பாடுகளிலும் இவை கவனிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வாசிப்பதற்கும் றஊப் அவர்களின் இந்தக்கட்டுரை முக்கியமான திருப்பம் என்றே கருதுகிறேன்.
இன்னும், இங்கு புலம்பெயர்ந்தவர்களின் எழுத்துக்கள் ஈழத்திற்கு அல்லது தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய கதைகளே நீடிக்கிறது.(முறையான விமர்சன அல்லது இலக்கிய வாசிப்புமுறைகள் இங்கு வளர்த்தெடுக்கப்படவில்லை.) 90 களுக்குப்பிறகான இலக்கிப் பேச்சுக்கள் பெரும்பாலும் ஈழத்திற்கு வெளியேதான் மையம் கொண்டிருக்கின்றன. இந்தக்காலம் தாய்மண்ணில் இலக்கியச் சூண்யம் போன்ற கதைகள் அலுத்துப்போய்விட்டன. புலம்பெயர் இலக்கியங்களின் குறித்தகாலப் பங்களிப்புகளை நான் புறக்கணிக்கவில்லை. எனது முன்வைப்பு என்னவென்றால், ஒரு பாதுகாப்பான சூழலில் வசதி வாய்ப்புக்களோடு இருந்துகொண்டு(புலம் பெயர்ந்தவர்கள் தாம் துன்பங்கள்தான் அனுபவிக்கிறோம் என்று இந்த இடத்தில் கூறமுடியும்)இலக்கியச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கும், பயங்கரம் நிறைந்த சூழலிலிருந்துகொண்டு இருபெரும் ராணுவக் கட்டமைப்புக்கெதிரில் இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் நிறையவே வேறபாடுகள் உண்டு. இந்த எதிர்ப்பு இலக்கியங்கள் ஏன் பேச்சற்றுப்போனது? என்பதே றஊப் அவர்களின் கட்டுரையில் வெளிப்படையாக சொல்லப்படாமலும், மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுவதுமாக அமைந்திருக்கிறது. இதுவே தமிழ்ப் புலமைத்துவத்திலிருந்து பிரிந்து செல்லும் முஸ்லிம் புலமைத்துவமாக வாசிப்புச் செய்யப்படுகிறது. இதிலிருந்து ஒரு விவாதத் தொடர்ச்சி அமையுமென்று கருதுகிறேன்.
மரபு என்பது எல்லாமே ஒரு காலத்தின் நவீனமாக கருதப்பட்டவைகள்தான்.எனவே புதியவைகளின் பக்கம் பேச்சுக்களை ஏற்படுத்த முற்பட்டாமல், உறையவைத்துவிடத்துடிக்கும் சகலருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள்.கருத்தாடல்களைத் தொடருங்கள். நாம் பேசுவோமே! ஏன் இந்த மவுனம்? இப்போது இல்லாவிட்டால் பின் எப்போது பேசுவது?

'மொழி என்ற வகையில், பிராந்திய, இன, வட்டாரம் என எல்லாத் தமிழும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அந்தத் தமிழில் வெளிப்படும் பலவகை இலக்கியங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது. அப்போதுதான் கதைகளின் பெருக்கமும், கவிதையியலின் எண்ணற்ற வகைமைகளும் தமிழுக்குக் கிடக்கும். அத்தோடு ஒரு பன்முக கருத்தியல் தன்மை மேலெழுந்து வருவதோடு வன்முறைச் சிந்தனையையும் நம்மால் எதிர்கொள்ள முடியும். ஆனாலும் புலமையாளர்கள் எனப்படுவோர்களால் ஒரு தரப்படுத்தப்பட்ட வகையினமே தமிழாக கருதப்படுகிறது.'