சனி, அக்டோபர் 06, 2012

எம்.ஏ.நுஃமான் : வெகு நாட்களுக்குப் பிறகு வாய் திறந்தார்.


றியாஸ் குரானா

இன்று ஜெமீல் அவர்களை அவரது ஊரான மருதமுனையில் வைத்துச் சந்தித்தேன்.அவர் ஒரு கவிஞர். இப்படியான சந்திப்புக்களின் போதெல்லாம் இலக்கியம் குறித்து அதிகம் பேசக் கிடைக்கும். அப்படித்தான் இன்றும் பேசிக்கொண்டிருக்கும்போது எம்.ஏ.நுஃமான் அவர்களின் நேர்காணல் காலச்சுவட்டில் வந்திருக்கிறது படித்தீர்களா என்று கேட்டார். நீ படித்திருக்க மாட்டாய் என்று அதன் பதிலையும் அவரே சொன்னார்.

அந்தப் பதில் உண்மைதான்.என்னைத் தெரிந்த பலருக்கு என்தொடர்பில் அப்படி ஒரு புரிதல் உண்டு. யாராவது ஏதாவதொன்றைச் சுட்டிக் காட்டினால் மாத்திரமே படிக்கும் இதழ்களில் காலச்சுவடும் ஒன்று. அப்படி இல்லாத பட்சத்தில் அதிகமும் காலச்சுவடு போன்ற இதழ்களின் பக்கம் சும்மா முசுப்புக்கு கூட நான் போவதில்லை. ஆனால், எம்.ஏ.நுஃமான் அவர்களின் நேர்காணலைப் படித்துவிட வேண்டுமென்ற எண்ணம் வீட்டுக்கு வரும்வரை இருந்தது.இதற்கான பல காரணங்கள் உண்டு.தமிழ் இலக்கியப் பரப்பில் நுஃமான் அவர்களுக்கு உருவாக்கப்பட்டிருக்கும் இடம் மிக முக்கியமானது.அதுமாத்திரமன்றி, மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு நுஃமான் அவர்கள் வாய்திறந்திருப்பது மிகக் கவனிக்கத்தக்க ஒன்று.
காலச்சுவடு வலைத்தளத்தில் நுஃமான் அவர்களின் படித்தபோது, பல விசயங்கள் என்னைத் தொந்தரவு செய்தன.மிக நீண்டகாலமாக பலர்பேசி அலுத்துப்போனதும்,மிகவும் பழசுபட்டுப்போனதுமான கருத்துக்களை அதே கோணத்திலே தனது பங்கிற்கு பேசியிருக்கிறார்.இவ்வளவு காலம் தாழ்த்தி நு.மான் பேச முற்பட்டிருப்பதைப் பார்த்தால்,நுஃமான் குறித்து ஈழத்தில் பேசப்படும் விமர்சனங்கள் உண்மை என்றே தோன்றத் தொடங்குகிறது.எதிலும் பிந்தி வந்து நுழைபவர் என்ற அவர் பற்றிய பார்வையை மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.

தமிழ் நாட்டிலுள்ள காலச்சுவடு இதழின் பார்வையாளர்களுக்கு,நுஃமான் போன்றவர்களால் இந்த கோணத்திலிருந்து ஈழத்தமிழ் சமூக வெளியை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியத் தேவை இருப்பதனால் ஓரளவு நிம்மதி கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

இந்த நேர்காணலில் அதிக கேள்விகள் அரசியல் சார்ந்தது.அந்தக் கேள்விகளுக்கான பதில்களும் அரசியல் தன்மையை அதிகமும் உருவாக்குபவை.இலக்கியப் பிரதிகளின் மீது அரசியலை (குறித்த) ஏற்றிவாசிக்கும் ஒரு விமர்சகராகவே கடந்த காலங்களில் தன்னை வெளிப்படுத்தியிருந்தவர்.ஆகையினால், அக்கேள்விகளை நுஃமான் அவர்களிடம் கேட்டிருப்பது என்பது பொருத்தமானதுதான்.ஆனால்,அக் கேள்விகளுக்கு நுஃமான் சொல்லும் பதில்கள் அதிர்ச்சி தரக் கூடியவை.தனது கடந்த கால அரசியல் இலக்கிய செயற்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானவை.சிறு சமூகங்களின் மீது கவனத்தைக் கோரும் பன்மையான சமூக அரசியல்,பன்மையான சமூக அரசியல் என்பனவற்றுக்கு எதிராகவே தனது எழுத்தையும் புரிதலையும் மிகவும் தீவிரப்படுத்தியிருந்தார்.ஆனால்,இன்று தனது எதிர் முகாமில் செயற்பட்ட கருத்து நிலைகளை பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறார்.

அ.மார்க்ஸ் போன்ற பெரும் திரளான இலக்கிய மற்றும் அரசியல் தமிழ் மொழிச் செயற்பாட்டாளர்கள் ஏலவே முன்வைத்த ஈழம் குறித்த மிகப் பிந்தி நுஃமான் அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவே இந்த நேர்காணல் வலியுறுத்துகிறது.

அதே நேரம் இலக்கியச் செயலில் இருப்பவருக்கு சமூகப் பார்வை வேண்டும் என்றும் (பன்மையான) ஈழத்து இலக்கியம் அரசியல் முரணை அதன்மீது ஏற்றி வாசிப்புச் செய்ததினூடாகவே அதிக கவனத்தைப் பெற்றது என்றும் கூறுகிறார்.இது ஒரு புறப்பார்வையில் சரிபோல தென்பட்டாலும் அது உண்மையல்ல என்பதே சரியான பார்வையாகும். எந்த எழுத்தும் தன்னகத்தே சமூகப் பார்வையுள்ளதுதான். மனவெளி என்பதும் சமூகப் பரப்பின் உள்ளொடுங்கிய பகுதிதான்.எழுத்து மொழியாலான ஒரு நிகழ்வு என்பதனாலும், மொழி ஒரு சமூக உற்பத்தி என்பதனாலும் மொழி கொண்டு உருவாகும் அனைத்திலும் சமூகத்தின் செயல்கள் படிந்தே இருக்கும்.அளவில் வித்தியாசங்கள் இருக்கக் கூடும் அவ்வளவே.

அடுத்து, அரசியல் முரண் என்பதை மாத்திரம் பக்கபலமாகக் கொண்டு ஈழத்து இலக்கியம் கடந்த காலங்களில் அதிகமாக வாசிக்கப்பட்டது.அப்படியான வாசிப்பையே முக்கியமான பிரதி வாசிப்பு என, ஈழத்திலிருந்த விமர்சகர்கள் இலக்கியப் பரப்பில் பரப்பிக்கொண்டிருந்தனர்.அதுவும், பன்மையான அரசியல் பார்வையைக் கூட பிரதிவாசிப்பிற்கு ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.தமிழ் தேசியம் அதன் நலன்.அதன் வலி.அதன் வாதை என்றளவிலே சுருக்கியும் இருந்தனர். தமிழை தனது மொழியாகப் பயன்படுத்துகின்ற பிற சமூகங்களின் பால் சாய்வுகொண்ட அரசியல் பார்வையை பிரதிகளின் மீது மருந்துக்குக்கூட பயன்படுத்தவில்லை.அதில் நுஃமானும் முன்னிலை போராளியாகவே செயற்பட்டார். (மூன்றாவது பெருவெளியல் இது குறித்து விரிவாகவே எழுதியிருக்கிறேன்.)ஆக, அரசிலை பிரதியின் மீது ஏற்றி வாசிப்பதற்கு அப்பாலும் அனுகக்கூடிய வாய்ப்புகளை தன்னிடம் கொண்டிருந்த பிரதிகளும் அந்தக் காலகட்டத்தில் ஈழத்தில் இருந்தன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

70 தொடங்கி இன்றுவரையான ஈழத்து நவீன பிரதிகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அதில் நான்கில் மூன்று பகுதி அரசியல் பிரதிகளல்ல என்பது தெரியவரும்.அதாவது தமிழ்த் தேசிய நலநன மாத்திரம் வலியுறுத்துகிற பிரதிகள் மிக்குறைவே.ஆனால், அப்பிரதிகளே கடந்த முப்பதாண்டுகால ஈழத்து இலக்கியமாக பாவி;க்கப்பட்டது.இதைக்கூட இனிவரும் காலங்களில் நுஃமான் பேசக்கூடும்.

நுஃமான் அவர்கள் திடீரெனப் பேசவைக்கப்பட்டது தற்செயல் நிகழ்வு அல்ல.வெகு நாட்களுக்குப் பின் வாய்திறந்திருப்பதானது அதுவும் காலச்சுவட்டினூடாக தனது குரலை மீள்வருகையாக பதிந்திருப்பது நீண்ட இலக்கியப் பரீட்சயம் உள்ள எவருக்கும் சந்தேகம் வரக்கூடியதே.
அண்மையில் ஷோபாசக்தி அவர்கள் காலச்சுவடு தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கும் அதனுள் பொதிந்திருந்த விமர்சனங்களுக்கும் தனக்குத் தெரிந்த வகையிலான பதில்களைச் சொல்லி களைத்துப்போன நிலையில், உடனடியாகவே இந்த நேர்காணல் இடம்பெற்றுள்ளது.சிறு சமூகங்களின் மீதான பன்மையான அக்கறை, மாற்றுக் கருத்துக்களுக்காக மறுக்கப்படும் இடம் போன்றவற்றையும் தாங்கள் செயற்பாட்டில் வைத்திருப்பதாக காட்டவேண்டிய பொறுப்பு காலச்சுவட்டிற்கு தொடர்சியாக இருக்கிறது.அதை இனங்கண்டு அதற்குப் பொருத்தமானவராக நுஃமான் தெரிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறார். நுஃமான் போன்றவர்களை முன்னுக்குத்தள்ளி அதன் மறைவில் ஒளிந்து கொள்வதை வசதியாக பாவித்திருக்கிறார்.இது சுராவின் காலப்பகுதியிலும் நடந்த ஒன்றுதான்.பின்நவீன வரவு,தலித் எழுச்சி,பெண்ணிய எழுத்துச் செயற்பாடு என இன்னும் பல கருத்துநிலைகளினால் தமிழ் எழுத்து வெளி பெரும் தாக்கத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கும் காலங்களில் அதற்கு எதிராக செயற்பட்ட சுரா தனது முன்னனித் தளபதியாக நுஃமானையே பயன்படுத்தியிருந்தார்.அப்போது மிக மூர்க்கமாக எழுதியவர் நுஃமான்.அதை அப்போது பல முன்னணி எழுத்தாளர்கள் சிலாகித்த கதைகளை நாம் அறிவோம்.அதுவே மீண்டும் கண்ணனினூடாக நடந்தேறியுள்ளது.

ஆக, எது எப்படிப்போனாலும் ஒரு உண்மை வெளிப்பட்டு நிற்கிறது.எம்.ஏ.நுஃமான் போன்றவர்களும் பின்நவீன கொடைகளான இலக்கிய மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்குள் இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள் என்பதே அது.இந்த மாற்றம் பல விவாதங்களுக்கும்,உரையாடல்களுக்கும் வழிவகுத்தால் நல்லது.ஆனால், இதை முன்பு வேறு மொழியில் சொன்னார்கள்.எதிலும் பிந்தி வந்து நுழைபவர் நுஃமான் என்று.

நுஃமான் அவர்களின் நேர்காணலையும், நான் சொல்லியிருப்பதையும் இன்னும் விரிவாகப் புரிந்து கொள்ள நுஃமான் குறித்து நான் எழுதிய கட்டுரையையும் இங்கு இணைத்துவிடுகிறேன்.