திங்கள், ஜனவரி 10, 2011

எனது கையொப்பத்தை நீக்க வேண்டாம்


கேள்வி - '' சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை வரவேற்கிறோம்'' என்ற அறிக்கையின் கீழ் கையெழுத்திட்டுவிட்டு,பின்னர் அந்த மாநாட்டு வாசலிலே எதிர்ப்பு துண்டுப்பிரசுரம் வினியோகித்தீர்களே இது நியாயமா? தொப்பி பெரட்டி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள் அல்லவா?
(அஜந்தன் நோர்வே)

பதில் - முதலில் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இதை நீங்கள் மறைவாக எனது மெயிலுக்கு அனுப்பியிருக்கக்கூடாது.மறைவில் உருவாகும் கேள்விகளும் செயற்பாடுகளுமே கடந்த காலத்துயரங்களுக்கு அடிப்படையானது.எனவே இதற்கான பதிலை பகிரங்கமாக சொல்லுவதே சரி என நினைக்கிறேன்.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை வரவேற்கும் அறிக்கையின் கீழ் சகல அறிதல்களுடனுமே கெயொப்பமிட்டேன்.கையொப்பமிடும்போது சித்த சுவாதீனமான நிலையிலேயே நானிருந்தேன்.அந்தக் கையொப்பத்தை அகற்றுமாறு கோரும்படி நான் இன்னும் குழம்பிப்போய்விடவில்லை.

ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகளால் (அரசு உட்பட)மனித உரிமை மதிக்கப்படாததும்,மிக மோசமாக மீறப்பட்டதுமான ஒரு நாட்டில்தான் வசிக்கிறோம். அங்கு எதுவும் நடத்தக்கூடாதென்றால், அங்கு யாரும் வசிக்கக்கூடாது வாருங்கள் என்றுதான் புலத்திலிருந்து எங்களுக்கு அழைப்பு வரவேண்டும்.அதற்க்கு மாறாக எதுவும் செய்யக்கூடாது என்ற கட்டளைகள் அநாவசியமானவை.

புலத்தில் மட்டுமல்ல,தமிழின் விரிந்த பரப்பிலுள்ள அனைத்து எழுத்துச் செயற்பாட்டாளர்களுடனும், எம்மைப் பகிர்ந்து கொள்ளவும் இணைந்து செயற்படவுமே விரும்புகிறோம். விரும்பினோம். ஆனால் எங்களைச்  சந்திக்கவும், பகிர்ந்துகொள்ளவுமான ஒரு சந்தர்ப்பத்தை, மாநாட்டை நிராகரித்தவர்களின் செயற்பாடுகளால் இழந்தோம்.

''தமிழைப் பேசும் மக்கள்'' என்ற பொது விளிப்பை விடாப்பிடியுடன் நாங்கள் நிராகரிக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பொது விளிப்பு கடந்த காலங்களில், தமிழைப் பேசுகின்ற பிற சமூகங்களை கவனிக்கப் போதுமான உள்ளடக்கங்களை வெளிப்படுத்தவில்லை. குறித்த ஒரு மக்கள் தொகுதியின் பிரச்சினைகளை எதிர் கொள்வதற்காக மட்டுமே தமிழைப் பேசுகின்ற அனைத்து சமூகங்களும் பாடுபடவேண்டும் என்ற அர்த்தத்திலே புரிந்துகொள்ளப்பட்டும்,செயற்படுத்தப்பட்டும் வந்தது.இதற்கு வரலாற்று அத்தாட்சிகள் மிக அதிகம். அவை போதுமான அளவு பேசப்பட்டுமுள்ளது. எனவே தமிழைப் பேசுகின்ற பிற சமூகங்களுக்கும்
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பதால் உருவாகியிருக்கின்ற பொதுப் பிரச்சினைகளோடு, அவர்களுக்குரிய தனிப்பட்ட பிரச்சினைகளும்,அரசியல் மற்றும் பிற தேவைப்பாடுகளும் உண்டு என்பது
ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

தமிழைப் பேசுகின்ற பிற சமூகங்களை, அவை பிற சமூகங்களாக தம்மை உணரும் உரிமையை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டு அவர்களின் தனித்துவங்களை (வித்தியாசங்களை) அனைத்துத் தளத்திலும்
 செயற்படுத்துவதற்கான  சந்தர்ப்பத்தை வழங்கி அவர்களுடன் பேசுவதையும், இணைந்து செயற்படுவதையுமே இன்றைய முக்கியத் தேவையாக நாம் பார்க்கிறோம். இந்தக்காரணங்கள்தான் எம்மை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கண்டிக்கும் நிலையை உருவாக்கியது. நாங்கள் கையொப்பமிட்ட அறிக்கையில் இது தெளிவாக எழுதப்பட்டுள்ளது. கையொப்பமிட்ட மற்றவர்கள் கொண்டிருக்கும் காரணங்கள் எமக்கு தெரியாது. அதன் மீது எமக்கு ஆர்வமுமில்லை.

தமிழைப் பேசுகின்ற பிற சமூகங்களை, அவர்களின் தனித்துவத்தோடு (வித்தியசங்களுடன்) எற்றுக் கொள்ளாத இந்த மாநாட்டை கண்டித்து எமது துண்டுப்பிரசுரத்தை மாநாட்டு வாசலிலே வெளியிட்டோம்.
சிறு சமூகங்களின் பால் செயற்படுகிறவர்களுக்கு இதைத்தவிர வேறென்ன தேர்விருக்கிறது. மாநாடு நடப்பதற்கெதிராக நாம் எப்போதும் செயல்படவில்லை.

சரி தோழர் - கடைசியாக ஒன்று.
உங்களுக்கு சார்பாகவும் எமது தொப்பி பெரட்டப்பட்டிருக்கிறது என்பதை இந்த இடத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.