செவ்வாய், ஆகஸ்ட் 23, 2016

ஈழத்து நவீன இலக்கிய உருவாக்கத்தில் தமிழகத்தின் செல்வாக்கு

கலாநிதி செ. யோகராசா

1. ஆங்கிலரது ஆட்சியின் விளைபேறாக உருவான மேனாட்டு மயவாக்கமே (westernisation) தமிழில் நவீன இலக்கிய உருவாக்கத்திற்கான முக்கியமான காரணமாக கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிற்கு இக்காரணம் பொருந்துமாயினும், ஈழத்தைப் பொறுத்தவரையில் அதுமட்டுமன்றி, இந்திய, தமிழக தொடர்பும் இவ்விடத்தில் முக்கிய இடம் பெற்றிருப்பதாகக் கூறலாம்.

இவ்வாறான தொடர்பினால் ஈழத்தில் தமிழில் நவீன இலக்கிய உருவாக்கம் ஏற்பட்டமை பற்றி ஆராய்வதே இவ்வாய்வின் முக்கிய நோக்கமாகின்றது.

2. மேற்கூறியவாறான இந்திய தமிழக - ஈழத்து தொடர்பு அல்லது செல்வாக்கு என்பது பல்வேறு விதங்களில் அமையுமாயினும் இவ்விடத்தில் வசதி கருதி, இந்திய / தமிழகம் சார்ந்த அரசியல், சமூக, இலக்கிய இயக்கங்களின் செல்வாக்கு, ஈழத்தில் தமிழில் நவீன இலக்கிய உருவாக்கத்திற்கு வழிவகுத்தமை பற்றியே நோக்கப்படுகின்றது. இவ்வழி பின்வரும் இயக்கங்கள் கவனத்திற் கொள்ளப்படுகின்றன.

1. இந்திய தேசிய விடுதலை இயக்கம் / 2. காந்தீயம் / 3. திராவிட முன்னேற்றக் கழகம் / 4. மணிக்கொடி இயக்கம் / 5. மாக்சிய இயக்கம் / 6. எழுத்து / வானம்பாடி இயக்கங்கள்.

3. இந்திய தேசிய விடுதலை இயக்கம்: ஆங்கிலேயரது ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதை நோக்கமாக கொண்டு செயற்பட்ட மேற்படி இயக்கம் ஈழத்தில் நவீன இலக்கிய உருவாக்கத்தில் பல விதங்களில் செல்வாக்கினை ஏற்படுத்தியுள்ளது. மேற்கூறிய வழியில் நோக்குகின்ற போது ஈழத்து நவீன கவிதை பற்றிய கவனிப்பு முதற்கண் நினைவிற்கு வருகிறது. ஈழத்து நவீன கவிதை உருவாக்கத்திற்கு ஈழத்தின் முன்னோடிகள் பலர் தடமமைத்துள்ளனர். இவ்விடத்தில் பாவலர் துரையப் பாபிள்ளை (1872-1929) முதற்கண் கவனத்திற்குரியவர். தமிழில் நவீன கவிதை முன்னோடியாக கருதப்படுபவர் சுப்பிரமணியப் பாரதியார். தமிழில் நவீன கவிதையில் தேசியம் பற்றி முதன் முதலில் பாடியவர் இவரே. இவ்வழி ஈழத்தில் தேசியம் என்பதனை முதன்முதலாக கவிதைப் பொருளாக்கியவர் பாவலர் துரையப்பாப்பிள்ளையே.

இவ்வாறான ‘தேசியம்’ பற்றிய சிந்தனை இவரிடம் முகிழ்த்தமைக்கான முக்கியமான காரணங்களிலொன்று, பாவலர் துரையப்பா பிள்ளை இந்தியாவில் மகாராஷ்டிரத்தில் சில காலம் (1895-1898) ஆசிரியராகப் பணிபுரிந்தமையாகும். (மகாராஷ்டிரம் இந்திய தேசிய தலைவர்களுள் ஒருவரான லோகமான்ய திலகரைத் தந்த மாநிலமாகும்.

இந்திய தேசிய விடுதலை வரலாற்றில் தமிழகத்திற்கு முக்கிய இடமுண்டு. இவ்விதத்தில், மேற்குறிப்பிடப்பட்ட சுப்பிரமணியப் பாரதியாருக்கும் முக்கிய இடமுண்டு. பாரதியாரின் கவிதைகள், கவிதை பற்றிய நோக்குகள் சிலவற்றை பாவலர் துரையப்பா பிள்ளை பாடல்கள் நினைவுபடுத்துகின்றன. எ-டு : “தேசோபகாரங் கருதி இக்கும்மியைச் / செப்புகிறேன் யாரும் / லேசாய் பொருள் விளங்குதற்கேதுவாய்....”

பாரதியாரின் கவிதைகள் பற்றி பாவலர் துரையப்பா பிள்ளை அறிந்திருக்கலாமென்று ஊகிக்கலாமெனினும், அதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. (இந்திய, ஈழ அரசியல் போராட்ட வரலாறு வேறு வழிமுறைகளில் சென்றமையால் ஈழத் தமிழ்ச் சூழலில் பாரதியார் போன்ற ஒரு கவிஞர் உருவாக முடியவில்லை. அதாவது, பாவலர் துரையப்பா பிள்ளை அவ்வாறு உருவாக முடியவில்லை. எனினும் தேசியத்தை பொருளாகக் கொண்டவர் என்ற விதத்திலும் தேச முன்னேற்றம் பற்றிச் சிந்தித்தவரென்ற விதத்திலும் அவ்வாறான உள்ளடக்கத்தையும், எளிமையையும், கவிதை வடிவத்தையும் கையாண்டவர் என்ற விதத்திலும் ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் தோற்றத்தில் பாவலர் துரையப்பாபிள்ளைக்கு முக்கியமானதொரு இடமுண்டு என்பதும் அவ்வழி இந்தியத் தொடர்பு அதற்கு வழிவகுத்துள்ளதுமே இவ்வேளை கவனிக்கப்பட வேண்டியவை.

தவிர, ஈழத்துக் கவிஞர்கள் குறிப்பாக ஈழகேசரிக் கவிஞர்களான அல்வையூர் மு. செல்லையா, மு. நல்லதம்பி, வேந்தனார் மனுப்புலியார், யாழ்ப்பாணன் முதலானோர் ஈழத்து நவீன தமிழ்க் கவிதையில் இலங்கைச் சுதந்திரம், சமூக முன்னேற்றம், தமிழ்மொழிச் சிறப்பு முதலான விடயங்களை தமது கவிதைப் பாடு பொருளாகக் கொண்டமையினால் முற்குறிப்பிடப்பட்ட பாரதியாரின் செல்வாக்குக் கணிசமாகவுள்ளது. இவ்வேளை, வேந்தனரின் பின்வரும் கவிதையடிகளை மட்டும் சான்று தருகின்றேன்.

“காட்டிக் கொடுத்திடும் கட்சிக்கிலங்கையும் / காணியோ - சொந்தப் - பூமியோ / நாட்டிற் பிறந்திடும் நாங்களனைவரும் / நாய்களோ - பெல்லிப் - பேய்களோ”

“கொடிதாங்குவோம்” என்ற தலைப்பிலான மேற்கூறிய பாடலை பாரதியாரின் “தேசபக்தன் ஆங்கிலேயனுக்குக் கூறு மறுமொழி” என்ற பாடலுடன் ஒப்பிடின், முற்கூறிய கூற்று உண்மையாவது புலப்படும்.

மேலும், பாரதியார் நவீன கவிஞராக மட்டுமன்றி, தமிழில் நவீனத்தன்மை, (அடினநசnவைல) நவீன சிந்தனைகள் என்பவற்றின் அடையாளமாகவும் திகழ்பவர். இவ்விதத்தில், ‘ஈழகேசரிப் பத்திரிக்கையின் முயற்சிகளினாலும் சுவாமி விபுலானந்தரின் செயற்பாடுகளினாலும் பாரதியாரின் புகழ் ஈழத்தில் 1930கள் தொடக்கம் அதிகளவு பரவலாயிற்று. இவ்விதத்தில் அன்னார் ஈழத்து நவீன எழுத்தாளர் பரம்பரையினரின் ஆதர்ஸ புருஷராகவும் விளங்கியவர். இவ்விதத்தில் நாற்பதுகளில் (1940) ஈழத்திலேற்பட்ட நவீன இலக்கியப் பிரக்ஞையிலும் அவ்வழி எழுந்த ‘மறுமலர்ச்சி’, ‘பாரதி’ சஞ்சிகைகளின் தோற்றத்திலும் பாரதியாரின் கணிசமான பாதிப்புள்ளது. ‘பாரதி’ சஞ்சிகையின் ஆசிரியத்தலையங்கம் இது.

“பாரதி அணுசக்தி யுகத்தின் சிருஷ்டி. விஞ்ஞான முடிவுகளின் புரட்சி ஏற்படுத்திய அணுசக்தி போல, தமிழ் மொழிக்குப் புதுமைப்போக்களித்த மகாகவி பாரதியாரின் பெயர் தாங்கி வருகிறது. அவர் தமிழுக்குப் புது வழிகாட்டியது போலவே பாரதியும் கண்டதும் காதல் கதைகள் மலிந்த இன்றைய தமிழ் இலக்கியப் போக்கிற்குப் புதுவழிகாட்டும். தமிழ் தமிழுக்காகவே என்ற தம் கூட்டத்திற்குள்ளேயே மொழியைச் சிறைப்படுத்திக் கொண்ட பரம்பரையில் வந்தோம் என்ற ஜம்பமடிக்கும் எழுத்தாளர் கோஷ்டி கலை கலைக்காகவே என்று அப்பண்டிதர் பல்லவியையே வேறு ராகத்தில் பாடுகின்றது. தமிழைச் சிறை மீட்ட பாரதியார் செய்த சேவையே “பாரதியின் இலட்சியமும். ஏகாதிபத்தியத்தை பாரதி அழிக்கப் பாடிய முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடமையான ஒப்பில்லாத சமுதாயத்தை ஆக்கவும் கவிபாடினார். அவர் காட்டும் பாதையில் ‘பாரதி’ யாத்திரை தொடங்குகிறது”.

ஈழத்தில் மலையக நவீன கவிதையின் தோற்றத்தில் 1930, 40களில் வாய்மொழிக் கவிஞர்களின் (Modernity) பங்கு அதிகம். இவர்கள் பலரும் பாரதியாரின் பாடல்களால் பாதிக்கப்பட்டவர்கள். அதுமட்டுமன்றி, ஈழத்துப் பெண்கவிஞர் முன்னோடியும் மலையக நவீன கவிதை முன்னோடியுமான மீனாட்சியம்மாள் நடேசையரின் பாடல்கள் பலவும் பாரதியாரின் பாடல்களது அதி செல்வாக்கிற்குட்பட்டன எனலாம்.

4. காந்தீயம் : இந்திய தேசிய விடுதலைத் தலைவர்களுள் ஒருவரான மகாத்மாகாந்தியின் கொள்கைகள் அனைத்தும் ‘காந்தீயம்’ எனப்படுகின்றது. இவ்வழி, அரசியல், சமூகம், பொருளாதாரம் சார்ந்த கொள்கைகள் அனைத்தையும் அது குறிக்கும். காந்தீயக் கருத்துக்கள் ஈழத்தில் அரசியல் ரீதிக்கப்பால் மேற்குறிப்பிடப்பட்ட ஏனைய விதங்களிலும் ஈழத்துப் பெரியோரால் விரும்பப்பட்டவை: காந்தீய செய்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்விடத்தில், முற்குறிப்பிடப்பட்ட ஈழகேசரிக் கவிஞர்கள் பலரும் சுதேசியம், சாதிப்பிரச்சினை, இனவொற்றுமை, சுதேசப் பொருளாதாரம், கூட்டுறவு, மதுத்தடை, உயிர்ப்பலி, கிராமியம் முதலான விடயங்களை கவிப்பொருளாக்கியமையில் காந்தீயச் செல்வாக்கு கணிசமாகவுள்ளது. ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் சிலரின் (எ-டு ஆனந்தன், சம்பந்தன்) சிறுகதைகளிலும் இவற்றைக் கவனிக்க முடியும்.

5. திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.): இது அரசியல் பகுத்தறிவு வழிப்பட்ட சமூகச் சீர்திருத்தம் சார்ந்த இயக்கமாகத் திகழ்ந்த சுயமரியாதைக் கழகம் (ஈ.வெ.ரா) திராவிடக் கழகம் என்பவற்றின் வழிவந்த இயக்கமாகும். செல்வாக்கே ஈழத்து நவீன இலக்கிய உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

தி.மு.க. எழுத்தாளர்களின் படைப்புக்கள் (1940) பிற்பகுதிகளில் தொடக்கம் அறுபதுகள் வரை ஈழத்தில் வாசகர் பெருக்கத்திற்கும் தமிழ் எழுத்தாளர் பலரது எழுத்துலகப் பிரவேசத்திற்கும் வழிவகுத்திருந்தது எனலாம். ஈழத்து நவீன நாடக வளர்ச்சியில் 1950களில் சமூக சீர்திருத்த நாடகங்கள் முக்கியம் பெற்றிருந்தனர். இவ்விதத்தில் இவை பலவும் தி.மு.க. நாடகபாணியில் அமைந்துள்ளமை கண்கூடு.

இன்றைய மார்க்சிய நோக்குடைய ஈழத்து எழுத்தாளர் பலரது ஆரம்பகால வளர்ப்புப் பண்ணையாக தி.மு.க. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார் இளங்கீரன். அன்னாரது ஆரம்ப கால நாவல்கள் தி.மு.க. பாணி நாவல்களே. குறிப்பாக ஈழத்து சிறுகதை எழுத்தாளர் பலர் புரட்சிகரமான எழுத்துக்களை தமது படைப்புக்களில் வெளிப்படுத்த உத்வேகமளித்தவை தி.மு.க. எழுத்தாளர்களே. சிறந்த உதாரணம் : பித்தன், பவானி, ஆழ்வாப்பிள்ளை.

தி.மு.க. செல்வாக்கு அவ்வழி சார்ந்த பாரதிதாசன் ஊடாகவே ஈழத்தில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தியது. 1950-1960 காலப்பகுதியில் ஈழத்து நவீன கவிதைப் போக்கில் மொழி, இன உணர்ச்சிக் கவிதைகள் முக்கிய இடம் பெற்றிருந்தன. இவ்வழி இவர்களிடம் பாரதிதாசனின் செல்வாக்கு கணிசமானது. சிறந்த எ-டு. காசி ஆனந்தன் கவிதைகள்.

தவிர, பாரதிதாசனின் சமூக சீர்திருத்த கருத்துக்களும் ஈழத்துக் கவிஞர்களை ஆட்கொண்டிருந்தன. சிறந்த எ-டு : சாரதா, புரட்சிக்கமால். கவிதை வெளிப்பாட்டு முறை சார்பாகவும் பாரதிதாசனின் தாக்கமதிகம். நீலாவணன், முதலான கவிஞர்களின் பாவகைகள் பலவும் பாரதிதாசன் வழிப்பட்டவையே.

கூர்ந்து நோக்கும் போது, ஈழத்து நவீன கவிதை முன்னோடியான மகாகவி, இ. முருகையன் ஆகியோரிடமும் பாரதிதாசனின் செல்வாக்கு இடம் பெற்றிருப்பது தெரிய வரும். பொருள் ரீதியில் காதல், இயற்கை பற்றிப் பாடுவதிலும், காட்சிப் படுத்தல்’ முதலான வெளிப்பாட்டு முறைகளிலும் பாரதிதாசனின் செல்வாக்குள்ளது.

6. மணிக்கொடி: நவீன இலக்கியம் சார்ந்த இவ்வியக்கம் தமிழில் குறிப்பாக சிறுகதையை உலக இலக்கிய தரத்தினை எட்டச் செய்ததில் முக்கிய பங்காற்றியுள்ளது.

இவ்வழி, முக்கியம் பெறும் புதுமைப்பித்தன், கு.ப.ரா முதலானோரின் எழுத்துக்கள் ஈழத்தில் வாசகரது வாசிப்புத்தர உயர்ச்சியில் செல்வாக்கினை ஏற்படுத்தியிருந்தன. தவிர, ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளான இலங்கையர்கோன் (ஆண்-பெண் உறவு) சி. வைத்தியலிங்கம் (ஆண் - பெண் உறவு, வறுமை, பெண்களின் அவலம்) ஆகியோரின் சிறுகதை பொருள் விரிவிற்கும் முற்குறிப்பிட்டோர் ஓரளவு காரணமாயிருந்துள்ளனர் எனலாம்.

7. மார்க்சிய இயக்கம்: தமிழகத்தில் குறிப்பாக அரசியலிலும் இலக்கியத்திலும் செல்வாக்குப் பெற்றுள்ள இவ்வியக்கம் ஈழத்தில் ஆரம்பநிலையில் (1945) முற்போக்கு எழுத்தாளர் குழாம் உருவானதில் கணிசமான செல்வாக்காற்றியிருந்தது. குறிப்பாக கே. கணேஷ் அவர்களின் இலக்கியச் செயற்பாடுகள் இவ்விதத்தில் முக்கியமானவை.

அதுமட்டுமின்றி 1950, 55 காலப்பகுதியில் ஈழத்தில் இந்திய முற்போக்கு எழுத்தாளர்களான பீரேம்சந்த், முல்க்ராஜ் ஆனந்த் ஆகியோரின் எழுத்துக்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளன. இந்திய தமிழக வழிவந்த சோவியத் நவீன இலக்கியங்களும் ஈழத்தில் முற்போக்கு அணியினர் மத்தியில் அவ்வழி ஆற்றிய பங்களிப்பு கணிசமானது.

8. எழுத்து வானம்பாடி இயக்கங்கள் : மேற்கூறிய இரு இலக்கிய இயக்கங்களும் முறையே 1960களிலும் 1970களிலும் தமிழில் புதுக்கவிதை முயற்சிகள் கால்கொள்ளுவதற்கும், உத்வேகம் பெறுவதற்கும் முக்கிய காரணிகளாக விளங்கியவை என்பது இலக்கிய ஆர்வலர் அறிந்த விடயங்களே.

இவ்வழி, 1960களில் ஈழத்தில் ‘புதுக்கவிதை’ முயற்சி கால்கொள்ள ‘எழுத்து’ வழிவகுத்திருந்தது. ஈழத்துக் கவிஞரான தருமு அரூப் சிவராம், ‘எழுத்து’ சஞ்சிகையில் படிமக் கவிதைகள் பல எழுதியவர்.

இன்றுவரை, தமிழ் விமர்சகர்களாலும், கவிஞர்களாலும் கவனத்திற்கெடுக்கப்படுபவர். வானம்பாடி இயக்கம் ஈழத்தில், புதுக்கவிதை வளர்ச்சி வெகுவேகமாக பரவ வழிவகுத்தது. 1970 தொடக்கம் இன்று வரை ஈழத்துக் கவிஞர்களுள் கணிசமா னோரில் வானம்பாடி இயக்கஞ் சார்ந்த மு. மேத்தாவின் பாதிப்பாரிய அளவிலானது.

9. தொகுத்து இதுவரை கூறியவற்றை அவதானிக்கின்ற போது 1970 வரையிலான ஈழத்து நவீன உருவாக்கத்தில் நவீன கவிதை, சிறுகதை, நாவல், புதுக்கவிதை, ஆகிய நவீன இலக்கியத் துறைகள் ஒவ்வொன்றிலும் அவற்றின் முக்கிய போக்குகள் பலவற்றை தீர்மானித்ததில் இந்திய தமிழக அரசியல், சமூக, இலக்கிய இயக்கங்களின் செல்வாக்கு கணிசமான இடத்தைப் பெற்றுள்ளதென்பது ஓரளவு புலப்படுகின்றதெனலாம். எவ்வாறாயினும் முதன் முதலாக இடம் பெற்றுள்ள இவ்வாய்வு முயற்சி மேற்கொண்டு விரிவானதும் ஆழமானதுமான ஆய்வொன்றினை வேண்டி நிற்கின்றதெனலாம்.