திங்கள், ஜனவரி 18, 2016

நேர்காணல் - லஷ்மி சரவணகுமார்

இலக்கியத்தை தேர்வு செய்தது தற்செயல் அல்ல.


இன்றைய தலைமுறை எழுத்தாளர்களும் முக்கியமானவர் லஷ்மி சரவணகுமார். சிறுகதை,நாவல்,கவிதை,விமரி்சனம் என பலதிசைகளிலும் அவரால் முடிந்தளவு தொடர்ச்சியாக இயங்குபவர். எதையும் வெளிப்படையாக பேசும் குணம் இவருடையது. அதுவே இவரின் புனைவுகளுக்கான ஈர்ப்பை எப்போதும் தக்கவைக்கிறது. தற்போது சினிமாவிலும் தமது பங்களிப்பை செய்ய தொடங்கியிருக்கிறார். இது தவிர வேறுவகையில் அறிமுகம் செய்ய விரும்பவில்லை. முகநுாலில், அவரை நீங்கள் சந்திக்கலாம்.

றியாஸ் குரானா - கதைசொல்லும் ஸ்டைலில் உங்களை அறிமுகப்படுத்துவதாக இருந்தால் அது எப்படி இருக்கும்? வழக்கமாக நேர்காணலில் அறிமுகப்படுத்துவதை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி கேட்கிறேன்?


லஷ்மி சரவணகுமார் - கதைகளின் வழியாக வாழ்வைத் துவங்கி கதைகளால் மட்டுமே வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் சம்பாதித்துக் கொண்ட மிக எளியதொரு மனிதன், அவ்வளவுதான்.

றியாஸ் குரானா - இலக்கியத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்? தற்செயலான ஒரு தேர்வா? அல்லது திட்டமிட்டு நிகழ்ததா?

லஷ்மி சரவணகுமார் - இலக்கியத்தைத் தேர்வு செய்தது தற்செயல் அல்ல, பொதுவாகவே நூறு பேர் இருக்குமிடத்தில் என்னைத் தவிர சுற்றி இருக்கும் தொண்ணூற்றி ஒன்பது பேரும் நான் பேசுவதைக் கேட்க வேண்டும் என்றே சிறுவயதில் நினைப்பேன். ஆனால் யோசித்தது போல் செய்வதற்கான ஆளுமையில்லை. ஆகவே பேசிவிட்டதாக நினைத்துக் கொள்வேன். அவையெல்லாமே எனக்கு நானே சொல்லிக் கொண்ட கதைகள். ஆக நான் மற்றவர்களுக்கு சொன்னக் கதைகளை விடவும் எனக்கு சொன்ன கதைகள் அதிகம். மிக இளம் வயதிலேயே ஆதரவற்றோர்களுக்கான விடுதியில் சேர்க்கப்பட்டதால் அந்தத் தனிமை கதை சொல்வதின் மீது தீராத ப்ரியத்தை உருவாக்கிவிட்டது. ஆக எத்தனை காலமானாலும் கதை சொல்லியாக இருப்பதுதான் எனக்கு சரியாக இருக்குமென்பதை மிகச் சிலவயதிலேயே மிகத் தெளிவாக புரிந்து வைத்திருந்தேன்.



றியாஸ் குரானா - ஆதர்சம் என சொல்லக்கூடிய எழுத்தாளர்கள் யாரும் இருக்கிறார்களா? அதற்கான காரணத்தை விளக்க முடியுமா?

லஷ்மி சரவணகுமார் - ஆதர்ஷமென தனிப்பட்ட ஒருவரை மட்டும் என்னால் சொல்லிவிட முடியாது, எனக்கான உலகை நான் என்னை வசீகரித்த ஏராளமானவர்களிடமிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஜாக் லண்டன், யுகியோ மிஷிமா, தஸ்தாவ்ஸ்கி, மார்க்வெஸ், மண்ட்டோ பஷீர், அரவிந் மாளஹத்தி, சுனில் கங்கோபாத்யாய, கோணங்கி, கி.ரா, கு.அழகிரிசாமி, தஞ்சை ப்ரகாஷ், ரமேஷ் – ப்ரேம் என ஒவ்வொருவரிடமிருந்து எனக்கான கதைகளின் உலகை எடுத்துக் கொள்கிறேன். அல்லது இவர்களின் எழுத்து வழியாக என்னை மிக நெருக்கமாக வைத்துப் பார்த்துக் கொள்வதால் எனக்கான கதைகளை உருவாக்க எளிதாக உள்ளது. இவர்கள் அத்தனை பேருமே எனக்கான ஆதர்ஷங்கள்தான்.


றியாஸ் குரானா - உங்கள் கதைகளில் எந்தவகையான சமூக விசயங்களின் பாதிப்பு நிறைந்திருப்பதாக கருதுகிறீர்கள்? கதைகளில் ஏதாவது விசயங்களின் பாதிப்பு அழுத்தமாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

லஷ்மி சரவணகுமார் - அடிப்படையில் நான் கதையை மட்டுமே சொல்கிறேன். ஒரு பிரச்சனையை சொல்ல வேண்டுமென்பதற்காக கதைகளை யோசிப்பதில்லை. என்னைச் சுற்றியுள்ள மனிதர்களில் சிலர் எனக்கு கதைகளாகத் தோன்றும் போது அவர்களின் உலகிற்குள் பயணிக்கத் துவங்குகிறேன். அந்தக் கதையின் பிரச்சனை என்னவோ அதை மட்டும் கதையில் பேசுகிறேன். மற்றபடி ஒரு பிரச்சனையை வலுவாகப் பேசவேண்டுமென திட்டமிட்டு கதையை எழுதுவதில்லை. என் கதைகள் பெரும்பாலும் அல்லது முழுமையாக அதிகாரத்திற்கு எதிரான் அதிகாரத்தின் கதைகள். கீழ்மையின் அல்லது சிதைவின் அதிகாரமென்பதை என் எழுத்தின் அடிப்படையாக நம்புகிறேன். மறுப்பதையும் ஏற்பதையும் அதிகாரத்தோடு வெளிப்படுத்தும் கதைகளாகவே என் கதைகளைப் பார்க்கிறேன்.




றியாஸ் குரானா - சினிமா நாவலின் இருப்பை பின்தள்ளியிருப்பதாக மேற்கில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே! இதை தமிழ்ச் சூழலிலும் பிரயோகிக்க வாய்ப்புகள் இருக்கின்றனவா?


லஷ்மி சரவணகுமார் - எனக்கு அப்படித் தோன்றவில்லை. சினிமா நாவல்களை உருவாக்குவதில் கூடுதலான சவால்களை உருவாக்கியுள்ளது. கதை சொல்லுதல் என்பது சோர்வூட்டக்கூடியதொன்று என்பதை மாற்றி நாவல்களை வெவ்வேறு தளங்களில் உருவாக்கக் கூடிய சாத்தியங்களை தந்துள்ளது. நாவல் கதை சொல்வதின் அற்புதமான வடிவம். சினிமா இன்னொரு வகையான கதை சொல்லும் ஊடகம் அவ்வளவே. தமிழைப் பொறுத்தவரையில் நாம் சவால்விட்டு சொல்லக் கூடிய நாவல்களையே மிகக் குறைவாகவே உருவாக்கியுள்ளோம். சினிமாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஆக, தமிழ் சினிமா ஒரு நாளும் தமிழ் நாவல்களை பின் தள்ள வாய்ப்பில்லை.


றியாஸ் குரானா - நாவல் மற்றும் சிறுகதை எழுத்தில் இன்று தமிழில் ஏதும் மாற்றங்கள் நிகழ்திருக்கிறது என கருத ஏதும் வாய்ப்புகள் இருக்கிறதா? மாற்றம் நிகழ்ந்திருப்பதாக கருதினால் அது எந்தவகையான மாற்றம் என்று சொல்ல முடியுமா? நிகழவில்லை என்றால் அது ஏன் என ஊகிக்கிறீர்கள்?


லஷ்மி சரவணகுமார் - தமிழகத்தில் புனைவெழுத்து உண்மையில் கவலைக்குறிய நிலையில் தான் இருக்கிறது. தொண்ணூறுகள் வரை இஸ்ங்கள் சார்ந்தும் மொழி சார்ந்தும் நிகழ்ந்த முயற்சிகள் அவ்வளவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. இணையம் பரவலானபின் அதனை தங்களுக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொண்ட சில விஷமிகள் இணைய வாசிப்பிற்கு மட்டும் தீணியளிக்கும் விதமாய் தங்களது மிக சுமாரான கதைகளை தொடர்ந்து இதுவே தமிழ் இலக்கியத்தின் உச்சமென வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது வரையிலும். எந்த ஒரு எழுத்தாளனுக்கும் தான் கவனிக்கப்பட வேண்டுமென்கிற விருப்பமே அதிகமிருப்பது துரதிர்ஸ்டவசமான யதார்த்தமென்பதால் அதற்கு தொடர்ந்து தன்னை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறான். ( சமீபத்திய எனது கதைகளையும் சேர்த்து.) இந்தச் சூழலைக் கெடுத்ததில் ஜெயமோகனுக்கு மிக முக்கியமான பங்குண்டு. இலக்கியம் நோக்கி வருபவர்களை ஒரு ஆசிரமத்திற்குள் வரும் சீடர்களைப் போல் மாற்றி எழுத்தின் தூய்மைவாதம் குறித்தே அங்கு அதிகம் அக்கறைக் கொள்ளப்படுகிறது. சில காலத்திற்குமுன் இதே வேலையை பாலகுமாரன் செய்து வந்தார். இது இன்னும் அதிகமாகுமோ என்றுதான் இப்பொழுது அச்சமாக உள்ளது.



றியாஸ் குரானா - தமிழ் இலக்கியச் சூழல் எப்படி இருக்கிறது? அந்தச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக உள்ளதா? அல்லது அதன் மீது விமர்சனங்கள் உண்டா?

லஷ்மி சரவணகுமார் - தமிழ் இலக்கியச் சூழல் முழு சுயநலமிக்கது.( தமிழ்நாட்டில்) தங்களை தக்கவைத்துக் கொள்ள அதிகாரத்திற்கு கால் கழுவிவிடுதல், புத்தகம் பதிக்கும் பதிப்பாளனை கடவுளாக நினைத்து துதிபாடுதல், தனக்குப் புடிக்காதவர்களை ஏதாவதொரு வகையில் துன்புறுத்துவது என இவர்கள் ஒருவகையான மாஃபியாக்களைப் போலவே இருக்கின்றனர். பாதிப்பேருக்கும் மேல் சிரிப்பதையே மறந்து போய்விட்டனர். மிகச் சிறிய வயது முதலே இலக்கியத்தோடு பரிட்சயம் என்பதால் எனது இளம் வயதில் சந்தித்தவர்களோடு இப்பொழுது இருக்கும் சூழலை நினைத்துப் பார்த்தால் நாம் போனதலைமுறையில் பிறந்திருக்கலாமோ என தோன்றும். எவ்வளவு விவாதம் சண்டை இருந்தபோதும் தனிப்பட்ட தாக்குதல் முன்பு ஒருபோதும் இருந்ததில்லை. இன்று வீட்டிற்கு டாடா சுமோ அனுப்புகிற அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எழுத்தாளனாக இருக்க உண்மையில் அச்சமாக உள்ளது. அச்சம் அரசுமையங்களைக் கண்டு அல்ல, பதிப்பக மாஃபியாக்கள், அவர்களின் அடிமைகள், இலக்கியவாதிகளின் தொண்டர் படையினரென இவர்களைப் பார்த்துதான்.


றியாஸ் குரானா - உங்கள் எழுத்துச் செயல்பாட்டின் அரசியல் என்ன எனக் கேட்டால் அதற்கு எந்தவகையான பதிலை சொல்ல முற்படுவீர்கள்?


லஷ்மி சரவணகுமார் - முன்பே சொன்னது போல் பெரும் அதிகாரத்திற்கெதிரான தனிமனித அதிகாரம். என் கதைகளின் ஆதாரப்புள்ளி அதுதான். அரசியலும்.



றியாஸ் குரானா - தமிழில் யதார்த்த வகை என நம்பும் ஒருவகை எழுத்தையே அதிகம் கொண்டாடுகிறார்கள். அப்படியான ஒரு வகை எழுத்துச்செயல் மட்டுமெதான் இருக்கிறதா? இவர்கள் யதார்த்தம் என நம்புவது உண்மையில் அந்தவகையானதுதானா?

கதை சொல்வதில் யதார்த்தம் ஒன்று எப்படி இருக்க முடியும்? யதார்த்தம் என்றால் அது ஆவணம் தானே? ஆவணத்திற்கும் கதைகளுக்கும் பல காத தூரம் இடைவெளியுண்டு. தமிழில் யதார்த்தம் என்ற பெயரில் எழுதப்படும் பெரும்பாலான குடும்பக் கதைகள் வானொலி நாடகங்களுக்கானவை. அதையும் மீறி கு.அழகிரிசாமி மாதிரியான அற்புதமான கதைசொல்லிகள் நமக்குக் கிடைத்தனர். அவர்களை யதார்த்தவாத கதைசொல்லிகளென முத்திரை குத்தியதுதான் தமிழ் இலக்கியவாதிகள் அவர்களுக்கு செய்த துரோகம்.இமையத்தின் எழுத்துக்கள் முழுக்க முழுக்க அழுகிப்போன பழமையானவை வட்டார வழக்கில் எழுதப்படுகிறதென்பதற்காக அதனை வலிந்து யதார்த்த வாத எழுத்தின் சாதனைகளாக முன்னிறுத்துகிறார்கள். இராசந்திரச் சோழன் இதை விட அற்புதமான கதைகளையும், குறுநாவல்களையும் எழுதியுள்ளார். ஆனால் அவரைத் திட்டமிட்டு ஒதுக்கியது ஏன் என புரியவில்லை.


றியாஸ் குரானா - தமிழில் இருக்கும் கதை சொல்லல் முறையிலிருந்து விலகிச் செல்லும் முறைமைகளை முயற்சித்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்கென ஒரு தனிப்பட்ட கதைசொல்லலையும், பிரதிக் கட்டமைப்பையும் உருவாக்கியிருக்கிறீர்களா? அது எப்படியானது?

லஷ்மி சரவணகுமார் - துவக்க கால சிறுகதைகளில் நிறைய அதைச் செய்து பார்த்திருக்கிறேன். மரபாக நம்பப்படும் அறங்களை தொடர்ந்து மறுக்க கதை சொல்லல் முறையில் இயல்பாகவே ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. ஆக, கதாப்பாத்திரங்களையும் நாம் புதிதானவர்களாக தேர்வு செய்ய வேண்டியுள்ளது. எனது இரண்டாவது சிறுகதையே ஒரு ஊரின் அழகான விபச்சாரியைத் தேடி வரும் கடவுள் அவளோடு உறவு கொள்ள முடியாமல் தோற்றுப்போய் திரும்பிப் போக, பிற்பாடு சாத்தான் வந்து அவளோடு காதல் கொள்வதான கதைதான். 2008 ல் எழுதப்பட்ட கதை. கடவுளைக் குறித்து எழுதிய கதைகளும் கவிதைகளும் சில புதிய வடிவங்களை தானே எடுத்துக் கொண்டன. துண்டு துண்டான கனவுகளை மட்டுமே இணைத்து கதையை உருவாக்கியுள்ளேன். மையத்தை வைத்து தொடர்ந்து கதை சொல்வது சலிப்பூட்டுகிறது. உப்புநாய்கள் வடிவம் சார்ந்தும், கதை சொல்லல் முறை சார்ந்தும் நிகழ்ந்த முக்கியமான முயற்சி. நீலப்படம் நாவல் கதையை விட்டுவிட்டுப் பார்த்தால் வடிவரீதியாக முக்கியமானதொரு முயற்சி. ஒருவகையான கொலாஜ் என்று சொல்லலாம். ஆனால் அதிகமான வாசகர்களுக்கு நாம் போய்ச்சேரும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் நமது வீர்யம் குறைந்து கொண்டே போகிறது என்பதை வருத்தத்தோடு நானும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.



றியாஸ் குரானா - இலக்கியத்தைக் கட்டுப்படுத்தும், அதன்மீது தாக்கம் செலுத்தும், இலக்கியத்திற்கு வெளியே இருக்கும் நிறுவனங்கள், பதிப்பகங்கள், இதழ்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

லஷ்மி சரவணகுமார் - இவர்கள் ஒரு தனி உலகில் வாழ்கிறார்கள். தாங்கள் கோமாளிகள் என்பது தெரியாமலேயே ராஜாக்களென நம்பும் முட்டாள்கள். பத்திரிக்கைகள், விருதுகள், பதிப்பகங்கள் இவையெல்லாமே இன்றைய சூழலில் ஒரு எழுத்தாளனை எந்த வகையிலும் கட்டுப்படுத்திவிட முடியாது. நான் எந்தவொரு பதிப்பகத்தையும் சாராமல் தான் இயங்குகிறேன். இன்று வாரமலர் தரத்தில் கவிதை எழுதும் ஒருவரால் இரண்டு புத்தகங்கள் போட்ட உடனே தமிழின் உயர்ந்த இடத்தை மிக எளிதாக அடைந்து விடமுடிகிறது. பத்துப் புத்தகங்கள் எழுதிய பிறகும் தொடர்ந்து எனக்கான இடம் மறுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் எனக்கு எந்தக் கவலைகளும் இல்லை. என்னால் எல்லாவற்றிற்குப் பின்னாலும் எழுத முடியும். எனக்கான வாசகர்கள் உண்டு. கானகன் நாவல் பிரசுரத்தின் போது ஒரு பிரச்சனையென வந்தபோது எனக்காகவே நண்பர் பாலநந்தகுமார் புதிய பதிப்பகம் துவங்கினார். இதெல்லாம் ஒரு எழுத்தாளனுக்கும் அவன் எழுத்துக்களுக்கும் அசலான அங்கீகாரமென நம்புகிறேன்.

றியாஸ் குரானா - இன்று இருக்கும் விமர்சனங்கள், விருதுத் தேர்வுகள் போன்றவற்றின் மீது நம்பிக்கையிருக்கிறதா?

லஷ்மி சரவணகுமார் - இன்றிருப்பது விமர்சனங்கள் இல்ல, அபிப்பிராயங்கள் சொல்லுதல். விருதுத் தேர்வு மகா கொடுமை. இவை பற்றியெல்லாம் பேசத் துவங்கினால் எங்கள் ஊர் அரசியல்வாதிகள் ஆயிரம் மடங்கு தேவலாமெனத் தோன்றும். யாராவது ஒருவருக்கு விருது கொடுக்க வேண்டுமென முடிவுசெய்த பிறகுதான் போட்டியையே அறிவிப்பார்கள். பெரும்பாலான விருதுகள் பதிப்பகங்கள் சார்ந்தே வழங்கப்படுவதால் அவர்கள் தங்கள் பதிப்பக எழுத்தாளர்களுக்கே அதை ரிசர்வ் செய்து வைத்துக் கொள்கிறார்கள். மும்பையிலிருந்து அம்பை ஒரு அமைப்பின் மூலம் விருது கொடுக்கிறார். அதுவும் கூட மறைமுகமாக ஒரு பதிப்பகத்தில் எழுதும் எழுத்தாளர்களுக்கு மட்டுமே போய்ச் சேருகிறது, அந்தப் பதிப்பகம் தாண்டி தமிழில் சமகாலத்தில் எழுதப்படும் வேறு புத்தகங்களை அவர் வாசிக்கிறாரே என்பதே சந்தேகமாய் உள்ளது. இன்னும் ஒரு பக்கம் சாதி அரசியல். வெளியே என்னதான் பூசி மறைத்தாலும் தமிழ்நாட்டின் விருது அரசியல் அதிகமும் பிள்ளைமார் சாதி அரசியல் தான்.



றியாஸ் குரானா - இலக்கிய இதழ்கள் என்னதான் செய்கின்றன?

லஷ்மி சரவணகுமார் - இலக்கிய இதழ்கள் அரசியல் கட்சிகளுக்குத் தேவையான அவைப்புலவர்கள், அரசு அதிகாரிகளுக்குத் தேவையான பதவி உயர்வுகள், தமிழ் சினிமாவிற்குத்தேவையான வசனகர்த்தாக்களை உருவாக்குதல் போன்ற கடமைகளை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன

றியாஸ் குரானா - இந்தியாவுக்கு வெளியே இருக்கும் தமிழ் இலக்கியங்களுடன் பரீட்சயமுண்டா? அவைகள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

லஷ்மி சரவணகுமார் - தமிழ்நாட்டிற்கு வெளியே எழுதுகிறவர்களை தொடர்ந்து வாசிக்கிறேன். கே.டானியல், வில்வரத்னம், மு,தளையசிங்கம், பிரமிள், ஷோபா சக்தி, திசேரா, ஹஸின், கருணாகரன், யோ.கர்ணன், சேரன், அனார் இந்தக் கேள்வியைக் கேட்ட ரியாஸ் குரானா, கலாமோகன், தீபச்செல்வன் மலேசிய தமிழ் இலக்கியத்தில் சமகாலத்தில் தீவிரமாக இயங்கும் நவீன், பாலமுருகன், தயாஜி, ஷன்முக சிவா என கூடுமான வரையில் எல்லோரையும் வாசித்தபடியேதான் இருக்கிறேன். சொல்லப் போனால் துவக்க காலம் தொட்டே தமிழ்நாட்டு இலக்கிய எழுத்தாளர்களை விடவும் இவர்கள் எல்லோருக்கும் எழுத்தில் தீவிரமான அரசியல் நிலைப்பாடு உள்ளது என்பதுதான் நிஜம். இவர்களில் பலரோடும் அரசியல் ரீதியாக அவர்களின் எழுத்துக்களோடு நிறைய முரண்பாடுகளுண்டு. ஆனால் இவர்கள் ஒவ்வொருவரின் எழுத்தும் எனக்கு முக்கியமே.



றியாஸ் குரானா - உங்கள் கதைகள் மற்றும் நாவல்கள் குறித்து - நீங்களே ஏதும் விமர்சனங்களை முன்வைப்பதாக இருந்தால், அது என்னவாக இருக்கும்?

லஷ்மி சரவணகுமார் - எனது கதைகளையோ நாவல்களையோ இப்பொழுது திரும்ப வாசிக்கிற பொழுது இவற்றிற்காக இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாமோ என்றுதான் தோன்றும். உப்புநாய்களை பலரும் ஆஹா ஓஹோவெனக் கொண்டாடுகிறார்கள். என்னை அந்த நாவல் எந்த வகையிலும் திருப்திபடுத்தவே இல்லை. பெரும்பாலான கதைகளிலும் ஒருவித அசிரத்தை இருப்பதாகப்படுகிறது. எப்போதும் சொல்வது போல் ஒரு நல்ல கதையையும் நாவலையும் எழுதுவதற்கான பயிற்சியாகவே எழுதுகிற எல்லாவற்றையும் நினைத்துக் கொள்கிறேன்

றியாஸ் குரானா - நீங்கள் கவிதைகளையும் எழுதியிருக்கிறீர்கள். ஆக, இலக்கியம் என நம்பப்படும் பல வடிவங்களில் செயலாற்றுகிறீர்கள். இதில் எது கடினமானது? எது கடும் உழைப்பைக் கோருவது? எது உங்கள் விருப்பமானது?

லஷ்மி சரவணகுமார் - சந்தேகமேயில்லாமல் கவிதை தான். நான் தோற்றுப்போன ஒரு கவிஞன். அதனால் தான் புனைவெழுத்தின் பக்கம் ஒதுங்கினேன். கதைகளை கவிதையின் மொழியில் சொல்ல முயன்றுகொண்டிருக்கிறேன். துரதிர்ஸ்டவசமாக தமிழ்க் கவிகளும் பெருங்கவிகளும் வார்த்தைகளை மடக்கி மடக்கி வரிகளாக்குவதுதான் கவிதையென அபத்தமென நம்புவதால் தமிழில் கவிதைகளுக்கான மரியாதை கவலைக்கிடமாக உள்ளது.



றியாஸ் குரானா - தமிழ் கவிதைகளின் தற்போதைய நிலவரம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

லஷ்மி சரவணகுமார் - நிறைய சொல்லலாம். ஆனால் சில மூத்தக் கவிஞர்களும் இளங்கவிகளும் தேடி வந்து என்னை உதைப்பார்கள். உயிர் பயம் கருதி இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் தவிர்க்கிறேன்.

றியாஸ் குரானா - உங்களுக்குகும் ஒரு கவிஞருக்குமிடையே ஒரு பிரச்சினை வந்ததே, அதை இன்று எப்படி நினைவுகூர விரும்புகிறீர்கள்?

லஷ்மி சரவணகுமார் - அதில் நினைவுகூற ஒன்றுமில்லை. வாழ்வின் முட்டாள்த்தனமான தருணங்களில் அதுவும் ஒன்று



றியாஸ் குரானா - சினிமா துறையிலும் கால் வைத்திருக்கிறீர்கள். எப்போது உங்கள் திரைப்படத்தை நாங்கள் பார்க்க முடியும்? இலக்கியம் சினிமா இரண்டில் எதை உங்கள் செயற்பாடாக தொடருவீர்கள்?

லஷ்மி சரவணகுமார் - மயானத் தங்கமென ஒரு குறும்படம் எடுத்துள்ளேன். அது கென்யாவில் நடந்த ஸ்லம் ஃபிலிம் பெஸ்டிவலில் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டது. இப்பொழுது முழு நீளப் படம் இயக்குவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த வருட இறுதிக்குள் படம் முடிந்துவிடுமென நம்புகிறேன். சினிமா, இலக்கியம் இரண்டிலுமே என்னால் தொடர்ந்து இயங்க முடியும். ஏனெனில் ஐந்து வருடங்களாக சினிமாவில் தீவிரமாக வேலை செய்தபடியேதான் தீவிரமாக எழுதவும் செய்திருக்கிறேன்.

றியாஸ் குரானா - இலக்கியத்தில் தத்துவம்,அரசியல் போன்றவற்றின் இடம் என்ன?

லஷ்மி சரவணகுமார் - மிக முக்கியமான பங்குண்டு. எழுதுகிறவனின் சமூக அக்கறை அல்லது எழுத்தின் விசாலம் இவற்றையெல்லாம் ஒருவன் புரிந்து கொள்ள அடிப்படையில் கொஞ்சமாகவேனும் தத்துவத்தையும், அரசியலையும் வாசித்திருக்க வேண்டும். தத்துவ, அரசியல் வாசிப்பில்லாத எழுத்திற்கான வாழ்நாள் வெகு சொற்பமே. எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, ரவிக்குமார், அ.மார்க்ஸ் இவர்களின் பங்கு அந்த வகையில் தமிழ் இலக்கியத்தில் மிகமுக்கியமானதொன்று. இவர்கள் மொழிபெயர்த்த, நேரடியாக எழுதிய அரசியல் நூல்கள் தான் பலருக்கும் தங்களது ஆரம்ப கால அடிப்படையாக இருந்திருக்கிறது. எண்பதுகளில் தமிழ் இலக்கியத்தில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்தது இங்கு நிகழ்ந்த அரசியல் மற்றும் தத்துவ வாசிப்புகளின் வழியாகத்தான்.

றியாஸ் குரானா - இலக்கிய வாதிகளிடையே எனக்குத் தெரிந்து உங்களிடம் மட்டுமே கேட்க முடிகிற சில கேள்விகள் உண்டு. காதல் மன்னன் என்று கமலுக்கு பட்டம் சூட்டியதை உங்களுக்கு பொறாமையாக இருக்கிறதா?

லஷ்மி சரவணகுமார் - எனக்குக் கொஞ்சமும் பொறாமையில்லை. என்னாலும் நிறைய பேரைக் காதலிக்க முடிகிறது, என்னையும் நிறைய பேர் காதலிக்கிறார்கள் என்கிற பொழுது நான் ஏன் கமலைப் பற்றி யோசிக்க வேண்டும்.

றியாஸ் குரானா - உங்களால் மட்டும் எப்படி எல்லாரையும் இந்தளவு காதலிக்க முடிகிறது?

லஷ்மி சரவணகுமார் - இன்னும் ஒரு நூறு பேரை சேர்த்துக் காதலிக்கலாமா என்றுதான் ஒவ்வொரு இரவும் தோன்றும். 23 வயதிற்கு முன்பு வரையிலும் புறக்கணிப்பை மட்டுமே பார்த்தவன் என்பதால் மனிதர்கள் எத்தனை முக்கியமென்பதையும் காதலின் மகத்துவத்தையும் அனுபவப்பூர்வமாக அறிவேன். காதலிக்காமல் போயிருந்தால் எப்பொழுதோ செத்துப் போயிருப்பேன். அல்லது மனநோயாளியாகி இருப்பேன்.

றியாஸ் குரானா - காமம் காதல் இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என ஒரு கட்டாயம் வந்தால் எதை தேர்வு செய்வீர்கள்? தற்போது யாரை காதலித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

லஷ்மி சரவணகுமார் - காமம் – காதல் இரண்டும் வேறு வேறா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. காதல் காமம் இரண்டுமே ஒரு உருவின் இரண்டு முகங்கள் அவ்வளவுதான். யாரையெல்லாம் காதலிக்கிறேன் என பட்டியலிட்டால் அதுவே இரண்டு பத்திகள் தாண்டும். விட்டுவிடலாம்.
றியாஸ் குரானா - இந்த உலகில் அதிகம் வெறுக்கும் நபர் யார்? ஏன்?

லஷ்மி சரவணகுமார் - நிறையபேரை வெறுக்கிறேன். மனதின் அடியாழத்திலிருந்து முழுமையாக தீவிரமாக வெறுக்கிறேன். ஆனால் நேசத்தைப் போல் வெறுப்பை வெளியே சொல்ல முடியாது. அந்த வெறுப்பு ஒருநாளும் தீராது. முக்கியமாக எனது தகப்பானரை. யாரோ ஒரு மனிதனை மட்டும் கொலை செய்யும் அதிகாரம் எனக்கு வழங்கப்படுமானால் அடுத்த நொடி யோசிக்காமல் அவரை கொலை செய்துவிடுவேன்.



றியாஸ் குரானா - நவீன கவிதை காலாவதியாகிவிட்டது என றியாஸ் குரானா சொல்கிறாரே, இது குறித்து ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?

லஷ்மி சரவணகுமார் - எனக்கு அப்படித் தோன்றவில்லை. நவீன கவிதை தனக்கான தேவைகளைத் தொடர்ந்து உருவாக்கியபடியேதான் இருக்கிறது. காலாவதியாகிப் போனது அதை எழுதுகிற சிலர் தான். இதில் விருது வழங்குகிறவர்கள் தேர்வுக்குழுக்கள் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. தேர்வுக்குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் போன தலைமுறையின் மிக சுமாரான கவிஞர்கள் ஆக தங்கள் காலத்திலும் தங்களுக்குப் பிறகும் சுமாராக எழுதுகிறவர்களையே இவர்கள் ஊக்குவிக்கிறார்கள். இதன் மூலம் தமிழின் தரமான கவிஞர்களும் கவிதைகளும் மறைக்கப்பட்டு இவர்களே நவீன கவிதையின் முகவரி என ஒரு தோற்றத்தை உருவாக்க முடிகிறது. தங்களுக்கு இருக்கும் அதிகார பலத்தால் இதனை திறம்படச் செய்துவிட முடிகிறது. நம்மில் எத்தனை பேர் சி.மணியை நினை வைத்திருக்கிறோம். மறக்கச் செய்தது இவர்கள்தான்.
றியாஸ் குரானா - சாருநிவேதிதாவின் எழுத்துக்கள் குறித்து உங்களுக்கு என்னவகையான வாசகப் புரிதல் இருக்கிறது?

லஷ்மி சரவணகுமார் - தமிழ் புனைவிலக்கியம் எப்போதும் அறத்தையே பிரதானமாகப் பேசுகிறது. அதனாலேயே பிற்போக்குத்தனங்களும் மொன்னைத்தனங்களும் எழுத்துக்களில் அதிகம் உள்ளவர்கள் இங்கு பிரபலமானவர்களாகிவிடுகிறது. சாருவின் சிறுகதைகள், ராஸ லீலா வரைக்குமான நாவல்கள் அவற்றிலிருந்து முற்றிலும் விலகியவை. தமிழ் புனைவுகளுக்கு பொதுவாகவிருந்த மையத்திலிருந்து விலகி புதுவகையான கதையைப் பேசியது அவர்தான். கதைகளுக்காக அவர் எந்தவிதமான சிரமங்களும் கொள்ளவில்லை, முக்கியமான புதுவகையான உரையாடல்களைத் துவக்கி வைத்ததில் அந்தக் கதைகளுக்குப் பங்குண்டு. இஸங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளைத் தாண்டி அதை கதைகளுக்குள் பரிசோதித்துப் பார்த்தது சாருதான். உன்னத சங்கீதம் என்னும் சிறுகதையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத போதும் அந்தக் காலகட்டத்தில் அந்தக் கதையை எழுத ஒருவனுக்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். ஸீரோ டிகிரியும் அப்படித்தான். சாருவின் புனைவுகளை விடவும் அபுனைவுகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். தமிழில் இப்படியான பரந்துபட்ட எழுத்துமுறையை வேறு யாரும் முயற்சித்துப் பார்த்திருக்கவில்லை. முக்கியமாக சாருவின் மொழி. வாசிக்க மிக எளிதானது என்பதோடு அசாத்திய வசீகரம் கொண்டது.

றியாஸ் குரானா - கடைசியா ஒரு கேள்வி, உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது. உங்கள் சகபயணி உங்களை எப்படி பொறுத்துக்கொள்கிறார்? ஹா..ஹா.

லஷ்மி சரவணகுமார் - வாழ்க்கை முழுக்க முழுக்க கொண்டாட்டங்களால் நிரம்பியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அத்தனை உற்சாகமாக இருக்கிறேன். திருமணத்திற்குப்பின் ஒருவகையில் புதிய மனிதனாக மாறிப்போயிருப்பதாகத்தான் தோன்றுகிறது. நான் கடவுளை மறுத்தாலும் அவர் தொடர்ந்து என்னை ஆசிர்வதித்தபடியேதான் இருக்கிறார், என் மனைவியின் மூலமாய். ஒரு மனிதனை, அதுவும் எழுத்தாளனை அவனது எல்லாக் குறைகளோடும் பிசிறுகளோடும் ஏற்றுக்கொண்டு முழுமையாக காதலிக்கும் ஒரு பெண் கிடைத்ததை வரமென்று சொல்லலாமா? ..