றியாஸ் குரானா
இந்த வகையான தலைப்பை பார்க்கும் ஒருவர் உடனடியாக, இதை கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமானது என நினைக்கவே வாய்ப்பு அதிகம். இதிலுள்ள கூற்று சற்று சிக்கலானதும் கூட. ஆனால், நவீன கவிதை என்ற கதை தமிழைச் சந்தித்து கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாகிவிட்டது என யோசிக்கும்போது, மிக முக்கியமான ஒரு அறிவிப்புபோலவும் தோன்ற சந்தர்ப்பமிருக்கிறது. எப்படி இருந்தாலும், ‘காலாவதியாகுதல்’ என்ற சொற்களில் இருக்கும் அழுத்தமும், அதுகோரும் பொருளாக்கமும் கவிதை குறித்த எனது அனுகுமுறைக்கு சற்றும் உவப்பான ஒன்று அல்ல. அந்தச் சொல் – முற்றிலும் பிரயோசனமற்றது, தேவையற்றது போன்ற பொருள்களையும் வெளிப்படுத்தக்கூடியது. ஆயினும், இப்படியான ஒரு அறிவிப்பைச் செய்வதினூடாக நவீன கவிதையை அனுக முற்படுவதற்கு மிகுந்த துணிச்சலும், உழைப்பும் வேண்டுமென்பதை உணர்ந்த நிலையில்தான் இதை எழுத முற்படுகிறேன்.
நவீன கவிதை தமிழில் எப்படி பயிலப்பட்டு வந்திருக்கிறது. இன்று அதன் வகிபாகம் என்ன என்ற கேள்விகளை எழுப்பவும், அதன் பங்களிப்புக்களை மேலோட்டமாக பார்க்கவும் இது உதவக்கூடும். தமிழின் பிரிக்கமுடியாத முக்கிய அம்சமாக நவீன கவிதை தன்னை நிலைநிறுத்தி விட்டிருக்கிற நிலையில், இந்தக் கூற்றை விபரிக்க முற்படும்போது எதிர் நோக்க வேண்டிவரும் பல்வகையான சிக்கல்களை எதிர்பார்த்தபடியே அதனோடு வினையாற்ற விரும்புகிறேன். இந்தக் கதையாடல், விரிவான ஒரு விவாதத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய சமிக்ஞையாக அமைய வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறேன். எதுவும் காலாவதியாகிவிடுவதில்லை. புதிய உள்ளடக்கங்களை சேர்த்தும், சில உள்ளீடுகளை இழந்தும் வேறொரு தளத்திற்கு நகர்த்திவிடுவதே இயங்கியல். அல்லது ஒன்றின் தொடர்ச்சி என அறிந்த நிலையில், காலாவதியாகிப் போய்விட்டது என்ற அறிவிப்பு , உடனடியான எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும் என்பதையும் அறிவேன். எனினும், இப்படியான ஒரு கூற்றறை முன்வைக்கும்போது, அதை வியாக்கியானம் செய்வதற்கு என்னை தயார்படுத்த வேண்டும் என்பதை அறிகிறேன். ஆக, என்னைத் தயார்படுத்த எத்தனிக்கும் ஆரம்பச் செயலாகவே இந்தக் கட்டுரையை மேலோட்டமாக அமைக்கவுமிருக்கிறேன். இந்தக் கூற்றைப் புரிந்துகொள்வதிலும், அதை வியாக்கியானம் செய்வதிலும் என்னால் முடிந்த பங்களிப்புக்களைச் செய்வதோடு, மற்றவர்களின் பங்களிப்புக்களையும் எதிர்பார்க்கிறேன். இதுதான், தமிழ்க் கவிதையின் தொடர்ச்சியை உற்றுக் கவனிக்கவும்,கடந்து செல்லவும் உதவக்கூடிய உரையாடல்களை ஏற்படுத்தும். அப்படியான ஒரு உரையாடலுக்கான ஒரு தேவை இன்று நிலவுவதை, கவிதையைப் பயிலும் அனைவரும் புரிந்துகொண்டிருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், தனது முதலாவது கவிதையை எழுதவரும் ஆரம்ப நிலைக் கவிஞர்கள்கூட, ஒரு காலத்தில் பெரும் உழைப்பைக் கோரிய நவீன கவிதை என்ற ஒரு வகைமையை மிக இலகுவாக பயன்படுத்துவதை இங்கு சுட்டிக்காட்டலாம். எனவே, நவீன கவிதை என்பது அனைவருக்கும் மிக நெருக்கமானதும், அதிக பழக்கமுடையதுமான ஒன்றாக மாறியிருக்கிறது.இதனூடாக, நவீன கவிதை தனது கவித்துவத்தை முற்றுமுழுதாக கவிழ்த்துக்கொட்டி வெளிப்படுத்திவிட்டிருக்கிறது. தனக்குள் மறைத்து வைக்கக்கூடிய எந்தப் புதிரும் இல்லாது தனது உள்வெளியை மாற்றிவிட்டிருக்கிறது. இந்த மாற்றம் கவிதையை நமது சாதாரண அன்றாட அம்சங்களில் ஒன்றுபோல உணர்வுகளற்றும் செய்துவிடக்கூடிய ஒன்றாக ஆக்கியிருக்கிறது. எந்தப் புதிரையும் தனக்குள் கொண்டிருக்க முடியாத ஒரு நிலைக்கு கவிதையைத் தள்ளியிருக்கிறது.
கவித்துவம் என்ற இந்த ‘மறைந்திருக்கக்கூடிய’தும், வாகர்களின் உழைப்பைக் கோருவதுமான ஆற்றலை அழித்துவிட்டிருக்கிறது. அனைத்தையும் அனைவரும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாக ஆக்கும்போது செய்திபோல மாறவும், வாசகர்களின் உழைப்பை தேவையற்றதாக ஆக்கவும் செய்கிறது. ஆக, கவிதை என்பது சிந்தனை ரீதியான பல்திசை வெளிகளை விரித்துவிடுவதிலிருந்து குறுகிவிடுகிறது. அதனூடாக சமயல் குறிப்பைப்போல நவீன கவிதை மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையை கலைப்பதற்கும், ஒரு பிரதியை கவிதையாகப் பயில்வதற்கும் ஏற்ற வகையான வசதிகளை உருவாக்கவும், கவிதையின் தொடர்ச்சியை வளர்த்துச் செல்வதற்கும் இந்த உரையாடல் மிக அவசியமானது. அதற்கு இப்படி அதிரடியான அறிவிப்புக்களே இன்று ஆரம்பநிலையில் குறைந்தபட்ச தேவையுமாகிறது.
நவீன கவிதையை அதன் உச்ச நிலைவரை நகர்த்திச் சென்ற அதிக கவிஞர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். அதுபோல, நவீன கவிதையை எதிர்த்தும் ஆதரித்தும், மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக உரையாடியும் அதன் உள்ளடக்கங்களை விரிவுபடுத்திய பலர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்தும் இலக்கிய வெளியில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் நவீன கவிதை நிலைநிறுத்தப்பட்ட பின், அதன் சாத்தியங்களை மேலும் வலுப்படுத்திய பல தலைமுறையினரும், புதியவர்களும் இன்னும் செயற்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இப்படியான ஒரு காலகட்டத்தில், நவீன கவிதை காலாவதியாகிவிட்டது என அறிவிப்புச் செய்வது தமிழின் கடந்தகால கவிதையின் ஒட்டுமொத்த இயங்குதளத்தை அசைத்துப் பார்ப்பதுபோல ஒரு தோற்றத்தை வழங்கிவிடக்கூடியதுதான். ஒரு நூற்றாண்டு காலத்தில் ஒரு மொழி தனக்குள் உற்பத்தி செய்த கவிதைச் செயலை பொறுப்பற்ற முறையில் கேலி செய்வதாக கருதிவிடவும் இது வாய்ப்பைத் தந்துவிடக்கூடியது.
நூறு ஆண்டுகளின் கவிதை வெளியை உதாசீனம் செய்துவிடும் சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலாக கருதவும் இடமிருக்கிறது. மறுதலையாக யோசித்தால், நூறு ஆண்டுகளாக ஒரே கவிதைச் செயலையே ஒரு மொழி மீண்டும் மீண்டும் பயில்கிறது. அல்லது ஒரே தன்மையான அம்சமொன்றையே கவிதையாகப் பாவிக்கிறது. அதைக் கடந்துவிடவில்லை என யோசிப்பவர்களும் இல்லாம் போய்விட முடியாது.
நூறு ஆண்டுகள் கடந்தும் அடுத்த கட்டத்திற்கு கவிதையை நகர்த்திச் செல்ல முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது ஒரு மொழி என்ற சிந்தனையும் எழும்பிவிடாமல் இருக்க எந்த நியாயங்களும் இல்லை. குறித்த ஒரு வகைக் கவிதைச் செயலினூடே ஒரு மொழி அமைதியடைந்துவிடவும் முடியாது. ஏனென்றால், இலக்கியக் குடும்பத்தில் இருக்கும் பிறவடிவங்களான நாவல், சிறுகதை போன்றவை தனது உள்ளடக்கங்களை மாத்திரமன்றி, வடிவங்களையும், பேசுபொருட்களையும், அதன் எடுத்துரைப்பு முறைமைகளையும் புதுப்பித் திருக்கிறது. பல நாவல்களையும், பல சிறுகதைகளையும், பல எழுத்தாளர்களையும் அந்த மாற்றத்தின் பெயரால் அடையாளப்படுத்திவிடலாம். விமர்சனத்துறையும், கவிதைச் செயலும் மாத்திரமே பின்தங்கியிருக்கிறது. அதிலும், மிக மோசமாகப் பின்னடைந்திருப்பது கவிதைச் செயல் ஒன்றுதான். விமர்சனத் துறையிலும் இந்த மாற்றதடதின் அடையாளமாக சில பெயர்களையும், சில போக்குகளையும் புதிதாக தமிழ் இலக்கியம் உருவாக்கியிருக்கிறது. அல்லது முயற்சித்திருக்கிறது. உற்பத்தி செய்திருக்கிறது.
கவிதைச் செயலுக்கான இடைவெளி இன்னும் அப்படியே இருக்கிறது. நவீன கவிதை என்ற பிரக்ஞையை சிறிதும் மீறிவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது தமிழின் கவிதை வெளி. ஆனால், தமிழ்க் கவிதைச் செயல் என்பது எப்போதும், ஒருவகை விரிவுகொண்டே வந்திருக்கிறது. அதை மேலோட்டமாக நாம் பார்க்கும்போது நவீன கவிதை என்ற ஒன்றை நாம் கடந்துவிட வேண்டிய நிலையிலிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆகவே, நவீன கவிதை என்ற முறைமையோடு தமிழ்க் கவிதையை நிறுத்திவிட வேண்டிய எந்தத் தேவையுமில்லை. அதைக் கடந்துவிட வேண்டிய கட்டாயம் நிறைந்த ஒருவகை இக்கட்டான காலகட்டத்தில் தமிழின் கவிதைச் செயல் இன்று சிக்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வதானது, அந்த மாற்றத்திற்கான இரக்கமற்ற உழைப்பை செயற்படுத்த வேண்டும் என்பதையே நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதனால், நவீன கவிதையையோ, அதன் பங்களிப்புக்களையோ அல்லது, நவீன கவிஞர்களையோ நாம் கேலி செய்வதாக ஆகிவிடாது. கவிதைச் செயலை மேலும் வளப்படுத்தவும், தமிழ்க் கவிதையின் தொடர்ச்சியை அனுமதிப்பதுமாகவே இருக்கும். நவீன கவிதையை மேலும் மேலும் சிந்திப்பதினூடாகவே இந்தச் சாத்தியப்பாட்டை நாம் முயற்சிக்க முடியும். ஒரு நூறு ஆண்டுகளைத் தொட்டுவிட்ட இன்றைய நிலையில், இதுதான் கவிதைச் செயலுக்கான சிந்தனையாகவும் இருக்குமென்று நினைக்கிறேன்.
நவீனத்துவம் என்ற கருத்தாக்கம் தமிழைச் சந்திப்பதற்கு முன் ‘இலக்கியம்’ என்ற சொல் கவிதைகளையே குறித்தது. அவை இலக்கியம் என்ற அர்த்தத்திலோ, கவிதை என்ற அர்த்தத்திலோ பயிலப்பட்டு வந்திருக்கவில்லை. கற்றல், அறிவு என்ற நிலையிலே பயிலப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றை அரசியல் வரலாற்றோடு இணைத்து வாசிப்பதை இன்றுவரை நாம் காண்கிறோம். ஆனால், தமிழின் கவிதை ஒரு மெய்யியல் வரலாற்றினூடாகவே கவித்துவம் என்ற ஒரு நிலைப்பாட்டை வளர்த்துவந்திருக்கிறது. இதுவரையான 2000 கடந்த காலவெளியில் கவிதை அகம் குறித்தே தனது அக்கறையைச் செலுத்திவந்திருக்கிறது. இதையே நாம் இந்த மெய்யியல் என்ற கவித்துவ அடையாளத்திற்கான உதாரணமாக கருதமுடியும். இந்த மெய்யியல் பார்வையின் சார்பு மிகவும் அழுத்தம் பெற்றது சங்ககாலத்திற்குப் பிறகாகும். மருத்துவக் குறிப்புகள், வானிலைத் தகவல்கள், சாஸ்திரங்கள், என சமூகச் செயற்பாட்டின், அனைத்து உற்பத்திகளையும் கவிதையிலே நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. அல்லது பின்னாட்களில் கவிதை என நம்பப்பட்ட அதற்கு இருப்பிடமாக கருதிய வடிவங்களிலே அறிவாக பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்படி மிக அதிகமான ஒன்றோடொன்று முற்றிலும் வேறான அறிவியல் மற்றும் சமூக உள்ளடக்கங்கள், புனைவுகள் என்பனவற்றை தமிழ்க் கவிதை சுமந்துவந்திருக்கிறது. இருந்தாலும், இவைகளினூடாக கவித்துவத்தை தொடர்ச்சியாக பேணி கடத்திவருவதற்கு மெய்யியல் என்ற ஒன்றே பயன்பட்டிருக்கிறது. இந்த மெய்யியல் என்பதை மேலைத்தேயம் சார்ந்த ஒன்று அல்ல. அது முற்றிலும் தமிழ்ச் சிந்தனையின் நெருக்கடிகளின் வழியாக உருப்பெற்று வளர்ந்த மெய்யியலாகும். அது மெய்யியல்தானா என்று கேட்டால் தெரியாது என்பதே உடனடிப் பதிலாகவும் இருக்கும். எனினும், அந்த எளிய கருத்துருவம் சமூகப்பெரும் உள்ளீடாக செயற்பட்டிருப்பதால் மெய்யியல் என்று அழைப்பதற்கே விரும்புகிறேன்.
தமிழின் மெய்யியல் என்பது மற்றமையை எதிர் கொள்வதிலும், மற்றமைகளோடு வினை புரிவதிலுமுள்ள தனித்த அகமிகளின் பிரச்சினைகளிலிருந்து மேலெழுந்து வந்ததாகும். அகமி மற்றும் புறமி ( சுயம், மற்றும் சமூகம் அல்லது அகம் புறம்) என்பன நல்ல நிலையில் இல்லை. அவைகளைச் சரிசெய்வதனூடாக ஒரு விடுதலையை, உன்னதமான வாழ்வை உருவாக்க முடியுமென்று தமிழ்ச் சிந்தனை கருதியது. அந்தச் சிந்தனையின் நீண்டகாலச் செயற்பாடே தமிழின் கவித்துவமாகவும், கவிதையாகவும் வெளிப்பட்டன. சங்ககாலத்திற்குப் பிறகு நவீனத்துவத்தை தமிழ் சந்திக்கும்வரை ‘புறமி’ என்பது, தமிழின் கவிதை மற்றும் சிந்தனை வெளியில் முக்கிய இடத்தை வகிக்கவில்லை. அதைக் கவனத்திற்கொள்ளவுமில்லை. அகமியைச் சரிசெய்வதினூடாக அதுவும் தனித்த அகமிகளை சரிசெய்வதினூடாக புறமியை மாற்றியமைத்துவிட முடியும் எனக் கருதப்பட்டது. அதனூடாக அகமிக்கும் புறமிக்குமிடையிலான மறைமுகமான தொடர்பு வலியுறுத்தப்பட்டது.
இயற்கையோடு இசைவாக இருந்த வாழ்வு மெல்ல மெல்ல நீங்கத்தொடங்கிய காலமாகவே சங்க காலம் இருந்திருக்க வேண்டும். நிர்ப்பந்தமற்ற கூட்டு உற்பத்தி, கூட்டு நுகர்வு என்பன கலைந்து கொண்டு வரும் செய்திகளை சங்ககாலக் கவிதைகளில் அறிகிறோம். அகமி மற்றும் புறமி என்பது கூட்டு உற்பத்தியினதும், நுகர்வினதும் உள்ளீடாக மாத்திரமே வெளிப்படும் நிலையில் சங்க காலக் கவிதைகள் இருக்கின்றன.
இயற்கையுடன் இசைந்த வாழ்வுமுறையும், கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு நுகர்வு போன்றவற்றால் உருவாகியிருந்த உரித்தற்ற கூட்டு வாழ்வு சிதையுமிடத்திலே இந்தத் தமிழின் மெய்யியல் தோற்றம் பெற்று மேலெழுகிறது. வாழ்வுரீதியான, சமூகரீதியான இந்தச் சிதைவை சரி செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஒரு ஒழுங்கு முறைமை, வரையறை, ஒழுக்கம், போன்றவை கட்டாயம் கடைப் பிடிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியது. இந்தக் கட்டாயக் கடைப்பிடிப்பு அல்லது பின்பற்றுதல்களினூடாக ஒரு உன்னத வாழ்வை உருவாக்கிவிடலாம் என நினைத்த மெய்யியல் சிந்தனை தமிழுக்கு ‘அறம்’ ஒன்றை உருவாக்கிக்கொண்டது. இந்த அறம் தனித்த அகமி தொடர்பிலே அக்கறைகொண்டது. அனைத்து அகமிகளும் அறத்தைக் கடைபிடிக்கும் போது, விடுதலை என்று இன்று அழைக்கப்படுவதற்கு நிகரான ஒரு உன்னத வாழ்வு உருவாகிவிடும் என நம்பியது. அதுவே, அறம் சார்ந்த இலக்கியங்கள் முதன்மை பெறுவதற்கு காரணமாக ஆகியது. திருக்குறள், நாலடியார் போன்றவற்றை இங்கு சுட்டிக்காட்டலாம். காலப்போக்கில் இந்த ‘அறம்’ சார்ந்த இலக்கியங்கள் உன்னத வாழ்வை உருவாக்கிவிட முடியாதுபோய்விட்டதை உணர்ந்த போது, தமிழில் காப்பியங்கள் உருவாகின. அடிப்படை ஒன்றுதான். இந்த வாழ்வு சரியான நிலையிலில்லை. அதைச் சரிசெய்து உன்னத வாழ்வை உருவாக்குவதென்பதுதான். அறம் சார்ந்த அறிதல் முறைகளாலும், அதை முன்வைத்த கவிதைகளாலும் வாழ்வை சரிசெய்ய முடியவில்லை என்பதே காப்பியங்களின் வருகைக்கு காரணமாயின.
காப்பியங்கள் அகமியை வேறுவிதமாக நோக்கின. அதற்கான வழிமுறைகளையும் முற்றிலும் வேறுவிதமாக தேர்வு செய்து கொண்டன. இலக்கியம் என்ற வகையில் வாழ்வை முழுமையானதாக முதன்முதலில் பார்த்தது காப்பயிங்கள்தான். கம்பராமாயணம் இதற்கு சரியான சான்று. ( சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற ஏனைய காப்பியங்கள் முற்றிலும் வேறான இயங்குதலைக்கொண்ட மாற்று மரபாகும். சிற்றிலக்கியங்கள் அவைகளின் உள்ளியக்கத்தை பெரிதும் எடுத்துக்கொண்டதால், அவை குறித்து பேசும்போது சில வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறேன்.) வினைப் பயன், விதி, கடவுள் போன்றவை மேலெழுந்தன. கடவுளை மனிதனிடத்தில் கொண்டு வந்து சேர்த்தது. அப்படி மனிதனாக வந்த கடவுளினால் தீவினைகள் அழிக்கப்பட்டு வாழ்வு உன்னத நிலையை அடைந்துவிடும் என்ற இலக்கியக் கருத்தாக்கமான புதிய சிந்தனை பயன்பாட்டுக்கு வந்தன. மனித அகமி என்பது, கடவுள் என்ற ஒரு மாபெரும் அம்சம் வந்து வசிப்பதற்குப் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கும் ஒன்று எனக் கருத வைத்த மட்டில், மனித அகமியை கடவுளைவிடப் பெரிய ஒன்றாக மாற்றியிருந்தது.
மனிதனாக வந்த கடவுளினாலும் வாழ்வைச் சரிப்படுத்த முடியாதுபோனபோது, வினைப் பயன், விதி, திரும்பத் திரும்ப கடவுள் பல மனித அகமிகளினூடாக வெளிப்பட்டு எப்படியாவது வாழ்வை சரி செய்துவிடுவார் என்றாகியது. இந்தக் கருத்துக்களை செழுமைப்படுத்த வேண்டிய தேவையை காப்பியங்கள் உருவாக்கின. அத்தோடு, கவிதைக்குள் ஒருவகைக் கதைசொல்லுதல் என்ற தன்மை விரிந்ததளத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டதும் காப்பியக்காலத்தில்தான். தமிழ் இலக்கிய மரபில், முதலாவதாக கதைசொல்லுதல் என்ற செயல் முழுமையான அளவில் வெளிப்பாடுகண்டது இந்தக் காப்பியங்களில்தான்.
கடவுள் பூமிக்கு வந்து இங்கு நிலவிய வாழ்வை சரிசெய்து உன்னதமான் ஒன்றாக மாற்ற முடியாது போன நிலையில்தான் தமிழ்க்கவிதையும், சிந்தனையும் அடுத்த நிலைக்குத் தாவுகிறது. புதிய திசையை நோக்கி நகரத்தொடங்குகிறது. அதனூடாக புதிய கவிதைக்கான உள்ளடக்கங்களை அறிமுகப்படுத்துகிறது;. ஆனால், அரசுகளும், அதிகார நடைமுறைகளும் உன்னதமான வாழ்வை விடுதலையாகப் பெற்றுத்தரும் என்ற சிந்தனை நவீனத்துவம் தமிழைச் சந்தித்ததின் பின்பே ஒரு அறிவாக மாறியிருந்தது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். தமிழ் அரசுகளும், அதிகார மையங்களும் வரலாறுதோறும் இருந்துவந்த போதும் ‘அரசன்’ என்ற மனித நிலையிலிருப்பவனாலோ அல்லது ‘ அதிகாரம்’ என்ற மனித உற்பத்தியினாலோ வாழ்வு உன்னதம் பெறும் எனக் கருதவே இல்லை. அரசன் தெய்வமாகவும், அதிகாரம் என்பது தெய்வத்தின் நடவடிக்கை என்பதாகவும் மாற்றப்படுவதினூடாகவே , வாழ்வை உன்னதமாக ஆக்கும் ஆற்றல் கிடைக்கும் என்றே நம்பினர். அல்லது சிந்தித்தனர். கடவுளாக மனிதன் மாற்றப்பட்டு வாழ்வை உன்னதப் படுத்த முடியாதபோது, அடுத்த கட்டம் தோன்றியது. அனைத்து மனிதர்களையும் கடவுளாக மாற்றுவது என்பதே அது.
பல ஆயிரம் மக்களில் எவராவது ஒருவரின் அகமியில் கடவுள் நுழைந்து வசிப்பதினூடாக வாழ்வை உன்னதப்படுத்திவிட முடியாது. ஒவ்வொரு அகமியையும் கடவுளாக மாற்றுவதினூடாகவே உன்னத வாழ்வை உருவாக்க முடியும். அகமி என்பது கடவுள் என்ற இறந்தகாலத்தின் பயன். விளைபொருள். ஆகவே, அகமியினூடாக கடவுள் என்ற தனது ஆரம்ப நிலையை அடைந்துவிட முடியும். கடவுளும், அகமியும் வேறு வேறானதல்ல என்றது பக்தி இலக்கியக் காலம். இது அகமியின் தீராக்காதலை தனது ஆரம்ப நிலையை அடைந்துவிடும் நோக்கிலான பக்திப் பயணத்தைத் தொடர்ந்தது. உடல் வேட்கை, மற்றும் புறம் என அனைத்தையும் காதலாக மாற்றியும், அவைகள் காதலின் செயற்பாடுகளில் ஒன்று எனவும் கண்டது. காதல் என்பது மிகப்பெரும் முக்கியமான ஆற்றல் என்றும் அதனூடாகவே அனைத்தும் சாத்தியம் என்பதை தனது முக்கிய வெளிப்பாடாகவும், சிந்தனையாகவும் முன்வைத்தது.
கடவுள் என்பது நண்பராக,காதலாராக, குழந்தையாக, பெண்ணாக, ஆணாக, இப்படி மனிதப் பண்புகளோடு நெருக்கமுறும் ஒரு அம்சமாக மாற்றப்பட்டது. இதுவே பக்தி இலக்கியமென்றும், காதலின் அனைத்துப் பரிமாணங்களையும் முடிந்தளவு வெளியே கொண்டுவந்ததாகும். பக்தி இலக்கியம் என்பதினூடாக தமிழ்க் கவிதை ஒரு புதிய இலக்கியக் கதையாடலைக் கண்டுகொண்டது.
இதுபோலதான் சித்தர் மரபும்.இந்த மரபு – கவிதைக்குள் அறிவியல் சார்ந்த பல விசயங்களை நுழைத்தது. மனிதன் தனது வாழ்வை உன்னதமாக மாற்றியமைக்க எதையும் நம்பியிருக்கத் தேவையில்லை என்று முழங்கியது.இது பெரும் அதிரடிப்பாக மாறியது. தமிழின் மெய்யியலுக்கு அறிவியல் மற்றும் தத்துவம் சார்ந்த மேலைத்தேய கருத்துநிலைகளுடன் போட்டியிடத் தக்க வகையிலும், அதை நெருக்கமுறும் வகையிலும் வளர்த்துச் செல்வதற்கான உள்ளடக்கங்களை வழங்கின. மனிதனிடத்திலிருந்து கடவுளை நீக்கி தன்னை, தனது சிந்தனையை நம்பிவிடக்கூடிய ஒரு அகமி பற்றிய யோசனையை முன்வைத்தது. நம்பிக்கை என்ற இடத்தில், விவாதங்களையும், சிந்தனையின் தீராத உழைப்பையும் முன்வைத்தது. முதன்மைப்படுத்தியது. புறமிக்கும் அகமிக்கும் இடையிலான தொடர்பு என்பதை செயலூக்கமானதும், சிந்தனைகளாலுமான ஒன்றாக மாற்றியமைக்க முயற்சித்தன. புறம் என்பது அகத்தின் பயன்பாட்டுக்குரியதுதான். அகமியின் கட்டுப்பாடுகளாலும், செயற்பாடுகளாலும் புறத்தை ஒரு வழிக்குக் கொண்டுவரலாம் என இவை கதையாடின. இந்த சித்தர் மரபால்கூட வாழ்வை உன்னதமாக மாற்றிட முடியவில்லை என்பதே தமிழின் மெய்யியல் எதிர்கொண்ட தீராச் சிக்கலாகும்.
தமிழின் சிற்றிலக்கியங்கள் குறித்தும் சில விசயங்களை இங்குகுறிப்பிட்டுக்காட்ட வேண்டும். தமிழின் கவிதை சந்தித்த முதலாவது நவீன (புதிய) இலக்கியம் இவைகள்தான். இது இலக்கிய வரலாற்றின் காலத்தொடர்ச்சியற்று ஆங்காங்கே எழுந்தவையாகும். ஆனால் இவைகளிடையே பெரும்பாலும் ஒருவகை ஒற்றுமையை அவதானிக்க முடியும். கவிதையின் அதிக வகைமைகள் இதற்குள்தான் பெருகிக்கிடக்கின்றன. நூற்றுக்கு மேற்பட்ட வகைமைகளால் கவிதையை முயற்சித்துப் பார்த்திருக்கின்றன. அதிக கவிதை முறைமைகள் இதற்குள்ளே உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதோடு, கடவுள், அரசர், மனிதச் சிந்தனை போன்ற எதற்கும் தனியான முக்கியத்துவத்தைக் கொடுத்துவிடாமல் சாகாசங்களையும், அவைகளை இணைத்த அகமியையும் உருப்பெறச் செய்ய காரணமாயின. எதையும் செயல்களாகவே முன்வைப்பதற்கு காரணமாயின.மனித நேயம், அதற்கான தியாகம், அதாவது வாழ்நாட்களையே தியாகம் செய்யும் செயல்தன்மை நிறைந்த அகமிகளை அக்கறை கொண்டது. சிற்றிலக்கியங்களின் மெய்யியல் சார்ந்த முக்கிய இலக்கிய உள்ளடக்கம் ஒன்றல்ல. பலதாக சிறியளவிலானதாக இருந்தது.
இப்படி செயல்களை முதன்மைப் படுத்துவதற்கு காரணமாக இருந்தது சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களின் தாக்கமாகவே இருக்க வேண்டும். அகமியின் தியாகமும், மாயவினோத நிகழ்வுகளாலான செயற்பாட்டு வழிமுறைகளுமாகும்.
வறுமையை ஒழிப்பதற்காக தனது வாழ்வையே தியாகம் செய்தல், அந்தப் பெரும் செயலுக்கு வினோதமான ‘ அமுத சுரபி’ பாத்திரத்தை உருவாக்குதல். அதேபோல, ஒரு பெரும் நகரத்தையே அழித்தல். வரலாற்றில் ஏற்பட்ட இந்தப் பெருங்கோபங்கள், செயல்களைத் தூண்டக்கூடிய கவிதைக் குணமாக இருந்தது. இந்த வகையான செயற்பாட்டிற்கு அழிக்கப்பட்ட காப்பியங்களின் முக்கியத்துவத்தை, சிறிய அளவில் வௌ;வேறு தன்மைகளில் சிற்றிலக்கியங்களில் நாம் கவிதைக் குணமாக காணக்கூடியதாக இருக்கின்றன. இந்தச் வகை இயங்கியலினூடாக, கதாநாயகத் தன்மையுடன் கூடிய சமூக மனிதர்களை உருவகிப்பதை காணலாம். பலவகையான கவிதைக் குணமும் அதற்குள் மேலெழும் சமூகச் செயலும் உன்னதமான வாழ்வை உருவாக்க முயற்சிக்கும் சமிக்ஞைகளை சிற்றிலக்கியங்களில் காணலாம்.
இப்படி நீண்ட காலத்தில், வாழ்வை உன்னதமாக்கும் பயணத்தில் தோல்வியுற்று, சலிப்படைந்து ஒரு தேக்கத்தை எதிர்கொண்டிருந்தது தமிழ் சிந்தனை அல்லது மெய்யியல். ஆயினும், வாழ்வை உன்னதமாக மாற்றும் மெய்யியலின் தொடர்ச்சியான உள்ளியக்கம் இன்னும் காத்திருந்தது. அந்தத் தருணத்தில்தான், தமிழுக்கு வெளியே செயற்பட்டு தனது கடைசிகாலத்திலிருந்த நவீனத்துவம் தமிழைச் சந்திக்க வேண்டிவந்தது. நவீனத்துவம் என்ற கருத்தாக்கமும் விடுதலையைப் பற்றியே பேசியது. வாழ்வை உன்னதப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை முன்வைத்தது. அது தமிழுக்கு மிக உவப்பானதாகவும், ஆர்வந்தருவனவாகவும் மாறத்தொடங்கின. அதற்கான பிரதான காரணம் தமிழின் மெய்யியல் வௌ;வேறு காலகட்டங்களில் வௌ;வேறு வழிமுறைகளைக் கையாண்டபோதும், உன்னத வாழ்வை உருவாக்குதல் என்பதையே அடிப்படையாக கொண்டு சிந்தித்து வந்ததேயாகும். அந்தச் சிந்தனைக்கான புதிய வழிமுiறையை நவீனத்துவம் கொண்டுவந்ததுமாகும்.
நவீனத்துவம் சமத்துவம், சம சந்தர்ப்பம், விடுதலை அதாவது சமூகவிடுதலை அதனோடு இணைந்ததாக தேச விடுதலை எனப் பேசியது. கூட்டுப் பங்களிப்பு, கடவுள் நீக்கப்பட்ட தனித்த அகமிகளின் ஒருங்கிணைந்த சிந்தனை, ஒருமித்த செயல்கள் போன்றவற்றைப் பரிந்துரைத்தன. ஒப்பீட்டளவில், உலகின் எந்தப் பரப்பிலுள்ள மனித சமூகங்களையும், நாகரீகங்களையும், அறிதல் முறைகளையும், வாழ்வையும் அறிந்துகொள்ளவும், அதிலிருந்து தேவையான உள்ளடக்கங் களையும் அதற்குரிய செயல் முறைகளையும் ஒன்றிணைத்து விடுதலைக்கான செயலில் பயன்படுத்தத் தக்க வாய்ப்புக்களை கொண்டிருந்ததே முக்கிய காரணமாகும்.
விடுதலை என்பது, தனித்த அகமியின் விடுதலை என்பதற்குப் பதிலாக எண்ணற்ற அகமிகளை உள்ளடக்கிய தேச விடுதலை போன்றவையினூடாக தனித்த அகமிகளையும் விடுதலையை நோக்கி நகர்த்த முடியும் என்றே கருதியது. அதாவது, சங்க காலத்திற்கு அடுத்த படியாக மிகப் பெருமளவிலும், புதிய பண்பிலும் புறத்தைக் கவனத்திற்கொள்ள ஏதுவாக தமிழ்க் கவிதைக்கு வாய்ப்புக்கிடைத்தது நவீனத்துவத்தின் வரவின் பின்னர்தான்.
சங்க காலத்தில் செயற்பட்ட புறம்தொடர்பான அக்கறை, மற்றும் கூட்டுச் செயற்பாடு, சித்தர் மரபில் முக்கியத்துவம் பெற்ற கடவுள் நீக்கப்பட்ட அகமி அல்லது முக்கியத்துவம் பெற்ற மனிதச் சிந்தனையின் முதன்மை, பெருங்கொடுமை களிலிருந்து மனிதர்களை விடுவித்து விடுவதற்கான பெருஞ் செயலையும், எதிர்க்கோபத்தையும் ஐம்பெரும் காப்பியம் மற்றும் சிற்றிலக்கியங்களிலிருந்தும் இணைத்துப் பார்க்கும்போது, நவீனத்துவத்தை நெருங்கக்கூடிய ஒருவகைச் சிந்தனை திரட்சியுற்று மேலெழுவதினூடாக – மேற்கின் நவீனத்துவத்தை இலகுவாக தமிழால் நெருங்க முடிந்தமை என்பது ஒன்றும் ஆச்சரியமான விசயமல்ல. அது மட்டுமன்றி, தமிழைச் சந்திக்க வந்த நவீனத்துவம் தமிழ்க்கவிதையை கலைத்துப்போடுவதற்கு ஏதுவான வழிமுறைகளையும் தன்னோடு கொண்டுவந்தது. தமிழ்மொழி அல்லது சிந்தனை, இலக்கியம் எனப் பாவித்த ஒருவகைப் பிரதிகளை – நவீனத்துவமோ பலவகைப் பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றையும் தனித்தனிப் துறைகளாக வளர்த்து வைத்திருப்பதையும் கண்டுகொண்டது. அந்தத் தருணத்திலிருந்தே தமிழின் இலக்கியம் அல்லது கவிதை தனக்குள் சேகரித்து வைத்திருந்த பெரும் சுமைகளை தனித்தனியாகப் பிரித்து தானும் இறக்கிவைக்கத் தொடங்கியது. தமிழ்க் கவிதை வரலாற்றில் (இலக்கிய) தனியே ஒரே வடிவத்தில் (கவிதை வடிவில்) சுமந்து வந்த அனைத்துப் பாரங்களையும் தனது தலையிலிருந்து இறக்கி, சுயமாக செயற்பட விட்டது. மதம் மற்றும் அறங்களை தனித்துவிட்டது. இப்படி சோதிடம், மருத்துவம், சாஸ்திரம், கதைகள், செய்திகள், உரைநடை,தத்துவங்கள் என அனைத்தையும் அதன்னதன் பாட்டில் செல்லவிட்ட செயற்பட விட்ட பிறகு, மெய்யியல்தான் எஞ்சியது. அதுதான் கவித்துவம் என அடையாளம் காண நமக்கு வசதியாகவும் அமைந்துவிட்டது. அப்போதுதான், தமிழின் கவித்துவம் என்பது தன்னிடமிருந்து பிரிக்க முடியாத இந்த மெய்யியல்தான் என்பதை நாம் கண்டுகொள்ளலாம். இந்த மெய்யியல்தான் நான் இதுவரை பேசிக்கொண்டிருக்கும் மெய்யியல். அதாவது வாழ்வு நல்ல நிலையில் இல்லை. அதைச் சரிசெய்ய வேண்டும் என்ற சிந்தனையின் வேட்கைதான் என நாம் இதை வெளிப்படையாக சொல்லிவிட முடியும். இதற்குள்ளே இயங்கும் ஆற்றல் கவிதைத்துவத்தின் மறைந்திருக்கும் பகுதியாக எப்போதும் தொடர்ந்து வந்திருக்கிறது. இந்த மறைவான பகுதி என்பது என்றும் புதிர்களால் ஆனது. அந்தப் புதிரை தனக்குள் பாதுகாக்க முடியாத எதுவும் கவித்துவமற்றதாகவே மாறிவிடும் என்பது தமிழ்க் கவிதையின் நிலைப்பாடாகும்.
நவீனத்துவம் பிரதிபலிப்பு என்ற இலக்கியச் செயற்பாட்டு வழிமுறையையும், சமூக விடுதலை, தேச விடுதலை என்ற கதைகளினூடாக ஒரு அரசியல் செயலையும் தமிழுக்கு கொண்டுவந்தது. அல்லது நவீனத்துவத்திலிருந்து இவைகளை மாத்திரமே தமிழ் எடுத்துக்கொண்டது. தமிழ் புறம் என்பதினூடாக ஏற்கனவே அரசியல் செயற்பாட்டை நிகழ்த்திப் பார்த்திருக்கிறதுதான். எனினும், தமிழின் மெய்யியலுக்கு இந்த விடுதலை என்ற கருத்தாக்கம் நெருங்கிவருவதால் தமிழின் கவிதையும் ஆரம்பத்தில் இதைக் கையேற்றது. பாரதி நவீனத்துவத்தின் பிரதிநிதியாக தமிழில் முன்னுக்கு வந்தார். தமிழின் நவீன கவிதை பிரதிபலித்தல் என்பதை இரண்டுவகையாகப் பாவிக்கத் தொடங்கியது. 1930 களில் நவீன கவிதை உருப்பெறத் தொடங்கியது. அதிலிருந்து ஒரு முப்பது வருடத்தினுள் மேற்கில் நவீனத்துவம் வீழ்ச்சியடைத்தொடங்கிவிட்டது. அங்கு பின்நவீனத்துவம் உருப்பெறத் தொடங்கிவிட்டது. தமிழிலோ 80களின் கடைசிப் பகுதியில் அல்லது 90களின் ஆரம்பத்தில்தான் பின்நவீனத்துவம் புளக்கத்திற்கு வருகிறது.
நவீனத்துவம் தமிழில் உட்புகுத்திய முக்கிய கூறுகளை இப்படித் தொகுத்துக்கொள்ளலாம். சாரம், பிரதிபலித்தல், முழுமை,மையம், மக்கள் பங்கேற்பு,படிமம், கவிதைக்கான இலக்கணத்தை தவிர்த்தல், கவிதையை சுதந்திரமான நிலையில் இயங்கவிடுதல். அதுபோல, தமிழ்க் கவிதையைக் கலைத்து, அதிலிருந்து கதைகள் (நாவல்.சிறுகதை) உரைநடை,விமர்சனம்,அரசியல்,செய்தி, இப்படிப் பல துறைகளை தனியே இயங்கவிட்டதாகும். இவைகள்தான் நவீனத்துவத்தின் முக்கிய பங்களிப்புக்கயாகும்.
பாரதிக்குப் பிறகு நவீன கவிதை இருவகைப் போக்குகளை உருவாக்கிச் செயற்படத் தொடங்கியது. நா.பிச்சைமூர்த்தி வழியாக ஒரு திசை வளர்ந்தது. அத்திசை, தமிழின் கவிதை மரபிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொண்டாலும், மிக முக்கியமாக ‘தரிசனம்’ என்ற ஒரு நிலையை அதாவது சிந்தனை அமைவை தேர்வு செய்துகொண்டது. இந்தத் தரிசனம் என்ற சிந்தனை உள்ளொளி எனக் கருதத்தக்க பொருளற்ற ஒரு பொருளை கவிதையின் மூலமாக கருதத் தொடங்கியது. அல்லது இதற்கு உறவாக எதாவதொன்றைச் சொல்லலாம். எங்கோ இருக்கின்ற ஏதோ ஒன்று, எப்போதாவது ஏதோவொரு கணத்தில் தனிமனித அகமியில் தங்கிவிடுவது. அல்லது தனிமனித அகமியை சந்தித்து மறைவது எனப் பாவிக்கப்பட்டது. கவிதை ஒரு கணத்தில் தோன்றுவது. தவத்தினூடாக அந்தக் கணத்தைக் கண்டடையவும் முடியும். கவிதையை வைத்துக்கொண்டு எங்கோ ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அது விரும்பிய நேரத்தில் மனித அகமியில் கவிதையைப் பீச்சிவிட்டுப் போகிறது. அதைப் பிரதிபலிப்பதே கவிதைச் செயல் என அதிகமும் பேச ஆர்வங்கொண்டது. நவீன கவிதையின் இந்தத் திசை, சூழலில் – எதை தனிமனித அகமி உற்றுக் கவனிக்கிறதோ, எதில் லயிக்கிறதோ அதன் வழியாக அகமி ஒரு ரசனையான மாற்றத்திற்குட்படுகிறது. அந்தக் கணமே தரிசனம் கிட்டிவிடுகிறது. அதைப் பிரதிபலிப்பதே கவிதை என வாதிட்டது. அதே நேரம், எந்த இலக்கணம் அல்லது வரையறைகளும் இல்லை என்பதை சௌகரிகமாகக்கொண்டு, மிகக் குறைவான சொற்களாலும், படிமங்களாலும் கவிதையைப் படைத்துக்காட்டியது. இந்தச் திசையில் நகர்ந்த நவீன கவிதைச் செயலின் உள்ளியக்கமாக சமூக விமர்சனம் மேலெழுந்து வந்தன. சூழல் அல்லது புறம் மற்றும் பிற (பிற என்பது முக்கியம்) அகமிகள் நல்ல நிலையில் இல்லை என்ற புறம் சார்ந்த, (மற்றமைகள்) விமர்சனத்தையே அதிகம் கவனத்திற் கொண்டது.
‘இப்படியெல்லாம் இல்லாவிட்டால், இப்படியெல்லாம் நடைபெறாதுவிட்டால்’ நல்லதொரு புறத்தைக் கண்டடையலாம் என கவன ஈர்ப்பை செலுத்தத்தக்க வகையிலான விமர்சனத்தையே மேற்கொண்டன. நகரமயமாகிவருவதை ஏக்கத்தோடும், விமர்சனத்தோடுமே பார்த்தது. இந்த அந்நியத் தன்மையின் வருகையிலிருந்து அகமியைப் பாதுகாக்கவும் முயற்சித்தது. ( நவீனத்துவம் என்ற அந்நிய வரவை கவிதையில் இலக்கியத்தில் ஏற்றுக்கொண்டிருந்தது.) புற மற்றும் அகச் சூழல்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகிவிட்டதாக பூங்காக்களிலும், புல்வெளிகளிலும், கடற்கரைகளில் புரண்டபடி அழுது புலம்பின. ஆனால், கவிதை உற்பத்திச் செயலின் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு ஆழமான புரிதலை முன்வைத்தது என்ற வகையில் இது ஒரு முக்கியமான திசைதான். அத்தோடு நவீன கவிதையை தமிழில் நிலைநிறுத்திய வகையில் பெரும் பங்களிப்பைச் செய்ததும் இந்தத் திசைதான்.
அறிவுரை சொல்லுதல், பிரச்சாரம் செய்தல், செய்தி வழங்குதல், தேவைக் கதிகமான வியாக்கியானம் செய்தல் போன்றவற்றை கவிதையில் சேர்த்துக்கொள்ள இடந்தரவே இல்லை என்ற வகையில் இந்தத்திசை மிக முக்கியமான ஒன்றுதான்.
அதே நேரம், பாரதியிலிருந்து பாரதிதாசன் வழியாக நவீன கவிதையின் இன்னொரு திசை தொடர்ந்தது. இந்தத் திசை அனைத்து மக்களையும் பங்கேற்க அழைத்தது. கவிதையை சமூகப் பொதுச் செயலாக மாற்றிவிடும் எத்தனத்தில் இறங்கியது. இங்கே ஒரு முக்கிய விசயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். நவீனத்துவத்தின் வருகை, நவீன இலக்கியத்தின் வகைமைகளைப் பெருக்குவதற்கு மாத்திரம் வழி ஏற்படுத்தவில்லை. சமூகவெளியில் பெருகியிருந்த பழமொழிகள், நாட்டார் பாடல்கள், விடுகதைகள் போன்ற இன்னோரன்ன சாதாரண மக்கள் என்றிருந்த வெளியின் மொழிச் செயற்பாடுகளையும் இலக்கியத்தோடு இணைத்து தமிழ் இலக்கியத்தை மேலும் விரிவுபடுத்த உதவின. முழுமை, சாரம், மையம் போன்ற கருத்தாக்கங்கள் பெரும் சனக்கூட்டத்தின் ‘பொதுப்புத்தி’ மற்றும் ‘பொதுத் தன்மை’ என்ற ஒன்றையும் உருவாக்கியிருந்தது. எனவே, பொதுவான இலக்கியம், பொதுவான கவிதை என்ற ஒரு விசயமும் மேலெழுந்துவர வாய்ப்பாக மாறியது; சங்க காலத்தில் கூட்டு உற்பத்தியாகவும், கூட்டு நுகர்வாகவுமிருந்த இலக்கியம், பொதுசன உற்பத்தியாகவும், பொதுசன நுகர்வாகவும் மாற்றம் பெறத்தொடங்கியது. மக்களுக்காக உற்பத்தி செய்யப்பட்ட இலக்கியமாக இருந்தது, மக்களின் பங்கேற்பால் உற்பத்தி செய்யப்படும் நிலைக்குத் தாவியது.சம தர்மம், சம வாய்ப்பு போன்ற நவீனத்துவக் கருத்தாக்கம் இதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது.
நவீன கவிதை ஒருதிசையில் படைப்பு என வர்ணிக்கப்படுகையில், மறு திசையில் உற்பத்தி என மாற்றம் பெற்றிருந்தது. அனைத்து மக்களும் இந்த உற்பத்தியிலும், நுகர்விலும் பங்குபெறக் கூடியதாக மிகவும் எளிமைப்படுத்தப்பட்டது. கவித்துவம் அதன் கடைசி எல்லைவரை கீழிறங்கி செயற்பட்டது. பெரும் மக்கள் திரட்சியுடனாக, அதிக மக்களின் பங்கேற்புடனாக உலகை மாற்றியமைக்க முடியுமென்ற கனவு மேலுக்குவந்தது.ஆனால், அது பெரும்பான்மையினரின் கூட்டினைவு என காலப்போக்கில் சுருங்கிவிடவும் செய்தது. அனைவரையும் குறித்த ஒரு மையத்தில் பங்கேற்கச் செய்யமுடியாது போனபோது, பெரும்பான்மையினரின் வசமாக விடுதலையை மாற்றிக்கொண்டது. இதுவே, சிறுபான்மையினரின் மீதான அதிகாரமாகவும், பெரும்பான்மைக்கு அந்த அதிகாரம் இருப்பதாகவும் பின்நாட்களில் உருமாறிக்கொண்டது. பெரும் பான்மை மற்றும் சிறுபன்மை போன்ற நிலவரங்கள் திரட்சியான அதிகாரம் நிரம்பிய அரசியல் செயலாக உருவெடுத்தது என்பதை இங்கு நினைக்க வேண்டியுள்ளது.
அரசியலாக உருப்பெற்றதும், தமக்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டிய தேவை கவிதைக்கு ஏற்பட்டது. இது தமிழில் மாத்திரமல்ல. அனேகமாக அனைத்து மொழிகளிலும், சமூகங்களிலும் இதே நிலைதான். நவீனத்துவத்தின் இலக்கியப் பங்களிப்பாகவும், அதன் மோசமான விளைவாகவும் இதைக்கருத சந்தர்ப்பத்தை தந்தது.
அதாவது, அரசியலை ஆதரிப்பதும் எதிர்ப்பதும்தான் இலக்கியத்தின் முக்கிய பணி என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியதில் நவீனத்துவத்தின் பணி மிக முக்கியமானது. காலப்போக்கில், அரசியலுக்கு சேவகம் செய்யும் ஒரு நிலைவரை கவிதையைக் (இலக்கியத்தை) கொண்டுபோய் நிறுத்திவிட்டது என்பதை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். அரசியல் பிரதிகளை வியாக்கியானம் செய்யாமல் இலக்கியப் பிரதி அர்த்தங்களை உருவாக்காது (தராது) என்ற நிலை தமிழில் நிலைகொள்ள இதுவே வழிகோலியது. இதற்கு இன்றைய மிக முக்கிய உதாரணம் ஈழத்து இலக்கியங்களாகும்.
தமிழின் நவீன கவிதையை, மக்கள் பங்கேற்பு என்ற வகையில் மிக மோசமான பிரச்சார சாதனமாக மாற்றியமைத்ததில் முக்கிய பங்கு ‘வானம்பாடிக் குழு’வினரையே சாரும். அதே நேரத்தில், நவீன கவிதையை அரசியலுக்கு சேவகம் செய்யவேண்டி வற்புறுத்திய வகிபாகம் ஈழத்து இலக்கியத்தையே சாரும். எனினும், கவித்துவத்துவத்துடன் கூடிய பங்களிப்பை ஈழத்து இலக்கியம் எந்த நிலையிலும் கைவிட்டுவிடவில்லை. ஆனால், அரசியலை முதன்மைப் படுத்தி, அதற்கு உதவி செய்யக்கூடிய துணைப்பிரதியாக கவிதையைப் பாவிக்கத்தொடங்கியது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம் என்றே கருதுகிறேன்.
இந்தவகையில், நா.பிச்சமூர்த்தி வழியாகப் புறப்பட்ட நவீன கவிதை இன்னும் முக்கியமாகவே தென்படுகிறது. அறிவுரை,பிரச்சாரம், மற்றும் அரசியலுக்கான துணைப்பிரதி போன்ற அம்சங்களில் அவை வீழ்ந்துவிடவில்லை. அவை ஒவ்வொன்றும் பிரத்தியேகமான துறை. அதற்கென்று முற்றிலும் வேறான செயற்பாடுகள் இருக்கின்றன. கவிதை இந்த அனைத்துச் செயற்பாடுகளையும் தனது தலையில் அள்ளிப்போட்டுக்கொண்டு மாரடிக்கத் தேவையில்லை என்று தெளிவாகவே சொன்னது. பிச்சைமூர்த்தி வழியாக புறப்பட்ட நவீன கவிதை,தமக்குரிய பணி இவைதான் என ஒன்றை வரையறுத்துச் செயற்படுவதை முற்றிலுமாகத் தவிர்த்தது. விரும்பினால் எதிலும் பங்கேற்கலாம் என்று உறுதியாகச் சொன்னது. அகச் சிக்கலோ, சமூகப் பிரச்சினைகளோ, அரசியல் ஆதரவு அல்லது எதிர்ப்பு இப்படி எதுவொன்றாக இருந்தாலும் அதில் பங்கேற்க வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் நவீன கவிதைக்கு இல்லை என்றது. மிகச் சுதந்திரமானது நவீன கவிதை என்றது. விரும்பினால் அது எதுவொன்றிலும் பங்கேற்கவும் முடியும்.
வடிவத்தை தேர்வு செய்வதில் மாத்திரமல்ல கருத்தாக்கம், பேசுபொருள், பங்கேற்பு என எதைத் தேர்வு செய்வதிலும் சுதந்திரமாக செயற்படுவதே நவீன கவிதை என மிகக் கறாரான முறையில் கடைப்பிடித்தது. இந்தச் சுதந்திர நிலைப்பாடு, பிச்சைமூர்த்தி வழியே புறப்பட்ட கவிதைச் செயலில் இயங்கிய இந்தச் சுதந்திரமான நிலையைப் புரிந்துகொணட அளவில், சமூகச் செயற்பாடுகளிலும், அரசியல் அக்கறைகளிலுமிருந்து பின்வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. புறத்தை விமர்சிக்கவும், அந்த விமர்சனத்தினூடாக இப்படியெல்லாம் இருக்காவிட்டால் அல்லது நடைபெற்றிருக்காவிட்டால் வாழ்வு உன்னதமான நிலையை அடைந்துவிடும் என தமிழின் மெய்யியலை சுருக்கிவிட்டிருந்தது.
நவீன கவிதையில் இந்த இரு பெரும்போக்குகளும் ஒரு தேக்க நிலையை அடைந்து விட்டிருப்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். அனைவரும் இந்த இரு பெரும் போக்குகளில் உருவான நவீன கவிதைகளை மிக இலகுவாக படைக்கவும், உற்பத்தி செய்யவும் பழகிவிட்டிருக்கிறார்கள். அனைவரினதும் சாதாரண செயற்பாடுபோல இந்த நவீன கவிதை உற்பத்தி மாறியிருக்கிறது. குடிசைக் கைத்தொழில் போல, நினைத்த மாத்திரத்தில் தயாரிக்கக்கூடி ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.நவீன கவிதையின் இரு பெரும் போக்களினால் உருவான கவிதைகள் பெருகி தமிழ் கவிதையை மூழ்கடித்தபடி இருக்கின்றன. பிறக்கும் குழந்தையும் நவீன கவிதையிலே அழுகிறது. ஆடுகளும் இப்போது ‘மே’ எனக் கத்துவதில்லை. நவீன கவிதையாகவே கத்துகிறது. காலையில் பறவைகள் எழுப்பும் ஒலிகளை பிரித்தறிய முடியவில்லை. அனைத்தும் நவீன கவிதைகளையே தமது கூவுதலாகவும், கரைதலாகவும் மாற்றிவிட்டிருக்கின்றன. கடைசியாக நான் சந்தித்த நாயும் நவீன கவிதையையே குரைத்துவிட்டுச் சென்றது. அந்தளவு பழகியிருக்கின்றன.
இந்தத் தேக்கத்தை உணர்ந்தபோது, மேற்கை நோக்கி நகரத்தொடங்கியது தமிழ்வெளி. அங்கே அதாவது மேற்கில், ஏற்கனவே நவீனத்துவம் வீழ்ச்சியடைந்திருந்தது. வௌ;வேறு பெரும் கருத்தாக்கங்கள் உருப்பெற்று விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. தமிழின் நவீனத்துவப் பாரம்பரியத்தில் பிரக்ஞையோடு செயற்பட்டவர்கள் மற்றும் நவீனத்துவப் பெருக்கத்தில் சலிப்புற்ற இலக்கியத்தை, தத்துவார்தங்களைப் பயின்றிருந்த இளைஞர்கள் மேற்கிலிருந்து பிந்தியேனும் தமிழுக்கு அந்தக் கருத்தாக்கங்களைக் கொண்டுவந்தனர். 70களின் கடைசிப் பகுதி தொடங்கி 90களின் நடுப்பகுதிவரை மிக அதிகமான முற்றிலும் வேறான அத்தோடு நவீனத்துவத்தை எதிர்கொள்வதில் ஏதோவொருவகையில் இணைந்துவிடக்கூடிய பல கருத்துநிலைகளை, சிந்தனை முறைமைகளை தமிழுக்கு இழுத்துவந்தனர். எதையும் விவாதிக்கவும், புரிந்துகொள்ளவும் அவகாசமின்றி ஒன்றன் பின் ஒன்றாக கொண்டுவரப்பட்ட கருத்தாக்கங்களால் தமிழே சற்று ஆடித்தான் போனது என்று சொல்ல வேண்டும். அந்த வரவுகளில் பின்நவீனத்துவம் மிக முக்கியமானது. இது கலை இலக்கிய வெளிகளில் மாத்திரமன்றி கலாச்சாரம்,மொழி,மற்றும் அரசியல் போன்ற அனைத்து வெளிகளிலும் ஏதோவொரு வழியில் தாக்கங்களை உண்டு பண்ணியது.
பின்நவீனத்துவம் புதிய புதிய சொல்லாடல்களை முன்வைத்தது. அறிமுகப்படுத்தியது. 2000ம் ஆண்டுகால தமிழ்க் கவிதை மற்றும் சிந்தனை என அனைத்தையும் கேள்விகளின் முன் நிறுத்தின. அறம், மதம், அரசியல், அதிகாரம், பாலியல் பிரச்சினைப்பாடுகள்,என கண்டபக்கமெல்லாம் நுழைந்து அதன் இருப்புகளைக் குலைத்தன. நவீனத்தவம் தமிழில் நிலைநிறுத்தி வைத்திருந்த முக்கிய நிலவரங்களைக்கூட கேள்விக்குட்படுத்தின. அனைத்தையும் கையகப்படுத்தத்தக்க கருத்தியலோ, அரசியலோ, அறவியலோ என்று எதுவுமில்லை என அறிவித்தது.நவீனத்துவத்தின் முக்கிய கூறுகளான சாரம்,மையம்,முழுமை,பெரும் அளவிலான அணிதிரட்டல், ஒன்றையான தனிப்பொது இலக்கியம் அதாவது அனைவருக்குமான பொது இலக்கியம் எதுவும் சாத்தியமில்லை என்றது.
இதனூடாக, இலக்கியவகைகள், அரசியல் என அனைத்தும் சிதறிப்போய்விட வேண்டிவந்தது. தமிழின் அகமி மற்றும் புறமி போன்றவை பன்மையானது. தனித்த அகமியோ புறமியோ ஏதுமில்லை என்றது. இலக்கியம் என்றுகூட ஒரு குறிப்பிட்ட மொழிவகையை மிச்சமில்லாமல் வரையறுக்க முடியாது என்றது. இலக்கியமற்றது என நவீனத்துவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட விளம்பரங்கள்,பேச்சுகள் போன்றவற்றிலும் இலக்கியத்தன்மை எனச் சொல்லப்படும் அம்சங்களை கண்டுபிடித்துக்காட்டின. படைப்பாளி செத்துவிட்டான் என்றது.இது இலக்கியம்தான், கவிதைதான் என அறிவித்துச் செயற்படுவதற்குப் பதிலாக, ஒரு பிரதியை இலக்கியமாகவோ அல்லது கவிதையாகவோ ஆக்குவதற்கு எவை எவை பங்களிப்புச் செய்கின்றன என்று கண்டுபிடிக்கும் செயலை ஊக்குவித்தது. ஒரு பிரதியை இலக்கியம் எனப் பெயரிடுதல் என்பது ஒரு சார்பு அல்லது அரசியல் சாய்வுடையது என்றது.
பின்நவீனத்துவம் பல கதையாடல்களை முன்வைத்தாலும், நவீனத்துவத்தால் தாக்கமுற்றிருந்த தமிழ் அதன் அரசியல் பார்வையையே அதிகம் உள்ளீர்த்துக்கெண்டது. உடனடியாக பின்நவீனத்துவம் தாக்கம் செலுத்திய தமிழின் வெளி அரசியல் புலம்தான். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அல்லது கண்டுசொல்ல முடியும் எனினும் அதைப் பேசுவதை இங்கு தவிர்க்கிறேன். அரசியல் வெளியோடும், கருத்து நிலைகளோடும் பின்நவீனத்துவம் வினையாற்றி யதினூடாக இலக்கியத்திலும் அவசரமாக நுழைந்தது. இலக்கியத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்த வர்கள்தான் அதை இங்குகொண்டுவந்தார்கள் என்பதும் இதற்கான காரணமாகும். இந்த நுழைவு – நாவல்கள், சிறுகதைகள் மற்றும் விமர்சனங்கள் போன்ற செயல்களிலே ஆற்றலோடு நிகழ்ந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
பின் நவீனத்துவத்தின் அரசியல் கதையாடல்கள்,கருத்து நிலை விபரிப்புக்கள், புனைவு உத்திகள் என அனைத்தையும் ஆற்றலோடு உள்ளெடுத்து இயங்கிய தமிழின் இலக்கிய வடிவம் கவிதை அல்ல என்பது மிக முக்கியமான ஒன்று. நாவல்,மற்றும் சிறுகதைகளிலே இது நிகழ்ந்தது. பின்நவீன வாசிப்பிற்கேற்ற பிரதிகளை அதிகமதிகள் உருவாக்குவதினூடாக நாவல்களும் சிறுகதைகளும் தம்மை மேலும் செழுமைப்படுத்திக்கொண்டிருந்தன. கவிதை முற்றிலும் பின் தங்கியே போய்விட்டிருந்தது.
நவீனத்துவ அரசியல் நிலவரங்களை பின்நவீனத்துவம் பிரச்சினைக்குட்படுத்திய போது, இதுகாறும் எச்சங்களாக,மீதிகளாக, விளிம்புநிலையில் வைக்கப்பட்டிருந்த மக்கள் கூட்டமும், அந்தச் சிறுபான்மையினரின் அரசியலும் கவனத்துக்குரியவையாக மாறின. விளிம்புகளில் வைக்கப் பட்டிருந்த மக்களின் அரசியலை முதன்மைப்படுத்தும் கதையாடல்கள் தீவிரம் பெற்றெழுந்ததும் பெண்கள், தலித்கள், மற்றும் பிராந்தியத் தனித்துவங்கள் என்பன கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறத்தொடங்கின. இந்த மாற்றம், பெண்களின் எழுத்துக்கள், தலித் இலக்கியம், பிராந்திய இலக்கியமென பின்நவீனத்துவத்தோடு இணைந்ததாக சிறியளவிலான இலக்கியங்கள் உருப்பெறத் தொடங்கின. அரசியல் நோக்கில் இலக்கியங்கள் உருப்பெற்றது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
இந்த நிலையில்தான், அரசியல் கதைகளை உள்ளெடுத்துக்கொண்டு கவிதைகளும் முன்னுக்கு வந்தது. இதுவே, பின்நவீன கதையாடல்கள் அதிரடித்துக் கொண்டிருந்த நிலையில் கவிதைகளாப் பெருக்கெடுத்தன. அந்தக் கவிதைகள் அக்கரைகொள்ளும் அரசியல் பின்நவீனத்திற்கு அப்போது தேவையாகவுமிருந்ததால் – அப் பிரதிகளில் மற்ற எதையும் கவனிக்க விரும்பாமல்விட்டுவிட்டது. நாவல், சிறுகதை போன்ற புனைவெழுத்துக்கள் அரசியல் கதையாடலோடு புனைவுச் செயலையும், புனைவு உத்திகளையும் கையேற்றிருந்த நிலையில், கவிதை பின்நவீத்துவத்தின் அரசியல் உள்ளடக்கத்தை மாத்திரம் இணைத்துக்கொண்டது. நவீன கவிதை எனப் பயிலப்பட்டு வந்த அதே பிரதிகளுக்கு பின்நவீன அரசியலை மாத்திரம் பூசிக்கொண்டு தனது செயலை தொடர்ந்தது. வேறு எந்த மாற்றத்தையும் கவிதைகள் செய்துவிடவில்லை. அந்தத் தேவையும் அப்போது விவாதிக்கப்படவுமில்லை. ஏனெனில், பின்நவீன அரசியலைக் கதையாடுவதினூடாக கவிதையை பின்நவீனத்துவத்துடன் இணைத்துவிட அதிக வாய்ப்பிருந்தது. பன்னையான கவிதையாக்க முறைமைகளையோ, பல் வகையான முறைமைகளையோ, கவிதைச் செயலின் அசாத்தியங்களையோ, கற்பனைச் செயலின் புதுவகை இயல்புகளையோ கவனத்தில் கொண்டிருக்கவில்லை. அவை பற்றிய பிரக்ஞையை பின்நவீனத்தவம் அதிரடித்துக்கொண்டிருந்த காலத்தில் கவிதைப்பிரதியை முன்நிறுத்தி சிந்திக்கப்படவில்லை. மிகப் பிந்தியே பின்நவின கவிதைப் பிரதிகள் உருவாகவேண்டிவந்தது. பல ஆண்டுகள் கடக்க வேண்டி வந்திருக்கிறது. தமிழின் நவீன கவிதை காலாவியாகிப் போவதற்கு காரணமாக இருந்த அந்தக் கவிதைப்போக்கை இன்னும் கவனிக்காமலே இருந்துவருகின்றனர். இன்னும் பேசப்படாமலே இருக்கிறது. அவை குறித்துப் பேசுவதற்கு முன் ஒரு இடையீடு..
இடையீடு
காலம் என்பது இங்கு ஒரு முக்கியமான விசயமாகும். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என அதன் எல்லைகளும் அமைவுகளும் நமக்குத் தெரிகின்றன. விடுதலை, மீட்சி, வாழ்வைச் சரிசெய்தல், இப்படி எதையெடுத்தாலும் நெடுங்காலங்களை தமது இலக்காக முன்னிறுத்தியே அனைத்துக் கருத்தாக்கங்களும் செயற்பட்டன. எப்போதும் அடைய முடியாத ஒரு காலத்திலே தமது இலக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன. அத்தோடு, இறந்த காலத்தின் விளைபொருளாகவே மற்றக் காலங்களைப் பார்த்தனர். அதுபோல, எங்கிருந்து வந்தோமோ அங்கே செல்லுதல் என இறந்த காலமே மற்றக்காலங்களின் மையமாகவும் பார்க்கப்பட்டன. பின்நவீனத்தவம், மாத்திரமே தற்காலிகம், சாத்தியப்பாடு, உடனடித் தீர்வு, என்பதினூடாக இந்தக் காலவிரிவைச் சுருக்கி விடுதலை மற்றும் நீட்சி போன்றவற்றை நோக்கின. நவீனத்துவ அறிதல்களுக்குள் தத்துவார்த்த வெளியில் நிகழ்காலம் மாத்திரமே இருக்கிறது என்ற கதைகளும் மிகப் பிரபலமான ஒன்றுதான். காலத்தை கணங்களாகவும், அதைவிடச் சிறியளவாகவும் பிரிக்க முடியும். ஆக, சிந்திப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணங்கள் அவசியமாகும். அடுத்த கணத்தில் ஒரு விபத்து நடைபெறப்போகிறது என அறிந்தால் அது குறித்து நம்மால் சிந்திக்க முடிவதில்லை. அதற்கு பல கணங்கள் தேவை. எனவே, சிந்தித்தல் என்பது நிகழ்காலத்தில் இருப்பதல்ல. இறந்தகாலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பதாகும். நிகழ்காலம் என்பது இந்த இரண்டுகாலத்தையும் இணைக்கும் ஒருவகை இயக்கம் மாத்திரம்தான். ‘ஒரு நாள்’ விடுதலை கிடைத்துவிடும் என்று எப்போது அந்த ஒருநாள் எனத் தெரியாத தொலைவில் எப்போதும் சிந்தனையை வைத்திருக்கத் தூண்டி கருத்து நிலைகளின் மத்தியில். உடனடியாக, சிறியளவிலான தற்காலிக விடுதலை மற்றும் மீட்சி பற்றிப் பேசியது பின்நவீனத்துவம்தான். இதுதான் சாத்தியமானது என்றும் கூறியது.
வாழ்வு நல்ல நிலையில் இல்லை. அதைச் சரிசெய்ய வேண்டும். அதனூடாக ஒரு உன்னத வாழ்வை கண்டடைய வேண்டும். இதுவே தமிழின் வரலாற்று வேட்கையாக இருந்தது, அதற்கு பலவகையான கருத்து நிலைகளையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டது. ஆனால், பின்நவீனத்துவம் தனது அறிவிப்பை இப்படிச் சொன்னது. ‘வாழ்வு நல்ல நிலையிலில்லை. ஆனால், அதை ஒரு போதும் முழமையாக சரிசெய்ய முடியாது எனத் தோன்றுகிறது. ஏனெனில், வாழ்வை உன்னதமாக்குவதற்கான இற்றைவரையான அனைத்துக் கருத்தாக்கங்கள் மற்றும் தத்துவங்களின் முயற்சிகளும் தோல்வியையே சந்தித்திருக்கின்றன.’
எனவே, தற்காலிகமான சாத்தியமான சிறியளவிலான செயல்களையே நிகழ்த்துங்கள். நீண்டகால ,பெருங்கனவுகள், மாபெரும் லட்சியங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டுவிடாதீர்கள் என்றது. இங்கிருந்துதான் தமிழின் பின்நவீன கவிதை பிறக்கிறது. வாழ்வைச் சரிசெய்யும் அனைத்து முயற்சிகளையும் கைவிட்ட நிலையில் இயங்கத் தொடங்குகிறது கவிதை.
வரலாறு, அறிவுற்பத்தி போன்றவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்ல நினைவே ஆரம்பத்தில் பயன்பட்டன. எழுத்துக்களில் பதிந்துவைக்க வாய்ப்புகளற்ற காலத்தில் நினைவு என்பதே, சமூகத்தின் அனைத்து அறிவுற்பத்திகளையும் பாதுகாத்துவைக்கும் காப்பகமாக இருந்தது. எழுத்தில் பதிவுசெய்யும் முறைவந்ததும், நினைவு தன்னை மாற்றியமைக்கத் தொடங்கியது. அறிவுற்பத்திகளிலும், மற்றும் மனதுக்கு விரும்பியவற்றை அழுத்தமாக பதியத்தொடங்கியது. முற்றுமுழுதாக துல்லியமாக அறிவுற்பத்திகளை பதிவுசெய்யும் நிலை ஏற்பட்டதும், நினைவு என்பது மறதி என்ற அதன் எதிர்ப்புறத்தின் செயல்களாலும் அறியப்படுகின்ற பலவீனமான காப்பகமாக மாறியது. நினைவு என்பது இப்போது ஒரு சந்தேகத்திற்கிடமான ஆவணம் என்பதுபோல தோற்றம் பெற்றது. ஒரு காலத்தில் உண்மையை தரும் ஒன்றாக இந்த நினைவு கருதப்பட்டது. அதேபோல:. அடிக்கடி திரும்பிப் பார்ப்பதினூடாக, நினைவு ஒருவகைப் பயிற்சியில் ஏற்படும் இன்பமாக மாறத்தொடங்கிவிட்டது. அதனூடாக, இன்று நினைவு என்பதை – தனித்த மனித அகமியின் அந்தரங்க அறை என ஆகியிருக்கிறது. இதுவே பொது நினைவு என்பதை கலைக்கும் மிக அடிப்படையான ஒரு மனச் செயலாகும். இந்த நினைவு என்ற காப்பகம் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஞாபகத்திற்குக் கொண்டுவரும் அம்சங்களை ஒருங்கிணைப்பது கவிதைக்கு பெரும் உதவியாக இருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கவிதையோடு உள்ள உறவு என்பது புதிது புதிதாக நினைவுக்குக் கொண்டுவரும் அம்சங்களை ஏற்படுத்துவதாகும்.
ஆரம்ப நிலையில் கவிதை என்பது தனது செயலை பதிவு செய்வதினூடாக அதாவது, நினைவில் பதிவு செய்தல் என்பதினூடாகத் தொடங்கியது. வாழ்வு சரியாக இல்லை என்ற ஏக்கமாகவும், அதில் சரியாக இருக்கிறது என நம்பும் விசயங்களை இன்பமாகவும் தனித்தனியே சேகரித்து வைக்க நினைவு உதவியது. அதன் பிறகு, கனவை முழுவதுமாக கவிதை கையேற்றுக்கொண்டது. வாழ்வு சரியான நிலையில் இல்லை. எப்படி இதை சரிப்படுத்தலாம் என்ற கனவுகளில் தன்னை முற்றுமுழுதாக ஒப்படைத்திருந்தது. அதுபோல, வாழ்வை சரிப்படுத்தி உன்னதமான நிலையை அடைந்துவிடலாம் என்று கனவு காணத்தொடங்கியது. பின்நவீனத்துவம் தமிழைச் சந்திக்கும்வரை இந்தக் கனவு பல்கிப்பெருகி எத்தனையோ பெருங்கனவுகளை உருவாக்கியுமிருந்தது. சமூகவெளி மற்றும் அகமியின் இயங்குவெளி போன்ற அனைத்துப் புலங்களுக்கும் இந்தக் கனவு விரிவுபடுத்தப்பட்டிருந்தது. விஞ்ஞானம், அரசியல் என எதை எடுத்தாலும் ‘கனவுகாணுங்கள்’ ஒருநாள் நீங்கள் அதை அடைந்துவிடலாம் என பரப்புரை செய்யப்பட்டபடியே இருந்தது. அதை பெரியளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
நினைவிற்குள் மறைந்து கிடந்த விசயங்கள் ஒழுங்கற்ற முறையில் நினைவுக்கு வருதல், அவைகளை ஒருங்கிணைத்து அதற்கு இன்றியமையாத ஒரு கனவை வழங்குதல். இந்தச் செயற்பாட்டிற்கு உதவிசெய்கின்ற பிரதான அம்சமாக கற்பனை பயன்படுத்தப்படுதல். இதுவே, கவிதைச் செயலாகவும் கவித்துவமாகவும் மாறியிருந்தன. இதில் பிரதான உள்ளியக்கமாக கனவே செயற்பட்டுக் கொண்டிருந்தது. ஏதோ ஒருவகையான கனவுமின்றி அதை ஒருங்கி ணைக்கும் கற்பனைச் செயலுமின்றி கவிதை என்பது இல்லவே இல்லை.
இன்னும் வேறு வகையில் இதை விபரிப்பதென்றால், இப்படிச் சொல்லலாம். தனித்த அகமி,பொது அகமி,மற்றும் கூட்டு அகமி என்ற ஏதோ ஓர்தளத்தில் , வாழ்வு சரியான நிலையில் இல்லை என்ற ஆரம்பப் பதிவுகள் உருவாகத்தொடங்கின. பின்னர், சரியானதாக வாழ்வை மாற்றமுடியுமென்ற ஆர்வத்தில் கனவுகள் உருப்பெற்றன. இந்த ஆர்வம் காலப்போக்கில் இலட்சியங்களாகவும், உண்மையாகவும் ஆகிப்போனது. இந்த உண்மையிலிருந்து செயற்படவும், செழிப்படையச் செய்யவும் கூடிய ஒன்றாக வாழ்வு மாறவேண்டியும் வந்தது. அப்படி வாழ்வைச் சரிப்படுத்த – அகமியின் ஆற்றலை முதன்மைப்படுத்துதல், அகமியினுள் நுழைந்து கடவுளை அடைதல், கடவுளை அகமியினுள் கொண்டுவருதல், கூட்டு அகமியின் செயலை ஆதரித்தல்,அதற்காக தவம். போராட்டம் அகமியை அழித்தல் போன்ற இன்னோரன்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், வாழ்வு அப்போதும் சரியில்லை என்ற இடத்திலே இருந்துகொண்டிருந்தது. சரிசெய்ய முடியாமலே வாழ்வின் எதிரில் மனிதன் நிற்கதியாக நிற்க வேண்டிவந்தது. அந்த நேரத்தில்தான் பின்நவீனத்துவம் வாழ்வை முழுமையாகச் சரிசெய்ய முடியாது என அறிவித்தது. வாழ்வைச் சரிசெய்தல் என்ற வினை நீண்டகாலத் திட்டமாக இருந்ததை சிதைத்து மிகக் குறுகிய காலச் செயல்களால் சாத்தியப்படக்கூடியதாக கருதி வாழ்வை அனுகச் சொன்னது.
பின்நவீனத்துவத்தின் இந்த அறிவிப்பை தமிழ்க் கவிதை எப்படிப் புரிந்துகொண்டது தெரியுமா? சிறியளவிலான கனவு, சாத்தியமான கனவு, தற்காலிகமான கனவு என ஏனைய துறைகளில் பின்நவீனத்துவம் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிற நிலையில், கவிதை மாத்திரம் முற்றிலும் புதிய திசையில் உள்ளெடுத்துக் கொண்டது.
நினைவையும், கனவையும் ஒருங்கிணைக்கும் நிலையில் இருந்த கற்பனையை முதன்மையான ஒன்றாக மாற்றத்தொடங்கியது. அதாவது, கற்பனையையே ஒரு சிந்தனை முறைமையாகக் கொண்டு கவிதை தனது மெய்யியலை வளர்த்துக்கொண்டது.( கற்பனை என்பது மேலதிகச் சிந்தனை என்ற எனது கட்டுரையைப் பார்க்கவும்) அதனூடாக, கனவு நீக்கப்பட்டு(போராடிப் பெறுதல்), நிகழ்த்திக் காட்டுதல் என்ற ஒரு புதிய விசயம் கவிதைக்குள் இடம்பிடிக்கத் தொடங்கின. சரியற்ற வாழ்வை சரிப்படுத்துவதற்காக போராடுவதற்குப் பதிலாக, தான் விரும்பிய வாழ்வை நிகழ்த்திக் காட்டுதலாக கவிதை மாற்றம் பெற்றது. இந்தப் பிரதான மாற்றமே தமிழின் நவீனம் கடந்த கவிதையின் முக்கிய பண்பாகும்.
நாம் எதிர்கொள்ளும் வாழ்வோடு போட்டியிடத் தக்க ஒரு வாழ்வை கற்பனைச் செயலாக பிரதிகளில் நிகழ்த்திக் காட்டுதலாகும். கவிதை கொண்டிருக்கிற வாழ்விற்கும், சந்திற்கின்ற வாழ்விற்கும் எதுவித சம்மந்தமும் இருப்பதில்லை. ஆனால், இரண்டுக்குமிடையில் சுதந்திரம், விடுதலை, என எதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ஏதுவான நிலவரங்களை அமைத்து வைத்திருக்கும். நாம் சந்திக்கும் வாழ்வு சாத்தியப்படுகளற்ற ஒன்றாக இருக்கமெனில், கவிதைப் பிரதியினுள் வாழ்வின் அனைத்து அம்சங்களும் சாத்தியப்பாடன ஒன்றாக இருக்கும். பொருத்தியும், விலகியும் புரிந்துகொள்ளத்தக்க வகையிலான ஒன்றாக உருப்பெற்றிருக்கும். இப்படிச் சொல்லலாம் – வாழ்விற்கு மாற்றீடான ஒன்றை கவிதைப் பிரதிகொண்டிருக்கும். வாழ்வைப் பிரதிபலிப்பதாக நவீன கவிதை இருக்கிறதென்றால், பின்நவீன கவிதை அனைத்துச் சாத்தியங்களும் நிலவுகிற ஒரு புதிய வாழ்வை உருவாக்கிக் காட்டுவதாக இருக்கும். இதுவே நவீனம் கடந்த தமிழ்க் கவிதையாகும். அதை நிகழ்த்திக்காட்டவதற்கு எவைகளைப் பயன்படத்துகிறது. எந்தவகையான செயல்முறகளையும், சொல்லுதல் முறைகளையும் பயன்படுத்துகிறது என்பதை பிறிதொரு கட்டுரையில் விபரிக்க இருக்கிறேன். அதனால் இங்கு அவை பேசப்படவில்லை. முக்கிய திசைமாற்றத்தை மாத்திரமே சுட்டிக்காட்டுகிறேன். ஒரு வசதிக்காக பின்நவீன கவிதை என்றே இதை அழைப்போம். இதுதான் பின்நவீன கவிதையா எனக் கேட்டால் அதற்கான பதில் இருக்கலாம் என்பதேயாகும். ஆனால், தமிழின் நவீனத்திற்குப் பிறகான கவிதை இதுதான் எனச் சொல்ல முடியும்.
நவீன கவிதையின் காலம் முடிவுற்றதை அறிவித்த கவிதைப் பிரதியை சிறு உதாரணத்தினூடாக இங்கே பார்ப்போம்.
உயர்ந்த மாடிக் கட்டிடத்தின் ஒரு அறையில் குழந்தை ஒன்று தாயுடன் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தில் தீப்பிடித்துவிடுகிறது. இந்தச் சம்பவத்தை குழந்தையின் மீதான அன்பின் ஒரு ஏக்கமாகவே நவீன கவிதை பதிவுசெய்யும். அதைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வகையில் இந்த ஏக்கம் பெரும் மனிதநேயமாக மாறிவிடுகிறது. அத்தோடு, இன்ன வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், இப்படியான சம்பவம் நிகழ்ந்திருக்காது என்ற விமர்சனமாகவும் நவீன கவிதை குறித்த இந்தச் சம்பவத்தை எதிர்கொள்ளும். அதே நேரம் இது எப்படி நடக்க நேரிட்டது என்ற கதைகளையும் மிகத் திறம்பட கவித்துவத்தோடு வியாக்கியானம் செய்யவும் அக்கறை கொண்டிருக்கும். இது ஏன் நிகழ வேண்டிவந்தது அல்லது நிகழவேண்டி இருந்தது எனச் சொல்ல முடியாத ஒரு கனவையும் தன்னோடு வெளிப்படுத்த முயற்சித்திருக்கும். இப்படிப் பார்ப்பதே நவீன கவிதையின் நிலையப்பாடாகும்.
உதாரணமாக ஒன்று – ‘ பறவை அலைந்து திரிகிறது. அதன் குஞ்சுகளையும் தெரியும். அதன் கூடு இருக்கின்ற இடமும் தெரியும் ஆனால், அதன் மொழி தெரியவில்லை’ இப்படித்தான் நவீன கவிதை அணுகும்.
எக்காலத்திற்குமான மனித நேயம்கொண்ட ஒரு ஏக்கமாக மாத்திரமே ஒரு சம்பவத்தை ஆக்கிவிட, நவீன கவிதையினால் முடியும். ஆனால். பின்நவீன கவிதையோ இந்தச் சம்பவத்தை வேறொரு தளத்தில் நிகழ்த்திக்காட்டுகிறது. அதாவது, மொழிதெரியாது என்பதினூடாக அந்தப் பறவைக்கு உதவும் சாத்தியமின்மையை முன்வைக்கிறது. அத்தோடு, அதற்கு உதவ விரும்பும் ஏக்கத்தையும் முன்வைக்கிறது.
பின்நவீன கவிதை சாத்தியங்களை மாத்மாத்திரமே கருத்திற்கொள்கிறது. அதனூடாக எதையும் காப்பாற்றிவிட்டு ஒரு செயலை முடிக்கிறது. அதாவது, தீப்பிடித்திருக்கும் மாடியில் சிக்கிய குழந்தையை மிக இலகுவாக காப்பாற்றிவிட பின்நவீனக் கவிதையால் முடிகிறது. இது எப்படி என்றால் குறித்த சம்பவத்தை பிரதிபலிக்காமல், அதற்கு நிகரான ஒரு சம்பவத்தை உருவாக்கிவிடுகிறது. இந்த உருவாக்கத்தில், எதார்த்தம் என நம்புவதற்கும் கற்பனைக்குமிடையிலான எல்லைக்கோட்டை அழித்துவிடுகிறது. அப்படி அழிக்கப்படும்போது ஒரே பிரதியில் எதார்த்தமும் கற்பனையும் சமமான அர்த்தத்தில் வசிப்பதாக மாற்றியமைக்கிறது. இப்படி மாற்றியமைப்பதினூடாக, அங்கே காப்பாற்றமுடியாது என்ற ஏக்கம் சிறிதும் இருப்பதில்லை. எதை எந்த வழிகளில் நிகழ்த்திக் காட்ட முடியுமோ அந்த வழிகளையெல்லாம் கையாள்கிறது. நெடிய வரலாற்றில் சரிசெய்ய முடியாமல் போராடிய வாழ்வை, வேறொரு தளத்தில் பிரதியில் நிகழ்த்திக்காட்டுகிறது. பின்நவீனத்துவத்தின் கவித்துவம் என்பது நிகழ்த்திக்காட்டுவதுதான். நவீனத் துவத்தின் கவித்துவம் பிரதிபலித்தல் என்பதை நிங்கள் அறிந்திருப்பீர்கள்.
நவீன கவிதையை காலாவதியாகச் செய்த கவிதையை 2004ம் ஆண்டு ரமேஸ் : பிரேம் இருவரும் இணைந்திருக்கும்போது அவர்களிடமிருந்தே வெளிப்பட்டது. அதுபோல சில கவிதைகளை அப்போது, அவர்கள் முயற்சித்திருந்தாலும் அந்த ஒரேயொரு கவிதையே நவீனத்திலிருந்து பின்நவீனத்திற்கு கவிதையை நகர்த்தும் முதலாவது கவிதையாக இருந்தது. எனினும். அதன் பிறகு அவர்களால்கூட நிகழ்திக்காட்டும் கவிதைகளைத் தொடரமுடியாமல் போய்விட்டது என்பது துரதிஸ்டவசமானதுதான்.
அந்தக் கவிதை இதுதான். தமிழின் முதலாவது பின்நவீன கவிதையாக (நிகழ்த்து கவிதை) நான் அடையாளம் கண்டது.
புத்துயிர்ப்பு
நெடிதுயர்ந்த கட்டிடம் எரிந்து கொண்டிருந்தது.
உள்ளே இருந்து அபயக்குரல்கள்
தலைக்குமேல் பறந்த காகம் ஒன்று
தீச்சுடரில் சிக்கிக்
கட்டிடத்தின் திறந்த வாய்க்குள் விழுகிறது.
பத்தாவது மாடியின் கண்ணாடிச்
சன்னலை உடைத்து
எரிந்து கொண்டிருக்கும் தாய்
குழந்தையை வெளியே வீசுகிறாள்
புறாச் சிறகுகளைச் சூடிய அது
படபடக்கிறது அந்தரத்தில்.
சிறகுகளை குழந்தைக்கு முளைக்கச் செய்து காப்பாற்றிவிடுகிறது கவிதை. காப்பாற்ற முடியாத ஏக்கமாக மாறாமல், காப்பாற்றுதல் என்பதை நிகழ்த்திக் காட்டுகிறது.ஆயினும், 2010ம் ஆண்டிற்குப் பிறகே இந்த பின்நவீன நிகழ்த்து கவிதைகள் அதிகரிக்கத் தொடங்கின. இந்தக் கட்டுரை நீங்கள் பின்நவீன கவிதையை அடையாளம் காண சிறு உதவியாக இருக்கலாம் என்பதோடு, இதை ஒரு விரிந்த உரையாடலாக வளர்க்கவும் விரும்பகிறேன். அதற்காகவே, நிறைய விசயங்களை பேசாமல் மறைத்தும் விட்டிருக்கிறேன்.
அதில் பின்நவீன கவிதைகள் தன்னை நிகழ்த்திக் காட்டுவதற்கு கையாளும் மாய எதார்த்தம், மற்றும் சர்ரியலிசக் கூறுகளை காண்பவர்கள் அதன் பெயரால் இந்த நிகழ்த்து கவிதைகளை அழைப்பதையும் அறிவேன். அவர்கள் விரிவாக பேசுவார்களாயின் நான் தொடர இருக்கிறேன். தன்னை கவிதையாக நிகழ்த்திக் காட்ட எந்தவகையான அம்சங்களை அதிகமாக அக்கறை கொள்கிறது. எவைகளைத் துணைக் கழைக்கிறது. எப்படியான கவிதைச் செயல் முறைகளால் விரிவுகொள்கிறது. அதன் இயங்கு வெளியை எப்படி வடிவமைக்கிறது. போன்ற பல விசயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பேசப்படவில்லை. அதுவும் பேசப்பட வேண்டிய அம்சமே. பேசுவோம். உரையாடுவோம்.
நவீன கவிதை என்றாவது ஒரு நாள் காலாவதியாகத்தானே வேண்டும் ?