வெள்ளி, ஜூன் 23, 2017

மஞ்சள் சூரியனில் பாதி

சிமமண்டா அடிச்சி

தமிழில் - கெ.பி. அனுஜா

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – ‘முதிர்ந்த கழுகின் இறகு எப்பொழுதுமே அப்பழுக்கற்று இருக்கும்’ என.

இன்று, மழைக்காலத்தின் நடுவில் சூரியன் ஆரஞ்சுக் கொழுந்தாய் என் உடலருகே தகிப்பது போன்றதொரு sv-ws-logo copyநாள்; இருந்தாலும், மழைப் பெய்து கொண்டிருந்தது; சிறுமியாய் இருந்தபோது இது போன்ற நாட்களில் நான் ஓடி விளையாடியது, சூரியனுக்கும் மழைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தைப் பற்றிப் பாட்டுக்கள் பாடி, அந்தப் போராட்டத்தில் சூரியனை வெற்றி பெறத் தூண்டியதை எல்லாம் நினைத்துக்கொண்டேன். வெதுவெதுப்பான மழைத்துளிகள் என் வியர்வையோடு கலந்து என் முகத்தின்மேல் ஓட, நான் ந்சுக்கா(Nsukka)வில் கூட்டம் நடந்து முடிந்தபின் என் விடுதியை நோக்கி நடந்தேன். ‘படுகொலைகளை நினைவுகூருங்கள்’ என்றெழுதிய போராட்ட அட்டையை இன்னும் வைத்துக் கொண்டு, என் – நமது – புதிய அடையாளத்தை எண்ணி வியந்து கொண்டிருந்தேன். மே மாதக் கடைசி, ஒஜுகு(Ojukwu) பிரிவினையை அப்போதுதான் அறிவித்திருந்தார் – எனவே நாங்கள் இனி நைஜீரியர்கள் இல்லை. நாங்கள் பியாஃப்ரர்கள்(Biafran).

விடுதலைச் சதுக்கத்தைச் சுற்றி கூட்டத்துக்காக நாங்கள் கூடியிருந்தபோது, ஆயிரக்கணக்கான மாணவர்கள் இக்போ பாடல்களை உரக்கக் கத்தி, நதியைப் போல அசைந்தாடினோம். எங்கள் வளாகத்துக்கு வெளியே, சந்தையில் பெண்கள் ஆடிக் கொண்டே வேர்க்கடலைகளையும் மாம்பழங்களையும் இலவசமாய்க் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்று யாரோ சொன்னார். ந்நாம்டி(Nnamdi)யும் நானும் அருகருகே நின்று கொண்டு, எங்கள் தோள்கள் ஒன்றையொன்று தொட பசுமையான டோகோன்யரோ[i] மரக் கிளைகளையும் கெட்டித்தாளாலான பதாகைகளையும் கையாலசைத்தோம். ந்நாம்டியின் பதாகையில் ‘இப்பொழுதே பிரிவினை’ என்று இருந்தது. அவன் மாணவன் தலைவனாயிருந்தாலும், கூட்டத்திலும் என் அருகே இருப்பதையே நாடினான். மற்ற மாணவர் தலைவர்கள், கூட்டத்தின் முன்னணியில், ‘நைஜீரியா’ என்று வெள்ளைச்சுண்ணத்தால் எழுதப்பட்டிருந்த சவப்பெட்டியைத் தூக்கிக் கொண்டிருந்தார்கள். ஆழம் அதிகமில்லாத ஒரு குழியைத் தோண்டி, அந்த சவப்பெட்டியை புதைத்த போது, ஒரு பாராட்டொலி எழுந்து கூட்டத்தைச் சுற்றி அரவம் போல் ஒன்றாய் அணைத்து, எங்களைத் தூக்கி – ஒலியும் ஒன்றேயாய், நாங்களைனைவரும் ஒன்றேயாய் – ஒன்றாயாக்கியது.

நான் மகிழ்ச்சியுடன் உரக்கவே குரலெழுப்பினேன், இருந்தாலும் அந்தச் சவப்பெட்டி, என் அம்மாவின் தாய்க்குப்பிறந்த[ii] இஃபேகா(Ifeka) சித்தி – நான் பிறந்தபிறகு என் அம்மாவின் முலைப்பால் வற்றியபின், அவள் தான் எனக்கு, தன் முலைப்பாலைக் கொடுத்தவள் – என் சித்தியைத் தான் நினைவுபடுத்தியது. வடக்கில் நடந்த படுகொலைகளின் போது இஃபேகா சித்தி கொல்லப்பட்டாள். கருவுற்றிருந்த அவள் மகள் அரிஃஜே(Arize)வும் கூட கொல்லப்பட்டாள். அரிஃஜேவின் வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுத்து தலை வெட்டியிருப்பார்கள் – ஏனென்றால் அப்படித்தான் கருவுற்ற பெண்களிடம் அவர்கள் நடந்து கொண்டார்கள். நான் இஃபேகா சித்தியையும் அரிஃஜேவையும் பற்றி மீண்டும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று ந்நாம்டியிடம் சொல்லவில்லை. ந்நாம்டி தன் மூன்று மாமன்களையும் ஆறு ஒன்றுவிட்ட சகோதரங்களையும் இழந்திருந்த சமயத்தில், நான் இரண்டே உறவுகளை இழந்தது தான் நான் சொல்லாததற்குக் காரணம் இல்லை. ஆனால், ந்நாம்டி என் முகத்தை வருடி, ‘நான் ஏற்கனெவே சொன்னேனே, படுகொலைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிராதே. அதனால் தானே நாம் நாட்டைப் பிரித்தோம்? பியாஃப்ர பிறந்து விட்டது! படுகொலைகளுக்குப் பதிலாக, புதிய பியாஃப்ர பற்றியே நினை. நம் வலிகளை வைத்து வலிமை கொண்ட நாட்டை உருவாக்குவோம், நம் வலிகளை வைத்து நம் நாட்டை ஆப்பிரிக்காவின் பெருமையாக மாற்றுவோம்” என்பான்.

ந்நாம்டி அப்படித்தான்; சில சமயம் நான் அவனைப் பார்த்து – இருநூறு வருடங்களுக்கு முன் ஓர் இக்போ வீரனாக தன் சிற்றூரின் தலைவனாக போரில் (ஆனாலும் நேர்மையானதோர் போரில்), தீயில் சுட்ட அரிவாளோடு பாய்ந்து போய், குச்சிகளில் கட்டித் தொங்கப்பட்ட தலைகளோடு திரும்பி வருபவனாக – எப்படி இருந்திருப்பான் என்று கற்பனை செய்வேன்.

நான் என் விடுதிக்கு முன் வந்தபோது, மழை நின்றிருந்தது; சூரியன் மழையுடனான தன் போராட்டத்தில் வென்றிருந்தான். விடுதியின் முகப்பறையில், பெண்கள் கூட்டம் கூட்டமாய்ப் பாடிக் கொண்டிருந்தார்கள். நான் பார்த்து குழாயடியில் ஒருவரையொருவர் ப்ளாஸ்டிக் பக்கெட்களால் சண்டைபோட்டு அடித்துக் கொண்ட பெண்கள், மற்ற பெண்ணுடைய மார்க்கச்சை உலரப்போட்டிருந்தால் அதில் ஓட்டை போட்ட பெண்கள், இப்போது ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு பாடினார்கள். அவர்கள் ‘நைஜீரியா, உன்னை வணங்குகிறோம்’ என்று பாடுவதற்குப் பதிலாக, ‘பியாஃப்ர, உன்னை வணங்குகிறோம்’ என்று பாடினார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து, பாடினேன், கைதட்டினேன், பேசினேன். படுகொலைகளைப் பற்றி நாங்கள் பேசவில்லை; வீடுவீடாக இக்போக்களைத் தேடி, மரங்களுக்குள் இக்போக்கள் பதுங்கியிருந்தாலும் அங்கிருந்து அவர்களை இழுத்து, ‘ஜிஹாத்‘ என்றும் ‘நையாமிரி, நையாமிரி” என்றும் கத்துகிற, பளபளக்கும் கண்களுடைய மக்களால் நடத்தப்பட்ட படுகொலைகளைப் பற்றிப் பேசவில்லை. அதற்குப் பதிலாக, ஓஜுகு பற்றிப் பேசினோம்; ஓஜுகுடைய பேச்சுக்கள் எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது, புல்லரிக்க வைத்தது, அவரின் கவர்ச்சி மற்ற தலைவர்களையும் (ஓஜுகு அருகில் ந்குருமாஹ்-Nkurumah- ப்ளாஸ்டிக் பொம்மை போலிருந்தாராக்கும்!) மீறி ஒளிவிட்டது என்பதைப் பற்றியெல்லாம் பேசினோம். ‘இப்போ, ஒட்டுமொத்த கருப்பு ஆப்பிரிக்காவை விட பியாஃப்ரலயே ஜாஸ்தி மருத்துவர்களும் வழக்கறிஞர்களும் இருக்காங்க’ என்று யாரோ சொன்னார். ‘ஆ! பியாஃப்ர ஆப்பிரிக்காவையே காப்பாற்றும்’ என்று வேறு யாரோ சொன்னார். நாங்கள் சிரித்தோம், எங்களுக்கு எப்பொழுதுமே தெரிந்திருக்கவியலாத மக்களைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டோம்.

அதற்குப்பின் வந்த வாரங்களில் இன்னும் சிரித்தோம்-புலம்பெயர்ந்த எங்கள் பேச்சாளர்கள் தத்தம் பிரிட்டன், இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்குத் திரும்பிய போதும் சிரித்தோம் – ஏனென்றால், நைஜீரியாவை ஒடுக்க எங்களுக்கு ஒரே வாரம் தான் வேண்டியதாயிருக்கும். நைஜீரிய கடற்படையின் கப்பல்கள் எங்கள் துறைமுகத்தை அடைத்து நிறுத்தப்பட்ட போதும் சிரித்தோம் – ஏனென்றால் இந்த அடைப்பு நீண்ட நாள் தாங்காது. க்மேலினா3[iii] மரங்களடியில் நாங்கள் கூடி, பியாஃப்ரவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றி உரையாடியபோதும் சிரித்தோம்; ‘நைஜீரியப் பல்கலைக்கழகம், ந்சுக்கா’ என்ற பலகையை எடுத்துவிட்டு ‘பியாஃப்ர பல்கலைக்கழகம், ந்சுக்கா’ என்ற பலகையை வைத்தபோதும் சிரித்தோம். ந்நாம்டி முதல் ஆணியை அடித்தான். பியாஃப்ரவின் இராணுவத்தில் முதல் ஆளாய் அவன் சேர்ந்த பிறகு, அவன் நண்பர்களும் சேர்ந்தார்கள். புதிய பெயின்ட் வாசம் குறையாத இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்திற்கு, அவனது புதுச் சீருடையைப் பெறுவதற்காக அவனோடு போனேன். அந்தச் சீருடையில் அவன் பரந்த தோள்களுடையவன் போலவும், திறமையானாகவும் தோன்றவே, நான் அவன் சீருடையை எடுக்கவே விடவில்லை; அவன் என்னுள் கலந்த போதும், மொரமொரப்பான காக்கிச் சீருடையை இறுகப் பிடித்துக் கொண்டேன்.

என் வாழ்க்கை – எங்கள் வாழ்க்கை – ஒரு புத்தொளியைக் கண்டது. பதனிட்ட தோலின் பளபளப்பைப் போல. நாங்களெல்லாம் எங்கள் நரம்புகளில் ஓடுவது ரத்தமல்ல, உருக்கிய எஃகு ஓடுகிறது என்று உணர்ந்தோம். தீக்குழியில் வெறுங்காலில் நடக்கும் சக்தி பெற்றது போல உணர்ந்தோம்.

என் விடுதி அறையிலிருந்து, துப்பாக்கிகளின் சத்தத்தைக் கேட்டேன். அது அருகில், விடுதி முகப்பறைக்குள்ளிருந்து இடி மேலே போவது போல கேட்டது. யாரோ ஒலிபெருக்கியில் கத்திக் கொண்டிருந்தார்கள். உடனே வெளியேறு! உடனே வெளியேறு! தாழ்வாரங்களில் பாதங்கள், அதுவும் அவசரமாய்ச் செல்லும் பாதங்களின் ஒலி கேட்டது. என் பொருள்களை ஒரு பெட்டியில் தூக்கிவைத்தேன் – என் உள்ளாடைகளை மறக்க இருந்தேன்! நான் விடுதியை விட்டு வெளியேறும் போது, ஒரு பெண்ணின் நளினமிகு செருப்பு ஒன்று படிகளில் கிடந்ததைப் பார்த்தேன்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – ‘பரங்கிக்காயின் தண்டுக்குள் நீர் எப்படி நுழைந்தது என்று யாரறிவார்கள்?’

half of yellow sun

ஏனுகு[iv]வின் காற்றில், மழையின், பசிய புல்லின், நம்பிக்கையின், புதிய எறும்புப்புற்றுகளின் மணம் இருந்தது. சந்தை வியாபாரிகளும், கிழவிகளும், சிறுவர்களும் ந்நாம்டியை அணைப்பதையும் அவனது இராணுவச் சீருடையை வருடியதையும் பார்த்தேன். ஓபி அதை ‘நேர்மையான வீரம்’ என்றான். ஓபி பதின்மூன்று வயதான, கண்ணாடி அணிந்த, ஒருநாளைக்கொரு புத்தகம் படிக்கும், ‘மேதைமைநிறை சிறுவர்களுக்கான முதுநிலைப் பள்ளி’யில் படிக்கிற, கிரேக்க நாகரிகத்தின் ஆப்பிரிக்கப் பிறப்பு பற்றி ஆராய்கிற, என் தம்பி. ந்நாம்டியின் சீருடையைத் தொட மட்டுமல்லாமல், அதைப் போட்டுப் பார்க்கவும், அதுவும் துப்பாக்கிகளின் உண்மையான சத்தத்தைக் கேட்டுப் பார்க்கவும் கூட விரும்பினான். அம்மா ந்நாம்டியை வீட்டுக்கு வரச் சொல்லி, மாம்பழ இனிப்புப் பணியாரம்[v] செய்து கொடுத்தார். “செல்லம், உன் சீருடை பகட்டாயிருக்குப்பா” என்று விட்டு, தன் மகனருகிலிருப்பது போலவே சுற்றிச் சுற்றி வந்தார். ஓராண்டுக்கு முன்னால் நானும் ந்நாம்டியும் திருமணநிச்சயம் செய்த போது எனக்கு ‘இன்னும் வயதாகவில்லை’, அவன் குடும்பம் நமக்கு ‘ஏற்றாற்போலில்லை’ என்றெல்லாம் முணுமுணுத்தது அவளில்லை போல!

அப்பாவோ, நானும் ந்நாம்டியும் உடனேயே திருமணம் செய்து கொண்டால், ந்நாம்டி தன் சீருடையை திருமணத்தின் போது அணியலாம்; எங்களின் முதல் மகனுக்கு ‘பியாஃப்ரஸ்’ என்று பெயர் வைக்கலாமென்றெல்லாம் யோசனை சொன்னார். அவர் பகடி தான் செய்தாரென்றாலும், ந்நாம்டி இராணுவத்தில் சேர்ந்ததால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்ததென்னவோ உண்மை. மெருகேற்றப்பட்ட சீமைநூக்கு[vi] மேசையின் வண்ணத்தில், அவனைப் போலவே தோல்நிறமுள்ள ஒரு பிள்ளை. ந்நாம்டியிடம் இதை நான் சொன்னதும், என் உள்ளே எங்கேயோ ஆழத்தில் இருக்கும் ஏக்கத்தைப் பற்றி நான் சொன்னதும், அவன் தன் கட்டைவிரலைக் குத்தி, என் கட்டை விரலையும் குத்தி – அவன் ஒன்றும் குருட்டுநம்பிக்கையாளனில்லை – எங்களிருவரின் ரத்தத்தையும் சேர்த்து பூசிக்கொண்டோம். அந்த நாசமாகப் போகிற நம்பிக்கைக்கு என்ன அர்த்தம் என்று எங்களுக்கே தெரியாததால் சிரித்துக் கொண்டோம்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு, சிங்கத்தைப் படைப்பவன் சிங்கத்தைப் புல்லுண்ண விடுவதில்லை என.

ந்நாம்டி போவதைப் பார்த்தேன், அவன் காலணித் தடங்களைச் செம்மண்தூசி மூடுவது வரை, என் பெருமையின் ஈரத்தை என் தோல்மேல், என் கண்களில் உணர்வது வரை. அவனுடைய மிடுக்கான ஆலிவ் வண்ணச் சீருடையின் கைப்பகுதியில் சூரியனின் பிம்பம் பாதி எழுந்து கொண்டிருந்ததில் ஒரு பெருமை. அதே சின்னம் தான் – மஞ்சள் சூரியனின் ஒரு பாதி – அப்பா போர் ஆராய்ச்சி இயக்ககத்தில் தன் புதிய பணிக்காகப் போகும் போது தினம் கட்டிச் செல்லும் பகட்டான பருத்தி ‘டை’யில் தைத்திருந்த சின்னம். அப்பா தனது மற்ற எல்லா பட்டு டைகளையும், சின்னமில்லாத டைகளையும் புறக்கணித்திருந்தார். அமெரிக்கையான நேர்த்தியான நகங்களையுடைய அம்மா, லண்டனில் வாங்கப்பட்ட தன் சில ஆடைகளை விற்று, செயின்ட் பால்(சர்ச்)இல் இராணுவவீரர்களுக்காக ஆடைகள் தைக்க ஒரு பெண்கள் குழுவைத் தொடங்கியிருந்தார். நானும் அந்தக் குழுவில் சேர்ந்தேன்; உள்சட்டைகளைத் தைத்து, இக்போ பாடல்களைப் பாடினோம். அதற்குப் பின், அம்மாவும் நானும் வீட்டுக்கு நடந்து வந்து (பெட்ரோல் செலவைக் குறைப்பதற்காக நாங்கள் வண்டியோட்டுவதைத் தவிர்த்தோம்) அப்பாவும் அந்த மந்தமான மாதங்களில் வீட்டுக்கு மாலைகளில் வருவார்; நாங்கள் வராந்தாவில் அமர்ந்து அநாரா[vii]வை வேர்க்கடலைச் சாந்தோடு தின்று கொண்டே, பியாஃப்ர வானொலியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, மண்ணெண்ணெய் விளக்கு மஞ்சள் நிழல்களைச் சுற்றியடிக்கும். பியாஃப்ர வானொலி, வெற்றிகளின் கதைகளை, நைஜீரியப் பிணங்கள் வரிசைகளாய் சாலைகளில் கிடக்கும் கதைகளை, கொண்டு வந்தது. இன்னும், போர் ஆராய்ச்சி இயக்ககத்திலிருந்து அப்பா எம் மக்களின் மதிநுட்பம் பற்றிய கதைகளைக் கொண்டு வந்தார்; ‘தேங்காய் எண்ணெயிலிருந்து பிரேக்குக்கான திரவத்தைச் செய்திருந்தோம், குப்பை உலோகங்களிலிருந்து கார் எஞ்சினைத் தயாரித்திருந்தோம், கச்சா எண்ணெயை சமையல் பாண்டங்கள் கொண்டே தூய்மைப் படுத்தினோம், வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட கண்ணிவெடியைச் சீர்படுத்தினோம்’. இந்த அடைப்பு எங்களைத் தடுக்க இயலாது. அடிக்கடி அந்த மாலைவேளைகளில் “எங்கள் குறிக்கோள் நியாயமானது” என்று எங்களுக்கே என்னவோ ஏற்கனவே தெரியாத மாதிரி சொல்லிக் கொள்வோம். ஓபி அதைத் தேவையான உறுதிமொழி என்று சொல்லுவான்.

அப்படிப்பட்ட ஒரு மாலையில் தான், ஒரு நண்பர் வீட்டுக்கு வந்து ந்நாம்டியின் படை பெனினை வென்றதாகவும், ந்நாம்டி நன்றாக இருப்பதாகவும் சொன்னார். நாங்கள் ந்நாம்டியை பனை மது கொண்டு பாராட்டினோம். “எங்கள் எதிர்கால மாப்பிள்ளைக்கு” என்று அப்பா தன் கோப்பையை என்னைநோக்கி நீட்டிச் சொன்னார். அப்பா, ஓபிக்கு எவ்வளவு வேண்டுமோ குடிக்க விட்டுவிட்டார். அப்பாவுக்கு கோனியாக்(Cognac) தான் பிடிக்கும், ஆனால் கருப்புச் சந்தையில் ரெமி மார்ட்டின் கூட இந்த அடைப்பினால் கிடைக்கவில்லை. சில கோப்பைகள் குடித்தபின், அப்பா, தன் மேலுதட்டில் வெள்ளை நுரைபடிய, இப்போது பனை மது தான் மிகவே பிடித்திருக்கிறது – அதை ஸ்நிஃப்டர்[viii] கோப்பையில் அருந்தாத வரை என்றார். நாங்கள் எல்லாரும் மிகவே உரக்கச்சிரித்தோம்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – நிலத்தில் நடக்கும் அணில் சிலசமயம் துள்ளியோடும், ஓட வேண்டிய தேவை வந்தால்.

ஏனுகு, ஹார்மட்டான்[ix] பருவக்காற்றுக் காலத்தின் நடுவில், தூசியும் காகிதத்துண்டுகளும் காய்ந்த இலைகளையும் கொண்டு வந்த காற்று – தலைமுடியையும் ஆடைகளையும் பழுப்பு நிறப் படலத்தில் படர விட்ட காற்று – கடுமையாக காற்றடிக்கும் ஒரு நாளில், வீழ்ந்தது. நானும் அம்மாவும் மிளகுசூப்[x] செய்து கொண்டிருந்தோம் – நான் பசுவயிற்றை நறுக்கி வைக்க, அம்மா மிளகை அரைத்துக் கொண்டிருக்க – நாங்கள் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டோம். நான் முதலில் அது இடி, ஹார்மட்டான் புயலுக்கு முன் வரும் இடி என்றே நினைத்தேன். அது ஐக்கிய அரசின் துப்பாக்கிகளாக இருக்க முடியாது, ஏனெனில் பியாஃப்ர வானொலி, ஐக்கியப் படை துரத்தியடிக்கப்பட்டதால் அந்தப் படை மிக தூரத்தில் இருக்கும் என்றல்லவா சொன்னது. ஆனால், அப்பா சமையலறைக்குள் சில விநாடிகளுக்குள் தன் பருத்தி டை கோணலாயிருக்க வந்தார். “எல்லாரும் காரிலேறுங்க” என்றார் அவர். “இப்பவே! எங்க இயக்ககம் முழுக்க காலி செய்யுறாங்க”.

biafra war 2எதை எடுத்துப் போவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அம்மா தன் நகத் திருத்தப் பெட்டி, சின்ன வானொலி, உடைகள், பாதி கொதித்த மிளகு சூப்பை ஒரு கைத்துணியில் சுற்றியதை என்று எடுத்துக் கொண்டாள். நான் பிஸ்கோத்து பாக்கெட் ஒன்றை எடுத்தேன். ஓபி உணவு மேசையின் மேலிருந்த தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டான். அப்பாவின் புஃஜா (Peugeot) காரில் நாங்கள் கிளம்பும் போது, ஏனுகுவை எங்கள் படை திரும்ப வென்றவுடன் நாங்கள் விரைவில் திரும்புவோம் என்று அம்மா சொன்னார். அம்மாவின் அழகான பீங்கான் பண்டங்களை விட்டு, எங்கள் ஒலிப்பெட்டி, அம்மா புதியதாய் பாரிசிலிருந்து வரவழைத்த – அபூர்வமான மென்நீலப் பெட்டியில் வந்த – பொய்முடி இவற்றையெல்லாம் விட்டு விட்டுச் செல்வது அப்படியொன்றும் பெரிய விஷயமில்லை என்பது போலச் சொன்னார். ஓபி “மிருகத்தோல் அட்டை போட்ட என் புத்தகங்களையும்” என்று சொன்னான். பியாஃப்ரவின் படைவீரர்கள் பின்வாங்கிச் சென்றதை நாங்கள் பார்த்தாலும் அதைப் பற்றிப் பேசிக் கொள்ளாமல் இருந்ததே எனக்குப் போதுமானதாக இருந்தது. ந்நாம்டியை நான் அப்படி, பெருமழையில் நனைந்தோடும் கோழிக்குஞ்சைப் போல, கற்பனை கூடச் செய்து பார்க்க விரும்பவில்லை. அப்பா அடிக்கடி காரை நிறுத்தி முன்கண்ணாடியிலிருந்த அழுக்கைத் துடைத்ததால் மெதுவாகப் போவதுபோல் இருந்தாலும், கூட்டத்தின் காரணமாக அவரால் காரை மெதுவாகத் தான் ஓட்ட முடிந்தது. பெண்கள் சிறுகுழந்தைகளை முதுகில் கட்டி, சிறுவர்களை இழுத்துக் கொண்டே, பாத்திரங்களைத் தலைகளில் தூக்கி நடந்தார்கள். ஆண்கள் ஆடுகளையும் சைக்கிள்களையும் இழுத்துக் கொண்டு, மரப் பெட்டிகளையும் வள்ளிக்கிழங்குகளையும் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். குழந்தைகள், அத்தனை குழந்தைகள். தெளிவில்லா பழுப்புப் படலமாக தூசி எல்லாவற்றையும் சுழற்றி அடித்தது. தூசிப் படலம் கொண்ட நம்பிக்கையை, ஆடையாய் அணிந்த ஒரு வெளியேற்றம். இந்த மக்களைப் போல நாங்களும் இப்போது அகதிகள் என்று புரிய எனக்கு சிறிது நேரமாயிற்று.

இக்போ இனத்தவர்கள் சொல்வதுண்டு – ஒருவன் காலையில் எழுந்து கொள்ளுமிடமே அவன் வீடாகும்.

அப்பாவின் பழைய நண்பர் அகுபூசி(Akubeuze), ஒரு வருத்தமான புன்னகையோடு ‘கடவுள் பியாஃப்ரவை ஆசிர்வதிக்கட்டும்’ என்பவர். அவர் படுகொலைகளில் தன் அனைத்து மக்களையும் இழந்தவர். புகையில் கருத்த சமையலறையையும், குழிக் கழிவறை, கறைபடிந்த சுவர்களுடைய அறை இவற்றை அவர் காட்டியபோது, எனக்கு அழுகையாக வந்தது. அகுபூசியிடமிருந்து நாங்கள் வாடகை எடுக்கும் அறைக்காக நான் அழவில்லை, ஆனால் அகுபூசிக்காக அழுதேன். அவர் கண்களில் தெரிந்த மன்னிப்புக் கேட்கும் தோரணைக்காக. எங்கள் படுக்கும் பாய்களை அறையோரத்தில், எங்கள் பை மற்றும் உணவுக்கு பக்கத்தில் வைத்தேன். ஆனால், வானொலி அறையின் நடுவிலிருந்தது, அதைச் சுற்றி நடந்தோம், அதைக் கேட்டோம், அதைச் சுத்தம் செய்தோம். படைவீரர்களின் இராணுவப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. ‘நாங்கள் பியாஃப்ரன்கள், வாழ்வாதாரத்துக்காகப் போராடுகிறோம், ஏசுவின் பெயரால், நாங்கள் வென்றிடுவோம், ஹிப் ஹாப், ஒன்று இரண்டு’. சில சமயம் வாயிற்பக்கம் இருந்த எங்கள் புதிய அண்டை வீட்டுக்காரர்களான மக்கள் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். பளிங்கு மாடிப்படிகளும் காற்றோட்டமான வராந்தாவுமான எங்கள் பழைய வீடு என்ன ஆயிற்று என்று நாங்கள் வாய்விட்டு புலம்பிவிடாமல் இருப்பதற்காக, பாட்டுக்களைப் பாடினோம். ஈனுகு வீழ்ந்து விட்டது, போர் ஆராய்ச்சி மையம் இப்போது சம்பளம் கொடுக்கவில்லை, அகவிலைப்படியைத் தான் அப்பாவுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றிப் பேசாமல் இருக்க, பாட்டுக்களைப் பாடினோம். அப்பா ஒவ்வொரு தாளையும், அப்பாவின் பெயர், அடையாள எண் பொறித்த, மை ஈஷிய தாளைக் கூட அம்மாவிடம் கொடுப்பார். நான் அந்தப் பணத்தைப் பார்த்து, பியாஃப்ரன் வெள்ளிகள் எப்படி நைஜீரிய வெள்ளிகளை விட அழகாய் இருக்கிறது, பியாஃபர பணத் தாளில் எழுத்தும் அமைப்பும் என்ன கம்பீரமாய் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன். ஆனால், இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு சந்தையில் வாங்க முடிந்தது கொஞ்சம் தான்.

சந்தை ஓரளவே பொருள்களுடைய, தூசுடைய மேசைகளுடன் இருந்தது. உணவை விட நிறைய ஈக்களே இருந்தன, அதுவும் சாம்பற் நிறத்து இறைச்சியின் மேலும் கருப்புப்புள்ளிகள் நிறைந்த வாழைப்பழங்களின் மேலும் ஈக்கள் அப்பிக் கொண்டு பறக்கும். ஈக்கள் அந்த இறைச்சி மற்றும் பழங்களை விட ஆரோக்கியமாகவும் பசுமையானதாகவும் இருந்தன. நான் எல்லாவற்றையும் பார்வையிடுவேன், அது அமைதிக்காலத்துச் சந்தை போலவும், அங்கே தேர்வு செய்து வாங்க நான் காலாற வந்தாற் போலவும். இறுதியில் நான் மரச்சீனிக் கிழங்கைத்தான் எப்போதுமே வாங்குவேன், அது வயிற்றை நிரப்பும் என்பதாலும் அது தான் விலைகுறைந்திருப்பதாலும். அழுதுவடியும் கிழங்குகள், அதுவும் அச்சுறுத்தும் ரோசாநிறத் தோலோடு. நாங்கள் அதை இதற்குமுன் சாப்பிட்டதே இல்லை. நான் அம்மாவிடம் சொன்னேன், பாதி விளையாட்டாகத் தான், இந்தக் கிழங்குகள் விஷத்தன்மையானவை என்று. அம்மா அதற்குச் சிரித்தபின் சொன்னாள், ‘மக்கள் இதன் தோலியைக் கூடச் சாப்பிடுகிறார்கள், தேனே. முன்னெல்லாம் ஆடுகள் மட்டுமே சாப்பிடும்’.

மாதங்கள் மெல்ல நகர்ந்தன, என் மாதவிடாய் நேரங்கள் வந்தபோது குறைவாகவும், சிவப்புக் குறைந்து பழுப்பாகவும் வந்ததைக் கவனித்தேன். ந்நாம்டியைப் பற்றிக் கவலையாக இருந்தது. அவன் எப்படி எங்களைக் கண்டறிவான், அவனுக்கு ஏதேனும் ஆகியிருந்தால், என்னிருப்பிடம் சொல்ல யாருமேயில்லை என்றெல்லாம் கவலையாக இருந்தது. பியாஃப்ர வானொலிச் செய்திகளைக் கவனமாகக் கேட்டேன். நைஜீரிய வானொலி சில சமயங்களில் பியாஃப்ர வானொலி அலையெண் வரிசையை இடைமறித்து ஒலிபரபினாலும். ஓபி அதை ‘வேணும்னே ஜாம் பண்றாங்க’ என்பான். பியாஃப்ர வானொலி நைஜர் ஆற்றில் மிதந்த ஐக்கியப் படையினரின் ஆயிரக்கணக்கான் உடல்களை வருணித்தது. நைஜீரியா வானொலி ஆயிரக்கணக்காக இறந்து போன பியாஃப்ர வீரர்களையும், தோற்றோடும் பியாஃப்ர வீரர்களையும் பட்டியலிட்டது. நான் இரண்டையும் ஒரே கவனத்தோடு கேட்டேன், பிறகு என் கற்பனையில் எனக்குத் தோன்றியவற்றை உண்மையென்று கருதிக் கொண்டேன்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – பாம்பு தன் விஷத்தைக் காட்டும் வரை, குழந்தைகள் பாம்பை விறகுகளைக் கட்டுவதற்குத்தான் பயன்படுத்துவார்கள்.

ந்நாம்டி எங்கள் வீட்டு வாயிலில், வறண்ட காற்றடித்த ஒரு காலையில், கண்ணுக்கு மேல் ஒரு வடுவோடு, முகத்தில் தோல் நைந்து இழுபட்டு, அவன் கிழிந்த கால்சட்டை இடுப்பில் தங்காமல், வந்து நின்றான். அம்மா உடனே சந்தைக்கு விரைந்து மூன்று கோழி கழுத்தும் இரண்டு இறக்கையுமாக வாங்கி வந்து, கொஞ்சம் பாமாயிலில் வறுத்து வைத்தாள். “ந்நாம்டிக்காக,” என்று களிப்பான குரலில் சொன்னாள். ஃப்ரென்ச் சிக்கன் உண ( coq au vin) வை சமையல் குறிப்புப் புத்தகம் கூடப் பார்க்காமல் செய்யக்கூடிய அதே அம்மா!

biafra war 3நான் ந்நாம்டியை பக்கத்தில் இருக்கும் ஒரு அறுவடைக் காலம் வருமுன்னேயே அறுவடை செய்யப்ப்பட்ட பண்ணைக்குக் கூட்டிச் சென்றேன். எல்லாப் பண்ணைகளுமே அப்படித்தான் இருந்தன, இரவில் சூறையாடப்பட்டு, சோளக் கருது முதிருமுன்னரே சூறையாடப்பட்டதால், சோள முத்துகள் இன்னும் தோன்றாத சோளமும், என் கைமுஷ்டி அளவுக்குக் கூட இல்லாமல் இளசாக இருந்த குச்சிக் கிழங்கும் கொண்ட பண்ணை. ஓபி அதை ‘வெறி பிடித்த அறுவடை’ என்று சொன்னான். ந்நாம்டி என்னை ஒரு உக்பக[xi] மரத்தடியில் தரைக்கு இழுத்தான். அவன் உடல் தோலில் குத்திய எலும்புகளை என்னால் உணர முடிந்தது. என் முதுகைச் சிராய்த்து, என் வியர்த்த கழுத்தை கடித்து, என்னை தரையில் கிடத்திப்பிடித்த பிடியில் மணல் என் தோலைக் குத்தியதை உணர்ந்தேன். அவன் அத்தனை நேரம், அத்தனை இறுக்கமாக என்னுள் இருந்த போது, எங்கள் இருவர் இதயமும் ஒருசேர ஒரே லயத்தில் அடித்ததாக உணர்ந்தேன். இந்தப் போர் மட்டும் முடியாதிருந்தால், இது இதே தரத்தில் ஜாதிக்காய் போல விறுவிறுப்பாகவும் நீடித்தும் இருக்காதா என்று அபத்தமாகத் தோன்றியது. பின்னர், ந்நாம்டி அழத் தொடங்கினான். அவன் அழக்கூடியவன் என்று எனக்குத் தோன்றியதேயில்லை. பிரிட்டானியர்கள் நைஜீரியாவுக்கு இன்னும் ஆயுதங்கள் கொடுப்பதாகவும், நைஜீரியா ரஷ்ய விமானங்களையும் எகிப்திய விமானிகளையும் கொண்டிருப்பதாகவும், அமெரிக்கர்கள் எமக்கு உதவி செய்ய விரும்பாததாகவும், எம் தடையடைப்பு தொடர்வதாகவும், ந்நாம்டியின் படைப்பிரிவில் இரண்டே பேர் ஒரே ஒரு துப்பாக்கியுடன் மட்டும் உயிர்தப்பித்ததாகவும், இன்னும் சில படைப்பிரிவுகள் அரிவாள்களையும் குறுவாள்களையும் பயன்படுத்த நேர்ந்ததாகவும் சொன்னான். அவன் கேட்டான், ‘வடக்கே, இக்போவாக பிறந்ததற்கே குழந்தைகளைக் கொன்றார்கள், இல்லையா?’.

நான் என் முகத்தை அவன் முகத்தோடு அழுத்தினேன், ஆனால் அவன் அழுவதை நிறுத்துவதாயில்லை. ‘கடவுள் என்று ஒன்று இருக்கிறதா?’ என்று என்னிடம் கேட்டான். ‘கடவுள் என்று ஒன்று இருக்கிறதா?’ நான் அவனை இறுக்கி அணைத்து அவன் அழுவதையும், சிள்வண்டுகளின் ரீங்காரத்தையும் கேட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு நாள்களுக்குப் பின் பிரியாவிடை சொல்லிக் கிளம்பும் போது அவன் என்னை வெகு நேரம் அணைத்திருந்தான். அம்மா அவனுக்கு ஒரு பையில் சமைத்த சாதத்தைக் கொடுத்தனுப்பியிருந்தாள்.

நான் அந்த நினைவைச் சேமித்தேன், ஏன் ந்நாம்டியின் ஒவ்வொரு நினைவையுமே சேமித்து வைத்திருந்தேன், ஒன்றையும் செலவழிக்காமல் சிக்கனமாய். விமானத்தாக்குகள் நடக்கும் போது தான் அவற்றை நினைவுகொள்வேன், அதுவும் க-க-க என்ற விமானம்சுடும் துப்பாக்கிகள் கிறீச்சிட ஒரு கொதிக்கிற பகலில் எல்லாரும் பதுங்குபள்ளத்துக்கு ஓடினோம்-பதுங்குபள்ளம் என்பது தரையில் ஓர் அறையினளவு தோண்டப்பட்ட, மரத்துண்டுகளால் மூடப்பட்ட குழி-அதற்குள் சில்லிட்ட மண்ணில் சறுக்கிவிழுந்தோம். [அப்படிச் சறுக்குவதை] ஓபி ‘பரவசம்’ என்று சொன்னான், அவனுக்கு கீறல்களும் காயங்களும் பட்டாலும். நான் கரிமச் சுவர்களிலிருந்தும் மண்ணிலிருந்தும் இப்போதுதான் உழப்பட்ட நிலத்தைப் போல வந்த வாசனையை முகர்ந்து கொண்டு, குண்டடிப்பு முடியும் வரை சுற்றிலும் சிள்வண்டுகளையும் மண்புழுக்களையும் தேடி ஊர்ந்து கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அந்த மண்ணை என் விரல்களுக்கிடையில் தேய்த்து ந்நாம்டியின் பற்கள், நாக்கு, குரல் என்று ஒவ்வொன்றாய் நினைவில்கொண்டு ரசிப்பேன்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – காது கேளாதவரை வணங்குவோம், ஏனென்றால் சொர்க்கங்களே கேட்காத போது பூமி கேட்கத் தொடங்கும்.

பல பொருள்களும் நிலையற்றுப் போய் விட்டன, மதிப்பற்றும். சோளமாவுணவை ஒரு தட்டில் இட்டுச் மெல்ல ரசித்துச் சாப்பிட்டேன். உணவு துணியைப் போல இருந்தாலும், பதுங்கு குழிக்கு ஓட வேண்டியிருக்கலாம் என்பதாலும், குழியிலிருந்து நான் வெளியே வருவதற்குள் அண்டை வீட்டார் யாரேனும் அதைச் சாப்பிட்டிருக்கக் கூடும் என்பதாலும், அல்லது அதை குழந்தைகளில் யாருக்கேனும் கொடுத்திருக்கக் கூடும் என்பதாலும் அதை ரசித்துச் சாப்பிட்டேன்.

அந்தக் குழந்தைகளில் பலரும் வெளிமுற்றத்தில் பள்ளிகளைத் துரத்தி ஓடிக் கொண்டிருப்பதால், ஓபி நாங்கள் அந்தக் குழந்தைகளுக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கலாம் என்று யோசனை சொன்னான். “குண்டடிப்பு எல்லாம் இயல்பான வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க” தலையை இட வலமாக ஆட்டிக் கொண்டே சொன்னான். கோலாப் பருப்பு மரத்தினடியில் ஒரு சில்லென்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தான். நான் சிமென்ட்டு பாளங்களின் மேல் பலகைகளை இட்டு பெஞ்சி ஆக்கி, மரத்தின் மேல் மரத்தாள் ஒன்றை கருப்புப் பலகை போல கட்டினேன். நான் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தேன், ஓபி கணக்கும் வரலாறும் கற்றுக் கொடுத்தான், குழந்தைகள் என் வகுப்பில் செய்தாற் போல அவன் வகுப்பில் கிசுகிசுக்கவோ இளிக்கவோ இல்லை. அவன் பேசவும் கைகளையாட்டவும் அந்த மரப்பலகையில் கரிக்கட்டியால் எழுதவும் செய்த போது என்னவோ அவன் அவர்களை கட்டிப் போட்டாற் போல இருந்தது (அவன் தன் வேர்த்து விட்ட முகத்தில் கைகளால் துடைத்த போது, அவன் முகத்தில் ஒரு கரிக் கோலம் போட்டாற் போல இருக்கும்).

அவன் படிப்போடு விளையாட்டையும் கலந்து கொடுத்ததால் அந்தக் குழந்தைகள் அப்படி இருந்தார்களோ என்னவோ – ஒரு முறை அவன் குழந்தைகளிடம் ‘பெர்லின் கருத்தரங்கை’ நாடகமாக்கச் சொன்னான். குழந்தைகள், ஆப்பிரிக்காவைப் பிரிக்கும் ஐரோப்பியர்களாக, மலைகளையும் ஆறுகளையும் அவை எங்கிருக்கின்றன என்று தெரியாவிட்டாலும் ஒருவர் மற்றவருக்கு மலைகளையும் ஆறுகளையும் கொடுத்தனர். ஓபி பிஸ்மார்க்காக நடித்தான். “இளம் பியாஃப்ரன்களுக்கு, நாளைய தலைவர்களுக்கு என் சிறு பங்களிப்பு” என்று குறும்பு பொங்க அவன் சொன்னான்.

நான் சிரித்தேன், ஏனென்றால் அவனும் நாளைய பியாகப்ர தலைவன் என்பதை அவன் மறந்து போவது போலிருந்ததால். நான் கூட சமயத்தில் அவன் எவ்வளவு சிறியவன் என்பதை மறந்து விடுவேன். “உனக்கு நினைவிருக்கா, நான் சில சமயம் மாட்டிறைச்சியை உனக்குக் கடிக்கச் சுலபமாயிருக்கும்னுட்டு கொஞ்சம் போல் கடித்து உன் வாயில் வைப்பேன்…?” என்று கேலி செய்தேன். ஓபி முகம் மாறி, அவனுக்கு நினைவில்லை என்று சொன்னான்.

வகுப்புகள் காலையில், சூரியனின் பகல் நேரக் கதிர்கள் சுட்டெரிக்கும் முன் நடத்துவோம். உள்ளூர் இளம் வயதினரும் மணமான பெண்களும் காயமடைந்த ஆண்களும் எனக் கலவையான குடிப்படை ஒன்றில் நானும் ஓபியும் சேர்ந்திருந்தோம். வகுப்புகளுக்குப் பின் புதர்களுக்குள் ஒளிந்திருக்கக் கூடிய ஐக்கியப் படைவீரர்களையோ பியாஃப்ர நாசகாரர்களையோ கண்டுபிடித்து விடலாம் என்று போனாலும், நாங்கள் கண்டுபிடித்தது என்னவோ காய்ந்த பழங்களையும் வேர்க்கடலைகளையும் தான். இறந்து போன நைஜீரியர்களைப் பற்றிப் பேசினோம், பியாஃப்ரவை ஆதரிக்கும் ஃபிரெஞ்ச் மற்றும் டான்சானியர்களைப பற்றிப் பேசினோம், பிரிட்டானியர்களின் பொல்லாங்கையும் பற்றிப் பேசினோம். இறந்து போன பியாஃப்ரர்களைப் பற்றிப் பேசவில்லை. புரதக் குறைவைத் தடுக்கும் என்று கருதப்பட்ட மரத்தைப் பயன்படுத்திய மருத்துவ முறை பற்றியோ, அது எப்படி செயல்படுகிறது என்றோ, புரதக் குறைவின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் எத்தனை குழந்தைகள் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றோ நாங்கள் பேசவில்லை. அது வெறும் புரட்டு என்று எனக்குத் தெரியும், அம்மரத்தின் இலைகளை யாருமே சாப்பிட மாட்டார்கள், அந்த இலைகள் குழந்தைகளின் வயிற்றை நிரப்பினாலும், புரதச் சத்தைக் கட்டாயம் தரப் போவதில்லை. ஆனால், அம்மாதிரியான கதைகளை நம்புவது எங்களுக்குத் தேவையாயிருந்தது. கருமம் பிடித்த குச்சிக் கிழங்கு மட்டுமே சாப்பிட முடியும் போது, மற்ற எல்லாவற்றையும் – அதுவும் எதை நம்ப வேண்டும் எதை நம்பக் கூடாது என்பதை – வெறியுடனும் சுயநலத்துடனும் கையாள வேண்டியிருந்தது.

நாங்கள் சொல்லிக் கொண்ட கதைகள், தாலாட்டும் எங்கள் குரல்கள், எனக்கு மிகவும் களிப்பாயிருந்தன, ஒரு குறிப்பிட்ட நாள் வரை. நாங்கள் பயன்பாட்டில் இல்லாத ஒரு பண்ணையில் உயர்ந்த புல்லினிடையே போய்க் கொண்டிருக்கும் போது எதன் மேலோ இடறினோம். ஓர் உடல். நான் அதைப் பார்க்கும் முன்னேயே அதன் மணம் – என் வாயடைத்து மூச்சு முட்டி தலை லேசானது போல ஒரு மணம். “ஹேய், அது ஒரு நைஜீரியன்” என்றாள் ஒரு பெண்மணி. அந்த நைஜீரிய வீரனின் ஊறி உப்பிய உடலில் ஈக்கள் மொய்த்திருக்க நாங்கள் அதைச் சுற்றி நின்றோம். அவன் தோல் சாம்பல் நிறத்தில், கண்கள் திறந்து, அவன் இனத்தினருக்கான சின்னங்கள், ஆழமான அச்சுறுத்தும் கோடுகளாய், அவன் உப்பிய முகத்தில் ஓடியிருந்தன. ஒரு சிறுவன் “நான் மட்டும் அவனை உயிரோடு பார்த்திருக்கணும்” என்றான். “ந்கக்வு, அசிங்கம் பிடித்த எலி” என்று யாரோ சொன்னார். ஒரு சிறுமி அந்த உடலின் மேல் துப்பினாள். கழுகுகள் சில அடி தூரத்தில் வந்து அமர்ந்தன. ஒரு பெண் வாந்தி எடுத்தாள். யாருமே அந்த உடலை புதைக்க வேண்டும் என்று யோசனை சொல்லவில்லை. நான் அந்த துர்மணத்தினாலும் மொய்க்கிற ஈக்களாலும் சூட்டினாலும் தலை கிறுகிறுக்க, நான் அங்கே நின்று, அவன் எப்படி செத்திருப்பான், அதுவரை அவன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று வியந்து கொண்டிருந்தேன். அவன் குடும்பத்தைப் பற்றி வியந்தேன். அவன் மனைவி வெளியே பார்த்தபடி, வழி மேல் விழி வைத்து கணவன் பற்றிய சேதிக்காகக் காத்திருப்பாள். “அப்பா வீட்டுக்கு சீக்கிரம் வந்திடுவார்” என்று சொல்ல வேண்டிய சின்னக் குழந்தைகளிருக்கும். வீரமகன் கிளம்பும் போது அழ ஓர் அம்மா இருந்திருப்பார். சகோதரர்களும், சகோதரிகளும், சகோதரமுறைகளும். இன்னும் அவன் விட்டுச் சென்றிருக்கக் கூடிய கவைகளைப பற்றி கற்பனை செய்து கொண்டேன் – துணிமணிகள், தொழுகை விரிப்பு, குனு[xii] குடிக்க ஒரு சின்ன மரக் கோப்பை.

நான் அழத் தொடங்கினேன்.

ஓபி என்னைப் பிடித்துக் கொண்டு, என்னை வெறுப்புடன் பார்த்தான். “இவனைப் போன்றவர்கள் தான் இஃபேகா சித்தியைக் கொன்றிருப்பார்கள்”, என்றான். “இவனைப் போன்றவர்கள் தான் கருவிலிருக்கும் குழந்தைகளையும் எடுத்து தலை வெட்டி இருப்பார்கள்”. நான் ஒபியைப புறந்தள்ளி விட்டு அழுது கொண்டே இருந்தேன்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – மற்ற மீன்களை உண்ணாத மீன் கொழுப்பதில்லை.

ந்நாம்டி பற்றி ஒரு செய்தியும் இல்லை. அண்டையில் வசிப்பவர் அவர்களின் மகன்களிடமிருந்தோ கணவர்களிடமிருந்தோ போர்முனையிலிருந்து செய்தி பெறும்போது, அவர்களின் அறைகளில் அவர்களின் நல்ல நேரம் எனக்கு வந்திடாதா என்ற நப்பாசையில் நாள்கணக்கில் சுற்றிக் கொண்டிருப்பேன். ‘ந்நாம்டி நன்றாக இருக்கிறான்’ என்று ஓபி சாதாரணமான தொனியில் சொன்னபோது அதை நம்பி விடவே விரும்பினேன். அவன் அவித்த குச்சிக்கிழங்கும், பூஞ்சை பிடித்த வள்ளிக்கிழங்கும் சாப்பிட்ட அந்த மாதங்களில், நல்ல எண்ணெயும் மீனும் உப்பும் பற்றி நாங்கள் எங்கள் கனவுகளைப் பேசிக் கொண்ட அந்த மாதங்களில் அதைத்தான் அடிக்கடி சொன்னான்.

அண்டை வீட்டினரிடமிருந்து, நான் இருந்த கொஞ்சம் உணவையும் பாயில் சுற்றி, கதவுக்குப் பின்னால் ஒளித்து வைத்து விடுவேன். அண்டை வீட்டினரும் அவர்களின் உணவை ஒளித்தனர். மாலை வேளைகளில் உணவைத் திறந்து சமையலறையில் குழுமி சமைத்து, உப்பைப் பற்றிப் பேசிக் கொள்வோம். நைஜீரியாவில் உப்பு இருந்தது; உப்புக்காகத் தான் எம் மக்கள் எல்லையைத் தாண்டி அந்தப் பக்கம் செல்கிறார்களாம், உப்புக்காகத் தான் இந்தத் தெருக் கோடியில் ஒரு பெண் அவள் சமையலறையிலிருந்து ஓடி, துணிமணிகளைக் கிழித்து, தரையில் புரண்டு புலம்பினாளாம். நான் சமையலறைத் தரையில் அமர்ந்து பேச்சுச் சத்தத்தைக் கேட்டு, உப்பு எப்படி சுவைத்தது என்று எண்ணிப் பார்த்தேன். ஒரு கிறிஸ்ட[xiii]லாலான உப்புக்குடுவை வீட்டில் இருந்தது என்று நினைத்துப் பார்க்கும் போது, அதீதக் கற்பனையாக இப்போது தோன்றுகிறது. உப்பை வீணடித்திருக்கிறேன், அடியில் கட்டியாயிருந்த உப்பைக் கழுவித் தள்ளி விட்டு உப்பை குடுவைக்குள் திரும்ப நிரப்பியிருக்கிறேன். புதிய உப்பு. ந்நாம்டியின் நினைவுகளும் உப்பின் நினைவுகளுமாக மாறி மாறி நினைத்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் பழைய பாதிரியார் ஃபாதர் டேமியன், இரண்டு ஊர் தாண்டி, அமான்டுக்பாவில் ஒரு அகதி முகாமில் பணிபுரிவதாக அகுபூசி சொன்னபோது, நான் உப்பைத் தான் நினைத்தேன். அகுபூசிக்கு நிச்சயமாகத் தெரியவில்லை, கதைகள் பல பேரையும், பல ஊர்களையும் சுற்றி வந்தன. இருந்தாலும், ஃபாதர் டேமியனைப் போய்ப் பார்க்கலாம் என்று நான் அம்மாவைத் தூண்டினேன். அம்மாவும் சரியென்றாள்; அதுவும் அவரைப் பார்த்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டதால், அவருக்கு உடல்நலம் நன்றாயிருக்கிறதா என்று பார்த்து வரலாமென்றாள். நான் அவளிடம் கேலியாகச் சொன்னேன்- யாரையும் போய்ப் பார்த்து நாளாகிவிட்டதால், என்னவோ இன்னும் உறவுநட்பைப் போய்ப் பார்க்க முடியுமா என்று. கரிடாஸ் இன்டர்நேஷனாலிஸ் பாதிரியார்களுக்கு இரவு இரகசியப்பயணம் மூலமாக உணவு அனுப்புவதைப் பற்றி நாங்கள் பேசவில்லை, அந்த உப்பிட்ட மாட்டிறைச்சி, குளூகோஸ், பால்பொடி உணவுப் பொருள்களை பாதிரியார்கள் தேவைப்பட்டவர்களுக்கு விநியோகித்து விடுவார்கள். உப்பையும்.

biafra warஃபாதர் டேமியன் இன்னும் இளைத்திருந்தார்; குழிகளும் நிழல்களும் அவர் முகத்தை நிறைத்திருந்தன. ஆனால், அகதி முகாமிலிருந்த குழந்தைகள் அருகில் வைத்துப் பார்க்க நலம் போலத் தானிருந்தார். குச்சி போல் மெலிந்திருந்த குழந்தைகளின் எலும்புகள் இயல்பாயில்லாமல் கூர்மையாய்த் துருத்திக் கொண்டு இருந்தன. துருப் பிடித்தாற் போன்ற வண்ண தலைமுடியும் பலூனாய் உப்பியிருந்த வயிறுகளுமாக, குழந்தைகள். முகமே விழுங்கி விட்டாற்போல ஆழத்தில் கண்களுமாக, குழந்தைகள். ஃபாதர் டேமியன் என்னையும் அம்மாவையும் மற்ற பாதிரிகளுக்கு அறிமுகப் படுத்தினார், அவர்கள் புனித ஆவியின் ஐரிஷ் சமயப்பரப்புக் குழுவினர். வெயிலில் உடல் சிவந்த வெள்ளையர்கள். அவர்களின் தைரியம் மிகுந்த சிரிப்பைப் பார்த்தால், முகத்தை இழுத்து, சிரிப்பு நிசம் தானா என்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஃபாதர் டேமியன் தன் வேலையைப் பற்றியும், இறந்து கொண்டிருந்த குழந்தைகளைப் பற்றியும் பேசப் பேச, அம்மா பேச்சை மாற்றிக் கொண்டே இருந்தாள். இதே போல வேறு யாராவது பேச்சை மாற்றினால், என்ன நாகரிகமே இல்லாமல் இருக்கிறார் என்று சொல்லக் கூடிய அம்மாவே இல்லை அது. ஃபாதர் டேமியன் குழந்தைகளைப் பற்றியும் குழந்தைகளின் புரதக் குறைவு[xiv] பற்றியும் பேசுவதை நிறுத்தினார். நாங்கள் கிளம்பிய போது அவர் ஏமாற்றம் அடைந்தாற் போலிருந்தது. அவர் கொடுத்த உப்புப் பை , உப்பிட்ட மாட்டிறைச்சி, மீன் பொடி எல்லாவற்றையும் அம்மா எடுத்துக் கொண்டாள்.

நாங்கள் வீட்டுக்கு திரும்புகையில் ‘ஃபாதர் டேமியன் ஏன் இப்படி அந்தக் குழந்தைகளைப் பற்றி நம்மிடம் சொல்லிக் கொண்டே இருந்தார்?’ என்று அம்மா இரைந்தாள். நான் “அவர்களுக்காக நாம் என்னம்மா செய்து விட முடியும்?” என்று அவளைச் சமாதானப் படுத்தினேன், அதுவும் ஃபாதருக்குத் தம் வேலையைப் பற்றி யாரிடமாவது பேசத் தோன்றியிருக்கும் – அம்மாவுக்கு நினைவிருக்கிறதா சர்ச்சின் சந்தைகளில் ஃபாதர் சிறுபிள்ளைத்தனமான பாடல்களை, குழந்தைகளை சிரிக்க வைப்பதற்காக எப்படி அபசுரமாகப் பாடுவார் என்றெல்லாம் – நினைவு படுத்தினேன்.

ஆனால் அம்மா இரைந்து கொண்டே வந்தாள். நானும் பதிலுக்குக் கத்த, சொற்கள் வாயிலிருந்து உருண்டோடி வந்தன. என்ன இழவுக்கு இந்த ஃபாதர் டேமியன், அந்த இறந்து கொண்டிருக்கும் குழந்தைகளைப் பற்றி எங்களிடம் சொல்ல வேண்டும்? எங்களுக்கு தெரிய வேண்டும் என்று என்ன அவசியம்? நாங்கள் படும் பாடே போதாதா?

இரைச்சல். தெருவில் ஓர் ஆள் சேகண்டியை அடித்துக் கொண்டு, செயிண்ட். ஜான்ஸ்-இல் அமைக்கப் பட்ட புதிய மீட்புப்பணி மையத்துக்காக, உணவுப் பொருள்களை விமானம் மூலம் கொண்டு வரும் அந்த நல்ல வெள்ளையர்களுக்காக எங்களைப் பிரார்த்தனை செய்யச் சொன்னான். எல்லா வெள்ளையர்களும் கொலைகாரர்கள் இல்லை, டாண் டாண், டாண், அவர்கள் எல்லோரும் நைஜீரியர்களுக்கு ஆயுதம் கொடுக்கவில்லை, டாண், டாண், டாண்.

மீட்புப் பணி மையத்தில், கூட்டத்துக்கிடையில் சவுக்குகளை வைத்து ஒழுங்கு செய்த படைவீரர்களிடமிருந்து தப்பி, முண்டி மோதி முன்னேறினேன். பொய் சொன்னேன், கொஞ்சினேன், கெஞ்சினேன். பிரிட்டானிய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசினால், என்னை எப்படிப் படித்தவள் என்று காட்டிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் மற்ற சாதாரண கிராமத்தார்கள் போலில்லாமல் என்னை வித்தியாசப் படுத்திக் காட்டிக் கொண்டேன்; உடனே என் கண்களில் நீர், கண்களைச் சிமிட்டினால் கண்ணீர் விழுந்து விடுமோ என்பது போல் கட்டியது. ஆனால், நான் வீட்டுக்குப் போகும் போது, கண்களைச் சிமிட்டாமல், பெரிய முட்டை போல் திறந்து வைத்து, கிடைத்த உணவை கைகளில் இறுகப் பிடித்துக் கொண்டேன். நான் உணவை வாங்கிய போது. உலர்ந்த முட்டைக்கரு. பால் பவுடர். கருவாட்டு மீன். சோளமாவுணவு.

குண்டு அதிர்ச்சியில் இருந்த வீரர்கள், மீட்புப் பணி மையத்தில், அழுக்கான சட்டைகளில், தெளிவில்லாமல் உளறிக் கொண்டு அலைய, குழந்தைகள் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள். வீரர்கள் என்னைத் தொடர்ந்து வந்து, முதலில் கெஞ்சினர், பின்னர், என்னிடம் இருந்த உணவைப் பிடுங்கப் பார்த்தனர். நான் அவர்களைத் தள்ளினேன், சபித்தேன், அவர்களைப் பார்த்து துப்பினேன். ஒரு முறை, அவர்களை அத்தனை வேகமாகத் தள்ளிய போது அவர்களில் ஒருவன் கீழே விழுந்தான், நான் அவன் எழுந்தானா என்று திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ந்நாம்டியைப் போன்று அவர்களும் ஒரு காலத்தில் கர்வமிக்க பியாஃபரா வீரர்களாக இருந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை.

மீட்புப் பணி மையத்திலிருந்து வந்த உணவால் ஓபிக்கு சீக்கு பிடித்ததோ, இல்லை நாங்கள் சாப்பிட்ட மற்ற ஏதாவதோ – நீலமாக இருந்த பூஞ்சையை எடுத்துச் சாப்பிட்ட ஏதாவதோ, இல்லை எறும்புகளைப் பிடித்து அகற்றிச் சாப்பிட்ட ஏதாவதோ. அவன் வாந்தி எடுத்தான், அவன் வயிறு காலியான பின்னும், ஒக்காளமிட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டான். அம்மா, அவனுக்காக ஒரு பழைய பக்கெட்டைக் கொண்டு வந்து, அவன் அதைப் பயன்படுத்த வசதியாக வைத்து, பின்னர் அதை வெளியே எடுத்துக் கொண்டு போனாள். ஓபி ‘நான் ஒரு மலப்பானை[xv] மனிதன்’ என்று தன்னையே கேலி செய்து கொண்டான். அவன் இன்னமும் பாடங்கள் சொல்லிக் கொடுத்தாலும், பியாஃபரா பற்றிக் குறைவாகவும் கடந்த கால நிகழ்வுகள் பற்றி நிறையவும் பேசினான் – ‘அம்மா எப்படி தன் முகத்துக்கு தேனும் பாலும் கொண்டு முகப்பூச்சு செய்து கொள்வாள் என்று உனக்கு நினைவு இருக்கிறதா?’ ‘நம் வீட்டுக் கொல்லையில் இருந்த சீத்தாப்பழ[xvi] மரத்தில் மஞ்சள் தேனீக்கள் அதன் மேல் வரிசையாய் இருக்குமே, உனக்கு நினைவு இருக்கிறதா?’ என்றெல்லாம் என்னைக் கேட்டான். அம்மா அல்பட்ராஸ் மருத்துவமனைக்குப் போய், அங்கிருந்த மருத்துவர் தாழ்வாரங்களில் அலைமோதிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்க்கும் முன் அப்படியாவது அம்மாவைப் பார்ப்பார் என்ற நம்பிக்கையில், அவளுக்கு ஈனுகுவில் தெரிந்த எல்லா பிரபல மருத்துவர்கள் பெயர்களையும் சொல்லிப் பார்த்தாள். அவள் தந்திரம் பலித்து, மருத்துவர் அம்மாவுக்கு பேதி மாத்திரை கொடுத்தார். அவரால் ஐந்து மாத்திரைகள்தான் கொடுக்க முடிந்ததால், அம்மாவிடம் ஒவ்வொரு மாத்திரையையும் இரண்டாக ஒடித்து, ஓபியின் பேதியை எவ்வளவு நேரம் கட்டுப்படுத்த முடியுமென்று பாருங்கள் என்று சொல்லி விட்டார். அம்மா அந்த “மருத்துவர்” மருத்துவக் கல்லூரியில் நாலாவது வருடம் கூடப் படித்தாரோ என்பது சந்தேகம் என்றாள்.ஏனென்றால், பியாஃபரா இரண்டு வருடங்களாக போரில் மூழ்கியிருக்க, மருத்துவ மாணவர்கள் கூட மருத்துவர்கள் போல நடிக்க வேண்டியிருந்தது. உண்மையான மருத்துவர்கள் மக்களை உயிரோடு வைத்திருக்க காலையும் கையையும் அறுக்க வேண்டியிருந்தது. அம்மா, அல்பட்ராஸ் மருத்துவமனையின் கூரையில் ஒரு பகுதி, ஒரு விண் தாக்குதலில் இடிந்து விட்டது என்றாள். அது எனக்கு வேடிக்கையாகவே இல்லை, ஆனால், ஓபி சிரிக்க, அம்மாவும் சேர்ந்து சிரிக்க, கடைசியில் நானும் அவர்களோடு சேர்ந்து சிரித்தேன்.

ஓபி இன்னமும் நோய்வாய்ப் பட்டு, படுக்கையில் இருந்த போது, இஹுஓமா எங்கள் அறைக்கு ஓடி வந்தாள். அவளுடைய மகள் ஏதோ நறுமணப் பொருளும் மூத்திரமும் கலந்த எதோ நாற்றமடிக்கும் கலவையை முகர்ந்தால் ஆஸ்த்மா குணமாகும் என்று முகர்ந்து பார்த்தவாறு வெளிமுற்றத்தில் கிடந்தாள். “போர் வீரர்கள் வருகிறார்கள்” என்றாள் இஹுஓமா. அவள் ஓர் எளிய மனுஷி, சந்தை வியாபாரி. பியாஃபரா நிகழும் முன் அம்மாவுடன் எதுவுமே சம்பந்தம் இருந்திருக்க இயலாத ஒரு பெண். ஆனால், அவளும் அம்மாவும் ஒருவருக்கொருவர் வாரந்தோறும் தலைபின்னிக் கொண்டார்கள்*. அவள் “சீக்கிரம்” என்றாள். “ஓபியை வெளியறைக்குக் கொண்டு வாங்க, அவன் கூரையில் ஒளிந்து கொள்ளட்டும்”. எனக்குப் புரிய ஒரு நிமிடம் பிடித்தாலும், அம்மா ஓபியை எழச் செய்து அவனை அறையிலிருந்து வெளியே அவசரமாக அழைத்துச் சென்று கொண்டிருந்தாள். பியாஃபிர வீரர்கள் இளைஞர்களை, அதுவும் சிறுவர்களை, போர்முனைக்குக் கொண்டு சென்றார்கள் என்று கேள்விப்பட்டிருந்தோம். அதுவும், எங்கள் தெருக்கோடியிலேயே ஒரு வெளி முற்றத்தில் ஒரு வாரம் முன் நடந்தது என்று. ஆனால், ஓபி அப்படி பனிரெண்டு வயதுடைய சிறுவனைக் கூட்டிச் செல்வார்களா என்று சந்தேகப்பட்டான். அப்படிக் கூட்டிச் செல்லப்பட்ட பையனின் அம்மா அபகலிகி(Abakaliki)யைச் சேர்ந்தவளாம், அங்கே குழந்தை இறந்தால், பெற்றவர்கள் அவர்களின் தலைமுடியை எடுத்து விடுவார்களாம், பெற்ற மகன் அப்படிக் கூட்டிச் செல்லப் பட்டதைப் பார்த்தவள் ஒரு சவரக்கத்தியை எடுத்து அவள் தலையை மொட்டை அடித்துக் கொண்டாளாம்.

கூரையில் இருந்த குண்டு விழுந்த பின் கூரையில் இருந்த மரப்பலகை விழுந்து வந்த ஓட்டைக்குள் ஒளிந்திருந்த ஓபியையும், இன்னும் இரண்டு சிறுவர்களையும் தேடி விரைவிலேயே படைவீரர்கள் வந்தார்கள். எலும்பும் தோலும் அயர்வான கண்களையும் உடைய நான்கு வீரர்கள். ந்நாம்டியை அவர்களுக்குத் தெரியுமா என்று நான் கேட்ட போது, அவர்கள் தெரிந்ததாகக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று நான் அறிந்திருந்தேன். வீரர்கள் கழிப்பறைக்குள் சென்று பார்த்தார்கள். அம்மாவிடம் வந்து அவள் யாரையும் ஒளித்து வைத்திருந்தால், அவள் நைஜீரியர்களை விட மோசமான வஞ்சகி ஆகி விடுவாள் என்றெல்லாம் சொன்னார்கள். அம்மா அவர்களைப் பார்த்து சிரித்து, அவளின் பழைய இனிய குரலில் அவர்களிடம் பேசினாள். அப்பாவின் நண்பர்களுக்கு மூன்று பந்திச் சாப்பாட்டு விருந்து வைத்து அவர்கள் கிளம்பும் முன் தண்ணீர் அருந்துகிறார்களா என்று கேட்கும் இனிய குரல். வீரர்கள் கிளம்பிய பின், ஓபி படையில் அவனும் சேர்ந்திருந்தால், தான் இன்னும் உடல்நலமாகி இருக்கக் கூடும் என்றான். பியாஃபராவுக்காகவும், அத்தோடு பதினைந்து வயதினர்கள் எல்லாம் பாரசீகப் போரில் சண்டை இட்டுக் கொண்டிருந்தார்களே அவர்களுக்காகவும் என்றான். அம்மா அறையை விட்டுப் போகும் முன், ஓபி பக்கம் போய் அவனை அறைந்தாள்; அவள் அறைந்த வேகம் அவன் கன்னத்தில் மெல்லிய வரிகளாய் இருந்ததைப் பார்த்தேன்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – கோழி சமையற் பானையைப் பார்த்துச் சினமடைந்தாலும் அது கத்தியை அசட்டை செய்கிறது.

விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளின் சத்தம் கேட்டபோது அம்மாவும் நானும் பதுங்கு குழிக்குப் பக்கத்தில் இருந்தோம். ‘செம டைமிங்’ என்று அம்மா கேலி செய்தாள், முயற்சி செய்தாலும் என்னால் சிரிக்க முடியவில்லை. என் உதடுகள் ரணமாய் இருந்தன; நாங்கள் மீட்புப் பணி மையத்துக்கு நடந்து சென்ற போது ஹார்மட்டான் காற்றில் உதடுகள் காய்ந்து ரத்தக் கோடுகளாகி இருந்தன; அத்தோடு, எங்கள் துரதிருஷ்டம் உணவு எதுவும் கிடைக்கவும் இல்லை.

பதுங்கு குழியில், மக்கள் “கடவுளே, ஏசப்பா, எல்லாம் வல்ல இறைவா, ஜேஹோவாஹ்” என்றெல்லாம் இரைந்தார்கள். என் அருகில் ஒரு பெண் குறுகி அமர்ந்திருந்தாள், அவள் குழந்தையை கைகளில் வைத்துக் கொண்டு. பதுங்கு குழி இருட்டாய் இருந்தாலும், படர்தாமரை நோயின் காய்ந்த வடுக்கள் குழந்தையின் மேல் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அம்மா சுற்றும் முற்றும் பார்த்தாள். “ஓபி எங்கே?” என்று என் கையை இறுகப் பிடித்தவாறே கேட்டாள். “அந்தக் கடங்காரனுக்கு என்ன ஆச்சு, துப்பாக்கிச் சத்தம் கேட்கலையா அவனுக்கு?” அம்மா ஓபியைக் கண்டுபிடிக்க வேண்டும், குண்டு எங்கோ தூரத்தில் இருக்கு என்றவாறே எழுந்தாள். ஆனால், உண்மையில் அது மிக அருகில், மிக சத்தமாய்க் கேட்டது. அம்மாவை அசையாமல் இறுகப் பிடித்துக் கொண்டேன்; ஆனால், அவ்வளவு தூரம் நடந்ததாலும் பசியாலும் பலவீனமாய் இருந்தேன். அம்மா என்னைத் தள்ளி விட்டு வெளியேறிச் சென்று விட்டாள்.

அடுத்து வந்த குண்டுச் சத்தம் என் காதுக்குள் எதுவோ கழன்று போனால் போலிருந்தது. நான் மட்டும் என் தலையை பக்கவாட்டில் சாய்த்தால், மெதுவும் கெட்டியானதுமாக சவ்வோ எதுவோ விழுந்து விடும் என்று தோன்றியது. மேலே ஏதேதோ உடைந்ததையும், மேலே விழுந்ததையும் கேட்டேன் – சிமென்ட் சுவர்களும் கண்ணாடிச் சாளரங்களும் மரங்களும். நான் கண்களை மூடி ந்நாம்டியின் குரலை, அவன் குரலை மட்டும், குண்டு வெடிப்பு நின்று நான் பதுங்குகுழியை விட்டு வெளி வரும் வரை நினைத்துப் பார்த்தேன். தெருவில் உடல்கள் சிதறிக் கிடந்தன, அதுவும் பதுங்கு குழி நுழைவுக்கு அருகேயே, சில உடல் பாகங்கள் துடிதுடித்தும், சுருண்டு புரண்டும். எங்கள் வேலையாள் ஈனுகுவில் கொன்ற கோழிகள் நினைவுக்கு வந்தன – கழுத்து வெட்டப்பட்ட பின்னும் அவை திரும்பத் திரும்ப சிறகடிப்பதுவும், இறுதியாக அமைதியாக விழுந்து கிடப்பதுவும். ஓபி அதை ‘தன்மான நடனம்’ என்று சொல்வான். நான் அறிந்தவர்களின் உடல்களைப் பார்த்துக் கதறினேன், அம்மாவும் ஒபியும் அங்கே இருக்கிறார்களா என்று அடையாளம் தேடிக் கொண்டே. ஆனால் அவர்கள் அங்கே இல்லை. அவர்கள் முற்றத்தில் இருந்தார்கள், அம்மா அடிபட்டவர்களைக் கழுவ உதவி செய்து கொண்டிருந்தாள், ஓபி தூசியில் விரலால் எழுதிக் கொண்டிருந்தான். அம்மா, ஓபி சிறிது நேரம் முன் காட்டிய அஜாக்கிரதைக்காக அவனைக் கோபிக்கவில்லை. நானும் அம்மா அப்படி வெளியே ஓடியதற்காக அம்மாவைத் திட்டவில்லை. நான் காய்ந்த குச்சிக் கிழங்கை நீரில் ஊற வைத்து இரவு உணவு செய்ய சமையலறைக்குள் போனேன்.

ஓபி அன்றிரவு இறந்தான். அல்லது அவன் காலையில் இறந்தான். எனக்குத் தெரியவில்லை. அப்பா காலையில் அவனைத் தட்டியதும் அவன் எழவில்லை. உடனே அம்மா அவன் மேல் விழுந்தாள், அப்போதும் அவன் நகரக் கூட இல்லை. நான் போய் அவனை உலுக்கினேன், உலுக்கினேன், உலுக்கினேன். அவன் உடல் சில்லிட்டிருந்தது.

“ந்வ்ஆ ம் அன்வ்உகோ” அப்பா சொன்னார், அப்படி பலக்கச் சொன்னால் தான் அவரே நம்புவார் போல. அம்மா தனது நகச் சீர்திருத்தும் பெட்டியை எடுத்து வந்து ஓபியின் நகங்களை வெட்டத் தொடங்கினாள். அப்பா “என்ன செய்யிறே நீ” என்றார். அவர் அழுது கொண்டிருந்தார். மௌனமும் கண்ணீருமான ஆணின் அழுகையல்ல அது. அவர் கதறினார், தேம்பினார். நான் அவரையே பார்த்தேன், அவர் என் கண் முன்னால் பெரிதாகி, அறையே ஆட்டம் காணத் தொடங்கியது. என் நெஞ்சின் மேல் ஏதோ பெரும் எரிபொருள்குடுவை[xvii] போல ஏதோ பளுவான ஒன்று இருந்தாற் போலிருந்தது. நான் தரையில் புரண்டு அந்த பளுவை எடுத்து விடப் பார்த்தேன். வெளியே யாரோ கத்தியது கேட்டது. உள்ளிருந்து தான் கேட்கிறதோ? அப்பாவா அது? அப்பாவா சொல்கிறார் – “ந்வ்ஆ ம் அன்வ்உகோ“” “ந்வ்ஆ ம் அன்வ்உகோ“”. ஓபி இறந்து விட்டான். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன், வெறி பிடித்தாற் போல, ஓபியை நினைவில் கொள்ள, அவனைச் சுற்றியும் இருந்த சிமெண்டு பொருள்களை நினைவில் கொள்ளைப் பார்த்தேன். என்னால் முடியவில்லை. அகடவிகடம் செய்யும் என் ஆசைத் தம்பி , ஆனால் என்னால் ஒன்றையும் நினைவில் கொள்ள முடியவில்லை. அவன் நேற்றிரவு என்ன சொன்னான் என்று கூட என்னால் நினைவு கொள்ள இயலவில்லை. ஓபி என்னோடு பலப் பல காலம் இருப்பான் என்றிருந்ததாலோ என்னவோ, நான் அவனைச் சரியாகக் கவனித்ததில்லை, உண்மையாகக் கவனித்தது இல்லை. அவன் அங்கே இருந்தான், எனவே அவன் எப்போதுமே இருப்பான் என்று நம்பி விட்டேன். ஓபியோடு இருந்தபோது அச்சம் – ந்நாம்டியுடன் இருக்கும்போது, எங்கே ஒரு நாள் அவன் இறந்து நான் துயரப்படுவேனோ என்ற அச்சம் – வராது. அத்தோடு, ஒபியின் மறைவை எப்படி துக்கம் கொண்டாடுவேன், ஓபியை துக்கிக்க முடியுமா என்ன? என் தலைமுடி அரித்தது, நான் அதைப் பிய்க்கத் தொடங்கினேன், என் தலையில் வெதுவெதுப்பாய் இரத்தம் வரும் வரை. அதன் பின் இன்னும் கொஞ்சத்தைப் பிய்த்தேன், இன்னமும் கொஞ்சம். என் தலைமுடி எங்கள் தரையில் விழுந்து கிடக்க, என் கைகளால் என்னையே இறுகக் கட்டிக்கொண்டு, அம்மா ஒபியின் விரல் நகங்களைச் ஒரே சீராகத் தேய்ப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒபியின் இறப்புக்குப் பின் வந்த நாள்களில் காய்ச்சல் வந்தாற் போல அதுவும் மலேரியா காய்ச்சல் வந்தாற் போல, உணர்ச்சியற்று வெகு விரைவில் மரத்துப் போன நிலைக்கு ஆளாகியிருந்தேன். ஓபியை கொல்லையிலேயே புதைத்தது கூட விரைவாகத் தான் நடந்தது, அப்பா தான் பல மணி நேரங்கள் செலவழித்து ஒரு சிலுவையை பழைய மரத் துண்டுகளைக் கொண்டு செய்திருந்தார். அண்டை வீட்டினரும், ஃபாதர் டேமியனும் அழுது கொண்டிருந்த குழந்தைகளும் கலைந்து போனவுடன், அம்மா அந்த சிலுவை அவலட்சணமாய் இருக்கிறது என்று அதை உதைத்து உடைத்து மரத்துண்டுகளைத் தூக்கிப் போட்டாள்.

அப்பா போர் ஆராய்ச்சி மையத்துக்குப் போவதை நிறுத்தியிருந்தார். அவரது நாட்டுப் பற்றைக் காட்டும் டையை, கழிவறையின் குழிக்குள் போட்டு விட்டார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் எங்கள் அறையின் முன் – அப்பா, அம்மா, நான்- வெளிமுற்றத்தைப் பார்த்து அமர்ந்திருந்தோம். ஒரு நாள் காலை, ஒரு பெண் தெருவில் ஓடி வந்து எங்கள் முற்றத்துக்கு வந்த போது நான் தலையெடுத்துக் கூட பார்க்கவில்லை, அவள் கூப்பாடு போடும் வரை. அவள் ஒரு பசும் கிளையை ஆட்டிக் கொண்டிருந்தாள். ஒளியும் ஈரமும் மிக்க பசுமை நிறைந்த கிளை. அவள் எங்கே இருந்து அதைக் கொண்டு வந்தாளோ? எங்களைச் சுற்றி இருந்த செடிகளும் மரங்களும் ஜனவரி மாத ஹார்மட்டான் வெயிலில் கருகிப் போய், தூசிக் காற்றில் மொட்டையாகி நின்றிருந்தன. மண் நோய்வாய்ப் பட்டாற் போலிருந்தது.

போரில் தோற்றோம் என்றார் அப்பா. அவர் சொல்லியிருக்க வேண்டியதே இல்லை, எங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. ஓபி இறந்த போதே தெரிந்திருந்தது. அண்டை வீட்டினர் எல்லாம் அவர்களின் குக்கிராமங்களுக்குச் செல்ல அவசரமாக மூட்டை கட்டிக் கொண்டிருந்தனர். ஐக்கியப் படையினர் வண்டி வண்டியாக சாட்டைகளோடு வருகிறார்கள் என்று கேள்விப் பட்டதால். நாங்கள் மூட்டை கட்ட எழுந்தோம். நாங்கள் வீட்டுச் சாமான்களை மூட்டை கட்டும் போது தான், எவ்வளவு குறைவான பொருள்கள் எங்களிடம் இருந்தன, எங்களிடம் குறைவாக இருக்கிறது என்பதைக் கூட நாங்கள் கண்டு கொள்ளவில்லை என்பதைக் கூட அப்போது தான், நான் கவனித்தேன்.

இக்போ இனத்தவர் சொல்வதுண்டு – மனிதன் விழும் போது, அவனது கடவுள் தான் அவனைத் தள்ளி விட்டிருக்கிறார்.

ந்நாம்டி எங்கள் திருமணத்தின் போது என் கையை இறுகப் பிடித்திருந்தான். எதையுமே அவன் அதிக முயற்சியோடு செய்ய வேண்டியிருந்தது, வெட்டுப்பட்ட அவனது இடது கைக்கு ஈடு கொடுப்பது போல, அவன் தன் அவமானத்தை மறைப்பது போல. அப்பா புகைப்படம் எடுத்தார், என்னை ‘இன்னும் பெரிசாச் சிரி’ என்றும் ந்நாம்டியை ‘கூன் போடாதே’ என்றும் சொல்லிக் கொண்டே. அப்பாவே கூன் போடத் தொடங்கி இருந்தார், போர் முடிந்த போதே அவர் கூன் போடத் தொடங்கி இருந்தார். அவரிடம் இருந்த எல்லா பியாஃபரா பணத்துக்கும் ஈடாக, வங்கி அப்பாவுக்கு ஐம்பது நைஜீரிய வெள்ளிகளைக் கொடுத்தது முதல் கூன் போடத் தொடங்கி இருந்தார். அவரது வீட்டை இழந்திருந்தார், பளிங்கு மாடிப்படி கொண்ட எங்கள் வீட்டை. அது கைவிடப்பட்ட வீடு எனவும், அங்கே இப்போது ஒரு அரசாங்க அலுவலர் வாழ்வதாகவும் சொல்லிவிட்டார்கள். அம்மா, அப்பாவின் உத்தரவையும் மீறி தன் மனங்கவர் வீட்டைப் பார்க்கப் போன போது அந்த அரசாங்க அலுவல் பெண்மணி ஒரு மூர்க்கமான நாயை அம்மாவின் மேல் ஏவி விடுவேன் என்று பயமுறுத்தினாள். அம்மாவோ அந்தப் பெண்ணிடம் தன் உயர்ரகப் பீங்கானும் கிராமபோன் கருவியும் கிடைத்தால் போதும், வேறு எதுவும் வேண்டாம் என்றிருக்கிறாள். அவள் பதிலுக்கு வேண்டுமென்றே தன் நாயைச் சீட்டியடித்துக் கூப்பிட்டாளாம்.

அம்மா “இரு இரு” என்று அப்பாவிடம் காத்திருக்கச் சொல்லி, என் (அலங்கார) தொப்பியைச் சரி செய்தாள். அவளே என் திருமண உடையைத் தைத்து, ஒரு பழைய தொப்பியில் ஜிகினா வைத்து அலங்கரித்துத் தைத்திருந்தாள். திருமண நிகழ்ச்சிக்குப் பின், ஒரு கஃபேயில் இனிப்புகள் சாப்பிடப் போனோம். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அப்பா என்னிடம் என் திருமண கேக்கைப் பற்றி அவர் செய்து வைத்திருந்த கற்பனை பற்றிச் சொன்னார்: அது ரோசா நிறத்தில் பல அடுக்குகளைக் கொண்டதாக, என் முகத்தையும் ந்நாம்டியின் முகத்தையும் மறைக்கும் அளவு உயரமானதாக இருக்கும், ஆனாலும் அந்த உயரமான கேக் வெட்டும் போது புகைப்படத்தில் மாப்பிள்ளைத் தோழனின் முகம் மட்டும்-ஓபியின் முகம் மட்டும்-வரும் என்று சொன்னார்.

எனக்கு அப்பாவின் மேல் பொறாமை எழுந்தது, எப்படி ஓபி பற்றி அவரால் அப்படி பேச முடிகிறது என்று. அந்த வருடம் ஒபிக்கு பதினேழு வயதாகியிருக்கும், அந்த வருடம் தான் நைஜீரியா வண்டியோட்டுவதை சாலையின் இடப் பக்கத்திலிருந்து வலப்பக்கம் மாற்றிய வருடம். நாங்கள் மீண்டும் நைஜீரியர்கள் ஆகியிருந்தோம்.

[i] டோகோன்யரோ-dogonyaro-வேப்ப மரத்துக்கு நைஜீரியப் பெயர்.

[ii] தாய்க்குப்பிறந்தவள்- ஆனால் தந்தை வேறுவேறு

[iii] க்மேலினா-gmelina (கிளி அலகு பூமரம்)

[iv] Enuku – ஏனுகு

[v] Pie – ரொட்டிக்குள் பழம் அல்லடு காய் நிரப்பி அடுமனையில் சுடப்பட்ட பணியாரம்

[vi] சீமைநூக்கு-mahagony

[vii] அநாரா-anara-நைஜீரியக் கத்தரி

[viii] ஸ்நிஃப்டர்-ப்ரான்டி / விஸ்கி போன்றன அருந்தும் மதுக் கோப்பை

[ix] ஹார்மட்டான் -ஆப்பிரிக்கப் பாலைநிலப் பருவக்காற்று

[x] நைஜீரிய மிளகு சூப் – பசுவின் வயிறுகள், மிளகு கொண்டு செய்யப்படும் ஒருசூப்

[xi] உக்பக ukpaka (எண்ணெய் மொச்சை)

[xii] குனு-kunu-கேழ்வரகு/சோளத்திலிருந்து செய்யப்படும் ஒரு பானம்

[xiii] கிறிஸ்டல்-உயர்தரக் கண்ணாடி

[xiv] புரதக் குறைவு- kwashiorkor

[xv] மலப் பானை-chamber பாட்-அரச/மேல் குலத்தாருக்கான மலப் பானை.

[xvi] sour sop -நைஜீரிய வகை சீத்தாப் பழம்

[xvii] எரிபொருள் குடுவை- jerry can

நன்றி - சொல்வனம்.