வியாழன், மார்ச் 24, 2011

தேவதச்சன் கவிதைகள்


devathatchanஉபயோகமில்லாத பொருட்கள் எதையாவது எப்போதாவது 
நீ கையால் தொடுகிறாயா 
உபயோகமற்ற பொருட்கள் ஒரு விலங்கைப் போல் 
மூச்சுவிட்டுக் கொண்டிருக்கின்றன. 
அகிலம் எல்லாம் அசைந்து கொண்டிருக்கும்போது 
அவைகள் அசைவற்று நிற்கின்றன.  
நாளைக்காலை, இந்தக் 
கனியின் தோல் 
குப்பைக் கூடையில் கிடக்கும் 
அப்போது அது 
காணும் கனவுகளிலிருந்து அதுவும் 
தப்பிக்க முடியாமல் போகும், 
மூலைக்கு மூலை தள்ளி விடப்பட்ட 
முதியவர்கள் போல. 
எனினும் நம் விரல்களுக்கு, ஏதோ 
வினோத சக்தி இருக்கிறது 
உபயோகமற்றபோதும், உடைவாளை சதா 
பற்றிக் கொண்டிருக்கிறது 
சென்று வாருங்கள், உபயோகமற்ற பொருட்களே 
நீங்கள் 
இன்னொரு ஆறைப்போல் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் 
எப்போது வேண்டுமானாலும் திரும்பி வாருங்கள் 
வந்து, 
மீண்டும் மீண்டும் 
அன்பின் தோல்வியைக் காணுங்கள்.

2. 
அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து 
விழுந்து கொண்டிருந்தனர். 
பாதித் தூரம் செல்கையில் 
மீனாய் மாறினர் 
மூச்சுத் திணறி துடித்தனர் 
தொடர்ந்து விழுகையில் 
பிறந்து இரண்டுநாள் ஆன 
குருவிக் குஞ்சாய் ஆயினர். 
அவர்களது 
பழுப்பு நிற உடல் நடுநடுங்கி 
குப்புற விழுகையில் 
தரையைத் தொட்டு 
கூழாங்கல்லாய் தெறித்தனர் 
பூமிக்குள் விழுந்து 
பூமிக்குள்ளிருந்து வெளியேறுகையில் 
ரோமங்கள் 
முளைத்த ரத்தம் ஆனார்கள் 
ரத்தம் 
எனச் சொட்டி,சொட்டு சொட்டாய் 
அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து 
விழத் தொடங்கினர் 
எல்லோரும் சுற்றியிருக்கும்போது, 
அவனும் அவளும் 
யாருமில்லாது 
அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து 
விழுந்துகொண்டிருக்கின்றனர்.

3. 
தப்பித்து 
ஓடிக்கொண்டிருக்கிறது, ஆறு 
பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து. 
அதன் கரையோர நாணலில் 
அமர்ந்திருக்கிறது 
வயதான வண்ணத்துப்பூச்சி ஒன்று. 
அது இன்னும் இறந்து போகவில்லை 
நமது நீண்ட திரைகளின் பின்னால் 
அலைந்து திரிந்து களைத்திருக்கிறது 
அதன் கண்கள் இன்னும் நம்மைப் 
பார்த்துக் கொண்டிருக்கின்றன 
பசியோடும் பசியோடும் 
யாருமற்ற வெறுமையோடும். 
அதைச்சுற்றி, கொண்டாடி கொண்டாடி 
பிடிக்கவரும் குழந்தைகளும் இல்லை. 
அதன் சிறகுகளில் ஒளிரும் 
மஞ்சள் வெளிச்சம் 
காற்றின் அலைக்கழிவை 
அமைதியாய் கடக்கிறது 
நீ 
திரும்பிப் போனால், இப்போதும் அது 
அங்கு 
அமர்ந்திருப்பதைக் 
காணலாம். உன்னால் 
திரும்பிச் செல்ல முடிந்தால்