புதன், ஏப்ரல் 20, 2011

இன்னுமொரு புத்தகம்


ஞானக்கூத்தன்


எனக்குத் தெரியாதா என்ன 
என் புத்தகத்தை உனக்குப் ganakoothan
பிடிக்காதென்று? 
புத்தகத்தின் அட்டைப் படத்தில் 
இருக்கும் வேழத்தைத்  
துரத்திவிட ஆட்களை அனுப்பினாய் 
அவர்கள் வேழத்தின் தந்தங்களைப் 
பறித்துக்கொண்டு வேழத்தை உயிருடன் 
விட்டுவிட்டார்கள். நிருபர்கள் 
ரத்தம் கோரும் வேழத்தின் வாயைப் 
படம்பிடித்துக் கொண்டுபோனார்கள். 
அட்டைப் படத்தில் ஓங்கி வளர்ந்த 
மரத்தில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்த 
பறவைகளைச் சுட்டுவிடும்படி நீதான் 
வேடர்களை அனுப்பினாய். 
அவர்கள் குறிதவறிச் சுட்டார்கள். அவர்கள் 
இறகுகளை உன்னிடம் காட்டிக் 
கூலி பெற்றுக்கொண்டார்கள் 
புத்தகத்தின் அட்சரங்களை ஓடும்படி செய்ய 
அவற்றின்மேல் நீதான் டீசல் ஊற்றினாய் 
எனது காயங்கள் ஆறிவருகின்றன. 
எனது புத்தகத்தின் அட்டையில் இப்போது 
கிம்புருஷன் ஒருவன் காட்சி அளிக்கிறான்