நவீன கவிதை தன்னைக் கடந்து செல்ல எத்தணிக்கும் தருணங்கள் தமிழிலும் நேர்ந்துவிட்டது....
கவிதைச் சம்பவங்களே கவிதையைத் தாண்டிய ஒரு நிலையில் அனுபவங்களைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் முயற்சியை மேற்கொள்கிறது.
ஒரு மாயமான புரிதலை கவிதை உருவாக்குகிறது என்ற நிலைபோய்,
மாயமான புரிதலே கவிதையாகவும் கவிதைச் சம்பவங்களாகவும் ஊடாடுவதினூடாக கவிதை என்பது இல்லை ஆனால் கவிதைக்கான வாசிப்பே உண்டு என்ற நிலையை உருவாக்கியிருப்பதுதான்...
இந்றைய நிலை. அதுதான் நவீன கவிதையைக் கடக்கும் முயற்சியின் இன்றைய செயற்பாடு.
நவீன கவிதை என்ற புரிதல்முறைகளை குழப்பும் பணியில் செயற்படும் இந்த முயற்சியில்,
ஒருவகைப் பங்களிப்பை வழங்க எத்தணிக்கிறது கடற்கரய் யின் கவிதைப் பிரதிச் செயற்பாடு..
-கண்ணாடிக் கிணறு - தொகுப்பை முன்வைத்து வாசிப்புப் பிரதிகள் அவசியம் என்றே கருதுகிறேன்.
தொகுதியிலிருந்து சில கவிதைகள்.
பழுக்காத இலை
காலம் மாறாமல்
தருநிழல் ஓரம் அமர்ந்து
நான்கு பேர் சதாப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
வழவழப்பான ஃபோர்னோ புத்தகம்,முதல் சுயமைதுனம்
தீட்டுத் துணி,பூப்பெய்திய ஜூலி அக்கா என,அவர்கள்
வார்த்தைப் பூதம் வளர்ந்து தரைத் தட்டி நிற்கிறது
அப்போது
பருவத்தின் முகவாசல் வழியே புகுந்து
புறவாசல் வழியே வெளியேறுகிறது, இளமான் ஒன்று
நால்வரில் ஒருவன் வெளிர் மஞ்சள்நிற
அவ்விளமானை பார்க்கிறான்
மேயாத மானை.
மேயாதமானை மாயமான் விரட்டுகிறது
முன்னவள் கண்ணில் விழுந்த மான்
பின்னவன் கண்ணில் காணாமல் மறைந்தது
இருஜோடி
இமையை திறந்து-
ஒரே நேரத்தில் நான்கு கண்களுக்குள்
உள்ளே இறங்குகிறான் ஒருவன்
அப்போது
மான் ஓட்டத்திற்கு தக்க
தலையில் நரை பரவ ஆரம்பிக்கிறது ஒருவனுக்கு
மீதம் மூவர் புள்ளிமானின் வேகத்தை பின்தொடர்கிறார்கள்
நண்பர்களுக்கும் மானுக்குமான இடைவெளி-அங்கே
ஒரு சிறுகல் தோட்டம்.அதற்குள் அகண்ட நந்தவனம்
மாயமானை மேயவிடுகிறேன்
காலம் மாறாது, நால்வர் அமரும் அம்மரக் கிளையில்
ஒரு பச்சை இலையும் பழுப்பதேயில்லை
கண்ணாடிக் கிணறு
கீழே விழுந்து,தரையில் உடையும் கண்ணாடிக் கண்கள்
கூடிக் கூடி மூன்றாம் கண் ஆகிறது
மூக்கின் வரம்பில் ஒரு கண்ணாடி.முகம் காட்ட
மறு கண்ணாடி.ஒரு கண்ணாடி,புகுந்து
இன்னொரு கண்ணாடிக்கு போகிறது.வெளிக்கண்ணாடி,
புகுந்து முதல் கண்ணாடிக்கு திரும்புகிறது.புகுந்து
புகுந்து போகிறேன்.அங்கே
சலூன்கடை பெரிய கண்ணாடி.எனக்கு அதில்
நான்கு உடல்கள்.முகத்தின் முன்னே இரு உடல்கள்
முதுகுவுக்கு பின்னே இரண்டு உடல்கள்.பிம்பங்கள்
மோதும் ஓர் இடத்தில் ஐந்து இருக்கைகள்.என் ஐந்து
இருக்கையிருந்து ஓர் உடலாக வெளியேறுகிறேன்.என் ஓர்
உடலிலிருந்து வெளியேறிய நான்கு உடல்கள்
ஒவ்வொன்றாக இடறி கிணற்றில் விழுகின்றன,ஆண்டாளின்
கண்ணாடிக் கிணற்றில்.கிணற்று அடியில்
சரலைக்கல்போல அலையுறுகிறது ஆண்டாளின் முகம்.அதன்
இயலை கல்சிற்பம் ஒன்று,நூற்றாண்டுக்கு வெளியே காவல் காக்கிறது.
கற்சிலை வெளியே,உள்ளே
என் அவமானங்கள்-
என்னை கேலி செய்கின்றன
வீடு திரும்புகிறேன்
உனக்கு கண்கள் முகத்தில் இல்லை.
அம்மா திட்டுகையில்,தினசரி எனக்கு
எப்போதும் புறமுதுகில் கண்கள்
பருவ மேடு
தீராதப் பருவ மேட்டில் அமர்ந்து
கதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
கூடவே அருகம்புல் ஒன்று கதைக்கேட்டு வளர்கிறது
அதன் வீம்பு மூவர் தலையில் கருமையாக படர்ந்து கொண்டிருக்கிறது,
ஒரு கதை தொடக்கத்திற்கும்,
முடிவுக்குமான தூரம்- மூன்றுபேரில் ஒருவன்
வளர்ந்து கதைக்குள்ளிருந்து வெளியேறினான்
மீதம் இருவரின் கையசைப்பில் மறுபடி வளர்கிறது புல்
காலமற்று கதையின் உள்ளே உட்கார்ந்து,
கதைக் கேட்டபடி இருக்கிறார், ஒரு ஊருல ஒரு ராஜா
கதைக்கு வெளியிலிருந்து அவருக்கு கதை சொன்னார்கள் சிறார்கள்
ஊரறிந்த ராஜவுக்கு, கதையின் உள்ளே ஒன்றும் தெரிவதில்லை.
மங்களாக மிதக்கும் வார்த்தைகளை அவர் பொறுக்கித்தின்பதோடு சரி
சூரியன் திரும்பாத பருவ இருட்டில்
சிறுவர்கள் பிடித்து வைத்த பொண்வண்டு வெளிச்சத்தில்
மிதக்கிறது, சலனமற்றக் காடு
காட்டின் பருவ முட்டைகளை புசித்தப் பிள்ளைகள்
கரையிலிருந்து போய் சேர்கிறார்கள்,மறுபடி கதைக்குள்