றியாஸ் குரானா
உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு எப்படி ஒழுங்கு செய்யப்பட்டது.அதன் திட்டமிடல்களில் ஒதுக்கிவைக்கப்பட்ட எழுத்தாளர்கள் யார்யார்.அந்த மாநாடு அகன்ற தமிழ்மொழிப்பரப்பை எந்தவகையில் தாக்கமுறச் செய்தது என்ற புலங்களிலிருந்து சிறு பேச்சையும் நான் முன்வைக்கவில்லை.ஏனெனில் அது தொடர்பாக எனக்கு தெரிந்திருக்கவில்லை.அது மட்டுமன்றி,அதை ஒருங்கிணைத்து நடத்தும் குழுவின் தேர்வுக்கான உரிமையின் மீது விட்டுவிடவே விரும்புகிறேன்.ஆனால்,அந்த மாநாடு கொண்டிருந்த, பல புத்திசீவிகளால் ஆராயப்பட்டு கண்டடைந்த பெரும் கருத்தாக்கமான 'தாயகம் கடந்த தமிழிலக்கியம்' என்ற சுலோகம் எனக்கு சற்று உறுத்தலாகவும்,சலிப்பு நிறைந்ததாகவுமே தெரிந்தது.அந்தக் கருத்தாக்கத்தின் உள் அர்த்தமாக செயற்பட்ட அல்லது செயற்படும்படியாக வடிவமைக்கப்பட்ட அழுத்தம் இன்றைய நிலையில் காலாவதியாகிவிட்டதாகவே கருதுகிறேன்.
தமிழ் இலக்கியத்தின் அதிகார நிலையமாகவும்,மையமாகவும் இந்தியாவை முன்னிறுத்திய ஒரு கதையாடலை முதன்மைபடபடுத்துவதை தனது பணியாக அந்தக் கருத்தாக்கம் பேசமுற்படுவதை அவதானிக்கலாம்.தமிழின் அறிவு,நினைவு,இலக்கியம் என அனைத்திற்குமான தாயகமாக இந்தியாவை அர்தப்படுத்தும் மிக மோசமான அதிகாரத் தன்மையை அந்தக் கருத்தாக்கம் தனது உள் மடிப்புகளில் ஆழமாகக்கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு வெளியில் உருவாகும் இலக்கியம் அனைத்தும், தாயகத்திற்கான உழைப்புக்களாக அணுகப்படுவதற்கு ஆதாரமாகவும்,தாயகத்திலிருந்தே பிரித்தெடுக்கப்பட்ட அல்லது வெளியில் பிரிந்து சென்ற பகுதியாகவும் கருத இடமளிப்பதை அவதானிக்கலாம். இதனூடாக பல நூற்றாண்டுகளாகவும்,பல தலைமுறைகளாகவும்,பல ஈண்டுகளாகவும் இந்தியாவிற்கு வெளியில் வாழ்ந்து,அங்கு சமூகமாகவும்,பிற நிலப்பரப்பின் குடிகளாகவும்,வௌ;வேறு பிரதோசங்களின் மக்களாகவும் தம்மைக் கருதி அதனோடு பொருத்தி வாழ்ந்துவருகின்ற கலாச்சாரத் தழிழ் நிலவியல்,அறிவியல்,வாழ்வியல்,அரசியல் மற்றும் இலக்கியத் தன்மைகளையும் அதன் தனித்த ஆதார இருப்புக்களையும் கவனயீனமாக நிராகரிக்கும் உள்ளீடுகளை இந்தக் கருத்தாக்கம் வெளிப்படையாகவே அறிவிப்பதை அவதானிக்கலாம்.
இந்தக் கருத்தாக்கத்தின் மிக விபரீதமான உள்ளர்த்தம் என்னவென்றால், இந்தியாவிற்கு வெளியில் வாழுகின்ற தமிழைப் பேசுகின்ற சமூகங்களுக்கு தாயகம் இந்தியாதான்.அங்குதான் அவர்கள் மீளப்போக வேண்டும்.ஏனைய நாடுகளில் தமிழைப் பேசுகின்ற சமூகங்கள் வந்தேறு குடிகள்தான் உறுதிப்படுத்தி சிறுபிள்ளைத்தனமாக அறிவிப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இந்தியாதான் உங்கள் தாயகம்.பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் நீங்கள். உங்களுக்கென்று எந்த அரசியல் முக்கியத்துவமும் இங்கில்லை. பஞ்சம் பிழைக்க வந்தவர்களை சொந்தம் கொண்டாட விடமாட்டோம் என்று இலங்கையில் மாறிமாறி உருவாகும் அரசுகள் சொல்லும் கதைகளை ஏற்றுக்கொள்வதாக இந்த மாநாட்டின் கருத்தாக்கம் ஆமோதித்து நிற்கிறது.மலேசியத் தமிழர்களுக்கும் இப்போது இது நடக்கிறது. உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு என்று தேத்தண்ணி உசாரில் ஒன்றுகூடி கும்மாளம் அடித்துவிட்டுப் போவது உங்கள் உரிமைதான்.ஆனால் அதுவே, இந்தியாவிற்கு வெளியிலுள்ள ஒட்டுமொத்த தமிழி சமூகங்களின் வாழ்வு மற்றும் அரசியல் உண்மைகளின் மீதும்,வாழ்வியலுக்கான அபிலாசைகளின் மீதும் மண்ணை வாரிப் போடுவதாக அமைந்துவிடக் கூடாது.
தமிழவன் - எல்லாம் முடிந்த பிறகு,தாயகங்கள் கடந்த தமிழ் இலக்கியம் என்று அந்தக் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று தனியாக இருந்து இப்போது யோசித்தக்கொண்டிருக்கிறார்.என்ன கேவலமானது இது. புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் மாநாடு என்பதுபோல ஒரு உருவாக்கத்தினை உள் மனதில்கொண்டு கண்டடையப்பட்ட கருத்தாக்கமாக நமக்கு புலப்பட்டு நின்றாலும், அதன் ஆபத்துக்கள் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்பதே இந்தக் குறிப்பின் நோக்கமாகும்.
புலம் பெயர்தல் என்ற அடையாளப்படுத்துததலில் பெரும் சிக்கல்கள் உண்டு.விக்கிரமாதித்தன், கோணங்கி போன்றவர்கள் நாட்டுக்குள்ளே தொடர்ச்சியாக புலம்பெயரபவர்கள், அதுபோல ஈழத்தில் முஸ்லிம்கள் நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்கள்.இல்லை பலவந்தமாக புலம் பெயரவைக்கப்பட்டவர்கள்.நாடோடிகள் என பல காரணங்களினால் இந்தப் புலம் பெயர்வு உருவாகிறது. ஆக புலம் பெயர்வு என்பதை அதன் நுண்ணிய எல்லைவரை விரிவுபடுத்தி வாசிக்கப்பட வேண்டியதன் தேவையும் முக்கியத்துவமும் இன்று அவசியமானது.
இந்த மாநாட்டில் ஈழத்திலிருந்து புலம் பெயரந்து சென்ற சேரன், தமிழவன் போன்ற புத்திசீவகளும் பங்களிப்புச் செய்திருந்த போதும், கவனிப்பற்ற வகையில் இந்தியாவிற்கு வெளியிலுள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் பறந்தள்ளப்படும் ஒரு கருத்தாக்கத்தின் கீழ் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடந்து முடிந்திருப்பதை கண்டிக்க வேண்டியிருக்கிறது.முட்டாள்தனமாக அதிகம் சிந்திப்பவர்கள் புத்திஜீவிகளே என்று இந்த மாநாடும் நிரூபித்திருக்கிறது.
நான் தெளிவாக முன்வைக்க விரும்பவது இதுதான். எங்கள் தாயகம் இந்தியா அல்ல. இதைச் சொல்லும்போதே உடனடியாக, நாங்கள் இலக்கியத் தாயகம்தான் இந்திய என முன்வைத்தோம் என குறுக்கீடு செய்ய முற்படலாம் என்பதனால், அதையும் சேர்த்தே சொல்கிறேன். இலக்கியத் தாயகமும் இந்தியா அல்ல. கடந்த 25 வருடங்களில் தமிழ் இலக்கியம் என்ற அகலப் பரப்பிற்கு அதிக உள்ளடக்கங்களை வழங்கியது ஈழத் தமிழ் இலக்கியம்தான். மிகப் புதிய உள்ளீடுகளையும், இலக்கியப் போக்குகளையும் தமிழ்ப் பரப்பில் ஈழத்து தமிழ் இலக்கியம் உருவாக்கியிருக்கிறது.பெண்ணியம் என பின்னாட்களில் பேசப்பட்ட பெண்களின் தனியான இலக்கிய உருவாக்கத்தில் அரசியல் மற்றும் சமூக அரசியல் சார்ந்த கதையாடல்களை வெளிப்படுத்தியது. பல வகைமைகளைக் கொண்ட போர் இலக்கியங்களை உருவாக்கியது.புலம்பெயர்வினூடாக கலப்பின உளவியலையும், கலப்பு நகரங்களின் நெருக்கடிகளையும், புதிய நிலவியலையும் அதனோடுகூடிய இலக்கியத்திற்கு ஒரு அரசில் முகத்தையும் வழங்கியிருக்கிறது.தலித் இலக்கியத்திற்கு ஆதாரமான அடித்தளம் என ஈழத் தமிழ் இலக்கியத்தின் பங்களிப்புக்கள் மிக முக்கியமானவை.ஆனால், இவைகள் எவையும் விரிவான கவனத்திற்கு உட்படுத்தப்படவேயில்லை. கவனத்திற்கு உட்படுத்தப்படாமல் பொனாலும் பரவாயில்லை. ஜெயமோகன் போன்றவர்களின் ஈழத்து இலக்கியம் தொடர்பான வாந்தி எடுப்புக்கள் சகிக்க முடியாமலே இருக்கிறது. மறுபுறத்தில் இபப்படியான மாநாடுகளின் கவனமின்மையான செயற்பாடுகள் என இந்தியாவிற்கு வெளியில் உற்பத்திக்கப்படும் இலக்கியமும் அதன் உழைப்புக்களும் அவை கரிசனம் கொள்கின்ற அரசியல் மற்றும் அழகியல் முக்கியத்துவங்களை மறுக்கும்படியான செயற்பாடுகளை ஏற்க முடியாதள்ளது.அது எதிர்வினக்குட் படுத்த வேண்டியதே.
இந்தியா தமிழ் இலக்கியத்தின் தாயகமல்ல. அதுவும் தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதி மாத்திரமே. தமிழ்pலக்கியம் எனத்தொடங்கும் சங்ககாலத்தில்கூட ஈழத்ப்பூதந்தேவனார் என்ற ஈழத்தவரின் பங்களிப்பு உண்டு.இப்படி எத்தனையோ விசயங்களை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.
தமிழ் இலக்கியத்தின் அதிகார மையமாக இந்தியாவை ஏற்கமுடியாது.அப்படி ஏற்பது நியாயமுமல்ல. தங்களுக்குரிய இடங்களில் கள்ளவழிகளில் அல்லது திருட்டுத்தனமாக நுழைந்தவைகளாக இந்தியாவிற்கு வெளியிலுள்ள தமிழ் இலக்கியங்கள் அணுகப்படுவதை நிராகரிப்பதே மிகச்சரியான செயற்பாடாகும். தமிழ் இலக்கியம் என்பது ஒரு கலப்பினம். ராய் இசை புரிந்து கொள்ளப்படுவதைப்போல் அர்த்தப்படுத்தவே விரும்புகிறோம்.சிங்கப்பூர்,மலேசியா,ஈழம்,இந்தியா, புலம்பெயர் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் தமிழ் இலக்கியத்தின் தனித்தனித் துண்டங்கள்தான்.தனித்தனிப் பிரிவுகள்தான். அவை தனியான அரசியல், சமூக, கலாச்சார, உளவியல் விளைவுகளுக்குரியது.இதில் ஏதொன்றும் தமிழ் இலக்கியத்தின் அதிகார மையமல்ல.தாயகமுமல்ல. பல வகை அரசியல் விளைவுகளுக்குரிய, பல ஒன்றோடொன்று பொருந்திப்போகாத உள்ளடக்கங்களைக் கொண்ட இந்தப் பிரிவுகளிலிருந்து தமிழ் இலக்கியம் என்ற பேச்சு மீள்கட்டமைக்கப்பட வேண்டும். இந்தியாவிற்கு வெளியே உள்ள தமிழ் இலக்கியங்களும் சம அந்தஸ்தோடு அணுகப்பட வேண்டும்.இந்த வித்தியாசங்கள் அனைத்துப்பிரிவுகளின் புரிதல் நிலைகளுக்குள்ளும் கொண்டாடப்பட வேண்டும்.இந்த இலக்கிய மற்றமைகளுக்கான உரிய கவனஈர்ப்பு சரிவர செய்யப்படவேண்டும். இந்தியத் தமிழ் இலக்கியங்கள் என்பதைப்போல, அதற்கு வெளியிலுள்ள தமிழ் இலக்கிங்கள் என்பதும் ஒரு சமூக உண்மை.குறிப்பான இலக்கிய அணுகலுக்குரியவை. இந்திய தமிழ் இலக்கியங்களின் நியாயங்களை, தன்மைகளை, அழகியலை, அதற்கு வெளியேயுள்ள பிற தமிழ் இலக்கியங்கள் பாவனை செய்யவேண்டும் என்றோ பின்பற்ற வேண்டும் என்றோ எதிர்பார்க்க முடியாது. அந்த அந்த இலக்கியங்கள் அதற்குத்தேவையான போக்குகளையும் தனித்தன்மைகளையும், அழகியலையும் உருவாக்கியே தீரும். அவைகளை இந்திய தமிழ் இலக்கிய அணுகுமுறையை முன்னிறுத்தி கேலிபண்ணமுடியாது. அங்கிருக்கின்ற இலக்கிய தன்மைகள் பிற தமிழ் இலக்கிய உற்பதிகளுக்கு அவசியமற்றவைகளாகக்கூட அமைந்துவிடலாம். ஒவ்வொரு இலக்கியங்களும் தமக்குரிய அழகியலையும்,மொழியியலையும்,பிரதிநிகழ்வுகளையும்,பிரதியாக்க உத்திகளையும் தாமே தமது தேவைகருதியே உருவாக்குகின்றன. ஜெயமோகனைப்போல தென்னிந்தியாவிற்குள் இருந்துகொண்டு அங்குள்ள தமிழ் இலக்கியங்களில் ஏதோவொரு சிறுபகுதியின் பண்புகளையும், தன்மைகளையும் அளவுகோலாக வைத்துக்கொண்டு ஈழத்து இலக்கியத்திற்கான சட்டாம்பியாக செயற்படக்கூடாது. இந்தத் தொற்று நோய் இனியும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் இலக்கியம் என்ற விளிப்பிற்குள் மற்றமைகளாக பிற தமிழ் இலக்கியங்களும் இருப்பதாகவே நம்பவைக்க அதிகாரம் முயற்சிக்கும். அதிகாரத்தின் இந்தக் கண்டுபிடிப்பே 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற கவர்ச்சிகரமான கோட்பாடாகும். இது மற்றமைகளை கீழ்நிலைப்படுத்தி தனக்குள் உட்செரித்துக்கொள்ளவும் அதனடியாக ஓரிடம் வழங்கவும் முயற்ச்சிக்கிறது. இந்த வேற்றுமைக்குள் ஒற்றுமை என்பது பல வித்தியாசங்களை கவனத்தில் கொள்கிறதே என ஆச்சரியத்தோடு ஏற்றுக்கொள்வதே நமது அடிமைத்தனத்தின் முக்கிய பங்களிப்பாகும். நாம் மன்வைப்பது வேற்றுமைகள் வேற்றுமைகளாக இருப்பதையே.இதுவே மற்றமைகளை அங்கிகரிப்பதற்கான வழி.தாயகத்தின் உப பிரிவுகளாகவோ அல்லது உப பகுதிகளாகவோ இந்தியாவிற்கு வெளியில் இருக்கின்ற தமிழ் இலக்கியங்கள் கணிக்கப்படுவதை ஏற்க்க முடியாது.தனித்தனிப் பகுதிகள்,தனித்தனிப் பிரிவுகள். இந்த தனித்தனிப் பிரிவுகளிலிருந்து தமிழ் இலக்கியம் என்ற பேச்சு மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே இந்தக் குறிப்பின் உட்சரடு.
தமிழின் அகன்ற பரப்பிற்குள் புளக்கத்திலுள்ள இலக்கியங்களுக்கிடையிலான உரையாடலே இன்று சாத்தியமானது.அது முக்கியமானதும் கூட.அதனூடாக தமிழ் இலக்கியம் என்பதற்குப் பதிலாக தமிழில் இலக்கியங்கள் என்ற ஏற்ப்பு மிக முக்கியமானது.