புதன், மார்ச் 14, 2012

காலச்சுவடு கண்ணன் கலந்து கொள்வது சரிதானா...?

றியாஸ் குரானா

விதுசன் என்பவரிடமிருந்து ஒரு இமெயில் வந்திருந்தது. அவர் எனது நீண்ட நாள் நண்பர். அவருக்கு ஒற்றைச் சொல்லில்தான் எனது பதிலை எழுதியனுப்பியிருந்தேன். அதன் பின் மூன்று கேள்விகளைக் கொண்ட ஒரு மெயில், எனது பதில்போன வேகத்திலே வந்திருந்தது. மெல்லிய கோபமும், சலிப்பும் என் மீது அவருக்கு உருவாகியிருப்பதை உணர்ந்தேன்.
மாதமொருமுறை நண்பர் பௌசர் அவர்களால் நடாத்தப்படுகின்ற உரையாடல் நிகழ்வில், காலச்சுவடு கண்ணன் கலந்து கொள்வது தொடர்பிலான நிலைப்பாடு பற்றியது அது.

அவை இதுதான் -

விதுசன் : காலச்சுவடு கண்ணன் அவர்களை உரையாடலுக்கு அழைத்ததை நீங்கள் ஆதரிக்கிறீர்களா..?

நான் : ஆம்.

விதுசன் : சிறுகதையாடல் சமூகங்களின் மீதும், அவர்களின் கருத்து நிலை மற்றும் செயற்பாடுகளின் மீதும் ஆர்வமும் அக்கரையும் அற்ற பின்புலத்திலிருந்து செயற்படுவதாக தனது தோற்றத்தை காலச்சுவடு கொண்டிருக்கிறதல்லவா.?

நான் : ஆம்.

விதுசன் : நீண்டகாலமாக சிறு சமூகங்களின் பக்கம் நின்று தீவிரமாகச் செயற்படுபவரல்லவா அ.மார்க்ஸ்..?

நான் : ஆம்.

விதுசன் : காலச்சுவட்டின் மீது அவதூறுகளை வீசுகிறார்கள் என ராஜன்குறை சொல்லுவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுகிறீர்களா..?

நான் : இல்லை.

விதுசன் : நண்பர் றியாஸ் நீங்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறீர்கள். நாம் நீண்ட காலத்திற்குப் பின் பேசிக்கொள்ள முடிந்ததால் உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் மிக மோசமாக குழம்பியிருக்கிறீர்கள். பெற்றிக்கும் பாடி, கரண்டுக்கும் பாடுகிறீர்கள். கடந்த காலங்களில் சிறு சமூகங்களின் மீது அக்கரை சிறிதுமில்லாமல், இயங்கிய காலச்சுவடு இதழின் ஆசிரியர் கண்ணன் அவர்களை இப்போது ஆதரிக்கிறீர்கள். உங்களுக்கு என்ன நடந்தது. இத்தோடு இன்னும் சில தனிப்பட்ட வார்த்தைகளோடு முடிவடைந்தது அந்த மெயில்.

கடும் கோபத்தோடு வாசற் கதவைச் சாத்திவிட்டுப்போன அந்த நண்பனை நினைக்கிறேன். எங்களுக்கிடையிலிருந்த உறவு, அதனூடான உரையாடல்கள் என நினைவிலிருந்த பல சம்பவங்கள் வந்து போயின.
மிகவும் அன்பிற்குரிய தோழர் விதுசன் அவர்களுக்கு. நீண்ட நாட்களின் பின் சந்தித்ததில் மிக்க மகிழ்வு. உங்களுக்கு அதுவே துயரமாக இருக்கலாம் என நினைக்கிறென். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாலமாக காணாமல் போயிருந்தீர்கள். திடீரென தொடர்புகொண்டீர்கள். உங்களுக்கிருந்த பதற்றத்தில், எனது குடும்பம் மற்றும் நமது நண்பர்கள் போன்றவர்களை விசாரிப்பதற்குக்கூட மறந்துவிட்டீர்கள். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? உங்கள் நலத்திற்காக அடிக்கடி நீங்கள் சொல்லும் கடவுளிடம் நான் பரிந்துரைக்கலாம் என மனம் அவாவுகிறது. உங்கள் கடவுள் எனது பரிந்துரையை ஏற்பாரோ என தெரியவில்லை. தற்செயல்போல,திட்டமிட்டு நீங்கள் சந்திக்கும் அந்த வெள்ளைக்காரப் பெண் என்னவானாள்..? அறிய ஆவலாக உள்ளது.

நீங்கள் கண்டடைந்ததுபோல, நான் குழம்பியே இருக்கிறென். அது மிகப் பிடித்தும் இருக்கிறது. அது மட்டுமன்றி, இன்றைய எனது தேர்வும் இதுவே. 'நாங்கள் சரியாகச் செயற்படுகிறோம்' அல்லது 'அவர்கள் சரியாகச் செயற்படவில்லை' எனச் சொல்பவர்களும், அதையே தொடர்ந்து அறிவிப்பவர்களும் அது வன்முறையின் அடியாழத்திலிருந்து வருவதாக நம்ப மறுத்துவிடுகிறார்கள்.எந்தக் கருத்து நிலைகளும், செயற்பாடுகளும் தூயவடிவில் பாதுகாக்க முடியாதவை. எதிர்பாராத புலத்திலிருந்து தாக்கமுறச் செய்யும்  நிலையிலேயே சூழல் எப்போதுமிருக்கிறது. எதற்கும் தனித்த அடையாளம் சாத்தியமே இல்லை. பல வகை அடையாளங்கள் கலந்திருக்கும் சாத்தியத்துடனே சூழல் மாத்திரமன்றி சுயமும் இருக்கிறது. இருக்கிறது என்பதற்குள் கட்டமைக்கப்படுகிறது. தேர்வு செய்யப்படுகிறது. திணிக்கப்படுகிறது என்பவைகளும் அடங்கும். வன்முறைக்கு எதிராகச் செயற்படுபவர்கள்கூட பல தருணங்களில் வன்முறையாளர்களாகவே இருக்கின்றனர். இதை நீங்கள் 'அனைவரும் குற்றவாளிகள்' என நான் கூறுவதாக பொருளாக்கத் தேவையில்லை.

ஒரு கருத்துநிலை சார்ந்தவராக ஒருவரையோ ஒரு குழுவையோ கட்டமைக்கும்போதும், அதற்கிசைவான தகவல்களைத் தொகுத்து தொடர்புபடுத்தும் போதும் உருவாகும் குறித்தவொரு அடையாளம், அதன் எக்காலத்திற்குமான அடையாளமாக அனுகப்படக் கூடாது. அல்லது அவை அனுகுவதற்குப் போதுமான வலிமை கொண்டவையல்ல.அடையாளமொன்றை நிரந்தரத் தன்மையொடு ஒன்றின் மீது சுமத்துவது, அதற்கு எதிர் நிலையில் நிரந்தர அடையாளமொன்றை கட்டமைப்பதுமாகும். இப்படியான அனுகு முறைகள் எதிர்காலத்தில் நிகழப்போகும் செயல்பாடுகளுக்கு கடந்த காலத்தின் அர்த்தங்களையே மாற்றமின்றி திணிப்பதாக மாறிவிடுகிறது. இது மாற்றங்களை மறுக்கிறது. பேச்சுக்கான சாத்தியத்தை தடுத்து, நிரந்தர எதிரியை முன்வைக்கிறது. இதுவே வன்முறையின் மிக மோசமான செயற்பாடு எனக் கருதுகிறேன்.
எதிர்க்க வேண்டியவை, ஆதரிக்க வேண்டியவை, பரிசீலிக்க வேண்டியவை என்பது எல்லாக் கருத்து நிலைகளினுள்ளும் எல்லா மனிதர்களினுள்ளும் இருக்கின்றது. அப்படியான தருணங்களை ஒவ்வொருவரும் உணரவும் கூடும். ஆக, நிரந்தரமான அடையாளத்தைச் சுமத்தி ஒரு எதிரியை கட்டமைப்பதிலிருந்து நான் தூர நிற்கிறேன். அதுவே, நான் குழம்பியிருக்கிறேன் என நீங்கள் கண்டுபிடிப்பதற்கு வசதியாக இருந்திருக்கும் என்ற கருதுகிறேன்.

தெளிவாக இருப்பதென்பது வன்முறையின் மிக கவர்ச்சியான அறிவிப்புத்தான். உங்களைப்போல், மிகத் தீர்மானகரமாக, தெளிவான அளவுகோல்களாலும் கருத்து நிலைகளாலும் நான் தரப்படுத்தப்படவில்லை. அப்படியான நேர்த்தியான அளவுகோல்களின் உதவியோடு எதையும் அனுகுவதற்கு ஆர்வமற்ற நிலையில் இன்று இருக்கிறென். முற்றிலும் குழப்பகரமான அடிப்படையிலிருந்தே அனுக விரும்பகிறேன். அதற்கான காரணமாக, அதிகாரம் மற்றும் வன்முறைக்கு எதிராக அவையே பாவிக்கப்படுவதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். அது மட்டுமன்றி அறிந்தும் அறியாத நிலையிலும் என்னிடமிருந்தும் வன்முறை மிக மோசமாக வெளிப்படுவதையும் காண்கிறேன். சமூகத்தினூடாகவும், புரிதலினூடாகவும் என்னிடமிருக்கின்ற இந்த வன்முறையும், அதிகாரமும் பல சந்தர்ப்பங்களில் ஓங்கிவிடுவதையும் நான் உணர்கிறேன்.ஆகவே, வன்முறைக் கெதிராக செயற்படுவதில் எனக்கு தயக்கங்கள் இருக்கின்றன. அதிகாரப் படிநிலைகளை மூர்க்கமாக எதிர்ப்பதில் தாழ்வுச் சிக்கல்கள் இருக்கின்றன. அவைகளை என்னிடமிருந்து நீக்கிவிடக்கூடியதாக இருக்குமா என்றும் எனக்குத் தோண்றவில்லை. மிக எச்சரிக்கையொடுதான் வன்முறைக் கெதிராக பேசமடியுமென்று தோண்றுகிறது.

சரியாகச் செயல்படுகிறேன் என்று தீர்க்கமாக அறிவிக்கவும், மோசமானது என்றவகையில் நிரந்தரத் தன்மையுள்ள ஒரு எதிரியை கட்டமைத்து செயல்படவும் என்னால் முடியவில்லை. உரையாடல்களின் மூலம்தான் எதிர் நிலைகளும், வன்முறை பற்றிய பரிதல்களும் பரிசீலிக்கப்பட வேண்டியவை என கருதுகிறேன். ஆகவே உரையாடல்களுக்கான சந்தர்ப்பங்களை, (எந்தக் கருத்துநிலை கொண்டவரெனினும் ) தடுப்பதற்கான கோஷங்களின் பின்னும் ஆரவாரங்களின் பின்னும் முகம்காட்ட ஆர்வமற்றிருக்கிறென். ஆகையினால், 'நாங்கள் மிகச் சரியாகச் செயல்படுகிறோம்' எனச் சொல்பவர்களைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. சகல தருணங்களிலும் வன்முறை நீக்கப்பட்ட நிலையிலேயெ ஒரு அடையாளம் பாதுகாப்பாக எங்களிடமிருக்கிறது என்பதற்கு நிகரான கருத்துக்களையும், செயல்பாடுகளையும் முன்வைப்பவர்கள் - என்னைப் பொறுத்தவரையில் அதிசயமானவர்கள் என்றே கருதுகிறென்.

குறித்த சூழலுக்காக, குறித்த செயல்பாடுகளுக்காக, குறித்த அரசியல் நிலவரங்களுக்காக பல் தரப்பட்ட கருத்து நிலைசார்ந்தவர்கள் இணைந்து செயல்படுவதும், உரையாடுவதும், (எதிர் நிலையில் நின்றும்) பணியாற்றுவது நடக்க வேண்டிய ஒன்று. அதைவிட்டு விட்டு உரையாடலிருந்து தவிர்த்து விடுவதற்காக அல்லது குறித்த ஒருவரின் உரையாடலை தடுப்பதினூடாக எதை சாதித்துவிட முடியுமென்று தோணவில்லை. எதிர்க் கருத்து நிலைகள் உரையாடலாக மாறும்போது, அதைப் பரிசீலிப்பதற்கான சாத்தியத்தையெ நான் காண்கிறென். உரையாடலுக்கான சந்தர்ப்பத்தை மறுப்பது வன்முறை சார்ந்த அனுகுமுறை. உரையாடலுக்கான வாய்ப்பு தேவையா இல்லையா என்பது அரசியல் சார்ந்த கேள்வி. அந்த வாய்ப்பை மறுப்பது ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஒரு ஒரு முடிவு. அரசியல் சார்ந்த கேள்விகள் எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கக்கூடியது. தேர்வு செய்யப்பட்ட முடிவென்பது அழித்துவிடும் எண்ணம் கொண்டது.

மனிதர்களைப் பற்றி அக்கரை கொள்கிற யாரும், மனிதர்களின் அத்தனை கோணங்களையும், கருத்துக்களையும் பார்த்துத்தான் ஆகவேண்டும். சந்தித்துத்தான் ஆகவேண்டும். மீண்டும் மீண்டும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டேயாக வேண்டும். மீண்டும் மீண்டும் உரையாடப்பட்டேயாக வேண்டும். எண்ணற்ற திசைகளிலிருந்து உரையாடலுக்கான சந்தர்ப்பங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதைத் தடுப்பதினூடாக, எதையும் சாதித்துவிடலாம் என முன்வைப்பது, சரித்திரத்தின் மீதும், சிந்தனையின் மீதும் நிகழ்த்தப்படுகின்ற மிக மோசமாக தணிக்கை என்றே கருதுகிறென். அறிவுச் செயற்பாட்டாளர்களிடம் உறைந்திருக்கின்ற வன்முறை என்றும் இதைக் கருதுகிறென்.

எதுவும் பேசப்படவும், அனைத்தும் விவாதிக்கப்படவுமான ஒரு நிலையை அனுசரிப்பதே இன்றையத் தேவை.இங்கு தண்டணைகளும், உயிர்க்கொலைகளும் இருக்கப்போவதில்லை என்பதே இந்த உரையாடலை அனுமதிக்கிற இடமாக அமைகிறது. பல கருத்து நிலைகள் உலவும் சமூகவெளியில், எதிர்ப்பதும், தடைசெய்வதும் அதை மீறுவதும் நடக்கக்கூடிய ஒன்றுதான் என நீங்கள் வாதிடவும் இடமிருக்கிறது. ஆனால், ஜனநாயக பொது வெளியில் அனைத்தும் பேசப்படுவதற்கும், உரையாடப்படுவதற்குமான இடம் உருவாக்கப்பட வேண்டுமென்பதே ஓரளவு நேர்மையான அனுகு முறையாகும். அனைத்துத் திசைகளிலிருந்து வரும் கருத்துக்களுக்கும் செவிசாய்க்கும் சூழலுக்கு நெருங்கிவருவோம். அதிலிருந்து பரிசீலனைகளையும் உரையாடலையும் தொடருவோம்.

எனவே, நண்பர் விதுசன், காலச்சுவடு கண்ணன் கலந்துகொள்வதையும் அவர் உரையாற்றுவதையும் நான் ஆதரிக்கவே செய்கிறேன்.
இது நீங்கள் சிலாகிப்பதைப்போன்ற வார்த்தைகளுக்குரிய விசயமல்ல. 'காலச்சுவட்டை ஆதரிப்பவர்களுக்கான நல்ல தருணம். தயங்கிக்கொண்டிருந்தவர்கள் உடனே வெளிப்பட்டு கட்டியணைக்கலாம்' என்பது போன்ற கிண்டல்கள் சிலாகிப்புக்களுக்குள் அடங்காது.

குறித்த ஒருவருடன் உரையாடுவதென்பது அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டதாக அர்த்தப்படுத்தத் தேவையில்லை. உண்மையில் ஒத்த கருத்துடையவர்களிடையே உரையாடல் சாத்தியமுமில்லை. தலையசைப்புக்களும், கைதட்டல்களும்தான் அங்கு சாத்தியமாகிற ஒன்று. முரண்பாடான கருத்து நிலைகளுக்கிடையில்தான் உரையாடலே சாத்தியம். இதையும் புரியவில்லை என சொல்லுவீர்களோ என்ற அச்சம் எனக்குண்டு. முன்பெல்லாம் நீங்கள் கடுமையாக புரிவதாக பலமுறை என்னிடம் சொல்லியுமிருக்கிறீர்கள்.

மிக்க அன்புக்குரிய விதுசன். என்னை நீங்கள் முரண்படுவதுதான் கவர்ந்திருக்கிறது. நாம் அதிகம் உரையாடும் வழி அதனூடாக போடப்பட்டிருக்கிறது. இப்படித்தான் இந்த கடிதத்தை முடிக்க நான் விரும்பகிறென். உங்கள் தரப்பில், நமக்கிடையிலான வாசல்கள் மூடப்பட்டு விட்டதாகவும், புதிதாக ஒரு எதிரி உருவாகியிருப்பதாகவும் கருத அதிக வாய்ப்பிருக்கிறது என்பதே கடைசிச் சொற்களை துயரமாக மாற்றக்கூடியவை. கடந்த காலத்தை அதன் அடையாளத்தை வைத்துக்கொண்டே எதிர்காலத்தை தீர்மானிப்பவராகத்தான் இன்னும் நீங்கள் இருப்பீர்களானால், நான் இன்றும், இனி எப்போதும் அன்பு நிறைந்த ஒரு நண்பனாவே இருந்திருக்க வேண்டுமல்லவா...? இருக்க வேண்டுமல்லவா..?
................................................................................................................................அப்படியான ஒரு நட்பு எனக்கு அதிக ஆர்வமற்றதாகவே இருக்கும் என்ற செய்தியோடு..

மிக்க அன்புடன்