வெள்ளி, மார்ச் 23, 2012

நான் இருக்கன் சின்னக்குட்டி


றியாஸ் குரானா

புத்திசீவி என தன்னை நம்பிக்கொண்டிருக்கிறவர் குறித்த பார்வையாளர்களுக்காகவே பேசுகிறார். அது மட்டுமன்றி அதைக் கேட்கவைப்பதினூடாக குறித்த பார்வையாளர்களையும் உருவாக்குகிறார். தன்னை பாதிக்கும் கருத்துக்களையும்,பிரச்சினைகளையும் சாய்வுகொண்டதாக அதை அமைக்கிறார்.இதன் பின்னணியல் அவர் ஏதோவொரு இலட்சியத்தை இறுக்கிப்பிடித்திருக்கிறார். அவரால் இனம்காணப்பட்ட அல்லது கண்டுபிடித்ததாக அறிவிக்கும் மக்கள் கூட்டத்திற்காக செயல்படுவதாக அறிவிக்கிறார்.அதனூடாக அந்த மக்கள் கூட்டத்திற்கான மீட்பராக தன்னை வெளிக்காட்டும் வாய்ப்புக் கிடைக்கிறது. அவருடைய அனுகுமுறைகளும் பார்வைகளும் செயற்பாடுகளும் இன்றியமையாதவை என அந்த மக்கள் கூட்டத்தை நம்பவைக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதை மறைமுகமான வேலைத்திட்டமாக கைகொள்கிறார்.எனவே,புத்திசீவி உருவாக்கும் அல்லது கண்டுபிடிக்கும் பிரச்சினைகள் மாத்திரம்தான் மக்கள் கூட்டத்திற்கான பிரச்சினைகள் என அவர்களின் மீது சுமத்துகிறார்.அதனூடாக பொது இலட்சியமொன்றை நோக்கி நகர்வதாகவும் எல்லோரின் ஒத்துழைப்பும் அவசியமெனவும் இறுதியாக வந்து சேர்கிறது. இதனூடாக நீங்கள் உங்கள் பிரச்சினைகளையும், இலட்சியங்களையும் கண்டுபிடிக்கவும் செயல்படவும் தகுதியற்றவர்கள் என கருத இடமளிக்கிறார்.

புத்திசீவி பொதுமக்கள் பரப்பில் இப்படி செயல்படாது போனால், இந்த இடம் அவருக்கு உருவாகுவதும் இல்லை.இப்போது ஒரு கேள்வி எழுகிறது. அவரை இப்படிச் செயல்பட தூண்டுவது எது என்பதுதான். எங்கோ கடவுளிடமிருந்து கட்டளை வருவதாக பலர் வரலாற்றில் அறிவித்ததற்கும் இது வாய்ப்பாக அமைந்தது. யாருக்காக பேசுகிறார்..? எதற்காகப் பேசுகிறார்..? இப்படிப் பேசுவதற்குரிய உந்துதலை அவர் எங்கிருந்து பெறுகிறார்..?அவர் பேசுவது உண்மை என அறிவிப்பதற்கு எது தூண்டுகிறது..? அது எந்தவகையான உண்மை..? யாருக்கான உண்மை..? இந்த உண்மை வேறு மக்கள் கூட்டத்துக்கும், வேறு சந்தர்ப்பங்களுக்கும் மிக மோசமான விளைவுகளைத் தரக்கூடிய உண்மையா..? இப்படி பல கேள்விகளுக்கு அறுதியான பதில்களையொ, விவாதங்களையோ தரமுடியாத ஓரிடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.அப்படியான ஒரு நிலையில் ஓரளவு சொல்லக்கூடிய நிலையிலிருக்கும் பதிலாக ''வன்முறையை'' தவிர்க்க முயற்ச்சிப்பதற்கான செயற்பாடு எனச் சொல்லலாமா..?

தான் யார் நன்மைக்காக செயலாற்றுவதாகச் அறிவித்திருக்கிறேனோ, அந்தக் கூட்டத்தினர் தனது கருத்துக்களுக்கு ஒத்துவரவேண்டிய அவசியம் வருகிறது. அப்போது மிக மூர்க்கமான, இறுக்கமான அடையாளப்படுத்தல்கள் தேவையாகிவிடுகின்றன. அது தோழர்களென்றும், விரோதிகளென்றும், அயோக்கியர்களென்றும்,மகான்களென்றும்.அங்குதான் இரு முகாம்களாக வெறியொடு காத்திருக்க வேண்டிவருகிறது. அங்குதான் சரணடைதல் என்றும் சமாதானம் என்றும் வெள்ளைக்கொடிகளும் கொலைகளும் நிகழவேண்டிவருகிறது.இந்த புத்தசீவி, மக்கள்கூட்டம்,எதிராளிகள் என்ற நிலை மேலும் வன்முறையை, முதுகுக்குப் பின் ஒழித்துவைத்திருப்பதிலே சாத்தியப்படுகிறது. உரையாடல் என்பது (சிலர் கருதுவதைப்போலு அயோக்கியனுடனும் ) ஒப்பந்தங்களால் நிறைந்திருப்பது.
முறிவடைய முறிவடைய

ஒப்பந்தங்களை மாத்திரமே நம்புவது. தற்காலி மற்றும் நீண்டகால ஒப்பந்தங்களை அக்கரைகொள்வது. ஒரு ஒப்பந்ததில் சலிப்பு வரும்போது, நெகிழ்ச்சியான இன்னொரு ஒப்பந்தத்தை உருவாக்குவது.
சாதகங்கள் மாறிமாறி அளவு வித்தியாசங்களில் இரண்டுபக்கங்களிலும் வரக்கூடிய நிலையிலும் அதை ஏற்கும் நிலைவரையிலும் உரையாடலைத் தொடருவது. ஒப்பந்தங்களை உருவாக்குவது. ஒப்பந்தங்களுக்கு வெளியே பாதிக்கின்ற கருத்துக்களாலும்இ அடையாளங்காணும் பிரச்சினைகளாலும் - அதை அடைவதற்கெனவே பாதுகாக்கும் இலட்சியங்களும் வன்முறையைத் தவிர வேறெங்கும் அழைத்துச் செல்லாது.மனிதர்களுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் என்பன இவைதான் என வரையறுத்ததே மனிதர்கள்தான். அது வரையறுத்தவர்களின் நலன் சார்ந்ததாகவும்தான் இருக்கும். ஆக,  அதைக்கூட மேலும் விரிவுபடுத்துவதற்கான உரையாடல்கள் தேவை. எத்தனையோ அனுகுமுறைகளின் ஊடாட்டத்தில்தான் சமூக வெளி இருக்கிறது.ஆக, பத்திசீவி எந்த மக்களுக்காக செயல்படுவதாக நம்புகிறாரோ அவர்களின் உரிமையாளராக தன்னை ஆக்கிக்கொள்வதும்தான்.சுரணை உள்ள ஒரு சமூகச் செயற்பாட்டாளர் இப்படித்தான் மாறிவிடுகிறார். அல்லது உருவாகிறார். அப்படியில்லை எனில்இ சுரணையுள்ள சமூகச் செயற்பாட்டாளர் எப்படி செயல்படுவார் என சொல்லலாமே...?

சுரணையுள்ள சமூகச் செயற்பாட்டாளர் தன்னை ஒரு 'மெய்கண்டான்' என அறிவிக்க வேண்டிய அவசிமுள்ளது.அல்லது அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் 'நானிருக்கன் சின்னக்குட்டி' என பல்லிளிக்க வேண்டியிருக்கும்.

சமூகவெளியில் புத்திசீவியாகவும் சுரணையுள்ள சமூகச் செயற்பாட்டாளர்களாகவும் பெரும் இலட்சியங்களோடு வாலைமுறிக்கிக்கிட்டு திரிபவர்களின் கதையைக் கேட்கும்போது..
இந்த நாட்டார் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
பாம்புக் குஞ்சுக்குப் பல் விளக்கினன் சும்மாவா இருந்தன்

ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
ஆட்டு முட்டைக்கு மயிர் பிடிங்கினன் சும்மாவா இருந்தன்

ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
கோழிக்குஞ்சுக்கு கொண்டை கட்டினன் சும்மாவா இருந்தன்