ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

சுகிர்தராணி கவிதைகள்

பெரும்பாம்பு
கூடலின் பிந்தைய அமைதியை
துடைத்தெறிந்து ஒலிக்கிறது தொலைபேசி

விரல்களால் பற்றி காதோடு இழைக்கிறேன்
அதன் துளைகள் வழியே
பீறிடுகின்றன எண்ணற்ற பாம்புகள்

நொடிப்பொழுதில் சட்டைகளை உரித்துக்
கண்ணியொன்றைப் பின்னுகின்றன
பிளவுப்பட்ட நாக்குகளால்
உறுப்புகளைத் துழாவி ருசிக்கின்றன

என்னுடலெங்கும்
பிசுபிசுப்பான செதில்தடங்கள் பரவ
முட்டையிடவும் குட்டியீனவும்
இடம்தேடித் திரிகின்றன

கலவியுறாத செழித்த பாம்புகள்
என் கருத்த தசைகளின் மேல்
பற்களை அழுத்துகின்றன

விஷத்தில் குளித்த எழுத்துக்கள்
நீலம்பூத்த என் தோலிலிருந்து
நுரைத்துப் பொங்க

எல்லாப் பாம்புகளையும் விழுங்குகின்றேன்
நானே பெரும்பாம்பாகி.
,,,,,,,,,,,,,,,,

ஆத்ம தோழி
புரவியின் மினுமினுப்போடு
என்னை முத்தமிட்டு எழுப்புவாள்

குளிப்பாட்டி என்னுடல் முழுக்க
அலங்காரப் பூச்சிடுவாள்
எங்கிருந்து வருகிறாள்
எங்குபோகிறாள் தெரியவில்லை

அவள்தான் மலைகளுக்கப்பால்
என்னுயிரை வைத்திருக்கிறாளாம்

அப்பள்ளத்தாக்குகளின் முரட்டுச்சுவர்களில்
பட்டுத்திரும்பும் குரல்
என்னுடையதாம்.

மலைப்பயணம் குறித்தான ஆவலை
வெளியிடும் போதெல்லாம்
ஆற்றங்கரை மண்மேடுகளையும்
கிளைகளில் தொங்கும் காற்றையும்
சொல்லித் திசைத் திருப்புவாள்

காலடியில் நழுவும் குழிகளும்
கெட்டித்துப் போன சொற்களும்
என் கேவலை அதிகரிக்கின்றன

தடித்தயென் துக்கம் தாளாது
தொலைவிலிருக்கும் மலைப்பாதையை
அடையாளம் காட்டுகிறாள்

ஒருவேளை
நீங்களிதைப் படித்து முடிக்கும்போது
என்னை நான் அடைந்திருக்கலாம்.