சனி, ஜூன் 09, 2012

சூறத்துல் நானும் என் எதிர்த்தலும்


இமாம் அத்னான்

முதுகு குப்பற விழ நேர்ந்து புறண்டு கொள்ள அவதிப்படும் வண்டொன்றின் பெயரால் ஆரம்பிக்கிறேன் 0

நிறமூர்த்தங்களின் மீது சத்தியமாக 0 எனது உருவம் நிறம் குறி சாயல் ரத்தவகுப்பு பரம்பரையான நோய்மை மற்றும் குறைமை முதலிய உடலியல் சார் நிலை நேர்வுகளை நானாக உவந்து பெற்றுக் கொள்ளவில்லை 0 இதனை நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்களா 0

மேலும் அவர்கள்மீது சாபமுண்டாகட்டும் 0 யார் இவ்வுடலியல் நிலைகள் சார்ந்து இழிவுபடுத்தி விரோதம் பாராட்டுகிறார்களோ அவர்கள் மீதும் 0 அவர்களை இவ்வாறு செய்யத்தூண்டிய அவர்களின் உடலியல்சார் நிலைமைகள் மீதும் 0

இன்னும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் 0 ஒவ்வொரு உயிரியும் தனக்கென்ற பிரத்தியேகமான ஆற்றல்களுடந்தான் ஜனிக்கின்றன எங்களுக்கிருக்கும் தனித்துவங்கள் உங்களுக்கில்லை 0 உங்களுக்கிருக்கும் தனித்துவங்கள் எங்களுக்கில்லை 0  நாங்கள் சிறுமையுமல்ல நீங்கள் உன்னதங்களுமல்ல 0 உங்களின் வாழ்வியல் முறைமைகள் உங்களுக்கு 0 எங்களின் வாழ்வியல் முறைமைகள் எங்களுக்கு 0

புனிதங்களைக் கட்டமைத்துவிட்டு அதனை வழிபடுபவர்களை நீங்கள் கவனித்துப் பார்க்கவில்லையா 0 அவர்கள்தான் அதிகாரங்களை உற்பத்தி செய்கிறவர்கள் 0இன்னும் அவர்கள்தான் மாற்றங்களைக் கருக்கலைப்புச் செய்து வளர்ச்சியை வேரறுத்துக் கொண்டிருப்பவர்கள் 0 அவர்களால் மனித சமுதாயத்துக்கும் ஏனைய பிரபஞ்சித்திருப்பவைகளுக்கும் கேடுதான் மேலும் இவர்கள்தான் நம் சமூகம் சந்தித்த அத்தனை உயிர்ச் சேதாரங்களுக்கும் வாழ்தலின் மீதான நம்பிக்கை இழத்தலுக்கும் மூலகாரணம் 0

எல்லாம் விதிப்படி நடக்குமென்று சோம்பிக் கிடப்பவர்களையும் பாருங்கள் 0அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா விண்ணிலிருந்து ஒருவர் அமானுஸ்ய சக்திகளுடன் குதித்து வந்து
அநீதி அட்டூளியங்கள் அத்தனையையும் சப்பழிந்து போகச் செய்வாரென்று 0நிச்சயமாக நிலமை அவ்வாறில்லை இவர்களுக்கு ஆடு மாடு பூச்சியினங்களுக்கு இருக்கும் சரக்குக்  கூட  இருப்பதில்லை 0 உண்மயில் அவர்கள் அவைகளை விடவும் எவ்வளவோ கேவலமானவர்கள் 0

சிந்திக்கும் இயல்பு கொண்டவர்களே..!  அறிவிலிகளுக்கும் கூட நிச்சயமாக  இவ்வரிகளில்  அத்தாட்ச்சிகளும் படிப்பினைகளும் விரவிக்கிடக்கின்றன 0