புதன், அக்டோபர் 16, 2013

சோம்பேறி வீடு

அகமது ஃபைசல்

எனக்குப் பிடிக்காத வீட்டைத் துரத்திவிடுகிறேன்
ஒரு சந்தி கழிந்ததும்
திரும்பி வருகிறது
பக்கத்து வீட்டு நாயின் முதுகிற்குப் பின்னால்
மறைந்தபடி.
வீட்டுக்குள்ளிருந்து குரைத்த காலத்து சினேகிதம்.

மறுபடியும் துரத்துகிறேன்
இரண்டாம் சந்தி கழிந்ததும்
திரும்பி வருகிறது
பக்கத்து வீட்டு பூனையின் முதுகிற்குப் பின்னால்
மறைந்தபடி.
குட்டி ஈன்று வளர்த்தெடுத்த விசுவாசம்.

இரவாகிவிட்டது

துரத்தி ஓய்ந்து
வீட்டுக்குள்ளே போய் கட்டிலில் சாய்கிறேன்.

ஒரு பக்கச் சுவரிலிருந்தவர் பாடுகிறார்.
இன்னொரு பக்கச் சுவரிலிருந்தவர்
இறங்கி வந்து என் தலையைத் தடவுகிறார்.
இதன் பிறகு என்ன நடந்தது என்பதை
நீங்கள் காலையில் எனக்குச் சொல்வீர்கள்.

எழுந்து பார்த்தேன் விடிந்துவிட்டது
இது வெளியூர்.