தமிழ் இலக்கியச் செயற்பாட்டாளர்களிடம் கற்பனை இல்லை.
திணை சிற்றிதழில் வெளிவந்திருக்கும் எனது நேர்காணல்.
1. சிறுபத்திரிகை எழுத்தாளராக செயல்படத் தொடங்கியவர் நீங்கள். இப்போது பிரபல எழுத்தாளுமைகளில் ஒருவர். உங்களிடத்தில் இந்த புகழ் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது?
@ பிரபல எழுத்தாளுமை என்று என்னை விழிப்பது கொஞ்சம் அதிக பட்சமான பாராட்டுத்தான். அதற்கு மனம் நெகிழ்கிறது. எனினும், இந்தப் பாராட்டை ஏற்கும் நிலையில் நான் எப்போதும் ஆகிவிடக்கூடாது என்றே விரும்புகிறேன். பிரபலம் என்ற விழிப்பு நமது சூழலில் அர்த்தம் நிறைந்த ஒரு இடத்தில் இருப்பதாக தோன்றவில்லை. அந்த இடத்தை அடைவதற்குப் பல குறுக்கு வழிகளைப் பயன்படுத்தும் அரசியல் செயற்பாடுகளும் நிறைந்திருக்கின்றன. அதைவிடவும் முக்கியமாக, அந்தவகை அழைப்பிற்குப் பின்னால் நிரந்தரத் தன்மையுடைய கட்டமைப்பொன்றும் தொடர்வதாக உள்ளது. அது எழுத்துவெளியில் ஆபாத்தானது என்றே கருதுகிறேன். ஆனால், பரவலாக அறியப்பட்டிருக்கிறேன் என்பதையே இந்த இடத்தில் ஏற்க விரும்புகிறேன். விரிந்த அளவில் என்னைக் கொண்டு சேர்க்க சிறுபத்திரிகை தவிர்ந்த இணையவெளி உதவியிருக்கிறது. எனினும், எனது எழுத்துச் செயல் எப்போதும் சிறுதன்மைகொண்டதே. இந்தச் சிறுதன்மை என்பது எப்போதும் பிரபலம் என்ற சொல்லின் முழு அர்தத்தில் என்னோடு இணைந்திருக்க தடையாகவே இருக்கும். நான் தமிழ்மொழியின் அனைத்துப் பார்வையாளர்களுக்குமான இலக்கியச் செயற்பாட்டாளன் அல்ல என்பதில் தெளிவாக இருக்கிறேன். எனது பார்வையாளர்களை உருவாக்கும் விதத்திலே எனது இலக்கியச் செயலை கண்டுபிடிக்கிறேன். ஆகவே, புகழும், அதனுாடான மாற்றங்களும் எனக்கு அந்நியமானவையே.
2. புத்தகங்களில் உலகிலேயே வசிப்பவர் நீங்கள். வாசிப்பு ஒருவரை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது என்பதை உங்கள் சிறுவயது அனுபவத்திலிருந்து பகிர்ந்துகொள்ள முடியுமா?
@ கதைகளாலானதுதான் உலகு. சிந்திப்பது என்பதே, பகிர்ந்துகொள்ள ஏதாவது கதைகளை தேடுவதுதான். இந்தக் கதைசொல்லுவதும், கேட்பதுமான மன உந்துதலில் தவிர்க்க முடியாமல் சிக்கிவிடவேண்டியுள்ளது. இதை வேறுவகையில் சொல்லுவதானால் நாம் கதைகளுக்குள்ளே வசிக்கிறோம் எனலாம். தத்துவம், அரசியல்,மதம்,இலக்கியம் என எதை தேர்வுசெய்யக் கிடைத்தாலும் அங்கே கதைகளுக்கான தேவையே முதலாவதாக நமக்கு சவால் தருகிறது. மௌனமே சிறந்தது என சொன்வர்கள் கூட அதை கதையாகவே சொல்லவேண்டி வந்தது என்றால் கதைகளின் இடம் நமக்கு தெரிந்துவிடும். ஆக, கதைகள் நம்மைவிட்டுப் பிரிந்துவிடுதல் சாத்தியமில்லை. நாம் கதைகளைத்தேடி அலைய வேண்டியவர்களாகவே மாறிவிடுகிறோம். கதைகள் நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன. அதுவே மற்றொரு கதைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. எனவே, ஏதாவது கதைகளை நாம் தேர்வுசெய்துதான் ஆகவேண்டும். இந்தத் தேர்வு என்பது ஒரு தொடர்ச்சியான மனவிளைவு. புத்தகங்கள், கேட்பவர்கள் அற்ற கதைகளின் இருப்பிடமாக இருக்கிறது. புத்தகங்கள் வருவதற்கு முன் கதைகள் கட்டாயம் கேட்டே ஆகவேண்டும் என்பதாக இருந்தது. அப்படிக் கேட்பதினுாடாகத்தான், கதைகளை கடத்திச் சென்று வரலாற்றைக் கடக்க முடிந்தது. கதைகளையும் புத்தகங்களையும் இப்படிப் புரிந்துகொள்வதற்கு முன், புத்தகங்களுடனான உறவு எனக்கு ஏற்பட்டது ஒரு துயரமான கதைதான். தமிழின் அனேக எழுத்துக்கள் ”கவலைகளின் பாடுகளும் பதையத்துக்களும்தான்”. அப்படி இருந்தால்தான் இலக்கியத்திற்குள் அவை நுழையமுடியும் என்பதுபோல இருந்தது.
எனது 16வது வயதில்தான் நான் முதன்முதலாக உள்ளாடை அணிந்தேன். அதையும் எனக்கு வாங்கிக்கொடுத்தது அலி உதுமான் என்கின்ற ஒரு ஆசிரியரே. அவரை தமிழ் விடுதலை இயக்கங்களில் ஒன்று கொன்றுவிட்டது. அதற்கு முன் உள்ளாடையில்லாத எனது நிலையை, ஆடைகளுக்கு வெளியே மறைப்பதற்கு புத்தகங்களே பயன்பட்டன. பாடப்புத்தகங்கள் பாடசாலையில் உதவின என்றால், அதற்கு வெளியே இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் உதவின. எப்போதும், எனது கால்களும் இடுப்பும் சந்திக்கும் இடத்திலே புத்தகத்தை அப்பிப் பிடித்தபடியே நான் நடப்பது சாத்தியமாகியது. ஆனால், என்னைப் பார்ப்பவர்கள் – பெரும் வாசகன் என நினைத்தார்கள். அதனுாடாக நான் ஒரு வாசிப்பாளனாக உருப்பெற்றேன். ஆரம்பத்தில் அவர்களின் நம்பிக்கையையும் அதனுாடாக கிடைத்த பாராட்டையும் மனம் விரும்பியது என்பது உண்மைதான். அந்தச் சிறுவயதில் பாட்டியும் நானுமாக ஏற்படுத்தப்பட்டிருந்த தனிமை புத்தகங்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியது. அன்று தொடங்கிய வாசிப்பு ஒரு நாளைக்கு பல மணிநேரங்களை எடுத்துக்கொண்டது. ஆனால், எனது வாசிப்பிற்கு எந்த வழிகாட்டுதலும் இருந்திருக்கவில்லை. அனைத்தையும் வாசிக்கத்தொடங்கினேன். எனது நண்பர்கள், எதிரிகள், எனது அனைத்து வாழ்வும் புத்தகத்தினுள் இருக்கும் கதைமனிதர்களுடனும், கவிதை வெளிகளுடனும் என்றாகிப்போய்விட்டது.
இதில் முக்கியமான ஒருவிசயம் என்னவென்றால், ஏதாவதொரு கதையினுள் வசிக்க விரும்புகிறவர்களாகவே இருக்கிறார்கள் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள். அதற்குள் நுழைவதற்கான ரகசியப்பாதைகள் புத்தககங்களினுள்ளே இருக்கின்றன. வாசித்துக்கொண்டு கடக்கும் காலங்களில் எப்போதாவதுதான், அந்தப் பாதையை கண்டுகொள்ள முடியும். வாசிப்பு நம்மை எங்கும் அழைத்துச் செல்லாது. நமது மனதை சிந்தனையை மேலும் மேலும் ரகசியம் நிரம்பியதாக உருமாற்றும். புதிரைப்போல வடிவமைக்கும். அந்த ரகசியத்தோடும் புதிரோடும் வினைபுரிவதுதான் அதிகபட்ச இன்பமாகும்.
3. ஒரு பயணியாக இலங்கை இன்று அடைந்திருக்கும் மாற்றம் குறித்து உங்களுக்குச் சொல்ல இருக்கிறதா?
@ இலங்கை பெரும் மாற்றத்திற்குட்பட்டிருக்கிறது என சொல்வதற்கு தமிழ்மொழிச் சிறுசமூகங்களால் முடியாது. பெரும்பான்மைச் சமூகமான சிங்களவர்களிடம் நிறைய உண்டு. அவர்களுக்கு வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பெரும் மாற்றமும், விமோசனமும் கிடைத்திருப்பதாக வெளிப்பாடுகள் உண்டு. நாட்டை பயங்கரவாத அமைப்பிடமிருந்து, காப்பாற்றியிருப்பதாக பெரும் முழக்கங்கள் உண்டு. அதைச் சொல்லியே பல தேர்தல்களை வென்றாகிவிட்டது. அபாயத்திற்குள் நாட்டை இட்டுச் சென்றதாக கருதப்படும் பயங்கரவாத அமைப்பு தோற்றம் பெற்றதற்கான காரணங்கள் குறித்து இலங்கை அக்கறை கொள்ளவில்லை என்பதே தமிழ்மொழிச் சிறு சமூகங்காளான தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் நிலைப்பாடாகும். இதை இலங்கை கவனத்திற்கொள்ளும்போது நல்ல நிலமை இங்கு உருவாகிவிடும். இலங்கை மாற்றம் அடைய வேண்டிய நிலையில் இருக்கிறது.
வலிமையானவர்கள் என்ற நிலைப்பாட்டிலிருந்து இறங்கி, வரலாற்றை மிகச் சரியாக வாசிக்க முற்படவேண்டும். அத்தோடு, நெகிழ்ச்சியான உரையாடலுக்கு இடந்தர வேண்டும். ஆயுதங்களை கைகளில் வைத்திருந்த பயங்கரவாத அமைப்பு என நம்பப்பட்ட பெரும் செயற்பாட்டை வென்றெடுத்திருப்பது மாற்றமாக ஆகாது. அது இலங்கையில் இருக்கும் ஒருசாராருக்கான மாற்றமாகவே இருக்கும். சிறு சமூகங்களும் தமக்குட்பட்ட வரையில் தனது சமூகத்தை கவனிப்பதற்கான வாய்ப்பையும், அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். வெளிப்படையாகச் சொல்லுவதென்றால், பிரச்சினை அப்படியே இருக்கிறது. அந்தப் பிரச்சினையை தீர்த்துவிடுவதாக சொல்லிச் செயற்பட்ட ராணுவரீதியிலான அமைப்பு அழிக்கப்பட்டிருக்கிறது.ஆக, பிரச்சினையை கவனத்திற்கொள்ள வேண்டும். ராணுவரீதியிலான வெற்றி ஒன்றே, இங்கு எந்தப் பிரச்சினையுமில்லை என்று சொல்லுவதற்கு வழிவகுக்கக்கூடாது. அப்படியான ஒரு வழிதென்படுவதே இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமாகும்.
4. உங்களின் ஆளுமையில் தாக்கம் செலுத்தியவர்கள் பற்றி கூறுங்கள்?
@ அ.மார்க்ஸ் மற்றும் தமிழவன். இந்த இருவருடைய எழுத்துக்களையும் சந்திக்கும்வரை இலக்கியம் என்பதை வெறும் ரசனை சார்ந்தது என்றும், அது பிரபலத்திற்கான ஒரு வழி என்றும் நம்பியிருந்தேன். இலக்கியத்தை அதன் பன்முக வெளிகளோடு சந்திக்க இவர்களுடைய எழுத்துக்கள் முக்கியகாரணமாயின. 90களின் நடுப்பகுதியில்தான் இவர்களுடைய எழுதடதுக்கள் என்னை அடைந்தன. ஈழத்தில் அதிகமும் தெரிந்த இலக்கிய வெளி இங்கிருந்த நுாஃமான், சிவத்தம்பி போன்றவர்களால் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. ஆகவே, அவர்களின் பரிந்துரைகளே இலக்கிய முக்கியஸ்தர்களாக இங்கு வலம் வந்தனர். சுந்தரராமசாமி, மற்றும் காலச்சுவடு போன்றவற்றுக்குள் இலக்கியம் சுருக்கப்பட்டிருந்தது. 80களிலும், 90களிலும் தமிழில் நிகழ்ந்த இலக்கிய மாற்று உரையாடல்கள் மற்றும் கருத்தியல்கள் எதுவும் ஈழத்தில் நுழையாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால், புலம்பெயர் நாடுகளில் அந்த மாற்றங்கள் வேகமாகப் பரவத்தொடங்கின.
மு.தளையசிங்கத்திற்குப் பிறகு இங்கு ஒரு தீவிரமான உரையாடல் நிகழவே இல்லை. என்னவொரு ஆச்சரியம் எனில், என்னை தமிழின் புனைவெழுத்தாளர்களோ, கவிகளோ தாக்கம் செலுத்தவில்லை. ஆனால், பின்நாட்களில் பிரம்மராஜன் மிக நெருக்கமாக வந்தார். என்னைப் பாதித்தவர்களுக்கிடையே ஒருவகை ஒற்றுமை ஒன்று இருக்கிறது. உலகளாவிய மனதை ஏதோவொருவகையில் தமிழில் உருவாக்க முற்பட்டவர்கள். அ.மார்க்ஸின் ஆரம்பகால இலக்கிய வாசிப்புக்களை பார்க்கலாம். அதுபோல, தமிழவனின் புனைவெழுத்துக்கள், உலகின் வேறொரு மனவெளியை தமிழின் நினைவுகளுக்குள் ஊடறுத்துச் செல்ல வைத்தது. அன்னியமானது எனக்கருதத்தக்க வினோத நிலக்காட்சியை தமிழின் மடிப்புகளில் அலையவிட்டு – வேறுபட்ட புனைவுகளாலான வெளியை தமிழ் மனதினுாடாக அனுகச் செய்தது. அதுபோல, பிரம்மராஜன் மேலைத்தேய கவிதைப் பண்புகளையும், தமிழின் கவிதை நினைவையும் ஒரே வெளியில் அலையச் செய்தது. தமிழின் புனைவு மற்றும் விமர்சனச் செயலை புதுப்பிக்க முயற்சித்த பல முக்கியமானவர்களில் இவர்கள் மூவருமே ஆரம்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.
5. தமிழில் இன்றைய எழுத்துச் சூழல் எப்படி இருக்கிறது?
@ நல்ல நிலையில் இல்லை. நாம் மிகவும் பின்தங்கிவிட்டோம். இலக்கியம் சார்ந்து எந்த உற்பத்தித்திறனுமற்றவர்களாக இருக்கிறோம். எந்த மொழியிலாவது ஏதாவது புதிதாக உருவாகாதா என வாய்பார்த்துக் காத்திருக்கிறோம். புனைவு மற்றும் கற்பனை சார்ந்து சொந்தமாய் சிந்தித்து பல நுாற்றாண்டுகள் ஆகிறது. அரசியல், விஞ்ஞானம்,பொருளாதாரம் என எதை எடுத்துக்கொண்டாலும் நாம் பின்தங்கியிருக்கிறோம். வளர்ந்துவருகிறோம் எனச் சொல்லும்போது நமக்கு சிறிதும் வெட்கம் ஏற்படுவதில்லை. அதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறோம். ஆனால், இலக்கியம் சார்ந்து இதைச் சொன்னால் நிச்சயம் இங்கு பலருக்கு ரோசம் எல்லாம் பொத்துக்கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. இலக்கியமென்பதே புனைவு சார்ந்ததுதான், ஆக, எதையும் புதிதாக புனைய முடியாதவர்களாகவே தமிழ் இலக்கிய வாதிகள் இருக்கிறார்கள். இவர்களிடம் கற்பனையில்லை. பாவனை செய்யமாத்திரமே பழக்கப்பட்டிருக்கிறார்கள்.
கற்பனை இல்லாத மொழியில் புனைவு வறட்சிநிலையிலே இருக்கும். அதுவே இங்கு நிலவரம். அதைவிடுங்கள். கதைசொல்லலின் சாத்தியங்கள்கூட இங்கு பெருகவில்லை. கவிதையின் வகைமைகள்கூட முயற்சிக்கப்படவில்லை. வாழ்தல் வாழ்விலிருந்து பெறுதல் என்ற ஒரு வறட்டு புரிதல் ஒன்றே நெடுங்காலமாக இலக்கியத்தை தாங்கிச் செல்கிறது. ”அனுபவத்தை பழக்கமற்றதாக மாற்ற” இங்கே இலக்கியவாதிகள் தயாராக இல்லை. நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறில்லை என்பதைப்போல சத்தியம் செய்யும் பிரதிகளாக கட்டமைக்கவே இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. கவிதைபோல சில வினோதங்களும் உண்மை என நம்பச் செய்யும் சில கவலைகளும் ஒரு பிரதியை இலக்கியமாக மாற்றிவிடக்கூடியது என இன்னும் நம்பிக்கொண்டிருப்பதே பரிதாபத்திற்குரியது. ஒரு மொழிக்கு ஒரு இலக்கியப் பரப்பும், அங்கு செயலாற்ற இலக்கியவாதிகள் என கொஞ்சம் வேலையாட்களும் தேவை என்பதுபோல நமது தமிழ் இலக்கியச் சூழல் இருக்கிறது.
6. முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளில் உயிர்ப்புள்ள கவிதைகள் அதிகம். இப்போதைய எழுத்துகளில் அது இல்லாமல் வெறுமனே விவரிப்பாகவே கவிதைகள் இருக்கின்றன. காரணம் என்ன?
@ முந்தய தலைமுறை கவிதையை எதிர்கொள்ளும்போது, அவர்களுக்கு நவீன கவிதை என்பது மிகப் புதிய அனுபவமாக இருந்தது. இன்று அது பல தலைமுறைகள் பயிலப்பட்டு பழக்கப்பட்டுப்போன ஒன்று. இப்படி எழுதினால், இந்தவகை இதழ்களில் வந்தால், அல்லது இந்தவகையானவர்கள் பாராட்டினால் நவீன கவிதைதான் என்றாகிவிட்டிருக்கிறது. நவீன கவிதையின் வகைமைகள் பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை. நவீன கவிதையை அதனோடு இருக்கும் பழக்கத்தை நெருக்கடியானதாக மாற்றி புரிதலுக்கான உழைப்பை சவாலானதாக மாற்றவில்லை. நவீன கவிதையோடு செயலாற்றுவது இன்று, மிகப் பழக்கமான ஒரு விசைப்பலகையை விரல்கள் தட்டுவதைப்போன்றது. என்றுமெ அறிந்திராக வனாந்தரமொன்றுக்குள் சுயமாக பாதையமைத்து பதற்றத்துடன் நுழைவதைப் போன்ற ஒன்றாக இல்லை. வழிகள் நமக்கு நன்கு பரீட்சயமானவை. அங்கே என்ன கிடைக்கும் என்பது வரை வெளிப்படையாக மாறியிருக்கிறது நவீன கவிதை.
நமக்குத் தெரிந்த பார்வை இரண்டே இரண்டுதான். எளிமையானது.அல்லது புரியவில்லை. இந்த இரண்டு கருத்தக்களையும் இலக்கியப் பிரதியை பரிசோதிப்பதற்கு பயன்படுத்தியே காலங்களைக் கடந்துவிட்டோம். ஏன் நமது விமர்சன முறைமையே கூட தணிக்கை சார்ந்ததுதானே. அப்படி இருக்கக்கூடாது. அல்லது இப்படி இருக்க வேண்டும். இவ்வளவுதான். வாசிப்புக்கு சவாலாக இருக்கும் பிரதிகளுடன் கற்பனையாலான போராட்டத்தை நிகழ்த்த நாம் சிந்தனைச் சோம்பேறிகளாக இருக்கிறோம். ஆக, இன்று நவீன கவிதை என்பது மிக மலிவான ஒரு பண்டம். அதுதான் உங்களுக்கு சலிப்பைத் தர பிரதான காரணம். வாசிப்புப் பயிற்சியற்ற பலரை இணையவெளி நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கிறது. அவர்களின் பாராட்டுக்கள் ஒரு பிரதியை நவீன கவிதையாக மாற்றிவிடாது. அதுபோல, நமது பழைய சிந்தனைவாதிகளும் மிக பிற்போக்கானவர்கள் பலருண்டு.
அவர்களின் கற்பனைச் சிந்திப்புக்களுக்கும், விமர்சனம் சார்ந்த அறிதல் சிந்திப்புக்களுக்கும் எந்த தொடர்புமே இல்லை. கற்பனை செயலில் இருக்கும் பயிற்சியும் விரிவும் அறிதல் செயற்பாட்டில் இல்லை. எனவே, அவர்கள் புனைவாளர்கள்தான். அதுவும் சிறந்த புனைவாளர்கள். ஆனால், அவர்களால் அசாத்தியங்கள் நிரம்பிய புதிய புனைவுகளை இனம்காணுதல் கடினமானதே. அதை கண்டுபிடிப்பதற்குரிய விமர்சனமுறைமைகள் உருவாகாத நிலையில் ”எனக்குப் பிடிச்சிருக்கு ஆகவே நல்ல கவிதை” எனச் சொல்லுவதைத்தவிர வேறு ஒன்றும் சாத்தியமில்லை.
புதிய விமர்சன முறைமைகள் கண்டுபிடிக்கப்பவில்லை என்பதே கவிதையின் இன்றைய தோல்விக்கு காரணம். இன்னொரு முக்கியமான விசயம் கவிதை எழுதுபவர்கள் மிகவும் அதிகரித்திருக்கின்றனர். தற்செயலாக ஒருவரைக் கடந்துசெல்ல முடியாதளவு அதிகரித்திருக்கின்றனர். ஏதாவது ஒன்றைச் செய்யவேண்டுமென்று ஒருவர் நினைத்தால், கவிஞராக மாறுவது என்பதாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், இன்று மிக முக்கியமான அதாவது, நவீன கவிதைகளைக் கடந்துவிட்ட அதற்குப் பிறகான என அடையாளமிடத்தக்க கவிதைகளும் இப்போதுதான் தமிழில் உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும்.
8. புதிய கதை எழுத்து இன்று தேக்கநிலை அடைந்துவிட்டிருக்கிறது. மீண்டும் யதார்த்தவாத கதைகள் வரத்துவங்கியுள்ளதே , இந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள் ? புதுமுயற்சிகளை செய்தவர்களில் நீங்கள் மட்டும் கதை எழுதாதது ஏன்?
@ தேக்கம் அடைவதற்கு புது எழுத்து முறைமை என்பது பரவலாக இங்கு புளக்கத்திற்கு வரவில்லை. மிகக் குறைந்தளவே முயற்சிக்கப்பட்டிருக்கிறது. யதார்த்த வாதம் என ஏதுமிருக்க முடியாது. அப்படி உண்மையில் இல்லை. உருப் பெறும் எதார்த்தங்கள்தான் எழுத்தில் சாத்தியமானது. மாறாக, யதார்தமான எழுத்தாக தமது இலக்கியப் பிரதிகளை நம்பிவந்திருப்பதுதான் இங்கு நடந்தது. பன்னெடுங்காலமாக ”யதார்தம்” என்ற ஒரு பிடிவாதமான நிலை புனைவெழுத்துக்களை தாக்கியழித்துக் கொண்டிருக்கிறது. எனது கவிதைகளில் கதைசொல்லலின் உள்ளீடுகளை இணைத்திருப்பேன். அதைத்தான் நான் கவிதை சொல்லி என வெளிப்படுத்தியிருப்பேன்.
பிரதியின் உள்ளாக அதன் எல்லைக்குட்பட்டதாக கதைசொல்லலுக்கும், கவிதைக் கற்பனைக்குமிடையிலான எல்லைக் கோட்டை அழித்திருப்பேன். அதனுாடாக கதையின் கதையாடலை கவிதையில் நிகழ்த்தியிருப்பேன். கொஞ்சம் ஆழமாக கவனித்தால் எனது பிரதியை கவிதை என்றோ கதை என்றோ சொல்ல முடியாதபடி இடைஞ்சல் தரும். கதையை அங்கு வேறு ஒரு உருவில் செய்துதானிருக்கிறேன். தனிக் கதை என எதையும் முயற்சிக்கவில்லை.
9. இதுவரை யதார்த்தவாதமாக நம்பபட்டு வந்தவைகள் தவறானவைகளா ?
@ யதார்தம் என நம்பப்பட்டு வந்தவைகள் தவறானைவைகளல்ல. நம்புவதற்கு எடுத்துக்கொண்ட வழிமுறை தவறானது. பொதுவான யதார்த்தம் என ஒன்று இருக்கமுடியாது. பலவகையான யதார்த்தங்கள் இருக்கவே வாய்ப்புகளுண்டு. ஆக, அனைவருக்குமான யதார்த்தத்தை எழுதுவது என்பது தவறானது. அத்தோடு, பல கருத்துநிலைகளாலும், ஊகங்களினாலும் புனையப்பட்டதுதான் யதார்த்தம். தனிமனிதர் என்பதே புனைவுதானே. அது பல கருத்து நிலைகளினது தொகுப்பு சந்திக்குமிடம்தானே. எனவே, யதார்ததம் என்பது புனைவானது என சிந்திக்கும் புலங்களிலிருந்து இலக்கியச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமானால், அல்லது முன்னெடுக்கப்படுமானால் பல புதிய புனைவு வகைமைகளை நாம் தமிழில் சந்திக்க நேரலாம்.
10. இன்றுள்ள தமிழ் இலக்கிய போக்குகள் எப்படியிருப்பதாக நினைக்கிறீர்கள்?
@ நாவல் எழுத்துக்களும், விமர்சன முறை எழுததக்களும் தோல்வியடைந்திருப்பதாகவே கருதுகிறேன். சிறுகதைகள் நம்பிக்கை தருகின்றன. கவிதைகள் பெருகியிருக்கின்றன. ஆனால், மிக மோசமான நிலையில் கவிதைகளே இருக்கின்றன. இணையத்தின் வரவால், எல்லா எழுத்தாளர்களுக்கும் பார்வையாளர்கள் அதிகரித்திருக்கின்றனர்.
அதே நேரம் அவர்களும் எழுத்தாளர்கள் என அறியமுடிகிறது. எழுதட்தாளர் இல்லாத பார்வையாளர்களை காண்பது அரிதாகிவிட்டது. பெண்ணியம், தலித்தியம் போன்ற புதிய வரவுகள் தம்மை மேலும் வளர்த்துச் செல்லவே இல்லை. இலக்கியம் மற்றும் கருத்தியல் சார்ந்த எந்த விவாதங்களும் உரையாடல்களும் இல்லவே இல்லை.
தறியில் நெசவு செய்வதுபோல ஜெயமோகன் எழுதிக் குவிக்கிறார். அது தனது ஆற்றலை வீணடிப்பதாகவே அமையும். சாரு, ஏதோ உலகில் ஒரே ஒரு நாவலை தானே எழுதினேன் என கண்டநிண்டவர்களிடமெல்லாம் சொல்லி சாகடிக்கிறார். அவரின் எழுத்துக்கிருக்கும் மதிப்புகூட இதனால் பாதிக்கிறது. பல புதியவர்களுக்கு கற்பனையாற்றல் மாத்திரமே வாலாயப்பட்டிருக்கிறது. அந்தளவு கருத்தியல் சார்ந்த புரிதல் இல்லை.
அது இல்லாது இவர்களின் எந்த நாவலும் தமிழ் நாட்டைக் கடந்து வெளியெ செல்லாது. அந்த நாலு ஏக்கருக்குள்தான். அதிகம்பேர் ஜனரஞ்சக வெளியை நோக்கி நகர்ந்த வண்ணமிருக்கின்றனர். விற்பனை ரீதியான கவர்ச்சியும் இலக்கியத்தரமான ஆற்றலுடனும் இங்கு யாருடைய நாவல்களும் இல்லை. சினமா நாவலின் இடத்தை இல்லாமல் ஆக்கிக்கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டைக் கடந்து வெளியே செல்லக்கூடிய நாவல்கள் தமிழில் காணவில்லை. ஒன்றிரண்டு விதிவிலக்கு.
11. இப்போது உலக அளவில் யாருடைய எழுத்துகளை முக்கியமானதாக கருதுகிறீர்கள் ?
@ உலகளவில் பெண்களுடைய கலைச் செயற்பாட்டையே முக்கியமானதாக கருதுகிறென். கொரில்லா கேர்ள்ஸ் என்றும் கலக்கல்தான்.
12. சமகால நிகழ்வுகள் இலக்கியத்தில் பதிவு செய்யப்படவேண்டியது அவசியமில்லையா?
@ இலக்கியத்தில் பதிவுசெய்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால், இலக்கியம் சமகால நிகழ்வுகளை கட்டாயமாக பதிவுசெய்திருக்க வேண்டும் என அடம்பிடிக்க முடியாது. சமகால நிகழ்வுகளை பதிவு செய்வதற்குரிய வசதிவாயப்பை இலக்கியம் மாத்திரமே கொண்டிருக்கிறது மாற்று வழிமுறைகள் எதுவுமே இல்லை என்ற ஒரு நிலை இருந்தால் பதிவு செய்வது அவசியமே.
இலக்கியம் எப்போதும் புனைவு விதிகளால் வழிநடாத்தப்படுவதே. விதிகள்கூட புனைவானவையே. அதாவது, அறம்,யதார்த்தம், அரசியல், தத்துவம் என எந்தக் கருத்தாக்கத்தை புனைவுமனம் சந்தித்தாலும் அவைகளுக்குள்ளிருக்கின்ற அதாவது பதுங்கி இருக்கின்ற புனைவுகளை வெளியே கொண்டுவருவதாக இருக்கும்.
சமகால நிகழ்வு என்பது புனைவாலான ஒரு நிகழ்வாக உருமாறி வேறு அர்த்தங்களை பரிந்துரைக்கவே வாய்ப்பதிகம். என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்று ஊகங்களை உருவாக்கி அனுகவே அதிக வாயப்பைத்தரும். இன்னதுதான் நடந்தது என அறிவிக்கும் அறிக்கையாக மாறவே மாறாது. சமகாலத்தை மிகத் துல்லியமாக பதிவுசெய்யத்தக்க தொழில்நுட்ப வசதிகள் இன்று இருக்கின்றன. ஆகவே, சமகாலத்தை பதிவுசெய்யச் சொல்லி இலக்கியத்தை வற்புறுத்தத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
13. உங்கள் கவனம் தற்போது எதில் குவிந்திருக்கிறது. அல்லது எதை தொடர்ந்து விரும்பி வாசித்து வருகிறீர்கள் ?
@ தமிழ்க் கவிதைவெளியை தற்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்து, இலக்கியம் சார்ந்து வெளிவந்த உலகளவில் முக்கியமான புத்தகங்கள் பலதை ஒரு முறைப்படுத்தப்பட்ட வகையில் வாசிப்பதற்கு இருக்கிறேன். எப்போதும் எனது கவனம் அல்புனைவுகளின்மீதே படிந்திருக்கிறது.
15. தமிழில் சிறுபத்திரிக்கைகளின் எண்ணிக்கை குறைந்து இடைநிலை பத்திரிக்கைகள் அதிகரித்துள்ளதே. இன்று ஒரு சிறுபத்திரிக்கையின் தேவை என்ன என்று நினைக்கிறீர்கள். ?
@ சிறுபத்திரிகை இன்று பெரும் தோல்வியை சந்திக்க நேரும். இடைநிலைப் பத்திரிகை என்று ஒன்று இல்லை. ஜனரஞ்சக இதழ் அவ்வளவுதான். ஆனால், சிறுபத்திரிகையின் இலக்கிய வகிபாத்தை பெரும் ஜனரஞ்சக வெளியாக கருதப்படும் இணைத்தில் நிகழ்த்திக்காட்டுவதே இன்று முக்கியமானதாகும். சிறு பத்திரிகையின் அனைத்து அம்சங்களுடனும் இயங்கத் தக்க ஒரு ”இணையச் சிற்றிதழை” கொண்டுவருவது முக்கியமான காலத்தேவையாகும். ( இணையச் சிற்றிதழ் – இந்தச் சொல் எனது கண்டுபிடிப்பு என்று சண்டைக்கு வரமாட்டேன்)
16. இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?
வெளியே கொண்டுவராத பல கவிதைகள் இன்னும் செப்பனிடும் பணியில் இருக்கிறேன். நிச்சயமாக அவை கவிதை எழுதுதலின் சாத்தியங்களை பெருக்க உதவக்கூடியவை.