வியாழன், பிப்ரவரி 09, 2017

புல்ஷிட், பொய்களில் புதுவகை.

{மொழிபெயர்ப்பு - மக்சுப்பன்ஸ் - அவருடைய வலைத்தளத்திலிருந்து  மீள் பதிவிடப்படுகின்றது. அவருக்கு மிக்க நன்றி.}
இதில் நிறைய அமெரிக்க அரசியல் இருந்தாலும் இந்தக் கட்டுரை எல்லா அரசியலுக்கும் பொருந்தும் என்ற காரணத்தால் மொழிபெயர்க்கப்படுகிறது. உங்களுக்குப் பிடித்த ஹீரோ – வில்லன்களைப் பொருத்திப் படிக்கலாம்.
2. ஏறத்தாழ இரண்டாயிரம் சொற்கள் கொண்ட கட்டுரை, முழுமையாக மொழிபெயர்க்க முடியுமா தெரியவில்லை. முடிந்த அளவு சிறிது சிறிதாகச் செய்கிறேன்.
3. இது The Chronicle of Higher Education என்ற தளத்தில் வந்திருக்கும் கட்டுரை, ‘Truth After Trump- Lies, memes, and the alt-right – By Justin E.H. Smith “. தள நிர்வாகிகளுக்கு நன்றிகள்.
4. கட்டுரையின் தலைப்பு Truth After Trump, என்று இருந்தாலும் இந்த உண்மை நம்மோடு பல பத்தாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. இதை விரிவாக இப்போதுதான் ஆங்கில உலகங்களில் பேசுகிறார்கள். Post-truth Politics என்று ஒரு விக்கிப்பீடியா பக்கமே இருக்கிறது. இனி வரும் நாட்களில் உண்மைக்குப் பிந்தைய யுகம் இன்னும் அதிகம் பேசப்படும் என்று தோன்றுகிறது.
oOo
ட்ரம்ப்புக்கு பிந்தைய உண்மை – பொய்கள், மீம்கள், ஆல்ட்-ரைட் – ஜஸ்டின் ஈ.ஹெச். ஸ்மித்
ஹாரி ஜி. பிராங்க்ஃபர்ட் என்ற தத்துவவியலாளர் எழுதிய “புல்ஷிட் பற்றி” என்ற கட்டுரை, பிரின்சிடன் யூனிவர்சிடி பிரஸ்சால் 2005ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது, அதற்கு முந்தைய பல ஆண்டுகளாகவே ஒரு samizdat பிரசுரமாக அது புழக்கத்தில் இருந்திருக்கிறது. அந்தக் கட்டுரையில் அவர், இதற்கு முன் கவனத்தைத் தப்பியிருந்த உண்மையல்லாததன் இனவகை ஒன்றை அடையாளம் கண்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார். அதுவும் பொய்மை வகைமையைச் சேர்ந்ததுதான், ஆனால் தன்னைவிட பரவலாக அறியப்பட்டிருந்த தன் உறவுமுறை போலல்லாமல் அது பொய்யை மெய்யென்று ஏய்க்க முற்படுவதில்லை. மாறாக, புல்ஷிட்டர் என்பவன் உண்மைதான் சொல்லாடலின் (discourse) நங்கூரம் என்ற எண்ணத்தை விட்டுவிட்டவன். அவன் உண்மையைப் பற்றிய கவலையே இல்லாமல் பேசுபவன். முடிவாக, தன்னோடு உரையாடிக் கொண்டிருப்பவன் தான் பேசுவது பொய்யா இல்லையா என்பது பற்றி ஏதாவது அறிந்திருக்கிறானா என்பதைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாதவன். “நேர்மையான ஒருவன் பேசும்போது,” என்று விளக்குகிறார் பிராங்க்ஃபர்ட், “தான் உண்மை என்று நம்புவதை மட்டும்தான்  சொல்கிறான்”. பொய்யனுக்கு, “தன் அறிவிப்புகள் பொய்யானவை என்பதை தான் அறிந்திருப்பது தவிர்க்க முடியாததாய் இருக்கிறது“. ஆனால், புல்ஷிட்டரின் கண், “நேர்மையானவன் மற்றும் பொய்யனின் கண்கள் போல், உண்மைத் தகவல்களின்மீது இருப்பதே இல்லை. சொல்வதைச் சொல்லிச் செல்வதில் தான் எந்த அளவுக்கு பிழைத்துக் கொள்ள முடியும் என்பதில் அவனுக்குள்ள அக்கறைக்கு ஏற்ற அளவில் வேண்டுமானால் அவன் உண்மையைப் பொருட்படுத்தக்கூடும். ஆனால், தான் சொல்லும் விஷயங்கள் யதார்த்த உலகைச் சரியாக விவரிக்கின்றனவா என்பதைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. அவன் தன் நோக்கங்களுக்கேற்ற விஷயங்களைப் பொறுக்கியெடுத்துக் கொள்கிறான், அல்லது இட்டுக்கட்டிக் கொள்கிறான்” என்ற வாதத்தை முன்வைக்கிறார் பிராங்க்ஃபர்ட்.
நாம் பிராங்க்ஃபர்ட் பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டியதில்லை, புல்ஷிட் என்ற சொல்லின் துல்லியமான, துறை சார்ந்த பொருள் புரிந்து கொண்டிருக்க வேண்டியதில்லை, அதிபர் தேர்தலின் குடியரசுக் கட்சி வேட்பாளருடன் இதைப் பொருத்திப் பார்க்க முடியும். ஆனால், இந்தத் தேர்தலைப் புரிந்து கொள்ள பிராங்க்ஃபர்ட்டிய பகுப்பாய்வு போதுமானதாக இருக்குமா?
(தொடரும்)
02/11/2016 20:04
(கீழ்க்கண்ட பத்திகள் ஜார்ஜ் புஷ் பற்றி மட்டும்தான் சொல்கின்றன என்றாலும் அதன் பின் வந்த  அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகமும் உண்மையைப் புனிதமான ஒன்றாகப் பொருட்படுத்தவில்லை. அது தனக்கேற்ற அறிவுச்சூழலை வெற்றிகரமாக உருவாக்கவே முனைந்தது. அண்மையில் நிறைவேறிய இரான் ஒப்பந்தம் தொடர்பாக, அதை ஏற்பதற்கு இணக்கமான கருத்துச் சூழல் சமூக ஊடகங்களைக் கொண்டு பொதுத் தளத்தில் ஆட்சியாளர்களால் எவ்வளவு அழகாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்பதை தி நியூ யார்க் டைம்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரை விவரிக்கிறது. வாசிக்க வேண்டிய ஒன்று, இது (சுட்டி உதவி, அரவிந்த் கருணாகரன்))
மொழியாக்கம் தொடர்கிறது-
சதாம் ஹுசேன் பேரழிவுக்கான ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கும் நடவடிக்கையாக ஈராக் மீது படையெடுப்பு நடத்தியாக வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் துணிகர பிரசாரத்தை அடுத்தே பிராங்க்ஃபர்ட்டின் பிரதி பிரின்சிடனால் பதிப்பிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், “யதார்த்தத்தை அடிப்படையாய்க் கொண்ட சமூகம்” (“reality-based community“) என்று அழைத்துக் கொண்ட அமைப்பை நிராகரித்தவர்களால் போருக்கான வாதம் முன்வைக்கப்பட்டது. இந்தப் பதம் முதன்முதலில் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் ரான் சுஸ்கைண்ட் என்ற பத்திரிகையாளரால் 2004ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டது. சுஸ்கைண்ட் பெயர் சொல்ல விரும்பாத ஒரு புஷ் ஆலோசகரை பேட்டி கண்டிருந்தார், அது கார்ல் ரோவ்தான் என்ற ஊகம் பரவலாய் பேசப்பட்டது. அந்த ஆலோசகர் இவ்வாறு விளக்கம் தந்தார்: “நாம் இப்போது ஒரு பேரரசாகி விட்டோம், நாம் செயல்படும்போது, நமக்கே உரிய ஒரு மெய்ம்மையை உருவாக்குகிறோம். நீங்கள் அந்த மெய்ம்மையை அவதானித்துக் கொண்டிருக்கும்போது- உங்களுக்கேயுரிய சமநிலையுடன் ஆய்வு செய்து கொண்டிருக்கும்போதே- நாங்கள் மீண்டும் செயல்படுவோம், அப்போது புதிய மெய்ம்மைகளை உருவாக்குவோம், அவற்றையும் நீங்கள் ஆராய்ச்சி செய்யலாம், இப்படித்தான் விஷயங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வரும். நாங்கள் வரலாற்றை அரங்கேற்றுபவர்கள்… நீங்கள், நீங்கள் அனைவரும், எங்கள் செயல்களை ஆய்வு செய்வதைத் தவிர வேறு செய்வதற்கில்லை“.
இங்கு நாம் புல்ஷிட் என்பதன் பொருளில் புரிந்து கொள்ளப்பட முடியாத அளவில், உண்மை அலட்சியப்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். ஏமாற்றுக்காரன் அல்லது பித்தலாட்டக்காரன் ஒருவன் உண்மையிலிருந்து வழுவுவான் என்று நாம் எதிர்பார்ப்போம், அதுவல்ல இது. தன்னைக் குறித்து உரத்த குரலில் பெருமை பேசிக்கொள்ளும் ஒருவன் நோய்மைப்பட்டவன் என்று சொல்லுமளவு உண்மை மீது அக்கறையில்லாமல் இருப்பான் என்று நாம் எதிர்பார்ப்போம், அதுவுமல்ல இது. எந்த உண்மையின் அடிப்படையில் நமக்கெல்லாம் நீதி வழங்கப்படுமோ, அந்த உண்மை, தனக்குத் தானே மாமனிதன் என்று பெயர் சூட்டிக்கொண்ட ஒருவனால் (Übermensch) (அல்லது அந்த மாமனிதனின் சார்பில் பேசுபவனால்) தைரியமாக நிராகரிக்கப்படும் செயல்.
(தொடரும்)
oOo
3/11/2016 9:00
(‘உண்மைக்குப் பிந்தைய காலம்’ உருவாகிறது என்றால், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மெய்ம்மையைக் கட்டமைக்கும் ஆற்றல் உள்ளது, கருத்துகளை மட்டுமே உருவாக்கிக் கொள்ளக்கூடிய பிறருக்கு அது குறித்து கதைகளை உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரம் மட்டுமே உள்ளது, அந்தக் கதைகளையும் தமக்கேற்ற வகையில் ஆட்சியாளர்களால் புனைந்தளிக்க இயலும் என்ற நம்பிக்கையே அடிப்படை காரணம். பின் வரும் பத்திகளில் ஒன்றில் ருஷ்ய பரப்புரை குறிப்பிடப்படுகிறது, சோவியத் யூனியன் உடைந்தபின்னும், ருஷ்யாவின் பிரசார சிந்தனைகள் வளர்ந்தபடியேதான் உள்ளன. தற்போதைய ருஷ்ய அதிபர் புதினின் ஆலோசகரான சுர்கோவ் குறித்த இந்தக் கட்டுரை வாசிக்கப்பட வேண்டிய ஒன்று- Open Democracy. “சுர்கோவின் தத்துவம், உலகில் உண்மையான சுதந்திரம் என்பதே கிடையாது என்றும் மக்களாட்சிகள் அனைத்தும் நெறிப்படுத்தப்பட்ட மக்களாட்சி அமைப்புகளே என்றும், மக்களிடையே தாக்கம் ஏற்படுத்துவதுதான் வெற்றியின் திறவுகோல் என்பதால் உண்மையில் நெறிப்படுத்தப்பட்டவர்களாய் இருப்பினும் அவர்களுக்கு தாம் சுதந்திரமாய் இருப்பதான மயக்கத்தை அளிப்பதே போதுமானது என்றும் நம்புகிறது. அவரது பார்வையில், “கலைஞனின் சுதந்திரம்” மட்டும்தான் ஒரே சுதந்திரம்,” என்று எழுதுகிறார் கட்டுரையாளர். இங்கு கூறப்படும் விஷயங்களுடன் அதைத் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். “பொய்ம்மையும் வாய்மையிடத்த, புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில்“, என்று சொல்லும்போது வள்ளுவரும்கூட ‘பொய்ம்மையும் வாய்மையிடத்த’ என்று வாய்மைக்கு இணையான இடத்தில் பொய்ம்மையை இருத்துகிறார்.)
இனி மொழியாக்கம்-
டொனால்டு ட்ரம்ப் குறித்து அமெரிக்க வாக்காளர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளில் பெரும்பாலானவை அவர் எப்படிப்பட்டவர் என்பது குறித்துதான்: அவர் மட்டமான ஒரு மோசடிப் பேர்வழியா, அல்லது மதிப்பீடுகளை மறுபரிசீலனைகளுக்கு உட்படுத்தும் மாமனிதனா? அவர் உண்மையைச் சொல்கிறாரா இல்லையா என்பது ஒரு விஷயமே இல்லை. எனவேதான், அவர் பொய் சொல்கிறார் என்பதை மட்டும் சுட்டிக் காட்டுவது அவருக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படுத்துவதில்லை என்பதன் தோல்வி அவரை எதிர்ப்பவர்களுக்குச் சலிப்பேற்படுத்துகிறது. அரசியலில் புஷ் நிர்வாகத்தினரின் பித்தலாட்டங்கள் “உண்மைக்கு-பிந்தைய காலகட்டம்” ஒன்றைத் துவக்கி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது, அது மேலோங்கி வருவதை ட்ரம்ப்பின் பிரசார உத்திகள் உறுதி செய்திருக்கின்றன. ஆனால் இங்கு நாம் உண்மைக்கும் உண்மைத் தகவல்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். ஒரு பார்வையில், ட்ரம்ப் ஒரு புல்ஷிட்டர், மோசடிப் பேர்வழி, உண்மைத் தகவல்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்பவர்- தன் பொய்களை நியாயப்படுத்தக்கூடிய ஒரு மகத்தான தரிசன உண்மையை நோக்கிச் செல்கிறார் என்பதாலல்ல, அவர் தன் விருப்பத்துக்கு ஏற்ற எதையும் சொல்லலாம், அது எதற்கும் அவர் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்பதை அறிந்திருக்கிறார் என்பதால்தான் அவர் இந்தப் பொய்களைச் சொல்கிறார். மற்றொரு பார்வையில், அதிபராய் ஆட்சி செய்யும் ஒருவரின் குறிக்கோள் என்ன என்பது குறித்த புஷ் ஆலோசகரின் புரிதல் இருக்கிறது, அது விசேஷ உண்மைகளைச் சாத்தியப்படுத்துவது (மத்திய கிழக்கில் மக்களாட்சியை உருவாக்குவது ஒரு உதாரணம்)- ஒரு விஷயத்தில் குறிப்பிட்ட சில உண்மைத் தகவல்கள் எப்படிப்பட்டவையாய் இருந்தாலும், அவற்றைவிட இந்த விசேஷ உண்மையே முக்கியமானது.
சில உண்மைகள் புறவுலகில் பொய்யாய் இருப்பினும் அற உண்மைகளாய் இருக்கலாம் என்ற சிந்தனை ஜார்ஜ் டபிள்யூ புஷ் காலத்துக்கு வெகு முந்தைய ஒன்று. இரு வேறு உண்மைகள் என்று ருஷ்ய மொழி அகராதியின் பகுப்பு இங்கு செயல்படுகிறது- ப்ராவ்தா, என்பது அடிப்படையில் உண்மைத் தகவல்களில் காலூன்றிய ஒன்று, இஸ்தினா என்பது ஏதோ ஒரு வகையில் உண்மைத் தகவல்களைவிட உயர்ந்த விசேஷ உண்மை. போல்ஷெவிக்குகள் இந்த வேறுபாட்டைத் தலைகீழாக்கினர், உண்மை நிலவரத்தை விவரிப்பதற்கு பதில் எது உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்களோ அதை விவரித்த ஒரு செய்தித்தாளுக்கு எந்த வித நகைமுரண் உணர்வும் இல்லாமல் ப்ராவ்தா என்று பெயர் சூட்டினார்கள்.
வெறும் சாமானிய, யதார்த்த தளத்துக்கு அப்பால் கடந்து செல்வது என்பதுதான் ஐபீரிய தீபகற்பத்தின் கிறித்தவ சமயம் மிகத் தொன்மையானது என்பதை ஆவணப்படுத்தும் ‘ஃபால்சோஸ் க்ரோனிகோன்ஸ்’ என்று அழைக்கப்பட்ட நூலை எழுதிய கத்தோலிக்க வரலாற்றாய்வாளர் ஜெரோனிமோ ரோமான் தி லா ஹிக்வேராவின் பொய்களை பதினாறாம் நூற்றாண்டு ஸ்பெயின் எவ்வாறு எதிர்கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. அது அத்தனையும் அவரே உருவாக்கிய கதை என்பது கண்டுபிடிக்கப்பட்டபோது, கிறித்துவுக்குப் பின் வந்த அடுத்த சில நூற்றாண்டுகளில் கிறித்தவர்கள் எவரும் பலி கொள்ளப்படவில்லை, அதிசயம் எதுவும் நிகழவில்லை என்பது அறியப்பட்டபோது, ஒரு பித்தலாட்டக்காரர் என்று ரோமான் தி லா ஹிக்வேரா கண்டனம் செய்யப்படவில்லை. மாறாய், அவரது ஆவணங்களின் யதார்த்த தள பொய்மை மிக ஆழமான ஒரு உண்மையை உணர்த்தும் வல்லமை கொண்டிருப்பதைக் குறிப்பதாய்க் கொள்ளப்பட்டது. அவர் வெற்றி பெற்று விட்டார்- புனைவதைக் கொண்டு, எழுதுவதைக் கொண்டு, கதை சொல்வதைக் கொண்டு-, ஸ்பெயினின் தொலைதூர கடந்த காலத்தினுள் கிறித்துவத்தைப் பிந்திச்செலுத்துவதில் அவர் பெற்ற வெற்றி வெறும் தகவல்களை ஒப்புவித்தலைக் காட்டிலும் மகத்தானதுதானே.
(தொடரும்)
oOo
07/11/2016 18:30
(“ரோ: தீ!
கில்: எங்கே?
ரோ: ஒன்றுமில்லை – கருத்துச் சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நிகழ்த்திக் காட்டுகிறேன். அது உண்டு என்பதை நிரூபிக்கிறேன்.
உண்மை- பொய் குறித்த அக்கறையோ, பின்விளைவு குறித்த அச்சங்களோ இல்லாமல், கலவரப்படுத்தும் நோக்கத்தில், கூட்டம் நிறைந்த ஓர் அறையில், “தீ!’ என்ற குரலெழுப்பி பீதியைக் கிளப்புபவன், கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றுகிறானா, இல்லை, அதற்கொரு அச்சுறுத்தல் ஆகிறானா?
இந்த மொழிபெயர்ப்பில் பேசப்படுபவர்கள் டிவிட்டர், பேஸ்புக் முதலான சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்க ஆல்ட்-ரைட்கள், மாற்று- வலதுசாரி என்று அழைத்துக் கொள்பவர்கள், இவர்கள் பெரும்பாலும் இணையத்தில் செயல்படுபவர்கள், அவுட்ரேஜ் – தர்மாவேச- கலாசாரத்துக்கு தீனி போடுபவர்கள். மீம்கள் பகிர்பவர்கள் (சொல்லும் பிம்பமும் கூடிய மீம் வடிவம், படிமமாக வளர்தெடுக்கப்படக்கூடிய ஆற்றல் கொண்டது). எதையும் நிறுவுவதைவிட, கோபப்படுத்துவதே இவர்களின் வெற்றியாகிறது. பல்வேறு மக்கள் ஒன்றுகூடி உரையாடுவதை அங்கீகரிக்கும் குடிமைச் சமூகத்துக்கு எதிரான இவர்களுக்கு தற்சார்பு கொண்ட சீற்றத்தின் வெற்றிடமே உரிய தளம். இது தொடர்பாய் வாசிக்கத்தக்கது – I’m With The Banned, Laura Penny
சுட்டியில் உள்ள கட்டுரையிலும் முந்தைய பத்தியின் முன்னும் மேற்கோள் காட்டப்பட்டுள்ள உரையாடல், டாம் ஸ்டப்பார்டின் ‘ரோஸன்கிரட்ஸ் அண்ட் கில்டர்ஸ்டெர்ன் ஆர் டெட்’ என்ற நாடகத்தில் வருவது. எதிர்காலத்தைக் கணிப்பது மிகக் கடினம் என்றாலும், நாம் யாரும் இருக்கப் போவதில்லை என்பதால் இதைத் துணிந்து சொல்லலாம்- இவரது நாடகங்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் பேசப்படும், அவற்றின் உரையாடல்கள் இன்னும் பரவலாய் மேற்கோள் காட்டப்படும். மொழியாளுமை, சொற்பிரயோகத்தில் புதுமை, கற்பனையின் கடிவாளமின்மை, இவை போதாதென்று அரசியல், தத்துவம், அறிவியல் என்று பல்துறையிலும் விரியும் தன் சமகால பண்பாடு குறித்த கூர்மையான புரிதலின் ஆழம் கெடாமல், அதைத் தன் எழுத்தில் பூவாணங்களுக்குரிய விளையாட்டுத்தனமான, புவி ஈர்ப்பு விசைக்கு உட்படாத ஒரு ஒளித்தெறிப்புடன் வெளிப்படுத்துபவர் டாம் ஸ்டப்பார்ட்.)
இனி மொழிபெயர்ப்பு:
நாம் ஏன் உண்மைத் தகவல்களுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்? அவர், வேர்ச்சொல் ஆய்வுகள் சொல்வது போல், நாம் தன்னிச்சையாய்க் கண்டெடுக்கும் ஏதோவொரு வகை கச்சாப் பொருளல்ல, மாறாய், அவை முனைந்து உருவாக்கப்பட வேண்டிய வஸ்துக்களைப் போன்றவை- லத்தின் மொழியில் நிறைவு பெற்ற வினையைக்குரிய factum என்ற சொல்லைப் இங்கு பயன்படுத்தலாம். பிரசாரகர்கள், அவர்கள் ஜெசூயிடுகளாகவோ போல்ஷெவிக்குகளாகவோ ரோவியர்களாகவோ எப்படியிருந்தாலும், உண்மை குறித்த தரவுகள், சமூக தரவுகள் என்ற அளவிலேனும், மானுட வினையாடலின் விளைவுகள் என்பதை, பொதுத்தளத்தில் புதுவகைச் சிந்தனைகளையும் உரையாடல்களையும் புகுத்தும் செயலின் உட்கூறு என்பதை, அறிந்திருப்பவர்கள்- இது வெற்றிகரமாக நிகழ்த்தப்படும்போது, பொது மக்கள், சில சமயம், உண்மை குறித்த புதிய புரிதலை அடைகிறார்கள்.
ஆனால் இதுவல்ல ட்ரம்ப் செய்வது. அவர் வெறும் புல்ஷிட்டர். தனக்கு மட்டுமே தெரிந்த சாமானிய உண்மைகளுக்கு அப்பாற்பட்ட வேறொரு மகத்தான தரிசனத்துக்கு ஒப்ப உலகையோ அமெரிக்காவையோ படைப்பது என்பதைவிட ஆளுமை சார்ந்த நோய்மைகளின் வெளிப்பாடுகளே அவர் பேசும் சொற்கள்.
ஆனால் ட்ரம்ப்பிசத்தை ஊக்குவிப்பவர்கள் தேர்ந்த பிரசாரகர்கள், தரவுகளை முனைந்து உருவாக்கப்படுபவைகளாகக் கொள்வதால், உண்மை எவ்வழியில் பொருள் கொள்ளப்படுகிறது என்பதை இறுதியில் மாற்றியமைக்க முடியும் என்று நன்றாக அறிந்தவர்கள் (இங்கு நாம் சோஷல் கன்ஸ்ட்ரக்ஷனிசம் என்ற பூச்சாண்டியைப் பேச வேண்டியதில்லை, உண்மை எவ்வழியில் பொருள் கொள்ளப்படுகிறது என்பதை மாற்றுவது, “புதிய உண்மையை உருவாக்குவதற்கு” இணையாகுமா என்பதையும் பேச வேண்டாம்). ஆல்ட்-ரைட்டைச் சார்ந்த செயல்பாட்டாளர்கள் பல ஆண்டுகளாக இணையத்தில் ட்ரோல் செய்வதை ஒரு திட்டமிட்ட இயக்கமாக மேற்கொண்டு பொதுத்தளச் சொல்லாடலை மாற்றியமைக்க பல ஆண்டுகளாக இயங்கி வருகிறார்கள். “மீம் மாயம்” என்ற ஒன்றை உருவாக்குவதே அவர்களின் லட்சியம்- இணையத்தில் அவர்களால் பகிரப்படும் கருத்து, மெய்நிகர் உலகை விட்டு யதார்த்த உலகுக்குத் தாவும் கணம் மீம்-மாயம் வெற்றி பெற்றதாகக் கொள்ளப்படுகிறது.
இந்தத் தாவலுக்கான குறியீடு ஒரு தவளையாய் இருப்பதை விட வேறெது பொருத்தமாக இருக்க முடியும்? செப்டம்பர் மாதத் துவக்கத்தில், டொனால்டு ட்ரம்ப் ஜூனியர், தனது தந்தை இடம்பெறும் ‘தி டிப்ளோரபில்ஸ்’ என்ற கற்பனை சாகசப் படத்தின் விளம்பரமரமொன்றைப் பகிர்ந்தார். அதில் அவருடன் இருந்த கார்ட்டூன் காரக்டர், பெப்பே என்ற தவளை என்பது பலரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடியதே. சில ஆண்டுகளுக்கு முன்னர், மானுட உருவம் கொண்ட தவளையாய் பெப்பே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது, “ஃபீல்ஸ் குட், மேன்” என்ற வாசகத்துடன் பெப்பே என்ற தவளையின் பிம்பங்கள் பகிரப்பட்டன. ஆனால் அண்மைக் காலத்தில் யூதர்களுக்கு எதிரான கோஷங்களைத் தாங்கியும், இனவாத மீம்-பிரசாரங்களுக்கும் ஆல்ட்-ரைட் பெப்பே என்ற தவளை சுவீகரித்துக் கொள்ளப்பட்டது. ‘தி டிப்ளோரபில்ஸ்’ விளம்பரம் பகிரப்பட்ட சில நாட்களிலேயே, ஹிலாரி கிளிண்டனின் பிரசாரகர்கள் “அந்த கார்ட்டூன் தவளையின் அச்சுறுத்தல் நீ நினைப்பதை விட மோசமானது” என்று வாதிட்டனர்.
இது எதிர்பார்த்தது போலவே ஆல்ட்-ரைட்டை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. ஆல்ஃபாவில் ஹெரால்டு என்ற தளத்தில் (யூரிசெனஸ் ஸ்க்ளார் என்ற) பீட்டர் லட்லோ, தத்துவவியலாளர், (வீவ் என்ற) ஆண்ட்ரூ ஆவெர்ன்ஹைமர், அபகீர்த்தி கொண்ட ஆல்ட்-ரைட் செயல்பாட்டாளரை நேர்முகம் கண்டபோது, பெப்பேவை பொதுத்தளத்துக்கு கொண்டு செல்ல மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ஆண்ட்ரூ விளக்கம் அளித்தார்: “நாங்கள் இவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்தோம், ஓராண்டாக இவர்கள் மீது தவளைகள் ஒரு பிளேக்காய் வந்து விழுந்தவாறிருந்தன, திடீரென்று இப்போது பொதுவெளியில் ஒரு கார்ட்டூன் தவளையைப் பார்த்து ஓலமிடுகிறார்கள்”. இந்த உத்தியின் பயன்பாடு பற்றி லட்லோவின் கேள்விக்கு ஆவெர்ன்ஹைமர் இவ்வாறு பதிலளித்தார்: “உரையாடலுக்கு அவசியமேயில்லை. பத்திரிக்கையாளர்களை பணிய வைத்தாக வேண்டும் என்பது வெளிப்படையான விஷயம், குறிப்பிட்ட ஒரு கையொப்பம் போன்ற ஒன்று தேவை என்பது அதைவிடத் தெளிவு”
(தொடரும்)
10/11/2016 7:00
(எங்கோ வாசித்தது, பூர்ஷ்வா விழுமியங்களுக்கு எதிராக இடதும் வலதும் கை கோர்த்தால் ஜனநாயகம் என்னவாகும்? அதைத்தான் இப்போது பார்க்கிறோம்.
அரசுகள் மறைத்து வைத்துள்ள ரகசியங்களை அம்பலப்படுத்துவதாய்ச் சொல்லிக்கொள்ளும் விக்கிலீக்ஸின் டிவீட்டில் உண்மைக்கு சிறிதும் தொடர்பில்லாத ஒரு மீம்:
capture
(இதன் உண்மை – Snopes.com)
வெள்ளையின மேலாதிக்கத்தை வலியுறுத்தும் டேவிட் ட்யூக்ஸ், ட்ரம்ப் வெற்றி பெற்றபின்- :
capture2
இனி மொழியாக்கம்)
இதுவெல்லாம் ஒரே சமயத்தில் விளையாட்டாகவும் மரண வேதனையாகவும் இருக்கிறது. ஆன்லைன் ட்ரோல்களின் ஆற்றல் ட்ரம்ப்புக்கு உதவியிருக்கிறது- பல ஆண்டுகளாக இந்த ஆற்றலை நாம் குறை சொல்லிக் கொண்டிருந்திருக்கிறோம், ஆனால் அரசியல் மெய்ம்மையின் மீது அது செலுத்தக்கூடிய தாக்கத்தை மிகவும் குறைத்து மதிப்பிட்டிருக்கிறோம். கல்விப்புலம் சார்ந்த பூர்ஷ்வா லிபரல்கள் தங்கள் உயர்வைக் காட்டும் சமிக்ஞைகளிலும் தத்தம் மூதுரைகளை அங்கீகரித்துக் கொள்வதிலும் பேஸ்புக்கில் முழுவேலையாக இருக்கிறார்கள். இதுபோதில் மிக வலிமையான வலதுசாரி மீம்கள் டிஜிடல் பெட்ரி டிஷ்களில் வளர்த்தெடுக்கப்படுகின்றன. பரவலாய்ப் பகிரப்படுவது எதுவாக இருந்தாலும் அதைக் கொண்டு செல்லும் கருவியாக ட்ரம்ப்பின் பிரச்சாரம் இருந்திருக்கிறது, அது எங்கிருந்து வருகிறது என்பது பற்றிய உண்மை அறிவோ புரிதலோ அதில் கிடையாது. கிளிண்டன் பிரசாரமோ, தன் அரசியல் தளம் குறித்து முரண்பாடற்ற ஒன்றை வெளிப்படுத்தாமல், விபரீத டிவிட்களைக் கண்டனம் செய்வதில் தன் நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறது- அவற்றையும் பெருமளவில் புரிந்து கொள்ளாமல்.
நாம் வினோதமான ஒரு அரசியல் தருணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்- இங்கு தீவிர வலதுசாரிகளுக்கு மட்டுமே நகைமுரண் வசப்பட்டிருக்கிறது, இடதுசாரியில் உள்ளவர்கள் தமக்குள் கோட்பாடுகளை உள்ளர்த்தம் இல்லாமல் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆல்ட்-ரைட் செயல்பாட்டாளர்கள் இதை ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள், ஆனால் நான் முதன்முதலில் எதிர்கொண்ட ரீகன் காலகட்ட இளம் ரிபப்ளிகன்களைவிட இவர்கள் ஏபி ஹாஃப்மென்னின் அணுகுமுறையே அதிகம் கொண்டவர்களாய் இருக்கின்றனர். ஒரு கேலிப் புன்னகையுடன் இவர்கள் தம் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள், இவர்களுக்கு இதில் ஒரு மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. உலகளாவிய வெள்ளையின மேலாதிக்கத்தின் அவசியத்தை உண்மையாகவே நம்புகிறாயா என்று ஆவெர்ன்ஹைமரிடம் லட்லோ கேட்டபோது, “நான் வெறுமே ட்ரோல் செய்து கொண்டிருக்கிறேன்” என்று அவர் பதில் சொன்னது போல்தான்.
ஆனால் ஆல்ட்-ரைட்டுகளின் மீம் மாயம் உண்மையில் ஒரு இனவாத-தேசியவாதியை அமெரிக்காவின் மிக உயர்ந்த பணியில் அமர்த்த உதவுகிறது என்றால் அவரது ஆட்சி நகைமுரண் தன்மை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. முந்தைய தலைமுறைக்கு உரிய வழக்கமான மொட்டைத்தலை முரடனைவிட இந்த ஆல்ட்-ரைட் மிகவும் புத்திசாலி, ஆனால் இறுதியில் அது நம் அரசியல் சொல்லாடலில் புகுத்தும் சிந்தனைகள் முரண்நகை நோக்கத்தில் செய்யப்பட்டதா அல்லது அதிதீவிர நோக்கத்தில் செய்யப்பட்டதா என்பது ஒரு விஷயமில்லை. அதன் விளைவு ஒன்றுதான்: விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட சமூகங்களுக்கு அது தீங்கிழைக்கப்போகிறது. இவர்கள் நகைமுரண் மற்றும் நேர்ச்சொல் ஆகிய இரண்டையும் பொருட்படுத்தத் தவறுதல், மெய்த்தகவல்களைத் பொருட்படுத்தாமையின் இணை. நகைமுரணாகச் செய்கிறோமா அல்லது குறிப்பிட்ட ஒரு நோக்கத்தில் செய்கிறோமா, அது யதார்த்த மெய்ம்மையை ஆதாரமாய்க் கொண்டதா இல்லையா என்பது எப்படியிருந்தாலும் ஏதோ ஒரு தகவலைக் கொண்டு சென்றால் போதும், நம் அரசியல் மெய்ம்மையின் உறுப்பாகும் வாய்ப்பு அதற்கு இருக்கிறது.
ட்ரம்ப் ஒரு புல்ஷிட்டர். ஆனால் அவரை எந்தச் சக்திகள் தூக்கி நிறுத்தியிருக்கின்றனவோ, அவை புல்ஷிட்டுக்கு அப்பால் வெகு தொலைவு செல்கின்றன. குடியரசுக் கட்சியில் எது மிச்சமிருக்கிறதோ அதனுடன் அவருக்குள்ள அத்தனை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன, மீட்க முடியாத அளவு அவர், சாக்கடைத்தனமான சதித்திட்டங்களைப் பரப்புரை செய்யும், உலகளாவிய ஒரு மாபெரும் சதிகாரக் கூட்டத்தைக் காட்டி அச்சுறுத்தும் ஆல்ட்-ரைட்டின், அந்த உலகளாவியச் சதியைப் பேசும்போது ஆல்ட்-ரைட் முன்வைக்கும் உண்மைகளை உறுதி செய்யவோ நிராகரிக்கவோ தேவைப்படும் ஆதாரங்கள் எத்தரத்தவை என்பது மட்டுமல்ல, அதன் கோரிக்கைகள் எவை என்பது பற்றியும்கூட ஒரு சிறு புரிதலும் இல்லாமல் கூக்குரலிட்டு கோஷம் எழுப்பி ஆமோதிக்கும் கும்பல்களின், அணைப்பைச் சேர்ந்து விட்டார். இந்தக் கும்பல்கள் புல்ஷிட்டை நம்பி விட்டன என்பதல்ல, மெய்த்தகவல்களைவிட உயர்ந்த, தரவுகளைச் சாராத ஒரு உண்மை உள்ளது என்ற எண்ணத்தின் வசியத்தில் இந்தக் கூட்டங்கள் கட்டுண்டு விட்டன. இதே எண்ணம்தான் ரோமான் தி லா ஹிக்வேரா என்ற போலி வரலாற்றாய்வாளரை பரவலாக போற்றப்படும் ஒரு நாயகராக்கியது, இஸ்த்வாவை நிலைநாட்டுவதாக பிராவ்தா ஒரு நூற்றாண்டின் பெரும்பகுதிக் காலம் நாடகமாட உதவியது. இது ஆற்றல் வாய்ந்த ஒரு எண்ணம், ஆபத்தானது, அரசியல் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளில் அடிப்படையாக உள்ள ஏதோவொன்றை இதன் உரைகள் சென்று சேர்கின்றன.
(முற்றும்)