வெள்ளி, ஜூன் 02, 2017

அடிப்படைவாதம் என்றால் என்ன?

அடிப்படைவாதம் என்றால் என்ன?

நன்றி - தோழர் எச்.பீர்முஹம்மது.

அடிப்படைவாதம் (Fundamentalism) என்ற சொல்லாடல் தற்போது உலக அளவில் பிரபலமான ஒன்றாக மாறி வருகிறது. பெரும்பாலும் மதங்களை குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது லௌகீக உலகின் எல்லாவித போக்குகளையும் குறிக்கும் ஒன்று. ஒன்றின் அடிப்படைகளை உள்வாங்கி அதன் நுனிமங்கள் மீது தொங்கிக் கொண்டிருப்பது. இதன்வழி வரலாற்றின் வளர்ச்சி போக்குகள் மீது எவ்வித நம்பிக்கைகள் அற்று இருப்பது. உலகின் போக்கை, இயக்கத்தை நிராகரிப்பது அல்லது ஏற்றுக்கொள்ள மறுப்பது. எல்லாவற்றையும் தான் நம்பும் அடிப்படைகள் மீது உரசி பார்ப்பது, அதன் மீது குழப்பமும், சந்தேகமும் கொள்வது இவற்றின் மொத்த கூறுகள் அடிப்படைவாதம் என்றழைக்கப்படுகின்றது. இந்நிலையில் சுய சிந்தனையற்ற நடைமுறை செயல்பாடுகள் அடிப்படைவாதிக்கு உரியதாக இருக்கின்றன. மேலும் வாழ்வின் எல்லாவித இயக்கங்களுக்கும் ஓர் அடிப்படைவாதி தான் நம்பும் கோட்பாடு அல்லது கொள்கையின் மீது உரசி உரசி நிற்பான். அது மட்டுமே உலகம் என்று நம்புவான்.

இன்றைய உலகில் அடிப்படைவாதம் பல கிளைகளாக, பல துறைகளை நோக்கி தன்னை வியாபித்திருக்கிறது. மத அடிப்படைவாதம், மொழி அடிப்படைவாதம், சந்தை அடிப்படைவாதம், பொருளாதார அடிப்படைவாதம், புரட்சி அடிப்படைவாதம் இப்படியாக பல தளங்களை நோக்கி தன்னை விரிவுபடுத்தி நிற்கிறது. மொழி அடிப்படைவாதம் என்பது மொழி மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும். மொழியை தூக்கி பிடித்தால் பிரதேசம் செழிப்பாகி விடும் என்று நம்புவது. மேலும் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விடாமல் பழம்பெருமையின் பெயரில் தடுப்பது. இவையெல்லாம் மொழி அடிப்படைவாதத்தில் உள்ளடங்குகிறது. தமிழ்நாட்டிலும் அத்தகையவர்கள் உண்டு. சந்தை அடிப்படைவாதம் பிந்தைய முதலாளித்துவ உலகின் நுகர்வு கலாசாரத்தை அடிப்படையாகக்கொண்டது. சந்தை தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். அது அடிப்படையில் சுதந்திரமாக இயங்கும். எல்லா சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது போன்ற அதீத நம்பிக்கைகளை சந்தை அடிப்படைவாதம் கொண்டிருக்கிறது. மேலும் ஒரு பிரதேசத்தில் அரசின் பங்களிப்பை குறைத்து சந்தையை மையப்படுத்தி அனைத்தையும் ஒருமுகப்படுத்துவதன் மூலம் அதனை ஆளுமை செய்ய முடியும் என்ற கருத்தாக்கமும் இதில் நிலவுகிறது. தற்போதைய உலகில் சராசரி மனித வாழ்வை அழிக்கும் ஒன்றாக சந்தை அடிப்படைவாதம் இருக்கிறது. பொருளாதார அடிப்படைவாதம் என்பது பொருளாதாரத்தை மையமாகக்கொண்டது. குறிப்பாக ஊழல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். ஊழல் ஒழிந்து விட்டால் எல்லாவற்றையும் ஒழித்து விடலாம் என்று நம்புவது. இதன் அடிப்படையில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை அதிகம் நம்புகிறார். மற்ற பிரச்சினைகள் குறித்து யோசிக்க மறுக்கிறார். இந்நிலையில் நாம் அவரை பொருளாதார அடிப்படைவாதி என்று கூட என்றழைக்க முடியும். மேலும் பொருளாதாரம் செழித்து விட்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்றும் இவ்வகையான அடிப்படைவாதம் நம்புகிறது. புரட்சி அடிப்படைவாதம் என்பது வறட்டு மார்க்சியர்களை குறிப்பது. மார்க்சையும், ஏங்கல்ஸையும் கடவுளின் இடத்திற்கு கொண்டு போகும் நிலை. அவர்கள் இருவரையும் விட்டால் உலகம் ஏதுமில்லை என்று நம்புவது. மார்க்சியர்களில் உலக அளவில் இம்மாதிரியான சிந்தனை கொண்டவர்கள் சிறிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக மத அடிப்படைவாதம் தான் மிக ஆபத்தானது. காரணம் மதங்களை பின்பற்றும் மனிதர்கள் மாறி மாறி தங்களை அழித்துக்கொள்ள மத அடிப்படைவாதம் காரணமாக அமைகிறது. மதம் தனிமனித அந்தரங்கமாக இருக்கும் பட்சத்தில் அது பெரும் மோதல்களை உருவாக்குவதில்லை. எப்போது சமூகத்தின் கூட்டு பிரக்ஞையாக அது மாறுகிறதோ அப்போது முதல் அது ஆபத்தானதாக மாறி விடுகிறது.

அடிப்படைவாதம் என்ற சொல்லாடல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் கிறிஸ்தவ புரோட்டஸ்டண்ட் பிரிவை குறிக்கும் ஒன்றாக தான் இருந்தது. காரணம் அன்றைய ஐரோப்பாவில் திருச்சபை எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஒன்றாக, கடவுளை அணுக, அடைய ஒரே அதிகாரபூர்வ அமைப்பாக தன்னை நிறுவிக்கொண்டது. இதனை எதிர்த்து தான் புரோட்டஸ்டாண்ட் மற்றும் விடுதலை இறையியல் இயக்கங்கள் உருவாயின. இந்நிலையில் மேற்கண்ட இயக்கங்கள் பைபிளுக்கு புதிய விளக்கங்கள் கொடுத்து அதன் அடிப்படையோடு கிறிஸ்தவர்கள் இயைந்து கொள்ள வேண்டும் என்றன. மரபார்ந்த திருச்சபையின் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. நவீனத்துவ கோட்பாட்டின் உருவாக்கத்திற்கான தேவையும் இங்கிருந்து தான் தொடங்கியது. மேலும் தொடக்க கால நவீனத்துவம் இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவ சிந்தனைகளிலிருந்து மாறுபட்டு இருந்தது. பிந்தைய கால நவீனத்துவத்தின் முக்கிய அம்சங்களான மதசார்பின்மை, ஜனநாயகம், சமதர்மம் மற்றும் தேசியம் ஆகிய கருதுகோள்களுக்கு தொடக்ககால நவீனத்துவம் தான் அடித்தளம் அமைத்தது. கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிரான நிலைபாட்டிலிருந்து தனக்கான கருதுகோளை வடிவமைத்துக்கொண்டது. மேலும் இறைநம்பிக்கையை ஆரம்பகால நவீனத்துவ வாதிகள் ஏற்றுக்கொண்டனர். மேலும் அவர்களில் சிலர் உலக நகர்வுகள் அனைத்தும் இறைவனின் உருவமே என்ற Pantheism கோட்பாட்டில் நம்பிக்கைக்கொண்டிருந்தனர். இவர்கள் இம்மாதிரியான நம்பிக்கைக்கொண்டிருந்த போதும் கடவுளின் நிலைப்புத்தன்மை, நிலையான இருப்பு ஆகியவை குறித்து உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. மேலும் தொடக்ககால நவீனத்துவவாதிகள் பைபிள் மீது நம்பிக்கைக்கொண்டிருந்த போதும் அதன் லௌகீக பொருத்தப்பாடுகள் குறித்த சந்தேகம் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் நாத்திகர்களாக இல்லாத போதும் புனித பிரதிகளின் முழு போதனை குறித்த தர்க்கரீதியான கேள்விகளை கொண்டிருந்தனர். கிறிஸ்தவ திருச்சபையின் மத ஆதிக்கத்தை எதிர்த்து உருவான நவீனத்துவ இயக்கம் பிந்தைய கட்டத்தில் பரிணாம வளர்ச்சி பெற்று தெகார்தேயின் அறிவுவாத கோட்பாட்டை உள்வாங்கியது. அதற்கு பிந்தைய நவீனத்துவவாதிகள் எல்லாம் பகுத்தறிவு ரீதியான கருத்துக்கட்டமைப்பை உடையவர்களாக மாறினார்கள். இங்கு மத அதிகாரம் முழுவதும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. மத அடிப்படைவாதிகள் மற்றும் எதேச்சதிகாரிகள் எல்லாம் விமர்சிக்கப்பட்டார்கள். பைபிளின் நதிமூலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அதன் வசனங்கள் விமர்சிக்கப்பட்டன. மனித விடுதலைக்காக அதனை பயன்படுத்த வேண்டும் என்ற குரல் மேலோங்கி இருந்தது. இது உயர் விமர்சனம் (High Criticism)என்றழைக்கப்பட்டது. மேலும் அன்றைய நவீனத்துவ வாதிகள் பின்வருமாறு தங்களின் கருதுகோளை முன்வைத்தனர். " எல்லாவற்றையும் நிரூபணம் செய். எது நல்லதோ அதை பற்றிக்கொள்". இது அன்றைய கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. காரணம் எந்த ஒன்றையும் உண்மையென நிரூபித்து விட்டு தான் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருதுகோள் இறைவன் மற்றும் புனித பிரதிகள் சார்ந்த பல விஷயங்களுக்கு நெருடலாக இருந்தன.

கிறிஸ்தவ திருச்சபையில் ஆதிக்க மற்றும் அதிகார கருத்தியல்களுக்கு எதிராக உருவாகிய நவீனத்துவத்தின் இரண்டாம் கட்டம் ஐரோப்பாவில் பல துறைகளுக்கும் பரவியது. மனிதன் மதத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று நவீனத்துவவாதிகள் முன்வைத்தார்கள். மனித மனம் சுதந்திரமாக இயங்க வேண்டும். எந்த தனிநபருக்கும், நிறுவனத்திற்கும் கட்டுண்டு கிடக்கும் ஒன்றாக அது இருக்கக்கூடாது என்றார்கள். மேலும் படிப்படியாக அது பிற துறைகளுக்கும் பரவியது. குறிப்பாக மேற்கத்திய இலக்கியத்தில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியது. அதுவரை இருந்த மரபான இலக்கிய ஆக்கங்கள், வடிவங்கள் மறைந்து புதிய வடிவங்கள், உத்திகள் எழுத்துமுறையில் உருவாயின. தனிமனித வாழ்க்கை முறையிலும் அது மிகுந்த பாதிப்பை செலுத்தியது. தற்போதைய உலகம், மாறி வரும் உலகம் என்ற கருத்தாக்கங்கள் மேலோங்கி அதனோடு மனிதர்கள் இயைந்து கொள்ள வேண்டும் என்ற குரல் முன்வைக்கப்பட்டது. அதன் மூலம் மனிதவிடுதலை சாத்தியப்படுவதுடன், மனித உறவும் மேம்படும் என்று மொழியப்பட்டது. இதன் மூலம் ஐரோப்பிய கிறிஸ்தவத்தின் பல நூற்றாண்டு கால சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

ஐரோப்பிய வரலாற்றில் கிறிஸ்தவ திருச்சபை செய்த அக்கிரமங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. திருச்சபையை எதிர்த்தவர்கள், அதற்கு எதிராக கேள்வி
எழுப்பியவர்கள், பாவ மன்னிப்பு சீட்டு முறையை நிராகரித்தவர்கள் அனைவரும் 14 ஆம் நூற்றாண்டு ஸ்பெயினில் விசாரணை கொலை (Inquisition)முறைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு இயந்திரத்தில் வைத்து அவர்களின் உறுப்புகள் துண்டாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் பைபிளுக்கு எதிராக இருக்கின்றன என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் பலர் தண்டிக்கப்பட்டனர். கலிலியோ மற்றும் கோபர்நிகஸ் ஆகியோர் அவ்வாறு தண்டனை பெற்றவர்களின் வரலாற்றில் முக்கியமானவர்கள். மேலும் புனித பார்த்தலோமியா தின படுகொலைகள், கருக்கலைப்பிற்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்கள், சூனியக்காரிகள் என்று குற்றஞ்சாட்டி பெண்களை
கொன்றது, கருப்பர்கள் மீதான் ஒடுக்குமுறை இப்படியாக வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம். கிறிஸ்தவ திருச்சபையின் மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தும் கடவுளின் பெயராலும், பைபிளின் பெயராலும் நியாயப்படுத்தப்பட்டன. பைபிளை பொறுத்தவரை அவர்களால் இருவிதமான கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டன. 1. பைபிள் உலகில் மனிதனுக்கு
தேவையான அனைத்துவிதமான அறிவையும் கொடுக்கிறது. 2. இது லௌகீக உலகின் எல்லா உண்மைகளையும் உள்ளடக்கி இருக்கிறது. இதன் பின்னணியில் நாம் கிறிஸ்தவ மத நிறுவனத்திற்கும் அரசிற்குமான தொடர்பை ஆராய வேண்டும். கி.பி ஒன்றாம் நூற்றாண்டில்
ரோம அரசனான காண்ஸ்டான்டைன் கிறிஸ்தவத்தை அரச மதமாக அறிவிக்க தொடங்கிய போது அதன் நிறுவனத்தன்மையும் தொடங்கியது. போப்கள் அரசனின் ஊதுகுழல்களாக மாறினார்கள். அரசர்களுக்கும் போப்களுக்குமான கூட்டிணைவு ஒரு கட்டத்தில் மத எதேச்சதிகாரமாக மாறியது. பாப்பரசர்க்குரியதை பாப்பரசருக்கும், சீசருக்குரியதை சீசருக்கும் கொடுங்கள் என்ற கோஷம் இருவருக்குமான கூட்டிணைவை பிரதிபலித்தது. இதனால் தான் போப்பின் வயிற்றில் உருவாகும் ஒவ்வொரு அரசனையும் கொல்லுங்கள் என்றார் ஐரோப்பிய சிந்தனையாளரான ரூசோ. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி மற்றும் 20 ம் நூற்றாண்டின் தொடக்க பகுதி இரு காலகட்டங்களின் இடைவெளியில் தான் ரோம கத்தோலிக்க திருச்சபையில் மாற்றம் ஏற்பட்டது. புரோட்டஸ்டாண்ட் மற்றும் விடுதலை இறையியல் கோட்பாடுகளின் உருவாக்கம், நவீன சிந்தனை முறைகளின் தோற்றம் இவை அனைத்தும் திருச்சபையின் மாற்றத்திற்கு காரணமாக அமைந்தன. இதன் தொடர்ச்சியில் காலஞ்சென்ற போப் திருச்சபையின் கடந்த கால செயல்பாடுகளுக்கு மன்னிப்பு கேட்டதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆனாலும் அயர்லாந்திலும், அமெரிக்காவின் சில மாகாணங்களிலும் கிறிஸ்தவ அடிப்படைவாதம் இன்னும் வலுவாக இருக்கிறது.
சொர்க்கத்திற்கு ஒரே அடியாக சென்று விடலாம் என்று கருதி ஒட்டுமொத்தமாக எல்லோரின் உடம்பையும் தீவைத்து எரித்த நிகழ்வும் சில ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் நடந்தேறியது.


இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பிரபலமான ஒன்று. பிரிட்டனின் காலனியாதிக்க பிடியிலிருந்து அரபு நாடுகளின் விடுதலையும், பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேலின் உருவாக்கமும், வளைகுடா நாடுகளில் பெட்ரோல் கண்டுபிடிப்பும் அதன் விளைவான மித மிஞ்சிய பணப்பெருக்கம் ஆகியவை இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் அதற்கு பிந்தைய பயங்கரவாத செயல்பாடுகளுக்கு காரணமாக அமைந்தன. மேலும் பெட்ரோலிய கண்டுபிடிப்பின் பயனாக தன் நலன் சார்ந்து அமெரிக்கா அரபு நாடுகளை தன் அடிமைகளாக மாற்றியது அடிப்படைவாத வளர்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது. இதன் தொடர்ச்சியில் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எகிப்து சவூதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் மதம் சார்ந்த கருத்தியல் எழுச்சி ஏற்பட்டது.

ஈரானிய புரட்சிக்கு பிந்தைய காலகட்டத்தில் இது மேலும் அதிகப்பட்டது. குறிப்பாக சல்மான் ருஷ்டிக்கு எதிரான கொமைனியின் மரண தண்டனை தீர்ப்பு உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இது திருத்தல்வாதம் என்றழைக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு முஸ்லிமின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் இஸ்லாம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற கோஷமே அது. அதன் படி ஐந்து கடமைகள், இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துக்கூறல், இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குரல், இஸ்லாமிய வங்கிகளை ஏற்படுத்துதல், இஸ்லாமிய அமைப்புகளை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை இதன் அம்சங்களாக இருந்தன. மேற்கண்டவற்றை அடைவதற்காக இஸ்லாமிய அரசுகள் உருவாக வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. அதன் படி லிபியாவில் கடாபி, பாகிஸ்தானில் ஜியா உல் ஹக், ஈரானில் கொமைனி போன்றவர்கள் இதற்கான உதாரணமாக அமைந்தார்கள். இதனடிப்படையில் ஹசனுல் பன்னா தலைமையில் 1928 ல் எகிப்தில் உருவாகிய இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மேற்கத்திய மத சார்பின்மை, ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிராக வலுவான இஸ்லாமிய அரசு என்பதை முன்வைத்தது. இது படிப்படியாக சிரியா, லெபனான் மற்றும் துனிஷியா போன்ற நாடுகளுக்கும் பரவியது. மேலும் 1935 ல் சவூதி அரேபியாவின் உருவாக்கம் உலக அளவில் இஸ்லாமிய திருத்தல்வாதத்திற்கு மேலும் உரமேற்ற செய்தது. காரணம் தற்போதைய சவூதி மன்னரின் பரம்பரையை தன் காலனிய நலன்களுக்காக உருவாக்கியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தான். 20 ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மத்திய கிழக்கில் அசைக்க முடியாத வலுவான பேரரசாக இருந்த உதுமானிய பேரரசை கைப்பற்றுவதற்காக பிரிட்டன் மத சீர்திருத்த இயக்கம் என்ற பெயரில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்துல் வஹ்ஹாப் என்பவரை உருவாக்கியது. பின்னர் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்கா நகரம் 1806 ல் பிரிட்டன் உதவியுடன் உதுமானிய பேரரசிடமிருந்து அங்கிருந்த சவூத் மன்னர் கைப்பற்றினார். தொடர்ச்சியான பல போர்கள், உள்நாட்டு குழப்பங்கள், கருத்தியல் போர்கள் இவற்றின் இயக்கமாக 19 ஆம் நூற்றாண்டு சவூதி அரேபியா இருந்தது. அன்றைக்கு அது இப்போதைய சவூதி மாதிரியான விரிந்த பரப்பில் இருக்கவில்லை. புனித தலங்களை உள்ளடக்கிய மிக குறுகிய பிரதேசமாக இருந்தது. ஒருங்கிணைந்த விரிந்த சவூதி அரேபியாவை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்த பிரிட்டன் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கட்டத்தில் உலக ஆதிக்கம் அமெரிக்காவிற்கு கைமாறியதால் சவூதிய அரேபியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது. இதுவே சவூதின் வீடு (House of saud) என்றழைக்கப்படுகிறது.

உலக அளவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் நீட்சியாக உருவான ஜிகாதிய பயங்கரவாதம் என்பது அமெரிக்காவின் வார்ப்பு தான். காரணம் பனிப்போர் காலகட்டத்தில் அதன் எதிரியாக சோவியத் யூனியன் இருந்தது. அந்த காலகட்டத்தில் பெட்ரோலிய வளம்மிக்க இஸ்லாமிய அரசுகள் சோவியத் பக்கம் போய்விடக்கூடாது என்பதில் அமெரிக்கா மிகத்தெளிவாக இருந்தது. இதனை மீறி சோவியத் பக்கம் சென்ற நாடுகளை அமெரிக்கா அச்சுறுத்தியது. மேலும் இதை வெறுமனே புவி அரசியல் நிலைபாடாக சுருக்கி விடாமல் கருத்தியல் அரசியலாகவும் உருவாக்க வேண்டும் என்பதில் அமெரிக்க தெளிவாக இருந்தது. அதன் வெளிப்பாடு தான் கம்யூனிசம் இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமானது என்ற அதன் கோஷம். இதை இஸ்லாமிய நாடுகளில் மிகவும் லாவகமாக உட்புகுத்தியது அமெரிக்கா. அதற்கு சரியான பலனும் கிடைத்தது. குர் ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை அதிகம் அச்சிட்டு அந்த நாடுகளில் பரப்பியது. இதன் காரணமாக இஸ்லாமிய நாடுகளில் மாற்றுசிந்தனைகள், அரசிற்கு எதிரான புரட்சிகள் உருவாகாமல் அமெரிக்கா பார்த்துக்கொண்டது. இன்றும் கூட பல இஸ்லாமிய நாடுகளில் கம்யூனிசம் என்றால் அலறல் மனத்தோடு பார்ப்பதற்கு காரணம் அமெரிக்காவின் மேற்கண்ட வரலாற்று செயல்பாடு தான். மேலும் நஜிபுல்லா அரசாங்கத்தை ஆதரித்து ஆப்கானிஸ்தானில் இரஷ்ய ராணுவம் நுழைந்தது எல்லோரையும் விட அமெரிக்காவிற்கு அதிக பதட்டத்தை ஏற்படுத்தியது. காரணம் புவி அரசியல் ரீதியாக ஆப்கான் சோவியத் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்து விட்டால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் வரை நீண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது என்று அது கருதியதே. மேலும் பிராந்திய ரீதியாக தனக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அன்றைய பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரியான ஜியா உல் ஹக் பயந்தார். விளைவாக அமெரிக்கா துணையை நாடினார். அமெரிக்காவின் ஆலோசனை படி பாகிஸ்தானிய மதரசா மாணவர்கள் சோவியத் ராணுவத்தை எதிர்த்து களம் இறங்க நிர்பந்திக்கப்பட்டனர். அவர்களை அமெரிக்க ராணுவம் மாதிரியே உருவாக்க அமெரிக்க உறுதியளித்தது. அந்த மாணவர்களின் மூளைகளில் ஜிஹாத் கருத்தாக்கம் வலுவாக திணிக்கப்பட்டது. இதனால் கருத்தியல் மயக்கத்திற்கு ஆளான ஆயிரக்கணக்கான மாணவர்கள் சோவியத் ராணுவத்தை எதிர்த்து போராட முன்வந்தார்கள். அவர்களுக்கு பாகிஸ்தானில் எல்லாவித பயிற்சியும் அளிக்கப்பட்டது. இவர்கள் தான் பின்னாளில் தலிபான்கள் என்றழைக்கப்பட்டனர். தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று அர்த்தம். மேலும் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ரீகன் இந்த பயிற்சி பெற்ற ஜிஹாதிய தலைவர்களை தன் வெள்ளை மாளிகைக்கு அழைத்து அவர்களுடன் இணைந்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தது உலகம் முழுக்க கவனிக்கப்பட்டது. " கம்யூனிசம் என்பது இஸ்லாத்திற்கு எதிரானது. அதை புரிந்து கொண்டதால் தான் இந்த போராளிகள் தங்கள் நாட்டில் அதற்கு எதிராக போராடுகிறார்கள்" என்றார் ரீகன் அந்த பேட்டியில். இந்த சொற்களின் பின்னால் அமெரிக்காவின் வர்க்க நலன் ஒளிந்திருந்தது.

90 களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சி உலகை அப்படியே தலைகீழாக புரட்டி போட்டது. பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டதன் காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரி தேவைப்பட்டது. எதிரிகளை வைத்தே அரசியல் செய்வதன் மூலம் தன் இருப்பை நிலைநாட்டிக்கொள்வது ஏகாதிபத்திய வழக்கம். இதனடிப்படையில் இஸ்லாமிய நாடுகள் முன்பு தான் உருவாக்கிய அதே ஜிஹாதிகளை தனக்கு எதிராக அமெரிக்கா உருவாக்க தொடங்கியது. ஒசாமா பின்லேடன் தொடங்கி முல்லா உமர் வரை அதன் எதிரிகளாக மாறினார்கள். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு சற்று முன்பு வரை அமெரிக்கா ஆப்கானிய தலிபான் அரசிற்கு நிதி உதவி அளித்து வந்தது என்பது தான். இதிலிருந்தே அதன் எதிரிகளை உற்பத்தி செய்யும் செயல்முறைகளை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும் ஏற்கனவே அரபு நாடுகளில் உருவாகிய பல்வேறு சீர்திருத்த, திருத்தல்வாத, அரசியல் இஸ்லாம் வகைப்பட்ட இயக்கங்கள், தலைவர்கள் உலக இஸ்லாம் என்பதை தங்கள் இலட்சியமாக வைத்தனர். மேலும் அநியாயக்கார ஆட்சியாளர்கள் மீது போர்தொடுத்தல், நம்பிக்கையற்றவர்கள் மீது போர் தொடுத்தல் போன்ற
குர் ஆனிய வசனங்களை தங்கள் அரசியல் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு பிரதியாக்கம் செய்து கொண்டனர். இதனடிப்படையில் எல்லா உலக மாற்றங்களுக்கு எதிரான போக்குகள், சிந்தனைகள், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், தேவையற்ற கட்டுப்பாடுகள், வரலாற்றை நிராகரித்தல், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை சந்தேகத்தோடு அணுகுதல் (இப்போதும் கூட செல்போனின் ரிங்டோன் குறித்த சர்ச்சை நடந்து வருகிறது)மதப்பிரதிகளை தங்களின் வறட்டு கோட்பாடுகளுக்கும், பிற்போக்கான சிந்தனைகளுக்கும் தகுந்தவாறு விளக்கம் செய்து " கூடாது" என்ற சொல்லோடு அன்றாட வாழ்வின் மனித செயல்பாடுகளை நீட்டுவது. உதாரணமாக இருப்பது கூடாது, படுப்பது கூடாது, நிற்பது கூடாது, நடப்பது கூடாது, பாடல் கேட்க கூடாது, திரைப்படம் பார்க்க கூடாது, பெண்கள் சிரிக்க கூடாது போன்றவை. மேலும் அறிவியல் வளர்ச்சியை இறைவனுக்கு சவால் விடும் ஒன்றாக தலிபான்கள் அணுகினர். இதனால் தங்கள் ஆட்சிகாலத்தில் ஆப்கானில் வானிலை ஆராய்ச்சி மையத்தை குண்டுவைத்து தகர்த்தனர். அதற்கு முன்பிருந்த பல அறிவியல் அடையாளங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு அவர்கள் மதப்பிரதிகளையே மேற்கோள் காட்டினார்கள். இந்த நாம் கவனிக்க வேண்டியது லௌகீக உலகின் இயல்பான இயக்கத்தை, அதன் வளர்சிதை மாற்றத்தை உள்வாங்க மறுத்து மதபிரதிகளில் அதற்கு விளக்கம் தேடும் முறை என்பதே தூய அடிப்படைவாதம். ஒரு மனிதன் இறைவன் மீது நம்பிக்கைக்கொண்டு, அதன் படி வழிபாடுகளை, சடங்குகளை தன் வாழ்வில் அமைத்துக்கொண்டால் அவனை நாம் அடிப்படைவாதியாக கருதி விட முடியாது. அவன் அதன் அடிப்படைகள் மீது தன்னை தகவமைத்துக்கொள்கிறான். அது அவனின் தனிமனித செயல்பாடு மற்றும் சுதந்திரம். ஆனால் சராசரி மனித வாழ்வின் எல்லா இயக்கத்திற்கும் மதபிரதிகளில் விளக்கம் தேடி அதன் மூலம் தங்களுக்கான வறட்டு கருத்தியல்களை உருவாக்கி, அதனை சமூகத்தின் பொதுப்புத்தியாக, அரசியல் கோட்பாடாக திணிக்க முயலும் நபர்களை, சக்திகளை, ஆதிக்கவாதிகளை நாம் அடிப்படைவாதிகள் என்கிறோம். அவர்கள் எல்லோரையும் அதற்குள் உள்ளடக்க முயற்சிப்பார்கள். தங்களை ஏற்றுக்கொள்ளாத மனிதர்களை ஒதுக்குவார்கள். தாங்கள் மட்டுமே உலகின் உங்களை காப்பாற்ற முடியும் என்பார்கள். மேலும் தங்களைப்பற்றிய எவ்வித சுயவிமர்சனமும் இல்லாமல் எல்லாவற்றையும் பிடிவாதமாக அணுகுவது, அதற்காக கொந்தளிப்பது போன்றவையும் அடிப்படைவாதத்தின் குணாம்சங்கள். இதன் தொடர்ச்சியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பெயரால் பெண்கள் மீது உளவியல் மற்றும் உடலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது, அவர்களின் சகலவித உரிமைகளை மறுப்பது, சாக்குமூட்டைகளாக பாவிப்பது, அவர்கள் ஆண்களை கண்டால் தலை தெறிக்க ஓடவேண்டும் என்று கட்டளை இடுவது, பெண்கள் மத விஷயங்கள் ஆண்கள் சொல்வதை மட்டுமே எவ்வித சந்தேகமுமின்றி கேட்டு நடக்க வேண்டும் என்பன போன்றவை இந்தியாவிலும், சில இஸ்லாமிய நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கின்றன. பஸ்தூன் பழங்குடி மக்களிடையே பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய மலாலா என்ற சிறுமியை இரு ஆண்டுகளுக்கு முன்பு தக்ரீக் ஏ தலிபான் என்ற அமைப்பினர் சுட்டது போன்றவை இதற்கான உதாரணங்கள். மேலும் லௌகீக கோட்பாடுகளின் மீது ஒருவன் ஈர்ப்புகொள்வது, புரட்சியாளர்களின் கோட்பாடுகளை பின்பற்றுவது என்பதையும் மேற்கண்ட அடிப்படைவாதத்தையும் நாம் பிரித்து பார்க்க வேண்டும். இவர்கள் உலக இயக்கத்திற்கு அந்த புரட்சியாளர்களின் கோட்பாடுகளை முன்மாதிரியாக எடுத்துக்கொள்கிறார்கள். அதன் சாராம்சத்தை உள்வாங்குகிறார்கள். எல்லாவற்றிற்கும் அவர் என்ன சொல்கிறார் என்று தங்களை தாங்களே உரசிக்கொள்வதில்லை . உதாரணமாக செல்போன் மற்றும் பங்கு சந்தை குறித்து பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் இது நமக்கு சரியான ஒன்றா? ஆகுமானதா? என்று ஒரு பெரியாரிஸ்ட் பார்ப்பதில்லை. அவரின் பிரதிகளில் இது குறித்து தேடி அலைவதில்லை. இது தான் இரண்டிற்குமான வித்தியாசம். மேலும் மன்னர் ஆட்சி நடைபெறும் இஸ்லாமிய நாடுகளை பொறுத்தவரை ஒருவர் மன்னரையோ அல்லது அவரின் ஆட்சியையோ விமர்சித்தாலே அது இஸ்லாத்திற்கு விரோதமானதாக பார்க்கப்படும். ஈரானும், சவூதி அரேபியாவும் சமீபத்திய உதாரணங்கள்.

கிறிஸ்தவ அடிப்படைவாதத்தின் வீச்சு என்பது தற்போதைய உலகில் குறைந்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது அரசியல் இஸ்லாம் என்ற கருதுகோளின் வழியாக
மேலும் வலுப்பெற்று வருகிறது. உலகம் முழுவதும் அரபிப்பெயர் கொண்ட பல்வேறு ஆயுதக்குழுக்கள் தங்களை ஜிஹாதிகள் என்றழைத்துக்கொண்டு அரசுகளுக்கு எதிராகவும், அப்பாவி மக்களுக்கு எதிராகவும் தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. தங்களின் எல்லாவிதமான ஈனச்செயல்களையும் அவர்கள் மதப்பிரதிகளைக்கொண்டே நியாயப்படுத்துகிறார்கள். எல்லா மதப்பிரதிகளையும் பன்முக தளத்தில் அர்த்தமாக்கி கொள்ளலாம் என்பது இதற்கு வசதியாக போய்விடுகிறது. இஸ்லாமும், இஸ்லாமியர்களும் உலகம் முழுக்க ஒரே மாதிரி இல்லை. ஆனால் இந்த குழுக்கள் எல்லா பிரதேச, வட்டார வேறுபாடுகளை அழித்து விட்டு இஸ்லாமிய உலகமயமாக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று முனைகின்றன.
இது தான் இன்றைய பெருஞ்சிக்கல்களுக்கு காரணம்.இந்தியாவை பொறுத்தவரை இந்துத்துவா என்ற கருத்தியல் மேற்கத்திய அறிவுஜீவிகளாலும், ஊடகங்களாலும் இந்து அடிப்படைவாதம் என்றழைக்கப்படுகின்றது. அதாவது
எல்லாவற்றையும் செயற்கையாக ஒருங்கிணைப்பது, அதன் மூலம் லட்சிய சமூகத்தை உருவாக்குவது. குறிப்பாக இந்து கலாசாரம், இந்து மதம், இந்து தேசம் என்பதே அது. இந்தியா என்பது பெரும்பான்மை இந்துக்கள் வாழும் நாடு. அதில் மற்றவர்கள் கௌரவிக்கப்பட்ட விருந்தாளிகளாக மட்டுமே இருக்கலாம் அல்லது அவர்கள் தங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். தாய்மதத்திற்கு திரும்பி விட வேண்டும். இதற்கு இந்து மகாசபை தலைவரான வீரசாவர்க்கர் வடிவம் கொடுத்தார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்துத்துவாவை முதன் முதலாக முன்வைத்தார். இந்தியா அடிப்படையிலேயே இந்து மற்றும் முஸ்லிம் என்ற இரு
கலாசார தேசியங்களை உள்ளடக்கி இருக்கிறது என்றும் அந்த அடிப்படையில் தான் பிரிட்டிஷ் இந்தியா பார்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும் பழம்பெருமை வாய்ந்த இந்திய கலாசாரத்தின் விழுமியங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். இதற்கு இருபதாம் நூற்றாண்டில் ஹெட்கோவார் தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் உயிர் கொடுத்தது. பின்னர் பாகிஸ்தான் கோரிக்கை முஸ்லிம் தரப்பிலிருந்து உருவானதும் அதற்கான வகுப்பு கருத்தியல் உயிர்பெற்றதும் இதன் தொடர்ச்சி தான். பெரும்பான்மை இந்துக்களை கொண்ட நாடான இந்தியா அடிப்படையில் இந்து நாடாக தான் இருக்க வேண்டும் என்றும் அது முன்வைக்கிறது. மேலும் சாதிகளை புறந்தள்ளி விட்டு எல்லா இந்துக்களும் ஒருங்கிணைய வேண்டும். தங்கள்
குல தெய்வங்களை துறந்து விட்டு பெருந்தெய்வங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் அதன் செயல்திட்டம். அதில் இந்து அடிப்படைவாதம் ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறது. காரணம் தமிழ்நாட்டின் பல தலித் கிராமங்களில் கூட பிள்ளையார் சிலைகள் ஊர்வலத்திற்காக வைக்கப்படுகின்றன. பிள்ளையாரை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்ல என்று தன் வாழ்நாளில் பலமுறை வலியுறுத்தி சொன்ன அம்பேத்காரை இந்துத்துவா உள்வாங்கி கொண்டது அதன் அடிப்படைவாத அரசியல் நலனுக்காக தான். மேலும் இந்துவின் தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்க்கையும் இந்துத்துவா அடிப்படையில் அமைய வேண்டும் என்று அது விரும்புகிறது. காவி அணிதல், எப்போதும் நெற்றிப்பட்டையுடன் இருத்தல், பிற சமூகங்களை விலக்குதல், தாய்மதத்திற்கு பிற சமூக மக்களை திரும்ப முயற்சி எடுத்தல், வீடுகளில் கீதையை பாடுதல், இராமாயணத்தை பற்றி அதிகம் அறிந்து கொள்ளல், புலால் உணவை முடிந்த வரை தவிர்த்தல், பசுவை புனிதமாக மீண்டும் கருதுதல், குழந்தைகளுக்கு சமஸ்கிருத பெயர்களை வைத்தல், சமஸ்கிருதத்தை புனித மொழியாக கருதுதல் போன்ற பல மதம் சார்ந்த தனிமனித செயல்பாடுகளை அது முன்வைக்கிறது. ஆக இந்தியாவில் இந்துத்துவா என்பது வெறும் அரசியல் கோட்பாடல்ல. அது வாழ்க்கை வழி முறை (Way of Life)என்று அழைக்கப்படுவது மேற்கண்ட செயல்திட்டங்களின் அடிப்படையில் தான். இப்படி இந்தியாவின் ஒவ்வொரு தனிமனிதனும் கடைபிடிக்கும் நிலையில் பரிபூரண இந்து ராஜ்ஜியமாக இந்தியா மாறும் என்பதே அதன் நீண்டகால செயல்திட்டம்.

தமிழ் இலக்கிய சூழலிலும் அடிப்படைவாத தாக்கம் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். அது மட்டுமல்ல குல தெய்வ நம்பிக்கை உடையவர்கள். இது தனிமனித செயல்பாடாக இருக்கும் வகையில் அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமையும், சுதந்திரமும் கூட. ஆனால் தங்கள் எழுத்துக்களில் இதனை அவர்கள் திணிப்பது தான் அடிப்படைவாத செயல்பாடு. நான் பழனிக்கு
பாதயாத்திரை சென்றேன். அதனால் எனக்கு வேலை கிடைத்தது என்று ஒருவர் வெளிப்படையாக எழுதுவது, நான் இந்த வருடம் சபரிமலைக்கு சென்றேன். அதனால் என் நாவல் வெளிவந்தது
என்று எழுதுவதும், காலையில் சாமி கும்பிட்டேன். அதனால் கவிதை எழுத முடிந்தது என்பதும் அடிப்படைவாத செயல்பாடு தான். இதன் நீட்சியும் தொடர்ச்சியும் தான் தமிழ் எழுத்தாளர்கள் பலரை இந்துத்துவா பக்கம் சாய வைத்திருக்கிறது. இன்னும் பலர் முற்போக்கு வாதத்தை முன்னெடுத்துக்கொண்டே இந்துத்துவா சிந்தனைகளோடு இருப்பது, பெண்ணியம் பேசிக்கொண்டே பெரும் ஆணாதிக்க வெறியர்களாக இருப்பது, ஒடுக்கப்பட்டோருக்கு


ஆதரவாக என் எழுத்துக்கள் இருக்கின்றன என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டே மோசமான ஆதிக்க சாதி வெறியர்களாக இருப்பது இவையெல்லாம் வகைமாதிரியான அடிப்படைவாத சிந்தனை தான். ஆக அடிப்படைவாதம் என்பது இருபதாம் நூற்றாண்டில் மதத்தின் மீது உட்கார்ந்து கொண்டு மிகுந்த தாக்கத்தை செலுத்தியது. தற்போதைய உலகிலும் மனித சமூகங்களிடையே மோதல்களை உருவாக்குதல், நல்லிணக்கத்தை சீர்குலைத்தல், சமாதானத்தை நிராகரித்தல், தேவையற்ற பிளவுகள், போர்கள், குழப்பங்கள் இவற்றிற்கான மொத்த காரணியாக இருக்கிறது. ஆக மத நம்பிக்கையுள்ள மனிதர்கள் மதத்தை பின்பற்றுவதற்கும், அடிப்படைவாதத்திற்குமான நுண்ணிய, பேரளவிலான வித்தியாசத்தை அறிந்து கொண்டு தங்களை முன்னகர்த்துவது அவசியம்.