வெள்ளி, ஜூன் 23, 2017

புளியமரத்துப் பேய்கள்

சிறு கதை - லறீனா அப்துல் ஹக்

எண்ணிக்கையற்ற கிளைகளைக் கம்பீரமாகச் சிலுப்பி விரித்தவாறு காற்றை வரவேற்றுக் களிக்கும் அந்தப் புளியமரத்தை அவளுக்கு மிகவும் பிடிக்கும். நெடுக்காக ஓடும் வரிகளைக் கொண்ட அம்மரத்தின் கடும் மண்ணிறம் எப்போதுமே அவளது மனதைக் கவர்ந்திழுக்கும். ஓய்வு நேரங்களில்..  வார இறுதிகளில்... அந்தப் புளிய மரத்துக்குப் பக்கத்தே நிற்கும் கோப்பி மரக் கிளையில் ஏறி எம்பித் தாவி ஒருவாறாகப் புளிய மரத்தின் கிளையொன்றில் தொற்றிக் கொண்டதும் முழு உலகையுமே வெற்றிகொண்டதான எக்களிப்பில் சந்தோஷக் கூச்சல் அவளின் அடித்தொண்டையில் இருந்து கிளம்பும்.

காய்க்கும் காலத்தில் இலைகளை மறைத்துக் காய்த்துக் குலுங்கும் புளியங்காய்களைப் பொல்லு தடிகளாலும் கற்களாலும் அடித்து உலுப்பிப் பறித்துச் சேகரிப்பதன் இன்பம் அலாதியானதுதான். அக்காலங்களில் அக்கம் பக்கத்துச் சிறுவர்கள் அவ்வப்போது மரத்தைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். புளியங்காய்களுக்காக அவளிடம் கெஞ்சிநிற்பார்கள். அவளும் போனால் போகிறது என்று  கொஞ்சம் காய்களைப் பறித்துக் கொள்ளுமாறு விட்டுவிடுவாள்; தன் மாமா தோட்டப் பக்கம் வருகிறாரா என்று பார்த்தபடி காவலும் நிற்பாள். அவர்கள் அவ்விடம் விட்டகன்றபின் அவள் அதன் கிளைகளில் தாவியேறி அமர்ந்து கொள்வாள். புளியங்காய்களைக் கைக் கொள்ளாமல் பறித்து மடிநிறையக் கட்டிக்கொண்டு நாக்கைத் தட்டித் தட்டி ஒவ்வொன்றாய் ருசி பார்க்கும் அனுபவம் அபூர்வமானது.

கோப்பி மரங்களும், கொக்கோ மரங்களும், கிளி மூக்கன், புளிமாங்காய், தும்பு மாங்காய், பெப்போல் மாங்காய் என விதவிதமான மா மரங்களும் வேறு பல மரங்களும் தோட்டம் எங்கும் நிறைந்திருந்த போதிலும் அவளை ஈர்ப்பதென்னவோ அந்தப் புளிய மரம் தான். ஒரு பழைய தகரப் பீங்கானை அதன் கிளை நடுவில் வாகாக வைத்து ஆணியொன்றை அடித்துப் பதித்துக் காரோட்டும் போதும், ஆங்கில வீ எழுத்துப்போல் விரிந்துள்ள சிறுகிளைகளின் இரு முனையிலும் கயிறு கட்டிக் குதிரை வண்டி ஓட்டும்போதும், வீதிவலம் வரும் இளவரசியாய்த் தன்னை உணர்வாள், அவள்.

அவர்களின் தோட்ட முடிவில் இருந்து தொடங்கும் கருங்கற் பாறைத் தொகுதி வெகுதூரம் வரை  பின்னோக்கி உயர்ந்து செல்லும். அதற்குப் பின்னால் மிகப் பெரியதொரு 'கல்லுக் குழி' இருக்கிறது. ஊரவர்களும், அங்கே கூலிக்குக் கருங்கல் உடைக்கப் போவோரும் அவ்விடத்தை அப்படித்தான் அழைப்பார்கள். அங்கு வேலைசெய்வோர் இடைக்கிடை டைனமைட் வெடிகள் போடுமுன் 'கல்வெடியோ......வ்!!!' என்று சிங்களத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கத்துவார்கள். அப்போதெல்லாம் அவள் அத்தோட்டத்தில் எங்கேனும் ஓரிடத்தில் கொக்கோ பறித்துக் கொண்டோ, ஊஞ்சலாடிக் கொண்டோ இருந்தால், மூச்சிரைக்க ஓடிவந்து புளியமரத்தடியில் வந்து பாதுகாப்பாகப் பதுங்கிக் கொள்வாள். என்றாலும், கல்லுக்குழியில் இருந்து ஒருபோதும் கற்கள் சிதறிவந்து தோட்டத்தில் விழுவதே இல்லை என்றாலும், அவளோ மற்றவர்களோ அப்படிப் பாதுகாப்பாய் நின்றுகொள்வதை அலட்சியப் படுத்துவதில்லை.

அவர்களின் தோட்ட முடிவிடத்தில் யானைகள் படுத்துக் கிடப்பதுபோல் குண்டு குண்டாகக் கிடக்கும் பெரிய கற்பாறைகளின் ஓர வெடிப்புகளில் செழித்து வளரும் சதைக் கரைச்சான் செடியில் அவளுக்குக் கொள்ளை ஆசைஅதன் இலைகள் அவளுக்குக் 'குட்டிபோடும் மரம்'.  அந்த இலையை எடுத்துப்போய் புத்தகத்துக்கு அடியில் வைத்தாலும் மேசை லாச்சியில் வைத்தாலும் அதன் விளிம்பெங்கிலும் குட்டிக் குட்டிக் கணுக்கள் எட்டிப் பார்த்துச் சிரிக்கும். அதைக் கண்டு அவள் முகம் மலரச் சிரிப்பாள். புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி பாவாடை ஒரு குடை ராட்டினம் போல் பறக்க, பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று விளையாடுவாள்.

ஒருதடவை பெச்சிம்மாவும் அப்பப்பாவும் ஜெய்லானிக்கு நேர்ச்சைப் பயணம் போய் வந்தார்கள். அப்பப்பாவின் கால்வலி குணமானால் ஜெய்லானிக்கு நேரில் வந்து அங்கு அடங்கப்பட்டுள்ள அவ்லியாக்களின் ஸியாரத்துக்குப் பச்சைப் போர்வை போர்த்துவதாக பெச்சிம்மா நேர்ச்சை வைத்திருந்தாராம். அங்கு போனவர் பக்கத்தில் இருந்த கோவிலுக்கும் போய்ப் பார்த்ததாகக் கூறி ஒரு பெரிய மயில் தோகைக் கற்றை ஒன்றும் கொண்டு வந்திருந்தாரா, குட்டிக்குத் தலைகொள்ளாத பூரிப்பு. அவளது வகுப்புத் தோழிகள் ஒரே ஒரு மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்துக்கொண்டு வந்து 'பெருமை' காட்டும்போது, அவள் அப்படியே ஒரு தோகையை எடுத்துக்கொண்டு போனால் எவ்வளவு பெருமையாக இருக்கும் என்ற கற்பனையில் மிதந்தாள். என்றாலும், அவள் அதனை வீட்டில் வைத்திருக்கலாம், பாடசாலைக்குக் கொண்டு செல்ல முடியாது என்று பெச்சிம்மா கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். எனவே, அதனைத் தன் வீட்டுப் பயிற்சிப் புத்தகத்துக்குள் வைத்துக்கொண்டாள். சதைக் கரைச்சான் இலையும் மயிலிறகுத் தோகையும்  'குட்டி போட்டுள்ளனவா?' என்று ஒவ்வொரு நாள் காலையிலும் எட்டிப்பார்த்துவிட்டே அவள் பாடசாலைக்குப் போவாள்.

அடுத்த தோட்டத்தில் வரிசையாக மரக்கறிப் பாத்திகள் போடப்பட்டிருந்தன. அதன் காவலுக்காய் குடிசைபோட்டு இருப்பவனின் பெயர் 'பினா'. அது அவனின் இயற்பெயரா அல்லது விதானையார் வீட்டுக் கறுப்புவெள்ளைத் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் சிங்கள நாட்டார் பாடலில் வரும் கதாபாத்திரத்தை ஒத்த தோற்றத்தில் இருப்பதால் அவனுக்கு ஊரவர் சூட்டிய காரணப் பெயரா என்பதைப் பற்றியெல்லாம் அவளறிய மாட்டாள். எல்லோரையும் போலவே அவளும் அவனைப் 'பினா' என்றே அழைத்தாள்.

பினா சாயங்காலம் மூக்குமுட்டக் கள்ளுக் குடித்துவிட்டு ஆடியாடி நாலு காலில் தோட்டத்தைக் கடந்து அவனின் குடிசைக்குப் போகும்போது, புளிய மரத்தின் கிளைகளுக்குள் மறைந்தபடி கள்ளக் குரலில்,

அம்பலமே பினாபினா
வலங்கடக் கெனாகெனா
ஏக்க பிந்தபு கொனாகொனா
உடப் பென பென ஹினாஹினா... ஹூ ஹூ ஹூ...” என்று அவள் கத்திக் கலாட்டா செய்வதும் அவன் குடிவெறியில் குரல் எங்கிருந்து வருகின்றது என்பதைக் கண்டறிய முடியாமல் பச்சைத் தூஷணத்தில் ஏசுவதும், தாறுமாறாகக் கல்லெறிவதும்  வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு.
அவள் அடிக்கடி நேரங்கெட்ட நேரத்தில் எல்லாம் தோட்டத்துப் புளியமரத்துப் பக்கம் அலைந்து திரிவதைக் கண்டு அவளின் பெச்சிம்மாவுக்கு சரியான கோபமும் எரிச்சலும். அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அவளைப் பயமுறுத்தத் திட்டமிட்டார்.
ஏய் புள்ள. உரும நேரத்துல புளியமரப் பொக்கத்துக்குப் போப்படாய் புள்ள.”
ஏன் பெச்சிம்மா, போனா என்னா?”
உரும நேரங்களுக்குப் புளிய மரத்துல பேய் வரும் புள்ள... நீ மூத்த பொம்புளப் புள்ள. அதால ஒனைய டக்குண்டு புடிச்சிக்கொளும்.”
உரும நேரங்களா? எந்த நேரம் பெச்சிம்மா அது?”
சரீய்ய்ய்யா பவல் பன்னண்டு மணி, அந்தி ஆறு மணி, ராவு பன்னண்டு மணி... இதெல்லாம் உரும நேரம்வல் புள்ள
அப்பிடியா? சரி பெச்சிம்மா.”

அவள் இனிப் பயந்து தோட்டப் பக்கமே காலடி வைக்க மாட்டாள் என்ற பெச்சிம்மாவின் கணக்குப் பொய்த்துப் போனது. அதை அவர் அடுத்த ஓரிரு நாட்களிலேயே தெரிந்து அதிர்ந்து போனார். பகல் சாப்பாட்டை உண்டுவிட்டு, வெற்றிலைப் பாக்குச் சுருளை வாய்க்குள் திணித்துக் கொண்டு, 'என்ன இந்தக் குட்டிய இன்னமும் காணோம்!' என்று வாசலை எட்டியெட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தபோது வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தாள், குட்டி.
பெச்சிம்மா.... பெச்சிம்மா...”
என்ன புள்ள? ஏன் இப்பிடிப் பயந்த மாதிரி ஓடி வாராய்?”
ஐயோ பெச்சிம்மா... சரியா... பதினொன்னரை மணீல ஈந்து... ஒரு மணி வரைக்கிம்... பார்த்துப் பார்த்து ஈந்தேன்... அது... வரவே இல்ல பெச்சிம்மாஅவள் மூச்சிறைக்கச் சொன்னாள்.
எது புள்ள வரல்ல?”
பேய்தான்.”
பேயா? என்ன புள்ள உளர்றாய்?”

நான் ஒண்டும் உளறல்ல பெச்சிம்மா. நீங்க தானே சொன்னீங்க, உரும நேரத்துல புளியமரத்துக்குப் பேய் வரும், போப்படாய் எண்டு. நான் இவ்ளோ நேரமா புளிய மரத்துலத்தான் ஏறி உக்காந்துட்டு ஈந்தேன். ஒரு பேயும் அங்க வரவே இல்ல பெச்சிம்மா...”
அடிப்பாவி...” என்று அவர் ஏதோ சொல்ல முனையுமுன் உரத்த சிரிப்பொலியோடு நடையைக் கடந்து வந்த ஹமீது மாமா,

இந்தக் குட்டிப் பிசாசக் கண்டுட்டு அந்தப் பேய் பயந்து ஓடிப்போய் ஈக்கும்என்றபடி வெளியிறங்கிப் போனார். அவர் தன்னைக் குட்டிப் பிசாசு என்றதையிட்டு அவளுக்குக் கோபமே வரவில்லை. மாறாக, ஒரு பெருமிதப் புன்னகை மலர்ந்தது.

அந்தி சாய்ந்ததும் லாம்பு வெளிச்சத்தில் அவளைத் தன் மடியில் போட்டு விரல்களால் தலை முடியைக் கோதிவிட்டபடி பெச்சிம்மா சொல்லும் பேய்க் கதைகளும் ஜின் கதைகளும் அவளை ஏதோ ஒரு மாய உலகுக்கு அழைத்துச் செல்லத் தவறுவதில்லை. அவை அவளது மனோ உலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனவோ என்னவோ.

ஒருநாள் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது யாரோ அன்போடு அழைக்கும் ஒரு குரல் இடையறாது கேட்டுக்கொண்டே இருந்தது. அவளுக்கு மிகவும் பழக்கமான குரல் போலத்தான் இருந்தது. அந்தக் குரலில் ஏதோ இனந்தெரியாத ஈர்ப்பு இருந்தது. அந்தக் குரல்  நறுமணமிக்க ஒருவித சாம்பிராணிப் புகையாய் மாறி அவளது மனப்பரப்பெங்கும் நிறைவதான பிரமைக்குள் அவள் ஆழ்ந்தாள். அந்த நறுமணம் வரவர அவ் அறையெங்கும் நிறைவதை உணர்ந்து அவள் பாயில் இருந்து மெல்ல எழுந்தாள். அறையின் ஒருபுறமாய்க் குப்பி லாம்பு எரிந்து கொண்டிருந்தது. பக்கத்துப் பாயில் அவளின் உம்மா அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். குரல் வந்த திசையை நோக்கி அவள் அடிமேல் அடிவைத்து நகர்ந்தாள். கொல்லைப்புறக் கதவின் அருகில் வந்து நின்றாள். அது மூடப்பட்டு இருந்தது. இருகூறாக அமைந்த கதவின் நடுவில் பெரியதொரு தடுப்புப் பலகை.   

குட்டி, குட்டி... இங்க வாம்மா... இங்க வாம்மா என் செல்லக்குட்டி...”   கெஞ்சல் நிரம்பிய அந்த மாயக் குரல் மிக மிக அருகாமையில் ஒலிப்பதான பிரமை. கூர்ந்து கவனித்தாள். கதவுக்கு வெளியில் இருந்து அக்குரல் வருவதை உணர்ந்தாள். தடுப்புப் பலகையைக் கழற்றிக் கையில் எடுத்தாள். கதவின் உச்சியில் திராங்கு (தாழ்ப்பாள்) போட்டு மூடப்பட்டு இருந்தது. தடுப்புப் பலகையை உயர்த்திப் பிடித்து மெல்ல அடித்தடித்துத் திராங்கைத் திறக்க முயற்சித்தாள். டங்... டங்.. டங்.. என்று சத்தம் எழுந்ததே தவிர இறுக மூடப்பட்டிருந்த திராங்கு அசையக் காணோம். திடீரென்று,

ஏய், குட்டி... இங்க என்ன செய்றாய்? எங்க போப்போறாய்?” என்றவாறு  தன்னை யாரோ  தாறுமாறாகப் பிடித்து உலுக்குவதை உணர்ந்ததும் கஷ்டப்பட்டுக் கண்ணிமைகளைத் திறந்து பார்த்தாள். ஹமீது மாமாவின் பிடியில் தான் இருப்பதையும் தம்மைச் சுற்றி பெச்சிம்மா, அப்பா, உம்மா, உம்மும்மா எல்லோரும் பதற்றத்தோடு நின்றிருப்பதையும் கண்டாள்.
என்னாச்சி புள்ள?”
இல்ல... பெச்சிம்மா.. யாரோ வெளிய ஈந்து குட்டி, குட்டீ எண்டு கூப்புடுற மாய் ஈந்திச்சி...”
உரும நேரத்துல காடு மேடெல்லாம் திரியப்போவாத எண்டு இந்த மூதேவிக்கி எத்தின தடவ சொல்லி ஈப்பேன்! கேட்டிச்சா? இப்பப் பாரு, கெட்ட பார்வை எதோ பட்டீக்கி. எந்தக் காத்துக் கறுப்போ மோகினியோ பச்சப் புள்ளைய பலியெடுக்கப் பாத்தீக்கியா றப்பனா! எங்கட புள்ளைய காப்பாத்து! மொய்தீன் லெப்பக்கிட்ட சொல்லி ஓதியூதின இஸும் தண்ணி கொஞ்சம் வாங்கிக் குடிக்கக் குடுக்கோணும். கழுத்துக்கோ இடுப்புக்கோ ஒரு துவாக் கட்டோணும்...”
ஐயோ பெச்சிம்மா! சும்மா பொலம்பாம இரீங்களேன். துவா மண்ணாங்கட்டியெல்லாம் தேவில்லஅதெல்லாம் ஷிர்க்கு! இதுக்கு மருந்து எனக்கித் தெரியிம். ஏய் குட்டி இங்க வா.”
என்னா மாமா?”

மொதல்ல பிஸ்மி சொல்லி இந்தத் தண்ணியக் குடி. குடிச்சாச்சா? இப்ப வந்து இப்பிடி பாய்ல உக்காரு. நான் சொல்லித் தாறத நல்லாக் கவனிச்சிக் கேளு. இனி எந்த நாளும் தூங்க மொத சுப்ஹானல்லாஹ் 33 தடவயிம், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையிம், அல்லாஹு அக்பர் 34 தடவையிம் ஓதிட்டு, ‘ஆயத்துக் குர்ஸீயோட 'குல்சூறா' மூணையும் ஓதி உள்ளங்கை ரெண்டுலயிம் ஊதணும். அப்பிடியே அந்த உள்ளங்கையால முழு ஒடம்பையிம் தடவிக் கொள்ளோணும். அதுக்குப் பொறவு அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து அஹ்ஹியா'ண்டு ஓதிக் கொண்டுதான் படுக்கோணும். அப்ப எந்தக் கெட்ட ஜின்னோ ஷைத்தானோ கிட்டவராது. தெரிஞ்சிக்கோ.”
தப்லீஃ ஜமாத்தில் பத்து நாள் போய்வந்த பேரன் பூட்டிக்குச் சொல்லிக்கொடுத்தது பெச்சிம்மாவின் காதில் விழுந்தாலும், அவனுக்குத் தெரியாமல் மொய்தீன் லெப்பையிடம் சொல்லி இசும் ஓதின தண்ணீரைக் குட்டிக்குப் பருக்கிவிட்டு, செப்புச் சுரையில் துவாவும் கட்டவேண்டும் என்று அவர் மனதுக்குள் உறுதியாகவே தீர்மானித்துக்கொண்டார்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு குட்டி இரண்டு நாட்கள் வீட்டைவிட்டு எங்கும் போகவில்லை. ஆனால், அதற்குமேல் அவளால் வீட்டுக்குள் அடைந்துகிடக்க முடியவில்லை. பெச்சிம்மா அசந்த நேரமாகப் பார்த்து வீட்டில் இருந்து 'டிமிக்கி' கொடுத்துவிட்டாள். இடுப்பில் தொங்கும் செப்புச் சுரைத் தாயத்து தந்த தைரியத்தோடு அவள் பழையபடி தோட்டத்தை நோக்கி ஓடினாள். புளியமரம் அவளை வாஞ்சையோடு கூவி அழைப்பதான உள்ளுணர்வு அவளுக்குள். தாயைப் பிரிந்த பிள்ளையைப் போல் இரு கைகளையும் விரித்து புளியமரத்தின் அடியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சில கணங்கள்வரை கண்மூடிக் கிடந்தாள். சற்றைக்கெல்லாம் கோப்பி மரக்கிளையில் தாவி ஏறி, புளியமரத்தில் தொற்றிக் கொண்டாயிற்று. கிளிகளுக்கும் குயில்களுக்கும் போட்டியாக அவள் வாய்விட்டு உல்லாசமாகப் பாடத் தொடங்கிவிட்டாள். தோளின் கீழே பரந்து விரிந்த அவளின் கருமையான கூந்தல் கிளைகளுக்குப் போட்டியாகக் காற்றில் அலைந்தது.

'கிர்ரக்... கிர்ரக்... கிர்ரக்... ட்வீட்.. ட்வீட்... கிர்ரக்.. கிர்ரக்... கிர்ரக்...' காட்டுப்பூச்சிகளின் விதம்விதமான சத்தங்களைக் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்தாள் குட்டி. தான் புளியமரத்தின் தாழ்வான கிளையொன்றைக் கட்டிக்கொண்டவாறு சாய்ந்திருப்பதை உணர்ந்தாள். இடது உள்ளங்கையால் கன்னங்களை மெல்லத் தடவிப்பார்த்தாள். ஈரம் காய்ந்திருந்தது. உம்மா முதுகில் ஓங்கி அடித்த அடியின் வலி இன்னும் கொஞ்சம் மிச்சம் இருப்பதான உணர்வு. தான் அவ்வளவு நேரமும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தபடி அப்படியே உறங்கிப்போய் இருந்ததைப் புரிந்துகொள்ள அவளுக்கு அதிக நேரமாகவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. தொலைவில் வரிசையாக இருந்த வீடுகளின் லாம்பு வெளிச்சம் மினுக்மினுக்கென்று எரிவது புலப்பட்டது. உம்மாவும் சாச்சாவும் சச்சரவிட்டுக்கொள்ளும் சத்தம் இன்னும் கேட்கிறதா என்று காதைக் கூர்மையாக்கிக் கேட்டாள்.

'உம்மா என்னையத் தேடி வருவாவா, மாட்டாவா?' என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.
'அவ வரமாட்டா. நான் பணிய உம்மும்மா ஊட்டுக்குப் போயிரிப்பன் எண்டு நெனச்சிட்டிரிப்பா' அவளுக்குள் ஒரு குரல் பதிலளித்தது.

'பெச்சிம்மா உசுரோட ஈந்திருந்தா இப்பிடி எல்லாம் நடந்தீக்கிமா?' அவளின் அப்பாவி மனசு தன்னையே கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து நெஞ்சையே எரித்துக்கொண்டு வெளிக்கிளம்புவதான ஒரு பெருமூச்சு அவள் நாசியினூடே புறப்பட்டுப் போனது.

அன்று அவளின் உம்மா போஸிலேன் கம்பனியில் ஷிஃப்ட் வேலை முடித்துவிட்டு வருவதற்கு இடையில் சோறாக்கி, பருப்பாக்கி, கருவாட்டை முறுகப் பொரித்துவைத்துவிட்டு, ஸ்கூலில் தந்த கணக்குப் பயிற்சிகளைச் செய்துமுடிக்கப் பாயில் உட்கார்ந்தாள். கொஞ்சநேரம் கடந்திருக்கும். நாலைந்து கணக்குகளைச் செய்து முடித்திருப்பாள். தொண்டையைக் கமறிக்கமறி எச்சில் துப்பும் சத்தம் வெளியே கேட்டதுமே சாச்சா அன்றும் குடித்துவிட்டு வந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டாள். அவசர அவசரமாகப் பாயில் பரத்தி இருந்த புத்தகங்கள், கொப்பிகளை அள்ளியெடுத்து ஸ்கூலுக்குக் கொண்டு போகும் புடவை பேக்கில் அடைத்தாள்குப்பிலாம்பை எடுத்து மேசைக்கு மேல் வைத்தாள். சாச்சாவுக்கு கைகால் முகம் கழுவத் தகர பெரலில் நிரப்பி இருந்த தண்ணீரில் இருந்து ஒரு வாளித் தண்ணீரை அள்ளியெடுத்துப்போய் திண்ணைக் கட்டில் வைத்தாள்.

தினமும் கூலிவேலைக்குப் போகும் சாச்சா, மாலையில் 'உடல் வலியை மறக்க' என்ற காரணத்தைக் கூறிக் கள்ளோ சாராயமோ கொஞ்சம் குடித்துவிட்டு வீடு வருவார். குடித்துவிட்டு வரும் அனேக நாட்களில் உம்மாவும் சாச்சாவும் நள்ளிரவுவரை ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் சாச்சா வீட்டுச் சாமான்களை நிலத்தில் போட்டுடைப்பார். அத்தகைய நாட்களில் நெடுநேரம் வரை பயத்தோடு அவள் விழித்தே இருப்பாள். மறுநாள் பாடசாலையில் போய் தூங்கிவழிந்து, டீச்சரிடம் அடிவாங்கிக் கட்டிக்கொள்வதும் அவ்வப்போது நடக்கும்.

சாச்சா அவ்வப்போது குடிக்காமலும் வீடு திரும்புவார்அன்றைக்குக் கூலிவேலை எதுவும் கிடைத்திருக்காது. பெரும்பாலும் உம்மாவும் சாச்சாவும் ஒரே நேரத்தில்தான் வீடு திரும்புவார்கள்.
குட்டியின் வாப்பா அவளையும் உம்மாவையும் 'அம்போ' என்று விட்டுவிட்டு ஊரில் இருந்த வேறொரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிப்போனபோது உம்மா நிலத்தில் விழுந்து புரண்டு தலையில் அடித்துக்கொண்டு அழுது ஒப்பாரி வைத்த காட்சி அடிக்கடி அவள் நினைவில் எழும். அதன்பின் அவர்களின் வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்கள். சாச்சா உம்மாவைப் பொறுப்பேற்று மறுமணம் புரிந்து ஒரு வருடம் ஆகப் போகின்றது. ஒரு பெண் குழந்தையோடு அழகற்ற ஒரு பெண்ணைச் சீதனம் ஏதும் கேட்காமல் பொறுப்பெடுக்க முன்வந்தால், என்ன ஏதென்று பார்க்காமல் கட்டிக்கொடுக்க யார் தயங்குவார்கள்? பொம்புளைப் பிள்ளையின் பொறுப்பு கழிந்தால் சரி என்ற நிம்மதிக்கு விலை இருக்கிறதா, அவர்களிடம்? உம்மாவுக்கும் இளம் வயது. சாச்சா கொஞ்சம் குடிப்பழக்கம் உள்ளவர் என்பது தெரிந்தும், தன்னால் திருத்திக்கொள்ள முடியும் என்ற தைரியத்தில் அவரை மணக்க உம்மா மறுப்பேதும் சொல்லவில்லை.

ஆரம்பத்தில் சாச்சாவை வாப்பா என்று அழைக்குமாறு அவளுக்குச் சொல்லித் தரப்பட்டது. என்றாலும், அவளால் அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கச் சிரமமாக இருந்தது. ஹமீது மாமாவும், 'சாச்சா என்று அழைத்தாலே போதுமானதுஎன்று தீர்ப்பைச் சொல்லிவிட்டார். அதன் பின் சாச்சாவை வாப்பா என்று அழைக்குமாறு யாரும் அவளை நிர்ப்பந்தப்படுத்தவில்லை. உம்மா மறுமணம் முடித்த புதிதில் கொஞ்ச காலம்வரை அவள் உம்மும்மா வீட்டில் இருந்தாள். தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மண்குடிசையில் தம்பதியினர் தம் புதுவாழ்வைத் தொடங்கினர். உம்மும்மா வீட்டில் பெச்சிம்மாவும் கூடவே இருந்ததால் இரவிலே உம்மா பக்கத்தில் இல்லாத தனிமையை அவள் அவ்வளவாக உணரவில்லை. அதன்பின் அவள் தனியே உறங்கவும் தொடங்கிவிட்டாள். காலப் போக்கில் அதுவே பழகிப்போனது.

அவள் உம்மும்மாவின் வீட்டில் இருந்த காலத்தில் 'சடங்'கானாள். வீட்டின் ஒரு பகுதியில் பழம் புடவை ஒன்றைக் கட்டிமறைத்து அவளை மூலையில் இருத்தினார்கள். தென்னம்பாளை வைத்த சிறிய மண்குடம் ஒன்று அவள் தலைமாட்டோரம் இருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றோடு நாட்டுக்கோழி முட்டையும் நல்லெண்ணெய்யும் அவளுக்குப் பருகத் தரப்பட்டது. அவற்றைப் பருக முடியாது என்று அவள் அடம்பிடித்த போதிலும் பலவந்தமாகவேனும் அவளுக்கு அவை புகட்டப்பட்டன. ஏழாம் நாள் அதிகாலையில் அவளின் முகம் உட்பட உடல் முழுவதையும் ஒரு வெள்ளை வொயில் புடவையால் முற்றாக மறைத்துத் தோட்டத்துக் கிணற்றடிக்கு அவளை அழைத்துச்சென்றார், பெச்சிம்மா. சில்லென்ற குளிர்நீரை மண்குடத்தினால் மொண்டு எடுத்து அவளை மும்முறை வலம் வந்தார். அவரது வாய் ஏதேதோ வார்த்தைகளை முணுமுணுத்தன.

'பெச்சிம்மா, என்னா முனங்குறீங்க?' என்று கேட்க வாய் துடித்தாலும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள். 'சும்மா ஏச்சுக் கேட்டுச் சாவானேன்!' என்ற பயம்தான். அவர் அவளை மண்டியிட்டு அமரச்செய்து குடம்குடமாகத் தண்ணீரைக் கொட்டிக் குளிப்பாட்டினார். அதன்பின் கொண்டு போயிருந்த புத்தாடையை அணிவித்து, தாவணியால் தலையை மறைக்கச் செய்து வீட்டுக்குக் கூட்டிவந்தார். அன்றைய நாளில் பாற்சோறாக்கி கொண்டைப் பணியாரம் சுட்டு அக்கம் பக்கமிருந்த எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. உம்மா அன்று அதிக நேரம் அவளோடு செலவிட்டார். முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது.  'குமர்ப் பொறுப்பு பற்றிய கவலையாக இருக்கக்கூடும்' என்று அவளது காதுபடவே அடுத்த வீட்டு மாமிமார் பேசிக் கொண்டார்கள்.

அவள் 'சடங்காகி'ச் சில மாதங்களில் பெச்சிம்மா மௌத்தானபோது வாய்விட்டு அழக்கூட முடியாதவாறு மனம் இறுகிப்போய் விட்டதுமனித சஞ்சாரமே அற்ற நட்டநடுக் காட்டில் எந்த உயிர்ப்பிராணியும் இல்லாமல் தான் மட்டும் தனித்துவிடப்பட்டதான அவல உணர்வில் அவளது சின்னஞ் சிறிய உள்ளம் தவித்துப்போனது. அதன் பின்னர் மீண்டும் அவளுடைய உலகம் அந்தப் புளியமரமும் பறவைகளும் வண்ணத்துப் பூச்சிகளுமாய் ஆகிப்போனது. அவளுடைய நடமாட்டங்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்கத்தான் இப்போது பெச்சிம்மா இல்லையே!
'குமருப்புள்ள மரமேறப்படாய்' என்று எச்சரிக்கவும் யாரும் இருக்கவில்லை. ஒருவகையில் அது அவளுக்குப் பெரிய நிம்மதியாயிற்று.

'ஏன் உம்மா இன்னும் வரல்ல...?' என்ற கேள்வி மனசுக்குள் எழுந்தாலும் மௌனமாக சாச்சாவுக்கு சாப்பாட்டை எடுத்துப் பாயில் வைத்தாள்.
நீயும் வந்து தின்னு, வாஎன்ற சாச்சாவின் அழைப்பை இலேசான புன்முறுவலோடு மறுத்துஉம்மா வந்துரட்டும்என்று பதிலளித்தாள். அவளது முகத்தைக் கூர்ந்து பார்த்த சாச்சாவின் விழிகளில் என்றும் இல்லாத ஒருவகை பளபளப்பு மின்னுவது ஏன் என்று அவளுக்குப் புரியவில்லை. வாய்க்குள் சோற்று உருண்டைகளைத் திணித்தவாறே அவரது பார்வை அவளை உச்சி முதல் உள்ளங்கால்வரை அளப்பதை உணர்ந்து இனம்புரியாத ஒருவிதக் கூச்ச உணர்வினால் அவள் குறுகிப்போனாள். கறி எடுக்கப்போவதுபோல் ஓலைக் குசினிக்குள் போய்ப் புகுந்து கொண்டவள் சற்றுநேரம் வரை அங்கேயே நின்றிருந்தாள்.

'உம்மா சுருக்கா வந்துட்டா நல்லம்' அவள் தனக்குள் அடிக்கடி உருப்போடத் தொடங்கிவிட்டாள்.
என்ன புள்ள, இவ்ளோ நேரமா கறி எடுக்கிறியா? சுருக்கா கொண்டா புள்ள. மனுசனுக்குப் பசி உசுரு போவுது...” அவர் பொறுமையிழந்து கத்தவே, சட்டியில் இருந்த பருப்பை அகப்பையால் அள்ளிப்போட்டுக்கொண்டு விரைந்தாள்.

அது ஒரு மண் குடிசை. முன்னறை ஒரு புடவையால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. அதனை அடுத்து ஓலையால் மறைக்கப்பட்ட குசினி புறம்பாக வெளியே இருந்தது. கறிக் கோப்பையை வைத்துவிட்டு மீண்டும் குசினிக்குள் வந்த குட்டி, பக்கவாட்டு ஓலைக் கதவால் எட்டிப் பார்த்தாள், உம்மா வரும் அசுகை ஏதும் தெரிகிறதா என்று. ஊஹூம்! கண்ணுக்கு எட்டும் தொலைவுவரை உம்மா எப்போதும் பிடித்துக்கொண்டு வரும் தென்னோலையால் ஆன நெருப்புப் பந்தத்தின் ஒளி கண்ணில் படவேயில்லை.

'டைம் பஸ் கிடைச்சிருக்காதோ! இல்லாட்டி வழீல பஸ் ஒடைஞ்சிருக்குமோ? சாச்சா வந்துட்டார் எண்டது தெரியாம அவருக்காண்டிக் காத்துட்டு நிக்கிறாவோ?' அவளின் மனதுக்குள் கேள்விகள் நெளிந்தோடிக் கொண்டிருந்தன.

குடிக்கத் தண்ணி எங்க புள்ள?”  சாச்சாவின் குரல் உச்சஸ்தாயில் கேட்கவே அவள் திடுக்கிட்டு, சுயநினைவுக்கு வந்தாள். அவசர அவசரமாக ப்ளாஸ்டிக் ஜொக்கிலும் கண்ணாடி க்ளாஸிலும் தண்ணியை நிரப்பிக் கொண்டுபோய் சாச்சாவின் அருகில் வைத்தாள். தண்ணீரைக் கடகடவென்று குடித்துவிட்டு, சாப்பிட்ட பீங்கானிலேயே அவர் நீரை ஊற்றிக் கையைக் கழுவிக்கொண்டார். அவள் அவருக்குக் கை துடைக்கப் புடவைத் துண்டை நீட்டியபோது அவர் தன் கையையும் சேர்த்து இறுக்கிப் பிடித்ததைக் கண்டு அதிர்ச்சியோடு அவரின் முகத்தை ஏறிட்டாள். அவளின் விழிகள் பயத்தால் பிதுங்கின. சாச்சாவின் முகம் செங்குரங்குபோல் சிவந்திருந்தது. அசல் குரங்கைப்போல் இருந்த அவரது இளிப்பைப் பார்க்க அருவருப்பாக இருந்தது அவளுக்குசாராய நாற்றம் அவளின் குடலைப் புரட்டும் அளவுக்கு நாசியில் வந்து 'குப்'பென்று மோதியது.

சாச்சாஎன் கைய உடுங்க...”
கத்தாத குட்டி... எரக்கத்துக்குத் தானே...”
எரக்கம் ஈக்கட்டும், கைநோவுது. கைய உடுங்க...” என்றவாறு கையைப் பலம்கொண்டமட்டும் இழுத்து உதறிய வேகத்தில் பாயில் மிச்சம் இருந்த சோற்றுக் கோப்பையும் பருப்புக் கோப்பையும் உருள, சாப்பாடு பாயெல்லாம் சிதறியது. அவர் கோபத்தோடு எழுந்து அவளின் சட்டையை இழுக்க முற்பட்டபோது, பழைய வொயில் தாவணியின் ஒரு முனை பரபரவென்று கிழிந்து அவரின் கையோடு வந்துவிட்டது. அவள் குசினிப் பக்கமாகப் பாய்ந்து வெளியேறி ஓடத் தொடங்கினாள். கண்மண் தெரியாமல் ஓடும்போது, முன்னால் வந்த உருவத்தோடு மோதிவிடும் அளவுக்குக் கிட்டே வந்தவள், 'ப்ரேக்' போட்டதுபோல் நின்றுவிட்டாள். முன்னால் உம்மா நின்றிருந்தார். காலையில் இருந்து மாய்ந்துமாய்ந்து வேலைசெய்த அலுப்பு, சாச்சாவைத் தேடிக்கண்டுபிடிக்க முடியாமல் சீரழிந்த கோபம் எல்லாம் சேர அவர் முகம் இறுகிப்போய் இருந்தது.

என்னடி பேயக் கண்டமாதிரி இப்பிடி ஓடுறாய்? சாச்சா இன்னம் வரலையா?” அவரின் குரல் அதட்டலாகவே ஒலித்தாலும், பசுவை அடைந்த கன்று போல் மனம் உருகிக் கண்களினூடே வழியத் தொடங்கியது. அதைக் கண்டு உம்மாவுக்குக் கோபத்தோடு எரிச்சலும் சேர்ந்துகொண்டது.
நான் கேட்டுக்கிட்டே ஈக்கிறன், நீ ஊமக் கோட்டான் மாதிரி ஈந்தா என்னா அர்த்தம்டி? ஒனக்கு வாய்ல புட்டாடி?” என்று சீறிவிழுந்தார் உம்மா.
உம்மா... சாச்சா.. வந்து... சாச்சா…”
சாச்சாக்கு என்னாச்சிடி? மரத்துல ஈந்தாச்சிம் உழுந்துட்டாராஅல்லாஹ்வே!”
இல்ல உம்மா... வந்து.. சாச்சா...”
சனியன் புடிச்ச மூதேவியே! சுருக்கா சொல்லித் தொலைடி. சாச்சாக்கு என்னாச்சி?” உம்மா பதறினார்.

சாச்சாக்கு ஒண்டும் ஆவல்ல... அவரு... எனைய.. எனைய... கையப்புடிச்சி இழுத்தாரும்மா...” அவள் கோவென்று கதறி அழத்தொடங்கிவிட்டாள். உம்மா ஒருகணம் திகைத்துப்போய்க் கல்லாய்ச் சமைந்து போனார். ஒருசில கணங்கள்தாம். அடுத்தகணம், அவளின் முதுகில் பலாக்காய் விழுந்ததுபோல் 'தொம்'மென்று ஓர் அடி விழுந்தது. எல்லாக் கோபத்தையும் திரட்டி அவளின் முதுகில் இறக்கிவைத்தார், உம்மா.

ஏன்டி மூதேவி. அந்த மனுஷனப் பத்திக் கேவலமா, அதுவும் எனக்கிட்டேயா சொல்லுறாய்? ஒங்கப்பன் வீசிட்டுப் போன பொறவு எங்கள பொறுப்பெடுத்த உத்தமருடி அவரு. அவரப்பத்தி இப்பிடி நஜீஸ் புடிச்ச கத கதைச்சா, வாய் அவிஞ்சி போவும்டி மூதேவி! அந்த மனுஷன் பாவம். தன்ட புள்ளய மாதிரி எரக்கமா புடிச்சீப்பாரு. அரப்படிச்ச கழுத அந்த மெனிக்கேட ஊட்டுக்குப் போய் டிவி பாக்காதேண்டு எவ்ளோ சொன்னேன், கேட்டியா? கண்ட 'ஜராவ' படம் எல்லாம் பாத்து பிஞ்சில பழுத்த ஹராமி. ஒனைய...” அவர் இன்னும் ரெண்டு அடி அடிக்க முயன்றபோது அவள் சட்டென்று பாய்ந்து புதருக்குள்ளால் ஓடி ஒளிந்துவிட்டாள்.

எக்கேடும் கெட்டுத் தொலைஞ்சி போ சனியன் புடிச்ச பன்டி மூதேவிஎன்று திட்டித் தீர்த்தவாறு அவர் வீட்டை நோக்கி ஆயாசத்தோடு நடந்தார்.

தன்னுடைய வார்த்தையைக் கொஞ்சம்கூட நம்பாமல் தன்னையே கேவலமாகத் திட்டி அடித்த உம்மாவின் செயல் அவளுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தது. இப்படியான ஒரு விஷயத்தை அவள் வேறு யாரிடம் போய்ச் சொல்லுவாள், தன் தாயைத்தவிர? தன் தாயே தன்னை நம்பாவிட்டால், வேறு யார்தான் அவளை நம்பக்கூடும்! உம்மும்மாவின் வீட்டுக்குப் போகவும் அவள் விரும்பவில்லை. நடந்ததை அங்கு போய்ச்சொன்னால், ஹமீது மாமா சாச்சாவை வெட்டிப்போட அருவாக் கத்தியோடு கிளம்பினாலும் கிளம்பிடுவார் என்ற பயம் அவளை ஆட்டுவித்தது. தாயின் மடிதேடி ஓடும் கன்றாய், அந்த இருட்டிலும் தட்டுத்தடுமாறி புளியமரத்தில் போய் ஏறி அமர்ந்துகொண்டாள்.

பெச்சிம்மா இல்லாத குறை அவள் உள்ளத்தைப் பூதாகரமாகத் தாக்கியது. அவரிடம் எதையும் சுதந்திரமாகப் பேசலாம். பீரிஸ் அக்காவின் கடைக்குப் போகும்போது, அங்கே எப்போதேனும் பட்டறையில் அமர்ந்திருக்கும் பபானிஸ் அய்யா, மீதிச் சில்லறையைத் தருவதுபோல அவளின் கையைப் பிடித்து நசுக்கியதை, வீடு வீடாகப் பால் போத்தல் கொண்டுபோய்விற்கும் சோமபால அவர்களின் தோட்டத்தைத் தாண்டிப்போக நேர்கையில் விளையாட்டுப்போல் அவளின் பின்புறத்தில் ஓங்கித் தட்டிவிட்டுப் போனதை, ஒருதரம் முன்வீட்டு லோகன் மாஸ்டர் தன் அக்கா பிள்ளைகளோடு கண்கட்டி விளையாடிக்கொண்டிருந்த குட்டியைத் திடீரென்று பின்னால் வந்து இறுக்கி அணைத்ததைப் பற்றியெல்லாம் பெச்சிம்மாவிடம் பயமில்லாமல் சொல்லி இருக்கிறாள். அப்போதெல்லாம், பச்சைத் தூஷணத்தில் அவன்களைத் திட்டித்தீர்த்துவிட்டு, ஆண்களிடம், குறிப்பாக வயதான ஆண்களிடம் எப்படிக் கவனமாக இருப்பது என்பதைப் பற்றி அவளுக்குப் புரியும் வகையில் புத்திசொல்லி எச்சரித்து இருந்தார்.

இத்தனைக்கும் அந்தச் சம்பவங்கள் நடக்கும்போது அவள் 'சடங்காகி' இருக்கவும் இல்லை. என்றாலும், குட்டிக்கு வயதுக்கு மீறிய நல்ல வளர்ச்சியான தோற்றம். அதனாலேயே எப்போதும் அவளின் பாதுகாப்பில் பெச்சிம்மாவுக்குக் கவனம் அதிகம். அதைக் கருத்திற்கொண்டே அவர் அவளிடம், 'அங்கே போவாதே! இங்கே போவாதே!' என்று அடிக்கடி நச்சரித்த வண்ணமே இருப்பார். அப்போதெல்லாம் குட்டிக்கு அவர்மீது எரிச்சல் எரிச்சலாகவரும். இப்போது அவரின் இன்மையும் அது தந்துள்ள வெறுமையும் இட்டுநிரப்ப முடியாத பேரிழப்பாகத் தெரிந்தன, அவளுக்கு

பூச்சிகளின் சத்தம் இடையறாது ஒலித்துக்கொண்டு இருந்தது. இடையிடையே நாய்களின் குரைப்பொலியும் நரிகளின் ஊளைச்சத்தமும் அவளை இலேசாக மிரளவைத்தன. 'பாம்பு ஏதும் வந்துவிட்டால்?' என்ற எண்ணம், அவள் உடலைப் பயத்தால் சிலிர்க்கவைத்தது. 'அல்லாஹ்ட காவல்!' என்று முணுமுணுத்தவாறு வானத்தை அண்ணாந்து பார்த்தாள். முழுமதிக்கு இன்னும் ஓரிரு தினங்கள் இருக்கக்கூடும். நிலவு தகதகவென்று தங்கப் பந்தாய் ஒளிர்வதும் இடையிடையே நட்சத்திரங்கள் மின்னிமின்னிக் கண்சிமிட்டுவதும் புளியமரத்தின் அடர்கிளைகளினூடே லேசாகத் தெரிந்தன

வானத்தின் அழகில் தன்னை மறந்து இருந்தவளின் உடலைக் குளிர் சுமந்துவந்த மெல்லிய காற்று லேசாக நடுங்கச் செய்யவே, மார்புக்குக் குறுக்காக இரு கரங்களையும் இறுக்கிக் கட்டிக்கொண்டாள். கால்களைக் குறுக்கி வசதியாகச் சாய்ந்தபடி இருந்தவளுக்குப் பெச்சிம்மா சொன்ன பேய்க் கதைகள் நினைவில் எழுந்தன. அப்படியே லேசாகக் கண்ணயர்ந்துகொண்டு வந்தது.

மெல்ல மெல்ல அவளுடல் நெகிழ்ந்து உருகத் தொடங்கிவிட்டது. திரி பற்றியெரியும்போது மெழுகு உருகியுருகித் துளிகளாய் வழிவதுபோல அவள் உடலின் அங்கங்கள் ஒவ்வொன்றாய் கரைந்து கிளைகளினூடே வழியத் தொடங்கிவிட்டன. 'இப்படியே முழு உடலும் கரைந்து தான் அழிந்துவிடுவேனா' என்று அவள் அஞ்சத் தொடங்கியதும், புளிய மரத்தின் கிளைகள் நீண்டுவந்து அவளது அங்கங்களைத் தம்மோடு பிணைத்துக் கொள்ளத் தொடங்கின. சதையும் கிளையும் கலந்து அவள் மரமா, மனுஷியா என்று பிரித்துணர முடியாத ஓர் அபூர்வ உயிரியாகிவிட்டாள்.

குறிப்பிட்ட ஒரு கணத்தில் எல்லாக் கிளைகளின் கண்களும் விழித்துக்கொண்டு விட்டன. அவை அந்த அடர் இருளில் ஒளிர்ந்து மின்னத் தொடங்கிவிட்டன. ஓஹோ! அங்கே தன்னைப்போலவே வேறு பலரும் புளிய மரத்தோடு ஐக்கியமாகி இருக்கிறார்கள் போலும் என்ற எண்ணம் அவளுக்குள் முகிழ்த்தது. அவர்கள் அவளோடு ரகசியக் குரலில் பேசத் தொடங்கிவிட்டார்கள். அக்குரல்கள் ஒரே நேரத்தில் எழுந்தாலும் இரைச்சலாகவோ சகிக்க முடியாத பெருங்கூச்சலாகவோ இருக்கவில்லை. அவர்களின் மொழி அவளுக்குப் புரியவே இல்லை. என்றாலும், அக்குரல்களில் இருந்த மென்மையையும் பரிவையும் கருணையையும் அவளால் உணர முடிந்தது. அவர்கள் தம்மில் ஒருத்தியாக அவளை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று உணர்த்துவதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

திடீரென அந்தக் குரல்கள் ஓய்ந்துவிட்டன. அதுவரை ஒளிர்ந்த அவர்களின் கண்கள் சட்டென மூடிக்கொண்டுவிட்டன. எங்கோ நரிகள் பயங்கரமாக ஊளையிடும் சத்தமும் வேட்டை நாய்களின் மூச்சிறைப்பும் கேட்கத்தொடங்கி அவளை மெதுவாக அண்மித்தன. வெண்ணிறத்தில் ஒரு புகைப்படலம் புளியமரத்தைச் சூழ்ந்துகொண்டது. அவள் அந்தப் புகைப் படலத்தையே உற்றுப் பார்க்கத் தொடங்கினாள். புகையினூடே சில பேய்கள் மிதந்துவந்தன. அந்தப் பேய்களின் முகங்கள் பெச்சிம்மா வர்ணித்துச் சொன்ன அளவுக்குக் கோரமாகவோ பயங்கரமானவையாகவோ இருக்கவில்லை. அவை யாவும் ஏற்கெனவே அவளுக்கு நன்கு தெரிந்த முகங்கள்தாம். பாபானிஸ், சோமபால, லோகன், சாச்சா ஆகியோரின் முகங்களே அங்கிருந்தன. '' என்று இளித்தவாறுபளபளக்கும் கண்களோடு கடைவாயோரம் எச்சில் உமிழ்ந்தபடி, பார்க்கவே அருவருப்பாக இருந்தன அம்முகங்கள். கறுத்து நீண்டு வளைந்த நகங்கள் கொண்ட கைவிரல்களை விரித்தபடி அந்தப் பேய்கள் அவளைச் சூழ்ந்து கொண்டன. '....!' அவள் கத்திக்கொண்டே மீண்டும் கண்விழித்தாள். விழாமல் இருக்கக் கைகள் தன்னிச்சையாகப் புளியமரக் கிளையை இறுகப் பற்றியிருந்தன

கிழக்கு வெளுக்கப்போவது போன்ற அறிகுறி. இருள் பிரியும் அதிகாலை நேரம். பறவைகளின் சலசலப்பும் சேவல்களின் கூவலும் கேட்கத் தொடங்கிவிட்டன. தொலைவில் சிரட்டைக்குள் மெழுகுதிரி ஏந்தியபடி ஓர் உருவம் நகர்ந்துவருவதைக் கண்டதும் அவளின் இதயத்துடிப்பு அதிகரித்தது. அந்த உருவம் சற்று முன்னால் வந்தபின்தான் கைகளில் பால் போத்தல்கள் நான்குடன் சோமபால நடந்துவருவதைக் கண்டாள். அவள் மனதுக்குள் குறும்பு கூத்தாடத் தொடங்கிவிட்டது. 'இரி ஒனக்குச் செய்யிறன் வேல!' என்று கருவியபடி மரக்கிளையில் நிமிர்ந்து வசதியாக அமர்ந்துகொண்டாள். முதுகுக்குப் பின்னால் விரிந்திருந்ததலை முடியை முன்னால் இழுத்து முகத்தை மறைத்துத் தொங்கவிட்டாள். கைகளை இருபுறமும் விரித்து வெள்ளைத் தாவணியை மேலே போட்டுக்கொண்டாள்ஏதோ யோசனையில் நடந்துவந்த சோமபால புளியமரத்தை நெருங்கியதும் வெள்ளை நிறத்தில் ஏதோ அசைவதைக் கண்டு துணுக்குற்றான். முதல் நாளிரவு குடித்திருந்த 'கசிப்பு' தந்த மப்பு முற்றாக நீங்காத விழிகளால் மறுபடியும் புளியமரத்தை ஏறிட்ட அதேகணத்தில்... 'ஹோ!!!!' என்று அடித்தொண்டையால் கத்தினாள் குட்டி. அடுத்தகணம், சோமபாலவின் கையில் இருந்த நான்கு பால் போத்தல்களும் நழுவிக் கீழே விழுந்து உடைந்தன.

மகே புது அம்மோ...வ்! ஹொல்மன் ஹொல்மன்...!” என்று கத்தியபடி அவன் தலைதெறிக்க ஓடுவதைச் சற்றுநேரம் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினாள், குட்டி.