புதன், செப்டம்பர் 16, 2009

பின்னை இலக்கியம்

மாற்றுப்பிரதி

மொழிச்செயற்பாடுகளில் ஒரு பகுதியை இலக்கியம் என்ற குடும்பத்துக்குள் வரையறுப்பதை நாமறிவோம். கவிதை, சிறுகதை, நாவல், போன்ற வரைப்படுத்தலுக்குள் மொழி இடமாற்றப்படும் போது இலக்கியம் என்ற நிலைப்பாட்டை இலகுவில் அடைந்துவிடுகிறது. இது கடந்த ௨௫ நூற்றாண்டுகளாக மொழி குறித்த ஒரு நிலைப்பாட்டிற்கு தள்ளிவிடுவதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. மொழியின் பிற செயற்பாடுகளான (இலக்கியமற்றது என கருதப்படுபவை) வற்றிலிருந்து இலக்கியம் வேறுபடுத்தப்படுவதற்கான காரணங்களை அறிய முற்படும் வாசிப்புக்கள் இல்லாமலே போயிற்று. இலக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகவும், இதுதான் இலக்கியம் என்று முற்று முழுதான அர்த்தம் கிடைத்துவிட்டதுமான ஒரு நிலை பாதுகாக்கப்படுவதை அவதானிக்கலாம். இலக்கிய குடும்பத்துக்குள் வரைப்படுத்;தப்படுகின்ற அல்லது தள்ளப்படுகின்ற கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றுக்கும் இந்நிலையே பெரிதும் பராமரிக்கப்படுகின்றது. மேற்குறித்தவைகளுக்கான அர்த்தங்கள் கேள்விக்குட்படுத்தப்படுவதற்கு எங்கோ அப்பாலிருக்கிறது எனக் கருதப்படுகிறது. அவை நிலையான அர்த்தங்களை அல்லது மோட்ச நிலையை எட்டிவிட்டது என்றும் கருதப்படுகிறது. இலக்கியம் என்ற குடும்பத்துக்குள்ளே கண்டுணரும் மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை, பின்நவீனகவிதை (இதுபோல சிறுகதை, நாவல் போன்றவற்றை பொருத்திப் பார்க்கவும்) போன்ற கருத்தாடல்களை பொருள் கொள்வதற்கும் பரிசீலிப்பதற்கும்; ஆட்படக்கூடியவை என்ற நிலைப்பாடுகளை நோக்கியே அதிகம் அக்கறை ஏற்படுத்தப்படுவதை அறிவோம்.

நிலையான பொருளை எட்டிவிட்ட அல்லது அர்த்தத்தை மாற்றமற்ற நிலைக்கு கொண்டு சென்று முழுமையை எய்திவிட்ட கருத்தடைவுகளுக்கு கீழே (இலக்கியம்) நிரற்படுத்தப்படும் கருத்தாடல்களை மாத்திரமே கவனிப்புக்குள் நடமாட விட வேண்டும் என்ற இந்த நிலையை இன்னும் என்னவென்று பேசுவோம்? இலக்கியமற்றது என்ற பகுதிக்குள் இனங்காணும் மொழிச் செயற்பாடுகளுக்கும் இலக்கியம் என அடையாளப்படுத்தும் மொழிச் செயற்பாடுகளுக் குமிடையே பரிந்துரைக்கப்படும் வேறுபாடுகளை கவனித்தோமானால் அவை இரண்டு பகுதிக்குள்ளும் அப்பாவித்தனமாக பல்லிளித்துக் கொண்டிருப்பதை அறிவது சிரமமல்ல. ஒரு சிறு விளம்பரத்தில் கூட இலக்கியத் தன்மையை கண்டுகொண்ட பின்நவீன சிந்தனையாளர்கள் அதிரடியாக அறிவித்த ஒரு அறிவிப்புத்தான் ‘பிரதி’ என்பதாகும். இலக்கியம் என்று பொதுவாக உணரக்கூடிய பண்புகளின் கட்டமைப்பை தெரிந்துகொள்வதாக அறிவிக்கும் போது இலக்கியம் என்பது தமக்குத் தெரிந்த ஒன்றாக மாறிவிடுவதை கட்டுடைத்துக் காட்டினார்கள். ஏற்கனவே நன்றாக அறிந்துள்ள இலக்கியம் என்ற பொருளின் பொது இயல்பைப் பற்றிய ஒரு பகிர்ந்துகொள்ளலாக இருக்கலாம். இலக்கியமற்றதாக கருதப்பட்டவற்றில்இலக்கியத்தன்மை’ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதிலிருந்து இலக்கியம் என்ற கருத்தாக்கம் இன்னும் சிக்கல் நிறைந்ததாகவும், கடும் மூளை உழைப்பைக் கோருவதாகவும் மாற்றம் பெறுவதோடு ஏற்கனவே இலக்கியம் என்று புரிந்து கொள்ளப்பட்ட பண்புகளினதும், நிலையான அர்த்தமுடையது போன்ற கட்டுக்கதைகளினதும் சிதைவையும் அறிவிக்கிறது என்பதை புரிந்து கொள்வோம்.இலக்கியம் என்பது மைய நீரோட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பீடுகளுக்கான அர்த்தத்தை புதுப்பிக்கும் மொழிச் செயற்பாடு எனக் கருதிவந்ததையும் சிதைத்து விடுவதையும் அவதானிக்கலாம்.