நிலாரசிகன்
நெளிந்தோடும் கடலை
விரட்டுகிறார்கள் கறுப்புச்சட்டை சிறுவர்கள்.
தன்னைக் காத்துக்கொள்ள விரைந்தோடும் கடல்
யாருமற்ற நெருஞ்சிக்காட்டில் நுழைகிறது.
குடைக்குள் காதலை மழையாக்கிக்கொண்டிருக்கும்
இருவரை தாண்டி
சுள்ளி சுமந்து செல்லும் கிழவியின் பாதம் தொட்டு
ஒன்றிரண்டு கோடரிகளை இழுத்துக்கொண்டு
நெருஞ்சிக்காட்டை விட்டு வெளியேறுகிறது.
சிறுவர்கள் விடாமல் துரத்துகிறார்கள்.
முதலாமவனின் கைகளில் தடியொன்றை
ஓங்கியபடி ஓடிவருகிறான்.
தன் தகப்பனின் தலை சிதறடிக்கப்பட்டபோது
உதவாத கடலை கொன்றுவிடும் வெறி
அவன் கண்களில்.
வேறு வழியின்றி விரிந்துகிடக்கும்
கலங்கிய நதியில் கலந்து தன்னை
மறைத்துக்கொண்டது கடல்.
நதியை கழிவுகளால்
பழிதீர்த்துக்கொண்டார்கள் அநாதைச்சிறுவர்கள்.