புதன், பிப்ரவரி 03, 2010

வரலாற்றின் நிலப்பரப்புக்குள் பரபரப்போடும் வலியோடும் அலைதல்

கவிதைக்கான மாற்று
றியாஸ் குரானா
பல ஆண்டுகளாக அவளின் நிரவாணத்தை ஆய்வு 
செய்த பிறகு வரையப்பட்டது என்ற குறிப்போடு 
கண்காட்சியில் அந்த ஓவியம் வைக்கப்பட்டிருந்தது.
அதைச் சுற்றி கூடிநின்றவர்களில் நானுமிருந்தேன்.
அசிங்கம் அழகு அலங்கோலம் மற்றும் அவள் 
வெளியிட்ட குசுவையும் வர்ணங்களாகவும் 
கோடுகளாகவும் கீறியிருப்பதாக குறிப்பு சொல்கிறது.
உண்மைதான்.காட்சிக் கூடத்துக்குள் நுழைந்த 
கொசுவொன்று பறந்து வந்து சித்திரமாக இருந்த 
அவளின் ஒற்றை முலையில் குந்தி ஊர்ந்து 
கொண்டிருந்தது.மெல்ல மெல்ல நிமிர்ந்து திமிறிக் 
கொண்டிருக்க,அருகிலிருந்த மறு முலை தலையைக் 
குனிந்தபடி அமைதியாக கிடந்தது.கைகளை உசுப்பியோ 
சப்தமிட்டு கத்தியோ வாயால் காற்றை ஊதியோ 
கொசுவை விரட்ட முடியாமல் கண்கள் பரபரத்தன.
திடீரென உதடுகள் துடிக்கத் தொடங்கின.மாறிமாறி 
புன்னகைத்தும் நெளிந்தபடியுமிருந்தன.அவளுக்குள் 
காற்று கீறப்படவில்லை.சப்தங்கள் கீறப்படவில்லை.
முலைகளையும் முகத்தையும் தவிர வேரெங்கும் 
உயிரூட்டப்படவில்லை.உயரூட்டும் கோடுகள் 
பலவந்தமாக தடைசெய்யப்பட்டிருந்தன.
மரணித்தது தெரியாத தாயிடம் உணவுக்காக 
அடம்பிடிக்கும் குழந்தையைப்போல அவளின் 
உதடுகள் பரிதவித்தன. கண்கள் கொலைக்களமொன்றை 
பரபரப்போடு பேசின.ஓவியத்தை வரைந்தவரிடம், 
எஞ்சியிருக்கும் பகுதிகளிலும் உயிரைக் கீறும்படி 
பரிந்துரைக்க யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஓவியத்திற்கு கீழே ஒரு ஆணின் பெயர் 
எழுதப்பட்டிருந்தது.அந்தச் சித்திரத்துக்குள் 
கிடந்தே அவள் சாவாள் என்று எனது குறிப்புப் புத்தகத்தில் 
எழுதிக்கொண்டேன்.கொலைக்களம் அதன் வலி பற்றிய 
செய்திகளோடு அலையும் அவளுடைய கண்கள் 
கண்காட்சி கூடத்தின் சுவர்களில்மோதி 
விழுந்தபடியே இருக்கின்றன.கூடத்தை 
மீறிச் செல்லும் பார்வைகள் தண்டணைகளாக 
அவளிடமே திரும்பி வருகின்றன.
ஒரு குறிப்பு- கண்காட்சி முடியும்வரை, 
எது நடந்தாலும் புன்னகைத்தபடியே இருக்க 
வேண்டுமென்பது கண்காட்சிக் கட்டளைகளின் 
மீறமுடியாத விதி என்பது பின்னாளில் அறியப்பட்டது.
கண்களிலிருந்து பெருக்கெடுக்கும் பார்வைகள் 
பறவைகளாகி துரத்தி துரத்தி கொத்தக் கூடியனவல்ல 
என்ற கவிதையும் இன்னும் விரும்பிப் படிக்கப்படுவதாய் 
ஒரு செய்தியும் அங்கு பரப்பப்படுகிறது.