செவ்வாய், பிப்ரவரி 09, 2010

கல்குதிரை



புனைவின் குகைவழிப்பாதை 
றியாஸ் குரானா

"பலநிலங்களின் புரிதல்களும்,பல புரிதல்களின் புனைவு வெளிகளும் ஒருசேர 244 பக்கங்களைக் கொண்ட ஒரு அறையில் சந்தித்துக் கொள்வதுதான் கல்குதிரை."

தெளிவானது,தீர்க்கமானது,உண்மையானது,சந்தேகமற்ற முடிவுகளைக்கொண்டது என புரிந்து கொள்ளப்பட்ட அறிவியல் மற்றும் தத்துவார்த்த எழுத்துக்களும் புனைவு நிரம்பியவை என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியதிலிருந்து:,புனைவு அல்புனைவு போன்றவற்றிக்கு இடையிலான எல்லைக்கோடுகள் கலக்கமுறத் தொடங்கின.
இவை இரண்டுகளுக்கிடையிலான ஊடாட்டத்தை பொதுமைப் படுத்தும் புள்ளிகளைக் கண்டடையும் முயற்ச்சிகளும் தீவிரம் பெற்றன.
அறிவியல் சார் எழுத்துக்களைப்போன்று,யதார்த்தமாகவும்,யதார்தத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டுமென்ற புரிதல்கள் தடுமாறத் தொடங்கின.எனினும்,யதார்த்தம் சார் எழுத்துக்கள் புரிதல் தொடர்பான தேடலுக்கு பங்காற்றின.அந்தப் பங்களிப்புக்களிலிருந்து நீட்சியாகவும் மறுத்தும் புரிதலுக்கான தேவை உருப்பெற்றது.

மொழியை முன்னிறுத்தி புரிந்து கொள்ளும் தெரிதாவின் வாசிப்புக்களும்,வரலாற்றை பாலியலின் பக்கம் நின்று புரிந்துகொள்ள முயற்ச்சித்த பூக்கோவின் வாசிப்புக்களும்,எழுத்துச் செயற்பாடுகளை கடுமையாக பாதித்தன.அந்த வாசிப்புக்களை உள்வாங்கியும்,முரண்பட்டுமான எழுதுகைகள் உருவாகத்தொடங்கின.

சட்டம்,நீதி,ஒழுக்கம் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட சமூக அதிகார உற்பத்தி அம்சங்களையும் புனைவு வெளிக்கு இழுத்துவந்தது.ஒழுங்குபடுத்தல்களை கேள்விக்குட்படுத்தும் புனைவுகளாக எழுத்துக்கள் புதிப்பிக்கப்பட்டன.இதனடியாக மாயப்புனைவுகள்,மற்றும் புனைவு அல்புனைவுகளுக்கிடயிலான நிச்சயமற்ற உரையாடல்கள் என எத்துக்கள் விரிவுகொள்ளத் தொடங்கின.இது தமிழ் மொழியையும் தாக்கமுறச் செய்தது.
புனைவுப் பக்கச் சாய்விலிருந்து அறிவியலைப் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. புனைவு என்பது காலத்தின் தவிர்க்க முடியாத முதன்மைப் பாத்திரத்தை வகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதுதான் இன்றைய புரிதல் நிலை.
எழுத்துச் செயற்பாட்டில் மறைமுகமாகவும்,நேரடியாகவும் மய்யப் புள்ளியாக விளங்கிய அடையாளம் பன்மைநிலைக்கு உயர்த்தப்பட்டது.திணிக்கப்பட்ட அடையாளம்,தேர்வாக விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாளம்,
அடையாளங்களைத் துறக்க விரும்பும் அடையாளம், எனப் பல அடையாளங்கள் இயங்கும் இடமாக எழுத்துக்கள் அங்கிகாரம்பெறத்துவங்கின.
இதுவே எழுத்தின் அரசியல் மற்றும் அழகியலைத் தீர்மானிக்கும் எல்லைகளைத் தாண்டிச்செல்ல முயற்ச்சிக்கும் அவாவுதலாக விரிந்து கொண்டிருக்கிறது.
அறிதல் என்பது புனைவுகளைத் தொடர்புகொள்ள விரும்புதல் என்ற நிலைப்பாட்டில் வாசிக்கவும், எழுதவுமான ஒரு போக்கை உருவாக்கிவிட்டிருக்கிறது.
அறியப்படும் பொருட்களுக்கும்,அறியும் தன்னிலைகளுக்கும் இடையிலான மாயத்தோற்ற உடன்பாடுகளும்,முரன்பாடுகளும்: அறிவியல் மற்றும் புனைவுகள் தம்மை புதிப்பிப்பதற்கான இடத்தை வழங்கியுள்ளன.
மிஷெல் ஸெர்ரின் "இயற்கை ஒப்பந்தம்" என்ற வாசிப்புக்கள் இன்னும் விரிவான திசைகளை திறந்துவிட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பொருட்கள் என்ற நிலையில் அளிக்கப்பட்டிருந்த இடம் பரீட்சிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கவன ஈர்ப்புச்செய்கிறது.இந்தப் புரிதலும் எழுத்துக்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வல்லன.
இந்தப் புரிதல் புனைவு அல்புனைவு என்ற அடையாளப்படுத்துதலின் வரலாற்றை: இரண்டுக்குமிடையிலான இணக்கமுறும் முயற்ச்சி என்பதற்கப்பால் அல்புனைவுகளோடு ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளுவதன் அவசியத்தை கண்டடைய உதவக்கூடியது.
அது தவிர,திணிக்கப்பட்ட அடையாளங்களுக்கெதிராக தேர்வு செய்யப்பட்ட அடையாளங்களின் பக்கம் நின்று பெண் எழுத்துக்கள்,உடலரசியல்,ஓரநிலைக் கதையாடல்கள்,கோணல்கள் எனப் பெருகும் எழுத்துக்களை உற்பவித்தது.அதேபோல் அடையாளமின்மையின் அவாவுதலாக மாயப்புனைவுகளும் பெருகின.இவைகள் உள்வாங்கப்பட்டு ஊடாடி பெருகும் இன்னொரு புலமும் எழுத்துக்களத்தில் இயங்குகின்றன.அடையாளம் அடையாளமின்மை என்பதைக்கடந்து,பலவகை அடையாளங்கள் இயங்கும் வெளியாக உணரும் புரிதலும்,அதனடியாக வெளிப்படும் எழுத்துக்களாகவும் புனைவுகளை உருவாக்கும் முயற்ச்சி இது.
இந்தவகை புரிதல்களை வாசிப்பு வெளியில் கோரும் எழுத்துக்களை பரிந்துரைக்கும் ஒரு வேலையை கல்குதிரை செய்யத்தொடங்குகிறது.
புனைவுகளின் எல்லையற்ற வகைமைகளை தனது பக்கங்களில் உலவவிட்டிருக்கிறது. எழுத்தின் அரசியலை பேசுவதைக்குறைத்து புனைவுப் பெருக்கத்தை நோக்கி ஈர்க்கும் வேலையைச் செய்கிறது.மிரட்சியும்,புதிர்களும் நிறைந்த புனைவின் குகைவழிப் பாதையினுடாக அழைத்துச் செல்ல விரும்புகிறது.

பலவகை எடுத்துரைப்பு சாத்தியங்களால் கவிதைகளை நிகழ்திக்காட்டும் பிரதிகளும்,புனைவுகளின் கிளைத்துச் செல்லும் புரிதல்களால் நிரம்பிய கதைகளும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு அறைபோல கல்குதிரை தெரிகிறது.புனைவு தொடர்பான பேச்சுக்கள்,வாசிப்புக்கள் என இன்னொரு புலமும் அந்த அறையிலிருந்து விரிவுகொள்கிறது.
பெண்கள்,திருநங்கைகள்,கோணல்கள் போன்றவர்களின் புனைவுகள் குறைவாகவும் இல்லாமலும் இருப்பது ஒரு ஒழுங்குபடுத்தலாக நம் முன் தோண்றி வாசிப்பை சுவாரஸ்யமற்றதாக மாற்றுகிறது என்பதை சொல்ல வேண்டியுள்ளது.இருந்தும் தமிழின் விரிந்த பரப்பு கவனம் கொள்ளப்படுவது போன்ற ஒரு தோற்றம் வெளிப்படுகிறது.அதிலும் சிங்கப்பூர்,மலேசிய போன்ற நிலப்பரப்புகளின் இல்லாமை ஒரு சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது.
கல்குதிரை தனது தலையங்கமாக-ஈழத்தையும் அதனோடு உறவுகொள்ளும் புனைவுகளின் விரிந்த பரப்பையும் புரிந்துகொள்ளும் ஒரு அனுபவமாக பேசமுற்படுகிறது.கோணங்கி புனைவு மற்றும் அல்புனைவுளுக்கிடையில் எதுவித சமரசமுமற்ற மாய எழுத்துக்களைக்கொண்டு தமிழில் இயங்குபவர்.அதுவே அவரின் தலையங்கத்திலும் பயன்பட்டிருக்கிறது.
காட்டுவழியில் பயணிப்பதைப்போன்ற அழகியலை முன்வைக்கும் எழுத்துக்கள்.நீர்வீழ்ச்சி பாய்ந்து கடலில் சேரும்வரை தடங்கலற்றுத் தெரியும் ஒரு தொடர்ச்சி எப்போதும் கோணங்கியின் எழுத்துக்களை வழிநடத்துகின்றன.எடுத்துரைப்பின் பிரமிப்புக்களை கண்டடைய உதவும் உத்திகளாக இதைக்காணலாம்.
இவரின் கதைகள் பெரும்பாலும்,படிமவெளியில் மொழியின் தொடர் கயிற்றால் பின்னப்பட்டு விரிந்து செல்லும் தன்மையையுடையன.காட்டில் எப்போதாவது தென்படும் குளங்களைப்போல பாத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோண்றி கதைகளைப் பேசும் மாயத்தோற்றத்தை கதை நகரும் நிலமாக உருவாக்குகின்றன.புனைவு அல்புனைவுகளிடையான இணக்கத்தை கோணங்கியிலிருந்து அவதானிக்க வேண்டிய ஒரு நிலையைப் பரிந்துரைக்கின்றன.

வெவ்வேறு புனைவு வெளிகளும்,புதுவகை அழகியலை நம்பும் மனிதர்களும் உலவும் கதைகளை கல்குதிரை கொண்டிருக்கிறது.தனித்தனியே வாசிக்க வேண்டிய புனைவுகளின் அசாத்தியங்கள் நிகழுகின்ற நிலப்பரப்பு பனிக்காலங்களின் கல்குதிரை என்று சொல்லலாம்.

எழுத்துப்பரப்பிலிருந்து பத்து வருட தலைமறைவுக் காலங்களிற்குப்பின் தமிழுக்கு புதிய ஊட்டங்களைச் சேர்க்கும் எழுத்துக்களோடு நாகர்ஜூனன் வந்திருக்கிறார் என்பது அவருடைய பிரதிகளில் பதிவாகியிருக்கிறது."இயற்கை ஒப்பந்தம்"அவரால் அறிமுகப்படுத்தப் பட்ட பின்பே என்னால் வாசிக்கும் உடன்பாடு தோன்றின.கல்குதிரை பல்புனைவுகளின் புரிதலாக வெளிவர இவரின் வலைத்தள தரவிரக்கங்களும் அவசியம் என்றே தோன்றுகிறது.
நடைமுறையில் முரண்பட முடியாத விசயங்களை ஒரு உலகமாக எழுத்தில் உருவாக்கி முரண்பட்டு தனது சுதந்திரத்தை நிறைவேற்ற முனையும் மிலோராட் பாவிச் அவர்களின் வேறொரு நேர்காணலை தேர்வு செய்திருக்கலாம்.ஹென்றிச் போல்,வில்லியம் பர்ரோஸ் பொன்றவர்களின் பேச்சுக்கள்,இந்த குகைவழிப்பயணத்தில் இளைப்பாரும் தருணங்களை தருகின்றன.ஜோர்ஜ் லுயி போர்ஹே புனைவின் அசாத்தியங்களை மாத்திரமல்ல அதன் வடிவங்களையும் புதிப்பித்தவர். சிறுகதைகள் மட்டும் எழுதி பல பெரும் நாவல்களுக்கு வித்தாகியவர். அவரின் ஒரு கதையில் உள்ள உத்திகளே பல நாவல்களுக்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது.புனைவின் எல்லையற்ற கதவுகளை ஆரவாரமில்லாமலே திறந்து பார்த்தவர்.அவர் தொடர்பான பதிவுகளும் கல்குதிரை கொண்டிருக்கிறது.பலநிலங்களின் புரிதல்களும்,பல புரிதல்களின் புனைவு வெளிகளும் ஒருசேர 244 பக்கங்களைக் கொண்ட ஒரு அறையில் சந்தித்துக் கொள்வதுதான் கல்குதிரை.