வியாழன், மார்ச் 18, 2010

புனித இடங்களில் மாத்திரமே வசிக்கின்ற


மேன்மைதங்கிய சாத்தான்: 
சில அவதானங்கள்.

றியாஸ் குரானா 
கவிதைக்கான மாற்று

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அலிஃப்,லாம்,மீம் இப்படித்தான் தொடங்குகிறது
அந்த புனிதநூல்.அங்கிருந்தபடிதான் தமது மக்களை
கண்காணிக்கிறான்.போதிக்கிறான்.அவன் பேசும் சிறு
வாக்கியங்கள்கூட முடிவடைவதற்குள் நாம் சாத்தானை
சந்தித்துவிடலாம்.இறைவனைவிட அதிகமான இடங்களை அங்கு
சாத்தான் கைப்பற்றி வைத்திருக்கிறான்.
எல்லாக்கடவுளர்களையும் கலங்கடிப்பதும்,அவர்களுக்கு
சவால்விடுவதும் சாத்தான் ஒருவன் மாத்திரமே.
சகல கடவுளரையும் திணறடிக்கும் தந்திரங்களை 
தனித்து நின்று உருவாக்கும் பெரும் புரட்சிக்காரன்.
சாத்தானை ஆண்பால் படுத்தி சொல்லுவதில் எனக்கு
சிறு தயக்கம் உண்டு.எல்லா அடையாளங்களையும் கடந்த
நிலையில் அவன் பெருகிக்கிடக்கிறான்.அவனுடைய செயற்பாடுகள்
கடவுளரினதையும்விட கவர்ச்சிகரமானது.
ஜனநாயகரீதியில் ஒரு தேர்தல் நடத்தப்பட்டால்
பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று முன்னிலைக்கு
வரமுடியும் என்றும் அறிவிக்கிறான். ஏதோ ஒரு வகையில்
எல்லாமே தனக்கு ஆதரவு செய்கிறார்கள்,செய்கின்றன என்பது
அவனின் நீண்டகால அறிவிப்பாகும்.மிகத்திட்டவட்டமாக
சொல்கிறான் கடவுளர்கள் எங்கும் வசிக்கிறார்கள்.
நான் ஒருத்தன்தான் புனிதமான இடங்களில் மாத்திரம்
வசிக்கிறேன் என்கிறான்.உதாரணத்திற்கு அல்குரான்,பைபிள் 
இதுபோன்ற எல்லாப்புனித இடங்களையும் பார்வையிடச்
சொல்லுகிறான்.தன்னை தோற்கடிக்க கடவுளர்களே நேரடியாக
வந்தும் தோற்றுப்போன கதைகளை அத்தாட்சிகளாக முன்வைக்கிறான்.
கடவுளர் முட்டாள்தனமானவர்கள்,பலமற்றவர்கள் என்பதோடு
மட்டுமல்லாமல் ஓரிறைக்கோட்பாட்டை தான் ஆதரிப்பதாகவும்
சொல்கிறான்.ஆனால்,அந்தக்கோட்பாட்டை அவர்கள் பயன்படுத்த முடியாது
அதற்கு காரணமாக பல கடவுளரின் இருப்பைக்காட்டி கிண்டல்
செய்கிறான்.நான்தான் அந்த கோட்பாட்டை பயன்படுத்த தகுதியானவன்
என்று வாதிடுகிறான்.எனவே அளவற்ற எதிர்ப்பாளனும் அளவற்ற
கலகங்களுக்கும் உரியவனாகிய சாத்தானின் பெயரால் முடிக்க
நினைக்கிறேன்.அதுதான் முடியவில்லை.ஏனெனில் சாத்தானை
வெளியேற்றிய பிறகுதான் இந்தப்பிரதியை உருவாக்கினேன்.
புனித இடங்களை வைத்திருப்பவர்கள் சற்று கவனமாக
வாசிக்கவும்.அந்த இடங்களில் இருக்கும் சாத்தான் எனது பிரதிக்குள்
நுழைந்துவிடலாம்.நீண்டுவிடும் என்பதால்,ஒரேநேரத்தில் 
எல்லாக்கடவுளர்களின் முன்பும் தோண்றக்கூடிய அவனின் ஆற்றல்
பற்றிய கதைகள் இங்கு சொல்லப்படவில்லை.
எல்லா புனிதநூல்களின் ஒவ்வொரு பக்கத்திலும் காதலின்
இனிய செய்திபோன்ற அழகிய வரவேற்புப்பாடலை
சாத்தான் பாடிக்கொண்டேதான் இருக்கிறான்.
பலகோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து பாடப்பட்டுவரும் 
இந்த வரவேற்புப்பாடல்,2003ம் ஆண்டு 03ம் மாதம் 06ம் திகதி
பின்னிரவு 2மணி 55 நிமிடம் 33 வினாடியில்,
எனது பிரதியிலிருந்து அவனால் திருடப்பட்டதுதான்.
இந்த திருட்டு சாத்தானால் மட்டுமே முடிகிற விசயம்
என்பதை, இன்று அவனைச் சந்திக்கும்போதுதான் 
அறிந்து கொண்டேன்.சில பொழுதுகளில் கடவுளரும் 
இந்தப்பாடலை ரசிப்பர்.