சனி, பிப்ரவரி 27, 2010

நவாஸ் சௌபியின் "எனது நிலத்தின் பயங்கரம்"


இந்த வாசிப்புப் பிரதி பேச்சு வடிவிலிருந்து பதிவிடப்படுகிறது.
இலக்கிய நண்பர்களோடு பேசிக்கொண்டவைகள்.

புதிய கவிதைமொழியை பரிந்துரைக்கும் பிரதிகள்.


நூல் அறிமுகம்
றியாஸ் குரானா

ஈழத்தை பொறுத்தமட்டில் ஒரு மர்மமான மவுனம் எப்போதும் நிலவிவந்திருக்கிறது. இப்போது மவுனமாகவே ஆகிவிட்டது என்றும் சொல்லலாம். இரண்டு பக்கத்திலிருந்து இந்த மவுனத்தை பார்க்கலாம். இலக்கியம் என்ற செயற்பாடு மிகச் சரியாகவே நடக்கிறது. பேச ஒன்றுமில்லை என்ற ஒருவகை ஆதர்சமாக நிலவும் மவுனம். மற்றயது புதிய எழுத்தாளர்களைப் பற்றியும், எழுத்துக்கள் பற்றியும் பேச மறுக்கும் ஒரு மவுனம். இந்த மவுனம் நவாஸ் சௌபியின் கவிதைப்பிரதிகள் மீதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த மவுனத்தை உடைக்கும் ஒரு முயற்ச்சியாக எனது வாசிப்புகளை முன்வைக்கலாம் என்பதுதான் இந்த எழுத்துக்கள்.
அதற்கு முன் ஒரு சிறு பேச்சு- அண்மைக்காலமாக காலச்சுவடு பதிப்பகம் ஈழத்து எழுத்துக்களின் மீது ஒரு அபாரமான ஆர்வத்தை காட்டுவதுபோல் பலரின் எழுத்துக்களை பதிப்பித்துக் கொண்டிருக்கிறது. அதை மனங்கொள்ள வேண்டும். எனினும், இவர்களின் உழைப்புக்களுக்கு சரியான ஊதியம் கிடைக்கப் பெற்றதா எனத்தெரியவில்லை. தமிழ் நாட்டில் இப்போது இலவச உழைப்புக்களை தமக்காக பயன்படுத்தக் கூடிய சூழல் குறைந்து விட்டிருக்கிறது என்பதை நாமறிவோம்.எனவே ஈழத்து எழுத்துக்களை இலவசமாக பயன்படுத்த முடியும் எனவும் கருதியிருக்கலாம். நூல்களை பதிப்பிப்பதற்கு கடுமையாக போராடவேண்டிய ஒரு நிலையில் ஈழத்து இலக்கிய களம் இருப்பதை சாதகமாக பெரு நிறுவனங்கள் கரிசனம் கொள்ளும் விசயமாகவும் யோசிக்க வேண்டியுள்ளது. இந்த விசயத்தில் காலச்சுவடு எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் பேசாதவரை மறைவானதொன்றாகவே இருக்கும்.

நாம் வாசிப்புக்கு வருவோம்.
திறனாய்வு என்ற பிரதிகளை வாசிக்கும் ஒரு செயற்பாடு தமிழில் மிக நீண்ட மரபைக்கொண்டது. உரை, விளக்கம் போன்றவை எழுதுதல் எனத்தொடங்கி  நீள்வது அது. குறித்த ஒருவரின் வாசிப்பே அந்தப் பிரதிக்கான நிலையான வாசிப்பு விளக்கம் என்றவகையில் தொடங்கி பல வாசிப்புக்களும் இருக்கமுடியும் என்ற இடம்வரை புதிப்பிக்கப்பட்ட ஒன்று அது. பிரதியை அனுகுதல் அல்லது அதனோடு பழகுதல் என்ற வாசிப்புக்களுக்கு கா.ந.சு,சி.சு.செல்லப்பா போன்றவர்களின் வழி ரசனை என்ற புரிதலில் ஒருவகை உள்ளொளி திறனாய்வு வாசிப்பும்,
கைலாசபதி,சிவத்தம்பி,வானமாமலை போன்றவர்களின் வழி தியரி சார்ந்த ஒரு திறனாய்வு வாசிப்பு முறையும் மேலோங்கியிருந்தது.
உள்ளொளி வாசிப்பு முறையை பரப்பும் பலர் பின் முளைத்தனர்.
சுந்தர ராமசாமி,ஞானி,ஜெயமோகன்  போன்றவர்கள் அதில் முக்கியமானவர்கள்.அதேநேரம் தியரி சார்ந்த வாசிப்புக்களை முன்வைத்தவர்கள் பல பிரிவினர்களாக பிரிந்தனர்.
இது ஒரு பன்முக செயற்பாடாக விரிவுகொண்டது.
80 களில் தமிழவனின் அமைப்பியல் அறிமுகமும் அதன் பின் தொடர்ந்த பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் போன்ற கருத்து நிலைகளும் திறனாய்வு வாசிப்புக்களை புதுப்பித்தன. அதனடியாக தலித்,விளிம்புநிலை,பெண்மொழி என பல்வகை வாசிப்புக்களுக்கான சாத்தியப்பாடுகள் திறக்கப்பட்டன.
இந்த நேரத்தில், தமிழின் திறனாய்வுச் சட்டகம் ஆட்டங்கண்டது. மரபுரீதியான வாசிப்புகளிலிருந்து விடுபட்டு பிரதிகளை வித்தியாசமான பல திசைகளிலிருந்து வாசிக்கும் ஒரு நிலை ஏற்பட்டு இன்னும் தொடர்கிறது.
பிற மொழிகளை தமிழ் சந்தித்து ஊடாடியபோது நிகழ்ந்த இந்த மாற்றங்கள் தனியான பெரும் வாசிப்புக்குரியது என்றவகையில்,இங்கு அதைத்
தவிர்ப்போம். இந்த தமிழின் பிறமொழிச் சந்திப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழின் விரிந்த பரப்புவரை பரவத்தொடங்கின.ஆனால் ஈழத்தில் இதற்;கு மாற்றமான ஒரு சூழல் இருந்தது.
80 களில் தமிழ் நாட்டில் ஏற்பட்டமற்றங்கள் ஈழத்தில் கவனத்திற்குட்படுத்தப்படவில்லை. இலக்கிய வாசிப்புக்களும் ,பேச்சுக்களும் வேறொரு இடத்தை தேர்ந்திருந்தது. அவ்வப்போது சில வாசிப்பிற்கான முயற்ச்சிகள் கோடிகாட்டப்பட்டாலும் பின் அது அமைதியடைந்திருந்தது.
ஈழத்தில் இலக்கியவகை எழுத்துக்களையும் தீர்மானிக்கும் இடத்தில் அரசியல் கருத்தாக்கமே முதன்மைப்படுத்தப்பட்டது. தேசியம் என்கின்ற அரசியல் திட்டம் இலக்கிய எழுத்தின்மீதும் வாசிப்புக்களை திணித்தபடியே இருந்தது.அது அவசியமானது என்ற கதை பரப்புதல்களால் இந்த வகை வாசிப்பின் பக்கம் சிவத்தம்பி போன்றோரும் இடம்மாறியிருந்தனர். இந்நிலையில் ஏலவே ஈழத்தில் நிலவிய தியரி வாசிப்புக்களும், உள்ளொளி மற்றும் ஆத்மீக கருதுகோள்களை இணைத்து புதுவகை வாசிப்பை முயற்ச்சித்த மு.தளையசிங்கம் போன்றவர்களின் வாசிப்பு நீட்சிகளும் சில சமயங்களில் முன்வைக்கப்பட்டன. எனினும் அரசியல் கருத்தாக்கத்தின் மேலாண்மையில் உருப்பெறும் வாசிப்புக்களே ஈழத்து இலக்கியத்தின் பொதுக்களத்துக்கு பரப்பப்பட்டது அல்லது பரவத்தொடங்கியது. இந்நிலையில் தியரி,உள்ளொளி,அரசியல் கருத்தாக்கம் என மூன்றையும் இணைத்த நிலையில் ஒரு கலவை வாசிப்பு முறையை எம்.ஏ.நூஃமான் கையேற்றிருந்தார்.

இது ஒரு முக்கிய வாசிப்பு முறையாக கருதப்பட்டது. பெரும் கவனத்தைப் பெற்றார். இவர் வாசிப்புச் செய்யாத எழுத்துக்கள் ஈழத்து இலக்கியத்திலிருந்து புறக்கணிக்கப்படும் நிலைவரை சென்றது. அதனடிப்படையில் நூஃமான் முக்கிய பிரதிவாசிப்பாளராக தன்னை நிகழ்த்திக் காட்டத் தொடங்கினார்.
 90 களின் பின்னர் தவிரக்க முடியாதபடி இந்த வாசிப்புமுறை புதிப்பிக்க வேண்டிய ஒரு சூழல் ஈழத்து தமிழ் மொழிப்பரப்புக்கு உருவானது. ஏனெனில், தேசியம் என்ற அரசியல்திட்டம் வேறொரு அர்த்தத்தை உருவாக்கியிருந்தது. "தமிழ் பேசும் மக்கள்"என்ற கருத்தாக்கம் தோல்வியடைந்திருந்தது. அதற்க்கான சமூகச் சூழலை அரசியல் செயற்பாடுகள் கோரிநின்றன.
மலைத் தேசம்,முஸ்லிம் தேசம் என்றும் புதிய அரசியல் விருப்புறுதிகள் தேசியம் என்ற அரசியல் திட்டத்திலிருந்து சமூக நிலைமாற்றமாக பேச்சுக்கு முன்வைக்கப்பட்டது. இதை தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தாக்கத்தின் புதிப்பிக்கப்பட்ட ஒரு நிலையாகவும் நோக்கலாம். அதற்கான அரசியல் செயற்பாடுகளின் விளைவுகள் ஒரு புறமிருக்க. இலக்கியத்தில் அதன் பங்களிப்பாக பல பிரதிகள் உருப்பெற்று பெருகத்தொடங்கின.அதனடியாக அப் பிரதிகளை வாசிப்பதற்கான புதிய வாசிப்பு முறைகளும் தேவைப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் வெளிப்பட்ட பல பிரதிகள் புதிய வாசிப்பை கோரியபடியே எழுத்துக்களத்துக்குள் நுழைந்தன. சரிநிகர் போன்ற பத்திரிகைகளில் இந்தப் பிரதிகளை வாசிப்பதற்கான முயற்ச்சிகள் தொட்டுப்பார்த்தாலும், அவை தொடரப்படாமலே விடப்பட்டன.
90 களுக்கு முன்பு புழக்கத்திலிருந்த நூஃமானின் வாசிப்பு முறைகளையே இந்தப்பிரதிகளின் மீதும் ஏற்றி வாசிக்கத்தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் புதிய பலர் மீண்டும் உள்ளொளி வாசிப்புக்களுக்கு இப்பிரதிகளை உட்படுத்தினர்.(இவையாவும் விரிவான அளவில் மேற்கொள்ளப்படவில்லை. சிறு குறிப்புக்கள் என்றளவில் நோக்கத்தக்க திறனாய்வுகளே) இதே நேரம் முஸ்லிம் தேசத்தின் பக்கமிருந்து மதப்பின்புலத்தை முதன்மைப்படுத்துவது போன்ற சாய்வில் இலக்கியப் பிரதிகள் பெருகத்தொடங்கின என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. வாசிப்புக்குட்படுத்தாத அல்லது பொருத்தமற்ற வாசிப்பு முறைக்குள் சிக்கி அமைதியடைந்துபோன எழுத்துக்கள் என்றே 90 களின் இலக்கியப்பிரதிகளை அதிகம் சொல்ல வேண்டியிருக்கிறது.
2000மாம் ஆண்டுகளிலும் இது தொடர்கிறது. புதிய பிரதித் திறனாய்வு முறைகள் ஈழத்தில் பயன்பாட்டில் இல்லை. பலவகை மாற்றங்களைக்கொண்ட பிறமொழி வாசிப்பு முறைகளும், இலக்கியங்களும் தமிழ் மொழியைச் சந்தித்து நீண்ட காலத்திற்கு பின்பே பெருவாரியாகப் பரவத்தொடங்கியது. அந்தக்காலமாக 2000மாம் ஆண்டின் தொடக்கத்தை சொல்லலாம்.
புதிப்பிக்கப் பட்ட பிரதி வாசிப்புக்கள் இல்லாமல் போன நிலையில், தமிழ் நாட்டுக் கவிதைகளைப் படித்தே அதிலிருந்து கவிதைகளை உருவாக்கும் பல முயற்சிகள் இங்கு அரங்கேறத் தொடங்கின. அதே நேரம் போரில் பங்கேற்கும் தன்னிலைகளின் இலக்கியங்களும் மறுபுறம் பெருக்கெடுத்தன. போரில் தலைமையேற்கும் நிறுவனத்திற்குச் சாய்வான பிரதிகளும், அதை ஊக்கப்படுத்தும் பிரதிகளும், மக்களை அதன்மீது கவனஈர்ப்பை செய்ய தூண்டவுமான வாசிப்புக்களும் நுழைந்து இலக்கியத்தின் முதன்மைப் பாத்திரத்தை கோரின என்பதும் இங்கு சொல்லப்பட வேண்டிய ஒன்று.
2000மாம் ஆண்டின் முற்பகுதியில் ஈழத்தில் புதுவகையான இலக்கியப் பிரதிகளின் உற்பத்திகளும், இந்தப் பிரதிகளை வாசிக்கமுற்படும் முறைமைகளும் உருவாகின. எனினும் அவை கவனம் பெறாமலே போய்விட்டது. அல்லது மர்மமான மவ்னதுடன் கூடிய நிலைப்பாடுகளால் உறைந்து போனது. எம்.ஐ.எம்.ரஊப் போன்றவர்கள் நுஃமானிலிருந்து விலகிய ஒரு வாசிப்பை செய்துகாட்ட முனைந்தாலும் அதிலிருந்து விடபட முடியாமையை அவரது பிரதி வாசிப்புக்கள் கொண்டிருக்கின்றன.  நாவல் என்ற கதைசொல்லல் தொடர்பான வாசிப்பிறகுள் கவிதையின் பாத்திரத்தையும் இணைக்க முற்பட்டிருப்பது வாசிப்பின் புதிய திசைகளுக்கான அவாவுதலை நமக்கு அறிவிக்கின்றன. உள்ளொளி மற்றும் தேசக்கருத்தாக்கம் என்பவைகளே கடைசியில் மீந்திருக்கும் இவரது வாசிப்புப் பிரதிகள் புதிப்பிக்கப்படாத நிலையைக் கொண்டிருக்கின்றன. எனினும், ரஊப் தான் புதிய திறனாய்வுகளின் அவசியத்தை ஆரம்பித்துவைத்தவர். இவரின் இந்தப் பங்களிப்பு இன்று விரிவுகொள்ளத் தொடங்கியுள்ளது. அது அவரையும் கடந்துவிட்டிருக்கின்றது.அவரிலிருந்துதான் பின் நவீன வாசிப்புக்கள் தொடங்குகின்றன. 
மேலுள்ள நிலவரங்களின் தன்மையிலிருந்துதான் நவாஸ் சௌபியின் " எனது நிலத்தின் பயங்கரம்" என்ற தொகுப்பிலுள்ள கவிதைப்பிரதிகளை அனுக விரும்புகிறேன்.

 கவிதைமொழி அதை வெளிப்படுத்துகின்ற மொழிதல் அல்லது எடுத்துரைப்பு என்ற வகையிலும், குறித்த மொழிதலினூடாக கவிதையாக தன்னை நிகழ்த்திக்காட்ட இவருடைய எழுத்துக்கள் உட்செரித்துக் கொண்டிருக்கின்ற சிந்தனைகளின் அறிவுப்புலம் என்றவகையிலும் மேலோட்டமான அறிமுகத்தை பரிந்துரைப்பதே இந்த வாசிப்பின் தொடர்ச்சியாக அமையலாம்.
இவருடைய பிரதிகள் நிலம் என்ற அம்சத்தை முக்கிய பாத்திரமாக பரிந்துரைக்கின்றன. நிலத்தின் மீதான ஆக்கிரமிப்புக்கள்,இழப்புக்கள், நிலம்பற்றிய நினைவுகள்,நிலத்தோடு ஒட்டிய கடந்தகால எச்சங்கள், நிலத்தின் மீதான அக்கரைகள் என பலவகைத்திசைகளில் இவரது கவிதைகள் பயணிக்கின்றன. நிலத்தை பெண்ணோடு இணைத்து அதிலிருந்து நிலத்தை பயன்படுத்தும்  சிந்தனைக் கட்டமைப்புக்களில் இருந்தும், பெண் தன்னை பொருளாக கருதும் நிலையிலிருந்து விடுபட்டு ஒரு தன்னிலையாக ஏற்கவேண்டும் என்ற இன்றைய புரிதல்கள் வரை நமது சிந்தனைகளில் நீடிக்கிறது.
தமிழின் கவிதை மூலம் நிலங்களிலிருந்தே கட்டமைக்கப்பட்டு நிலங்களிலிருந்தே புதிப்பிக்கப்பட்டு வரும் மரபில், இவரின் பிரதிகள் தமழிக் கவிதைப் புதுப்பித்தலின் தொடர்ச்சி எனலாம். பண்பாட்டோடும், கலாச்சாரத்தோடும் அதன் கிளைத்துச் செல்லும் புரிதல்களோடும் தன்னை ஒரு இணக்கமான முறையில் அமைத்துக்கொண்ட நிலத்தின் வேர்கள் இவருடைய பிரதிகளிலும் பரவியிருக்கின்றன.
அரசியல் திட்டத்தின் முதன்மைப்பாத்திரமாக நிலம் முன்தள்ளப்பட்டது என்பது தேசியம் என்ற கருத்துருவாக்கத்தில் விளைந்த ஒன்று. ஈழத்தைப் பொறுத்தமட்டில் தேசியம் பல நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பினும், நிலத்தை முன்வைத்து சிந்திக்கும் புரிதலை இலக்கியப்பரப்பு வரித்துக் கொண்டதன் விளைவு.
நிலத்தின் மீதான துயரம், நிலத்தின் மீதான துய்ப்பு,ஆக்கிரமிப்பு,அதன் எதிர்ப்பு என நிலத்தைச் சுற்றியே இவரது பிரதிகள் தமது புரிதலை புதுப்பிக்கின்றன. இவருடைய கவிதைப் பிரதிகளில் வரும் பெண் என்ற நிலைக் குறிப்பீடுகள் கூட நிலத்தை உள்வாங்கிய ஒரு நிலையிலேயே புரிதலுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன. மரங்கள்,பறவைகள்,மிருகங்கள் இப்படி எல்லாக் குறிப்பீடகளும் நிலத்தை ஆதாரமாகக் கொண்டு கவிதை நிகழும் பிரதிகளாக உற்பத்திக்கப் பட்டவை.
ஈழத்தில் நிலத்தின் மீதான அக்கரை என்பது பல வழிகளில் முதன்மையாக கருதப்படுகிறது.அந்த வகையில் ஒரு கவிதைப்பிரதி நிலத்தினூடான வாழ்வாக மாறும் முயற்சியை செய்ய முற்படுமெனில், அதில் மிக முக்கியமான இடத்தை இவரது கவிதைப் பிரதிகளுக்குத்தான் வழங்க வேண்டியிருக்கும். இவருடைய கவிதைப் பிரதிகள் வேறொருவகையில் அடையாளங்களை கலைத்துப்போட எத்தணிக்கின்றன. நிலத்தை பல அடையாளங்களின் விளையாட்டுக்களமாக புரிந்து பிரதிகளை நம்மிடம் தருகிறது. தனித்தனியாக வாசிக்கும்போதும், ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போதும் ஒரு பெரு நிலப்பரப்பில் வசிப்பதைப்போன்ற அனுபவ எல்லைகளுக்கு அருகில் நம்மைத் துரத்துகிறது.
நிலத்தை புரிந்து கொள்ளல்,அதிலிருந்து தப்பிக்க முற்சித்தல், நிலத்தின் வாழ்வை அனுபவத்திற்கு வெளியே நின்று புனைவுசெய்ய முற்படல் என நிலத்தாலான கவிதைப் பிரதிகள் இவருடையது. இதனோடு நிலம் என்ற பண்பாட்டு மரபுதாண்டி அதன் அரசியல் தர்க்கத்தின் அடிப்படையில் நிலத்தால் ஏற்பட்ட இழப்புக்கள்,அதன் பெறுமானங்கள்,விளைவுகள் என்ற வாசிப்புக்களும் சாத்தியமே. அப்படியான வாசிப்புக்கள் இந்தப் பிரதிகளை கடுமையாக விமர்சிக்கவும் கூடும் என்பதும் உண்மையே. அதே நேரம் உள்ளொளி வாசிப்புக்குட்படும் போது இவருடைய பிரதிகளை கவிதைக்கு எதிர் நிலையில் நிறுத்தவும் தோண்றலாம்.ஆயினும் இவருடைய கவிதைப்பிரதிகள் இந்த வாசிப்புக்களைக் கடந்த நிலையில்தான் தன்னை கவிதையா நிகழ்த்திக்காட்டுகின்றன. இவருடைய கவிதைப்பிரதிகள் உருவாக்கும் நிலக்காட்சியியலும் அதன் புரிதல்களும் எழுத்துக்கள் எப்படி கவிதைக்கான அனுபவத்தை பிறப்பிக்கின்றன என்பதை கவனிக்க முயற்சிக்கும்போது, ஈழத்து நவீன கவிதையியல் தனக்கான புதுமொழியை கண்டடைந்திருக்கின்றது என்ற விசயம் வெளிப்படுகிறது.

மிகச்சாதாரணமாக கையாளப்படும் மொழியமைப்புக்களால் ஆன பிரதிகள்தான். மிகச்சாதாரணமான பிரதிச் சம்பவங்களால் வரைவாக கட்டப்பட்ட பிரதி உத்திகளைக் கொண்டவைதான். ஆயினும் இப் பிரதிகளைத் தொடரும்போது அடுத்தடுத்து வரும் பிரதிச் சம்பவங்கள் அசாதாரணமான அனுபவங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு சம்பவங்கள் தாவிச் செல்லும் உத்திகளை கைவிட்டு,  ஒற்றையடிப்பாதையில் தனியாக நடந்து செல்லும் மனிதனைப்போல ஆற அமர நகர்த்தப்படும் சம்பவங்கள். ஒற்றையடிப் பாதையில் தனிமையான பயணத்தில் எதிர் கொள்ளப்படும் அச்சம்,சுதந்திரம்,பீதி இவைகளுடன்கூடிய மவுனம் மற்றும் வெட்டியான முணுமுணுப்பு என பல விசயங்களை பிரதியெங்கும் காணமுடிகிறது. இந்தச் சம்பவங்கள் இணைக்கப்படும் முறை இவருடைய பிரதிகளை கவிதையாக பரிந்துரைக்கின்றன. ஈழத்துக் கவிதைப் பிரதிகளில் அநேகமாக காணப்படும் "கிளைமாக்ஸ்" என்ற ஒரு அதிர்ச்சி மொழிதல் அமைப்பு முற்றாக இவரது பிரதிகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. எந்தவித திடீர்த் திருப்பங்களையும் குறிவைத்து புனையப்படாத மொழிப்பயன்பாடு. playfull writing  என்பதில் பயன்படுத்துவதைப்போன்ற சாதாரணமான மொழியமைப்பு அதனூடாக உருவாக்கப்படும் சம்பவங்கள் இவைகளுக்கிடையிலான ஊடாட்டத்தில் கவிதைக்கான அம்சங்களை வெளிப்படுத்தி நிற்கும் சாதாரணமான பிரதிச் செயற்பாடு இவைகள் ஒரு புதிய கவிதைமொழியை நோக்கி அழைக்கிறது.
சாதாரணமான மொழியமைப்புக்குள் நிறுவப்படும் சம்பங்கள் அசாதாரணமான அனுபவங்களை பிறப்பித்துக் காட்டுகின்றன.அதனால்தான் இப்பிரதிகள் ஈழத்து கவிதைப்பரப்புக்கு ஒரு புதிய கவிதை மொழியை பரிந்துரைக்கும் பிரதிகளாக தன்னை நிலைநிறுத்துகின்றன.
இந்தப் பிரதிகளை வாசிக்கும்போது இவை ஏற்படுத்தாத புனைவுச் சாத்தியங்களை வாசித்து முடித்தபின் எஞ்சும் நினைவுகளால் புதிய புனைவு வெளிக்குள் தள்ளிவிட்டு அதைப் புரியும் முயற்சியில் அனுபவங்களைப் உருவாக்குகின்றன. கவிதைகளாக அமையப்பெற்ற அல்லது கட்டமைக்கப்பட்ட பிரதிகள் என்பதற்குப் பதிலாக கவிதையனுபவங்களை உற்பத்திக்கும் பிரதிகள் இவை எனச் சொல்லலாம்.
கவிதை என்ற புரிதலை கடந்து செல்லும் முயற்சியையும்,புதிப்பிக்கும் எத்தணிப்புக்களையும் கொண்டிருக்கும் இரண்டாயிரமாம் ஆண்டின் ஈழத்து எழுத்துச் செயற்பாடுகளோடு இப் பிரதிகளும் இணக்கமுறுகின்றன. இலக்கியத்தை கடந்துவிடுதல்,புதுப்பித்தல் போன்ற பிரதிச் செயற்பாடுகளை வாசிக்கக்கூடிய வாசிப்பு முறைகளின் உருவாக்க முயற்சிக்கு தேவைகளும் இருக்கின்றன என்பதை கவனஈர்ப்புச் செய்யும் பிரதி வகைகளுக்குள் இப்பிரதிகளும் நுழைந்து நிற்கின்றன.
வரலாற்றில்: சமஷ்கிருதம்,உருது,பிரெஞ்சு,ஆங்கிலம்,அரபு என எத்தனையோ பிறமொழிகளை தமிழ் சந்தித்திருக்கின்றது. அம்மொழிகளோடு கொண்ட உறவும் பிரிவுகளும்,முரண்பாடுகளும்,
ஊடாட்டங்களுமென நடந்தேறிய நீண்ட பயணத்தில், பலவகையில் தமிழ்மொழி தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வருகிறது. இந்தப் புதிப்பித்தல்களால் தனது சுயத்தை அது இழந்துவிடவில்லை. மேலும் வழப்படுத்தியே வந்திருக்கிறது. தமிழால் சிந்திக்கும் ஒரு நிலையிலிருந்தே அந்தப் புதுப்பித்தல்கள் நிகழ்ந்தேறின. ஈழத்தில் இந்தப் புதிப்பித்தல்களை தமிழ்மொழி எப்படி எதிர்கொள்கிறது என்ற கேள்வி விவாதிக்கப்படுவதிலிருந்துதான் இலக்கியப் பிரதிகளும்,அதற்கான வாசிப்பு முறைகளும் கவனஈர்ப்புக்கான ஒரு இடத்தைநோக்கி பயணிக்கும்.
நவாஸ் சௌபி விரிந்த அளவிலான வாசிப்பின் பக்கம் மெல்ல நகரத்தொடங்கியிருக்கிறார்.
இவருடைய கவிதைப்பிரதிகள் ஈழத்து கவிதைப்பரப்புக்கு புதிய கவிதைமொழியை பரிந்துரைக்கிறது.
இதைச் சொல்லும்போது, றியாஸ் குரானாவா அவன் கிடக்கிறான் பைத்தியக்காரன். எதிர்ப்பதும். கிண்டல் பண்ணுவதும் அல்லது ஏதாவது இசம் என்று புரியாமல் எதையாவது கிறுக்குவான். அதுதான் அவனுடைய எழுத்து. பெரிசுபடுத்த தேவையில்லை என ஈழத்து பழம்பெரும் இலக்கியவாதிகளாகவும், எப்போதும் தாங்கள் மட்டும்தான் எழுத்தாளர்கள் எனக்கருதுபவர்களும் புலம்புவது என் காதில் விழுகிறது. அவர்களுக்காக இந்நேரத்திலும் இரக்கப்படுகிறேன்.