வெள்ளி, ஏப்ரல் 02, 2010

அவைப்புலவனும் சாத்தானின் கவிதையும்


ஜிஃப்ரி ஹஸன்

சாத்தானின் கவிதை: ஒன்று

எவனோ ஒருவன் என் தனிமையைத்
தின்கிறான்
எரிச்சலூட்டும் கவிதைகளை ஓதி ஓதி
கொடிய சாத்தானின் வசனங்களாகி
அவை என் தனிமையைத் தின்கின்றன
மின்னல் கோடுகளால் வானம் வரைந்த
ஓவியம் போல்
நிறங்களாலான வானவில்லைப்போல்
அற்புதமான கவிதைகளை சாத்தான்கள் ஓதுவதில்லை.

அவைப்புலவன்

எறும்புக்கும் சேதாரம் செய்யா
சாந்த முகத்தோனே
நன்மைக்கிரங்கும் நாயனே
சுகபோகம் துறந்தோனே
சுக துக்கம் அறிந்தோனோ
நாட்டுநிலை பாராயோ
துயில் கலைந்து வாராயோ!

சாத்தானின் அடைக்கலம்: ஒன்று

சாத்தான்கள் வசனம் ஓதி ஓதி
பின் களைப்புற்றுக் கிடந்தனர்-
சாத்தான்கள் கவிதைகளால் முடிவது
எதுவுமில்லையெனக் கண்டனர்
ஆக, கவிதையின் கோட்டையைத் தகர்த்து
இன்னொரு அடைக்கலம் நாடினர்-

அவைப்புலவன்

சாந்த முகத்தோனே
குழந்தை மனங்கொண்டோனே
வாய்மூடி கண்திறந்து
கொடுமை பல கண்டோனே
இன்னும் வாய் திறந்து வாராயோ
ஏழை முகம் பாராயோ-

சாத்தானின் அடைக்கலம்: இரண்டு
அ)

கவிதையைத் துறந்த சாத்தான்கள்
துப்பாக்கியுள் அடைக்கலம்
புகுந்தனர்-
இறுகப் பற்றிய இரும்புக் குழல்களுக்கூடாய்
மனிதரை நோக்கினர்
எலும்புக் கூடுகளையும்
பிணந்தின்னிக் கழுகுகளையும்
அநேகமாய்க் கண்ணுற்றனர்.

ஆ)

துப்பாக்கி ஏந்திய சாத்தான்கள்
அமைதியை வெறுத்தனர்
போர் புரியவும் கவிதைகள் எழுதவும் விரும்பினர்
சாத்தான்களின் தலைவன் சத்தமிட்டான்
'போர் வேண்டுமா? அமைதி வேண்டுமா?'
'போர் வேண்டும் கவிதை எழுத போர் வேண்டும்!'
பெரிய சாத்தான் கனத்த குரலில்
போரைக் கூவியழைத்தான்

அவைப்புலவன்

கொல்லாமை உரைத்தோனே
கொல்லுமிவ் வையகம் கேளாயோ
அமைதி பூத்தவனே
அல்லலுறும் மக்கள் துயர் துடைப்பாயோ-

சாத்தானின் சுதந்திரம்: ஒன்று

கட்டளைக்குப் பணிந்து பணிந்து
கருமமாற்றும் சாத்தான்கள்
புதிது புதிதாய் சிந்தனைகள்
படைத்னர்
போர்-
அமைதி-
சுதந்திரம்-
கவிதை-
சாத்தான்கள் புதிது புதிதாய் சிந்தனைகள் படைத்தருளினர்-

அவைப்புலவன்

தொண்டைத் தண்ணி வத்துதய்யா
வாயும் வயிருங் கொதிக்குதய்யா
குடிமனைகள் மூழ்குதய்யா
சாதி சனம் வாடுதய்யா
எழுந்தோடி வாருமய்யா
சாத்தானின் கவிதைகளைக் கொல்லுமய்யா

சாத்தானின் சுதந்திரம்: இரண்டு

சாத்தான் சுதந்திரத்தைப் படைத்தருளினான்-
இந்நூற்றாண்டின் மாபெரும்
சுதந்திரமாய்
 இந்நூற்றாண்டின் மாபெரும்
அடிமைகள் கொண்டாடினர்-

விலங்கு-
பூட்டு-
துப்பாக்கி-
மரணம் கொண்டு கலவையானதோர்
மாபெரும் சுதந்திரத்தை
மாபெரும் அடிமைகள் கொண்டாடினர்

அவைப்புலவன்

'.......................
........................
........................
........................'
(கையில் விலங்குடன்
வாயில் பூட்டுடன்
துப்பாக்கி முனையில் மரணத்திடலில்
அவைப்புலவன் கிடந்தான்)

சாத்தானின் கவிதை:இரண்டு

இந்நூற்றாண்டின் மாபெரும் சுதந்திரத்தை
இந்நூற்றாண்டின் மாபெரும் அடிமைகள் கொண்டாடினர்!
01012010