வெள்ளி, ஏப்ரல் 02, 2010

மே புதுன்கே தேசய


கதைப்பிரதி
                       .
                      
                               ஜிஃப்ரி ஹஸன்


சிங்களம் பேசுவதையே தனது வாழ்வின் உன்னத இலட்சியமாகக் கருதி இயங்கி வந்தான் மம்மலி. சிங்களம் பேசுவது என்ற அவனது இலக்கில் அவன் வைத்திருந்த அதீத நம்பிக்கையும்,அதன்பால் அவன் காட்டிய தீவிர ஆர்வமும் முன்பு எவரும் சிங்களம் படிப்பதற்கு  எடுத்துக் கொள்ளாத வகையில் இருந்தது.அதற்காக அவன் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு பிரயத்தனமும் மம்மலியின் சிங்களம் மீதான தாகத்தை ஒளிவு மறைவின்றி அப்படியே வெளிக்காட்டின.
மம்மலி இலங்கையின் கிழக்குப்புறத்தில் சிங்களவர்கள் இல்லாத ஊரொன்ரில் வசித்து வந்ததால் அவனுக்கு சிங்களம் மருந்துக்கும் தெரியாமலிருந்தது.மம்மலி தரம் ஆறு வரைக்கும்தான் படித்திருந்தான் பள்ளிக்கூடத்தில் சிங்களப்பாடம் இருந்தது அதைப்படிப்பிப்பதெற்கென்று ஒரு வாத்தியாருமிருந்தார்.ஆனால் எதுக்குப் பொய் சொல்ல எனக்கு உண்மையிலேயே சிங்களம் தெரியாது என்று அவரே ஒத்துக்கொண்ட பிறகு பொதுவாக அவரது வகுப்புக்கு மாணவர்கள் எவரும் அன்றிலிருந்து செல்வதில்லை.தெரியாதத தெரியாது என்று சொல்வதற்கு தான் ஒருபோதம் பின் நின்றதில்லை என்றும் அந்த வாத்தியார் சொல்லிக் கொண்டார்.இதனால் சிங்களம் படிக்கும் வாய்ப்பை பள்ளிக்கூடத்திலும் இழந்திருந்தான் மம்மலி. ;மம்மலிக்கு இப்போது 22 வயதாகிறது.இதுவரைக்கும் அவனுக்கு 22க்கும் குறைவான சிங்களச் சொற்களே தெரிந்திருந்தன.சிங்களத்தை கேலி பண்ணும் வசனங்களும் ,வாக்கியங்களும் பொதுவாக அவனது ஊரில் காணப்பட்டன.அதில் 'எக்கட மொகட சம்சாக்கொட்ட' என்பது பொதுவாக எல்லோராலும் அறியப்பட்டதாக இருந்தது.சிங்கள மொழியின் எழுத்து அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு அதனை 'தேன்குழல் பாஷாவ'(தேன் குழல் பாசை) என பலரும் அபிப்ராயப்பட்டனர். சுpங்களம் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருந்த பின்னரும்தான் அதுக்கு இந்த அநியாயம் நடந்து கொண்டிருந்தது.

மம்மலிக்கு இன்று தவிர்க்க முடியாத சில தேவைகளுக்காக சிங்கள மொழி அறிவு Nவைப்பட்டது.இதனால் ஊரில் சிங்கள அறிவ படைத்தவர்க்ளை மிக மோசமாக மோப்பம் பிடிக்கத் தொடங்கினான்.அவனது தீவிர தேடலில் ஒருவர் அகப்பட்டார் .தான் பல்கலைக்கழகம் சென்று படித்ததாகவும் ஊரில் தன்னை விட வேறு எவருக்கும் சிங்களம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் தன்னை மம்மலியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆனால் தான் மம்மலிக்கு மட்டும் மினக்கெடுவதென்றால் அது தனக்கு கட்டாதென்றும் குறைந்தது ஒரு பத்துப் பேராவது வந்தால் படித்துத் தரலாமென்றும் பல்கலைக்கழகம் வரை சென்று சிங்களம் படித்த அவர் மிகுந்த வருத்தத் தோடு தெரிவித்துக்கொண்டார்.ஆனால் மம்மலிக்கு ஏற்பட்ட இந்த விபரீத நோய் ஊரில் வேறு எவருக்கம் ஏற்பட்டிராதபடியால் அவரது அந்தக் கோரிக்கைய மம்மலியினால் நிறைவேற்ற முடியாமல் போயிற்று.
பிறகு மம்மலி இன்னுமொருத்தரை கண்டுபிடித்தான். அவர் பத்த வருடங்கள் தான் இராணுவத்தில் கடமையாற்றிவிட்டு தற்போது கடமையைவிட்டு;ம் விலகி இருப்பதாகக் கூறிக் கொண்டார். அவரும் தான் பத்து வருடங்கள் இராணுவத்தில் கடமை புரிந்ததால் ஊருக்குள் பெரும்பாலும் தனக்குத்தான் எல்லோரையும் விட அதிகமாகசி;ங்களம் தெரிந்திருக்குமென்று தான் நம்புவதாகவும் கூறினார்.மம்மலியும் நோக்கங்கருதி ஊருக்குள்ளும் எல்லோரும் அப்படித்தான் பேசிக் கொள்வதாக கண்கெட்ட பொய்யொன்றைச்சொன்னான். அந்தா பார்த்திங்களா என்று பக்கத்திலிருந்த ஒருத்தரை கர்வமாகப்பார்த்துக் கொண்டார் அவர். அவருக்கு நேரமில்லாதிருப்பதனால் மம்மலிக்கு சிங்களம் படித்துக் கொடுக்க முடியாத நிலையலிருப்பதாக மிக்க வேதனையோடு சொன்னார் முன்னாள் இராணுவ அதிகாரி.

ஊரிலிருந்து இனிப்பிரயோசனமில்லை எனறு உணர்ந்ததன் பிற்பாடு சிங்கள ஊரொன்றில் கடையில் நின்று வேலை செய்தாவது சிங்களம் சேசப்பழகுவது என்ற உறுதியான முடிவுக்கு வந்திருந்தான் மம்மலி. ஊரிலுள்ள ஒருத்தரின் உதவியோடு தனிச்சிங்கள ஊரிலுள்ள மர வேலைத் தொழிற்சாலையொன்றில் வேலைக்குச் சேர்ந்தான் மம்மலி. சிறிய தொழிற்சாலையான அதற்கு கொஞ்சம் தள்ளி ஒரு பௌத்த விகாரை இருந்தது. இவனுக்க கிழமையில் வெள்ளியும் சனியும் லீவு தருவதாக முதலாளி ஒத்துக்கொண்டார்.ஆனால் மம்மலியின் நோக்கம் சம்பாதிப்பதாக இருக்கவில்லை. ஆங்கு இன்னொரு முஸ்லிமாளும் வேலை செய்தான். அவனுக்கு ஓரளவு சிங்களம் தெரிந்திருந்தது.அவனோடு இணைந்து கொண்டான் மம்மலி. அவனிடம் தான் வேலைக்குச் சேர்ந்ததன் உண்மையான காரணத்தையும் தெரியப்படுத்தினான் மம்மலி. இதை முதலாளிக்கும் எப்படியாவது தெரியப்படுத்த இருப்பதாகவும் சொல்லிக்கொண்டான். அவன் மம்மலி சொன்னவைகளை  பெரிய அச்சரியமாக எடுத்துக்கொள்ளவில்லை.குறைந்த பட்சம் மம்மலியின் இந்த நோக்கத்தைக்கூட முதலாளியிடம் அவன் சொல்லத் தயாரில்லாதவன் பொலவும் காணப்பட்டான்.

மம்மலி வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து சும்மா இருக்கவில்லை. வேலையோடு வேலையாக சிங்களம் பேசும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கி இருந்தான். இப்போது அவனது சிங்கள மொழி அறிவில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுவதையுணர்ந்தான்.அங்கிருந்த மற்ற முஸ்லிமைத் தவிர மம்மலி எல்லோருடனும் சிங்களத்திலேயே பேச வேண்டியிருந்தது. சக தொழிலாளர்களின் அதிகாரம் பல வடிவங்களிலும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த முஸ்லிம் தொழிலாளியும் இவனுடன் அவ்வளவு சினேகபூர்வ உறவை ஏற்படுத்திக்கொண்டிருக்கவில்லை. அத்தியவசியமாக மம்மலிக்குத்தேவைப்பட்ட சொற்களை அவன்pம் கேட்டபோது அவன் பிழையாகச் சொல்லிக்கொடுத்து மம்மலியின் அவஸ்த்தைகளை இரசிக்கத் தொடங்கியிருந்தான். 'தான் அறியாச்சிங்களம் தன் புடதிக்குச் சேதமாம்' என்று பொதுவாக ஊரில் நிலவி வந்த சிங்களம் பற்றிய பொதுசன அபிப்ராயங்களை மம்மலி இப்போதுள்ள நிலையில் அனுபவரீதியாக உணர்ந்து கொண்டிருந்தான்.

மம்மலிக்கு தற்செயலாகத்தான் இந்த சிந்தனை ஏற்பட்டது.தனது தொழிற்சாலைக்கு சற்றுத் தொலைவிலிருந்த விகாரையிலிருக்கும் பிரதம மத குருவைச்சந்தித்து தனது நோக்கத்தை தெரிவித்துவிட முடிவுசெய்தான். மதகுருக்கள் பெரும்பாலும் நல்லவர்களாக இருப்பார்கள் என்பதாக மம்மலியின் நிலைப்பாடிருந்தது.
அந்த விகாரையிலிருந்த ஹாமதுருவைப்பற்றி அவரைச்சந்திப்பதற்கு முன்னால் ஓரளவு தெரிந்து கொண்டான் மம்மலி. அவன் அறிந்தவரையில் அந்த ஹாமதுரு ஆரியதம்மா ஹாமதுரு என அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்.

வேலை லீவு நாளான ஒரு சனிக்கிழமை மம்மலி ஆரியதம்மா ஹாமதுருவைச் சந்தித்தான்.
திரு.ஆரியதம்மா ஹாமதுரு மம்மலியை ஆச்சரியத்தோடு ஏறிட்டார்.விகாரைக்கு இதுவரைக்கும் பிரசன்னமாகி இராத ஒரு புதிய முகமாக மம்மலி ஆரியதமமாவுக்குத் தென்பட்டான். திரு.ஆரியதம்மா மம்மலியை ஆயுபோவன் கூறி வரவேற்றார்.

இத்தனை நாளும் தொழிற்சாலையிலிருந்து பழகிய தனது 'டிக டிக தன்னவா'சிங்களத்தில் ஹாமதுருவுடன் பேசத்தொடங்கினான் மம்மலி. ஹாமதுருவுக்கு தமிழ் தெரியுமா? ஏன்பதாக இருந்தது மம்மலியின் முதல் பேச்சு. ஹாமதுரு தனக்குத் தெரியாதென்று தலையசைத்தார்.அதனால் மம்மலி அவனறிந்த சிங்களத்திலேயே தொடர்ந்து பேச வேண்டியிருந்தது.

திரு.ஆரியதம்மா ஹாமதுரு உண்மையிலேயே மம்மலி மீது பரிவு காட்டினார். மம்மலியின் பேச்சுக்களை பொறுமையாகக் கேட்டார். சிரமபட்டுப்புரிந்து கொள்ள முயன்றார்.மம்மலி தனக்குத் தெரிந்த எல்லா சொற்களையும் போட்டுப் பேசினான்.தெரியாத சொற்களை சைகைகளால் விளங்கப்படுத்தினான். ஹாமதுருவும் பேசும் போது சொற்களை வரையறுத்துக் கொண்டார். அவனைப் போலவே அவரும் அவனுக்கு தெரிந்த சொற்களைNயு இயன்றளவு பயன்படுத்த முயற்சித்தார்.சிங்களம் பேசுவதில் மம்மலிக்கு ஏற்பட்ட தீவிர ஆர்வத்துக்கான காரணம் பற்றி ஹாமதுரு கேட்டபோது மம்மலி தானறிந்நத சிங்களத்தில் காரணங்களைச்சொல்லத்தொடங்கினான். ஆவன் அவரிடம் முன்வைத்த காரணங்களில் சில பின்வருமாறு:

 காட்டோடு தொடர்புபர்ர தொழில்தான் ஹாமதுரு நாங்க செய்யிறம்.விறகு வெட்ற, கொள்ளி எடுக்கிற,செங்கல் வாடி இந்த தொழிலெல்லாம் ஊருக்குள்ள செய்யேலாது காட்லதான் செய்யனும்.ஆனா காடு முழுக்க தமிழ் தெரியாத ஆமிக் காரணுகள். காட்டுக்கு என்னத்துக்கு வந்த என்று ஆமி சிங்களத்திலதான் கேப்பான் அதுக்கு பதில் சொல்ல நமககு சிங்களம் தெரிஞ்சிருக்கனும்.இல்லாட்டி கத கந்தல்தான்.

சாமான் களவு போனா, காணாத்துப்போனா பொலிசில இன்ட்றி வெக்கனும்.அங்க பொலிசுக்குத் தமிழ் தெரியாது நமக்கும் சிங்களம் தெரியாது.இப்ப எப்புடி ஹாமதுரு இன்ட்றி வெக்கிறது

அவசரமா ஒரு நோய்க்கு மருந்தெடுக்க ஆசுபத்திக்க பொறதென்றாலும் இப்ப சிங்களம் தெரியனும் ஹாமதுரு. பெரிய வருத்த மென்று கொழும்பு ஆசுபத்திக்கு போனா அங்க யாருக்கும் தமிழ் தெரியா.நமக்குச சிங்களம் தெரியா பிறகு எப்புடி மருந்தெடுக்கிற ஹாமதுரு.

 அரசாங்கக் கடிதமெல்லாம் கொழும்பிருந்து சிங்களத்திலதான் வரும் அரசாங்கத்திற்கு தமிழ் தெரியாதுதானே ஹாமதுரு. அத வாசிக்கிறதுக்கு சிங்களம் தெரிஞ்ச ஆக்களத் தேடிக்கண்டு பிடிக்கிறதுக்குள்ள கடிதம் காலாவதியாகிடும் ஹாமதுரு.

 நம்மட சாதி சனங்கள் யாரும் வெளிநாட்டுக்குப்போய் வந்தால் அவங்கள யாபோட்டுக்குப் போய் கூட்டி வர சிங்களம் தெரிஞ்சிருக்கனும் ஹாமதுரு.

என்னத்துக்கு கொள்ளயா கொழும்புக்கு ஒரு அலுவலா போறதென்றா பஸ்ஸில டிக்கட் எடுக்கிறதில தொடங்கி அலுவலகம் வரைக்கும் சிங்களம் தானே ஹாமதுரு தெரியனும். உங்களுக்கு சிங்களம் தெரிஞ்சதால பிரச்சiனை இல்லை ஹாமதுரு.

என்று மம்மலி காரணங்களை அவனறிந்த சிங்களத்தில் அடுக்கிய போது திரு.ஆரியதம்மாவுக்குள் தேசிய அரசியல் பிரக்ஞை மெல்ல ஊற்றெடுக்கத் தொடங்கியது.ஆனால் மம்மலிக்கு எந்த அரசியல் நோக்கமுமில்லை என்பதை ஆரியதம்மா அரைகுறையாக நம்பினார். ஆனால் ஆரியதம்மா மம்மலியை அரசியல் பலி வாங்க எண்ணவில்லை. ; மம்மலி முன்வைத்த காரணங்கள் அவருக்குப் பிடித்திருக்காவிட்டாலும் அவனுக்க உதவுததென்று முடிவெடுத்தார். மம்மலி பேசியது தனக்கு முழுமையாக விளங்கியிருக்காவிட்டாலும் அதை அவனிடம் காட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லை.
காலப்போக்கில் என்னைவிட நன்றாக சிங்களம் பேசுவாய் என்று திரு.ஆரியதம்மா அவுனுக்கு பாராட்டுப்பத்திரம் வழங்கினார்.  அவனுக்கு எந்நேரமும் தான் உதவத்தயாராக இருப்பதாகவும் தொடர்ந்து தன்னை வந்து சந்திக்கும் படியும் திரு.ஆரியதம்மா மம்மலியிடம் வேண்டிக்கொண்டார்.

திரு.ஆரியதம்மாவின் வார்த்தைகள் மம்மலிக்கு நம்பிக்கையூட்டின. தனது இலட்சியம் நிறைவேறப்போவதையிட்டு மம்மலி பரவசமடைந்தான்.

இப்போது கண்களை மூடினால் மம்மலிக்கு கனவுகள் பல வடிவங்களில் நிறங்களில் வரத்தொடங்கின. ஊரில் எல்லா ஆமிக்காரன்களும் இவனுடன் வந்து பேசிக்கொண்டிருப்பது போலவும், பொலிசில் எல்லா வேலைகளுக்கும் ஊர் மக்கள் இவனையே கூட்டிப் போவது போலவும், சிங்கள்க் கடிதங்களையெல்லாம் எல்Nhரும் இவனிடமே கொண்டு வருவது போலவும், மம்மலிதான் ஊரில் எல்லோரையும் விட சிங்களம் தெரிந்தவன் என்று பொது மக்கள் பேசிக் கொள்வது போலவும் மம்மலிககு கலர் கலராய் கனவுகள் வரத்தொடங்கின.எல்லாப் புகழும் ஆரியதம்மாவுக்கே என கனவிலேயே மம்மலி நினைத்துக் கொண்டான்.

மம்மலி லீவு நாட்களில ;திரு.ஆரியதம்மாவைச்சந்திப்பதையே தனது பணியாக்கிக் கொண்டிருந்தான்.திரு.ஆரியதமமாவினுடனான உரையாடல்கள் அவனது மொழி அறிவில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திவருவதை மம்மலி உணர்ந்தான்.

அன்று மம்மலி ஆரியதம்மா ஹாமதுருவிடம் சிங்களம் தெரியாததால் ஊரில் தனக்கும் தன்னைப் போன்ற சிலருக்கும் ஏற்பட்ட சுவாரசியமான ஆனுபவங்களை அவனறிந்த சிங்களத்தில் பகிர்ந்து கொண்டிருந்தான். ஆப்படிப்பட்ட சம்பவங்களிற்சில பின் வருமாறு:

சம்பவம்-1

எங்கட ஊர்ல வண்டிக்கார மம்முக்காக்கா என்றா எல்லாருகும் தெரியும் மாடடு வண்டில காட்டுக்கப் போய் விறகு வெட்டி வந்து செங்கல் வாடிக்கு விக்கிறதுதான் அவரோட தொழில். ஒரு நாள் விறகெல்லாம் வெட்டிப்போட்டு வண்டிலக்கட்ட மாட்டப்பார்த்தாரு மாட்டக்காணல்ல உடன மம்முக் காக்கா மாடடத் தேடி காடெல்லாம் சுத்தத் தொடங்கிட்டாரு.திடிரென்று ஆமிக் காரணுகள் காடடுக்குல இருந்து வெளிப்பட்டானுகள்.
மம்முக்காக்காவுக்கு சுத்தமா சிங்களம் தெரியா, ஆமிக்காரனுக்கு தமிழ்தெரியா. ஆமிக்காரன் சிங்களத்தில என்னவோ கேக்க மம்முகமகாக்கா தமிழ்ல கட்டி வெச்ச மாடு பிச்சிட்டு ஓடிட்டென்று செல்லியிருக்காரு.அதுக்குப் பிறகு  ஆமிக்காரனுக்கம் மம்முக்காக்காவுக்குமிடையில் நடந்த உரையாடல் இது
'மொகத?' என்று கேட்டிருக்கான்

'ஓம் சேர் மூக்குனத்தோடுதான்'

'கவுத?'
'ஓம் சேர் கவுத்தோடுதான்'

'பிஸ்சுத?'
'ஓம் சேர் பிச்சிக்கிட்டுத்தான்'

;மம்முக்காக்கா மாட்டப்பத்தித்தான் கேக்கான் என்று நினைச்சித்தான் இப்படிச் சொல்லி இருக்காரு. ஆமிக்காரனுக்கு வந்த கோபத்தில் அவன் அறைந்த அறை இன்னும் வலிப்பதாக மம்முக்காக்கா சொன்னார்.

சும்பவம்-2

சாலி அகமதுக்கும் விறகு வெட்டி விக்கிறதுதான் தொழில். அவரும் ஒரு நாள் ராணுவத்pக்கிட்ட வசமா  மாட்டிகிட்டாரு.இராணுவம் கேட்டிருக்கான்
'உம்ப முஸ்லிம்த?' அதுக்கு அவர்
'சீனி அகமது சாலி அகமது சத்தியமா முஸ்லிம் சந்தேகமென்றா கிளப்பிப் பாருங்க'
என்றாராம் படபடத்த தமிழில்.

சும்பவம்-3

முஸ்லிமாக்களுக்கு அதிகாலையிலயும் ஒரு வணக்கம் இருக்கு அத நுபஹூத் தொழுகை என்று சொல்லுவம். ஏங்கட வீட்டுக்கு கொஞ்சம் தள்ளித்தான் பள்ளி இருக்கு. பள்ளிக்கு போர வழியில ஆமிக்கேம்பும் இருக்கு. ஆமிக்காரங்க ரோட்டுல பரல்,மரக்கட்iடெயல்லாம் போட்டு வெச்சிருப்பாங்க ஹாமதுரு .ஒரு நாள் நானும் கூட்டாளிமாரும் பள்ளிக்குப் பேர்கக்க கட்டையில தடுக்கி ஒருவன் விழுந்திட்டான் உடன பங்கருக்குள்ள இருந்த ஆமிக்காரன்
'அடோ கவ்த?' என்று கர்ஜித்தான்
'ஒக்கம கட்டி கட்டயில முட்டி....' என்றான் கூடவந்தவன்.
'ஒக்கம கட்டி' என்ற சொல்லைத்தவிர அவனுக்கு வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை.

சம்பவம்-4

சிங்கள ஊ;ருக்கு வெள்ளாம வெட்ட எங்கட ஊர்ல இருந்து ஒரு கூட்டம் போயிருக்கு.ஒத்தருக்கும் சிங்களம் தெரியா. வுயல் முதலாளிட பொஞ்சாதி இவங்களுக்கு கிறிபத் செஞ்சி கொடுத்திருக்கா.கிறிபத்துக்கு தமிழ்ல புக்க என்று சொல்ற.ஆனால் சிங்களத்தில அதுக்கு வேற கருத்து. இவங்க புக்கயத்திண்டிட்டு அக்காட புக்க கொந்தாய் என்று சந்தோசத்தில சொல்லிருக்காங்க. இதக் கேட்ட மனிசி மம்மட்டியால எல்லோரையும் ஓடஓட அடிச்சிருக்கு.

மம்மலி கூறிய சம்பவங்கள் ஆரியதம்மாவுக்கு சிரிப்பாக இருந்தது.ஆனால் மம்மலி சம்பவங்களை கூறி சில வினாடிகளுக்குப்பின்னரே ஆரியதம்மாவால் சிறிக்க முடிந்தது.;.மம்மலியின் சிங்களம் உடனடியாக ஆரியதம்மாவுக்கு விளங்காததே அதுக்கு காரணமாகும்.

திரு.ஆரியதம்மாவுக்கும் மம்மலிக்குமிடையிலான உரையாடல்களின்போது பெரும்பாலும் மம்மலியின் எல்லா கேள்விகளுக்கும் திரு.ஆரியதம்மா பதில் சொல்லவில்லை.அதற்கு மம்மலி விளக்கங்கேட்டபோது அவை தனக்கு விளங்கவில்லை என்று திரு.ஆரியதம்மா சொன்னார்.
சில கேள்விகளுக்கு கொஞ்சம் தாமதமாக பதில் சொன்னார். தனது சொற்களை புரிவதில் திரு.ஆரியதம்மா எதிர் கொள்ளும் சிக்கல்களே அவரது அந்த தாமதத்துக்கு காரணம் என்பதை  மம்மலி கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினான்.

மம்மலி ஊருக்குச் சென்ற போதெல்லாம் நண்பர்கள் மத்தியில் அவனுக்கு மதிப்பும் மரியாதையும் பெருகின. மம்மலி நண்பர்களோடு பேசும் போது அடிக்கடி தனக்குத் தெரிந்த சிங்களச் சொற்களை பாவித்தான்.ஏதாவது பேச வெளிக்கிட்டால் 'இதுக்கு சிங்களத்தில்...' என்பதாக அவனது உரையாடல்கள் தொடங்கின.

இராணுவத்தினரோடு பேசுவதற்கான சந்தர்பபங்களை அவனாகவே இப்போது வரவழைக்க முயற்சித்துக்கொண்டிருந்தான்.

இவன் சிங்களம் பேசுவதைக் கேட்பதற்காக சின்ன சின்ன பிள்ளைகளெல்லாம் அவன் பின்னால் படையெடுக்கத்தொடங்கின்.

ஊரில் இப்போது மம்மலியின் சிங்களம் பற்றித்தான் எல்லோரும் பேசிக்கொள்வதாக நண்பர்கள் மம்மலிடம் வந்து சொன்னபோது அவனுக்குள் ஒரு பிரளயம் பீறிட்டெழுவதை கஷ்டப்பட்டு மறைக்க முயன்றான்.
திரு.ஆரியதம்மாவிடம் ஊரில் தனக்கு ஏற்பட்டு வரும் மவுசு பற்றி மம்மலி சொன்ன போது திரு.ஆரியதம்மாவுக்கு உண்மையான ஆச்சரியமாகவிருந்தது. திரு.ஆரியதம்மா தங்களது மொழியின் புகழ் குறித்து உள்ளுர மகிழ்ந்தார்.

ஊரில் நாய் கடித்து சாகக்கிடந்த ஆட்டுக்குட்டியொன்றுக்கு ஒரு இராணுவ வீரன் தண்ணி கொடுத்த சம்பவத்தை மம்மலி திரு.ஆரியதம்மாவிடம் நினைவு கூர்ந்தான்.

அந்த இராணுவ வீரன் பௌத்தனாக இருந்தனாலேயே அப்படிச்செய்ததாக ஆரியதம்மா மம்மலிடம் அபிப்ராயப்பட்டார்.மம்மலிக்கு பௌத்த அறங்கள் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.ஆரியதம்மா அது பற்றி அவனுக்கு சொல்லிக்கொடுக்கவுமில்லை.
ஆனால் அன்று முதன்முதலாக ஆரியதம்மா பௌத்த மதத்தின் ஜீவகாருண்யம் பற்றி மம்மலியிடம் எடுத்துக்கூறினார்.
எந்தவொரு உயிரையும் கொல்லக்கூடாது என்று பௌத்தம் போதிப்பதாக திரு.ஆரியதம்மா சொன்னபோது, மனிதர்களையுமா? என மம்மலி ஆச்சரியத்தோடு கேட்ட கேள்வி திரு.ஆரியதம்மாவுக்குள் ஏதோ ஒன்றை ஏற்படுத்துவது போன்று உணர்ந்தார்.

திரு.ஆரியதம்மா எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். மம்மலி தான் கேட்ட கேள்வி ஆரியதம்மாவுக்கு விளங்கவில்லை என்று நினைத்தான்.மம்மலி தனது சிங்கள அறிவில்தான் ஏதோ கோளாறு இருப்பதாக வழமையாக எண்ணுவதைப் போன்று எண்ணிக்கொண்டான்.எல்லோராலும் விளங்கிக் கொள்ளுமளவுக்கு தான் சிங்களம் பேசுவது எப்போது சாத்தியமாகும் என்று ஆரியதம்மாவிடமே கேட்டான் மம்மலி.
காலப்போக்கில் சரியாகிவிடும் என்பதாக இருந்தது திரு. ஆரியதம்மவின் பதில்.

திரு.ஆரியதம்மாவுடன் பேசும்போது சில விசித்திரமான சிந்தனைகளும் மம்மலிக்கு உதிக்கத்தொடங்கின. திரு.ஆரியதம்மா அவனது அந்த சிந்தனைகளை எப்படி எதர்கொள்வார் என்றெல்லாம் மம்மலி யோசிக்கவில்லை.மம்மலியின் சில கேள்விகள் திரு.ஆரியதம்மாவின் பௌத்த உணர்வையும் தேசிய உணர்வையும் சீண்டிப்பார்க்கத் தொடங்கின.. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஆரியதம்மா ஒரு புதிய அணுகுமுறையை கையாண்டார். அப்படிப்பட்ட சங்கடமான கேள்விகளை மம்மலி எழுப்பியபோது அவை அவருக்கு விளங்காதது போல இருந்து கொண்டார்.மம்மலிக்கு சிங்களத்தில் இருந்த பரிச்சயமின்மை அவருக்கு இந்த நாசகார வேலையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு வசதியாக இருந்தது. மம்மலியும் தனது சிங்கள மொழி அறிவின் போதாமையே திரு.ஆரியதம்மாவுக்கு தனது சில கேள்விகள் விளங்காமல் போவதற்கு முக்கிய காரணமென்று உறுதியாக  நம்பத் தொடங்கினான்.

அன்று திரு.ஆரியதம்மாவைச் சந்திப்பதற்கென்று மிக அதிகாலையிலேயே சென்றிருந்தான் மம்மலி.
திரு.ஆரியதம்மா அரசமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த வாங்கில் உட்கார்ந்திருந்தார். மம்மலியுடன் அன்று அவரால் நீண்ட நேரமாக பேச முடியவில்லை.அவ்வாறு நிகழ்ந்ததுக்கு சில அரசியல் பண்பாட்டுக்காரணிகளிருந்ததை மம்மலிக்குப் புரிந்து கொள்ளவில்லை.

திரு.ஆரியதம்மாவிடம் மம்மலி அன்று இறுதியாக கேட்ட கேள்வி இதுதான்

'ஹாமதுரு ஏன் சிங்கள ஆக்கள் தமிழ் பேச ஆசைப்படுவதில்ல நீங்க கூட எனக்கிட்ட ஒரு தமிழ்ச்சொல்லும் படிக்கலையே ஏன்?'

திரு.ஆரியதம்மாவுக்கு சங்கடம் கொடுக்கும் கேள்வியாக அது இருந்ததால் அவர் ஒரு குறிப்பிட்ட நேரம் மௌனமாக இருந்தார்;. ஆவர் மௌனமாக இருந்த போது மம்மலி தனது கேள்வி திரு.ஆரியதம்மாவுக்கு விளங்கவில்லை என்று முடிவெடுத்தான். தனது சிங்கள மொழி அறிவின் போதாமையையிட்டு தான் மிகவும் வருந்துவதாக திரு ஆரியதம்மாவிடம் அவன் சொல்ல வாயெடுத்த போது திரு. ஆரியதம்மா பதிலளித்தார்.

' மே புதுன்கே தேசய'