ஞாயிறு, மே 02, 2010

கே.பாலமுருகனுடன் ஒரு நேர்முகம்குறிப்பிட்ட குழுக்களின் அடையாளங்களை எழுத்து மரபோடு இணைப்பதன் மூலம் பேசுபொருளாக்கவும்,எழுத்துச் செயற்பாட்டின் பன்மையான தன்மையை ஏற்றுக்கொள்வதற்கான நிலைகளின்மீது அக்கரைகொள்ள வைப்பதற்குமான ஒரு முயற்சியில்இ மலேசிய எழுத்துக்களத்தில் இயங்கும் கே.பாலமுருகனுடன் செய்யப்பட்ட நேர்முகம் இது. இவர் அநங்கம் எனும் சிற்றிதழையும் நடாத்தி வருகிறார்.

தமிழ் இலக்கியம் என்ற சொல்லாடல்கூட தனக்குள் பல்வேறுபட்ட சிறுதமிழ் செயற்பாடுகளை கொண்டிருக்கும் ஒன்றுதான்.அவ்வப்போது இந்தச் சிறுதமிழ் குறித்த பேச்சுக்கள் கவனிக்கப்பட்டாலும்இ
அதற்குள் மலேசிய எழுத்துக்கள் தூரப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது.

தமிழ் இலக்கியம் என்ற ஒரு உலகப்பொதுமையை அவாவும் கதையாடல் முயற்சிகளே இன்னும் வலுவடையச்செய்யும் வேலைகள் நடந்தபடி இருக்கின்றன.

இதற்கு எதிர் நிலையில் சிறுகதையாடல்களை பரப்பும் வேலையும் அதன் சாய்வாக நின்று செயற்பட வேண்டிய கட்டாயமும் இன்னும்மிருக்கிறது.

இலக்கியச் செயற்பாடுகளிலும் உருவாக்கப்படும் அல்லது திணிக்கப்படும் விளிம்புநிலை இலக்கியச் செயல்பாடுகளை கவனஈர்ப்புச்செய்தல்.

விளிம்புக்குள்ளாக்கப்பட்ட நிலையை கதையாடுவதன் மூலம் தமிழ் இலக்கியம் என்ற பெரும்பானமைச் சொல்லாடலின் கற்பிதங்களை அம்பலப்படுத்துவதும் தமிழ் இலக்கியம் என்ற விரிந்த பரப்பில் குறுக்கிடுவதுமாகும். 

றியாஸ் குரானா

'' மலேசிய நவீன எழுத்தைப் பற்றி 
குறிப்பிட்டிருந்தீர்கள். தற்பொழுது 
அதீதமான குழுமனப்பான்மையில் 
சிக்கித் தவிக்கும் இலக்கியப்பிரதிகள் 
முரண்களை வளர்த்துக் கொண்டு 
பொது நுகர்வை உருவாக்கிக் கொண்டு 
அந்த நுகர்விற்கு சில விசுவாசிகளையும் 
உருவாக்கிக் கொண்டு ஆரோக்கியமாக 
நகர்கிறோம் என்கிற புரிதலில் இருக்கிறார்கள்.
 தனது குழுவின் விசுவாசிகளின் அல்லது 
தனது குழுவில் அடுத்து சேரப்போகும் 
உறுப்பினர்களின் எழுத்தை மட்டும் 
குறிப்பிட்டு உயர்த்தி விமர்சிக்கும் பண்பும் 
வளர்ந்து வருகிறது. இது வெறும் குழுவை
 மட்டும்தான் வலுப்படுத்தும் மாறாக இலக்கியம் 
என்கிற செயல்பாட்டை அல்ல. 
இதுதான் தற்போதைக்கு இங்குள்ள 
மலேசிய நவீன எழுத்தின் அவலநிலை. ''

01. உங்களை கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள் தோழர்..

   கே.பாலமுருகன் எனும் அகப்பக்கத்தில் 'தீவிரம்''  என்கிற சொல்லாடலின் மூலம்  பிறரின் கவனத்தை குவிமையப்படுத்த தொடர்ந்து ஏதாவது ஒன்றை  எழுத முயற்சி செய்து வருகிறேன். தெருவில் வித்தைக்காரன் கம்பி மேல் நடந்து பிரமிப்பை ஏற்படுத்துவதற்கு பின்னனியில் அவனது விளிம்பு வாழ்வின் வலியும் புறக்கணிப்புகளும் உண்டு என்றால் என் எழுத்தின் மூலம் அல்லது எனது தெளிவற்றஃ தெளிவு குன்றியஃ தெளிவெனும் மதிப்பீட்டைத் தூக்கியெறிந்த எழுத்தின் மூலம் நான் காட்டும் வித்தைகளுக்குப் பின்னனியில் எழுத்தின் மீதான காதலும் ஆர்வமும் முனைப்பும் மட்டுமே பரவியிருக்கின்றன. எனக்கிருக்கும் ஒட்டு மொத்த பலவீனங்களையும் நிலையில்லாமல் தாவும் சிதைந்து மீண்டு உருவாகும் மனதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென தெரியாமல் தவிக்கும் கணங்களில் கவிதை கதை கட்டுரை எனப் புனைந்து கொண்டிருக்கிறேன். எனது புனைவில் கற்பனை மனமும் அறிவும் வாசிப்பும் சுரக்கும் சொற்களின் கூட்டங்களும் எனக்குள் நிரம்பியிருக்கும் மனிதர்களின் வாழ்வும் அதை முழுமையாகச் சொல்ல முடியாமல் பதறும் மனநிலைகளும் நிரம்பியிருக்கின்றன.
   3 வருட ஆசிரியர் பயிற்சிக்குப் பிறகு கடந்த 4 ஆண்டுகள் ஆர்வார்ட் 3 குரூண் தமிழ்ப்பள்ளியில் தமிழாசிரியராகவும்இ மாவட்ட தமிழ்மொழிப் பாடக்குழுவில் செயலாளராகவும்இ பள்ளி தமிழ்மொழி பாடக்குழுவின் தலைவராகவும் செயலாற்றி வருகிறேன். இதற்கு முன்பிருந்த சில இயக்கச் செயற்பாடுகளைத் துறந்துவிட்டு இப்பொழுது பள்ளி சார்ந்து மட்டும் இயங்கிக் கொண்டிருக்கிறேன். தேசிய மலேசிய 'கலை மேம்பாட்டுத் திட்ட' குழுவில் அவ்வப்போது தமிழ் மொழி பாடத்திட்ட சீரமைப்புஇ இலக்கண இலக்கிய விளக்கவுரை சீரமைப்பு எனும் கூட்டங்களுக்குச் சென்று வருகிறேன். இங்குத்தான் மலேசிய தமிழ்மொழி பாடத்திட்ட அமைப்பின் மீதான எனது எதிர் விமர்சனங்களை முன்வைக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. எனது குரல் அங்கு ஓர் எழுத்தாளன் என்கிற முறையில் ஓரளவிற்குக் கவனம் பெறுகின்றது. விவாதங்களில் தமிழ் மொழி சார்ந்தும் அதன் மாற்றம் சார்ந்தும் எனது கருத்துகளை முன்மொழியவும் இந்தக் களம் நல்ல வாய்ப்பாக இருந்து வருகின்றது. வெளியில் இருந்துகொண்டு விமர்சிப்பதைவிட உள்ளே இருந்து ஒரு பகுதியாக விவாதிப்பது முன்னேற்றத்தை அளிக்கும் என நம்புகிறேன்.(இருப்பினும் எந்த நேரத்திலும் அதையும் தூக்கியெறிய தயாராக இருக்கிறேன்)
   அநங்கம் என்கிற மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழை நடத்திக் கொண்டிருக்கிறேன். 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி இவ்விதழைத் தொடர்ந்து பிரசுரித்து வருகிறேன். குறந்தபட்சம் அநங்கம் இதழை வாசிப்பதற்கு 250 வாசகர்கள் மலேசியாவில் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து அநங்கம் இதழ் அனுப்பப்படுகிறது.


 02. எழுத்துச் செயற்பாட்டுக்குள் எப்போது வந்தீர்கள்?

      2004ல் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதுதான்  முதலில் எழுதத் துவங்கினேன்.  அதற்கு முன்பு படிவம் 2-3 படிக்கும் போதெல்லாம் நயனம்(மலேசிய சனரஞ்சக சிறுப்பத்திரிக்கை)  இதழில் பிரசுரமாகும் ஷோபியின் உண்மை கதையைத் தீவிரமாக விரும்பி வாசித்ததுண்டு. அந்தக் காலக்கட்டத்தில் அபத்தம் நிறைந்த பல காதல் கவிதைகளை எழுதியதுண்டு. ஆனால் கல்லூரி காலக்கட்டத்தில்தான் எனது விரிவுரையாளர் திரு.தமிழ் மாறன் அவர்களின் மூலம் புதுமைப்பித்தன்இ பாரதி என வாசிப்புத் தீவிரம் அடைந்தது. மேலும் மனுஷ்ய புத்திரன் கவிதைகள்இ தேவதச்சன்இ விக்ரமாதித்யன்இ யூமா வாசுகி என பலரின் புத்தகங்கள் எங்கள் நூல்நிலையத்தில் கிடைத்ததால் சக பயிற்சி ஆசிரியர்களுடன் அந்தக் கவிதைகள் குறித்து விவாதித்ததுண்டு. புனைவு வெளிக்குள் வாசிப்பு என் மனதை இயங்கச் செய்தது.


03. தமிழ் இலக்கியம் என்று விரிந்த பரப்பை முன்வைத்து பேசும்போது மலேசிய மற்றும் சிங்கப்பூர் எழுத்துக்கள் பற்றி எவரும் கவனம் கொள்வதில்லை அது ஏன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? ஆனால் இப்போது நவீன எழுத்துக்கள் என்று பேசும்படியாக அங்கு இலக்கியம் இருக்கிறது அல்லவா? 
 
இந்தக் கேள்விக்கான பதிலை மலேசிய தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பின் முரண்களையும் ஆதிக்க அடையாளங்களையும் வைத்துதான் பேச வேண்டியுள்ளது. தமிழிலக்கிய பரப்பில் மலேசிய இலக்கியத்தை  முன்னிறுத்துபவர்கள் மிகக் குறைவாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆரம்பக் காலக்கட்டத்தில் இறக்குமதி இலக்கியங்களில் வாசிப்பும் மறுவாசிப்பும் கொண்டவர்கள் அதை மையமாக கொண்டு புனைவதில் ஆர்வமாக இருந்தார்கள். மேலும் ஆரம்பத்தில் இணைய வசதியின்மை அல்லது இணைய பங்காற்றல் குறித்த கற்றலின்மை மலேசிய இலக்கியத்தை வலுவாக முன்னிறுத்த முடியாமல் போனது.

   மேலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மலேசிய இலக்கியத்தின் பிரதியாக வேறு நாடுகளுக்குச் சென்று இலக்கியத்தைப் பற்றி பேசியவர்களும் உரையாடிவர்களும் வணிக எழுத்தை மட்டுமே புரிந்து கொண்டவர்களாகவும் அல்லது படைப்புணர்வற்றவர்களாகவும்தான் இருந்திருக்கிரார்கள். தீவிர படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சுருங்கி எழுதிக் கொண்டும் உரையாடிக்கொண்டும் இருந்தார்கள். சில காலக்கட்டங்களுக்குப் பிறகுத்தான் அவர்கள் வெளிப்பட்டார்கள். மேலும் ஆதிக்க சக்தி படைத்தவர்களாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களின் அதிகாரம் வணிக நுகர்வையே மோப்பம் பிடித்துக் கொண்டிருக்கையில் எங்கனம் மலேசிய இலக்கியம் வெளிக்கொணரப்படும்?
   மலேசிய நவீன எழுத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். தற்பொழுது அதீதமான குழுமனப்பான்மையில் சிக்கித் தவிக்கும் இலக்கியப்பிரதிகள்  முரண்களை வளர்த்துக் கொண்டு பொது நுகர்வை உருவாக்கிக் கொண்டு அந்த நுகர்விற்கு சில விசுவாசிகளையும் உருவாக்கிக் கொண்டு ஆரோக்கியமாக நகர்கிறோம் என்கிற புரிதலில் இருக்கிறார்கள். தனது குழுவின் விசுவாசிகளின் அல்லது தனது குழுவில் அடுத்து சேரப்போகும் உறுப்பினர்களின் எழுத்தை மட்டும் குறிப்பிட்டு உயர்த்தி விமர்சிக்கும் பண்பும் வளர்ந்து வருகிறது. இது வெறும் குழுவை மட்டும்தான் வலுப்படுத்தும் மாறாக இலக்கியம் என்கிற செயல்பாட்டை அல்ல. இதுதான் தற்போதைக்கு இங்குள்ள மலேசிய நவீன எழுத்தின் அவலநிலை. தனி மனித படைப்புகள் என எடுத்துக் கொண்டால் பல நல்ல படைப்பாளிகள் இன்னமும் உலக அலவில் அடையாளப்படுத்தபடாதவர்களும் இங்குண்டு. புத்தக வெளியீடுகள் மட்டுமே அவர்களின் எழுத்தை வெளிப்படுத்தும். குறிப்பாக நவீன எழுத்தில் அதிக ஆர்வம் கொண்டு வாசிப்புன் மூலமும் படைப்பின் மூலம் வளர்ந்து வருபவர்களில் கோ.புண்ணியபான்இ ந.பச்சைபாலன்இ ஏ.தேவராஜன்இ மஹாத்மன் போன்றவர்கள் அடங்கும். இன்னமும் சிலர் அதற்கான களத்தில் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இவர்களின் எழுத்தில் நவீன எழுத்திற்கான வீரியம் மே;லும் வலுவடைய வேண்டியிருக்கிறது. (திருப்தி அடைதல் என்பது ஒருவேளை போலி ஞானிகளுக்கு ஏற்படலாம்இ ஆனால் இன்னமும் என் எழுத்தின் மீதும் மலேசிய நவீன இலக்கிய எழுத்தின் மீதும் எனக்குப் போதாமை உணர்வுத்தான் எஞ்சியிருக்கின்றன)
   படிமத்தைச் சாராத எழுத்துகள் வெகு சீக்கிரம் உண்மையை அடையும் என்ற கருத்தாக்கம் பின்நவீனத்தில் இருப்பதாக வாசித்ததுண்டு. அதேபோல இன்று  ஒரு படைப்பாளி தனித்து நிலைக்க வேண்டுமென்றால் இயக்கங்களைச் சாராத அல்லது இலக்கியம் என்கிற நிறுவனத்தைச் சாராத படைப்பாற்றலின் வழி பயணிப்பதே சிறப்பு என நினைக்கிறேன்.
   குறிப்பு: சை.பீர்முகமதுவின் மூலம்  மலேசியவிற்கும் தமிழக எழுத்தாளர்களுக்கும் நல்ல நட்புரவு ஏற்பட்டதாகச் சிலர் சொல்லி கேட்டதுண்டு. அங்குச் சென்று மலேசிய இலக்கியம் குறித்து பேசுவது தொடங்கி அங்குள்ள முக்கியமான எழுத்தாளர்களை மலேசியாவிற்குள் கொண்டு வருவதுமென மிகத் துடிப்பாகச் செயலாற்றியுள்ளார் எனவும் சொல்லியிருக்கிறார்கள். எம்.ஏ. நுக்மான் மலேசியா வ்ந்திருந்தபோதுஇ அவர் மலேசியாவின் இலக்கியத்தை அறிந்துகொண்டதில் சை.பீருக்கும் முக்கிய பங்குண்டு எனக் கூறினார். 1999 ஆம் ஆண்டில் என நினைக்கிறேன்இ எம்.ஏ நுக்மானின் மலேசியாவிற்கான முதல் இலக்கியப் பயணத்தை பீர்.முகமதுதான் அமைத்துக் கொடுத்தார் எனவும் மேலும் பினாங்கு கோலாலம்பூர் போன்ற இடங்களில் இலக்கிய சந்திப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார் எனும் தகவல் உண்டு. எஸ்.பொஇ பிரபஞ்சன்இ நுக்மான்இ போன்ற சொற்ப எழுத்தாளர்கள் மலேசிய இலக்கியம் குறித்து அறிந்து வைத்திருந்தார்கள் என்பதும் உண்மை.


04. மலேசியாவில் நவீன இலக்கியத்தின் ஆரம்பம் எப்போது தொடங்குகிறது ? அதன் வரலாற்றை சற்று விரிவாக பேசலாமா? 

   மன்னிக்கவும். நான் ஒருபோதும் மலேசிய இலக்கியத்தின் அல்லது மலேசிய நவீன இலக்கியத்தின் வரலாற்று மாணவனாக இருக்க விரும்புவதில்லை. கல்வியாளர்களும் திறனாய்வாளர்களும் தொடர்ந்து பல மேடைகளில் இலக்கிய வரலாறுகளைக் கட்டுரைகளாகப் படைத்து வருகிறார்கள். அவர்களுக்கு வரலாறு இலக்கிய வெளியில் அவர்களின் இருப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்கப் பங்காற்றுகிறது. அதை ஒரு தகவல் போல வாசித்துவிட்டு மறைந்துவிடுகிறார்கள் அடுத்த மேடை கட்டுரை வாசிப்பு வரும்வரை. அவர்களின் இலக்கிய செயற்பாடு மிகவும் சுருங்கியவை. ஆகையால்தான் பெரும்பாலும் வரலாற்றை நினைவுக்கூர்வதில் எனக்கு எப்பொழுதும் ஒரு தயக்கம் நிலவுகிறது. வரலாறு குறித்த புரிதல் என்பது அதன் தொடர்ச்சியை மேலும் வலுவாக அதனிலிருந்து மாற்றி வேறு புதிய உணர்வுமுறையில் வரலாற்றிலிருந்து தகர்ந்த ஒரு இலக்கியப் பரப்பை அடைய செய்ய வேண்டுமே தவிர வரலாற்றையே பேசிக் கொண்டு காலத்தைக் கடத்தக்கூடாது.
   இருப்பினும் உங்களுக்கு ஒரு மாற்றுப் பார்வை வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து மலேசிய நவீன இலக்கியத்தை அக்கறையுடன் அணுகுவதன்  பொருட்டே எனக்குத் தெரிந்த மலேசிய நவீன இலக்கியத்தின் சில வரலாற்று தகவல்களைச் சொல்கிறேன்.

   மலேசிய தமிழ் இலக்கியம் என்பது ஆரம்பக்காலக்கட்டத்தில் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளைப் பேசுவதிலேயே அதிக அக்கறையை வெளிப்படுத்தின. காலனியக் காலக்கட்டத்தின் சமூகக் கட்டமைப்பில் மேல்தட்டு மனிதர்கள் சிறுமுதலாளிகளாகவும்இ அதிகாரத்தைப் பகிர்வதில் தரகர்களாகவும் இருந்தவர்கள் தமிழ்க்கல்வி இல்லாதவர்களாகவும் தமிழ் இலக்கிய நுகர்ச்சி இல்லாதவர்களாகவும்தான் இருந்தார்கள். ஆகவே அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வு பிரச்சனையும் முதலாளி சமூகத்தின் விளைவால் ஏற்பட்ட குடும்பச் சிதைவைகளும்தான் வணிக மொழியில் ஒரு பிரச்சாரமாக முன்வைக்கப்பட்டது. ஒரு புதிய கவித்துவமான மொழியும் புதிய அணுகுமுறைகளும் அப்பொழுது பெறப்படவில்லை. தமிழக இலக்கியம் என்கிற பெரும்வெளியின் தாக்கத்தினால் உருவான சிறு பகுதியாகவே அப்பொழுது இலக்கியம் படைக்கப்பட்டது.
   மலேசியாவில் நவீனக் காலக்கடடம் என எடுத்துக் கொண்டால் ஒரு பெரும்வெளியாக மட்டுமே இருந்த மலேசிய இலக்கியம் ஒரு நிறுவனமாகச் செயல்படத் துவங்கியக் காலக்கட்டத்தை முன்வைக்கலாம். சிறுகதை துறையை மேலும் வலுப்படுத்த 1950களில் சிறுகதை வகுப்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம் அப்பொழுது எழுதிக் கொண்டிருந்த பலரை ஒருங்கிணைக்க முடிந்தது. அந்தக் கதை வகுப்பின் மாணவனாக இருந்து பிறகு நவீன இலக்கியத்தின் முன்னோடியாக அடையாளப்படுத்தப்பட்டவர்தான் எம்.ஏ.இளஞ்செல்வன் ஆவார். பிறகு சிறுகதை கருத்தரங்குகள்இ சிறுகதை போட்டிகள் என அந்தக் களம் விரிவடையத் துவங்கியது. மாதாந்திர சிறுகதைத் தேர்வுஇ தமிழ் நேசன் பவுன் பரிசுத் திட்டம்இ சொக்சோ சிறுகதை போட்டிஇ பேரவைக் கதைகள்இ பாரதிதாசன் சிறுகதை போட்டிஇ வாசகர் வட்டங்கள்இ எழுத்தாளர் இயக்கம்இ தமிழ் நேசன் நாவல் போட்டிகள்இ மாதமொரு நாவல் திட்டம் என மலேசிய இலக்கியம் 1946க்குப் பிறகு சிறுக சிறுக ஒரு நிறுவனமயக்குதலின் மூலம் வளர்தெழுந்தது. இது போதுமான வளர்ச்சியா எனக் கேட்டாலோ அல்லது இதன் மூலம் தீவிரமான படைப்பாளிகள் உருவானர்களா எனக் கேட்டாலோ அது வேறொரு விவாதத்திற்குள் நம்மை நுழைத்துவிடும். ஆகையால் இவையனைத்தும் மலேசிய நவீன இலக்கியத்தை மேலும் தீவிரமாக்குவதில் ஏதோ ஒருவகையில் பங்காற்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
   எழுத்தாளர்கள் மலேசிய இலக்கிய ஒரு இயக்கமாக அல்லது நிறுவனமாக செயல்படுவதற்கு முன்பு தனது படைப்புகளின் மூலம் தனிமனித உணர்வுகளையே சமூகம் சார்ந்து எதிர்வினைகளாகவும் சீர்திருத்த கருத்தாக்கங்களாகவும் எழுதி வந்தார்கள். அடையாளங்காணல் அடையாளப்படுத்துதல் என்கிர இலக்கிய நிறுவனத்தின் முன்னெடுப்புகளுக்குப் பிறகு சமூகக் குறியீடாக மாறி வெளிப்படையாகப் பிரச்சாரத்தை எழுத்தைப் படைக்கத் துவங்கினார்கள். இருப்பினும் த்யனிமனித கொள்கையில் முழு ஈடுப்பாட்டுடன் சமரசங்களை நாடாமல் எழுதியவர்களும் இருக்கிறார்கள். இதையும் நவீன இலக்கியத்தின் தொடக்க மனப்பான்மை எனப் புரிந்துகொள்ளலாம். படைப்பாளி என்பவனே ஒரு இயக்கமாக தனக்கான அதிகாரங்களைத் தானே உற்பத்தி செய்துகொண்டு திருப்தியுறுவது.05. பெண் எழுத்துச் செயற்பாட்டாளர்கள் தமது எழுத்தின் அரசியலாக அங்கு எதை முன்வைக்கிறார்கள்? 
    

பெண் எழுத்தாளர்களின் படைப்புலகத்தினுள் இன்னமும் ஆழமான பார்வையும் விமர்சனமும் பரவலாக ஏற்படவில்லை எனறே தோன்றுகிறது. தீவிர படைப்பாளி என்று அடையாளப்படுத்தும் வகையில் யாரும் இல்லையென்றாலும் தனது படைப்பின் மூலம் வளர்ச்சியை எட்டியவர்கள் அல்லது புதிய கதை மொழியை கவிதை மொழியை அடைந்த பெண் எழுத்தாளர்கள் மலேசியாவில் சொற்பமான எண்ணிக்கையில் இருப்பதை மறுக்க இயலாது. கோலாம்லம்பூரில் இருந்து எழுதி வரும் பெண் நவீன படைப்பாளிகளின் படைப்பாற்றல் வாசிப்பின் மூலமும் குழுவாத பகிர்தல்-கலந்துரையாடல் விவாதித்தல் சிற்றிதழின் பங்காற்றல்- சிற்றிதழ் வட்டம் சார்ந்த தீவிர மனப்பான்மை போன்ற களங்களின் மூலமும் சிறுக சிறுக தீவிரமடைந்து வருவதையும் மறுக்க இயலாது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் தோழிஇ தினேசுவரிஇ யோகி மணிமொழி சிதனா ராஜம் ரஞ்சனி பூங்குழலி போன்றவர்களை அடையாளப்படுத்தலாம்.
      ஆனாலும் இவர்களின் எழுத்துக்களம் சமூகவியலின் அறியாமையை பிற்போக்குத்தனங்களை ஒழுக்கநெறியின் ஒடுக்குதல்களை எதிர்க்கொள்வதும் அல்லது பால்ய வாழ்வை மீட்டுணர்தலும் என்கிற தளத்தில் இயங்கி வருவதால் அத்துனை திவீரமான கலை எழுச்சியை அடைந்ததாகச் சொல்ல முடியாது. மதவியல் அரசியல் உளவியல் தர்க்கவியல் தத்துவவியல் மானுடவியல் வரலாற்றியல் எனும் பல்வேறு தளத்தின் அனுபவங்களைப் பெறுவதும் வாசிப்பதுமென முயற்சிகளை மேற்கொண்டால் தீவிரமாகக் கவனிக்கப்படுவார்கள். மேலும் சிற்றிதழ் களம் இல்லையென்றால் இவர்களின் எழுத்திற்கு அறிமுகமும் அடையாளமும் இல்லாமல் போய்விடும் அபாயமும் உண்டு.

      மூத்த பெண் படைப்பாளிகளை அணுகும்போது அவர்கள் எழுதுவதே ஒரு மிகப்பெரிய போராட்டமாக அமைந்திருந்தது. அவர்கள் அதனை உடைத்துக்  கொண்டு புனைந்து கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை. ஆதிக்க ஆண்  படைப்பாளிகளின் அடையாளங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு தர்க்கம் பேசி வந்த ஆண்வழி இலக்கிய பரப்பினுள் க.பாக்கியம் பாவை ந.மகேசுவரி பாமா போன்றவர்கள் தனது படைப்புகளின் வழி தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள். இந்த எதார்த்தத்தை அதாவது ஆணாதிக்க கட்டமைப்புகளை தொடர் முயற்சிகளின் மூலம் (அவர்களின் படைப்புகள் தீவிரமாகக் கவனிக்கப்படவில்லையென்றாலும் பேசப்படவில்லையென்றாலும்) எதிர்கொண்டு வந்தவர்களின் இலக்கியத்தை தற்கால மதிப்பீட்டைச் சுமத்தி விமர்சிப்பது அவ்வளவு சரியானதாகத் தோன்றவில்லை. ஆனாலும் மூத்த பெண் படைப்பாளிகளின் எழுத்தில் இந்துத்துவ அடிமைத்தனமும் அதற்கு எதிரான விடுதலையும் குடும்ப அமைப்புகளின் இறையியல்த்தன்மை மேலோட்டமான பெண் ஒழுக்குமுறைகள் குறித்த எதிர்வினைகள் இருந்திருக்கின்றன. முறையான விமர்சனப் பார்வை கிடைக்காததால் அது ஆழமாக விவாதிக்கப்படாமலேயே காலத்தைக் கடந்து வந்து சேர்ந்துவிட்டது. இப்போதைய பிரச்சனை வேறு என்பதால் அதையெல்லாம் ஒரு வரலாற்றுக் குறிப்பாகவே பார்க்கப்படுகின்றன.

06. தமிழ் இலக்கியத்தில் தனித்துத் தெரியுப்படியாக மலேசிய தமிழ் 
இலக்கியம் என்ன வகையான இலக்கிய அரசியல் மற்றும் அழகியலைக் கொண்டு எழுத்துக்களை நிகழ்த்திக்காட்டுகின்றன?
 
இந்தக் கேள்வியை நிகழ்காலத்து இலக்கிய நிறுவனத்தையும் அதனைச் சார்ந்த  எழுத்துவகைகளையும் முன்வைத்து பேசுவதே ஏற்புடையது என நினைக்கிறேன். தனிமனித உணர்வுகளாக இருந்த இலக்கியம் பிறகு சமூக செயற்பாடாக ஒரு பொது உடமையாக மாறிய காலக்கட்டத்தில்தான் மலேசிய இலக்கியம் அரசியலையும் நுண் அரசியலையும் உற்பத்தி செய்துகொள்ளத் துவங்கியிருக்கலாம். இலக்கியம் ஒரு நிறுவனமமகச் செயல்படத்துவங்கியதன் தொடர்ச்சியினால்தான் இலக்கியம் அறியாதவர்கள்கூட இயக்கங்களுக்குள் அதிகாரத்தைச் செலுத்த நுழைக்கப்பட்டார்கள். அவர்களின் அரசியலும் நுண் அரசியலும் புதிய மதிப்பீடுகளை முன்வைத்து படைப்பாற்றலைக் கவனப்படுத்தாமல் முன்னக்ர்ந்ததன் விளைவாக இன்றும் படைப்பிலக்கியத்தை முன்னிறுத்தாத இயக்கச் செயற்பாடுகளே கொண்டாடப்படுகிறது மக்களால் நம்பவும்படுகிறது. நாளிதழில் பயணக்கட்டுரை எழுதுபவர்களெல்லாம் இலக்கியவாதியென அடையாளப்படுத்தப்படுவதும் இலக்கியத்தின் தலைமை பொறுப்புகளை அடைவதும் எத்துனை அதீதமான அபத்தம் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்து மலேசியாவில் இருக்கும் இலக்கிய அரசியலை அறிந்துகொள்ள வாய்ப்புண்டு.
   மேலும் மலேசியாவில் நிலவி வரும் புதிய அரசியல் புரட்சிகளை(ஹிண்ட்ராப்) ஆழமாகச் சென்று விவாதிக்கும் படைப்புகள் இன்னமும் படைக்கப்படவில்லை என்றே சொல்லலாம். அவ்வப்போது சில கவிதைகளும் கட்டுரைகளும் எழுதப்பட்டு வருகின்றன. இவை ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகுக்க வேண்டுமே தவிர அரசியல் கட்சிகளின் கொள்கைகளைப் பரப்புவதற்கான எழுத்தாகச் செயல்படக்கூடாது. இலக்கிய அரசியலில் இதுவும்கூட ஆபத்தான செயல்பாடாக மாறிவிட வாய்ப்புண்டு. எனக்குத் தெரிந்த சில எழுத்தாளர்கள் அல்லது வலைப்பதிவாளர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்காக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் படைப்பு சக்தியை அந்தக் கட்சியின் கொள்கைகளை கருத்துகளை வெளிப்படுத்துவதில் செலவிட்டு வருகிறார்கள். இது அவர்களின் அரசியல் மீதான ஆர்வமும் ஈடுபாட்டையும் குறிக்கிறது.
   மேற்சொன்னது யாவும் மலேசிய இலக்கியத்தின் அடையாளங்களை வலுவிழக்கச் செய்வதற்கான முயற்சிகள். இது அரசியல் பெரும் சக்தியாக நிறுவப்பட்டிருப்பதால் இனி அதில் மாற்றம் என்பது குறித்து தெளிவான அனுமானங்களைக் கொடுக்க முடியவில்லை. ஆதி.குமணனின் (முன்னால் பத்திரிக்கையாளர்- எழுத்தாளர்) விசுவாசியாக இருந்த ஒரே காரணத்திற்காக இலக்கியத்திற்குள் நுழைந்து தலைமை வகிக்க முடியுமென்றால்இ இனி மூத்த அரசியல்வாதிகளிடம் விசுவாசிகளாகச் செயல்பட்டு வருபவர்கள்கூட இலக்கிய உணர்வே இல்லாதவர்களாயினும் இலக்கியம் என்கிற நிறுவனத்தை தனது அதிகாரத்தினுள் கொண்டு வரமுடியும் எனப்து சாத்தியம். அத்துனை பலவீனங்களும் குறைபாடுகளுமுடைய இலக்கிய வெளியைக் கடந்து தனக்கான அடையாளத்தையும் தனது படைப்பிற்கான வெளிப்பாடுகளையும் அடைவதற்கு ஒரு தீவிர படைப்பாளி என்னெவெல்லாம் செய்ய முடியும் என்பதை ஆழ்ந்து மதிப்பீடக்கூடிய சூழல் இருந்து வருகிறது.
   இந்த அனைத்து நெருக்கடிகளையும் உடைத்தாலோ அல்லது கடந்தாலோ மட்டும்தான் எந்தவொரு சார்பற்ற இலக்கியத்தையும் அழகியலையும் வெளிப்படுத்த முடியுமென நினைக்கிறேன். மேலும் இந்த அழகியல் என்பது அதிகாரம் படைத்தவர்களின் நுகர்பொருள் எனப்படுகிறது. அவர்கள் உருவாக்கிய இரசனைகளின் தகுதிகளுகேற்ப உருவாக்கப்படுவதே அழகியல் என சொல்லாடல் என அறிகிறேன். அதிகாரத்திற்கு எதிரான மனநிலையை படைப்பின் மூமல் படைத்துக் காட்டுவதே மாற்று அழகியலை உருவாக்கும் என நம்புகிறேன். வெறுமனே முரணைக் காட்டுவதிலும் அதிகாரத்தை எதிர்ப்பதிலும் நேர்மையான எழுத்து அடையாளங்காணப்படும் என நம்பிக்கை என்னிடம் இல்லை. ஒரு பொது நுகர்வைத் திருப்திப்படுத்தவும் உச்சத்தில் வைத்துக் கொண்டாடுவதற்கும் கூட்டமாக சேர்ந்து எதிர்வினையையும் மறுப்பையும் தெரிவிப்பதில்தான் ஆரோக்கியமான இலக்கியம் அடங்கியிருக்கிறது என்றால்இ நான் என்னத்தைச் சொல்ல முடியும்? நீங்களே புரிந்துகொள்வீர்கள் என ந்ம்புகிறேன்.

   அநங்கம் இதழ் அரசியல் அதிகாரத்தால் கட்டுண்ட இலக்கிய பரப்பிலிருந்து வெளியேறிய புறக்கணிக்கப்பட்ட படைப்பாளிகளை மட்டுமே அடையாளப்படுத்தவும் மேலும் புதிய படைப்பாளிகளைக் கொண்டு வரவும் செயலாற்றுகிறது. இதுவும்கூட தனிமனிதர்களின் உணர்வுமுறையில் இருந்த படைப்பாற்றலை அநங்கம் என்பதன் ஒரு சிறு நிறுவனத்தின் மூலம் கூட்டமைக்கும் முயற்சிதான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆகையால்தான் அநங்கம் சில குறைபாடுகளையும் பலவீனங்களையும் கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதையும்கடந்து மனித வாழ்வின் பல நிலைகளை முன்னிறுத்துவதிலும் சமூக வாழ்வின் விளிம்பு வாழ்வையும் அதற்கு எதிரான ஒடுக்குதலையும் கேள்விக்குட்படுத்த வேண்டுமென ஒரு நேர்மையுடன் அநங்கம் செயல்படும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

 07. இஸ்லாமிய அரசு சிறுகதையாடல் சமூகமான தமிழ் பேசும் மக்களை மோசமான அதிகாரத்திற்குட்படுத்தி வினையாற்ற முயற்ச்சிக்கிறது. இதை எப்படி நீங்கள் புரிந்துகொண்டு செயலாற்றுகிறீர்கள்? மலேசிய தமிழ் இலக்கியம் அதிகாரத்தின் முன் எதிர்க்குரலாக பேசுவதாக தெரியவில்லையே ஏன்? 

இந்தச் சமூகம் எப்படியெல்லாம் ஒடுக்கப்படுகிறது என்பதை நன்கு அறிவேன். இதனை ஒரு முரணுக்குள் இயங்கும் சார்பு மனம் எனக் குறிப்பிடலாம். சிறுபான்மை இனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் மொழியின் அதிகாரத்தையும் உரிமையையும் செயலிழக்கச் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் உண்மையே. அண்மையில் தமிழ் மொழி சார்ந்து எழுந்த பிரச்சனைகளுக்குள் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான உயர்தர பரீட்சையான எசு.பி.எம் சோதனையில் தமிழ் இலக்கியத்தை எடுக்கும் மாணவர்களின் கவனத்தை வேறுபக்கம் திசைதிருப்ப அதன் மீதான மதிப்பீட்டுகளை உரிமைகளைப் பறிப்பதன் மூலம் இந்த மொழி சார்ந்த ஒடுக்குதலை நிறைவேற்றிக் கொள்ள சில தரப்பினர் முயற்சிக்கிறார்கள். இந்தப் பிரச்சனை தேசிய அளவில் விவாதிக்கப்பட்ட போதும் கண்டனக்கூட்டம் ஏற்படுத்தப்பட்ட போதும்இ எனது வலைப்பதிவில் தொடர்ந்து எனது எதிர்ப்பை எழுத்தின் வழி தெரிவித்திருந்தேன். அரசு வேலையைச் சார்ந்தவனாக நான் இது குறித்து எழுதுவது என் பணிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சிலர் எச்சரித்திருந்தார்கள். எனக்கு இந்த வேலையைக் கொடுத்தது தமிழ்க் கல்வி மட்டுமேஇ ஆகையால் தமிழாசிரியராக எனது மொழிக்கும் கொஞ்சம் நேர்மையாக நடந்துகொள்வதில் எந்தவித தவறும் இல்லையென தொடர்ந்து வாதிட்டேன்.

      மோசமான அதிகாரத்திற்குட்படுத்துதல் என்றால்இ சிறுபான்மை மக்களைப் பார்த்து 'வந்தேறிகள்'' என இனவெறியைத் தூண்டும் வகையில் அமைச்சர்களே சாடிப் பேசுவது தொடங்கி குறிப்பிட்ட கல்வியாளர்களேஇ 'பாம்பையும் இந்தியனையும் கண்டால் முதலில் இந்தியைனைக் கொல்'' எனச் சொல்லும் அளவிற்கு சக இனத்தின் மீதான வெறுப்பை உற்பத்தி செய்து கொள்கிறார்கள். மேல்தட்டுக் கல்வியாளர்களின் மனப்பான்மையும் அமைச்சர்களின் கொள்கைகளும் இப்படியிருக்க பிறகெப்படி இன ஒற்றுமையை ஏற்படுத்த இயலும்? அபத்தமான நம்பிக்கைத்தான். சிறுகதையாடல் சமூகம் பொருளாதார ரீதியில் தன்னை உயர்த்திக் கொள்வதன் மூலமே தனது இருப்பை வலுப்படுத்திக் கொள்ள இயலும் என நினைக்கிறேன். அதிகாரத்தின் போலியான முகங்களை நோக்கி எதிர்வினையை வெளிப்படுத்த பல முற்போக்குவாதிகள் தைரியமாக எழுதி வருகிறார்கள்.
      பெரும்பான்மையான அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் குறித்து மக்களை முட்டாளாக்க வைத்திருக்கத்தான் முயற்சி செய்துள்ளார்கள். மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வருவதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. அவர்களுக்கு வேண்டியது பெருநநள் காலங்களில் அவர்களின் பொட்டலத்தையும் 200 வெள்ளி பணத்தையும் பெற்றுக் கொள்ள சில ஏழைகளும் அதே சமயம் அவர்களின் விருந்துபசரிப்பில் கலந்துகொள்ள சில கிளை வாலாட்டிகளும் மட்டுமே. அப்பொழுதுதான் கிளை கட்சியின் ஆண்டறிக்கையில் ஆண்டு நடவடிக்கையாக இதையெல்லாம் போட்டு நிரப்பிக் கொள்ள முடியும். ஆகையால் முதலில் ஓர் எழுத்தாளனாக சமூகப் போராளியாக இது போன்ற சமூகத் துரோகிகளைத்தான் எதிர்க்க வேண்டும். அல்லது அவர்களின் போலி பிம்பங்களை முன்வைக்கும் எழுத்துகளை படைக்க வேண்டும். அதிகாரத்தின் மூலம் சிறுகதையாடல் சமூகத்தை ஒடுக்க நினைக்கும் பெரும்சக்திகளின் விசுவாசிகளாகவும் அடிமைகளாகவும் நம் சமூகத்திற்குத் துரோகம் செய்து வருவது இவர்கள்தான்.
 முன்னால் பிரதமர் மகாதீர் அவர்கள் கடந்த பொது தேர்தலின் போது தனது கடைசிநேர நேர்காணலை வழங்கியிருந்தார். அதில் மலேசிய இந்திய காங்கரசின் தலைவரான சாமிவேலு அவர்களைப் பற்றி பல உண்மையான தகவல்களை வெளியீட்டார். அதாவது சாமிவேலு அவர்கள் இதுவரை நாடாளுமன்றத்தில் இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து தெளிவான கருத்தும் எதிர்வினையும் கொண்டிருக்கவில்லை என்று. இந்த நேர்காணல் மறுநாள் சாமிவேலு அவரின் தொகுதியில் தோல்வியடைவதற்கு முக்கியமான காரணமாக அமைந்திருந்தது.
      செம்பருத்தி போன்ற இதழ்களின் வழி பல கல்வியாளர்கள் தனது எழுத்தை  அதிகாரத்திற்கு எதிராப வடிவமாக நிறுவி வருகிரார்கள். குறிப்பாக சீ.அருண் கா.ஆறுமுகம் பசுபதி போன்றவர்கள் மிகவும் துணிச்சலான எழுத்துக்குரியவர்கள். தான் கொண்ட முரணில் எந்தக் குழுவையும் சாராமல் தனித்து நின்று போராடக்கூடியவர்கள். மேலும் பசுபதி போன்றவர்கள் நாட்டின் சட்டம் குறித்த விழிப்புணர்வையும் சட்டம் தொடர்பான சாதாரண மக்களுக்குரிய உரிமையையும் திடர்ந்து தன் எழுத்தின் வழி வழங்கி வருகிறார்கள். பொதுவாக மலேசிய இலக்கியம் என எடுத்துக் கொண்டால் அவர்கள் அதிகாரத்திற்கு எதிராகப் பேசவில்லை என்பதை ஒரு அபத்தமான நிலையாக எடுத்துக் கொள்ளலாம். நான் உட்பட கடந்த காலங்களில் அதிகாரத்தை என் எழுத்தின் மூலம் கேள்விகுட்படுத்த வேண்டும் என நினைக்கவில்லை. அதே சமயம் பெரும்பான்மை சக்தி படைத்தவர்களை நோக்கி பயங்கரமான எதிர்வினையை எழுப்பினாலும் நம்மை கட்டுப்படுத்த ஒடுக்க சட்டத்தில் பல வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக இசா பாதுகாப்பு சட்டம். (ஐளுயு)

      ஆனால் மலேசிய தமிழ் இலக்கியத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள்  சமூகத்தில் நடுத்தரகர்களாக அதிகாரத்திற்குத் துணைப் போனவர்களின் மீது தொடர்ந்து எதிர்வினையை முன்வைப்பது ஆரோக்கியமான எழுத்தாகக் கருதலாம். எதிர்வினையையும் முரணையும்கூட வெளிப்படையாக முழு வீச்சுடன் முன்வைக்கும் அளவிற்கு இங்குக் கருத்து சுதந்திரத்திற்கு இடமில்லை எனும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட சிலர் கவிதையின் வழியாகவும் புனைவின் மூலமாகவும் தங்களின் எதிர்வினையை விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

 08. ஹிண்ட்ராப் போன்ற அமைப்புக்களும் அரசுக்கெதிரான ஒரு இந்துத்துவ 
கட்டமைப்பை உருவாக்கவே முயற்ச்சி செய்கிறது. சிறு கதையாடல் சமூகத்திற்கான அரசியல் உரிமை என்றவகையில் அனுகுவதை விட்டுவிட்டு இந்துத்துவத்திற்கு எதிரான புறமொதுக்கலாக புரிந்துகொள்வதை எப்படி நோக்குகிறீர்கள்? 
    
ஹிண்ராப் போன்ற அரசாங்கத்தைச் சாராத இயக்கத்திற்கு ஆரம்பத்தில் ஒரு குறிக்கோளும் நோக்கமும் வரையறுக்கப்படிருக்கும் என்பது உண்மை. அது இந்துக்களின் உரிமைகளைப் பெறுவதிலும் அவர்களின் நலனைக் காப்பதிலும் முனைப்பாக இருந்திருக்கக்கூடும். அதன் வரலாற்றை ஆராய்ந்தால் தெரிய வரும் எனக் கருதுகிறேன். ஆனால் முதலில் இந்துத்துவம் என்பது அரசியல் சார்ந்து கட்டமைக்கப்பட்ட ஒரு அடையாளம் கிடையாது. மதம் என்பது சமூகத்தால் தொடக்கக்காலக்கட்டத்தில் ஏற்கப்பட்ட உருவாக்கப்பட்ட தொன்மம். இது பண்பாட்டையும் நிலவியலையும் நோக்கி விரியக்கூடியது. பிற்பாடு இந்துத்துவம் மத அரசியலின் வழி முன்னெடுக்கப்பட்டு உலக இயங்கரவாதம்வரை தொடர்புப்படுத்தப்பட்டு ஒரு பிற்போக்குத்தனமான களமாகவும் கற்பிக்கப்பட்டது.
      தற்போதைய மலேசிய அரசியலின் வழி உற்பத்திக்கப்படும்  அடக்குமுறைகளுக்கும் இந்துத்துவ  அடையாளத்திற்கும் வெவ்வேறான  தொடர்பும் அர்த்தப்படுத்தலும் உண்டு என நினைக்கிறேன். அரசு எதிர்க்கொள்ள நினைப்பது வெறும் இந்துத்துவத்தை அல்லஇ மாறாக இந்தியர்கள் எனும் சிறுபான்மை அடையாளத்தைத்தான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது அவர்களுக்கு இந்து என்ற மத அடையாளத்தைவிட மிக முக்கியமான பிரச்சனை 'இந்தியர்கள்' எனக்கூடிய இன அடையாளம்தான் எனப் பார்த்தால்இ ஹிண்ராப் போன்ற இயக்கங்கள் முன்னெடுத்த போராட்டங்கள் மத அடையாளத்தில் சிக்காமல் நழுவி வந்துவிடும்.
     மேலும் ஹிண்ராப் என்கிற  இயக்கம் இந்துக்களின் நலனுக்காகப் போராடும்  இந்திய சமூகத்திலுள்ள ஓர் உறுப்புக் கட்சியாகப் பார்த்தாலும்இ சமூகத்திற்காகப் போராடுவதில் அவர்களின் அக்கறை வெளிப்படுமே தவிர மதம் என்கிற அடையாளம் இல்லை. மேலும் அவர்கள் அதிகாரத்திற்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்தில் 'மக்கள் சக்தி' என்கிற முழக்கம் மட்டுமே இருந்தது. இதை எப்படி ஒரு இந்துத்துவ கட்டமைப்பு எனப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்புண்டு? குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் கிறிஸ்த்துவர்கள் உட்பட பலர் இந்தப் போராட்டத்தில் ஹிண்ராப்புடன் கலந்துகொண்டார்கள் என்பதே உண்மை. மேலும் ஹிண்ராப்பின் தொடக்கப் போராட்டம் முதல் அது உச்சக்கட்டம் அடையும்வரை அவர்களின் முக்கியமானவர்களான எல்லாம் வழக்கறிஞர்களும்(உதயகுமார் உட்பட) இந்திய சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வையே மையப்படுத்தி பேசினார்கள். உண்மையை நோக்கி உரிமையை நோக்கி மக்களின் பார்வை முன்னகரத் துவங்கியதும் பெரிய மாற்றமே.

    ஆனால் ஹிண்ராப் போராட்டத்தின் தொடர்ச்சியை அணுகினால் அது பல உடைவுகளாக இன்று சிதறிக் கிடப்பதும் உண்மைத்தான். இசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஐவரும் இப்பொழுது தனி தனி தீவுகள் போல உடைந்தது மட்டுமல்லாமல்இ சமூகத்தையும் புதிய கட்சிகள் தொடக்கம் என்கிற பெயரில் பற்பல பகுதிகளாக உடைத்துள்ளார்கள். இது எங்குப் போய் முடியும் எனப் பார்த்தால் ஓர் ஆபத்தான விளைவு மெல்ல பின்னப்படுகிறது என்பது மட்டும் மகா உண்மை.

09. மலேசிய இலக்கியம் எதை நோக்கி நகர்கிறது என்று அவதானிக்கிறீர்கள்.?
மலேசிய எழுத்துக்களின் அரசியல் என்னஇ இப்படியொரு கேள்விக்கு என்னவகையான பதிலை சொல்ல முயற்சிப்பீர்கள்? 

உலக இலக்கியம் எனவும் மலேசிய இலக்கியம் எனவும் பேசிக் கொண்டிருப்பவர்கள் அதற்கான தளத்தில் இயங்காமல் வெரும் குழு சார்ந்த மனபான்மையை வளர்த்துக் கொண்டு பத்திரிக்கைஇ சங்கம்இ ஊர்வலம்இ கூட்டங்கள் என அரைகுறையாக சமூகச் செயற்பாடாக இலக்கியத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவே. அவர்களின் செயல்பாட்டைக் கண்டு இலக்கியம் மிகத் தரமாக வளர்க்கப்படுகின்றது என்கிற மாயையை வெகு சீக்கிரம் ஏமாந்த ஒரு வாசகன் அடையக்கூடும். ஆனால் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் குழுவாத இலக்கிய நிறுவனத்தைத் தகர்த்து தனிதனியாக வைத்து மதிப்பீட்டால்இ அவ்ர்களின் இலக்கியப் படைப்பாற்றல் வளர வேண்டிய எல்லை மிகத் தூரமானவை. குறிப்பு: மேடையில் வீரத்துடன் கூக்குரலிட்டுப் பேசிவிட்டு கீழே இறங்கியதும் கைகுலுக்கிக் கொள்ளும் ஏஜேண்டுகளாக மாறிவிடுவதும் அவர்களுக்குள் இருக்கும் முரண். அவர்கள் கருத்து விநியோகிஸ்த்தர்கள்இ சங்கத்தின் வலுவை மேலும் விரிவுப்படுத்த அங்கும் இங்கும் போராடும் போலி இயக்கவாதிகள்.
      இன்னும் தீவிரமான வாசிப்பை மேற்கொள்ளாமலேயே அடுத்தவனின் இலக்கிய செயல்பாட்டையும் அவனது இலக்கியத் தரத்தையும் விமர்சிப்பதிலும் கேலி செய்வதிலும் தமது நேரத்தையும் சக்தியையும்  செலவழித்து மகிழ்ச்சியை நாடும் போதைப்பித்தர்களின் அடிமை வாழ்க்கைக்கு நிகரான முரணைப் போன்ற ஒரு குப்பியை வைத்துக் கொண்டு புகைத்துக் கொண்டிருப்பவர்களின் இயங்குத்தளம் மிகவும் குறுகலானவை எனக் கருதுகிறேன். அது புறத்தின் மீது படிந்துள்ள கவர்ச்சியை உதறித்தள்ளிவிட்டு தன்னை நோக்கி விரிய வேண்டும். மிகவும் பலவீனமான ஒரு இலக்கிய செயல்நிறுவனத்தின் அடிமைகள்தான் இங்கு இலக்கிய அரசியலை உருவாக்கி பெரும் இலக்கிய அடையாளங்களைப் போல தன்னை உருவகித்துக் கொண்டும் பெரிய பெரிய தலைமைத்துவத்திலும் இருப்பதாகத் தோன்றுகிறது. முதலில் ஒரு நல்ல வாசகனோ அல்லது எழுத்தாளனோ இத்தகைய மாயையை உடைக்க வேண்டிய கடப்பாடு அவனுக்குண்டு.
      குறிப்பாக இலக்கிய நுகர்ச்சியே இல்லாதவர்கள் இன்று மலேசிய இலக்கியக் கழகத்தின் சங்கத்தின் தலைவர்களாக இருப்பது எத்துனை அபத்தம் நிரம்பிய குறியீடு என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி இலக்கியம் தெரியாதவர்களை முன்வைத்துஇ அவர்களை நேர்காணல் செய்வதுஇ அவர்களை இலக்கிய நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கச் செய்வதுஇ முக்கியமாக மலேசிய இலக்கியம் குறித்து அவர்களிடம் தொலைகாட்சி நேர்காணல் செய்வதென பெரும் கும்மாளம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரு பக்கம் வன்முறையும் இன்னொரு பக்கம் ஏமாற்றங்களும் என எல்லாம் அசம்பாவிதங்களும் இங்குள்ள இலக்கிய மனிதர்களிடமும் உண்டு. தனிமனிதனின் கருத்துகளை எழுத்து வலிமையின் மூலம் எதிர்கொள்ள வேண்டும்.

      மலேசிய எழுத்தின் அரசியல் என எடுத்துக் கொண்டால்இ புத்தகம் எழுதி  ஒரு அரசியல் கட்சியின்  தலைவனை அழைத்து பல்லாயிரங்களைச்  சேமிப்பது தொடங்கிஇ போட்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டு அரசியல் கட்சி தலைவன் போடும் திகதிக்காக ஓடி ஓடி உழைப்பது வரை மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து நிற்கிறது எனச் சொல்லலாமா? மேலும் விரிவாகச் சொன்னால் தன்னை முன்னிறுத்தும் அரசியல் முயற்சிகளின் வழித்தான் இன்றைய எழுத்து முன்னெடுக்கப்படுகிறது. அல்லது ஏதாவது ஒரு இயக்கத்திடம் தன்னை ஒப்படைத்துவிட்டுஇ இயக்கத்திற்காகச் செயல்படுவதென எழுத்தின் அரசியல் இயங்கிக் கொண்டிருக்கிறது.


10.பெரும்பாலும் செய்திபோன்ற ஒரு கதையாடலை உங்கள் எழுத்துக்கள் அக்கரைகொள்கின்றன.
அதனூடாக இலக்கியமாக முயற்சிக்கின்றன.மனதையும் மொழியையும் கலக்கும் ஒருவகை செயற்பாடு உங்கள் எழுத்துக்களில் மேலெழுந்து வருகிறது. அது ஒரு தனிமைப்படுதலை பரிந்துரைக்கிறது எனலாம்.
எழுத்தக்களினூடாக நீங்கள் கடந்து செல்ல நினைக்கும் அல்லது நிறைவேற்ற விரும்பவதுதான் என்ன? 

என் எழுத்துக் குறித்து விவாதிக்கும் அளவிற்கு நான் அத்துனைத் தீவிரமாக எழுதிவிடவில்லை. ஆனால் தொடர் வாசிப்பின் மூலமும் தேடலின் மூலம் அத்தகையதொரு தீவிரத்தைத் தேடும் முயற்சியில் என் எழுத்தைப் புனைந்து வருகிறேன். நான் வாழ்ந்த வாழ்வையும் அதனூடாக நான் கடந்து வந்த மனிதர்களையும் என் சமூகத்தின் சம்பவங்களையும் அதனுள் இருக்கும் செய்திகளையும் சொல்லி வருகிறேன். ஆனால் நீங்கள் வெறும் செய்தியை மட்டும்தான் குறிப்பிடுகிறீர்கள்இ இருப்பினும் செய்திகளும் சம்பவங்களும் இன்றி எப்படி ஒரு படைப்பை வெறும் உணர்வால் புனைய முடியும். உணர்வுகள் கூட ஏதேனும் ஒரு சம்பவத்தையோ அல்லது செய்தியையோ முன்னிறுத்திதான் உச்சத்தையும் சலிப்பையும் குதுகலத்தையும் எல்லாவற்றையும் அடைகிறது.

      புத்தர் கூறியது போல சக்தி எனும் செய்தியை அடைவதன் மூலம்தான் மனித உணர்வுகள் சக்தியை உடைத்து அதனுள் இருக்கும் சூன்யத்தை அடைய முடியும் என்பதாகும். செய்தியையும் சம்பவங்களையும் மொழியாற்றலின் மூலம் அதை முழு படைப்பாக்கும் பொறுப்பு எழுத்தாளனுடையது. வெறும் செய்தியை மட்டும் அப்படியே ஒப்புவித்தால் அவன் செய்தி வாசிப்பாளன்இ எவ்வித சம்பவங்களும் செய்திகளும் இன்றி புனைவைக் கொடுப்பவன் படைப்பாக்கத்தில் போதாமையைத் தழுவியவன். உங்களின் மூலம் என்னை நீங்கள் எந்தக் குழுவில் சேர்த்தாலும் பரவாயில்லை. எந்தக் குழுவையும் சாராமல் தனித்துத்தான் எழுதி வருகிறேன்.
      மொழியையும் மனத்தையும் கலக்காமல் ஒரு நல்ல படைப்பு உருவாகிவிட முடியும் என நினைக்கிறீர்களா? வெறும் சொற்கூட்டங்களை சேர்த்து அழகாக அடுக்கி படைப்பது படைப்பாகுமா? அல்லது மனதின் ஆழங்களை உணர்வுகளை கச்சிதமாக  கூர்மையாகச் சொல்ல முடியாத  மொழ்யின் மூலம் நல்ல படைப்பைக்  கொடுக்க முடியுமா? இதனை ஒரு விவாதமாக விட முடியுமே தசிர என்னால் விளக்கமெல்லாம் அளிக்க முடியாது. இதை எனது படைப்பின் மீதான ஒரு விமர்சனமாக எடுத்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.