"தமிழ் இலக்கியம் என்ற விளிப்பிற்குள் அதிகமும் இடம்பெறுவது இலக்கியம் எனபாவிக்கப்படும் ஈழம் மற்றும் இந்திய எழுத்துக்கள்தான். ஆயினும் பல் ஆண்டுகளாக இலக்கியம் எனக் கருதப்படும் ஒருவகை எழுத்துச்செயற்பாட்டை பல்வகைப்புரிதலினூடாக வெளிப்படுத்தி வரும் மலேசிய எழுத்துக்களுக்கு உரிய இடமோ வாசிப்புக்களோ கிடைக்கவில்லை.
விளிம்புநிலைக் கதையாடல்களை அக்கரையோடு பாவிக்கும் எழுத்துச் சூழல் மலேசிய எழுத்துக்கள் தொடர்பில் காட்டும் அக்கரையின்மை இலக்கிய செயற்பாட்டாளர்களாக கருதுபவர்களின் கருத்தியல்களை சந்தேகிக்க வைக்கிறது.
எப்போதையும்விட இப்போது அங்கு கருத்தியல் சார்ந்த இயங்குவெளி தீவிரமடைந்துள்ளது.
மலேசிய தமிழ்பேசும் மக்கள் தங்களை சிறுபான்மை கதையாடல் சார்ந்தவர்களாக உணர்ந்தாலும்,
அங்கு இன்று உருவாகியுள்ள அரசியல் நிலை பிரக்ஞை சார்ந்த தேடல்களின் பக்கம் அதிக கவனத்தை உருவாக்கியுள்ளது.
சிறுபான்மை கதையாடல் என்ற அரசியல் செயற்பாடாக புரிந்துகொள்ளப்படாமல்,
இந்துத்துவ மதம் சார்ந்த ஒன்றிணைப்புக்களாகவும், அதனடியான அரசியல் அணிதிரட்டல்களாகவும்,
இயங்குதலாகவும் மாறிக்கொண்டிருக்கும் நிலையில் அதுபற்றிய விவாதச்சூழல் ஒன்றை உருவாக்குவது மிக அவசியம் எனக்கருதுகிறேன்.
அதன் முதற்கட்டச் செயற்பாடாக மலேசியாவில் மின் இதழ் ஒன்றை நடத்திவரும் மா.நவீனுடன் ஒரு நேர்காணலைச் செய்துள்ளேன்.
இதை ஆரம்பமாகக் கொண்டு மலேசிய இலக்கிய மற்றும் அரசியல் செயற்பாடு தொடர்பான உரையாடலை தமிழின் விரிந்த பரப்பிற்குள் இயங்கும் அனைத்து எழுத்தச் செயற்பாட்டாளர்களும் பங்களிப்புச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
உரையாடலில் பங்கேற்குமாறு அழைக்கிறேன்.
அத்தோடு மலேசிய எழுத்தச்செயற்பாட்டாளர்கள்,
அரசியல் செயற்பாட்டாளர்கள் என்னை தொடர்புகொள்ளுமாறு
வேண்டுகிறேன்."
"மலேசிய இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க
வேண்டிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் வைரமுத்துவின்
நாவலை இங்கு வெளியீடு செய்து பெரும் பணம் திரட்டிக்
கொடுப்பதில்தான் குறியாக உள்ளது.இதில் இலக்கிய
சுற்றுலா என வேறு ஏற்பாடு செய்து கருணாநிதியையும்
வைரமுத்துவையும் சிவசங்கரியையும் கண்டுவருவதில்
குறியாக உள்ளனர்.இவர்களிடம் இலக்கியம் தொடர்பான
எளிய கேள்விகளுக்கும் பதில் இல்லாமல் இருப்பதும்
இலக்கியம் ஓர் பொழுது போக்கு அம்சமாகவே
இவர்களுக்கு இருப்பதும் மலேசிய இலக்கியத்தின் சாபம்."
01. உங்களை கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள் தோழர்..
தமிழ்ப்பள்ளி ஆசிரியனாகக் கடந்த 5 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறேன். ஆசிரியர் தொழிலைப் பிடித்துத் தேர்வு செய்யவில்லை. எதிர்கால மலேசிய சந்ததியினரையும் இந்தக் கல்வித் திட்டம் சிந்திக்கும் மனிதர்களாக உருவாக்கும் வகையில் அமைக்கப்படவில்லை. உயர்ரகக் கூலிகளை வேண்டுமானால் உருவாக்கலாம்.இந்நிலையில் மலேசிய அடித்தட்டுத் தமிழ் மக்களின் மனம் செயல்படும் விதத்தை அறிந்து கொள்ளும் கடமை ஓர் எழுத்தாளனாக எனக்கு உண்டு என நம்புகிறேன். தீவிரமாகச் சிந்திக்கும் போக்கு உள்ள ஓர் சமுதாயத்தை உருவாக்கத் தமிழ்ப்பள்ளி எனக்கு ஓர் களமாக உள்ளது. ஏறக்குறைய நான் செயல்படும் இலக்கியம், இதழ், அகப்பக்கம் என அனைத்துமே இந்தச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதே.
02. எழுத்துச் செயற்பாட்டுக்குள் எப்போது வந்தீர்கள்?
16 வயதில். பெரும் தாழ்வு மனப்பான்மையால் எழுதத் தொடங்கினேன். அப்போது எனது நண்பர்களுக்கு மாணவிகளின் மத்தியில் தன்னை அடையாளம் காட்ட காரணமாக இருந்த காற்பந்து விளையாட்டு எனக்கு வராமல் போனதால் ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மை அது. ஒழுங்காக பேசவும் வராது. மூன்று வார்த்தைக்கு ஒரு வார்த்தை திக்குவேன். பின்னாலில் தீவிரமான வாசிப்பு உரையாடல்கள் மூலம் எழுதும் நோக்கம் மாற்றம் கண்டது. அதுவும் பல படிநிலைகளைக் கொண்டது.இந்த நகர்ச்சி குறித்தெல்லாம் 'திறந்தே கிடக்கும் டைரி' எனும் தொடரில் 'வல்லினம்' அகப்பக்கத்தில் எந்த பலவீனங்களையும் மறைக்காமல் எழுதி வருகிறேன்.
03. தமிழ் இலக்கியம் என்று விரிந்த பரப்பை முன்வைத்து பேசும்போது மலேசிய
மற்றும் சிங்கப்பூர் எழுத்துக்கள் பற்றி எவரும் கவனம் கொள்வதில்லை அது
ஏன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? ஆனால் இப்போது நவீன எழுத்துக்கள்
என்று பேசும்படியாக அங்கு இலக்கியம் இருக்கிறது அல்லவா?
முதலில் இந்நிலைக்கு மலேசிய படைப்பாளிகளும் முக்கியக்காரணம். என் வாசிப்பில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நல்ல பல படைப்பாளிகள் மலேசியாவில் இயங்கியே வந்துள்ளனர். ஆயினும் மலேசிய ஆய்வாளர்கள் தமிழக எழுத்தாளர்களின் வாலைப்பிடிப்பதில்தான் அதிக சுகம் காண்கின்றனர். இந்த அவல நிலை இன்றும் தொடர்கிறது. மலேசிய இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் வைரமுத்துவின் நாவலை இங்கு வெளியீடு செய்து பெரும் பணம் திரட்டிக்கொடுப்பதில்தான் குறியாக உள்ளது.இதில் இலக்கிய சுற்றுலா என வேறு ஏற்பாடு செய்து கருணாநிதியையும் வைரமுத்துவையும் சிவசங்கரியையும் கண்டுவருவதில் குறியாக உள்ளனர்.இவர்களிடம் இலக்கியம் தொடர்பான எளிய கேள்விகளுக்கும் பதில் இல்லாமல் இருப்பதும் இலக்கியம் ஓர் பொழுது போக்கு அம்சமாகவே இவர்களுக்கு இருப்பதும் மலேசிய இலக்கியத்தின் சாபம்.
04. மலேசியாவில் நவீன இலக்கியத்தின் ஆரம்பம் எப்போது தொடங்குகிறது ? அதன் வரலாற்றை சற்று விரிவாக பேசலாமா?
05. பெண் எழுத்துச் செயற்பாட்டாளர்கள் தமது எழுத்தின் அரசியலாக அங்கு எதை முன்வைக்கிறார்கள்?
எதையும் முன்வைக்கவில்லை. முதலில் மலேசியாவில் பெண் எழுத்து என எதை அடையாளப்படுத்துவதென தெரியவில்லை. ஆரம்ப காலங்களில் இருந்தே மலேசியாவில் உள்ள பெண் படைப்பாளிகளின் நாவல்களைச் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். பாவை, க.பாக்கியம், நா.மகேஸ்வரி, நிர்மலா பெருமாள், நிர்மலா ராகவன்,பாமா,சு.கமலா, வே.ராஜேஸ்வரி என இன்னும் சிலர் மலேசியாவில் பல காலமாக எழுதிவருகிறார்கள். இவர்களில் சிலரை பலகாலமாக எழுதுவதால் மட்டுமே இங்குக் குறிப்பிடுகிறேன். மற்றபடி இவர்களின் படைப்பிலக்கியத்தில் எந்த வகையான ஈர்ப்பும் எனக்கு இருந்ததில்லை. இவர்கள் கதைகளில் வரும் பெண்களின் குரல் சமையல் அறையிலிருந்து ஒலிப்பதும் ஆண்களின் குரல் வரவேற்பறையிலிருந்து ஒலிப்பதுமே காலம் காலமாக நடந்து வருகிறது. இன்னும் சிலர் அதீதமாக பெண் விடுதலை பேசுகிறேன் என்று ஆழமான கேள்விகளும் பார்வையும் இல்லாமல் அதிர்ச்சி எழுத்துகளை தரவே முயல்கிறார்கள்.
இது போன்ற ஒட்டுமொத்தமான பார்வை ஒரு புறம் இருக்க, எழுதப்பட்டக் காலத்தைக் கணக்கில் கொண்டு எழுத்தாளர் பாவையின் எழுத்துகளை முக்கியமானவையாகக் கருதுகிறேன். அவருக்கு சுவாரசியமாகக் கதை சொல்ல தெரியும். க.பாக்கியம் போன்று எழுத்து மட்டும் அல்லாது இயக்கவாதிகளாகவும் உற்சாகமாகச் செயல்படும் ஆளுமைமிக்கவர்களும் மலேசிய இலக்கிய உலகத்துக்கு கிடைத்திருப்பது உற்சாகம் அளிக்கக்கூடியது. இதுமட்டும் அல்லாது எனது தனிப்பட்ட உரையாடல்களில் கணவனிடம் கொடுமை அனுபவித்து எழுதுவதற்குப் பல தடைகள் வந்தபோதும் பல நாவல்களை எழுதி வெளியிட்ட ஒரு சில மூத்தப் படைப்பாளிகளையும் இவ்வேளையில் நினைவு கூர்கிறேன். இவர்களோடு ஒப்பிடும்போது இன்றைக்கு எழுதுபவர்களின் நிலை கவலை அளிப்பதாகவே உள்ளது. எளிய உணர்வுகளையும் எளிய அனுபவங்களையும் சின்னச் சின்ன சிலிர்ப்புகளையும் கவிதைகளில் மட்டுமே இன்றைய பெரும்பாலான பெண் படைப்பாளிகள் பகிர்கிறார்கள். தோழி, மணிமொழி,யோகி, தினேசுவரி, பூங்குழலி என மலேசியாவில் எழுதும் ஒரு சிலருக்கு நல்ல வாசிப்பும் கருத்துகளும் இருந்தாலும் அவற்றை எழுத்தில் கொண்டுவர தீவிரம் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. எழுதுவதற்கான விரிந்த களமும் வாசிப்புக்கான நிறைய மூலங்களும் உள்ள இச்சூழலை அவர்கள் தவரவிடுவது வருத்தமளிக்கிறது. மாற்று கருத்துகள் கொண்ட பெண் படைப்பாளிகளின் எழுத்துக்கு வல்லினம் இதழில் எப்போதும் இடம் உண்டு என்பதை மட்டும் இவ்வேளையில் சொல்லிக்கொள்கிறேன்.
06. தமிழ் இலக்கியத்தில் தனித்துத் தெரியும்படியாக மலேசிய தமிழ்
இலக்கியம் என்ன வகையான இலக்கிய அரசியல் மற்றும் அழகியலைக் கொண்டு எழுத்துக்களை நிகழ்த்திக்காட்டுகின்றன?
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல நல்லப் படைப்பாளிகள் மலேசிய இலக்கியத்திற்கென தனித்ததொரு அடையாளத்தை அவரவர் படைப்பிலக்கியங்களில் ஏற்றியவாறு உள்ளனர். நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு பதில் கொடுப்பதற்குத் தனிக் கட்டுரை எழுத வேண்டிவரலாம். குறிப்பாக 1786 ல் பினாங்கு தீவு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்ததிலிருந்து தொடங்கி 1929 ல் தந்தை பெரியாரின் மலாயா வருகைக்குப் பிறகு ஏற்பட்ட தமிழர்களின் சிந்தனை மாற்றம் , திராவிட கழகங்களின் தாக்கம், சினிமா வசனங்கள்களின் தாக்கம் , அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி (மலாயா கணபதி) (1925 - மே 4, 1949) தூக்கிலிடப்பட்டச் சம்பவம் என அத்தனை அனுபவங்களும் பிண்ணிப் பிண்ணிப் பெரிதாக விரிந்த வாழ்வு இன்றளவும் தமிழர்கள் மொழியையும் இலக்கியத்தையும் மிக கெட்டியாகப் பற்றியிருக்கக் காரணங்களாக உள்ளன. காலம்தோரும் மலேசியாவில் தமிழர்கள் தம் மொழியைக் காப்பதற்கு நடத்தும் போராட்டத்தில் அவர்களின் ஆரம்பகால எழுத்துகளில் எவ்வகையான அழகியலையும் காணமுடியாதது உண்மையே. கல்வி அறிவே குறைந்த காலத்தில் அழகியல் அல்லது கலைத்தன்மை எங்கிருந்து கிடைக்கும்? அதோடு தமிழ்நாட்டு கல்வியைப் பின்புலமாகக் கொண்டு எழுந்த இலக்கியங்கள் (1917 _ 1930) மலேசிய வாழ்வை பேச மறுத்தன.
அதன் பின்னர் 1924 ல் தமிழ் நேசன் என்ற பத்திரிகை தொடக்கமும் 1930ல் தமிழ் முரசு பத்திரிகை தொடக்கமும் பல அசலான மலேசிய சிறுகதைகள் வர காரணிகளாக இருந்தன. அங்கிருந்து தொடங்கி பலரின் உழைப்பாலும் தியாகத்தாலும் மலேசிய இலக்கியம் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. இந்த நெடிய வரலாற்றில் (பல சம்பவங்கள் விடுபட்ட) மலேசியத் தமிழர் வாழ்வைச் சொல்லும் நாவல்கள் பல இயற்றப்பட்டுள்ளன. துயரப்பாதை (கா.பெருமாள்), மரவள்ளிக்கிழங்கு (சா.அன்பானந்தன்), இலட்சியப் பயணம் (ஐ.இளவழகு), செம்மண்ணும் நீல மலர்களும் (எம்.குமரன்), புதியதோர் உலகம் (அ.ரெங்கசாமி), சயாம் மரண ரயில் (ஆர்.சண்முகம்) போன்றவை அவற்றில் சட்டென நினைவுக்கு வருபவை.
ஆங்கிலேயர்களால் இரப்பர் தோட்டங்களுக்குக் குடியேற்றப்பட்டதால் , எங்கள் வாழ்வை சொல்லும் கதைகள் இரப்பர் தோட்டத்திலேயே இன்னும் அதிகம் இருக்கின்றன. தோட்ட வாழ்வை மீறி பல்லினம் மக்களுடன் வாழும் ஒரு சூழலைக் கொண்டுள்ள எங்கள் வாழ்வையும் பலர் சிறுகதைகளாக எழுதியுள்ளனர். என் வாசிப்பில் உள்ள சில எழுத்தாளர்களை இங்குக் குறிப்பிடுவது அவசியம் என நினக்கிறேன். அவ்வகையில் மா.இராமையா,சா.ஆ.அன்பானந்தன், பாவை, பாரி,அரு.சு.ஜீவானந்தன், மு.அன்புச்செல்வன், கோ.முனியாண்டி, கோ.புண்ணியவான், சை.பீர்முகம்மது போன்றவர்கள் மலேசிய வாழ்வை சொல்லும் பல சிறுகதைகளைப் படைத்துள்ளனர். இன்னும் அ.கி.அறிவானந்தன், சி.கமலநாதன், மெ.அறிவானந்தன், இராஜகுமாரன், நிலாவண்ணன் என நீண்ட பட்டியலும் உள்ளது. இவர்களின் முழுத் தொகுப்புகள் இல்லை. அல்லது எனக்குக் கிடைத்ததில்லை. இன்னும் பலரின் சிறுகதைகளை அங்கொன்றும் இங்கொன்றும் படித்ததோடு சரி. இவர்களின் எம்.ஏ.இளஞ்செல்வனின் சிறுகதைகள் சற்றுத்தனித்துத் தெரிபவை. சீ.முத்துசாமியின் சிறுகதைகளுக்குத் தனித்தரம் உண்டு. அவரின் 'மண்புழுக்கள்' எனும் நாவல் மலேசிய இலக்கியத்தில் மிக முக்கியமானது. செப்பனிடப்பட்ட அவரது சிறுகதை தொகுப்பைக் கொண்டுவருவது மலேசிய இலக்கியத்திற்கு நல்ல அடையாளமாகத் திகழும். இதேபோல் மற்றுமொரு பெரிய ஆளுமை மா.சண்முகசிவா. மலேசிய கதைகளில் இவரது சிறுகதைகள் கலை நேர்த்திமிக்கவை. மனித வாழ்வின் சிக்கலான பகுதியை எடுத்தியம்புபவை.
ரெ.கார்த்திகேசு போன்ற எழுத்தாளர்கள் மலேசிய இலக்கியத்திற்குத் தனித்துவம் இல்லாதது போன்றே பல காலமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். அவர்களை தமிழக எழுத்தாளர்களின் நகல்காளச் சித்தரிக்கவே அதிகம் விருப்பம் கொண்டுள்ளனர். பல காலமாகவே ஜனரஞ்சக எழுத்துகள் மூலமாக தங்களுக்கிருக்கும் தமிழகத்தொடர்பால் பெரிய எழுத்தாளர்களாகப் பெயர் எடுத்துவிட்ட இவர்கள் குறித்து பேச ஒன்றும் இல்லை. இவர்கள் நாவல்களில் வரும் நாயகர்கள் விஜயையும் அஜீத்தையும் ஞாபகப் படுத்துகிறார்கள் என்பதைத் தவிர.
மஹாத்மனின் சிறுகதைகள் வேறுவகையில் முக்கியமனாது. அவை மலேசியாவின் மற்றுமொரு இருண்ட முகத்தை அதன் அசல் தன்மையோடு காட்டுபவை. நானறிந்து எந்த ஒரு மலேசியத் தமிழ் எழுத்தாளனுக்கும் மஹாத்மனின் வாழ்வனுபவங்கள் இருக்கச் சாத்தியம் இல்லை. ஒரு அசலான தோட்ட வாழ்வை நுண்ணிய கலை நேர்த்தியோடு பேசுபவை யுவராஜனின் சிறுகதைகள். ஒரு வாசகனாக மலேசிய தமிழர்களின் வாழ்வோடும் கலைத்தன்மையோடும் மிக அணுகி வெளிபடுவது யுவராஜனின் சிறுகதைகள் என்பேன். இன்னும் சொல்வதானல் யுவராஜனின் தோட்ட வாழ்வு சார்ந்த சிறுகதைகள் மலேசியத் தமிழ்ச் சிறுகதை உலகை மெல்ல திசை திருப்பும். இதை மிக உறுதியாகவே நான் சொல்வேன். உங்கள் கேள்விக்கு நான் பதில் கொடுத்தேனா எனத் தெரியவில்லை. ஒருவேளை சீ.முத்துசாமி, மா.சண்முகசிவா,சு.யுவராஜன், மஹாத்மன் போன்றோரின் சிறுகதைகளைப் படிப்பதன் மூலம் அதற்கான பதில்களை அடையலாம்.
07. இஸ்லாமிய அரசு சிறுகதையாடல் சமூகமான தமிழ் பேசும் மக்களை மோசமான
அதிகாரத்திற்குட்படுத்தி வினையாற்ற முயற்சிக்கிறது. இதை எப்படி நீங்கள்
புரிந்துகொண்டு செயலாற்றுகிறீர்கள்? மலேசிய தமிழ் இலக்கியம் அதிகாரத்தின்
முன் எதிர்க்குரலாக பேசுவதாகத் தெரியவில்லையே ஏன்?
தங்கள் பார்வைக்குக் கிடைத்த பிரதிகளைக்கொண்டு தாங்கள் இவ்வாறு கருத்து கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் இதை மதம் சார்ந்த விடயமாக மட்டும் பார்க்கவில்லை. இங்கு நாங்கள் எதிர்நோக்குவதில் மொழி சார்ந்த பிரச்சனையே பிரதானமானது. மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை நாங்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளோம். கோயில்கள் உடைப்பு குறித்து இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதில் பல கோயில்கள் முறையான பதிவு இல்லாமல் நிறுவப்பட்டவை எனும் உண்மையும் அடங்கும். பொதுவாகவே இங்குள்ள தமிழர்களுக்கு எதையும் முறையான பதிவிடுவதில் மெத்தனப்போக்கு உள்ளதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். கோயில்களை உடைப்பதும் தகர்ப்பதும் கண்களுக்குத் தெரிந்த அதிகாரத் துஷ்பிரயோகம்தான். ஆனால் கண்களுக்குத் தெரியாமல் மிக நூதனமாக மொழியை அழிக்கும் செயல் நடந்தேறி வருவதை பலர் இங்குக் கண்டுகொள்வதில்லை. குறிப்பாகத் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை மிக விரைவாகக் குறைந்து வருகிறது. 200 மேற்பட்ட பள்ளிகள் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம் எனும் நிலை உள்ளது. புறநகரங்களும் தோட்டங்களும் அழிக்கப்படும்போது அங்கு இருக்கின்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு மாற்று நிலங்கள் போக்குவரத்து வசதியற்ற மற்றைய இடங்களில் வழங்கப்படுகின்றன. கோயில்களுக்கும் இந்த நிலைதான். இதன் தொடர்ச்சியாக மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பகுதிக்கு அந்நிய இனத்தவர் தலைவராக அமர்த்தப்பட்டிருப்பதும், எஸ்.பி.எம் எனும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இறுதிச்சோதனையில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் இல்லாமல் போயிருப்பதும் பலரின் கண்டனக்குரலுக்கு ஆளானது. இலக்கியவாதிகள் மட்டுமல்லாது நாளிதழ்களும் சஞ்சிகைகளும் இதுபோன்ற விடயங்களுக்குக் கவனம் அளித்து வருகின்றன. 'வல்லினம்' இதழிலும் இந்தப் பிரச்சனைகள் தொட்டு எழுந்துள்ள கட்டுரைகளை நீங்கள் காணலாம். ஒவ்வொரு முறை எம் மொழிக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதும் தமிழர்கள் தங்கள் நிலையை உணர்ந்து தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் சேர்க்கும் எண்ணிக்கை அதிகரிக்கிறது. (மொழி, இலக்கியம் என பேசிவிட்டு தம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாத மேல்த்தட்டு மனிதர்கள் குறித்து நான் இங்கு பேசவில்லை)காலம் காலமாக அதிகாரத்தின் குரலுக்குக் கட்டுப்படாமல் ஆரம்பப் பள்ளி முதல் இடைநிலை மற்றும் பல்கலைக்கழகம் வரை தமிழை ஒரு பாடமாக நாங்கள் கொண்டிருப்பது அரசாங்கம் போட்ட பிச்சையினால் அல்ல. அதிகாரத்துக்கு எதிராக எழுந்த எங்களின் குரலால்தான்.
08. ஹிண்ட்ராப் போன்ற அமைப்புக்களும் அரசுக்கெதிரான ஒரு இந்துத்துவ
கட்டமைப்பை உருவாக்கவே முயற்ச்சி செய்கிறது. சிறு கதையாடல் சமூகத்திற்கான
அரசியல் உரிமை என்றவகையில் அனுகுவதை விட்டுவிட்டு இந்துத்துவத்திற்கு
எதிரான புறமொதுக்கலாக புரிந்துகொள்வதை எப்படி நோக்குகிறீர்கள்?
மற்றெல்லா ஊடகங்களையும் விட ஹிண்ட்ராப் மற்றும் அதன் இன்றைய நிலை குறித்து 'வல்லினம்' நேர்காணலில் விரிவாக வாசித்திருக்கலாம். உங்களுக்கு இருக்கின்ற கேள்விகள் எங்களுக்கும் இருந்தன. ஆனால் மலேசியத் தமிழர்களின் மனம் மொழியைவிட மதத்திற்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கக்கூடியது. அதற்கு முக்கியக் காரணம் இன்றைய மலேசியத் தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களில் தமிழைப் பின்புலமாகக் கொள்ளாதவர்கள். மலாய் பள்ளிகளில் கல்வி கற்றவர்கள். இவர்களுக்கு தங்கள் இனத்தின் அடையாளமாக நம்புவது கோயிலையும் மதத்தையும் மட்டுமே. என் அணுமானத்தில் ஒரு வேளை மொழியை மையமாக வைத்து ஹிண்ட்ராப் நகர்ந்திருந்தால் அதற்கு பரவலான ஆதரவு கிடைத்திருக்காது. அண்மையில் நடந்த 'எஸ்.பி.எம் பாட விவகார பேரணியே' அதற்கு ஒரு சான்று. ஹிண்ட்ராப் பேரணி கோயில் உடைப்பு மற்றும் சிறையில் தமிழர்கள் கொல்லப்படுவதை முன்வைத்து நகர்த்தப்பட்டது. ஹிண்ட்ராப் போரட்டத்தை வெறும் இந்துத்துவ பின்புலத்தைக் கொண்டு மட்டும் பார்ப்பது சரியாகாது என நினைக்கிறேன். ஹிண்ட்ராப் பேரணியால் மலேசியத் தமிழர்களுக்கு ஓரளவேனும் விளிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றே கருதுகிறேன். எல்லா விடயங்களையும் நுணுகி அதில் உள்ள கோளாறுகளைக் கண்டடைந்து தங்கள் மேதாவி தனத்தை காட்டும் கூட்டத்தினர் ஹிண்ட்ராப் குறித்து மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டிருக்கலாம். அது குறித்தெல்லாம் எனக்கு ஒரு பொறுட்டும் கிடையாது. தமிழகத்தோடு ஒப்பிடுகையில் இங்கு மதம் பங்காற்றும் விதம் வேறாக உள்ளது. வெறும் இனக்கட்சிக்குள் நடக்கும் சர்ச்சைகளை மட்டுமே பேசித்திரிந்தவர்களுக்கு மத்தியில் ஹிண்ட்ராப் நேராக அரசாங்கத்திடமே எம் உரிமைக்காக வாதாடுகிறது. ஒரு அதிகார சக்தியை எதிர்க்க அதற்கு ஆயுதம் ஒன்று தேவைப்படுகிறது. அது மதமாக இருக்கும் பட்சத்தில் தற்காலிகமாகக் கையில் எடுப்பது தவறில்லை என்றே நினைக்கிறேன்.
09. மலேசிய இலக்கியம் எதை நோக்கி நகர்கிறது என்று அவதானிக்கிறீர்கள்.?
எத்தனை சிறுபத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன? எத்தனை
தொகுப்புக்கள் வெளிவந்திருக்கின்றன?
குறிப்பிட்டு அப்படி எதையும் சொல்ல இயலவில்லை. ஆனால் முன்னையிலும் அது தீவிரம் அடைந்துள்ளது என மட்டும் தாராளமாகக் கூறலாம். இன்னும் இங்கு நவீனத்துவம் பின் நவீனத்துவம் போன்றவற்றிற்கு எதிர்ப்பான கருத்துகள் உள்ளன. அவ்வாறு இருப்பது இயல்பென்றே படுகிறது. மேலும் சிலர் இது போன்ற இசங்களை முழுமையாக அறியாமல் ஆழமற்ற மொண்ணையான கருத்துகள் மூலமும் தெளிவற்ற மொழியின் மூலமும் தங்களை புத்திஜீவிகள் போல காட்டும் அபாயமும் எழுந்துள்ளது. பொதுவாகவே நான் இதுபோன்றவர்களுக்கு எதிர்வினை ஆற்றவோ அவர்கள் கருத்துகளில் உள்ள அபத்தங்களை சுட்டிக்காட்டவோ விரும்பவில்லை(முன்பு அவ்வப்போது இருந்தது). நல்ல இலக்கிய சூழல் வளரும் காலத்தில் இது போன்ற கோமாளிகள் பெரும் வர்ண ஜாலங்களுடன் தங்களை முன்நிறுத்த அங்கும் இங்கும் எம்பிக் குதிப்பது இயல்பென்றே படுகிறது. என்னை பொருத்தவரை நல்ல வாசகன் தனது இறுதி அமர்வில் எழுத்தில் உள்ள நேர்மையை மட்டுமே விரும்புவான்.
சிறுபத்திரிகை என எதை நாம் அடையாளப் படுத்துகிறோம் என்பதிலிருந்து உங்கள் கேள்விக்கான விடையை நான் தேடுகிறேன். அது அளவில் சிறிதாகவும் வணிக நோக்கமற்றும் இருந்தால் மட்டும் போதாது என்பது என் எண்ணம். அது அதிகாரத்தை நோக்கி தனது உண்மை குரலை எழுப்பவேண்டுமே தவிர அதற்கு துணைப் போகக் கூடாது. எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்துவதில் பாராபட்சம் இருக்கக்கூடாது. குறிப்பாக தனது பெயரையும் இதழ் பெயரையும் பிரபலப்படுத்த எதிர்வினை என்று கண்ட குப்பைகளையும் பிரசுரிக்கக் கூடாது. இது போன்ற அம்சத்தில் வைத்து என்னால் 'வல்லினம்' இதழை சிற்றிதழ் தன்மையோடு ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. மற்றபடி 'மௌனம்' நல்ல இலக்கிய இதழாக வருகிறது. அதன் தீவிரம் இன்னும் அதிகரிக்க வேண்டும். தொகுப்புகள் நிறையவே வந்துள்ளன. அண்மையில் வல்லினம் பதிப்பகத்தின் மூலம் மூன்று தொகுப்புகள் வெளிவந்தன.
10. உங்கள் கவிதைகளைப் படித்தேன் பெரும்பாலும் அன்பின் அயரச்சி, புதிர்
போன்றவற்றை புனைவதினூடாகவும் எதிர் நிலையில் பெண்ணுடல்களை உருவாக்கியும் அதிகம் பேசுகின்றன. அந்தப்பேச்சினூடாக தொலைக்கப்படாத அன்பின் மௌனங்களை பரிந்துரைப்பதினூடாக கவிதையாக தன்னை நிலை நிறுத்துகின்றன. உண்மையில் நீங்கள் கவிதைப்பிரதிகளினுடாக செய்ய விரும்புவது என்ன?
எதையும் இல்லை. என் வாழ்வின் மிக நுண்ணிய உணர்வுகளை சொல்ல முயல்கிரேன். அதில் காதல், அன்பு, ஏக்கம், ரௌத்திரம் என எல்லாமே உண்டு. நான் சம்பவங்களை விவரிக்க விரும்புவதில்லை.என் கவிதையினூடாக ஒருவர் என்னை வந்து அடைய நினைத்தால் தோல்வியையே தழுவுவார். காரணம் கவிதையில் உள்ள காட்சிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் அந்தக் காட்சி தரும் ஒட்டுமொத்த உணர்விலும் நான் இருக்கிறேன். ஒருவேளை ஒருவர் அந்த உணர்வுகளை முழுமையாக வாசித்து அறிந்து கொள்ளும் தருணம் என்னைவிட்டு மிக இயல்பாகப் பிரிந்துவிடலாம். சில சமயங்களில் என் மன ஓட்டங்களைக் கண்டு நானே என்னிலிருந்து தப்பி ஓட நினைப்பதுண்டு.அவை அவ்வளவு பயங்கரமானது. அவ்வாறு முடியாமல் போகும் தருணங்களில் என்னால் மிகுந்த வலியுடன் ஒரு கவிதையைப் பிறப்பிக்க முடிகின்றது.